திருஅம்பர்மாகாளம்


பண் :சாதாரி

பாடல் எண் : 1

படியுளார் விடையினர் பாய்புலித் தோலினர் பாவநாசர்
பொடிகொண்மா மேனியர் பூதமார் படையினர் பூணநூலர்
கடிகொண்மா மலரிடு மடியினர் பிடிநடை மங்கையோடும்
அடிகளா ரருள்புரிந் திருப்பிட மம்பர்மா காளந்தானே.

பொழிப்புரை :

சிவபெருமான் உலகில் பொருந்திய இடப வாகனம் உடையவர் . பாய்கின்ற புலித்தோலை ஆடையாக அணிந்துள்ளவர் . மன்னுயிர்களின் பாவத்தைப் போக்குபவர் . திருவெண்ணீறணிந்த திருமேனியர் . பூதங்களாகிய படைகளை உடையவர் . முப்புரி நூலணிந்த மார்பினர் . பூசிக்கும் அடியவர்களால் நறுமணம் கமழும் மலர்கள் இடப்படுகின்ற திருவடிகளையுடையவர் . அத்தகைய பெருமான் பெண்யானை போன்ற நடையுடைய உமாதேவியோடும் அன்பர்களுக்கு அருள்புரிந்து வீற்றிருந்தருளும் இடமாவது திரு அம்பர்மாகாளம் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

படியுள் ஆர் - பூமியிற் பொருந்திய , ( விடை ). பூதம் ஆர் படையினர் - பூதங்களாகிய நிறைந்த சேனைகளையுடையவர் . பூண் அம் நூலர் - பூணநூலர் . கடிகொள் - வாசனையையுடைய . மலர் இடும் அடியினர் - ( பூசிக்கும் அடியவர் ) மலர்களை இடுகின்ற அடியையுடையவர் . பிடி - பெண்யானை . மங்கையோடும் அன்பர்களுக்கு அருள்புரிந்து இருக்கும் இடமாவது அம்பர்மாகாளம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 2

கையின்மா மழுவினர் கடுவிட முண்டவெங் காளகண்டர்
செய்யமா மேனிய ரூனம ருடைதலைப் பலிதிரிவார்
வையமார் பொதுவினின் மறையவர் தொழுதெழ நடமதாடும்
ஐயன்மா தேவியோ டிருப்பிட மம்பர்மா காளந்தானே.

பொழிப்புரை :

சிவபெருமான் கையில் பெருமையான மழுப் படையை உடையவர் . கொடிய விடமுண்டதால் கரிய கண்டத்தை உடையவர் . சிவந்த திருமேனியர் . ஊன்பொருந்திய உடைந்த மண்டையோட்டில் பிச்சையேற்றுத் திரிபவர் . உலகனைத்திற்கும் உரியதான சிற்சபையில் அந்தணர்கள் தொழுது போற்ற நடனமாடும் தலைவர் . அப்பெருமான் உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம் திருஅம்பர்மாகாளம் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

கொடிய விடத்தையுண்டதனால் எய்திய கறுப்பு அமைந்த கழுத்தை உடையவர் . ஊன் அமர் - ஊன் பொருந்திய . உடைதலை - உடைந்த மண்டையோட்டில் . பலிதிரிவார் - பிச்சையேற்பதற்குத் திரிபவர் . வையம் ஆர் பொதுவினில் - உலகமனைத்தினுக்கும் உரியதான சிற்சபையில் ; நடம் அது ஆடும் ஐயன் .

பண் :சாதாரி

பாடல் எண் : 3

பரவின வடியவர் படுதுயர் கெடுப்பவர் பரிவிலார்பால்
கரவினர் கனலன வுருவினர் படுதலைப் பலிகொடேகும்
இரவினர் பகலெரி கானிடை யாடிய வேடர்பூணும்
அரவின ரரிவையோ டிருப்பிட மம்பர்மா காளந்தானே.

பொழிப்புரை :

இறைவர் தம்மை வணங்கிப் போற்றும் அடியவர்கள் படும் துயரத்தைத் தீர்ப்பவர் . தம்மிடத்து அன்பில்லாதவர்கள்பால் தோன்றாத நிலையில் மறைந்திருப்பவர் . நெருப்புப் போன்ற சிவந்த வண்ணமுடையவர் . பிரமகபாலம் ஏந்திப் பிச்சை ஏற்றுத் திரிபவர் . நண்பகல் போல் சுடுகின்ற முதுகாட்டில் இரவில் நெருப்பேந்தி ஆடும் வேடத்தை உடையவர் . பாம்பை அணிந்துள்ளவர் . அப்பெருமான் உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம் திருஅம்பர்மாகாளம் என்னும் திருத் தலமாகும் .

