திருவடகுரங்காடுதுறை


பண் :சாதாரி

பாடல் எண் : 1

கோங்கமே குரவமே கொழுமலர்ப் புன்னையே கொகுடிமுல்லை
வேங்கையே ஞாழலே விம்முபா திரிகளே விரவியெங்கும்
ஓங்குமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை
வீங்குநீர்ச் சடைமுடி யடிகளா ரிடமென விரும்பினாரே.

பொழிப்புரை :

கோங்கு, குரவம், செழித்த மலர்களைத் தரும் புன்னை, கொகுடி, முல்லை, வேங்கை, புலிநகக் கொன்றை, பாதிரி ஆகிய மரங்களை அடித்துவரும் காவிரியின் வடகரையிலுள்ள குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தைச் சிவபெருமான் தமது இருப்பிடமாகக் கொண்டு விரும்பி வீற்றிருந்தருளுபவர்.

குறிப்புரை :

கோங்கமே, குரவமே - கோங்கமும், குரவமும் எனப் பொருள் தரலால் ஏகாரம் எண்ணுப்பொருள். கொகுடி முல்லை - முல்லைவகை. விம்மு - பருத்த, பாதிரியாகிய இம்மரங்களை அடித்துக்கொண்டு பெருகும் காவிரியின் வடகரையில் உள்ள குரங்காடுதுறையைச் சடைமுடி அடிகளார் இடமென விரும்பினார் என்க.

பண் :சாதாரி

பாடல் எண் : 2

மந்தமா யிழிமதக் களிற்றிள மருப்பொடு பொருப்பினல்ல
சந்தமா ரகிலொடு சாதியின் பலங்களுந் தகையமோதி
உந்துமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை
எந்தையா ரிணையடி யிமையவர் தொழுதெழு மியல்பினாரே. 

பொழிப்புரை :

சிறு அளவில் மதம் சொரியும் யானைக் கன்றுகளின் தந்தங்களையும், நல்ல சந்தனம், அகில், சாதிக்காய் ஆகிய பயன் தரக்கூடிய மரங்களையும் விழும்படி மோதி, அலைகளால் அடித்து வரும் காவிரியின் வடகரையிலுள்ள குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் எந்தையாகிய சிவபெருமானின் திருவடிகளைத் தேவர்கள் தொழுது எழும் தன்மையர்.

குறிப்புரை :

மந்தமாய் - சிறு அளவினதாக, இழி - சொரியும்; மதம் என்றதனாலும், இள மருப்பு என்றதனாலும், யானைக் கன்றுகளின் தந்தங்கள் என்க. தந்தங்களை உந்தும் எனவே யானைக் கன்றுகளையும் உந்தும் என்பது அருத்தாபத்தியாற் கொள்ளப்படும். (சந்தனம், அகில், சாதி) யாகிய, பலன்கள் - பயன் தரக் கூடிய இம் மரங்களையும். தகைய - தன்னிடத்து விழ. மோதி - சாடி. உந்தும் - அடித்துவரும் காவிரி. எந்தையார் தமது இணையடியை இமையவர் தொழுது எழும் தன்மையினர்.

பண் :சாதாரி

பாடல் எண் : 3

முத்துமா மணியொடு முழைவள ராரமு முகந்துநுந்தி
எத்துமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை
மத்தமா மலரொடு மதிபொதி சடைமுடி யடிகடம்மேல்
சித்தமா மடியவர் சிவகதி பெறுவது திண்ணமன்றே.

பொழிப்புரை :

முத்து, மணி, குகைகளின் அருகில் வளரும் சந்தனமரம் இவற்றை வாரி, தள்ளி மோதும் காவிரியின் வடகரையில் உள்ள குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும், பெருமை மிகுந்த பொன்னூமத்த மலரோடு, சந்திரனையும் அணிந்து உள்ள சடைமுடி உடைய தலைவரான சிவபெருமானைச் சித்தத்தால் வழிபடும் அடியவர்கள் சிவகதி பெறுவது உறுதி.

குறிப்புரை :

முழைவளர் - குகைகளின் அருகிலே வளர்ந்த. ஆரமும் - சந்தன மரங்களையும். முகந்து - வாரி. நுந்தி எத்தும் - தள்ளி மோதும் காவிரி.
மாமத்த மலர் - பெருமை பொருந்திய பொன்னூமத்த மலரோடு. அடிகள் தம்மேல் - அடிகளிடத்து. சித்தமாம் அடியவர் - சித்தம் வைக்கும் அடியவர்.

