திருக்கொச்சைவயம்


பண் :சாதாரி

பாடல் எண் : 1

திருந்துமா களிற்றிள மருப்பொடு திரண்மணிச் சந்தமுந்திக்
குருந்துமா குரவமுங் குடசமும் பீலியுஞ் சுமந்துகொண்டு
நிரந்துமா வயல்புகு நீடுகோட் டாறுசூழ் கொச்சைமேவிப்
பொருந்தினார் திருந்தடி போற்றிவாழ் நெஞ்சமே புகலதாமே.

பொழிப்புரை :

நெஞ்சமே ! அழகான இளயானைத் தந்தங்களோடு , திரட்சியான இரத்தினங்களையும் , சந்தன மரங்களையும் அடித்துக் கொண்டு , குருந்து , மா , குரவம் , குடசம் முதலிய மரவகைகளையும் , மயிலின் தோகைகளையும் சுமந்து கொண்டு பரவி , பெரிய வயல்களில் பாய்கின்ற நெடிய கரைகளையுடைய காவிரி நதி சூழும் திருக்கொச்சைவயம் என்னும் இத்திருத்தலத்தை விரும்பி வீற்றிருந்தருளும் சிவபெருமானின் அழகிய திருவடிகளைப் போற்றி வாழ்வாயாக ! அத்திருவடியே நமக்குச் சரண்புகும் இடமாகும் .

குறிப்புரை :

திருந்தும் - திருத்தமான , அழகான என்றபடி . இளம் மருப்பு - இளந்தந்தம் . திரள் - திரட்சியான . மணி - இரத்தினங்களையும் . சந்தம் - சந்தன மரங்களையும் . உந்தி - அடித்துக்கொண்டு . குருந்து , குரவம் குடசம் - மலை மல்லிகை முதலிய மரவகைகளையும் . பீலியும் - மயில் தோகைகளையும் . நிரந்து - பரவி . நீடுகோட்டு ஆறு சூழ் - நெடிய கரைகளையுடைய காவிரி நதி சூழும் . ( கொச்சைவயம் ) மேவிப் பொருந்தினார் - விரும்பித் தங்கியருளிய பெருமானின் , ( திருந்து அடிகளை நெஞ்சமே போற்றி வாழ்வாயாக ). அது புகல் ஆம் - அத்திருவடி நமக்குச் சரண்புகும் இடமாம் . கோட்டாறு .

பண் :சாதாரி

பாடல் எண் : 2

ஏலமா ரிலவமோ டினமலர்த் தொகுதியா யெங்குநுந்திக்
கோலமா மிளகொடு கொழுங்கனி கொன்றையுங் கொண்டுகோட்டா
றாலியா வயல்புகு மணிதரு கொச்சையே நச்சிமேவும்
நீலமார் கண்டனை நினைமட நெஞ்சமே யஞ்சனீயே.

பொழிப்புரை :

மடநெஞ்சமே ! மணம் கமழும் ஏலம் , இலவங்கம் இவைகளோடு நறுமணம் கமழும் மலர்களையும் தள்ளிக் கொண்டு , அழகிய மிளகுக் கொடிகளோடு , நன்கு பழுத்த கனிகள் கொன்றை மலர்கள் ஆகியவற்றை அலைகள் வாயிலாக அடித்துக் கொண்டு ஆரவாரத்துடன் பாயும் காவிரி நதியின் நீர் வயல்களில் புகுகின்ற அழகிய திருக்கொச்சைவயம் என்னும் இத்திருத்தலத்தை விரும்பி வீற்றிருந்தருளும் நீலகண்டரான சிவபெருமானை நினைப்பாயாக ! நீ அஞ்சாதே .

