திருப்புறவம்


பண் :சாதாரி

பாடல் எண் : 1

பெண்ணிய லுருவினர் பெருகிய புனல்விர வியபிறைக்
கண்ணியர் கடுநடை விடையினர் கழறொழு மடியவர்
நண்ணிய பிணிகெட வருள்புரி பவர்நணு குயர்பதி
புண்ணிய மறையவர் நிறைபுக ழொலிமலி புறவமே.

பொழிப்புரை :

சிவபெருமான் உமாதேவியைத் தம் இடப்பாகமாகக் கொண்ட வடிவமுடையவர் . பெருக்கெடுக்கும் கங்கை நீரோடு , பிறைச்சந்திரனையும் தலை மாலையாக அணிந்தவர் . விரைந்த நடையுடைய எருதினை வாகனமாகக் கொண்டவர் . தம் திருவடிகளைத் தொழுது போற்றும் அடியவர்களின் நோயைத் தீர்த்து அருள்புரிபவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளுகின்ற உயர்ந்த பதியாவது , புண்ணியம் தரும் மறைகளை ஓதும் அந்தணர்கள் நிறைந்து இறைவனைப் புகழ்கின்ற ஒலி மிகுந்த திருப்புறவம் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

இயல் - பொருந்திய . உருவினர் - வடிவம் உடையர் , பெருகிய புனல் - கங்கை . விரவிய - கலந்த , பிறைக்கண்ணியர் - பிறையாகிய அடையாளமாலையையுடையவர் . கண்ணி - இப்பொருளாதலைக் ` கண்ணிகார்நறுங்கொன்றை ` என்பதாலும் அறிக . ( புறம் .1) - கடுநடை விரைந்த நடையையுடைய ( விடை ) கடி - விரைவு ` கடியென்கிளவி ...... விரைவே விளக்கம் ....... ஆகும்மே ` ( தொல் . சொல் . உரி 7) என்பதால் அறிக . அது கடு எனத் திரிந்து நின்றது . ( கழல் தொழும் அடியவரது ) நண்ணிய - அடைந்த . பிணி கெட அருள் புரிபவர் , நணுகு - சேரும் . உயர்பதி - ( புகழ் ஒலி ) மலி - மிகுந்த புறவமே .

பண் :சாதாரி

பாடல் எண் : 2

கொக்குடை யிறகொடு பிறையொடு குளிர்சடை முடியினர்
அக்குடை வடமுமொ ரரவமு மலரரை மிசையினில்
திக்குடை மருவிய வுருவினர் திகழ்மலை மகளொடும்
புக்குட னுறைவது புதுமலர் விரைகமழ் புறவமே.

பொழிப்புரை :

கொக்கின் இறகோடும் , பிறைச்சந்திரனோடும் கூடிய குளிர்ந்த சடைமுடியுடையவர் சிவபெருமான் . எலும்பு மாலை அணிந்தவர் . பாம்பை அரையில் கச்சாகக் கட்டியவர் . திசைகளையே ஆடையாகக் கொண்ட உருவினர் . அவர் மலைமகளான உமாதேவியோடு வீற்றிருந்தருளுவது அன்றலர்ந்த மலர்களின் நறுமணம் கமழும் திருப்புறவம் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

கொக்கு உடை இறகு - கொக்குருவோடுவந்த அசுரனைக் கொன்று அதற்கறிகுறியாய் அவ்விறகைத் தலையில் அணிந்தனர் . ` கொக்கினிற கதணிந்து நின்றாடி தென்கூடல் ` என்னும் திருக்கோவையாரிலும் வருவதறிக . இறகோடும் . பிறையோடும் குளிர்கின்ற சடைமுடியினர் . அக்குஉடைவடமும் - அக்குப்பாசியால் ஆகிய மாலையும் . ஒரு அரவமும் , மலர் - விளங்கும் . அரைமிசை - இடுப்பில் . திக்கு உடை மருவிய உருவினர் - திகம்பரர் ( நிர்வாண வடிவினர் ; பிட்சாடன அவதாரம் .) மலை மகளொடும் உறைவது புறவமே .

