திருவீழிமிழலை


பண் :சாதாரி

பாடல் எண் : 1

மட்டொளி விரிதரு மலர்நிறை சுரிகுழன் மடவரல்
பட்டொளி மணியல்கு லுமையமை யுருவொரு பாகமாக்
கட்டொளிர் புனலொடு கடியர வுடனுறை முடிமிசை
விட்டொளி யுதிர்பிதிர் மதியவர் பதிவிழி மிழலையே.

பொழிப்புரை :

மலர் விரிய நறுமணம் கமழும் , நெளிந்த கூந்தலை யுடையளாய் , மடமைப் பண்புடைய பெண்ணானவளாய் , பட்டாடையில் ஒளிமிக்க மேகலா பரணத்தை அணிந்தவளான உமாதேவியைத் தம் ஒருபாகமாகக் கொண்ட சிவபெருமான் , சடைமுடியின்கண் கட்டப்பட்டு விளங்கும் பிரகாசிக்கின்ற கங்கைநீரோடு , கடிக்கும் பாம்புசேர வசிக்கின்ற சடைமுடியில் விட்டுவிட்டுப் பிரகாசிக்கும் , தேய்ந்த கலைகளையுடைய சந்திரனையும் அணிந்து வீற்றிருந்தருளும் பதி திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

மட்டு - வாசனையோடு . ஒளிவிரிதரு - ஒளிபரவும் ( மலர்நிறை ) சுரிகுழல் - நெளிந்த கூந்தலையுடைய . மடவரல் - பெண் . பட்டு ஒளி - பட்டு ஆடையில் ஒளியையுடைய . மணி - மேகலா பரணத்தையணிந்த , உமை . ( மணி - சினையாகுபெயர் ) ஒரு பாகம் ஆ ( க ). அமை - அமைந்த . உரு - வடிவோடு . கட்டு - சடையின்கண் ( கட்டப்படுவது என்னும் பொருளில் ஐகார விகுதி புணர்ந்து கெட்டது .) ஒளிர் - பிரகாசிக்கின்ற , புனலொடு - கங்கை நீரோடு . கடி அரவு - கடிக்கும் பாம்பு , உடன் உறை - சேர வசிக்கின்ற . முடிமிசை - தலையில் . விட்டு ஒளி - விட்டு விட்டுப் பிரகாசிக்கும் கிரணங்கள் உதிர் . உதிர்வதுபோற் சொரியும் . பிதிர் - கலையையுடைய . மதியவர் - சந்திரனையுடையவராகிய சிவபெருமான் . வீழிமிழலை :- சந்தம் நோக்கி நெடில் முதல் குறுகியது .

பண் :சாதாரி

பாடல் எண் : 2

எண்ணிற வரிவளை நெறிகுழ லெழின்மொழி யிளமுலைப்
பெண்ணுறு முடலினர் பெருகிய கடல்விட மிடறினர்
கண்ணுறு நுதலினர் கடியதொர் விடையினர் கனலினர்
விண்ணுறு பிறையணி சடையினர் பதிவிழி மிழலையே.

பொழிப்புரை :

சிவபெருமான் , எண்ணற்ற வரிகளையுடைய வளையல்களையும் , சுருண்ட கூந்தலையும் அழகிய மொழியையும் , இளமுலைகளையும் உடைய உமாதேவியைத் தம் திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டவர் . பெருகித் தோன்றிய கடல் விடமுண்ட கண்டத்தினர் . நெற்றிக் கண்ணையுடையவர் . விரைந்து நடக்கும் இடபத்தை வாகனமாக உடையவர் . நெருப்பேந்திய கையினர் . விண்ணில் திகழும் பிறைச்சந்திரனை அணிந்த சடையினர் . இத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் பதி , திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

பண் - பாராட்டற்குரிய , நிறம் - நிறம்பொருந்திய , வரி - கீற்றுக்களையுடைய . வளை - வளையல்களையும் , நெறி - தழைத்த , குழல் - கூந்தலையும் , எழில்மொழி - அழகிய மொழியையும் உடைய . பெண் - உமாதேவியார் . உறும் - பொருந்திய உடலினர் . கடல் விடம் - கடலில் எழுந்த விடம் பொருந்திய , மிடறினர் - கண்டத்தையுடையவர் . கண் உறும் நுதலினர் - நெற்றிவிழியை யுடையவர் . கடியது - விரைந்து நடப்பதாகிய ஓர் விடையினர் . கனலினர் - ( கையிலேந்திய ) நெருப்பையுடையவர் . விண்உறு ( ம் ) பிறை அணி சடையினர் பதி வீழிமிழலை .

