திருநல்லூர்


பண் :சாதாரி

பாடல் எண் : 1

வண்டிரிய விண்டமலர் மல்குசடை தாழவிடை யேறிப்
பண்டெரிகை கொண்டபர மன்பதிய தென்பரத னயலே
நண்டிரிய நாரையிரை தேரவரை மேலருவி முத்தம்
தெண்டிரைகண் மோதவிரி போதுகம ழுந்திருந லூரே.

பொழிப்புரை :

வண்டு அமர விரிந்த மலர்கள் நிறைந்த சடை தொங்கச் சிவபெருமான் இடபவாகனத்திலேறி , பண்டைக்காலந் தொட்டே கையில் நெருப்பேந்தியவனாய் விளங்கும் பதியாவது , பக்கத்தில் நண்டு ஓட , நாரை தேட மலையிலிருந்து விழும் அருவி முத்துக்களை அடித்துக் கொண்டு வந்து சேர்க்க , காவிரியின் தெள்ளிய அலைகள் மோதுவதால் அரும்புகள் மலர நறுமணம் கமழும் திருநல்லூர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

( வண்டு இரிய ) விண்ட - விரிந்த . ( மலர் ) மல்கு - நிறைந்த சடை . தாழ - தொங்க . பண்டு - ஆதிகாலந் தொட்டே , எரியைக் கைக்கொண்ட பரமன் பதி அது என்பர் . அதன் - அப் பதியின் . அயலே - பக்கத்தில் . ( நண்டு ) இரிய - ஓட . ( நாரை இரை தேட ). வரைமேல் அருவி முத்தம் - சைய மலைமேல் அருவி அடித்து வரும் முத்தங்களை , காவிரிநதி தெள்ளிய திரைகளால் வீச , அவை மோதுவதால் விரிந்த அரும்புகள் கமழுந் திருநல்லூர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 2

பல்வளரு நாகமரை யார்த்துவரை மங்கையொரு பாகம்
மல்வளர்பு யத்திலணை வித்துமகி ழும்பரம னிடமாம்
சொல்வளரி சைக்கிளவி பாடிமட வார்நடம தாடிச்
செல்வமறை யோர்கண்முறை யேத்தவள ருந்திருந லூரே.

பொழிப்புரை :

நச்சுப்பல்லுடைய நாகத்தை இடுப்பிலே கச்சாகக் கட்டி , மலைமங்கையாகிய உமாதேவியைத் தன் வலிமையான தோளின் இடப்பாகத்தில் அணைத்து மகிழும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , மகளிர் பொருட்செறிவுடைய பாடல்களைப் பாடி , அவற்றிற்கேற்ப நடனமாடுவதும் , வேதம் ஓதவல்ல அந்தணர்கள் நியதிப்படி போற்றி வழிபடுவதும் ஆகிய புகழ்வளரும் திருநல்லூர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

வளர் இசை - இசைவளரும் . சொல் .... கிளவி - சொற்களாலாகிய சாகித்தியங்களை ( இதனை ` உரு ` என்பர் இசை நூலார் , இப்பொழுது ` உருப்படி ` எனக் குழுஉக் குறியாய் வழங்கி வருகிறது .) வளரும் - புகழ் வளரும் திருநல்லூர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 3

நீடுவரை மேருவில தாகநிகழ் நாகமழ லம்பால்
கூடலர்கண் மூவெயிலெ ரித்தகுழ கன்குலவு சடைமேல்
ஏடுலவு கொன்றைபுன னின்றுதிக ழுந்நிமல னிடமாம்
சேடுலவு தாமரைக ணீடுவய லார்திருந லூரே.

