திருவிளமர்


பண் :சாதாரி

பாடல் எண் : 1

மத்தக மணிபெற மலர்வதொர் மதிபுரை நுதல்கரம்
ஒத்தக நகமணி மிளிர்வதொ ரரவின ரொளிகிளர்
அத்தக வடிதொழ வருள்பெறு கண்ணொடு முமையவள்
வித்தக ருறைவது விரிபொழில் வளநகர் விளமரே.

பொழிப்புரை :

சிவபெருமான் , தலையில் அழகுற விளங்கும் பிறைச்சந்திரனை ஒத்த நெற்றியுடையவர் . கரத்தில் விளங்கும் நகங்களைப் போலத் தலையிலுள்ள இரத்தினங்கள் பிரகாசிக்கும் ஐந்தலைப் பாம்பைக் கங்கணமாகக் கட்டியவர் . இத்தகைய சிவ பெருமானின் திருவடிகளைத் தொழுதுயாம் உய்யும்பொருட்டு , அருள்பெருகும் கண்களையுடைய உமாதேவியோடு வித்தகராகிய அப்பெருமான் வீற்றிருந்தருளுவது விரிந்த சோலைகள் சூழ்ந்த வளமை வாய்ந்த திருவிளமர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

மத்தகம் - தலையின்கண் , அணிபெற - அழகுற , மலர்வது ஓர்மதி - விளங்கிக்கொண்டிருக்கும் பிறையை . புரை - ஒத்த . நுதல் - நெற்றி . இறைவர் நெற்றிக்கு வேறு பிறை ஒப்பாகாது அவர் அணிந்த பிறையே உவமையாயிற்று . சேக்கிழார் பெருமான் விரைந்து மலையேறும் கண்ணப்ப நாயனார் செலவுக்கு உவமமாக வேறு கூறாது அந்நாயனார் மனவேகத்தையே உவமை கூறியதும் காண்க : ` பூத நாயகன் பால் வைத்த , மனத்தினுங் கடிது வந்து மருந்துகள் பிழிந்து வார்த்தார் `. ( தி .12 கண்ணப் . புரா . 176) கரம் - திருக்கரத்தில் . ஒத்து - ஏற்ற தாகி . அகம் ( கண்டவர் ) மனம் . நக - மகிழ . மணிமிளிர்வதோர் அரவினர் - இரத்தினம் பிரகாசிக்கின்ற பாம்பைக் கங்கணமாக உடையவர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 2

பட்டில கியமுலை யரிவைய ருலகினி லிடுபலி
ஒட்டில கிணைமர வடியின ருமையுறு வடிவினர்
சிட்டில கழகிய பொடியினர் விடைமிசை சேர்வதோர்
விட்டில கழகொளி பெயரவ ருறைவது விளமரே.

பொழிப்புரை :

சிவபெருமான் , உலகில் பட்டாடையால் மூடப்பட்ட முலைகளையுடைய பெண்கள் இடுகின்ற பலிகளை ஏற்க , இசைத்துச் செல்கின்ற மரப்பாதுகைகளை அணிந்த திருவடிகளை உடையவர் . உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட கோலத்தர் . தூய்மையையும் , ஞானத்தையும் உணர்த்தும் திருவெண்ணீற்றினைப் பூசியுள்ளவர் . இடபவாகனத்தில் வீற்றிருப்பவர் . சொல்லொணாப் பேரழகிய தோற்றப் பொலிவுடன் நடக்கும் சிவபெருமான் வீற்றிருந்தருளுவது திருவிளமர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

