திருச்சேறை


பண் :சாதாரி

பாடல் எண் : 1

முறியுறு நிறமல்கு முகிழ்முலை மலைமகள் வெருவமுன்
வெறியுறு மதகரி யதள்பட வுரிசெய்த விறலினர்
நறியுறு மிதழியின் மலரொடு நதிமதி நகுதலை
செறியுறு சடைமுடி யடிகடம் வளநகர் சேறையே.

பொழிப்புரை :

சிவபெருமான் , தளிர் போன்ற நிறமும் , அரும்பு போன்ற முலையுமுடைய உமாதேவி அஞ்சுமாறு , மதம் பிடித்த யானையின் தோலை உரித்த வலிமையுடையவர் . நறுமணம் கமழும் இதழ்களை உடைய கொன்றைப் பூவோடு , கங்கை நதியையும் , பிறைச்சந்திரனையும் , மண்டையோட்டையும் நெருங்கிய சடை முடியில் அணிந்துள்ள அவ்வடிகள் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சேறை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

முறியுறு - தளிர்போன்ற ( உறு உவமவாசகம் ) நிறம் மல்கு - நிறம் பொருந்திய . முகிழ் - அரும்புபோன்ற , ( கோங்கு , தாமரை இவற்றின் அரும்புகள் ) முலை , மலைமகள் , வெருவ - அஞ்ச . மதவெறி உறுகரி - எனக்கூட்டுக . அதள் - தோல் . பட - உடை யாகும்படி . விறல் - வலிமை . நறி - நறுமணமுடையது ( ஆகி ). உறும் - பொருந்திய . இதழியின் மலரொடு - கொன்றைப்பூவோடு . ( நறு + இ = நறி என்றாயது ). வெண்மையுடையது வெள்ளி யென்றாயவாறு ` வெள்ளிப் பொடிப் பவளப் புறம்பூசிய ` என்புழிப்போல . ( தி .4. ப .112. பா .1.) நதி , ( கங்கை ) மதி , நகுதலை , செறியுறு - நெருங்கிய ( சடைமுடியடிகள் தம் வளநகர் சேறையே .)

பண் :சாதாரி

பாடல் எண் : 2

புனமுடை நறுமலர் பலகொடு தொழுவதொர் புரிவினர்
மனமுடை யடியவர் படுதுயர் களைவதொர் வாய்மையர்
இனமுடை மணியினொ டரசிலை யொளிபெற மிளிர்வதோர்
சினமுதிர் விடையுடை யடிகடம் வளநகர் சேறையே.

பொழிப்புரை :

வனங்களிலுள்ள பல நறுமலர்களைப் பறித்துத் தூவித் தொழுகின்ற அடியவர்கட்கும் , மன உறுதிப்பாட்டுடன் அன்பால் உருகித் தியானம் செய்யும் அடியவர்கட்கும் துயர் களைந்து அருள்புரியும் நியமமுடைய சிவபெருமான் கழுத்தில் கட்டப்படும் மணியும் , அரசிலை போன்ற அணியும் ஒளிர , மிக்க கோபமுடைய இடபத்தை வாகனமாகக் கொண்டவராய் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சேறை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

புனம் உடை - வனங்களிலுள்ள . ( பல நறுமலர் கொடு ) தொழுவது ஓர் புரிவினர் - வணங்கும் விருப்பம் உடையவர்கள் . மனம் உடை - உறுதிப்பாட்டையுடைய ( அடியவர் படு ( ம் ) துயர் ) களைபவர் - ஒழிப்பவர் , ` உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கிவிடும் ` ( குறள் . 592) என்பதில் உள்ளம் - ஊக்கத்தைக் குறித்ததுபோல . இங்கு மனம் - உறுதிப்பாட்டைக் குறித்தது . ` வானம் துளங்கிலென் மண்கம்ப மாகிலென் ... ஊனமொன் றில்லா வொருவனுக்காட்பட்ட உத்தமர்க்கே ` ( தி .4. ப .112. பா .8.) என்றதுங் காண்க . வாய்மையர் - நியமத்தையுடையவர் . இனம் உடை - கூட்டமான . மணி - கழுத்திற்கட்டும்மணி . அரசு இலை - அரசிலை போன்ற ஓர் அணி . இதுவும் விடையின் கழுத்திற் கட்டுவது . ஒளிபெற - ஒளியையயுடையதாக . மிளிர்வது ( ஓர் ) - பிரகாசிப்பதாகிய . சினம் முதிர் - கோபம் மிக்க . ( விடை ).