குறிப்புரை :

தம்மைத் துதிக்கும் அடியவர் படும் துயரத்தை அழிப்பவர் . அன்பில்லாரிடத்தே ஒளித்துக்கொள்பவர் , கனல் அன்ன உருவினர் . படுதலை - இறந்தாரது தலையில் . பலி கொடு - பிச்சை யேற்றலை மேற்கொண்டு , ஏகும் - ஊர்தோறும் செல்கின்ற . இரவினர் - இரத்தலையுடையவர் . பகல் எரி - நண்பகலைப்போலச் சுடுகின்ற . முதுகாட்டில் , திருக்கூத்தாடிய திருக்கோலத்தையுடையவர் . அரவத்தைப் பூண்டவர் , அவர் அரிவையோடு இருக்கும் இடம் . அம்பர் மாகாளம் . இரவினர் - பகலெரிகான் - சொன் முரண் .

பண் :சாதாரி

பாடல் எண் : 4

நீற்றினர் நீண்டவார் சடையினர் படையினர் நிமலர்வெள்ளை
ஏற்றின ரெரிபுரி கரத்தினர் புரத்துளா ருயிரைவவ்வும்
கூற்றினர் கொடியிடை முனிவுற நனிவருங் குலவுகங்கை
ஆற்றின ரரிவையோ டிருப்பிட மம்பர்மா காளந்தானே.

பொழிப்புரை :

சிவபெருமான் திருவெண்ணீறணிந்த மேனியர் . நீண்டு தொங்கும் சடையினர் . கரங்களில் பலவகை ஆயுதங்களை ஏந்தியுள்ளவர் . இயல்பாகவே பாசங்களின் நீங்கியவர் . வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவர் . நெருப்பேந்திய கரத்தினர் . திரிபுர அசுரர்களின் உயிரைக் கவரும் எமனாக விளங்கியவர் . கொடிபோன்ற இடையுடைய உமாதேவி கோபம் கொள்ளும்படி கங்கையாகிய நங்கையை மகிழ்வுடன் சடையில் தாங்கியவர் . அப்பெருமான் உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம் திருஅம்பர் மாகாளம் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

வார் - தொங்கும் . ( சடையினர் .) படையினர் - ஆயுதங்களை யேந்தியவர் . நிமலர் - அடைந்தவரது மலம் இல்லையாகச் செய்பவர் . எரிபுரிகரத்தினர் - நெருப்பை விரும்பியேந்தும் கையையுடையவர் , திரிபுரத்து அசுரர்களுக்கு உயிரைக் கவரும் யமனாக இருப்பவர் . கொடி இடை - பூங்கொடிபோலும் இடையையுடைய உமாதேவியார் , முனிவு உற - பிணங்க . நனிவரும் குலவு கங்கை - மிகப் பொருந்திய மகிழ்ச்சியை உடைய கங்கை .

பண் :சாதாரி

பாடல் எண் : 5

புறத்தின ரகத்துளர் போற்றிநின் றழுதெழு மன்பர்சிந்தைத்
திறத்தின ரறிவிலாச் செதுமதித் தக்கன்றன் வேள்விசெற்ற
மறத்தினர் மாதவர் நால்வருக் காலின்கீ ழருள்புரிந்த
அறத்தின ரரிவையோ டிருப்பிட மம்பர்மா காளந்தானே.

பொழிப்புரை :

இறைவர் உள்ளும் , புறமும் நிறைந்தவர் . உள்ளம் உருகிப் போற்றிக் கண்ணீர் மல்கும் அன்பர்களின் சிந்தையில் விளங்குபவர் . அறிவில்லாத , அழிதற்கேதுவாகிய புத்தி படைத்த தக்கனின் வேள்வியை அழித்தவர் . சனகர் , சனந்தரர் , சனாதரர் , சனற்குமாரர் என்ற நான்கு முனிவர்கட்குக் கல்லாலின் கீழிருந்து அறமுரைத்து அருள்புரிந்தவர் . அப்பெருமான் உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம் திருஅம்பர்மாகாளம் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

புறத்தினர் அகத்துளர் - உள்ளும் புறமும் நிறைந்தவர் . ( அன்பர் சிந்தையின் வண்ணம் வருபவர் .) செதுமதி - அழிதற்கேதுவாகிய புத்தி . செற்ற - அழித்த .