பண் :சாதாரி

பாடல் எண் : 3

மைத்தகு மதர்விழி மலைமக ளுருவொரு பாகமா
வைத்தவர் மதகரி யுரிவைசெய் தவர்தமை மருவினார்
தெத்தென விசைமுரல் சரிதையர் திகழ்தரு மரவினர்
வித்தக நகுதலை யுடையவ ரிடம்விழி மிழலையே.

பொழிப்புரை :

மை பூசிய அழகிய விழிகளையுடைய உமா தேவியை , சிவபெருமான் தம் உடம்பின் இடப்பாகமாக வைத்தவர் . மதம் பிடித்த யானையின் தோலை உரித்தவர் . தம்மை அடைந்தவர் தாளத்துடன் இசைபாடுகின்ற புகழையுடையவர் . பாம்பை அணிந்தவர் . அதிசயமான மண்டையோட்டைக் கொண்டவர் . இத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

மைதரு - மையணிந்த . மதர் - மதர்த்த விழியையுடைய ( உமை உரு ) ஒருபாகமா ( க ) வைத்தவர் . உரிவை செய்தவர் - உரித்தவர் . உரிவை - வை தொழிற் பெயர் விகுதி . தமை மருவினார் - தம்மை அடைந்த அன்பர்கள் . தெத்தென - தாளவொத்துக்களோடு . இசை முரல் - இசைபாடுகின்ற . சரிதையர் - புகழை யுடையவர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 4

செவ்வழ லெனநனி பெருகிய வுருவினர் செறிதரு
கவ்வழ லரவினர் கதிர்முதிர் மழுவினர் தொழுவிலா
முவ்வழ னிசிசரர் விறலவை யழிதர முதுமதிள்
வெவ்வழல் கொளநனி முனிபவர் பதிவிழி மிழலையே.

பொழிப்புரை :

சிவபெருமான் செந்நிறமான அழல்போன்ற மேனியுடையவர் . நெருப்புப் போன்று விடமுடைய , கவ்வும் தன்மையுடைய பாம்பை அரையில் கச்சாக இறுக்கமாகக் கட்டியவர் . சுடர் விடும் மழுப்படை உடையவர் . தம்மைத் தொழாத , பகைமையுடைய , சினம் மிகுந்த மூன்று அசுரர்களின் வலிமை அழியுமாறு அவர்களின் மதில்களை எரியுண்ணும்படி மிகவும் கோபித்தவர் . அத்தகைய பெருமான் வீற்றிருந்தருளும் பதியானது திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

செவ் அழல் - செந்நெருப்பு . என - என்னும்படி . நனி பெருகிய - மிகவும் பெருகிய , உருவினர் . செறி - அரையில் கட்டிய . கவ்வு - கவ்விக்கடிக்கும் . அழல் - விடத்தையுடைய ( அரவினர் ) கதிர் முதிர் - ஒளிமிக்க ( மழுவினர் ). அழல் நிசிசரர் - கோபத்தையுடைய அசுரர் . அழல் - கோபம் , சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி ` என வள்ளுவரும் உருவகித்தார் . ( குறள் . 306) ( மூன்று + அழல் = முவ்வழல் ) விறல் சுவை - வலிமைகள் , அழிதர - அழியவும் . மும் மதில் - திரிபுரம் ( வெம்மை + அழல்கொள ) பற்றி யெரியவும் . நனி முனிபவர் - மிகவும் கோபிப்பவர் . பதி வீழிமிழலை . தொழுவு இலா - தொழுதல் இல்லாத ( நிசிசரர் .)

