திருத்துருத்தியும் திருவேள்விக்குடியும்


பண் :சாதாரி

பாடல் எண் : 1

ஓங்கிமே லுழிதரு மொலிபுனற் கங்கையை யொருசடைமேல்
தாங்கினா ரிடுபலி தலைகல னாக்கொண்ட தம்மடிகள்
பாங்கினா லுமையொடு பகலிடம் புகலிடம் பைம்பொழில்சூழ்
வீங்குநீர்த் துருத்தியா ரிரவிடத் துறைவர்வேள் விக்குடியே.

பொழிப்புரை :

சிவபெருமான் , மேன்மேலும் ஒங்கி எழுந்து ஓசையுடன் பெருக்கெடுத்து வந்த கங்கையாற்றின் வெள்ளத்தை ஒரு சடையில் தாங்கியவர் . இடுகின்ற பிச்சையை ஏற்கத் தலை யோட்டையே பாத்திரமாகக் கொண்ட தலைவர் . முறைப்படி , பகற்காலத்தில் தங்குமிடமாகப் பசுமையான சோலைகள் சூழ்ந்ததும் , நீர்ச்செழிப்பு மிக்கதுமான திருத்துருத்தி என்னும் திருத்தலத்தை உடையவர் . அப்பெருமானே இரவில் திருவேள்விக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

மேலும் மேலும் ஓங்கிப் பரவிவந்த ஓசையையுடைய கங்கை நீரை ஒரு சடைமேல் தாங்கினவர் , உலகையே அழிப்பது போல் பெருக்கெடுத்த நீரை , ஒரு சடையில் தாங்கினான் என ஓர் நயம் . இடுபலி - இடும் பிச்சையைத் தலைகலனாக ஏற்கும் , தம் பெருமான் , தம்பிரான் , தம்மடிகள் - என்பன ஒரு பொருளன ; தாமே தமக்குத் தலைவர் என்பது . பாங்கினால் - முறைப்படி , பகற் காலத்துத் தங்கும் இடம் நீர்வளம் மிக்க துருத்தியாக உடையவர் , இரவுக் காலத்துத் தங்குவது திருவேள்விக்குடியாம் . பாங்கினால் - என்றது , பகற் காலத்துத் திருத்துருத்தியிலும் , இரவுக்காலத்துத் திருவேள்விக்குடியிலும் , தங்கும் முறை பகல் இடம் இரவு இடம் - இடம் என்ற சொற்கள் காலத்தைக் குறித்தன . நீர் - நீரினாலாகும் வளத்துக்கானது காரண ஆகுபெயர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 2

தூறுசேர் சுடலையிற் சுடரெரி யாடுவர் துளங்கொளிசேர்
நீறுசாந் தெனவுகந் தணிவர்வெண் பிறைபுல்கு சடைமுடியார்
நாறுசாந் திளமுலை யரிவையோ டொருபக லமர்ந்தபிரான்
வீறுசேர் துருத்தியா ரிரவிடத் துறைவர்வேள் விக்குடியே.

பொழிப்புரை :

சிவபெருமான் , புதர்ச்செடிகள் நிறைந்த சுடு காட்டில் ஒளிவிடும் நெருப்பேந்தி ஆடுபவர் . விளங்கும் ஒளி யுடைய திருநீற்றினைக் கலவைச் சந்தனம் போல மகிழ்ச்சியுடன் அணிந்து கொள்பவர் . வெண்மையான பிறைச்சந்திரனை அணிந்த சடைமுடி உடையவர் . மணம் கமழும் சந்தனக்குழம்பை அணிந்த இளமையான கொங்கைகளையுடைய உமாதேவியோடு பொருள்வளமிக்க திருத்துருத்தியில் பகற்காலத்தில் தங்கியிருப்பவர் . இரவில் திருவேள்விக் குடியில் வீற்றிருந்தருள்பவர் .

குறிப்புரை :

தூறு - புதர்ச்செடிகள் , துளங்கு ஒளிசேர் - விளங்கும் ஒளியையுடைய திருநீற்றைச் சந்தனமாகக் கொண்டு பூசுவர் , நாறு - கமழும் . சாந்து - சந்தனக் குழம்பையணிந்த , அரிவையோடு - அம்பிகையுடனே . வீறு - செல்வ மிகுதி , துருத்தியாராய் அரிவையொடு ஒருபகல் அமர்ந்த பிரான் இரவிடத்து வேள்விக்குடியில் உறைவர் என வினை முடிவு செய்க .