உலகினில் - உலகத்தில் . பட்டு இலகிய - பட்டாடையால் விளங்குகின்ற . அரிவையர் - பெண்கள் . இடுபலி ஒட்டு - போடும் பிச்சைக்கு இசைத்துச் செல்கின்ற . இலகு இணை மரவடியினர் - விளங்கும் இரண்டாகிய பாதுகையை உடையவர் :- பிட்சாடன கோலத்தில் . உமை உறு - உமையம்மையார் ( ஒருபாற் ) பொருந்திய , வடிவினர் - திருவுருவுடையவர் . சிட்டு இலகு அழகிய பொடியினர் - வசிட்டு முதலிய இறுதிகளையுடைய மந்திரோச்சாரணத்தோடு அணியக்கூடிய விளங்குகின்ற அழகிய திருநீற்றையுடையவர் . இனி விசிட்டம் என்பதன் திரிபு , சிட்டு என்று கொண்டு சிறந்த ( திருநீறு ) எனினும் ஆம் . மிசை சேர்வது ஓர் - விடையின்மேல் ஏறிச் செல்வதாகிய . விட்டு இலகு - விட்டு விட்டுப் பிரகாசிக்கும் . அழகு ஒளி - அழகின் தோற்றப் பொலிவோடு . பெயர் அவர் - பெயர்தலை ( நடத்தலை ) யுடையவர் . உறைவது விளமரே . சேர்வதோர் பெயர் அவர் என்க . மரவடி - மரத்தால் ஆகிய பாதுகை , பிட்சாடன மூர்த்தியின் கோலத்தில் இதனைத் தரித்திருப்பதை யறிக . ` அடியிற்றொடுத்த பாதுகையும் அசைந்த நடையும் இசைமிடறும் வடியிற் சிறப்ப நடந்தருளி மூழையேந்தி மருங்கணைந்த தொடியிற் பொலிதோள் முனிமகளிர் , சுரமங்கையரை மயல்பூட்டிப் படியிட்டெழுதாப் பேரழகாற் பலிதேர் பகவன் திருவுருவம் ` என்னும் காஞ்சிப் புராண த்தாலும் அறிக . ` விட்டில கழகொளி பெயரவர் ` என்பதற்குப் ` படியிட்டெழுதாப் பேரழகு ` என்பது வியாக்கியானம் போற் காணப்படுவதை யறிக .

பண் :சாதாரி

பாடல் எண் : 3

அங்கதி ரொளியின ரரையிடை மிளிர்வதொ ரரவொடு
செங்கதி ரெனநிற மனையதொர் செழுமணி மார்பினர்
சங்கதிர் பறைகுழன் முழவினொ டிசைதரு சரிதையர்
வெங்கதி ருறுமழு வுடையவ ரிடமெனில் விளமரே.

பொழிப்புரை :

சிவபெருமான் அழகிய ஒளிவீசும் தோற்றப் பொலிவுடையவர் . இடையிலே பாம்பைக் கச்சாகக் கட்டியவர் . செந்நிற கதிர் போன்ற நிறமுடையவர் . அக்கதிர்போல் ஒளிவீசும் இரத்தினங்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்களை அணிந்துள்ள மார்பினர் . சங்குகள் ஒலிக்க , பறை , குழல் , முழவு போன்ற வாத்தியங்கள் இசைக்கத் திருக்கூத்து ஆடுபவர் . வெண்ணிற ஒளிவீசும் மழுப் படையை உடையவர் . இத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவிளமர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

அம்கதிர் ஒளியினர் - அழகிய ஒளிவீசும் பொலிவை யுடையவர் . மிளிர்வது - ஒளிர்வது . செங்கதிர் என நிறம் - சூரியன் நிறத்தையொத்த நிறமும் . அனையது ஓர் செழுமணி மார்பினர் - அச்சூரியனை ஒத்த ஒப்பற்ற செழிய பதுமராகம் முதலிய இரத்தினங்களால் இழைத்த ஆபரணங்களை அணிந்த மார்பும் உடையவர் . சங்கு - சங்கும் . அதிர் - ஒலிக்கும் . பறை , குழல் , முழவினோடு - இவ்வாத்தியங்களோடு , இசைவதோர் சரிதையர் - இசைவதாகிய திருக்கூத்தையுடையவர் . ( சரிதை - இங்கு நடனத்தைக் குறித்து நின்றது .) வெம் - கொடிய . கதிர் - ஒளியை உடைய . மழு உடையவர் இடமெனில் - அது விளமர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 4