பண் :சாதாரி

பாடல் எண் : 4

கறியுமா மிளகொடு கதலியின் பலங்களுங் கலந்துநுந்தி
எறியுமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை
மறியுலாங் கையினர் மலரடி தொழுதெழ மருவுமுள்ளக்
குறியினா ரவர்மிகக் கூடுவார் நீடுவா னுலகினூடே. 

பொழிப்புரை :

உறைக்கும் மிளகுச் செடிகளோடு, வாழையும் கலந்து தள்ளி வரும் காவிரியின் வடகரையில் விளங்கும் குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தில் மான்கன்றை ஏந்திய கையையுடைய சிவபெருமானின் திருவடிகளைத் தொழுது, உள்ளம் உருகப் போற்றுபவர்கள் வானுலகடைந்து மேன்மையுடன் மகிழ்ந்திருப்பர்.

குறிப்புரை :

கறியும் - உறைக்கும். மாமிளகு ஒடு - மிக்க மிளகுச் செடிகளோடு. கறி - கறிப்பு எனவும் வழங்கும்.
அவரது மலரடிகளைத் தொழுது எழ எண்ணும் உள்ளக் குறிக்கோளையுடையவர் என்பது, மலரடி ... ... குறியினார் என்பதன் பொருள். மிகக் கூடுவார் - என்றும் கூடிவாழ்வார்.

பண் :சாதாரி

பாடல் எண் : 5

கோடிடைச் சொரிந்ததே னதனொடுங் கொண்டல்வாய் விண்டமுன்னீர்
காடுடைப் பீலியுங் கடறுடைப் பண்டமுங் கலந்துநுந்தி
ஓடுடைக் காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை
பீடுடைச் சடைமுடி யடிகளா ரிடமெனப் பேணினாரே. 

பொழிப்புரை :

மரக்கிளைகளில் சொரிந்த தேனோடு, மேகம் பெய்த முன்னீரும் கலக்கக் காட்டில் வசிக்கும் மயிலின் பீலியும், மலைச்சாரலில் விளையும் பண்டங்களும் உந்தித் தள்ளி ஓடிவரும் காவிரியின் வடகரையிலுள்ள குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தை, பெருமையுடைய சடைமுடியுடைய தலைவரான சிவபெருமான் விரும்பி வீற்றிருக்கும் இடமாகக் கொண்டுள்ளார்.

குறிப்புரை :

கோடு இடை - மரக் கிளைகளில், சொரிந்த தேன். கோட்டிடை எனற்பாலது கோடிடை என்றாகியது புறனடையாற் கொள்க. கொண்டல் - மேகம். வாய்விண்ட - பெய்த. முன்நீர் - முதற்பெய்த நீர். \\\\\\\"தலைப்பெயல் தலைஇய தண்ணறுங் கானத்து.\\\\\\\" (தி.11 திருமுருகாற்றுப்படை. 9) காடு - சோலை. கடறு - வனம். ஓடு உடை - ஓடிவருதலையுடைய காவிரி.

பண் :சாதாரி

பாடல் எண் : 6

கோலமா மலரொடு தூபமுஞ் சாந்தமுங் கொண்டுபோற்றி
வாலியார் வழிபடப் பொருந்தினார் திருந்துமாங் கனிகளுந்தி
ஆலுமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை
நீலமா மணிமிடற் றடிகளை நினையவல் வினைகள்வீடே.

பொழிப்புரை :

அழகிய நறுமலர்களுடன், தூபமும், சந்தனமும் கொண்டு போற்றி வாலியார் வழிபட்டதும், இனிய மாங்கனிகளை அடித்து அசைந்துவரும் காவிரியின் வடகரையில் உள்ளதுமான குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற நீலமணி போன்ற கண்டத்தையுடைய சிவபெருமானை நினைந்து போற்ற வல்லவர்களின் வலிய தீவினைகள் யாவும் தீரும்.

குறிப்புரை :

வாலியார் வழிபடப் பொருந்தினார்:- தலப்பெயர்க் காரணங் கூறியவாறு. அடுத்த பாட்டிலும் இக்குறிப்பு விளக்கப்படுகிறது. ஆலும் - அசைந்து வருகிற, காவிரி. வல்வினைகள் - எளிதில் நீங்காத கன்மங்கள். வீடு - விடுதலையாம். வீடு - முதனிலை திரிந்த தொழிற் பெயர்.