பண் :சாதாரி

பாடல் எண் : 3

மழைவள ரிளமதி மலரொடு தலைபுல்கு வார்சடைமேல்
கழைவளர் புனல்புகக் கண்டவெங் கண்ணுதற் கபாலியார்தாம்
இழைவளர் துகிலல்கு லரிவையோ டொருபக லமர்ந்தபிரான்
விழைவளர் துருத்தியா ரிரவிடத் துறைவர்வேள் விக்குடியே.

பொழிப்புரை :

குளிர்ச்சியான இளம்பிறையும் , கொன்றை , ஊமத்தை போன்ற மலர்களோடு ஒரு வெண்தலையும் பொருந்திய நீண்ட சடையின் மீது , கரும்பு முதலிய பயிர்களை வளர்க்கும் கங்கை நதியினைத் தங்கச் செய்த எம் கண்ணுதல் கடவுளாகிய சிவபெருமான் பிரம கபாலம் ஏந்தியவர் . அவர் இழைகளால் நெய்யப்பட்ட ஆடை யணிந்த அல்குலையுடைய உமாதேவியோடு பகலில் , மேன்மேலும் தரிசிக்க ஆசைதரும் திருத்துருத்தியில் வீற்றிருந்தருளுவார் . அவரே இரவில் திருவேள்விக்குடியில் வீற்றிருந்தருளுவார் .

குறிப்புரை :

மேகத்திலுள்ள பிறையும் , மலரும் , நகுவெண்டலையும் பொருந்திய நெடிய சடைமேல் , கங்கைநீர் தங்கச்செய்த எமது சிவபெருமான் , கழைவளர் புனல் - கரும்பு முதலிய பயிர்களைச் செழிப்பிக்கும் புனல் ` கண்ட - செய்த என்னும் பொருளில் வருவதைத் ` திருநகரம் கண்ட படலம் ` என வருதலாலும் அறிக . கண்ணுதலாகிய கபாலியார் என்க . கபாலியர் - தலையோட்டையேந்தியவர் , விழை ( வு ) வளர்துருத்தியார் - மேலும் மேலும் தரிசிக்க ஆசைதரும் திருத்துருத்தியார் . அம்பிகையோடும் துருத்தியாராய்ப் பகலில் அமர்ந்தபிரான் இரவிடத்து உறைவது திருவேள்விக்குடியே என இப்பதிகத்து மேல் வரும் பாடல்கள் தோறும் கொள்க .

பண் :சாதாரி

பாடல் எண் : 4

கரும்பன வரிசிலைப் பெருந்தகைக் காமனைக் கவினழித்த
சுரும்பொடு தேன்மல்கு தூமலர்க் கொன்றையஞ் சுடர்ச்சடையார்
அரும்பன வனமுலை யரிவையொ டொருபக லமர்ந்தபிரான்
விரும்பிடம் துருத்தியா ரிரவிடத் துறைவர்வேள் விக்குடியே

பொழிப்புரை :

இறைவன் கரும்பு வில்லையுடைய பெருந்தகை யாகிய மன்மதனின் அழகிய உடலை அழித்தவர் . வண்டுகள் மொய்க்கும் , தேன் மணம் கமழும் தூய கொன்றை மலரை அழகிய ஒளிமிக்க சடைமுடியில் அணிந்தவர் . அவர் தாமரை மொட்டுப் போன்று அழகிய கொங்கைகளை உடைய உமாதேவியோடு பகலில் விரும்பி வீற்றிருந்தருளும் இடம் திருத்துருத்தி என்னும் திருத்தல மாகும் . அவரே இரவில் வீற்றிருந்தருளுவது திருவேள்விக்குடி என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

அ ( ன் ) ன கரும்பு வரிசிலைக்காமன் - கரும்பாகிய கட்டமைந்த அத்தகைய வில்லையுடைய மன்மதன் , பெருந்தகைக் காமன் , கவின் அழித்த - அழகிய உடலை அழித்த , உடலைக்கவின் என்றது தானியாகு பெயர் , அரும்பு - தாமரையரும்பு , கோங்கின் அரும்புமாம் . தனக்கு இறுதி நேர்வதோர்ந்தும் , தேவர்கள் துயர் தீர்தலைக் கருதி யிறைவன் மேற்சென்றமையிற் பெருந்தகைக் காமன் என்றார் .