பண் :சாதாரி

பாடல் எண் : 3

புரிதரு சடையினர் புலியத ளரையினர் பொடிபுல்கும்
எரிதரு முருவின ரிடபம தேறுவ ரீடுலா
வரிதரு வளையின ரவரவர் மகிழ்தர மனைதொறும்
திரிதரு சரிதைய ருறைதரு வளநகர் சேறையே.

பொழிப்புரை :

சிவபெருமான் முறுக்குண்ட சடைமுடி உடையவர் . புலியின் தோலை அரையில் கட்டியவர் . நீறுபூத்த நெருப்புப் போன்ற சிவந்த திருமேனியில் வெண்ணிறத் திருநீற்றினைப் பூசி விளங்கும் உருவினர் . இடப வாகனத்தில் ஏறுபவர் . சரிந்த வரிகளையுடைய வளையல்களை அணிந்த , பெருமையுடைய மகளிர் மகிழும்படி வீடுகள்தோறும் திரிந்து பிச்சையேற்கும் இயல்புடையவர் . அத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சேறை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

புரிதரு - முறுக்குண்ட . சடையினர் . பொடிபுல்கும் எரிதரும் உருவினர் - நீறுபூத்த நெருப்புப்போலும் வடிவையுடையவர் . திருமேனிக்கு - நெருப்பு உவமை . இடபம் ( அது ) ஏறுவர் . ஈடு உலாம் - இடப்பட்டதாகிச் சரிகின்ற . வரிதரு - கீற்றுக்களையுடைய . வளையினர் அவரவர் - வளையலை அணிந்தவர்களாகிய அவ்வம் மாதர்கள் . ( மகிழ்தர மனைதொறும் ) திரிதரு சரிதையர் - திரியும் இயல்பு உடையவர் . உலாம்வளை - ` தொடியுலாம் மென்கை மடமாதர் `. ( நால்வர் நான்மணி மாலை . பா .3.)

பண் :சாதாரி

பாடல் எண் : 4

துடிபடு மிடையுடை மடவர லுடனொரு பாகமா
இடிபடு குரலுடை விடையினர் படமுடை யரவினர்
பொடிபடு முருவினர் புலியுரி பொலிதரு மரையினர்
செடிபடு சடைமுடி யடிகடம் வளநகர் சேறையே.

பொழிப்புரை :

உடுக்கை போன்று குறுகிய இடையுடைய உமாதேவியைச் , சிவபெருமான் தம் ஒரு பாகமாகக் கொண்டவர் . இடிமுழக்கம் போன்ற குரலுடைய இடபத்தை வாகனமாகக் கொண்டவர் . படமெடுத்தாடும் பாம்பை அணிந்தவர் . திருவெண்ணீறு அணிந்த உருவினர் . இடையில் புலித்தோலாடை அணிந்தவர் . செடிபோன்று அடர்த்தியான சடைமுடி உடையவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சேறை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

துடிபடும் இடை உடை - உடுக்கைபோலும் இடையையுடைய ( படும் - உவமவாசகம் ) மடவரல் உமை - பெண்ணாகிய உமாதேவியார் . இடிபடு - இடிபோலும் . ( குரல் உடை விடையினர் .) பொடி - திருநீறு . பொலிதரு - விளங்குகின்ற . செடிபடு - செடிகளைப் போல் அடர்த்தியான , சடைமுடி அடிகள் ..

