திருநள்ளாறு


பண் :சாதாரி

பாடல் எண் : 1

தளிரிள வளரொளி தனதெழி றருதிகழ் மலைமகள்
குளிரிள வளரொளி வனமுலை யிணையவை குலவலின்
நளிரிள வளரொளி மருவுநள் ளாறர்தந் நாமமே
மிளிரிள வளரெரி யிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.

பொழிப்புரை :

இளந்தளிர் நாளுக்கு நாள் வளர்ந்து பசுமை அடைதல் போல , வளரும் அருளின் எழில் திகழும் உமாதேவியின் , குளிர்ந்த , வளரும் இள ஒளிவீசும் அழகிய முலையை மகிழ்ந்து தழுவப் பெறுதலால் . குளிர்ந்த வளரொளி போன்று நள்ளாறர்தம் புகழ்கூறும் , ` போகமார்த்த பூண் முலையாள் ` என்று தொடங்கும் ( தி .1. ப .49. பா .1) திருப்பதிகம் எழுதப்பெற்ற ஓலையை , அவர் திருமேனிபோல் பிரகாசிக்கின்ற நெருப்பிலிட்டால் அவை பழுது இல்லாதனவாம் என்பது சத்தியமே .

குறிப்புரை :

வளர் - வளரக்கூடிய . தளிர் - தளிரின் . இள ஒளி - இளம் பிரகாசத்தின் . எழில் தரு - அழகைத் தருகின்ற . திகழ் - விளங்குகின்ற . மலைமகள் - உமாதேவியார் . ( குளிர் வளர் இள ஒளி .) வனம் - அழகை உடைய முலை . இணை அவை - இரண்டும் . குலவலின் - மகிழ்ந்து தழுவப்பெறுதலால் . நளிர் - குளிர்ந்த , ( வளர் , இள ஒளி ). மருவு - பொருந்திய ( நள்ளாறர்தம் ) நாமமே - புகழ்களேயாகும் இவை . ஆதலின் , மிளிர் - அவர் திருமேனிபோற் பிரகாசிக்கின்ற ( வளர் இளம் ). எரி இடில் - நெருப்பில் இட்டால் . இவை - ` போகமார்த்த ` எனத் தொடங்கும் இத் திருப்பதிகம் எழுதிய இவ்வேடும் இவைபோல்வனவும் . பழுது இலை - பழுது இல்லாதன ஆம் . மெய்ம்மை - ( இது ) சத்தியம் . ஐம்பான் மூவிடத்திற்கும் பொது ஆனதால் இல்லை என்னும் குறிப்பு முற்று இவை என்ற எழுவாய்க்குப் பயனிலையாயிற்று . முதிய , வலிய நெருப்பின் ( சிவபெருமான் ) திறனை - இளநெருப்பு எரிக்குமா ? என்ற குறிப்பு .

பண் :சாதாரி

பாடல் எண் : 2

போதமர் தருபுரி குழலெழின் மலைமகள் பூணணி
சீதம தணிதரு முகிழிள வனமுலை செறிதலின்
நாதம தெழிலுரு வனையநள் ளாறர்தந் நாமமே
மீதம தெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.

பொழிப்புரை :

மலர் கொண்டு புனைந்து அலங்கரிக்ப்பட்ட கூந்தலை உடைய அழகிய மலைமகளான உமாதேவியின் ஆபரணம் அணிந்து , குளிர்ச்சிதரும் சந்தனத்தை அணிந்த , அரும்பொத்த இளைய அழகிய முலைகளைத் தழுவுகின்றவரும் , நாத தத்துவம் அழகிய உருவாகக் கொண்டவருமான திருநள்ளாற்று இறைவரின் புகழ் கூறும் திருப்பதிகம் எழுதப்பட்ட ஏடுகளை மேலான அவருருவான நெருப்பிலிட்டால் அவை பழுதில்லாதனவாம் என்பது சத்தியமே .