பண் :சாதாரி

பாடல் எண் : 5

வளங்கிளர் மதியமும் பொன்மலர்க் கொன்றையும் வாளரவும்
களங்கொளச் சடையிடை வைத்தஎங் கண்ணுதற் கபாலியார்தாம்
துளங்குநூன் மார்பின ரரிவையொ டொருபக லமர்ந்தபிரான்
விளங்குநீர்த் துருத்தியா ரிரவிடத் துறைவர்வேள் விக்குடியே.

பொழிப்புரை :

அழகு மிளிரும் சந்திரனும் , பொன் போன்ற கொன்றைமலரும் , வாள் போன்று ஒளிரும் பாம்பும் இருக்குமிடமாகச் சடைமுடியில் வைத்தருளிய , நெற்றிக்கண்ணையுடைய எங்கள் சிவபெருமான் பிரமகபாலம் ஏந்தியவர் . அசைகின்ற முப்புரி நூலணிந்த மார்பினர் . அவர் உமாதேவியாரோடு பகலில் நீர்வளமிக்க திருத்துருத்தி என்னும் திருத்தலத்திலும் , இரவில் திருவேள்விக்குடி என்னும் திருத்தலத்திலும் வீற்றிருந்தருளுவார் .

குறிப்புரை :

மதியமும் , கொன்றையும் , பாம்பும் தமக்கு இடமாகக் கொள்ளச்சடையில் வைத்த கபாலியார் , துளங்கும் நூல் - அசையும் பூணூல் .

பண் :சாதாரி

பாடல் எண் : 6

பொறியுலா மடுபுலி யுரிவையர் வரியராப் பூண்டிலங்கும்
நெறியுலாம் பலிகொளு நீர்மையர் சீர்மையை நினைப்பரியார்
மறியுலாங் கையினர் மங்கையொ டொருபக லமர்ந்தபிரான்
வெறியுலாந் துருத்தியா ரிரவிடத் துறைவர்வேள் விக்குடியே.

பொழிப்புரை :

சிவபெருமான் வரிகளையுடைய கொல்லும் தன்மையுடைய புலித்தோலாடை அணிந்தவர் . நெடிய பாம்பை ஆபரணமாகப் பூண்டவர் . பிச்சை எடுப்பதை நெறியாகக் கொண்ட தன்மையர் . இத்தகைய எளிமை உடையவர் ஆயினும் , எவராலும் நினைத்துப் பார்ப்பதற்கும் அரிய பெருமையுடையவர் . மான்கன்று ஏந்திய கையினர் . அத்தகைய பெருமான் உமாதேவியாரோடு பகலில் , நறுமணம் கமழும் திருத்துருத்தி என்னும் திருத்தலத்திலும் , இரவில் திருவேள்விக்குடி என்னும் திருத்தலத்திலும் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

கீற்றுக்களையுடைய , கொல்லும் , புலித்தோலுடையவராய் , நெடிய பாம்பை அணியாக அணிந்து வீதியில் திரிந்து , ஏற்பதாகிய பிச்சைத் தன்மையுடையவர் . அத்தகு எளியவராயினும் , தமது பெருமையினை நினைப்பினும் அறியமுடியாதவர் , மறி - மான்கன்று . வெறி - வாசனை .

பண் :சாதாரி

பாடல் எண் : 7

புரிதரு சடையினர் புலியுரி யரையினர் பொடியணிந்து
திரிதரு மியல்பினர் திரிபுர மூன்றையுந் தீவளைத்தார்
வரிதரு வனமுலை மங்கையொ டொருபக லமர்ந்தபிரான்
விரிதரு துருத்தியா ரிரவிடத் துறைவர்வேள் விக்குடியே.