மாடம தெனவளர் மதிலவை யெரிசெய்வர் விரவுசீர்ப்
பீடென வருமறை யுரைசெய்வர் பெரியபல் சரிதைகள்
பாடல ராடிய சுடலையி லிடமுற நடநவில்
வேடம துடையவர் வியனக ரதுசொலில் விளமரே.

பொழிப்புரை :

மாடம் போன்று உயர்ந்து விளங்கிய , தேவர்கட்குத் தீமை செய்த பகையசுரர்களின் மும்மதில்களைச் சிவபெருமான் எரித்தவர் . தமது புகழ் பாடுவதையே பொருளாகக் கொண்ட வேதங்களை அருளிச்செய்தவர் . தமது வரலாறுகள் அடியவர்களால் பாடலாகப் பாடப்படும் பெருமையுடையவர் . சுடுகாட்டை அரங்க மாகக் கொண்டு திருநடனம் செய்யும் கோலத்தர் . இத்தகைய சிவ பெருமான் வீற்றிருந்தருளும் பெருமை மிக்க நகரானது திருவிளமர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

மாடம் ( அது ) என - அது மாடம் என்னும்படி . வளர் - உயர்ந்த . மதில் அவை - திரிபுரங்களை எரிசெய்வர் . மாடம் அது என ஒருமையும் . மதில் அவை எனப் பன்மையும் வந்தமை , ஒவ்வொன் றையும் தனித்தனிக் குறிக்கும்போதும் , ஒருங்கு குறிக்கும்போதும் முறையே கொள்க . விரவு சீர்ப் பீடு என - பொருந்திய தமது புகழின் பெருமையே பொருளாக ( அருமறை ) உரைசெய்வர் - சொல்லி யருள்வர் என்பது , வேதங்களிற் கூறப்படுவன சிவபிரானது புகழ்களே என்ற கருத்து . ` எவன் நினைத்த மாத்திரையில் சர்வாண்டங்களையும் ஆக்கி அழிக்கவல்லனோ , எவனுடைய ஆணையால் இரு சுடரியங் குவதும் , வளியுளர்வதும் வான்பெய்வதும் ஆதியன நிகழ்கின்றவோ . அவனே கடவுள் . அவனே தலைவன் . அவனே சரண்புகத் தக்கவன் ` என்பன போன்றவை . சரிதைகள் - தமது வரலாறுகள் . பாடலர் - அடியார்களாற் பாடலாகப் பாடப்படுதலையுடையவர் . ஆடிய - நெருப்புப் பற்றியெரிந்த . ( சுடலையில் ) இடம் உற - அரங்கு ஆக ( நின்று ) நடம் நவில் - நடம் ஆடும் . வேடம் ( அது ) உடையவர் - கோலமுடையவர் . வியல் - ( வளத்தால் ) பெரிய ; ` வியல் என் கிளவி அகலப் பொருட்டே ` ( தொல் . சொல் - 364.). நகர் - தலம் , திரு விளமர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 5

பண்டலை மழலைசெ யாழென மொழியுமை பாகமாக்
கொண்டலை குரைகழ லடிதொழு மவர்வினை குறுகிலர்
விண்டலை யமரர்கள் துதிசெய வருள்புரி விறலினர்
வெண்டலை பலிகொளும் விமலர்தம் வளநகர் விளமரே.