பண் :சாதாரி

பாடல் எண் : 5

அந்தர முழிதரு திரிபுர மொருநொடி யளவினில்
மந்தர வரிசிலை யதனிடை யரவரி வாளியால்
வெந்தழி தரவெய்த விடலையர் விடமணி மிடறினர்
செந்தழ னிறமுடை யடிகடம் வளநகர் சேறையே.

பொழிப்புரை :

சிவபெருமான் ஆகாயத்தில் சுற்றித் திரிந்த திரிபுரங்களை ஒரு நொடிப்பொழுதில் மலையை வில்லாகவும் , அதனிடை வாசுகி என்னும் பாம்பை நாணாகவும் பூட்டி , திருமால் , வாயு , அக்கினி இவற்றை அம்பாகக் கொண்டு எய்து வெந்தழியுமாறு செய்த வீரமிக்க வாலிபர் . தேக்கிய விடம் மணி போன்று விளங்கும் கண்டத்தர் . செந்தழல் போன்ற மேனியுடைய அவர் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சேறை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

அந்தரம் - ஆகாயத்தில் . உழிதரு - சுற்றித்திரிந்த . ( திரிபுரம் ) மந்தரம் - மலை ( சிறப்புப்பெயர் , பொதுப் பெயரைக் குறித்தது ) வரிசிலை - கட்டமைந்த வில் . அதன் இடை - அதில் ( இடை ஏழனுருபு ) பூட்டும்நாண் . அரவு - பாம்பு ஆக . அரி வாளியால் - திருமாலாகிய அம்பால் . அரி - காற்றையும் , நெருப்பையும் குறிப்பதால் - சுருங்கச் சொல்லல் என்னும் அழகுபற்றி அவ்விரு பொருளும் கொண்டு , அம்பின் அடிப்பாகம் காற்று , நுனிப்பாகம் நெருப்பு , இடைப்பாகம் திருமால் என விளங்க வைத்தமை காண்க . வெந்து , அழிதர - அழிய . ( எய்த ) விடலையர் - வாலிபர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 6

மத்தர முறுதிறன் மறவர்தம் வடிவுகொ டுருவுடைப்
பத்தொரு பெயருடை விசயனை யசைவுசெய் பரிசினால்
அத்திர மருளுந மடிகள தணிகிளர் மணியணி
சித்திர வளநகர் செறிபொழி றழுவிய சேறையே.

பொழிப்புரை :

மந்தர மலை போன்ற வலிமையுடைய வேட்டுவ வடிவம் தாங்கி வந்து , பத்துப் பெயர்களைச் சிறப்பாகக் கொண்ட விசயனைப் பொருது தளரச்செய்து , அவன் கௌரவர்களைத் தோல்வியடையச் செய்யும் வண்ணம் பாசுபதம் என்னும் அம்பைக் கொடுத்தருளிய சிவபெருமான் வீற்றிருந்தருளுவது இரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய வளநகராய் , அடர்ந்த சோலைகள் சூழப்பெற்ற திருச்சேறை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

மத்தரம் உறுதிறல் - மந்தர மலைபோன்ற வலிமையையுடைய . மறவர் - வேடர் . ( மந்தரம் - மத்தரம் என வலித்தல் விகாரம்பெற்றது . உறு - உவமவாசகம் ) உரு உடை - அழகையுடைய . பத்து ஒரு பெயருடை - ஒருபத்துப் பெயரையுடைய . விசயனை - அருச்சுனனை . அசைவு செய் பரிசினால் - தோற்பிக்கும் தன்மையினால் . அத்திரம் - பாசுபதம் என்னும் அம்பை . அருளும் - கொடுத்தருளிய . நம் அடிகள் - நமது பெருமான் . மணி அணி - இரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட . சித்திரம் - அழகிய ( வளநகர் ), செறி பொழில் தழுவிய - அடர்ந்த சோலைகளாற் சூழப்பட்ட சேறை . அணிகிளர் - அழகு மிகுந்த . ( அத்திரம் அருளும் நம் அடிகளது ) வளநகர் திருச்சேறையென்க .