பண் :சாதாரி

பாடல் எண் : 3

கொங்கியல் சுரிகுழல் வரிவளை யிளமுலை யுமையொரு
பங்கிய றிருவுரு வுடையவர் பரசுவொ டிரலைமெய்
தங்கிய கரதல முடையவர் விடையவ ருறைபதி
பொங்கிய பொருகடல் கொளவதன் மிசையுயர் புறவமே.

பொழிப்புரை :

வாசனை பொருந்திய சுரிந்த கூந்தலையும் , வரிகளையுடைய வளையல்களையும் , இளமை வாய்ந்த முலைகளையும் உடைய உமாதேவியைத் தம் ஒருபாகமாகக் கொண்டு அர்த்த நாரீசுவர வடிவில் விளங்குபவர் சிவபெருமான் . அவர் மழுவோடு , மானையும் கரத்தில் ஏந்தியவர் , இடப வாகனமுடையவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது ஊழிக்காலத்தில் கடல் பொங்கிக் கரையில் மோதி உலகத்தை அழிக்க , அதில் மூழ்காது அக்கடலின்மீது உயர்ந்து மிதந்த சிறப்புடைய திருப்புறவம் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

கொங்கு இயல் - வாசனை பொருந்திய , சுரிகுழல் - சுரிந்த கூந்தல் . வரிவளை - வரிகளையுடைய வளையல் ( உமை ). ஒரு பங்கு இயல் - ஒருபாகம் பொருந்திய , திருஉரு உடையவர் ; அர்த்தநாரீசர் ( பரசுவொடு - மழுவுடன் . பரசு + ஒடு = பரசொடு என்று ஆகற்பாலது , உடம்படு மெய்பெற்றது . ` உக்குறள் கெடும் ` என்னாது ` ஓடும் ` என்ற இலேசினால் .) இரலை - மான் , கரதலம் தங்கிய மெய்யுடையவர் எனக் கூட்டுக . பொரு - கரையைமோதும் . பொங்கிய - கடல் என்க . கடல் உலகைக் கொள்ள , அக்கடலின்மேல் உயர்ந்து தோன்றிய புறவம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 4

மாதவ முடைமறை யவனுயிர் கொளவரு மறலியை
மேதகு திருவடி யிறையுற வுயிரது விலகினார்
சாதக வுருவியல் கானிடை யுமைவெரு வுறவரு
போதக வுரியதண் மருவின ருறைபதி புறவமே.

பொழிப்புரை :

பெரிய தவம் செய்த மறையவனான மார்க்கண்டேயனின் உயிரைக் கவரவந்த காலனைத் தம் பெருமை பொருந்திய திருவடி சற்றே பொருந்திய மாத்திரத்தில் அவனது உயிர் விலகும்படி செய்தவரும் , பூதகணங்கள் உலவும் காட்டில் உமாதேவி அஞ்சும்படி வந்த யானையின் தோலை உரித்துப் போர்த்தவருமான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற இடம் திருப்புறவம் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

மறையவன் - மார்க்கண்டேயர் . மேதகு - சிறந்த , ( திருவடி ) இறையுற - சற்றே பொருந்திய மாத்திரத்தில் ( உயிர் விலகுவித்தார் ) விலகினார் - பிறவினை விகுதி குன்றியது . கான் இடை - காட்டில் . ( உமை ) வெருவுஉற - அஞ்ச . சாதகஉரு - பூதாகிருதியோடு , உரு இயல் - மூன்றாம் வேற்றுமைத் தொகை . போதகம் - யானை . அதள் - தோல் . மருவினர் - போர்த்தவர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 5

காமனை யழல்கொள விழிசெய்து கருதலர் கடிமதில்
தூமம துறவிறல் சுடர்கொளு வியவிறை தொகுபதி
ஓமமொ டுயர்மறை பிறவிய வகைதனொ டொளிகெழு
பூமக னலரொடு புனல்கொடு வழிபடு புறவமே.