பண் :சாதாரி

பாடல் எண் : 6

பழகமா மலர்பறித் திண்டைகொண் டிறைஞ்சுவார் பாற்செறிந்த
குழகனார் குணம்புகழ்ந் தேத்துவா ரவர்பலர் கூடநின்ற
கழகனார் கரியுரித் தாடுகங் காளர்நங் காளியேத்தும்
அழகனா ரரிவையோ டிருப்பிட மம்பர்மா காளந்தானே.

பொழிப்புரை :

இறைவர் , தினம்தோறும் மலர் பறித்து மாலை கட்டி வழிபாடு செய்யும் அடியவர்களைவிட்டு நீங்காத இளையர் . தம் குணங்களைப் புகழ்ந்து போற்றும் அன்பர்கள் கூட்டத்திலிருக்கும் அழகர் . யானைத் தோலை உரித்துப் போர்த்தி ஆடுபவர் . எலும்பு மாலை அணிந்துள்ளவர் . காளியால் வணங்கப்பட்ட அழகர் . அப்பெருமான் உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம் திருஅம்பர் மாகாளம் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

பழக - ஒரு நாளும் இடைவிடாமல் ; எந்நாளும் ( மலர் பறித்து இறைஞ்சுவார் ) ` முட்டாதே தொட்டால் முடிக்க சிவபூசை ; விட்டான் நரகில் விழும் ` என்ற கருத்து . இனிப் பழக என்பதற்கு உண்மைச் சரியை உபாயச்சரியை என வருவனவற்றுள் உபாயங் கூறியதாகக் கூறலும் ஒன்று . அதை ` சரியையோரிரண்டும் தவிராதவர் , கிரியையோரிரண்டுங் கெழுமுற்றவர் ... மரிய தூய மடங்கள் அநந்தமே ` ( பேரூர்ப் புராணம் . திருநகரப்படலம் - 83.) செறிந்த - நீங்காத . தமது குணங்களைப் புகழ்ந்து துதிப்பவர் பலர் கூடும் கழகத்தில் இருப்பவர் என்பது இரண்டாமடியின் கருத்து . கரி உரித்து ஆடு - யானையை யுரித்து அம்மகிழ்ச்சியால் ஆடிய . ( கங்காளர் ) கங்காளம் - முழு எலும்புக் கூடு . திருவிக்கிராமாவதாரத் திருமாலின் செருக் கடக்கிய அறிகுறி . அம்பன் , அம்பாசூரன் என்ற அரக்கரைக் கொன்ற பழிதீரக் காளி பூசித்தமை குறித்து , காளியேத்தும் அழகனார் என்றார் .

பண் :சாதாரி

பாடல் எண் : 7

சங்கவார் குழையினர் தழலன வுருவினர் தமதருளே
எங்குமா யிருந்தவ ரருந்தவ முனிவருக் களித்துகந்தார்
பொங்குமா புனல்பரந் தரிசிலின் வடகரை திருத்தம்பேணி
அங்கமா றோதுவா ரிருப்பிட மம்பர்மா காளந்தானே.

பொழிப்புரை :

இறைவர் சங்கினாலாகிய குழையைக் காதிலணிந்துள்ளவர் . நெருப்புப் போன்ற செந்நிற மேனியர் . தமது அருளால் எங்கும் வியாபித்துள்ளவர் . அரிய தவம் செய்யும் முனிவர்களுக்குத் தம்மையே அளித்து மகிழ்பவர் . அவர் அங்கு , பொங்கும் நீர் பரந்த அரிசிலாற்றினைத் தீர்த்தமாகக் கொண்டு , வேதத்தின் ஆறு அங்கங்களை ஓதுபவராய் வீற்றிருந்தருளும் இடம் ஆற்றின் வடகரையில் உள்ள திருஅம்பர்மாகாளம் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