குறிப்புரை :

நுந்தி - தள்ளிக்கொண்டு . கோலம் ஆம் - அழகாகிய . ஆலியா - ஆலித்து , ஆரவாரித்து . ( கோட்டாறு வயல்புகும் கொச்சையே ) நச்சி - விரும்பி . நீலம் ஆர் கண்டனை நினை , அஞ்சிய தேவர்களைக் காத்தமை காட்டும் கண்டம் அது . ஆகையால் நெஞ்சமே நீ அஞ்சுதல் ஒழிவாயாக .

பண் :சாதாரி

பாடல் எண் : 3

பொன்னுமா மணிகொழித்தெறிபுனற் கரைகள்வாய் நுரைகளுந்திக்
கன்னிமார் முலைநலங் கவரவந் தேறுகோட் டாறுசூழ
மன்னினார் மாதொடும் மருவிடங் கொச்சையே மருவினாளும்
முன்னைநோய் தொடருமா றில்லைகா ணெஞ்சமே யஞ்சனீயே.

பொழிப்புரை :

நெஞ்சமே ! பொன்னையும் , பெரிய மணிகளையும் ஒதுக்கிக் கரையில் எறிகின்ற ஆற்றுநீர் நுரைகளைத் தள்ளிக் கொண்டு , கன்னிப்பெண்களின் மார்பில் பூசியிருந்த சந்தனம் முதலிய வாசனைத் திரவியங்களை அகற்றிக் கரைசேர்க்கின்ற காவிரி சூழ்ந்திருக்க , உமாதேவியாரோடு நிலைபெற்று இருப்பவராகிய சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் திருக்கொச்சைவயம் என்னும் இத் திருத்தலத்தையே எக்காலத்தும் பொருந்தி வாழ்வாயாக ! அவ்வாறு வாழ்ந்தால் தொன்றுதொட்டு வரும் மலநோயானது இனி உன்னைத் தொடராது . நீ அஞ்சல் வேண்டா .

குறிப்புரை :

மகளிர் மார்பிற்பூசிய சந்தனம் முதலிய வாசனைத் திரவியங்களைக் கவரும் பொருட்டு வந்து பாயும் என்றது தற்குறிப்பேற்ற அணி . முன்னைநோய் - தொன்றுதொட்ட மலநோய் ( தொடரு மாறு இல்லை ).

பண் :சாதாரி

பாடல் எண் : 4

கந்தமார் கேதகைச் சந்தனக் காடுசூழ் கதலிமாடே
வந்துமா வள்ளையின் பவரளிக் குவளையைச் சாடியோடக்
கொந்துவார் குழலினார் குதிகொள்கோட் டாறுசூழ் கொச்சைமேய
எந்தையா ரடிநினைந் துய்யலாம் நெஞ்சமே யஞ்சனீயே.

பொழிப்புரை :

நெஞ்சமே ! மணம் பொருந்திய தாழை , சந்தனக் காடு என்பவற்றைச் சூழ்ந்து , வாழைத் தோட்டங்களின் பக்கமாக வந்து , மா மரத்தையும் , வள்ளிக் கொடியின் திரளையும் , மொய்க்கும் வண்டுகளையும் குவளையையும் மோதி ஓட , பூங்கொத்துக்கள் அணிந்த நீண்ட கூந்தலையுடைய பெண்கள் குதித்துக் கொண்டு நீராடும் காவிரிநதி சூழ்ந்த திருக்கொச்சைவயம் என்னும் திருத்தலத்தை விரும்பி வீற்றிருந்தருளிய எந்தையாரான சிவபெருமானின் திருவடிகளைத் தியானித்து நாம் உய்தி பெறலாம் . நீ அஞ்சவேண்டா .

குறிப்புரை :

கேதகை - தாழை . கதலி மாடு - வாழையின் பக்கம் . வள்ளையின்பவர் - வள்ளைக் கொடியின் திரளையும் , அளிக்குவளையை - ( மொய்க்கும் ) வண்டுகளையுடைய குவளையையும் . சாடி - மோதி . கொந்து - பூங்கொத்து . வார் - நெடிய .