பொழிப்புரை :

பண்ணின் இசையை ஒலிக்கும் யாழ்போன்ற இனியமொழி பேசும் உமாதேவியைத் தம் திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டவர் சிவபெருமான் . அவருடைய , அசைகின்ற ஒலிக்கும் வீரக்கழல்களை அணிந்துள்ள திருவடிகளைத் தொழும் அடியவர்களை வினை சாராது . விண்ணுலகிலுள்ள தேவர்கள் தொழுது போற்ற அருள்செய்யும் பெருங்கருணையாளர் . பிரமனு டைய மண்டையோட்டில் பிச்சையேற்றுத் திரிபவரும் இயல்பாகவே பாசங்களின் நீங்கியவருமான அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் வளம் மிகுந்த நகர் திருவிளமர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

பண்தலை - பண்ணினிடத்ததாகிய . ( பண்ணோடு கூடிய ) மழலை செய்யாழ் என - இனிமையைச் செய்கின்ற யாழ்போல . மொழி - பேசுகின்ற . ( உமையைப் பாகமாகக்கொண்டு ) அலை - அசை கின்ற . குரைகழல் - ஒலிக்கும் வீரகண்டை யணிந்த . ( அடிதொழும் அவர் வினை குறுகிலர் ) விண்டலை - விண்ணின் இடத்துள்ள . ( அமரர்கள் துதிசெய அருள்புரி .) விறலினர் - அருட்பெருக்கை யுடையவர் . மழலை இனிமைக்கு ஆகியது , காரியவாகுபெயர் . விறல் - வலிமை ; அருளின் வலிமை ; அருட்பெருக்கு .

பண் :சாதாரி

பாடல் எண் : 6

மனைகடொ றிடுபலி யதுகொள்வர் மதிபொதி சடையினர்
கனைகட லடுவிட மமுதுசெய் கறையணி மிடறினர்
முனைகெட வருமதி ளெரிசெய்த வவர்கழல் பரவுவார்
வினைகெட வருள்புரி தொழிலினர் செழுநகர் விளமரே.

பொழிப்புரை :

சிவபெருமான் தாருகவனத்தில் மனைகள்தொறும் சென்று பிச்சை ஏற்றவர். சந்திரனைத் தரித்த சடையுடையவர். ஒலிக்கின்ற கடலில் தோன்றி உயிர்களைக் கொல்ல வந்த விடத்தை அமுதமாக உண்டு கறை படிந்த அழகிய கண்டத்தர். போர் முனைப்பு உடன் எழுந்த பகையசுரர்களின் மும்மதில்களை எரித்தவர். தம் திருவடிகளை வணங்குபவர்களின் வினைகெடும்படி அருள்புரியும் தொழிலுடையவர். இத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் செழிப்பான நகர் திருவிளமர் என்னும் திருத்தலமாகும்.

குறிப்புரை :

: மனைகள்தோறும், இடு, பலி (அது) கொள்வர், மதி. பொதி - தங்கிய. கனைகடல் - ஒலிக்கின்ற, கடலில் தோன்றி. அடு - உயிர்களைக் கொல்ல வந்தவிடம். அமுதுசெய் - உண்டதனால் எய்திய. (கறை அணி) மிடறினர் - கழுத்தையுடையவர். மிடற்றினர் - எனற்பாலது. மிடறினர் என நின்றது சந்தம் நோக்கி. முனை - போரில். கெட வரும் - அழிய. வந்தமதிள் - புரங்களை. மதில், மதிள் என வந்தது. ல, ள வொற்றுமை. தமது திருவடியை வணங்குபவரின் வினை கெட அருள் புரிதலைத் தவிர, பிறதொழில் இல்லாதவர் என்பது, பிற்பகுதியின் கருத்து.

பண் :சாதாரி

பாடல் எண் : 7

நெறிகமழ் தருமுரை யுணர்வினர் புணர்வுறு மடவரல்
செறிகமழ் தருமுரு வுடையவர் படைபல பயில்பவர்
பொறிகமழ் தருபட வரவினர் விரவிய சடைமிசை
வெறிகமழ் தருமல ரடைபவ ரிடமெனில் விளமரே.