தமது அருளே எங்குமாய் இருந்தவர் :- ` யாதொரு பொருளை யாவர் இறைஞ்சினும் அதுபோய்முக்கண் , ஆதியை யடையும் அம்மா அங்கதுபோலத் தொல்லை , வேதமதுரைக்க நின்ற வியன்புகழனைத்தும் மேலாம் , நாதனையணுகும் எல்லா நதிகளும் கடல் சென்றென்ன `. ( கந்தபுராணம் உபதேசப்படலம் 17 ) பரந்தரிசிலின் - பரந்த அரிசிலாற்றை , ( திருத்தம் - தீர்த்தம் ) அரிசில் ஆற்றைத் தீர்த்தமாகக் கொண்டு , அதன் வடகரை இருப்பு இடம் அம்பர்மாகாளம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 8

பொருசிலை மதனனைப் பொடிபட விழித்தவர் பொழிலிலங்கைக்
குரிசிலைக் குலவரைக் கீழுற வடர்த்தவர் கோயில்கூறில்
பெருசிலை நலமணி பீலியோ டேலமும் பெருகநுந்தும்
அரிசிலின் வடகரை யழகம ரம்பர்மா காளந்தானே.

பொழிப்புரை :

சிவபெருமான் , போர்புரியும் வில்லுடைய மன்மதனை எரித்துச் சாம்பலாகும்படி நெற்றிக்கண்ணைத் திறந்து விழித்தவர் . சோலைகளையுடைய இலங்கை மன்னனைக் கயிலை மலையின்கீழ் அடர்த்த அப்பெருமான் வீற்றிருந்தருளும் கோயில் , பெரிய மலையினின்றும் நவமணிகளையும் , மயிற்பீலி , ஏலம் முதலியவற்றையும் மிகுதியாக அடித்துக் கொண்டு வரும் அரிசிலாற்றின் வட கரையில் அமைந்துள்ள அழகிய திருஅம்பர்மாகாளம் என்னும் திருத் தலமாகும் .

குறிப்புரை :

பொருசிலை - போர்புரியும் வில் , மதனன் - மன்மதன் , இலங்கைக் குரிசில் - இராவணன் ( குரிசில் இங்கு அரசனென்னும் பொருள் மாத்திரை குறித்தது ) குலவரை - சிறந்தமலை , ( கயிலை ) குலம் - சிறந்த . ` குன்றை நகர்க்குலக் கவியே வல்லான் ` என்ற காஞ்சிப்புராணச் செய்யுளாலும் அறிக . பெரியமலையினின்றும் , நவமணி முதலியவற்றை மிகுதியும் அடித்துக்கொண்டுவரும் அரிசில் ஆறு என்பது மூன்றாம் அடியின் கருத்து .

பண் :சாதாரி

பாடல் எண் : 9

வரியரா வதன்மிசைத் துயின்றவன் றானுமா மலருளானும்
எரியரா வணிகழ லேத்தவொண் ணாவகை யுயர்ந்துபின்னும்
பிரியரா மடியவர்க் கணியராய்ப் பணிவிலா தவருக்கென்றும்
அரியரா யரிவையோ டிருப்பிட மம்பர்மா காளந்தானே.

பொழிப்புரை :

வரிகளையுடைய பாம்புப் படுக்கையில் பள்ளி கொள்ளும் திருமாலும் , தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் உணர்ந்து போற்ற முடியாவண்ணம் எரியுருவாய்ச் சிவபெருமான் உயர்ந்து நின்றவர் . தம்மிடத்து அன்புசெலுத்தும் அடியவர்கட்கு அணியராகியும் , பணிவில்லாதவர்கட்கு அரியராயும் விளங்குபவர் . அவர் உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம் திரு அம்பர்மாகாளம் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

எரியர் ஆ ( க ) - நெருப்பு உருவம் உடையராகி , ( துயின்றவனும் மலருள்ளானும் ; ஏத்த வொண்ணாவகை ) உயர்ந்தும் அன்றிப் பிரியராம் அடியவர்க்கு - தம்மிடத்துப் பிரியமுடையவர்கள் ஆகிய அடியவர்களுக்கு , அணியர் ஆகியும் , பணிதல் இல்லாதவருக்கு அரியர் ஆகியும் , ( அரிவையோடு ) இருப்பது அம்பர்மாகாளம் என்க .

பண் :சாதாரி

பாடல் எண் : 10

சாக்கியக் கயவர்வன் றலைபறிக் கையரும் பொய்யினானூல்
ஆக்கிய மொழியவை பிழையவை யாதலில் வழிபடுவீர்
வீக்கிய வரவுடைக் கச்சையா னிச்சையா னவர்கட்கெல்லாம்
ஆக்கிய வரனுறை யம்பர்மா காளமே யடை மினீரே.