பொழிப்புரை :

சிவபெருமான் முறுக்குண்ட சடையினை உடையவர் . புலியின் தோலை அரையில் உடுத்தவர் . திருவெண் நீற்றை அணிந்து கொண்டு திரியும் இயல்பினர் . திரியும் புரங்கள் மூன்றையும் தீயால் வளைவித்து எரித்தவர் . சந்தனக் கீற்றுக்கள் எழுதப் பெற்ற அழகிய கொங்கைகளையுடைய உமாதேவியோடு பகலில் திருத்துருத்தி என்னும் திருத்தலத்திலும் , இரவில் திருவேள்விக்குடி என்னும் திருத்தலத்திலும் வீற்றிருந்தருளுவார் .

குறிப்புரை :

புரிதரும் - முறுக்குண்ட சடையினர் , தீவளைத்தார் - தீயால் வளைவித்து எரித்தவர் , வரிதரு - சந்தனக்கீற்றெழுதிய . வனமுலை ; வனம் - அழகு .

பண் :சாதாரி

பாடல் எண் : 8

நீண்டிலங் கவிரொளி நெடுமுடி யரக்கனிந் நீள்வரையைக்
கீண்டிடந் திடுவனென் றெழுந்தவ னாள்வினை கீழ்ப்படுத்தார்
பூண்டநூன் மார்பின ரரிவையொ டொருபக லமர்ந்தபிரான்
வேண்டிடந் துருத்தியா ரிரவிடத் துறைவர்வேள் விக்குடியே.

பொழிப்புரை :

நெடுந்தூரம் விளங்கிப் பிரகாசிக்கும் இரத்தினங்கள் பதிக்கப்பட்ட பெரிய கிரீடத்தை அணிந்துள்ள இராவணன் ` இப்பெரிய கயிலைமலையைப் பெயர்த்தெடுத்து அப் பாலிடுவேன் ` என்று ஆணவத்துடன் எழுந்த அவனது முயற்சியை அழித்தருளியவர் சிவபெருமான் . அவர் பூணூல் அணிந்த திருமார்பினர் . அவர் உமா தேவியோடு பகலில் , விரும்பி வீற்றிருந்தருளும் இடம் திருத்துருத்தி என்னும் திருத்தலமாகும் . இரவில் திருவேள்விக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுவார் .

குறிப்புரை :

பதித்த இரத்தினங்களால் நெடுந்தூரம் விளங்கிப் பிரகாசிக்கும் ஒளியுடைய பெரிய முடியையுடைய , அரக்கன் - என்பது முற்பகுதியின் பொழிப்பு . இந்நெடிய மலையைத் தோண்டியெடுத்து அப்பால் இடுவேன் என்றெழுந்தவன் , ஆள்வினை - முயற்சி , கீழ்ப் படுத்தார் - மேல்எழாதவாறு அழித்தருளியவர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 9

கரைகட லரவணைக் கடவுளுந் தாமரை நான்முகனும்
குரைகழ லடிதொழக் கூரெரி யெனநிறங் கொண்டபிரான்
வரைகெழு மகளொடும் பகலிடம் புகலிடம் வண்பொழில்சூழ்
விரைகமழ் துருத்தியா ரிரவிடத் துறைவர்வேள் விக்குடியே.

பொழிப்புரை :

ஒலிக்கின்ற கடலில் பாம்புப் படுக்கையில் துயில்கொள்ளும் திருமாலும் , தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் , ஒலிக்கும் வீரக்கழல்களை அணிந்த தம் திருவடிகளை , செருக்கழிந்து தொழுமாறு ஓங்கிய நெருப்பு வடிவாய் நின்றவர் சிவபெருமான் . அவர் மலைமகளான உமாதேவியோடு பகலில் வீற்றிருந்தருளும் இடம் வளமை வாய்ந்த சோலைகள் சூழ்ந்த நறுமணம் கமழும் திருத்துருத்தி என்னும் திருத்தலமாகும் . இரவில் திருவேள்விக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

கரைகடல் அரவு அணைக்கடவுளும் - ஒலிக்கின்ற கடலில் பாம்பை அணையாகவுடைய திருமாலும் , நிறம் - இங்கு வடிவு என்னும் பொருளில் வந்தது இலக்கணை . கூர் எரி - மிக்கநெருப்பு . குரைகழல் அடி - ஒலிக்கும் வீர தண்டையையுடைய . அடி தொழ - ( தமது செருக்கு ஒழிந்து தாழ்வுற்றுத் ) தொழுமாறு , ( நிறங் கொண்டபிரான் ) தொழ - காரியப்பொருட்டு வினையெச்சம் , வரைகெழுமகள் - இமவானிற் பிறந்த மகள் .