பொழிப்புரை :

சிவபெருமான் சரியை முதலிய நான்கு நெறிகளாலும் , ஆகமங்களாலும் மன்னுயிர்கட்கு மெய்யுணர்வு நல்கியவர் . தம்மின் வேறாகாத ஞானமே வடிவான உமாதேவியை இடப் பாகமாகப் பொருந்தி விளங்கும் உருவுடையவர் . திருக்கரங்களில் படைகள் பல ஏந்தியவர் . புள்ளிகளையுடைய படமெடுத்தாடும் பாம்பை அணிந்தவர் . கங்கை , பிறைச்சந்திரன் , பாம்பு இவை கலந்த சடைமுடியின் மீது அடியவர்கள் புனையும் நறுமணமலர்கள் அடையப் பெற்றவர் . இத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவிளமர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

நெறி - சரியை முதலிய நான்கு மார்க்கங்களும் . கமழ் தரும் - விளங்குகின்ற . உரை - ஆகமங்களால் . உணர்வினர் - உலகிற்கு உணர்வுகொளுத்தியவர் . என்றது மயர்வறநந்தி முனிகணத் தளித்தமையை நெறி கமழ் தரும் உரை - உணர்வினர் - சைவ நன்னெறியிற் படரும் ( அடியார்களின் ) உரையிலும் , உணர்விலும் இருப்பவர் எனலும் ஆம் . இங்கு , கமழ்தரும் உரை என்பதை ` திருவாய்ப் பொலியச் சிவாயநமவென்று ` ( தி .4. ப .94. பா .6) போற்கொள்க . புணர்வு உறும் மடவரல் - ( ஞானத்தில் ) சிவமாகிய தம்மின் வேறாகாது ஒன்றிய சத்தியாகிய அம்பிகை . ( உருவத்தும் ) செறிகமழ்தரும் - ( இடப்பாகத்தில் ) பொருந்தி விளங்கும் உரு உடையவர் , வடிவையுடையவர் . படை பல பயில்பவர் - பல ஆயுதங்களையும் பயில்பவர்போற் கொள்பவர் . பொறி - புள்ளிகள் . கமழ்தரு - பொருந்திய பட அரவினர் . விரவிய - கலந்த . வெறி - வாசனை . கமழ் தரு - வீசும் . மலர் - அடியர் புனைந்த மலர் . அடைபவர் - அடையப் பெற்றவர் . முதல் இரண்டாம் அடிகளில் கமழ் தரும் என்பது - விளங்கும் என்ற பொருளிலும் , மூன்றாம் அடியில் பொருந்திய என்ற பொருளிலும் வந்தது .

பண் :சாதாரி

பாடல் எண் : 8

தெண்கடல் புடையணி நெடுமதி லிலங்கையர் தலைவனைப்
பண்பட வரைதனி லடர்செய்த பைங்கழல் வடிவினர்
திண்கட லடைபுனல் திகழ்சடை புகுவதொர் சேர்வினார்
விண்கடல் விடமலி யடிகள்தம் வளநகர் விளமரே.

பொழிப்புரை :

தெளிவான நீரையுடைய கடல்சூழ்ந்த , அழகிய நீண்ட மதில்களையுடைய இலங்கை அரசனான இராவணன் பண் படையும்படி , கயிலைமலையின் கீழ் அடர்த்த கழலணிந்த திருவடிகளையுடையவர் சிவபெருமான் . கடலையடையும் கங்கையை , சடையில் தாங்கியவர் . விண்ணுலகிலுள்ள பரந்த பாற்கடலில் தோன்றிய விடத்தைத் தேக்கிய கண்டத்தர் . இத்தகைய தலைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் வளமை பொருந்திய நகர் திருவிளமர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