பண் :சாதாரி

பாடல் எண் : 5

பைங்கண தொருபெரு மழலைவெ ளேற்றினர் பலியெனா
எங்கணு முழிதர்வ ரிமையவர் தொழுதெழு மியல்பினர்
அங்கண ரமரர்க ளடியிணை தொழுதெழ வாரமா
வெங்கண வரவின ருறைதரு பதிவிழி மிழலையே.

பொழிப்புரை :

பசிய கண்களையும் , சிறு முழக்கத்தையுமுடைய பெரிய வெண்ணிற இடபத்தைச் சிவபெருமான் வாகனமாகக் கொண்டவர் . எல்லா இடங்களிலும் பிச்சை ஏற்றுத் திரிபவர் . தேவர்களால் தொழப்படும் தன்மையர் . தேவர்கள் தொழுது எழும் இயல்பினராகிய அடியவர்களாலும் தொழுது போற்றப்படுபவர் . கொடிய கண்ணையுடைய பாம்பை அணிந்தவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் பதியானது திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

பைங்கண்ணது - பசிய கண்ணை யுடையதாகிய . மழலை - சிறுமுழக்கத்தைச் செய்கின்ற . பெரு வெள் ஏற்றினர் . வெள்ளிய பெரிய இடபத்தையுடையவர் . தருமம் - எவற்றினும் பெரியதாகலின் பெரு ஏறு எனப்பட்டது . ` பெரிய விடைமேல் வருவார் அவரெம்பெருமா னடிகளே ` என வந்தமையும் காண்க . பலி எனா - பிச்சை ( இடுமின் ) என்று , எங்கணும் - எல்லா இடங்களிலும் , எக்கண்ணும் என்றதன் மெலித்தல் விகாரம் . உழிதர்வர் - திரிபவர் . தேவர்கள் தொழுது எழும் இயல்பினராகிய தொண்டர்களும் , அந்தத் தேவர்களும் தொழுது எழ ( உறைபதி ) - ` தொழப்படுந் தேவர்தம்மாற் றொழுவிக்கும் தன் தொண்டரையே ` ( தி .4. ப .112. பா .5.) என்ற திருவிருத்தக்கருத்து .

பண் :சாதாரி

பாடல் எண் : 6

பொன்னன புரிதரு சடையினர் பொடியணி வடிவினர்
உன்னினர் வினையவை களைதலை மருவிய வொருவனார்
தென்னென விசைமுரல் சரிதையர் திகழ்தரு மார்பினில்
மின்னென மிளிர்வதொ ரரவினர் பதிவிழி மிழலையே.

பொழிப்புரை :

இறைவன் பொன்போன்று ஒளிரும் முறுக்கேறிய சடைமுடி உடையவர் . திருவெண்ணீறு அணிந்த திருமேனியர் . தம்மை நினைந்து போற்றும் அடியவர்களின் வினைகளை வேரோடு களைந்து அருள்புரியும் ஒப்பற்றவர் . இனிய இசையுடன் போற்றப்படும் புகழையுடையவர் . அழகிய திருமார்பில் மின்னலைப் போல் ஒளிரும் பாம்பணிந்தவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் பதி , திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

பொன் அ ( ன் ) ன - பொன்போன்ற . புரிதரும் - முறுக்கு ஏறிய ( சடையினர் ). உன்னினர் - தன்னை நினைப்பவர்களுடைய . வினை அவை - மலங்களை , களைதலை - நீக்குவதை - மருவிய ( தொழிலாகப் ) பொருந்திய , ஒருவனார் . களைதல் - வேரோடு பிடுங்குதல் , வினை - கன்மமலம் , அவையென்றதனால் ஏனை மாயை ஆணவ மலமும் கொள்ளப்படும் . ஒருவனார் - வேதங்களில் ஒன்று என்று எடுத்து ஒதப்பட்டவர் : ` ஒருவனென்னும் ஒருவன் காண்க .` ( தி .8 திருவண்டப்பகுதி . அடி - 43.) ` ஒன்றென்றது ஒன்றே காண் ஒன்றே பதி ` என்பது சிவஞானபோத வெண்பா . தென் என இசை முரல் சரிதையர் - தென் என்னும் இசைக்குறிப்போடு சங்கீதங்களைப் பாடும் இயல்பினர் . மிளிர்வது - பிரகாசிப்பதாகிய , ஓர் அரவினர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 7

அக்கினொ டரவரை யணிதிக ழொளியதொ ராமைபூண்
டிக்குக மலிதலை கலனென விடுபலி யேகுவர்
கொக்கரை குழன்முழ விழவொடு மிசைவதொர் சரிதையர்
மிக்கவ ருறைவது விரைகமழ் பொழில்விழி மிழலையே.