பொழிப்புரை :

சிவபெருமான் மன்மதன் எரியுமாறு நெற்றிக் கண்ணால் விழித்து நோக்கியவர் . பகையசுரர்களது காவலுடைய மும்மதில்களும் புகையெழும்படி வலிய நெருப்புப் பற்றும்படி செய்தவர் . அவர் வீற்றிருந்தருளும் தலமாவது , வேள்வி வளர்த்து , வேத மந்திரங்கள் ஓதி , பிற வாத்தியங்கள் ஒலிக்க , தீபமேற்றிப் பிரமன் , மலரும் , நீரும் கொண்டு வழிபட்ட திருப்புறவம் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

காமனை , விழிசெய்து - பார்த்து . கடி - காவல் . தூமம் உற - புகையெழுமாறு . விறல்சுடர் கொளுவிய - வலிய நெருப்புப் பற்றச்செய்த . இறை - இறைவன் . தொகுபதி - தங்கியிருக்கும் தலம் . பூமகன் - பிரமன் . ( அவன் வழிபாடு பின்னிரண்டடிகளிலும் கூறப் படுகிறது . ஓமம் , மந்திரம் இய ( ம் ) வகை - வாத்திய வர்க்கங்கள் . ஒளி - தீபம் , அலர் , புனல் , பிற - ஏனையவும் . கொடு - கொண்டு .

பண் :சாதாரி

பாடல் எண் : 6

சொன்னய முடையவர் சுருதிகள் கருதிய தொழிலினர்
பின்னையர் நடுவுணர் பெருமையர் திருவடி பேணிட
முன்னைய முதல்வினை யறவரு ளினருறை முதுபதி
புன்னையின் முகைநிதி பொதியவிழ் பொழிலணி புறவமே.

பொழிப்புரை :

இனிய சொற்களாலமைந்த பொருள் நயமிக்க தோத்திரங்களைச் சொல்பவர்களும் , வேதங்கள் கடைப்பிடிக்கும்படிக் கூறிய கர்மாக்களைச் செய்பவர்களும் , வேதத்தின் பிற்பகுதியான உபநிடதங்கள் என்னும் ஞானகாண்டத்தைக் கடைப்பிடிப்பவர்களும் , வேதத்தின் நடுவில் அதன் உள்ளீடாக விளங்கும் பொருள் சிவனே என்பதை உணர்ந்த பெருமையுடையவர்களும் , தம் திருவடிகளைப் போற்றி வழிபட , அவர்களைத் தொன்றுதொட்டுத் தொடர்ந்துவரும் ஆணவம் , கன்மம் இவை அறும்படி செய்பவராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் பதியானது , பொன் முடிப்புப் போன்ற புன்னை யரும்பு , பொதியவிழ்வது போல மலர , அதிலிருந்து பொன் போன்ற மகரந்தம் சிந்தும் சோலைவளமுடைய அழகிய திருப்புறவம் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

முன்னிரண்டடிகளிலும் வழிபடும் அடியார் திறன் கூறப்படுகிறது . சொல்நயம் உடையவர் . நயம் - இனிய பொருள் களடங்கிய . சொல் - தோத்திர மொழிகளையுடையவர் . சுருதிகள் - வேதம் முதலிய நூல்கள் . கருதிய - கருதிச் சொல்லப்பட்ட . தொழிலினர் - பணிபுரிபவர் . பின்னையர் - பெரியோர்க்குப் பின் நின்று பணிபுரிவோர் . இதனை ` பூவொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன் ` என்ற அப்பர் திருவாக்காலும் , ` பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே ` என்ற புற நானூற்றாலும் அறிக . நடு உணர் பெருமையர் - தூல பஞ்சாட்சரத்தில் நடு ஆகிய பதியின் தன்மையை உணரும் பெருமையர் , வேதத்தின் நடுவில் பிரதிபாதிக்கப்படும் பொருள் சிவனேயென்ற தன்மையை யுணரும் பெருமையர் எனினும் ஆம் . முன்னைய - தொன்றுதொட்டன ஆகிய மாயை , கன்மங்களும் . முதல் - ஆணவமும் ( ஆகிய ) வினை - மலங்கள் . ஈற்றடியில் , புன்னை யரும்பு பொன்முடிப்பாகவும் . அதின் மகரந்தம் பொன் ஆகவும் , அது மலர்வது பொதியவிழ்வதாகவும் உருவகித்துச் சோலைவளம் கூறியவாறு , சீகாழி கடலை யடுத்திருப்பதால் நெய்தல் வருணனையும் வயல் சூழ்ந்திருப்பதால் மருதவருணனையும் , இவ்விரு வருணனைகளும் பயில ஆங்காங்கு வருவது அறிந்து மகிழத்தக்கது . இரண்டாம் அடியில் முரண்தொடை , நடு - சிவம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 7