குறிப்புரை :

போது அமர்தரு - மலர்கள் தங்கிய . புரி - பின்னிய ( குழல் ). பூண் அணி - ஆபரணத்தையணிந்த . சீதம் ( அது ) அணிதரு - ( இயல்பான குளிர்ச்சியோடு ) சந்தனக் குழம்பையும் அணிந்த . சீதம் - பண்பாகுபெயர் . முகிழ் - அரும்பை ஒத்த , இள , வனம் , முலை , செறிதலின் அழுந்தத் தழுவப்படுதலால் . நாதம் ( அது ) நாத தத்துவம் . எழில் உரு - அழகிய உருவாகக்கொண்ட . அனைய - அத்தகைய நள்ளாறர்தம் . நாமம் - புகழாகிய இவை . மீ - மேலான . தமது - தம்முடையதான . எரியிடில் - நெருப்பிலே இட்டால் . பழுது இலை . மெய்ம்மையே . நெருப்பு , சிவபெருமானுக்கு உரியதென்பது , ` தீத்தான் உன் கண்ணிலே , தீத்தான் உன்கையிலே , தீத்தான் உன்றன் புன்சிரிப்பிலே , தீத்தான் உன் , மெய்யெல்லாம் புள்ளிருக்கு வேளூரா ` என்ற காளமேகப் புலவர் தனிப்பாடலாலும் , எரியுள் நின்று ஆடுவர் என்பதாலும் , அட்டமூர்த்தங்களுள் நெருப்பு ஒன்று ஆதலாலும் அறிக .

பண் :சாதாரி

பாடல் எண் : 3

இட்டுறு மணியணி யிணர்புணர் வளரொளி யெழில்வடம்
கட்டுறு கதிரிள வனமுலை யிணையொடு கலவலின்
நட்டுறு செறிவயன் மருவுநள் ளாறர்தந் நாமமே
இட்டுறு மெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.

பொழிப்புரை :

பூங்கொத்துக்களைப் போன்று , இரத்தினங்கள் வரிசையாகக் கோக்கப்பட்ட மாலையணிந்த உமாதேவியின் , ஒளி வீசும் இளைய அழகிய முலைகளைத் தழுவும் , கதிர்கள் நெருக்கமாக வளர்ந்துள்ள வயல்வளமிக்க திருநள்ளாற்று இறைவனின் புகழ் உரைக்கும் திருப்பதிகம் எழுதப்பட்ட ஏடுகளை அனல் வாதத்திற்கென வளர்க்கப்பட்ட நெருப்பிலிட்டால் அவை பழுதில்லாதனவாம் என்பது சத்தியமே .

குறிப்புரை :

இட்டு - பதிக்கப்பட்டு . உறும் - பொருந்திய , மணி அணி இரத்தினங்களின் வரிசைகள் . இணர் - பூங்கொத்துக்களைப் போல . புணர் - பொருந்திய . ( வளர் , ஒளி , எழில் ). வடம் - மாலை . கட்டு உறு - அணியப்பெற்ற . கதிர் - ஒளியையுடைய . ( இரு தனங்களுடன் ). கலவலின் - கலத்தலால் . நட்டு - ( பயிர்கள் ) நடப்பட்டு . உறு - பொருந்திய . ( நள்ளாறு ). நாமம் - புகழ் . இட்டு உறும் - சிறியதாகியுள்ள . இந்த எரியில் இடில் , பெரிய நெருப்பின் திறம் அமைந்த இவை எங்ஙனம் பழுதுறும் ? பழுது இலவேயாம் என்க . மணிகளின் வரிசைக்குப் பூங்கொத்து உவமை . ஈற்றடியில் இட்டு - இட்டிது என்பதன் மரூஉ . ` ஆகாறு அளவு இட்டிது ஆயினும் கேடில்லை ` ( குறள் . 478.) இனி இட்டு உறும் எரி - உண்டாக்கிய செயற்கை நெருப்பு , இயற்கை நெருப்பின் திறனை என்செயும் ? எனினும் ஆம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 4

மைச்சணி வரியரி நயனிதொன் மலைமகள் பயனுறு
கச்சணி கதிரிள வனமுலை யவையொடு கலவலின்
நச்சணி மிடறுடை யடிகணள் ளாறர்தந் நாமமே
மெச்சணி யெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.

பொழிப்புரை :

மை பூசப்பெற்ற ஒழுங்கான செவ்வரி படர்ந்த அழகிய கண்களையுடைய தொன்மையாய் விளங்கும் உமா தேவியாரின் பரஞானம் , அபரஞானம் ஆகிய பயன்தரும் கச்சணிந்த ஒளிரும் இளைய அழகிய முலையைத் தழுவும் நஞ்சணி கண்டத்தினனான திருநள்ளாற்று இறைவனைப் போற்றும் திருப்பதிகம் எழுதப்பட்ட ஏடுகளை அழகிய நெருப்பிலிட்டால் அவை பழுதில்லாதனவாம் என்பது சத்தியமே .