பொழிப்புரை :

சிவபெருமான் , அக்குப்பாசியோடு பாம்பையும் அரையில் அணிந்தவர் . ஒளிரும் ஆமையோட்டை மார்பில் பூண்டவர் . கரும்பின் சுவை போன்று இனிய மொழிகளைப் பேசி , தம் கையில் நீங்காது பொருந்திய மண்டையோடாகிய பாத்திரத்தில் இடப்படுகின்ற பிச்சையை ஏற்பவர் . கொக்கரை , குழல் , முழவு முதலான வாத்தியங்கள் இசைக்க , நிகழும் விழாக்களில் அடியார் செய்யும் சிறப்புக்களை ஏற்று மகிழும் பண்பினர் . தம்மினும் மிக்கவரில்லையாக மேம்பட்ட அப்பெருமான் வீற்றிருந்தருளுவது நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

அக்கினோடு - அக்குப்பாசியோடு . அரவு - பாம்பு . அரை - இடுப்பில் ( பூண்டும் ). அணிதிகழ் ஒளியது ஓர் ஆமை - அழகால் விளங்குகின்ற , ஒளியையுடையதாகிய ஆமையோட்டை ( மார்பில் ) பூண்டும் , பூண்டு என்பதை முன்னும் கூட்டி எண்ணும் மையை விரிக்க . அக்குக்கு அரை என்றதனால் ஆமைக்கு மார்பு கொள்க . இக்கு உக - கரும்பின் சுவை சொட்ட என்றது இன்சொற்கள் பேசி என்ற கருத்து . கரும்பின் சுவை - சொல்லினிமை குறிப்பதால் உவம ஆகுபெயர் , உக என்றதனால் கரும்பின் சுவை கொள்க . மலிதலை - கையில் நீங்காது பொருந்திய மண்டையோடு . கலன் என - பாத்திரமாக , பலி ஏகுவர் - பலிக்குச் செல்வார் . கொக்கரை முதலிய வாத்தியங்கள் ஆரவாரிக்க நடக்கும் உற்சவங்களில் அடியார் செய்யும் சிறப்புக்களை ஏற்றுக்கொண்டு காட்சியளிக்கும் இயல்பையுடையவர் . கண்ணினாலவர் நல்விழாப் பொலிவு கண்டு ஆர்தல் , மண்ணினிற் பிறந்தார் பெறும்பயன் ஆகையால் அவர்கட்கு எழுந்தருளி அருள் செய்யும் திறன் மூன்றாம் அடியிற் குறித்த பொருள் . மிக்கவர் - தன்னின் மிக்கவரில்லையாக மேம்பட்டவர் . ` யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையான் ` என்றபடி ( தி .8 திருவாசகம் ).

பண் :சாதாரி

பாடல் எண் : 8

பாதமொர் விரலுற மலையடர் பலதலை நெரிதரப்
பூதமொ டடியவர் புனைகழ றொழுதெழு புகழினர்
ஓதமொ டொலிதிரை படுகடல் விடமுடை மிடறினர்
வேதமொ டுறுதொழின் மதியவர் பதிவிழி மிழலையே.