பண் : சாதாரி

பாடல் எண் : 7

* * * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * * *

பண் :சாதாரி

பாடல் எண் : 8

நீலமா மணிநிறத் தரக்கனை யிருபது கரத்தொடொல்க
வாலினாற் கட்டிய வாலியார் வழிபட மன்னுகோயில்
ஏலமோ டிலையில வங்கமே யிஞ்சியே மஞ்சளுந்தி
ஆலியா வருபுனல் வடகரை யடைகுரங் காடுதுறையே. 

பொழிப்புரை :

நீலமணிபோன்ற கருநிற அரக்கனான இராவணனை, இருபது கரத்தொடும் வாலினாற் இறுகக் கட்டிய வாலியார் வழிபடப் பெருமைபெற்ற கோயில், ஏலம், பச்சிலை, இலவங்கம், இஞ்சி, மஞ்சள் இவற்றை உந்தி, ஒலித்து, ஓடிவரும் காவிரியின் வடகரையிலுள்ள குரங்காடுதுறை என்னும் திருத்தலமாகும்.

குறிப்புரை :

ஒல்க - குழைய, \\\\\\\"ஒல்கு தீம்பண்டம்\\\\\\\" (சீவக சிந்தா மணி - 62) இராவணனை வாலினாற் கட்டிய வாலியார். இலை - பச்சிலை மரம். குறிப்பு:- எட்டாவது பாடல் மண்ணின் மிசை வாழ்வார்கள், பிழைத்தாலும் வந்தடையிற் கண்ணுதலோன் தன் கருணைக் கைக்கொள்ளும் எனக் காட்டவருவது. இப்பதிகத்து வாலியின் பெருமையோடு படுத்தி இராவணனைக் கூறியமை பாராட்டத்தக்கது. வாலியார்:- ஒருவரைக் கூறும் பன்மைக்கிளவி. (தொல். சொல். சூ - 27).

பண் :சாதாரி

பாடல் எண் : 9

பொருந்திறற் பெருங்கைமா வுரித்துமை யஞ்சவே யொருங்குநோக்கிப்
பெருந்திறத் தநங்கனை யநங்கமா விழித்ததும் பெருமைபோலும்
வருந்திறற் காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை
அருந்திறத் திருவரை யல்லல்கண் டோங்கிய வடிகளாரே. 

பொழிப்புரை :

போர்செய்யும் தன்மையுடைய பெரிய துதிக்கையுடைய யானையின் தோலை, உமாதேவி அஞ்சுமாறு உரித்து வியப்படையும்படி செய்தவர் சிவபெருமான். அவர் பெருந்திறமை மிக்க மன்மதனின் உடல் அழியுமாறு நெற்றிக்கண்ணைத் திறந்து விழித்த பெருமையுடையவர். பலவிதப் பொருட்களை அடித்துவரும் காவிரியின் வடகரையிலுள்ள குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அப்பெருமான், பிரமனும், திருமாலும் தம்மைத் தேடித் துன்புறச்செய்து நெருப்பு மலையாய் ஓங்கி ஒளிர்ந்த தலைவராவார்.

குறிப்புரை :

பெருந்திறத்து அநங்கன்; உடல் இன்றியே பெரிதும் வருத்தும் தன்மை பெருந்திறம் என்னப்பட்டது. அநங்கனை - மன்மதனை. அந் அங்கமா - உடம்பு இல்லாதவாறு. அநங்கன் - வாளாபெயராய் நின்றது. அருந் திறத்து - அரிய வலியையுடைய. இருவரை - பிரம விட்டுணுக்களை. அல்லல் கண்டு - துன்புறச் செய்து. ஓங்கிய - அழலாய் ஓங்கிய. வடகுரங்காடுதுறையடிகளார் அநங்கனை அநங்கமா விழித்ததும் பெருமை போலும் என்க.

பண் :சாதாரி

பாடல் எண் : 10

கட்டமண் டேரருங் கடுக்கடின் கழுக்களுங் கசிவொன்றில்லாப்
பிட்டர்தம் மறவுரை கொள்ளலும் பெருவரைப் பண்டமுந்தி
எட்டுமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறைச்
சிட்டனா ரடிதொழச் சிவகதி பெறுவது திண்ணமாமே. 