தெண் கடல் - தெளிவான நீரையுடைய கடல் . புடை அணி - சுற்றிய , இலங்கையர் தலைவனை . பண்பட அடர் செய்த - நன்றாக அடர்த்த . கழல் வடிவினர் - கழலோடு கூடிய வடிவையுடையவர் . கடல் அடைபுனல் - கடலையடையும் ( கங்கை ) நீர் . திகழ்சடை புகுவது ஓர்சேர்வினார் - விளங்கும் சடையிற் புகுவதாகிய சேர்க்கையையுடையவர் . விண் - விண்ணை அளாவிப் பரவிய ( விடம் ) கடல் . விடம் - விடக்கறை . மலி - ( கண்டத்தின்கண் ) பொருந்திய அடிகள் .

பண் :சாதாரி

பாடல் எண் : 9

தொண்டசை யுறவரு துயருறு காலனை மாள்வுற
அண்டல்செய் திருவரை வெருவுற வாரழ லாயினார்
கொண்டல்செய் தருதிரு மிடறின ரிடமெனி லளியினம்
விண்டிசை யுறுமலர் நறுமது விரிபொழில் விளமரே.

பொழிப்புரை :

சிவனுக்கு அடிமை பூணும் திருத்தொண்டின் நிலை அழியும்படி , மார்க்கண்டேயருக்குத் துன்பம் செய்ய வந்த காலனை மாளும்படி செய்து , பின்னர்த்தம் ஆணையின்படி ஒழுகுமாறு செய்தவர் சிவபெருமான் . பிரமன் , திருமால் என்னும் இருவரையும் அஞ்சுவிக்கக் காண்டற்கரிய அழல் வடிவானவர் . மேகம் போன்ற கரிய கண்டத்தை உடையவர் . இத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , வண்டினங்கள் விரிந்த மலர்களைக் கிண்டி நல்ல தேனை ஒலியுடன் பருகும் சோலைகளை உடைய திருவிளமர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

தொண்டு - சிவனுக்கு அடிமை பூணும் திருத்தொண்டின் நிலையே . அசையுற = அசைவு உற - அழிய . வரு - மார்க்கண்டேயர் மேல் வந்த . துயர் உறு - துன்பம் உறுத்தவரும் ( காலனை ). தொண்டு அசைவு உற என்ற கருத்து . சிவனடியார்க்கு ஒருவர் தீங்கிழைப்பரேல் அது அடிமைத் திறத்தையே அழிப்பதாகும் என்பதாம் . அது :- ` என் போலிகளும்மையினித் தெளியார் அடியார் படுவதிதுவேயாகில் , அன்பேயமையும் ` என்பதாற் கொள்க . ( தி .4. ப .1. பா .9.) காலனை மாள்வுறச் ( செய்து ) பின் , அண்டல் செய்து - தன்னையண்டித் தன் ஆணைவழி நிற்றலையும் செய்து , இங்குச் செய்து என்பதனைப் பின்னும் கூட்டுக . அண்டல் , அண்டுதல் , அண்டி வாழ்தல் எச்ச உம்மை வருவித்துரைக்க . துயர் உறு என்பதில் பிறவினை விகுதி தொக்கு நின்றது . மேல்வெருவுற என்பதும் அது . இருவரை - பிரம விட்டுணுக்களாகிய இருவரையும் . வெருவுற - அஞ்சுவிக்க . ஆர்அழல் ஆயினான் - காண்டற்கரிய அழல் வடிவு ஆயினவன் . இருவர் என்பது தொகைக் குறிப்பு . கொண்டல் செய்தரு - மேகம்போலும் கரிய . திருமிடற்றினர் - அழகிய கண்டத்தையுடையவர் . அளியினம் - வண்டின் கூட்டங்கள் . விண்டு இசை உறு - ஒலியை வெளிப்படுத்திப் பாடுதலையுடைய . ( மலர் ) நறு மது விரி - நல்ல தேனைப் பெருகச் சொரிகின்ற பொழில் .