பண் :சாதாரி

பாடல் எண் : 7

பாடின ரருமறை முறைமுறை பொருளென வருநடம்
ஆடின ருலகிடை யலர்கொடு மடியவர் துதிசெய
வாடினர் படுதலை யிடுபலி யதுகொடு மகிழ்தரும்
சேடர்தம் வளநகர் செறிபொழி றழுவிய சேறையே.

பொழிப்புரை :

இறைவன் முறைப்படி வரிசையாக அரிய வேதங்களைப் பாடியருளியவர் . ஐந்தொழில்களை ஆற்றும் திருநடனம் செய்பவர் . உலகில் அடியவர்கள் மலரும் , பூசைக்குரிய பிற பொருள்களும் கொண்டு போற்றித் துதிக்க அருள்செய்பவர் . வாட்டமுற்ற பிரமனின் வறண்ட மண்டையோட்டில் பிச்சையேற்று மகிழ்பவர் . அப்பெருமான் பெருமையுடன் வீற்றிருந்தருளும் வளநகர் , அடர்ந்த சோலைகள் விளங்கும் திருச்சேறை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

முறைமுறை அருமறை பாடினர் - முறைமைப்படி வரிசையாக அரியவேதம் பாடினர் . ( முதல் முறை - பாடும் கிரமம் . அடுத்தமுறை - இதன்பின் இது பாடுக என்னும் வரிசை ) பொருள் என அருநடம் ஆடினர் - ( ஐந்தொழில் இயற்றும் கடவுள் தாமே என்னும் ) தன்மையை யுணர்த்துபவராய் அரிய திருக்கூத்தாடியவர் . பொருள் - கடவுள் , திருக்கூத்தில் ஐந்தொழிலும் காட்டும் குறி :- ` தோற்றம் துடியதனில் தோயும் திதி அமைப்பிற் - சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் - ஊற்றமா , ஊன்று மலர்ப்பதத்தே யுற்றதிரோதம் முத்தி , நான்றமலர்ப்பதத்தே நாடு `. ( உண்மை விளக்கம் - 36.) உலகிடை - உலகில் . ( மலரும் , பூசைக்குரிய பிற பொருளும் கொண்டு ) அடியவர் ( பூசித்துத் ) துதி செய்ய . மலர்கொடும் - மலரும் கொடு எனப் பிரித்துக் கூட்டுக . மலரும் - எச்சவும்மை . வாடினர் - வாட்டமுற்றவனாகிய பிரமனின் . படுதலை - வறண்ட மண்டையோட்டில் . தலை கொய்யப்பட்டதனால் வாட்டம் உற்றனன் என்க . வாடினர் - என்றது இழிப்புப்பற்றி .

பண் :சாதாரி

பாடல் எண் : 8

கட்டுர மதுகொடு கயிலைநன் மலைமலி கரமுடை
நிட்டுர னுடலொடு நெடுமுடி யொருபது நெரிசெய்தார்
மட்டுர மலரடி யடியவர் தொழுதெழ வருள்செயும்
சிட்டர்தம் வளநகர் செறிபொழி றழுவிய சேறையே.

பொழிப்புரை :

தனது உறுதியான உடல்வலிமை கொண்டு கயிலைமலையைத் தன் மிகுதியான கரங்களால் பெயர்த்தெடுக்க முயன்ற கொடியவனான இராவணனின் உடலும் , பெரிய தலைகள் பத்தும் நெரித்தவர் சிவபெருமான் . அவருடைய நறுமணம் கமழும் மலர் போன்ற திருவடிகளை அடியவர்கள் தொழுது போற்ற அருள் செய்யும் நல்லியல்புடையவர் . அவர் வீற்றிருந்தருளும் வளநகர் அடர்ந்த சோலைகள் சூழ்ந்த திருச்சேறை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