வரிதரு புலியத ளுடையினர் மழுவெறி படையினர்
பிரிதரு நகுதலை வடமுடி மிசையணி பெருமையர்
எரிதரு முருவின ரிமையவர் தொழுவதொ ரியல்பினர்
புரிதரு குழலுமை யொடுமினி துறைபதி புறவமே.

பொழிப்புரை :

சிவபெருமான் வரிகளையுடைய புலியின்தோலை ஆடையாக உடுத்தவர் . பகைவர்மேல் வீசும் மழுப்படையையுடையவர் . யாகத்திலிருந்து பிரிந்து வந்த நகுதலையைத் திருமுடியின் மீது மாலைபோல் அணிந்து கொண்ட பெருமையுடையவர் . எரிபோல் மிளிர்கின்ற சிவந்த மேனியுடையவர் . தேவர்களால் தொழப்படும் தன்மையுடையவர் . இத்தகைய சிவபெருமான் பின்னிய கூந்தலையுடைய உமாதேவியோடு இனிதே வீற்றிருந்தருளும் பதி திருப்புறவம் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

வரிதரு - வரிகளையுடையபுலி . அதள் - தோல் . உடையினர் . எறி - பகைவர்மேல் ( வீசும் மழுப்படையினர் ,) பிரிதரு - யாகத்திலிருந்தும் பிரிந்து வந்த , நகுதலை - நகுவெண்டலையை . வடம் - மாலையாக . முடிமிசை - தலையில் அணிபெருமையர் . இதிற் பெருமையாவது :- கொல்ல வந்த அதன் வலி கெடுத்து அணியெனக் கொண்டமை . ஆன்மாக்களை வினைவழி அழுத்தும் ஆணவ மலத்தின் வலி கெடுத்து . பேரின்பத்திலழுந்துமாறு செய்யவல்லான் தானே என்பதுணர்த்தி நின்றமை . இக்கருத்தை , முத்திதனில் மூன்று முதலும் மொழியக்கேள் , சுத்த அநுபோகத்தைத் துய்த்தலணு ..... ` இன்பங் கொடுத்தலிறை இத்தை விளைவித்தல் மலம் . அன்புடனே கண்டு கொளப்பா ` ( உண்மை விளக்கம் . 51.) எரிதரும் உருவினர் , தரும் :- உவமவாசகம் ; போன்ற என்னும் பொருளில் வருவதால் . புரிதரு - சடைபின்னிய . குழல் ( உமை ) - ஐம்பால் ஆகிய குழலில் . புரிதருகுழல் என்றது , உமையொடும் இனிது உறைபதி புறவம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 8

வசிதரு முருவொடு மலர்தலை யுலகினை வலிசெயும்
நிசிசர னுடலொடு நெடுமுடி யொருபது நெரிவுற
ஒசிதர வொருவிர னிறுவின ரொளிவளர் வெளிபொடி
பொசிதரு திருவுரு வுடையவ ருறைபதி புறவமே.