பொழிப்புரை :

பெரிய மேருமலையை வில்லாகவும் , வாசுகி என்னும் பாம்பை நாணாகவும் , அக்கினியை அம்பாகவும் கொண்டு , பகைவர்களின் மும்மதில்களை எரித்த அழகனான சிவபெருமானின் சடைமேல் இதழ்களையுடைய கொன்றையும் , கங்கையும் விளங்குகின் றன . இயல்பாகவே பாசங்களின் நீங்கியவனான அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது பெருமைமிக்க தாமரை மலர்கள் விளங்கும் வயல்வளமுடைய திருநல்லூர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

நீடுவரைமேரு - நெடிய மலையாகிய மேரு , ( வில் அது ஆக ) நிகழ் - பொருந்திய ( நாகம் ). நாண் ஆக - ( என்பது இசையெச்சம் ). அழல் அம்பால் - ( திரிபுரம் எரித்த அம்பின் நுனி நெருப்பு ஆயினபடியால் அழல் அம்பு எனப்பட்டது .) கூடலர் - பகைவர் ( காரணப்பெயர் ) ஏடுஉலவு - இதழ்களையுடைய . சேடு உலவு தாமரை - உயர்வு பொருந்திய தாமரை . ` பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை ` என்றபடி .

பண் :சாதாரி

பாடல் எண் : 4

கருகுபுரி மிடறர்கரி காடரெரி கையதனி லேந்தி
அருகுவரு கரியினுரி யதளர்பட வரவரிடம் வினவில்
முருகுவிரி பொழிலின்மண நாறமயி லாலமர மேறித்
திருகுசின மந்திகனி சிந்தமது வார்திருந லூரே.

பொழிப்புரை :

சிவபெருமான் கருகிய கண்டத்தை உடையவர் , சுடுகாட்டில் கையில் எரியும் நெருப்பேந்தி நடனமாடுபவர் . தம்மைத் தாக்க வந்த மதம் பிடித்த யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டவர் . படமாடும் பாம்பை ஆபரணமாக அணிந்தவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , சோலைகளிலுள்ள நறுமணத்தை நுகர்ந்த இன்பத்தால் மயில்களாட , அவ்வாடலுக்குப் பொழில் பரிசில் வழங்கிலதே என்று சினந்தவை போல் குரங்குகள் மரத்திலேறி , மயிலாடுதல் கண்ட இன்பத்திற்கு ஈடாகப் பரிசு கொடுப்பனபோல் கனிகளை உதிர்க்கக் கனிச்சாறு பெருகும் திருநல்லூர் எனும் திருத்தலமாம் .

குறிப்புரை :

கருகுபுரி - கருகுதலையுடைய . ( கறுத்த ) மிடறர் - கண்டத்தையுடையவர் . காடு - காட்டில் , கை அதனில் எரி ஏந்தி . அருகு - சமீபத்தில் . உரி அதளர் - உரித்த தோலையுடையவர் . பட அரவர் . முருகு - வாசனை , ( மயில் ) ஆல - ஆட . திருகுசினம் - மாறுபட்ட கோபம் . இவ்வாடலுக்குப் பரிசில் வழங்கிலவேயென்று , மரங்களின் மேற் சினந்த மந்திகள் , அம் மரங்களினின்று கனிகளை யுதிர்க்கும் திருநல்லூர் எனச் சோலைவளம் கூறியவாறு .

பண் :சாதாரி

பாடல் எண் : 5

பொடிகொடிரு மார்பர்புரி நூலர்புனல் பொங்கரவு தங்கும்
முடிகொள்சடை தாழவிடை யேறுமுத லாளரவ ரிடமாம்
இடிகொண்முழ வோசையெழி லார்செய்தொழி லாளர்விழ மல்கச்
செடிகொள்வினை யகலமன மினியவர்கள் சேர்திருந லூரே.

பொழிப்புரை :

சிவபெருமான் திருநீறணிந்த அழகிய மார்பை உடையவர் . முப்புரிநூல் அணிந்தவர் . கங்கையையும் , பாம்பையும் தாங்கிய தாழ்ந்த சடைமுடியுடையவர் . இடப வாகனத்தில் வீற்றிருந்தருளும் முதற்பொருளானவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , இடி போன்ற முழவோசை ஒலிக்க , தொழிலாளர்களின் கைத்திறத்தால் அழகுடன் விழாக்கள் சிறந்து விளங்க , அவ்விழாக்களைச் சேவித்தலால் துன்பம்தரும் வினைகள் அகல , இனிய மன முடையோர் வசிக்கின்ற திருநல்லூர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