கட்டு உரம் ( அது ) கொடு - தனது உறுதியான உடல் வலிமை கொண்டு . கயிலைநல்மலை நிட்டுரன் - நல்ல கயிலை மலைக்குத் தீங்கு இழைத்தோனாகிய இராவணனது ( நல்மலை யென்றார் . தீங்கு செய்தோனுக்கும் நன்மைசெய்த கருணை நினைந்து ) மலிகரம் உடை உடலோடு அதிகமான ( இருபது ) கைகளையுடைய உடம்போடு . நெடும் - பெரிய . முடியொருபத்தும் நெரிசெய்தார் - தலை பத்தையும் அரைபடும்படிச் செய்தருளினார் . மட்டு - வாசனையையுடைய . உரம் - வளம் மிக்க . மலர் அடி - மலர்போலும் திருவடிகளை . ( அடியவர் தொழுது எழ அருள் செய்யும் ) சிட்டர் - நல்லியல்புடையவர் . சிட்டன் - சிவபெருமானைக் குறிப்பது . ` சிட்டனே சிவலோகனே சிறு நாயினுங் கடையாயவெங் கட்டனேனையும் ஆட்கொள்வான் வந்து காட்டினாய் கழுக்குன்றிலே ` ( திருவாசகம் . திருக்கழுக்குன்றப் பதிகம் - 2. ).

பண் :சாதாரி

பாடல் எண் : 9

பன்றியர் பறவையர் பரிசுடை வடிவொடு படர்தர
அன்றிய வவரவ ரடியொடு முடியவை யறிகிலார்
நின்றிரு புடைபட நெடுவெரி நடுவெயொர் நிகழ்தரச்
சென்றுயர் வெளிபட வருளிய வவர்நகர் சேறையே.

பொழிப்புரை :

திருமால் பன்றி உருவெடுத்தும் , பிரமன் அன்னப்பறவை உருவெடுத்தும் இறைவனைக் காணமுயல , அவ்விருவரும் தன் அடியையும் , முடியையும் அறியாவண்ணம் அவர்கள் நடுவே நெடிய நெருப்புப் பிழம்பாய்த் தோன்றுமாறு , ஓங்கி , தன் மேலாந்தன்மை வெளிப்பட அருளிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் நகர் திருச்சேறை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

பரிசு உடை - தமக்கு ஏற்ற தன்மையையுடைய . வடிவோடு - வடிவங்களுடனே , பன்றியர் - பன்றியானவனும் . பறவையானவனும் ஆகிய திருமாலும் பிரமனும் . ( பன்றியன் , பறவையன் என ஒருமையாற் கூறற்பாலது .) பன்மையாற்கூறியது ; இழிப்புப்பற்றி . அவர் அவர் என்பதும் அது . ( படர்தர - காணச் செல்ல ). அன்றிய - மாறுபட்ட . அவர் - அத்திருமாலும் . அவர் - அப்பிரமனும் ( அன்றிய - இப்பொருட்டாதலை ` அன்றினார் புரமெரித்தார்க் காலயமெடுக்க எண்ணி ` என்னும் ( தி .12 பூசலார் . புரா . 1.) ணத்தாலும் , சிவஞான சித்தியார் சூ 1. 42 உரையாலும் அறிக . அடியொடும் . முடி அவை - அடியும் முடியுமாகிய அவற்றை . அறிகிலார் - அறிய முடியாதவராகி . நின்று இரு புடைபட - இருபுடை பட்டு நிற்க என எச்சவிகுதி பிரித்துக் கூட்டுக . இருபக்கமும் பொருந்தி நிற்க என்றபடி - நடுவே - நடுவே . நெடு - நெடிய . எரி - நெருப்புப் பிழம்பாய் . நிகழ்தரச்சென்று - தோன்றுமாறு ஓங்கி . உயர் - ( யார் ) மேலானவர் என்பது . வெளிபட அருளிய - வெளியாகும் வண்ணம் திருவுளங்கொண்ட . அவர் - அந்தச் சிவபெருமான் , நகர் சேறையே என்க . உயர்வு என்பதின் பண்புப்பெயர் விகுதி கெட்டது . உயர்வு - உயர்ந்தவரெனப் பொருள்தரலாற் பண்பாகு பெயர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 10

துகடுறு விரிதுகி லுடையவ ரமணெனும் வடிவினர்
விகடம துறுசிறு மொழியவை நலமில வினவிடல்
முகிடரு மிளமதி யரவொடு மழகுற முதுநதி
திகடரு சடைமுடி யடிகடம் வளநகர் சேறையே.