பண் :சாதாரி

பாடல் எண் : 5

மறைகொளும் திறலினா ராகுதிப் புகைகள்வா னண்டமிண்டிச்
சிறைகொளும் புனலணிசெழும்பதி திகழ்மதிற் கொச்சை தன்பால்
உறைவிட மெனமன மதுகொளும் பிரமனார் சிரமறுத்த
இறைவன தடியிணை யிறைஞ்சிவாழ் நெஞ்சமே யஞ்சனீயே

பொழிப்புரை :

நெஞ்சமே ! வேதங்களை அவற்றின் பொருள் உணர்ந்து ஓதும் வன்மை படைத்த அந்தணர்கள் இயற்றுகின்ற வேள்விப் புகை ஆகாயத்தை அளாவி நெருங்குதலால் மழை பொழிய , அந்நீர் தங்கிய கரைகளையுடைய நீர்நிலைகளால் அழகுடன் விளங்கும் செழும்பதியாகிய , மதில்கள் விளங்குகின்ற திருக்கொச்சை வயம் என்னும் திருத்தலத்தை , தாம் எழுந்தருளும் இடமாகக் கொண்ட மனமுடையவரும் , பிரமனின் சிரமறுத்தவருமான சிவபெருமானின் இரண்டு திருவடிகளையும் வணங்கி வாழ்வாயாக ! நீ அஞ்சவேண்டா .

குறிப்புரை :

மறை கொ ( ள் ) ளும் திறலினார் - வேதம் ஓதலாற் பெற்ற வலிமை உடையவர்கள் . ஆகுதிப்புகைகள் . வான் அண்டமிண்டி - ஆகாயத்தை அளாவ நெருங்கலால் . மிண்டி வினையெச்சத்திரிபு . வேள்வி யோம்பலால் கால மழை வழாது பெய்து , வயல் பாத்திகளில் தங்கும் நீர் வளப்பத்தால் அழகுடைத்தாகிய செழும்பதி என்பது முற்பகுதியின் கருத்து . கொச்சை தன்பால் - திருக்கொச்சை வயமாகிய தலத்தினிடம் . உறைவு இடம் என . மனம் அது கொள்ளும் இறைவன் - பிரமனார் சிரம் அறுத்த இறைவன் எனக் கொள்க .

பண் :சாதாரி

பாடல் எண் : 6

சுற்றமு மக்களுந் தொக்கவத் தக்கனைச் சாடியன்றே
உற்றமால் வரையுமை நங்கையைப் பங்கமா வுள்கினானோர்
குற்றமில்லடியவர் குழுமிய வீதிசூழ் கொச்சைமேவி
நற்றவ மருள்புரி நம்பனை நம்பிடாய் நாளுநெஞ்சே.

பொழிப்புரை :

நெஞ்சமே ! சிவனை நினையாது செய்த தக்கன் வேள்வியைத் தகர்த்து , அதற்குத் துணையாக நின்ற சுற்றத்தார்களையும் , மற்றவர்களையும் தண்டித்து , தன் மனைவி தாட்சாயனி தக்கன் மகளான தோடம் நீங்க இமயமலை அரையன் மகளாதற்கும் , தன் திருமேனியில் ஒரு பாகமாதற்கும் நினைத்தருளியவனும் , ஒரு குற்றமுமில்லாத அடியவர்கள் குழுமிய வீதிகள் சூழ்ந்த திருக்கொச்சைவயம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்து , திரிகரணங்களும் ஒன்றிச் சிவவழிபாடு செய்பவர்கட்கு அதன் பயனை அளித்து அருள்புரிகின்றவனுமாகிய சிவபெருமானை எந்நாளும் நீ விரும்பி வாழ்வாயாக !