பொழிப்புரை :

வாளேந்திய கோலத்தோடு இடமகன்ற இவ்வுலகத்தைத் தன் வலிமையால் துன்புறுத்திய அரக்கனான இராவணனின் உடலோடு நெடிய தலைகள் பத்தும் நொறுங்கித் துவளும்படி தம் காற்பெருவிரலை ஊன்றியவரும் , ஒளிவிட்டுப் பிரகாசிக்கின்ற வெண்ணிறத் திருவெண்ணீற்றைப் பூசிய திருவுருவமுடையவருமான சிவபெருமான் வீற்றிருந்தருளும் பதி திருப்புறவம் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

வசிதரும் உருவொடு - வாளேந்திய கோலத்தோடு , ( வசி - வாள் ) மலர்தலையுலகினை - இடம் அகன்ற இவ்வுலகத்தை . வலிசெயும் - தன் வலியால் . துன்புறுத்திய . நிசிசரன் - அரக்கனாகிய இராவணனது ( நிசிசரன் - இரவிற் சஞ்சரிப்போன் ) உடலொடும் , நெடும்முடி ஒருபதும் - பத்துத் தலைகளும் , நெரிவு உற - அரைவுற்று . ஒசிதர - கசங்க . ( ஒருவிரல் ) நிறுவினர் - ஊன்றியருளியவர் . வெளிபொடி - வெண்மையை யுடையதாகிய திருநீறு . ( வெள் + இ = வெளி - வெண்மையையுடையது ` வெள்ளிப் பொடிப் பவளப் புறம்பூசிய வித்தகனே ` என்பதும் காண்க . ( அப்பர் திருவிருத்தம் ) சந்தம் நோக்கி வெளியென நின்றது விகாரம் . பொசிதரு - பூசப்பெற்ற , திரு உரு உடையவர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 9

தேனக மருவிய செறிதரு முளரிசெய் தவிசினில்
ஊனக மருவிய புலனுகர் வுணர்வுடை யொருவனும்
வானகம் வரையக மறிகடல் நிலனெனு மெழுவகைப்
போனக மருவின னறிவரி யவர்பதி புறவமே.

பொழிப்புரை :

உள்ளிடத்தில் தேன் பொருந்திய , இதழ்கள் பல செறிந்த தாமரை மலராகிய ஆசனத்தில் அமர்ந்து , சிவபெருமானின் ஆணையினால் மன்னுயிர்கட்குத் தனு , கரண , புவன , போகங்களைப் படைக்கும் பிரமனும் , ஏழுவகையாக அமைந்த வானகம் , மலை , கடல் , நிலன் இவற்றை உணவாக உண்டவனான திருமாலும் அறிதற் கரியவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் பதியானது திருப்புறவம் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

அகம் - உள்ளிடத்தில் . தேன் மருவிய - தேன் பொருந்திய . செறிதரு - இதழ்நெருங்கிய , தவிசு செய்முளரியினில் எனமாறிக்கூட்டி ஆசனமாகக்கொண்ட தாமரைப்பூவிலிருந்து சிவபெருமான் திருவருளாணை மேற்கொண்டு உயிர்வர்க்கங்கட்குத் தநுகரண புவனபோகங்களைப் படைப்பிக்கின்ற பிரமன் என்பது இரண்டாம் அடியின் கருத்து :- ஊன் - உடம்பு ; தநு . அகம் - மனம் முதலிய கரணம் ( உபலட்சணம் ). மருவிய ( நுகர்பொருள்கள் ) பொருந்திய , புலன் - புலம் : இடம் ; புவனம் , நுகர்வு - போகமுமாகிய இவற்றைப் படைக்கும் . உணர்வு உடை - அறிவையுடைய , ஒருவனும் ( பிரமனும் ,) ஆகாயம் பூமியாகிய ஏழு உலகங்களையும் உணவாக உடைய திருமாலும் . வரை அகம் - மலைநிலம் . பூமி - மறிகடல் நிலன் எனப்பட்டது .

பண் :சாதாரி

பாடல் எண் : 10

கோசர நுகர்பவர் கொழுகிய துவரன துகிலினர்
பாசுர வினைதரு பளகர்கள் பழிதரு மொழியினர்
நீசரை விடுமினி நினைவுறு நிமலர்த முறைபதி
பூசுரர் மறைபயி னிறைபுக ழொலிமலி புறவமே.