பொழிப்புரை :

அழுக்கு மிகுந்த ஆடையை உடுத்திக் கொள்ளும் புத்தர்களும் , தோற்றத்தாலேயே இவர்கள் அமணர்கள் என்று கண்டு கொள்ளத்தக்க வடிவுடைய சமணர்களும் , குறும்புத்தனமாகக் கூறும் அற்ப மொழிகள் நன்மை பயக்காதவை . எனவே அவற்றைக் கேளற்க . அரும்பையொத்த இளம்பிறைச் சந்திரனையும் , பாம்பையும் , கங்கையையும் அழகுற அணிந்த சடைமுடியுடைய அடிகளான சிவபெருமான் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சேறை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

துகள்துறு - அழுக்கு மிகுந்த . விரிந்த ஆடையை உடையாக உடுத்துக் கொள்வோராகிய புத்தரும் , அமண் என்னும் வடிவினர் - தோற்றத்தாலேயே இவர்கள் அமணரென்று கண்டு கொள்ளத்தக்க வடிவம் உடையவர் - ( சமணர் ) விகடம் ( அது ) உறு - குறும்புத்தனமான . சிறு மொழியவை - அற்ப வார்த்தைகள் . நலம் இல . நற்பயன் இல்லாதவை ( ஆதலால் ) வினவிடல் - கேளற்க . முகிழ்தரும் இளம்மதி - அரும்பையொத்த பிறைச் சந்திரனை . அரவு ஒடும் , அழகு உற , முதுநதி - பழமையான - கங்காநதி . திகழ்தரு - விளங்குகின்ற . சடைமுடி அடிகள் தம் வள ( ம் ) நகர் - சேறையே - முகிழ் + தரு = முகிடரு . திகழ் + தரு = திகடரு . இவ்வாறு புணர்வதற்கு விதி வீரசோழியத்துக் காண்க .

பண் :சாதாரி

பாடல் எண் : 11

கற்றநன் மறைபயி லடியவ ரடிதொழு கவினுறு
சிற்றிடை யவளொடு மிடமென வுறைவதொர் சேறைமேல்
குற்றமில் புகலியு ளிகலறு ஞானசம் பந்தன
சொற்றக வுறமொழி பவரழி விலர்துயர் தீருமே

பொழிப்புரை :

நன்மை தரும் வேதங்களை ஐயந்திரிபறக் கற்று ஓதும் அடியவர்கள் , தன்னுடைய திருவடிகளைத் தொழ , அழகிய குறுகிய இடையுடைய உமாதேவியோடு , சிவபெருமான் வீற்றிருந் தருளும் திருச்சேறை என்னும் திருத்தலத்தைப் போற்றிக் , குற்றமற்ற புகலியில் அவதரித்த , எவரோடும் பகைமையில்லாத ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தை முறையோடு ஓதுபவர்கள் அழிவற் றவர்கள் . அவர்களின் துன்பங்கள் யாவும் தீரும் .

குறிப்புரை :

கவின் - அழகு . உறு - பொருந்திய . சிறு இடையவள் - உமாதேவியார் , புகலியுள் . இகல் அறு - எவரொடும் பகைமை யில்லாத , ஞானசம்பந்தன் . சொல் - பாடல்களை . சொல் - சினை ஆகுபெயர் . தகவு உற - முறையோடு , மொழிபவர் , அழிவு இலர் எனவே அவரைப்பற்றிய துயரும் அழிவின்றி நிற்கும் என்னற்க . அவை பற்றற நீங்கும் என்பதாம் . ` தீர்தல் - விடற்பொருட்டாகும் `. ( தொல் , சொல் , உரியியல் . 22)
சிற்பி