குறிப்புரை :

தக்கன் மகளான தோடம் நீங்க , இமய மலையரையன் மகளாதற்கும் , தன் உடம்பில் ஒரு பங்கில் வைத்தற்கும் நினைத்தருளியவன் என்பது இரண்டாம் அடியின் கருத்து . மால்வரையுமை ( ஆக ) நங்கையைப்பங்கம் ( ஆக ) எனக் கூட்டுக . ஓர் குற்றம் இல் - ஒரு குற்றமும் இல்லாத . அடியவர் குழுமிய வீதிசூழ் கொச்சை மேவி . நல்தவம் - நல்லதவத்தின் பயன்களை . அருள்புரி நம்பனை நம்புவாயாக .

பண் :சாதாரி

பாடல் எண் : 7

கொண்டலார் வந்திடக் கோலவார் பொழில்களிற் கூடிமந்தி
கண்டவார் கழைபிடித் தேறிமா முகிறனைக் கதுவுகொச்சை
அண்டவா னவர்களு மமரரு முனிவரும் பணியவாலம்
உண்டமா கண்டனார் தம்மையே யுள்குநீ யஞ்சனெஞ்சே.

பொழிப்புரை :

நெஞ்சமே ! மேகங்கள் வந்தவுடன் , அழகிய நீண்ட சோலைகளிலுள்ள குரங்குகள் கூடி , தங்கட்கு முன்னே காணப்படுகின்ற மூங்கில்களைப் பற்றி ஏறி , அந்தக் கரிய மேகங்களைக் கையால் பிடிக்கின்ற திருக்கொச்சைவயம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற , அண்ட வானவர்களும் , தேவர்களும் , முனிவர்களும் வந்து பணிய , ஆலகால விடத்தினை உண்டு அவர்களைக் காத்த பெருமையுடைய கழுத்தினையுடைய சிவபெருமானையே எப்பொழுதும் நீ நினைத்துத் தியானிப்பாயாக ! நீ அஞ்சல் வேண்டா .

குறிப்புரை :

கோலம் - அழகை உடைய . வார் - நெடிய . பொழில்களில் - சோலைகளில் . கொண்டலார் - மேகங்கள் . வந்திட - வந்து படிய . ( குரங்குகள் கூடிக்கொண்டு தங்களுக்கு முன்னே காணப்படுகின்ற ) கழைபிடித்து ஏறி - மூங்கில்களைப்பற்றி ஏறி . மாமுகிறனை - கரிய அம்மேகத்தை . கதுவு - கையாற் பிடிக்கின்ற ( கொச்சை ). கொண்டல் , கொண்டலார் என்று உயர்த்தற்கண் வந்தது , அதன் சிறப்புநோக்கி . ` ஒருவரைக்கூறும் பன்மைக் கிளவியும் , ஒன்றனைக்கூறும் பன்மைக் கிளவியும் ... சொல்லாறல்ல ` ( தொல் . சொல் . கிளவியாக்கம் . சூத்திரம் . 27). ` தென்றலார் புகுந்துலவும் திருத்தோணிபுரத்துறையும் கொன்றை வார்சடையார் ` ( தி .1. ப .60. பா .7.) என வந்தமையும் காண்க . அமரரும் - தேவர்களும் , அண்ட வானவர்களும் - அவரொழிந்த , ஏனைய அண்டங்களிலுள்ள , அயன் அரி முதலிய தேவர்களும் .

பண் :சாதாரி

பாடல் எண் : 8

அடலெயிற் றரக்கனார் நெருக்கிமா மலையெடுத் தார்த்தவாய்கள்
உடல்கெடத் திருவிர லூன்றினா ருறைவிட மொளிகொள்வெள்ளி
மடலிடைப் பவளமு முத்தமுந் தொத்துவண் புன்னைமாடே
பெடையொடுங் குருகினம் பெருகுதண் கொச்சையே பேணுநெஞ்சே.