குறிப்புரை :

மைச்சு - மை அணியப்பெற்றதாய் . மைத்து , என்பது மைச்சு என்றாயது எழுத்துப் போலி . அணி - அழகிய . வரி - ரேகையின் . அரி - ஒழுங்கு பொருந்திய . நயனி - கண்களையுடையவராகிய . தொல்மகள் - பழமையான உமாதேவியார் . பயன் உறு - அபரஞான , பரஞானங்களாகப் பயன் தருதலை உடைய கச்சு அணி . வனம் - அழகிய . ( முலையோடு கலவலின் ). நஞ்சு அணி - விடத்தை அணிந்த . மிடறு உடை - கண்டத்தையுடைய . அடிகளாகிய நள்ளாறர்தம் புகழ்களாகிய இவைகள் . எரியினில் இடில் பழுதிலை .

பண் :சாதாரி

பாடல் எண் : 5

பண்ணியன் மலைமகள் கதிர்விடு பருமணி யணிநிறக்
கண்ணியல் கலசம தனமுலை யிணையொடு கலவலின்
நண்ணிய குளிர்புனல் புகுதுநள் ளாறர்தந் நாமமே
விண்ணிய லெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.

பொழிப்புரை :

பண்பாடமைந்த மலைமகளின் ஒளிவீசுகின்ற இரத்தினங்கள் பதித்த ஆபரணத்தை அணிந்த , அழகான கலசம் போன்ற இருமுலைகளையும் கூடும் , குளிர்ச்சி பொருந்திய நீர் பாயும் திருநள்ளாற்று இறைவனின் நாமத்தைப் போற்றும் திருப்பதிகம் எழுதப்பட்ட ஏடுகளை ஆகாயமளாவிய இந்நெருப்பில் இட்டாலும் அவை பழுதில்லாதனவாகும் என்பது சத்தியமே .

குறிப்புரை :

பண் இயல் - ( உலகிற்கு ) பண்பாட்டை அமைவித்த . மலைமகள் . பண் - கடைக்குறை . இயல் மலைமகள் - வினைத்தொகை . இயல் என்ற சொல்லின் பிறவினை விகுதி குன்றியது . மலைமகள் - உமாதேவியாரின் . கதிர் விடு - ஒளி வீசுகின்ற . பரு - பருத்த . மணி - இரத்தினங்கள் பதித்த . அணி - ஆபரணத்தையணிந்த . நிறம் - மார்பிலே உள்ள . கண் இயல் - அழகு பொருந்திய . நண்ணிய குளிர் - குளிர்ச்சியையுடைய . புனல் புகுதும் - நீர்பாயும் , நள்ளாறர் . விண் இயல் - ஆகாயம் வரைதாவும் .

பண் :சாதாரி

பாடல் எண் : 6

போதுறு புரிகுழன் மலைமக ளிளவளர் பொன்னணி
சூதுறு தளிர்நிற வனமுலை யவையொடு துதைதலின்
தாதுறு நிறமுடை யடிகணள் ளாறர்தந் நாமமே
மீதுறு மெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.

பொழிப்புரை :

மலர்களணிந்த பின்னிய கூந்தலையுடைய மலைமகளான உமாதேவியாரின் பொன்னாபரணம் அணிந்த , சூதாடும் வட்டை ஒத்த , தளிர்போன்ற நிறமுடைய அழகிய முலைகளோடு நெருங்கியிருத்தலால் , பொன்போலும் நிறம் பெற்ற அடிகளாகிய நள்ளாற்று இறைவனின் திருநாமத்தைப் போற்றும் திருப்பதிகம் எழுதப்பட்ட ஏடுகளை மேல்நோக்கி எரியும் இயல்புடைய இந்நெருப்பிலிட்டாலும் அவை பழுதில்லாதனவாகும் என்பது , சத்தியமே .