பொடிகொள் - திருநீறு பூசிய , திருமார்பர் . புனல் - கங்கை . முதல் ஆளர் - முதன்மையுடையவர் . இடிகொள் - இடியோசையைக் கொண்ட , முழவு ஓசையுடன் . எழில் ஆர் செய்தொழிலாளர் - விழாவிற்குரிய சிறப்புக்களை அழகுபொருந்தச் செய்கின்ற தொழிலாளர்களால் . விழா - திருவிழா . மல்க - சிறக்க . செடிகொள் வினை அகல - அத்திருவிழாத் தரிசன பலத்தால் துன்பத்தைத் தருகின்ற வினை அகலக் ` கண்ணினால் அவர் நல்விழாப் பொலிவு கண்டார்தல் ` ஆதலினால் தரிசித்தோர் பெறும் பலனைக் கூறியருளினர் . மனம் இனியவர்கள் . ( தநுகரண புவன போகங்கள் வினைக்கேற்ப அமைதலால் ) மனம் முதலியன நல்லனவாகப் பெற்ற புண்ணியம் உடையவர்கள் .

பண் :சாதாரி

பாடல் எண் : 6

புற்றரவர் நெற்றியொர்க ணொற்றைவிடை யூர்வரடை யாளம்
சுற்றமிருள் பற்றியபல் பூதமிசை பாடநசை யாலே
கற்றமறை யுற்றுணர்வர் பற்றலர்கண் முற்றுமெயின் மாளச்
செற்றவ ரிருப்பிட நெருக்குபுன லார்திருந லூரே.

பொழிப்புரை :

சிவபெருமான் புற்றில் வாழும் பாம்பை அணிந்தவர் . நெற்றியில் ஒரு கண் உடையவர் . இடப வாகனத்தில் அமர்ந்தவர் . இவையே அவரது அடையாளமாகும் . அத்தகையவர் அடையாளம் காணமுடியாத இருட்டில் பல பூதங்கள் இசைபாட நடனம் புரிபவர் . விருப்பத்தோடு வேதங்களைக் கற்ற அந்தணர்களால் உணர்ந்து போற்றப்படுபவர் . பகையசுரர்களின் முப்புரங்கள் எரியும்படி சினந்தவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது நீர்வளம் நிறைந்த திருநல்லூர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

புற்றில் வாழும் பாம்பை அணிபவர் , நெற்றிக் கண்ணோடு ஒரு விடையை ஏறிச் செலுத்துபவர் . அடையாளம் - ( இவை அடையாளமாக .) சுற்றம் - சுற்றமாக . இருள்பற்றிய - இருளில் விளக்கு ஏந்திய . பல்பூதம் - பலபூதம் இசைபாட ( உடையவர் ). நசையால் - விருப்பத்தோடு . முனிவர்கள் . மறைகற்று உணரப் படுபவர் . பற்றலர்கள் - பகைவர்களின் . எயில்முற்றும் மாள - மதில் முழுதும் ஒழியும்படி . செற்றவர் - கோபித்தவர் . நெருக்கு புனல் ஆர் - மிகுந்த நீர்வளத்தையுடைய . சந்தம்நோக்கி . நெருங்கு என்பது வலித்தல் விகாரம் பெற்றது . ` பொன்றி மணிவிளக்குப் பூதம் பற்ற ` என்ற திருத்தாண்டகத்தின்படி இருள்பற்றிய என்பதற்குப் பொருள் கொள்க .

பண் :சாதாரி

பாடல் எண் : 7

பொங்கரவ ரங்கமுடன் மேலணிவர் ஞாலமிடுபிச்சை
தங்கரவ மாகவுழி தந்துமெய்து லங்கியவெண் ணீற்றர்
கங்கையர வம்விரவு திங்கள்சடை யடிகளிடம் வினவில்
செங்கயல்வ திக்குதிகொ ளும்புனல தார்திருந லூரே.

பொழிப்புரை :

இறைவன் சினம் பொங்கப் படமெடுத்தாடும் பாம்பை அணிந்துள்ளவர் . எலும்பையும் திருமேனியில் அணிந்தவர் . பிரமகபாலமேந்திப் பூமியிலுள்ளோர் இடும் பிச்சையேற்க ஆரவாரித்துத் திரிபவர் . தம் திருமேனியில் திருவெண்ணீற்றைப் பூசியுள்ளவர் . கங்கையையும் , பாம்பையும் , சந்திரனையும் சடை முடியிலணிந்துள்ளவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது செங்கயல் மீன்கள் சேற்றில் குதிக்கும் நீர்வளமிக்க திருநல்லூர் என்னும் திருத்தலம் ஆகும் .