பண் :சாதாரி

பாடல் எண் : 10

ஒள்ளியர் தொழுதெழ வுலகினி லுரைசெயு மொழிபல
கொள்ளிய களவினர் குண்டிகை யவர்தவ மறிகிலார்
பள்ளியை மெய்யெனக் கருதன்மின் பரிவொடு பேணுவீர்
வெள்ளிய பிறையணி சடையினர் வளநகர் விளமரே.

பொழிப்புரை :

உலகத்து அறிவுடையார்களால் வணங்கி ஏத்துதற்குரிய மதங்கள் பல உண்டு . வடமொழி , தமிழ் முதலிய பல மொழிகளிலுமுள்ள உயர்ந்த பொருள்களைக் களவுசெய்து தம்மதாகக் காட்டும் திருட்டுத்தனமிக்கவரும் , தவம் அறிகிலாதவருமான சமண , புத்தர்தம் பள்ளியினர் கூறும் நெறிகளை மெய்யென்று கருதற்க . வெண்ணிறப் பிறைச்சந்திரனை அணிந்த சடையையுடைய , வளம் மிகுந்த நகரான திருவிளமர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானை அன்போடு போற்றி வழிபடுங்கள் .

குறிப்புரை :

உலகத்து அறிவுடையார்களால் வணங்கியேத்துதற்குரிய மதங்கள் பல உண்டு . ( ஒள்ளியர் - அறிவுடையவர் ). அவற்றுள் களவினரும் , தவம் அறிகிலாதாரும் ஆகிய சமண புத்தர் தம் பள்ளியினர் கூறும் சமய நெறிகளை மெய்யென்று கருதீர்களாய் , வெள்ளிய பிறையணி சடையினர் விளமரைப் பரிவோடு பேணுவீர்கள் ஆக . ( பரிவு - அன்பு ) என்பது இப்பாடலின் திரண்டபொருள் . கொள்ளிய - கொள்ளியனைய . ( களவினர் ) நீறுபூத்த கொள்ளி - தவ வேடம் பூண்ட வஞ்சகருக்கு உவமை . குண்டிகையர் சமணரும் தவம் அறிகிலார் - புத்தரும் ( குண்டிகையர் எனப்பிரித்துக் கூறினமையின் ) பள்ளி என்பது இடவாகு பெயராய் அங்கு உறைவோரையும் , அது இலக்கணையால் அவர் கூறும் உபதேசங்களையும் உணர்த்திற்று .

பண் :சாதாரி

பாடல் எண் : 11

வெந்தவெண் பொடியணி யடிகளை விளமருள் விகிர்தரைச்
சிந்தையு ளிடைபெற வுரைசெய்த தமிழிவை செழுவிய
அந்தணர் புகலியு ளழகம ரருமறை ஞானசம்
பந்தன மொழியிவை யுரைசெயு மவர்வினை பறையுமே.

பொழிப்புரை :

பசுவின் சாணம் வெந்ததாலான திருவெண் நீற்றினை அணிந்த தலைவரை , திருவிளமர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் வேறுபட்டவரை ( விகிர்தர் ), சிந்தையுள் இடை யறாது இருத்தும்படி , அந்தணர்கள் வாழ்கின்ற செழுமையான திருப்புகலியில் அவதரித்த அருமறைவல்ல ஞானசம்பந்தர் போற்றி அருளிச் செய்த தமிழாகிய இத்திருப்பதிகத்தை ஓதுவோர் வினை அழியும் .

குறிப்புரை :

விகிர்தர் - ( பிறரின் ) வேறுபட்டவர் . சிந்தையுள் இடை பெறு ( இடை - இடம் ) என்றது :- ` உளம் பெருங்களன் செய்ததும் இலை நெஞ்? u2970?` என்ற திருவாசகத்தின் ( தி .8) கருத்து . செழுவிய - செழுமை பொருந்திய ( புகலி ). அருவினை . பறையும் - நீங்கும் .
சிற்பி