குறிப்புரை :

போது உறு - மலர்கள் பொருந்திய . புரிகுழல் - பின்னிய சடையையுடைய . மலைமகள் - உமாதேவியாரின் . இள ( ம் ) வளர் - இளமை மிகுந்த . பொன் அணி - பொன்னாபரணம் அணிந்த . சூது உறு - சொக்கட்டான்காயை ஒத்த . ( உறு - உவமவாசகம் ). தளிர் நிறம் - தளிர் போன்ற நிறத்தையுடைய . வனம் - அழகிய , முலையோடு . துதைலின் - நெருங்கியிருத்தலால் . தாது உறும் நிறம் உடை - பொன்போலும் நிறம் உடைய அடிகள் . ` பொன்னொத்த மேனிமேல் வெண்ணீறணிந்து ` ( தி .4. ப .81. பா .9.) அடிகளாகிய நள்ளாறர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 7

கார்மலி நெறிபுரி சுரிகுழன் மலைமகள் கவினுறு
சீர்மலி தருமணி யணிமுலை திகழ்வொடு செறிதலின்
தார்மலி நகுதலை யுடையநள் ளாறர்தந் நாமமே
ஏர்மலி யெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.

பொழிப்புரை :

அடர்த்தியான , பின்னப்பட்ட , சுருண்ட கார்மேகம் போன்ற கருநிறமான கூந்தலையுடைய மலைமகளான உமாதேவியின் அழகிய , சிறந்த மணிகள் பதிக்கப்பட்ட ஆபரணம் அணிந்த முலைகளோடு நெருங்கியிருக்கும் , மண்டையோட்டை மாலையாக அணிந்துள்ள திருநள்ளாற்று இறைவனின் திருநாமத்தைப் போற்றும் திருப்பதிகம் எழுதப்பட்ட ஏடுகளை எழுச்சியுடன் எரியும் இந்நெருப்பிலிட்டால் அவை பழுதில்லாதனவாகும் என்பது சத்தியமே .

குறிப்புரை :

கார்மலி - மேகம் போன்ற . மலி - உவமவாசகம் , நெறி , செழிப்புடைய . புரி - கட்டப்பட்ட . சுரி - சுரிந்த ( குழல் மலைமகளின் ) நகு வெண்டலையைச் சிறந்த மாலையாகவுடைய நள்ளாறர்தம் நாமமே .

பண் :சாதாரி

பாடல் எண் : 8

மன்னிய வளரொளி மலைமகள் தளிர்நிற மதமிகு
பொன்னியன் மணியணி கலசம தனமுலை புணர்தலின்
தன்னியல் தசமுக னெரியநள் ளாறர்தந் நாமமே
மின்னிய லெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.

பொழிப்புரை :

நிலைபெற்று வளரும் ஞானவொளி பிரகாசிக்கும் மலைமகளான உமாதேவியின் தளிர்நிறத்தனவாய் மான்மதமாகிய கத்தூரியை அணியப்பெற்றனவாய் , இரத்தினங்கள் பதிக்கப்பட்ட பொன்னாலான ஆபரணத்தை அணிந்துள்ளனவாய் , கலசத்தை ஒத்தனவாய் விளங்கும் இருமுலைகளைப் புணர்கின்றவரும் , ஆணவமே இயல்பாக உடைய இராவணனைக் கயிலையின் கீழ் நெரியும்படி செய்தவருமான திருநள்ளாற்று இறைவரின் திரு நாமத்தைப் போற்றும் திருப்பதிகம் எழுதப்பட்ட ஏடுகளை , மின்னலைப் போன்ற எரியும் இந்நெருப்பிலிட்டாலும் அவை பழுதில்லாதனவாகும் என்பது சத்தியமே .

குறிப்புரை :

மதம் மிகு - மான்மதமாகிய கத்தூரியை மிக அணியப்பெற்ற . மதமென நின்றது முதற்குறை . பொன்னியல் - பொன்னாலியன்ற . புணர்தலின் - தழுவுதலால் . தன் இயல் - தீமை செய்வதில் தன்னைத்தானே யொத்த . தசமுகன் - இராவணன் நெரிய அடர்த்த நள்ளாறர் . அடர்த்த என்ற சொல் , வருவித்துரைக்கப்பட்டது . மின் இயல் - ஒளியையுடைய .