குறிப்புரை :

அங்கம் - எலும்பை . ( உடல்மேல் அணிவர் ) ஞாலம் - பூமியிலுள்ளார் . இடு ( ம் ) பிச்சைக்கு . தங்கு - பொருந்திய . அரவம் ஆக - ஆரவாரத்தோடு . உழிதந்து - சுற்றித்திரிந்து . கங்கை . அரவம் ( விரவு -) திங்கள் - அணிந்த சடையையுடைய அடிகள் . வதி - சேற்றில் , செங்கயல் குதிகொள்ளும் . புனல்வளம் மிக்க திருநல்லூர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 8

ஏறுபுகழ் பெற்றதெனி லங்கையவர் கோனையரு வரையில்
சீறியவ னுக்கருளு மெங்கள்சிவ லோகனிட மாகும
கூறுமடி யார்களிசை பாடிவலம் வந்தயரு மருவிச்
சேறுகமரானவழி யத்திகழ்த ருந்திருந லூரே.

பொழிப்புரை :

மிக்க புகழ் பெற்ற தென் இலங்கை மன்னனான இராவணனைக் கயிலைமலையின் கீழ் நெருக்கி அடர்த்துப் பின்னர் அவனுக்கு நீண்ட வாழ்நாளும் , வெற்றிதரும் வீரவாளும் அளித்து அருள்செய்தவர் சிவலோக நாதரான சிவபெருமான் ஆவார் . அப் பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , அடியார்கள் இசைபாடி வலம் வரும்பொழுது , பக்தியால் அவர்கள் கண்களிலிருந்து பெருக்கெடுக்கும் ஆனந்தக் கண்ணீர் அருவியெனப் பாய்ந்து அருகிலுள்ள நிலவெடிப்புக்களில் விழ , வெடிப்புக்கள் நீங்கி நிலம் சேறாகத் திகழும் திருநல்லூர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

ஏறுபுகழ் - மிக்க புகழ்பெற்ற . தென் இலங்கையர் . கோனை - அரசனை , சீறி - முதற்கண்கோபித்து , ( பிழைக்கிரங்கி அவன் வேண்ட ) அவனுக்கு அருளும் . அடியார்கள் இசைபாடி வலம் வருகையில் , அயரும் - ( அவர்கள் கண்களினின்றும் ) சோரும் . அருவி - ஆனந்தக் கண்ணீரருவியானது ( அருகிலுள்ள ) நில வெடிப்புக்கள் எல்லாம் அழியத் திகழ்தரும் - விளங்கும் திருநல்லூர் . மிகையுயர்வு நவிற்சியணி .

பண் :சாதாரி

பாடல் எண் : 9

மாலுமலர் மேலயனு நேடியறி யாமையெரி யாய
கோலமுடை யானுணர்வு கோதில்புக ழானிடம தாகும்
நாலுமறை யங்கமுத லாறுமெரி மூன்றுதழ லோம்பும்
சீலமுடை யார்கணெடு மாடம்வள ருந்திருந லூரே.

பொழிப்புரை :

திருமாலும் , தாமரை மலர்மேல் வீற்றிருக்கின்ற பிரமனும் தேடியும் அறியமுடியா வண்ணம் பெருஞ்சோதிவடிவாய் விளங்கியவனும் , இயல்பாகவே பாசங்களின் நீங்கி முற்றுணர்வும் , இயற்கையுணர்வும் உடையவனும் , குற்றமற்ற புகழையுடையவனும் ஆன சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , நான்கு வேதங்களும் , ஆறு அங்கங்களும் , மூன்று அழலும் ஓம்புகின்ற சீலமுடைய தூய அந்தணர்கள் வாழ்கின்ற நீண்ட மாடமாளிகைகளையுடைய திருநல்லூர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

மாலும் - திருமாலும் , மலர்மேல் ( வாழும் ) அயனும் . நேடி - தேடி . அறியாமை - அறியாவாறு ( எரி ஆய கோலம் உடையான் ) கோதில் உணர்வு - இயல்பாகவே பாசங்களினீங்கிய , முற்றும் உணர்தலாகிய வியாபக அறிவும் . கோது இல் - குற்றமற்ற . புகழான் - புகழுமுடையவன் .