பொழிப்புரை :

நெஞ்சமே ! வலிமை வாய்ந்த பற்களையுடைய அரக்கனான இராவணன் பெரிய திருக்கயிலைமலையைப் பெயர்த்தெடுக்க , ஆரவாரித்த அவனது வாய்களுடன் உடலும் நெரியும்படித் தன் காற்பெருவிரலை ஊன்றினவனான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற , ஒளிபொருந்திய வெள்ளியைப் போன்ற இதழ்களை யுடைய பூக்களின் இடையிடையே பவளம் போன்ற செந்நிறப் பூக்களும் , முத்துக்களைப் போன்ற அரும்புகளும் , அமைந்த பூங்கொத்துக்களையுடைய செழித்த புன்னைமரங்களின் பக்கத்தில் பறவை இனங்கள் தங்கள் பெடைகளோடு வளர்தலையுடைய திருக்கொச்சைவயம் என்னும் திருத்தலத்தை நீ போற்றி வழிபடுவாயாக !

குறிப்புரை :

அடல் எயிற்று - வலிய பற்களையுடைய . அரக்கனார் - இராவணன் . ( இகழ்ச்சிக் குறிப்பு ) வாய்கள் . உடல் கெட - உடலோடு நொறுங்க திருவிரல் ஊன்றினான் . வெள்ளி மடல் இடை - வெள்ளியைப் போன்ற மடல்களையுடைய விரிந்த பூக்களின் இடையிடையே . பவளமும் - பவளம் போன்ற பழம் பூக்களும் . முத்தமும் - முத்துப்போன்ற அரும்புகளும் உடைய . கொத்து - பூங்கொத்துக்களையுடைய . புன்னைமாடு - புன்னை மரங்களில் . குருகு இனம் - பறவையினம் , பெடையோடும் . பெருகும் - மகிழ்ச்சி மிகும் ( கொச்சை ).

பண் :சாதாரி

பாடல் எண் : 9

அரவினிற் றுயிறரு மரியுநற் பிரமனு மன்றயர்ந்து
குரைகழ றிருமுடி யளவிட வரியவர் கொங்குசெம்பொன்
விரிபொழி லிடைமிகு மலைமகண் மகிழ்தர வீற்றிருந்த
கரியநன் மிடறுடைக் கடவுளார் கொச்சையே கருதுநெஞ்சே.

பொழிப்புரை :

நெஞ்சமே ! பாம்புப் படுக்கையில் துயிலும் திருமாலும் , நல்ல பிரமதேவனும் சோர்வடையும்படி , ஒலிக்கின்ற வீரக்கழல்களை அணிந்த திருவடிகளையும் , திருமுடியையும் அளவிடுதற்கு அரியவராய் , பூக்களிலுள்ள மகரந்தமானது செம்பொன் துகளைப்போல உதிர்கின்ற சோலைகளுக்கு இடையில் , மலை மகளான உமாதேவியார் மகிழும்படி , கரிய , அழகிய கழுத்தினை யுடையவராய்ச் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருக்கொச்சைவயம் என்னும் இத்திருத்தலத்தை நீ எப்பொழுதும் தியானிப்பாயாக !

குறிப்புரை :

அரவினில் துயில்தரும் - பாம்பு அணையில் தூங்கும் . அரியும் , நல் பிரமனும் . அயர்ந்து - சோர்வுற்று , குரைகழல் - ஒலிக்கின்ற வீரகண்டையையணிந்த திருவடியையும் , ( திருமுடி அளவிட அரியவர் ). கொங்கு - மகரந்தம் , செம்பொன் - செவ்விய பொன்னைப் போல . விரி - மலர்களில் விரியப்பெற்ற . பொழில் - சோலை . இடைமிகு - இடையிடையே மிக்குள்ள . மலைமகள் மகிழும்படி கடவுளார் வீற்றிருக்கின்ற கொச்சையையே கருதுங்கள் .

பண் :சாதாரி

பாடல் எண் : 10

கடுமலி யுடலுடை யமணருங் கஞ்சியுண் சாக்கியரும்
இடுமற வுரைதனை யிகழ்பவர் கருதுநம் மீசர்வானோர்
நடுவுறை நம்பனை நான்மறை யவர்பணிந் தேத்தஞாலம்
உடையவன் கொச்சையே யுள்கிவாழ் நெஞ்சமே யஞ்சனீயே.

