திருவெங்குரு


பண் :சாதாரி

பாடல் எண் : 1

விண்ணவர் தொழுதெழு வெங்குரு மேவிய
சுண்ணவெண் பொடியணி வீரே
சுண்ணவெண் பொடியணி வீரும தொழுகழல்
எண்ணவல் லாரிட ரிலரே.

பொழிப்புரை :

தேவர்கள் தொழுது போற்றுகின்ற திருவெங்குரு என்னும் திருத்தலத்தை விரும்பி வீற்றிருந்தருளும் , சுண்ணம் போன்ற வெண்மையான திருநீற்றினை அணிந்துள்ள சிவபெருமானே ! சுண்ணம் போன்ற வெண்மையான திருநீற்றினை அணியும் பெருமானாகிய உம் தொழத்தக்க திருவடிகளைத் தியானிக்க வல்லவர் துன்பம் அற்றவர்கள் ஆவர் .

குறிப்புரை :

தொழுது எழும் - தொழாநின்று துயில் எழும் , சுண்ண வெண் பொடி - சுண்ணம் போன்றதாகிய வெள்ளிய திருநீறு . வெங்குரு மேவிய பொடியணிவீரேயென்க . ` நீறணிந்த கோலம் நெஞ்சம் பிணிக்கும் எழிலுடைமையான் , அக்கோலம் தொழுது எழுவார் உள்ளத்து நீங்காது நிற்றலான் ஆண்டுள்ள வினை நீறு ஆம் ` என்னும் பேராசிரியர் உரை இங்குக் கருதத்தக்கது . தொழுகழல் - தொழத்தகும் திருவடி , எண்ணுதல் - தியானித்தல் , ஆறுகோடி மாயாசத்திகள் வேறு வேறு தம் மாயைகள் தொடங்கித் தடுத்தலின் எண்ணுதலும் அரிதென்பர் எண்ணவல்லார் , உம - உம்முடைய ( கழல்கள் ).

பண் :சாதாரி

பாடல் எண் : 2

வேதியர் தொழுதெழு வெங்குரு மேவிய
ஆதிய வருமறை யீரே
ஆதிய வருமறை யீருமை யலர்கொடு
ஓதிய ருணர்வுடை யோரே.

பொழிப்புரை :

நால்வேதங்களையும் ஐயந்திரிபறக் கற்ற அந்தணர்கள் வழிபடுகின்ற திருவெங்குரு என்னும் திருத்தலத்தை விரும்பி வீற்றிருந்தருளும் , முதன்மையான வேதத்தின் பொருளானவரே ! முதன்மையான வேதத்தின் பொருளானவரான உம்மை மலர்கள் கொண்டு பூசித்துத் , தோத்திரம் செய்பவர்கள் சிவஞானம் உடையவர்கள் ஆவர் .

குறிப்புரை :

ஆதிய அருமறையீர் - முதன்மையான வேதத்தின் பொருளாய் உள்ளீர் , வேதம் பிரபல சுருதி எனப்படுதலின் முதன்மையானது என்னப் பட்டது . இனி ஆதியென்பதற்குப் பழமையான எனலும் ஆம் . அலர் கொடு - மலர்கள் கொண்டு ( பூசித்து ) ஓதியர் - தோத்திரம் செய்பவர்கள் , உணர்வு உடையோர் - சிவஞானம் உடையவராவார் . இனி ஓதி என்பதற்கு அறிவு எனவும் பொருள் உண்மையால் பூசித்து உணர்பவர் தாம் உணர்வுடையோர் , அல்லாதார் உணர்விலிகளே எனலுமாம் . அது ` உடையரெனப்படுவது ஊக்கம் அஃதிலார் உடையது உடைய ரோமற்று ` ( குறள் . 591) என்புழிப் போல .

பண் :சாதாரி

பாடல் எண் : 3

விளங்குதண் பொழிலணி வெங்குருமேவிய
இளம்பிறை யணிசடை யீரே
இளம்பிறை யணிசடை யீரும திணையடி
உளங்கொள வுறுபிணி யிலரே.

பொழிப்புரை :

பெருமையுடன் விளங்குகின்ற குளிர்ந்த சோலைகளையுடைய அழகிய திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் , இளம்பிறைச்சந்திரனை அணிந்த சடையினையுடைய சிவபெருமானே ! இளம்பிறைச் சந்திரனைச் சடையில் அணிந்துள்ள உம்முடைய இரண்டு திருவடிகளையும் மனத்தால் நினைத்துத் தியானிப்பவர்கள் உற்றபிணிகள் இல்லாதவராவர் .