பொழிப்புரை :

நீரில் சஞ்சரிக்கின்ற மீன்களை உணவாகக் கொள்பவர்களும் , துவர் தோய்க்கப்பட்ட ஆடையணிபவர்களாகிய புத்தர்களும் ஆரியத்தொடு செந்தமிழ்ப் பயனறியாது வெறும் பாட்டைப் பாடுதலாகிய தொழிலையுடைய குற்றமுடையவர்கள் . பிறரைப் பழித்துப் புறங்கூறும் மொழிகளையுடையவர்கள் சமணர்கள் , இவ்விருவகை நீசர்களை விட்டு , சிவபெருமானைத் தியானியுங்கள் . இயல்பாகவே பாசங்களின் நீங்கியவனான அப்பெருமான் வீற்றிருந்தருளும் பதியாவது , இப்பூவுலக தேவர்கள் என்று போற்றப்படும் அந்தணர்கள் வேதங்களைப் பயின்று இறைவனைப் புகழும் ஒலி மிகுந்த திருப்புறவம் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

கோசரம் - நீரிற் சஞ்சரிக்கும் மீன்களை . நுகர்பவர் - உண்பவர்களாகிய சமணர்களும் . கோ - நீர் . துவர் கொழுகியன - மருதந்துவரால் தோய்த்தனவாகிய . ( கொழுகிய கு , சாரியை ) துகிலினர் - ஆடையை உடையவர்கள் . பாசுர வினைதரு - ( ஆரியத் தொடு செந்தமிழ்ப் ) பயனறிகிலாது வெறும்பாட்டைப் பாடுதலாகிய தொழிலையுடைய . பளகர்கள் - பாவிகள் . பழிதரு மொழியர் - பிறரைப் பழித்துப் புறங்கூறும் மொழியை உடையவர்களுமாகிய . நீசரைவிடும் - விடுங்கள் இனி . நினைவுறும் - தியானியுங்கள் . நின்மலப் பொருளாகிய சிவபெருமானது உறையும்பதி - புறவமே .

பண் :சாதாரி

பாடல் எண் : 11

போதியல் பொழிலணி புறவநன் னகருறை புனிதனை
வேதிய ரதிபதி மிகுதலை தமிழ்கெழு விரகினன்
ஓதிய வொருபது முரியதொ ரிசைகொள வுரைசெயும்
நீதிய ரவரிரு நிலனிடை நிகழ்தரு பிறவியே.

பொழிப்புரை :

மலர்களையுடைய சோலைகள் சூழ்ந்த திருப்புறவம் என்ற நல்ல நகரில் வீற்றிருந்தருளுகின்ற தூய உடம்பினனான சிவபெருமானைப் போற்றி , அந்தணர்களின் தலைவனும் , மிக்க முதன்மையுடைய தமிழ்ச் சமர்த்தனுமாகிய திருஞானசம்பந்தன் அருளிய இப்பத்துப் பாடல்களையும் உரிய இசையுடன் ஓதும் முறைமை தவறாதவர்கள் இப்பெரிய நிலவுலகில் இனி நிகழ்தலாகிய பிறவி இல்லாதவர்களாவர் .

குறிப்புரை :

போது இயல் - மலர்களையுடைய பொழில் . அணி - சோலை சூழ்ந்த ( புறவநன்னகர் உறை .) புனிதனை - தூயவுடம்பினனாகிய சிவபெருமானை . தலைதமிழ்கெழு - மேகம்போற் பொழிகின்ற தமிழையுடைய . விரகினன் - சமர்த்தன் . அதற்குரியதாகிய இசை பொருந்தும்படி உரை செயும் நீதியர் - பாடும் முறைமை தவறாதோர் . தலையல் - மழைபெய்தல் . இதனை ` தலைப்பெயல் தலைஇய தண்ணறுங் கானத்து ` என்னும் திருமுருகாற்றுப்படை ( அடி .9) யால் அறிக .
சிற்பி