பொழிப்புரை :

தம் பாதத்திலுள்ள ஒரு விரலை ஊன்றி , கயிலை மலையின்கீழ் இராவணனின் பத்துத் தலைகளும் நெரியும்படிச் செய்தவர் . பூதகணங்களும் அடியவர்களும் தம்முடைய அழகிய திருவடிகளைத் தொழுது போற்றத்தக்க புகழையுடையவர் . ஆரவாரத்தோடு ஒலிக்கின்ற அலைகளையுடைய கடலில் தோன்றிய விடத்தைத் தேக்கிய கண்டத்தர் . அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் பதியாவது , வேதம் ஓதுதலுடன் , தமக்குரிய ஆறு தொழில்களையும் செய்கின்ற அறிஞர்களாகிய அந்தணர்கள் வாழ்கின்ற திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

பாதம் ஓர் விரல் உற - பாதத்தில் உள்ள ஓர் விரல் பொருந்த அதனால் , மலை அடர் - பலதலைநெரிபட மலையால் அடர்க்கப்பட்ட பத்துத் தலைகளும் ( அரைபடச் செய்து ) என ஒரு சொல் வருவித்துரைக்க . புனைகழல் - புனைந்த கழலையுடைய . திருவடி - வினைத் தொகைப் புறத்து அன்மொழி . ஓதமொடு ஒலி - ஆரவாரத்தோடு ஒலிக்கின்ற , திரைபடு - அலைகளையுடைய . கடல் விடம் உடை ( ய ), மிடறினர் - கழுத்தையுடையவர் . வேதமொடு - வேதம் ஓதுதலுடன் . உறுதொழில் - தமக்குற்றதாகிய ஆறு தொழில்களையும் உடைய . மதியவர் - அறிஞர்களாகிய அந்தணர் . வாழும் பதி - திருவீழிமிழலை . ஒன்று அல்லாதன பல என்பது தமிழ் வழக்காதலால் பத்தென்னாது பல என்றார் .

பண் :சாதாரி

பாடல் எண் : 9

நீரணி மலர்மிசை யுறைபவ னிறைகட லுறுதுயில்
நாரண னெனவிவ ரிருவரு நறுமல ரடிமுடி
ஓருணர் வினர்செல லுறலரு முருவினொ டொளிதிகழ்
வீரண ருறைவது வெறிகமழ் பொழில்விழி மிழலையே.

பொழிப்புரை :

நீரில் விளங்கும் தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும் , நிறைந்த நீருடைய கடலில் துயிலும் திருமாலும் ஆகிய இவர்கள் இருவரும் இறைவனின் நறுமணம் கமழும் மலர் போன்ற திருவடியையும் , மலரணிந்த திருமுடியையும் காண வேண்டும் என்ற ஒரே உணர்வினராய்ச் சென்றும் , காணற்கு அரியவராய்ப் பேரொளியாய் ஓங்கி நின்ற வீரம் பொருந்திய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , நறுமணம் கமழும் பூக்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

நீர் அணி - குளத்திற்கு அணியாகிய , மலர்மிசை - தாமரை மலரில் ( உறைபவன் ). ` குளத்துக் கணியென்ப தாமரை ` என்பதனால் நீரணி மலர் என்னப்பட்டது . நீர் - தானி யாகுபெயராய்க் குளத்தைக் குறித்தது . நறுமலர் அடிமுடி - நறுமணமுள்ள மலர்போன்ற அடியையும் , மலரையணிந்த முடியையும் , ( நறுமலர் அடிமுடி என்னும் தொடரில் அடையை அடியோடும் முடியோடும் கூட்டுமாறு அமைந்திருத்தலின் அவ்வாறே கொள்க .) ஓர் - ஆராயும் . ( தேடிக் காண வேண்டும் என்னும் ) உணர்வினர் - அறிவுடையவர்களாய் . மலர் உறைபவன் - நாரணன் . அடிமுடி ஓர் உணர்வினர் என்றிது எதிர் நிரனிறை . செலல் உறல் அரும் - ( காண்பது நிற்க ) அருகே செல்லத் தொடங்குவதற்கும் அரியதான , உருவினோடு ஒளிதிகழ் - ஒளியாய் விளங்கிய . வீர அணர் - வீரம் பொருந்தியவர் . அணவுதல் - பொருந்துதல் . வீரணர் - மரூஉ . இது இறைவனின் முடிவிலாற்றலுடைமை கூறியவாறு .

பண் :சாதாரி

பாடல் எண் : 10

இச்சைய ரினிதென இடுபலி படுதலை மகிழ்வதோர்
பிச்சையர் பெருமையை யிறைபொழு தறிவென வுணர்விலர்
மொச்சைய வமணரு முடைபடு துகிலரு மழிவதோர்
விச்சைய ருறைவது விரைகமழ் பொழில்விழி மிழலையே.