குறிப்புரை :

விளங்கு - மூவுலகிலும் விளங்கும் பெருமைவாய்ந்த , வெங்குரு என்க . விளங்கும் பொழில் எனக்கொள்ளின் , செழிப்புடைய சோலை என்க . என்றும் ஓர் பெற்றியாய்க் கலைவளரப் பெறாமையால் , இளம்பிறையென்னப்பட்டது , ` முற்றாத பான் மதியஞ் சூடினானே ` என்றார் அப்பர் மூர்த்திகளும் . சடையீராகிய உமது இரண்டு திருவடிகளையும் நினைக்க உற்ற பிணி நீங்கப்பெறுவார்கள் . ` மருந்தாய்ப் பிணிதீர்க்க வல்ல அடி ` ( தி .6. ப .6. பா .9.) என்ற கருத்து .

பண் :சாதாரி

பாடல் எண் : 4

விண்டலர் பொழிலணி வெங்குரு மேவிய
வண்டமர் வளர்சடை யீரே
வண்டமர் வளர்சடை யீருமை வாழ்த்துமத்
தொண்டர்க டுயர்பிணி யிலரே.

பொழிப்புரை :

முறுக்குடைந்து விரிகின்ற மலர்களையுடைய சோலைகளால் அழகுடன் திகழும் திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் , வண்டுகள் விரும்பும் நீண்ட சடையுடைய சிவபெருமானே ! வண்டுகள் விரும்பும் சடையினை யுடைய பெருமானாகிய உம்மை வாழ்த்தும் சிறப்புடைய தொண்டர்கள் துயரும் , பிணியும் அற்றவர்கள் ஆவர் .

குறிப்புரை :

விண்டு அலர் - முறுக்குடைந்து மலர்கின்ற ( பொழில் ), வண்டு அமர்சடை - வண்டு விரும்பும் சடை , எனவே மலர்மாலை யணிந்த சடையென்பது பெறப் பட்டது . அமர்தல் - விரும்புதல் , ( துயர்பிணி , இலர் ) துயர் - உள்ளம் பற்றியது , பிணி - உடலம் பற்றியது ) இலர் - இல்லாதவர் ஆவார் .

பண் :சாதாரி

பாடல் எண் : 5

மிக்கவர் தொழுதெழு வெங்குரு மேவிய
அக்கினொ டரவசைத் தீரே
அக்கினொ டரவசைத் தீரும தடியிணை
தக்கவ ருறுவது தவமே.

பொழிப்புரை :

அன்பின் மிக்கார் தொழுது எழுகின்ற திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , அக்குப்பாசியோடு பாம்பையும் அணிந்துள்ள சிவபெருமானே ! அக்குப்பாசியோடு பாம்பையும் அணிந்துள்ள பெருமானாகிய உம் இணையடிகளைத் துதிக்கும் தகுதிபெற்ற அடியவர்கள் பெறுவது சிறந்த தவத்தின் பயனாகும் .

குறிப்புரை :

மிக்கவர் - அன்பின் மிக்கோர் , அக்கினொடு - அக்குப் பாசியோடு , அரவு - பாம்பு . அசைத்தீரே - இடுப்பிற் கட்டியுள்ளீர் , தக்கவர் - வழிபடும் அடியவர் , ( உமது ) அடியிணை உறுவது தவமே - திருவடிகளைப் போற்றுவதே சிறந்த தவத்தின் பயனாம் , தவம் என்பது அதன்பயனைக் குறித்தது . தவத்தின் பயன் அது என்பதனை ` எந்த மாதவம் செய்தனை நெஞ்சமே , பந்தம் வீடு அவை ஆயபராபரன் , அந்தமில் புகழ் ஆரூர் அரனெறி , சிந்தையுள்ளும் சிரத்துளும் தங்கவே .` என்னும் திருக்குறுந்தொகை யானும் உணர்க .

பண் :சாதாரி

பாடல் எண் : 6

வெந்தவெண் பொடியணி வெங்குரு மேவிய
அந்தமில் பெருமையி னீரே
அந்தமில் பெருமையி னீருமை யலர்கொடு
சிந்தைசெய் வோர்வினை சிதைவே.

பொழிப்புரை :

சுடப்பட்ட வெண்ணிறத் திருவெண்ணீற்றினை அணிந்து , திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற அழிவில்லாத புகழுடைய சிவபெருமானே ! அழிதல் இல்லாத புகழுடைய உம்மை மலர்கள் கொண்டு வழிபட்டுத் தியானிப்பவர்களின் வினைகள் சிதைந்து போகும் .

குறிப்புரை :

வெந்த - சுடப்பட்ட , வெண்பொடி - வெண்மையான திருநீறு , அந்தம் - முடிவு , அழிவு . நீறு அணி அந்தம் இல் பெருமையினீர் - திரு நீற்றையணிந்து , அதனால்தாம் அழிவில்லாதவன் எனக்காட்டும் பெருமையையுடையீர் , ` சிவனவன் திரடோண்மேல் , நீறு நின்றது கண்டனை ` என்னும் திருவாசகமும் இக்கருத்தாதல் காண்க .