பண் :சாதாரி

பாடல் எண் : 10

கீறுமுடை கோவணமி லாமையிலொ லோவியதவத்தர்
பாறுமுடன் மூடுதுவ ராடையர்கள் வேடமவை பாரேல்
ஏறுமட வாளொடினி தேறிமுனி ருந்தவிடமென்பர்
தேறுமன வாரமுடை யார்குடிசெ யுந்திருந லூரே.

பொழிப்புரை :

கிழித்த துணியும் , கோவணமும் இல்லாமையால் ஆடை துவைக்கும் தொழில் நீங்கிய தவத்தவர்களாகிய சமணத் துறவிகளும் , அழியக்கூடிய உடலைத் துவராடையில் போர்த்திக் கொள்ளும் புத்தத்துறவிகளும் கொண்ட வேடத்தை ஒரு பொருட்டாக ஏற்க வேண்டா . சிவபெருமான் உமாதேவியை உடனாகக் கொண்டு இடபத்தின் மீது இனிதேறி , தொன்றுதொட்டு வீற்றிருந்தருளும் இடமாவது , சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்ற தெளிந்த உள்ளமும் , அன்பும் உடையவர்களான சிவனடியார்கள் வாழ்கின்ற திருநல்லூர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

கீறும் - கிழிக்கப்படுகின்ற , உடை ( அறுவை , துணி என்னும் காரணப் பெயர் குறிப்பதையும் அறிக ) உடையும் , கோவணமும் இல்லாமையினால் , ஒல் - ஆடையொலித்தல் . ஓவிய - நீங்கிய , தவத்தாராகிய சமணத் துறவிகளும் . பாறும் உடல் - அழியக்கூடிய உடலை , மூடு துவராடையர்கள் - உடற்பற்று நீங்காதவராய்த் துவராடையால் போர்த்துக்கொள்ளும் புத்தத் துறவிகளும் , கொண்ட வேடத்தைக் கருதற்க . மடவாளொடு இனிது எருது ஏறித் தொன்றுதொட்டிருந்த இடம் , தேறும் - சிவனே முழுமுதற் கடவுள் எனத்தெளிந்த , வாரம் - அன்பு .

பண் :சாதாரி

பாடல் எண் : 11

திரைகளிரு கரையும்வரு பொன்னிநில வுந்திருந லூர்மேல்
பரசுதரு பாணியைந லந்திகழ்செய் தோணிபுர நாதன்
உரைசெய்தமிழ் ஞானசம்பந்தனிசை மாலைமொழி வார்போய்
விரைசெய்மலர் தூவவிதி பேணுகதி பேறுபெறு வாரே.

பொழிப்புரை :

காவிரியின் இருகரைகளிலும் அலைகள் மோதுவதால் செழிப்புடன் விளங்கும் திருநல்லூர் என்னும் திருத் தலத்திலுள்ள மழுவேந்திய கரமுடைய சிவபெருமானை , வயல் வளமிக்க , தோணிபுர நாதனான தமிழ் ஞானசம்பந்தன் போற்றிசைத்த இப்பாமாலையை ஓதுபவர்கள் , பிரமனால் நறுமணமிக்க சிறந்த மலர்கள்தூவி வழிபடப்படும் சிவபெருமானுடைய திருவடியைப் பெறும் பேற்றினை அடைவார்கள் .

குறிப்புரை :

திரைகள் - அலைகள் , இருகரையும் வரு , பொன்னி - காவிரி , நிலவும் - செழிப்பிக்கும் , திருநல்லூர் , என்றது , மேல் ( முதற் பாடலில் ) வரைமேலருவி ..... கமழும் என்றதனாற் குறிஞ்சி நிலமாகக் கருதற்க , மருத நிலமே என்பதற்கு . பரசுதருபாணியை - மழுவேந்திய கரதலம் உடைய சிவபெருமானை , நலம் நிகழ் - வளத்தால் விளங்குகின்ற . செய் - வயலை உடைய , தோணிபுரம் , நாதன் - தலைவராகிய . மொழிவார் - பாடுவோர் , விதி - பிரமனும் , விரை - வாசனை .
சிற்பி