பொழிப்புரை :

நெஞ்சமே ! கடுக்காய்களைத் தின்னும் சமணர்களும் , கஞ்சி உணவை உண்கின்ற புத்தர்களும் , சொல்லுகின்ற சமயபோதனைகளை இகழ்பவர்களாகிய அடியவர்கள் நினைந்து போற்றும் நம் இறைவனும் , தேவர்கள் தன்னைச் சுற்றி நின்று தொழ அவர்கள் நடுவுள் வீற்றிருந்தருளும் நண்பனும் , நான்கு வேதங்களையும் நன்கு கற்ற அந்தணர்கள் பணிந்து போற்ற இந்த உலகம் முழுவதையும் தனக்கு உடைமைப் பொருளாக உடையவனுமாகிய சிவபெருமானது திருக்கொச்சைவயம் என்னும் திருத்தலத்தைத் தியானித்து நல்வாழ்வு வாழ்வாயாக ! நீ அஞ்ச வேண்டா .

குறிப்புரை :

கடு மலி உடல் - வெறுக்கத்தக்க துர்நாற்றம் மிக்க உடலையுடைய . சமணரும் சாக்கியரும் ( புத்தரும் ). இடும் - சொல்லும் . அறவுரைதனை - சமயபோதனைகளை . இகழ்பவர்களாகிய அடியார்கள் . கருதும் - நினைந்து ஏத்தும் ( நம் ஈசர் ). வானோர் நடு உறைநம்பனை - தேவர்கள் தன்னைச் சுற்றித் தொழ அவர் நடுவுள் நாயகராக வீற்றிருந்தருளும் சிவன் .

பண் :சாதாரி

பாடல் எண் : 11

காய்ந்துதங் காலினாற் காலனைச் செற்றவர் கடிகொள்கொச்சை
ஆய்ந்துகொண் டிடமென விருந்தநல் லடிகளை யாதரித்தே
ஏய்ந்ததொல் புகழ்மிகு மெழின்மறை ஞானசம் பந்தன்சொன்ன
வாய்ந்தவிம் மாலைகள் வல்லவர் நல்லர்வா னுலகின்மேலே.

பொழிப்புரை :

தம் அடியவனான மார்க்கண்டேயனின் உயிரைக் கவரவந்த காலனைக் கோபித்துக் காலால் உதைத்து மாய்த்தவரும் , காவலையுடைய திருக்கொச்சைவயம் என்னும் திருத்தலத்தினைத் தாம் வீற்றிருந்தருளுதற்கு ஏற்ற இடமென ஆராய்ந்து எழுந்தருளியுள்ள நம் தலைவருமான சிவபெருமானிடம் பக்தி கொண்டு , பொருந்திய தொன்மையான புகழ்மிகுந்த , அழகிய , மறைவல்ல ஞானசம்பந்தன் போற்றி அருளிய சிறப்புடைய இத்தமிழ் மாலைகளை ஓதவல்லவர்கள் நன்மைதரும் வானுலகில் மேன்மையுடன் வீற்றிருப்பர் .

குறிப்புரை :

காலனைக் காய்ந்து காலினால் செற்றவர் . ஆய்ந்து - இதுவே எவற்றினும் சிறந்ததென ஆராய்ந்து . கொண்டு - தேர்ந்து . கடிகொள் - காவலையுடைய . கொச்சை இடம் என இருந்த அடிகளை ஞானசம்பந்தன் சொன்ன ( மாலை ). ஆய்ந்த - ஆராயந்துணர்த்திய ( இம்மாலைகள் வல்லவர் . வான் உலகில் மேன்மையுடையவராவர் ) மேல் - மேன்மையுடையவர் ; ஆகுபெயர் .
சிற்பி