பண் :சாதாரி

பாடல் எண் : 10

அயமுக வெயினிலை யமணருங் குண்டருஞ் சாக்கியரும்
நயமுக வுரையினர் நகுவன சரிதைகள் செய்துழல்வார்
கயலன வரிநெடுங் கண்ணியொ டொருபக லமர்ந்தபிரான்
வியனகர்த் துருத்தியா ரிரவிடத் துறைவர்வேள் விக்குடியே.

பொழிப்புரை :

பழுக்கக் காய்ச்சிய இரும்பு போல் சுடும் வெயிலில் தவமென்று நிற்றலையுடைய சமணர்களும் , குண்டர்களாகிய புத்தர்களும் , இன்முகத்தோடு நயமாகப் பேசி , நகைச்சுவை ததும்பும் செயல்களைச் செய்து திரிபவர்கள் . ஆதலால் அவர் உரைகளைக் கொள்ளாதீர் . கயல்மீன் போன்ற , அழகிய , வரிகளையுடைய நீண்ட கண்களையுடைய உமாதேவியோடு பகலில் அகன்ற நகராகிய திருத்துருத்தியில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் இரவில் திருவேள்விக்குடியில் வீற்றிருந்தருளுகின்றார் . அவரை வழிபட்டு உய்வீர்களாக .

குறிப்புரை :

அயம் முகம் வெயில் - பழுக்கக்காய்ச்சிய இரும்பு போற்சுடும் வெயிலில் . நிலை ( தவமென்று நிற்றலையுடைய ) துறவிகளாகிய அமணரும் , குண்டரும் , அவருள் இல்லறத்தாராகிய கொடியோரும் . சாக்கியரும் - புத்தரும் , நயமுக உரையினர் - விரும்பத்தக்க முகத்தோடு பேசுதலையுடையவர் . நகைக்கத்தக்க கதைகளைக் கட்டித் திரிபவர் ஆதலால் அவர் உரையையும் , சரிதையையும் கொள்ளாது . துருத்தியார் வேள்விக்குடியிலிருப்பவர் , அவர் அடி சார்ந்து உய்வீர்களாக என்க .

பண் :சாதாரி

பாடல் எண் : 11

விண்ணுலாம் விரிபொழில் விரைமணற் றுருத்திவேள் விக்குடியும்
ஒண்ணுலாம் மொலிகழ லாடுவா ரரிவையொ டுறைபதியை
நண்ணுலாம் புகலியு ளருமறை ஞானசம் பந்தன்சொன்ன
பண்ணுலா மருந்தமிழ் பாடுவா ராடுவார் பழியிலரே.

பொழிப்புரை :

ஒளிவிடும் , ஒலிக்கின்ற கழல்கள் அணிந்து திருநடனம் செய்யும் சிவபெருமான் உமாதேவியோடு வீற்றிருந் தருளுகின்ற , ஆகாயம்வரை உயர்ந்துள்ள விரிந்த சோலைகள் நிறைந்த , மணம் பொருந்திய மணற் பரப்பையுடைய திருத்துருத்தி , திருவேள்விக்குடி ஆகிய திருத்தலங்களைப் போற்றி அனைவரும் வழிபடும் திருப்புகலியில் அவதரித்த அருமறைவல்ல ஞானசம்பந்தன் பாடிய பண்ணோடு கூடிய இந்த அரிய தமிழ்ப்பதிகத்தைப் பாடுபவர்களும் , பரவசமடைந்து ஆடுபவர்களும் எவ்விதமான பழியும் , பாவமும் இல்லாதவர்களாவர் .

குறிப்புரை :

துருத்தி :- ஆற்றிடைக் குறையாதலால் விரைமணல் துருத்தி என்றார் . ஒண் ( மை ) கடைக்குறை , கழல் ஆடுவார் - திருவடியைத் தூக்கி நின்றாடுவார் . நண் - அனைவரும் புகலிடமாக அடைவதாகிய - ( புகலி ) பாடுவார் , ஆடுவார் பழி பாவங்கள் இல்லாதவராவர் . பாவம் , உபலட்சணத்திற் கொள்ளப்பட்டது .
சிற்பி