பொழிப்புரை :

பிரமனின் மண்டையோட்டில் இடப்படுகின்ற பிச்சையை இனிதென ஏற்கும் விருப்பமுடைய சிவபெருமானின் பெருமையைச் சிறிதும் அறியும் உணர்வில்லாதவர்கள் சமணர்களும் , புத்தர்களும் ஆவர் . நீராடாமையால் துர்நாற்றத்தை உடைய சமணர்களும் , துவைத்து உடுத்தாமையால் முடைநாற்றமுடைய ஆடையைப் போர்ப்பவர்களாகிய புத்தர்களும் அழிவதற்குக் காரணமான வித்தை செய்பவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது நறுமணம் கமழும் சோலைகளையுடைய திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

இடுபலி இனிது என இச்சையினராய் , மகிழ்வது ( ஓர் ) பிச்சையர் - மகிழ்ந்தேற்கும் பிச்சையுணவுடையவர் . ஓர் அசைநிலை ` மார்கழி நீர் ஆடேலோ ரெம்பாவாய் ` ( தி .8 திருவெம்பாவை . பா .20.) ` அஞ்சுவ தோரும் அறனே ` என்புழி ( குறள் 366 ) வந்தமைபோல . அத்தகைய பிச்சையினரெனினும் , ( அவர் ) பெருமையை . இறை - ஒரு சிறிதும் . பொழுது - எப்பொழுதும் . அறிவு என - ( நம்மால் ) அறிதல் ( முடியும் ) என்று . உணர்வு இலர் - ( எவராலும் ) உணரப்படாதவர் . மொச்சைய - ( நீராடாமையால் ): துர்நாற்றத்தையுடைய , அமணரும் , முடைபடுதுகிலினர் ( ஒலித்துடுத் தாமையால் ) முடை நாற்றத்தையுடைய ஆடையைப் போர்ப்பவராகிய புத்தரும் . அழிவது ஓர் விச்சையர் - அழிவதற்குக் காரணமான வித்தைசெய்பவர் . விச்சையர் என்பதற்குக் ` குழலன் கோட்டன் குறும்பல்லியத்தன் என்பதற்கு நச்சினார்க்கினியர் உரைத்தாங்கு ( திருமுருகாற்றுப் படை ) உரைக்க .

பண் :சாதாரி

பாடல் எண் : 11

உன்னிய வருமறை யொலியினை முறைமிகு பாடல்செய்
இன்னிசை யவருறை யெழிறிகழ் பொழில்விழி மிழலையை
மன்னிய புகலியுண் ஞானசம் பந்தன வண்டமிழ்
சொன்னவர் துயரிலர் வியனுல குறுகதி பெறுவரே.

பொழிப்புரை :

இறைவன் அருளிச்செய்ததாகக் கருதப்படும் அருமறையின் ஒலியினை முறையாக இசையோடு பாடிப் போற்றும் அந்தணர்கள் வசிக்கின்றதும் , அழகிய சோலைகள் விளங்குவதுமான திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தைப் போற்றி , நிலைபெற்ற புகலியில் அவதரித்த ஞானசம்பந்தன் வண்தமிழால் அருளிய இத் திருப்பதிகத்தை ஓதுபவர்கள் இம்மையில் துயரற்றவராவர் . மறுமையில் வீடுபேறடைவர் .

குறிப்புரை :

உன்னிய - ( இறைவன் மொழியென்று ) கருதப்பட்ட அருமறை யொலியினை , உதாத்தம் , அநுதாத்தம் , சுவரிதம் என்னும் ஒலியை முறைமைமிக்க பாடல்களாகப்பாடுகின்ற , இனிய இசையையுடைய அந்தணர் வாழும் என்பது . முறை ...... உறை - என்பதன் பொருள் . இம்மையில் வரும் துயர் எதுவும் இல்லாதவராய் , மறுமையில் முத்தியுலகெய்துவரென்பது இறுதிப்பகுதியின் பொருள் .
சிற்பி