பண் :சாதாரி

பாடல் எண் : 9

கான்முக மயிலியன் மலைமகள் கதிர்விடு கனமிகு
பான்முக மியல்பணை யிணைமுலை துணையொடு பயிறலின்
நான்முக னரியறி வரியநள் ளாறர் தந் நாமமே
மேன்முக வெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.

பொழிப்புரை :

காட்டில் விளங்கும் மயில் போன்ற சாயலையுடைய உமாதேவியின் , ஒளிவிடுகின்ற கனத்த பால்சுரக்கும் பருத்த இருமுலைகளைக் கூடுகின்றவரும் , பிரமனும் , திருமாலும் அறிவதற்கு அரியவராக விளங்குகின்றவருமான திருநள்ளாற்று இறைவரின் திருநாமத்தைப் போற்றும் திருப்பதிகம் எழுதப்பட்ட ஏடுகளை மேல்நோக்கி எரியும் இந்நெருப்பிலிட்டாலும் அவை பழுதில்லாதனவாகும் என்பது சத்தியமே .

குறிப்புரை :

கான்முகம் - காட்டிடத்துள்ள . மயில் இயல் - மயில் போன்ற சாயல் . பால் முகம் இயல் ( பால் சுரக்கும் இடமாகப் பொருந்திய , தமக்கு ஞானப்பாலை ஊட்டியருளிய செயலை நினைப்பித்தவாறு ) பணை - பருத்த , இணைமுலை - உபயதனங்கள் . மேல்முக ( ம் ) எரி - மேல் நோக்கிய நெருப்பு .

பண் :சாதாரி

பாடல் எண் : 10

அத்திர நயனிதொன் மலைமகள் பயனுறு மதிசயச்
சித்திர மணியணி திகழ்முலை யிணையொடு செறிதலின்
புத்தரொ டமணர்பொய் பெயருநள் ளாறர்தந் நாமமே
மெய்த்திர ளெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.

பொழிப்புரை :

அம்பு போன்று கூர்மையான கண்களையுடைய தொன்மையான மலைமகளான உமாதேவியின் பயன்தரும் அதிசயம் விளைவிக்கும் , பலவகையான இரத்தினங்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்கள் அணியப் பெற்றுள்ள இருமுலைகளோடு நெருங்கி யிருப்பவரும் , புத்தர்களாலும் , சமணர்களாலும் உணரப்படாதவரும் பொய்யினின்று நீங்கியவருமான திருநள்ளாற்று இறைவரின் திருநாமத்தைப் போற்றும் திருப்பதிகம் எழுதப்பட்ட ஏடுகளை , திரண்டு எரியும் இந்நெருப்பில் இட்டாலும் அவை பழுதில்லாதன வாகும் என்பது சத்தியமே .

குறிப்புரை :

அத்திரம் நயனி - அம்பு போன்ற கண்களை உடையவள் . அதிசயம் - அதிசயம் விளைக்கும் . சித்திரம் - பல வகையான . பொய் பெயரும் - பொய்யினின்றும் நீங்கிய நள்ளாறர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 11

சிற்றிடை யரிவைதன் வனமுலை யிணையொடு செறிதரும்
நற்றிற முறுகழு மலநகர் ஞானசம் பந்தன
கொற்றவ னெதிரிடை யெரியினி லிடவிவை கூறிய
சொற்றெரி யொருபது மறிபவர் துயரிலர் தூயரே.

பொழிப்புரை :

சிறிய இடையினையுடைய உமாதேவியின் அழகிய முலைகளோடு நெருங்கியிருக்கும் திருநள்ளாற்று இறைவனைப் போற்றும் திருப்பதிகம் எழுதிய ஏடுகளை , நன்மைதரும் கழுமலநகரில் அவதரித்த திருஞானசம்பந்தன் , பாண்டிய மன்னனின் எதிரில் , நெருப்பின் நடுவில் இடுகின்றபோது கூறிய , இத்திருப்பதிகத்தை ஓதும் அன்பர்கள் துயரற்றவர்கள் ஆவர் . மும்மலங்களினின்றும் நீங்கித் தூயராய் விளங்குவர் .

குறிப்புரை :

ஞானசம்பந்தன் கொற்றவன் எதிர் - நின்ற சீர் நெடுமாற நாயனாராகிய அரசர் எதிரில் . இடை எரியினில் - நெருப்பு நடுவில் . துயர் தூயர் - ஓர் சொல் நயம் .
சிற்பி