பண் :சாதாரி

பாடல் எண் : 7

விழமல்கு பொழிலணி வெங்குரு மேவிய
அழன்மல்கு மங்கையி னீரே
அழன்மல்கு மங்கையி னீருமை யலர்கொடு
தொழவல்லல் கெடுவது துணிவே.

பொழிப்புரை :

திருவிழாக்கள் நிறைந்ததும் , சோலைகள் அழகு செய்வதுமான திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் நெருப்பேந்திய அழகிய திருக்கரத்தையுடைய சிவபெருமானே ! நெருப்பேந்திய அழகிய திருக்கரமுடைய உம்மை மலர்கள் கொண்டு வழிபடுபவர்களின் துன்பங்கள் கெடுவது நிச்சயம் .

குறிப்புரை :

விழ - விழா ( விழவு ) மல்கும் - தங்கிய , உம்மை அலர் கொடு தொழ அல்லல் கெடுவது துணிவு - நிச்சயம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 8

வித்தக மறையவர் வெங்குரு மேவிய
மத்தநன் மலர்புனை வீரே
மத்தநன் மலர்புனை வீரும தடிதொழுஞ்
சித்தம துடையவர் திருவே.

பொழிப்புரை :

சாமர்த்தியமுடைய , நான்மறைகளைக் கற்றுவல்ல அந்தணர்கள் நிறைந்த திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , ஊமத்த நன்மலரினைச் சூடியுள்ள , சிவ பெருமானே ! ஊமத்தம் மலர் சூடிய உம் திருவடிகளைத் தொழும் சித்தமுடையவர்கள் எல்லாச் செல்வங்களும் பெற்றவர் ஆவார் .

குறிப்புரை :

வித்தகம் - சதுரப்பாடு ( சாமர்த்தியம் ) மறையவர்க்குச் சதுரப் பாடாவது - பல கடவுளர்க்குத் தலைமை கூறும் அதன் பொருளை நடு நிலைமையொடு உணர்ந்து , உண்மையிது உபசாரம் இது என உணரும் வன்மை . மத்த மலர் - பொன்னூமத்த மலர் . சித்தம் உடையவர் திரு - என்றது மோட்ச சாம்ராச்சியத்தை ` செல்வன் கழலேத்தும் செல்வம் செல்வமே ` என்றவாறு. இப்பாசுரத்தில் ஏனைய பதிகங்களிற் கூறு முறை இல்லை.

பண் :சாதாரி

பாடல் எண் : 9

மேலவர் தொழுதெழு வெங்குரு மேவிய
ஆலநன் மணிமிடற் றீரே
ஆலநன் மணிமிடற் றீரும தடிதொழுஞ்
சீலம துடையவர் திருவே.

பொழிப்புரை :

மேலான பக்தர்கள் தொழுதெழுகின்ற திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , விடம் தங்கிய அழகிய கண்டத்தை உடைய சிவபெருமானே ! விடம் தங்கிய அழகிய கண்டத்தையுடையவராகிய உம் திருவடிகளைத் தொழுகின்ற நல்லொழுக்கம் உடையவர்களே பேரின்பம் பெறுவர் .

குறிப்புரை :

ஆலம் நன்மணிமிடறு - விடம் தங்கிய நல்ல காள கண்டம் , சீலம் வழிபாட்டு முறை . அது ` பெரும்புலர்காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்தராகி ` ( தி .4. ப .31. பா .4.) எனும் திருநேரிசையிற் கூறியது முதலியன. இப்பாசுரத்தில் ஏனைய பதிகங்களிற் கூறு முறை இல்லை.

பண் :சாதாரி

பாடல் எண் : 10

விரைமல்கு பொழிலணி வெங்குரு மேவிய
அரைமல்கு புலியத ளீரே
அரைமல்கு புலியத ளீரும தடியிணை
உரைமல்கு புகழவ ருயர்வே.

பொழிப்புரை :

நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த அழகிய திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , அரையில் கட்டிய புலித்தோல் ஆடையையுடைய சிவபெருமானே ! அரையில் கட்டிய புலித்தோலாடையையுடைய பெருமானாகிய உம் இணையடிகளை நிரம்பிய சொற்களால் புகழ்பவர்களே உயர்வு அடைவர் .

குறிப்புரை :

அரைமல்கு புலியதளீரே - அரையிற் கட்டிய புலித்தோலை உடையீரே . மல்கு - பொருந்திய , இங்குக் கட்டிய என்னும் பொருளில் வந்தது . உரைமல்கு புகழவர் - வார்த்தையால் உம்மை நிரம்பப் புகழ்தலையுடையவர் . அவர் உயர்வே உண்மையான உயர்வாகும் . இப்பாசுரத்தில் ஏனைய பதிகங்களிற் கூறு முறை இல்லை.

பண் :சாதாரி

பாடல் எண் : 11

பாடல் கிடைக்கவில்லை

பொழிப்புரை :

குறிப்புரை :

சிற்பி