பொழிப்புரை :

கடுக்காய்களைத் தின்கின்ற கழுக்களான கட்டுப் பாட்டையுடைய சமணர்களும், புத்தர்களும், மன இரக்கமின்றிக் கூறும் அறவுரைகளை கொள்ளாதீர். பெரிய மலையிலுள்ள பொருள்களைத் தள்ளிப் பாயும் காவிரியின் வடகரையிலுள்ள குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சீலமிக்க சிவபெருமானின் திருவடிகளைத் தொழுபவர்கள் சிவகதி பெறுவது உறுதியாகும்.

குறிப்புரை :

கட்டு - கட்டுப்பாட்டையுடைய. அமண் (உம்) தேரரும் - அமணரும், புத்தரும். அமண்:- தூது, அரசு என்பன போல விகுதி தொக்குநின்றது. கடுக்கள் தின் - கடுக்காய்களைத் தின்கின்ற. கழுக்கள் - கழுந்து போல்பவர். கசிவு - மன விரக்கம். பிட்டர் - விலக்கத்தக்கவரும். மயிர் பறித்த தலையினராதலின் அமணரைக் கழுக்கள் என்றார். பிட்டர் - பிரஷ்டர் என்ற வடசொல்லின் திரிபு. அறவுரை - தர்மோபதேசங்கள். கொள்ளலும் - கொள்ளன்மின் (கொள்ளும் உடம்பாடு) எதிர்மறைப் பன்மை ஏவல் வினைமுற்று. கொள்+அல்+உம்; அல் - எதிர்மறை இடைநிலை. உம் - ஏவற் பன்மை விகுதி. வரைப் பண்டம் - மலையில் உள்ள பொருள்கள். அவை:- முதல் ஐந்து பாடல்களிலும் கூறியவை. உந்தி எட்டும் - தள்ளிப் பாயும். மா காவிரி \\\\\\\"இடையுரி வடசொலின்\\\\\\\" (நன்னூல் சூத். 239) என்னும் விதிப்படி இயல்பாயிற்று. சிட்டன் - சீலத்தை விரும்புவோன், சிவபிரான். \\\\\\\"சிட்டனைச் சிவனைச் செழுஞ்சோதியை\\\\\\\". (தி.5. ப.81. பா.1)

பண் :சாதாரி

பாடல் எண் : 11

தாழிளங் காவிரி வடகரை யடைகுரங்காடுதுறைப்
போழிள மதிபொதி புரிதரு சடைமுடிப் புண்ணியனைக்
காழியா னருமறை ஞானசம் பந்தன கருதுபாடல்
கோழையா வழைப்பினுங் கூடுவார் நீடுவா னுலகினூடே. 

பொழிப்புரை :

பள்ளம் நோக்கி ஓடிப்பாயும் காவிரியின் வடகரையிலுள்ள குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும், பிறைச்சந்திரனை அணிந்த முறுக்குண்ட சடைமுடியுடைய புண்ணிய மூர்த்தியான சிவபெருமானைப் போற்றி, சீகாழியில் அவதரித்த அருமறைவல்ல ஞானசம்பந்தன் அருளிய இப்பாடல்களை அடியவர்கள் கோழைமிடறோடு பாடினாலும் என்றும் அழியாத முக்தியுலகை அடைவர்.

குறிப்புரை :

தாழ் - ஓடிப் பாய்கின்ற. \\\\\\\"பள்ளந்தாழுறு புனலில்\\\\\\\" (தி.8 திருவாசகம் 25.) இளம் காவிரி (மென்புனலையுடைய காவிரி), இளந்தென்றல் என்பதுபோல. கருது - தியானித்துப் பயனெய்தத்தக்க பாடல்.
கோழையா அழைப்பினும் - கோழைமிடறோடு பாடினாலும். கோழைமிடறு பாடற் கேலாதது \\\\\\\"கோழைமிடறாக கவிகோளும் இலவாக இசைகூடும் வகையால்\\\\\\\" எனவரும் திருவைகாவூர்ப் பதிகத்தாலும் அறிக. (தி.3 ப.71. பா.1.)
அழைத்தல் - பாடுதல். அழைத்தல் என்பதற்கு மறு சொல் விளித்தல் என்பது. அதன் பிறிதொரு பொருள் பாடுதல் என்பது. இதனை \\\\\\\"கொம்பர் இருங்குயில் விளிப்பன காணாய்\\\\\\\" (மணிமேகலை - பளிக்கறை புக்க காதை. 13.) நீடு - என்றும் அழியாத. வானுலகு - முத்தியுலகம்.
சிற்பி