பொழிப்புரை :

புத்தர்களாகிய கீழ்மக்களும் , தலைமயிர் பறிக்கும் இயல்புடைய வஞ்சகர்களாகிய சமணர்களும் , இறைவனை உணராது , பொய்யினால் சிருட்டித்த நூல்களிலுள்ள உபதேசங்கள் குற்றமுடையவை . அவற்றைக் கேட்கவேண்டா . பாம்பைக் கச்சாக அணிந்தவனும் , தன்னிடத்துப் பக்தி செலுத்தும் அடியவர்கட்கு அருள் புரிபவனுமான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருஅம்பர்மாகாளம் என்னும் திருத்தலத்தை அடைந்து வழிபடுவீர்களாக !.

குறிப்புரை :

சாக்கியக்கயவர்கள் - புத்தர்களாகிய கீழ்மக்களும் , ( தலைமயிர் பறித்தலையுடைய ) கையர் - வஞ்சகர்களும் , ( பொய்யினால் சிருட்டித்த நூல்களிலுள்ள ) மொழியவை - உபதேசங்கள் . பிழையவை - குற்றமுடையவை , ( ஆதலால் அவற்றை மெய்யென வழி படுவீர்களாகிய நீங்கள் அவ்வழிபடுதலினின்று விலகி , அம்பர் மாகாளமேயடைமின் ). வீக்கிய அரவுடைக்கச்சையான் - பாம்பைக் கச்சாகக் கட்டியவன் , இச்சையானவர்கட்கு எல்லாம் - தன்னிடத்து விருப்பமுடையவர்களுக்கு எல்லாம் . ஆக்கிய - அருளை வைத்த ( அரன் ,) தலை ( பறி ) - முதலிற் கூறும் சினையறி கிளவி . மொழியவை - அவை பகுதிப்பொருள் விகுதி , பிழைய - பலவின்பால் வினைமுற்று . வை - விகுதி மேல்விகுதி வருவித்துரைக்கப்பட்டது .

பண் :சாதாரி

பாடல் எண் : 11

செம்பொன்மா மணிகொழித் தெழுதிரை வருபுன லரிசில்சூழ்ந்த
அம்பர்மா காளமே கோயிலா வணங்கினோ டிருந்தகோனைக்
கம்பினார் நெடுமதிற் காழியுண் ஞானசம் பந்தன்சொன்ன
நம்பிநாண் மொழிபவர்க் கில்லையாம் வினைநலம் பெறுவர்தாமே.

பொழிப்புரை :

செம்பொன்னையும் , இரத்தினங்களையும் அடித்துக் கொண்டு அலை வரும் நீரையுடைய அரிசிலாறு சூழ்ந்த திருஅம்பர்மாகாளம் என்னும் திருத்தலத்தில் கோயில் கொண்டுள்ள , உமாதேவியோடு வீற்றிருந்தருளும் சிவபெருமானைப் போற்றி , சங்கு , சுட்ட சுண்ணாம்பு இவற்றால் சுதை பூசப்பட்ட நெடிய மதில்களையுடைய சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தை விரும்பி , நாள்தோறும் பாடுபவர்களுக்கு வினை இல்லை . அவர்கள் எல்லா நலன்களும் பெறுவர் . இது உறுதி .

குறிப்புரை :

( செம்பொன்னையும் இரத்தினங்களையும் கொழித்துக் கிளம்பி அலைவரும் நீரையுடைய அரிசிலாறு சூழ்ந்த அம்பர் மாகாளமே கோயிலாக அணங்கினோடு இருந்த ,) கோனை - தலைவனை , கம்பின் ஆர் நெடுமதில் - சங்கு , சுட்ட சுண்ணாம்பினால் சுதை பூசப்பட்ட நெடிய மதில் . கம்பு - சுண்ணாம்புக்கு ஆனது கருவியாகுபெயர் , சொன்ன - சொன்னவற்றை , ( வினையாலணையும் பெயர் ,) நம்பி - விரும்பி , நம்பு என்பது உரிச்சொல் , நாள்மொழிபவர் - நாள்தோறும் பாடுபவர்களுக்கு , வினை இல்லையாம் , நலம் பெறுவர் .
சிற்பி