திருவின்னம்பர்


பண் :சாதாரி

பாடல் எண் : 1

எண்டிசைக் கும்புகழி ன்னம்பர் மேவிய
வண்டிசைக் குஞ்சடை யீரே
வண்டிசைக் குஞ்சடை யீருமை வாழ்த்துவார்
தொண்டிசைக் குந்தொழி லோரே.

பொழிப்புரை :

எட்டுத் திசைகளிலும் புகழ்பரப்பும் திருஇன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , வண்டு இசைக்கும் மலர்மாலை அணிந்த சடையுடைய சிவபெருமானே ! வண்டிசைக்கும் மலர்மாலை அணிந்துள்ள சடையுடைய உம்மை வாழ்த்தும் அடியவர்கள் தொண்டு நெறியில் சிறப்புடன் நின்று மேம்படுவரே .

குறிப்புரை :

எண்டிசைக்கும் - எட்டுத் திக்குக்களிலும் . புகழ் இன்னம்பர் - புகழைப் பரப்பிய திரு இன்னம்பர் , திசைக்கும் உருபு மயக்கம் . ( வண்டு ) இசைக்கும் - இசைபாடும் , இசைக்கும் பெயர் அடியாகப் பிறந்த பெயரெச்சம் , நூல் செய்யலுற்றேன் என்ற பொருளில் ` நூற்கலுற்றேன் ` ( கம்ப . அவையடக்கம் . 2) என்று கம்பர் கூறியதுபோல் . வண்டிசைக்கும் சடையீர் என்றது மலர் மாலையணிந்த சடையீர் என்ற படி . உ ( ம் ) மை வாழ்த்துவார் , ( அரிபிரமனாதியருக்குத் ) தொண்டு இசைக்கும் - இன்னது செய்க என ஏவல் இடும் . தொழிலோர் - பதவியை உடையவராவர் . தொண்டு - அடிமை . தொழில் - பதவியென்னும் பொருளில் காரணம் காரியமாக உபசரிக்கப்பட்டது ` தொழப்படும் தேவர் தம்மாற் றொழுவிக்கும் தன் தொண்டரையே ` என்ற திருவிருத்தத் ( தி .4. ப .112. பா .5.) தின் கருத்தும் இங்கே ஒப்பிடத் தக்கது .

பண் :சாதாரி

பாடல் எண் : 2

யாழ்நரம் பின்னிசை யின்னம்பர் மேவிய
தாழ்தரு சடைமுடி யீரே
தாழ்தரு சடைமுடி யீருமைச் சார்பவர்
ஆழ்துய ரருவினை யிலரே.

பொழிப்புரை :

யாழின் இனிய இசையை உடைய திருஇன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற நீண்ட தாழ்ந்த சடைமுடியுடைய சிவபெருமானே ! நீண்டு தாழ்ந்த சடைமுடியுடைய உம்மைச் சார்ந்து பக்தியுடன் வழிபடுபவர்கள் பெருந்துன்பத்திலிருந்தும் , அதற்குக் காரணமான அரிய வினையிலிருந்தும் நீங்கியவராவர் .

குறிப்புரை :

யாழின் நரம்பிசை முதலிய பலவாத்திய ஓசைகளை யுடைய திருவின்னம்பர் என்பது முதலடியின் கருத்து . காண்க : ` குழலொலி யாழொலிகூத்தொலியேத்தொலி யெங்கும் குழாம் பெருகி .` ( தி .9 திருப்பல்லாண்டு . 11) சார்பவர் - சார்புணர்ந்து சார்புகெடச் சார்பவர் , பெருந்துயர் நேரினும் அதினின்றும் நீங்கப்பெறுதலோடு அதற்குக் காரணமாகிய அரிய வினையும் இல்லாதவர் ஆவார்கள் . ஆழ்துயர் - பெருந்துயர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 3

இளமதி நுதலியொ டின்னம்பர் மேவிய
வளமதி வளர்சடை யீரே
வளமதி வளர்சடை யீருமை வாழ்த்துவார்
உளமதி மிகவுடை யோரே.

பொழிப்புரை :

பிறைச்சந்திரனைப் போன்ற நெற்றியையுடைய உமாதேவியோடு திருஇன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , குளிர்ச்சிபொருந்திய சந்திரனை அணிந்த நீண்ட சடையுடைய சிவபெருமானே ! குளிர்ச்சி பொருந்திய சந்திரனை அணிந்த நீண்ட சடையுடைய உம்மை வாயால் வாழ்த்தி வழிபடுவோர் பேரறிவுடையவராவர் .

குறிப்புரை :

இளமதி - பிறைச்சந்திரன் போன்ற . நுதலி - நெற்றியை உடைய அம்பிகை . வளம் மதி - தன்னொளி , அமுத கிரணமாயிருத்தல் , பயிர் பச்சைகளை வளர்த்தல் , கடல் கொந்தளிப்பித்தல் முதலிய வளங்களையுடைய மதி . வளர் - தங்குகின்ற என்னும் பொருள் தரும் . உளம் - மனம் . மதிமிக உடையோர் - பேரறிவுடையவராவர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 4

இடிகுர லிசைமுர லின்னம்பர் மேவிய
கடிகமழ் சடைமுடி யீரே
கடிகமழ் சடைமுடி யீரும கழறொழும்
அடியவ ரருவினை யிலரே.

பொழிப்புரை :

இடிக்குரல் போன்று ஒலிக்கும் முரசு , முழவு போன்ற வாத்தியங்கள் ஒலிக்க , திரு இன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , நறுமணம் கமழும் சடைமுடி உடைய சிவபெருமானே ! நறுமணம் கமழும் சடைமுடியுடைய உம் திருவடிகளைத் தொழும் அடியவர்கள் வினைநீக்கம் பெற்றவராவர் .

குறிப்புரை :

இடிகுரல் இசைமுரல் - இடியின் குரல்போலும் முழவம் முதலிய வாத்திய ஓசை ஒலிக்கும் . ` முழவதிர மழையென்றஞ்சிச் சில மந்தியலமந்து மரமேறி முகில் பார்க்கும் திருவையாறே ` ( தி .1. ப .130. பா .1.) என முன்னும் வந்தமை காண்க . கடி கமழ் - வாசனை வீசும் ; சடைமுடி .

பண் :சாதாரி

பாடல் எண் : 5

இமையவர் தொழுதெழு மின்னம்பர் மேவிய
உமையொரு கூறுடை யீரே
உமையொரு கூறுடை யீருமை யுள்குவார்
அமைகில ராகில ரன்பே.

பொழிப்புரை :

உமையைத் திருமேனியின் ஓர் பாகத்திற் கொண்டவரே , தேவர்கள் தொழுது போற்றும் திரு இன்னம்பரில் எழுந்தருள்பவரே , உமை பாகராகிய உம்மை உள்ளத்தால் நினைந்து ஏத்துபவர் அன்பு அமையப் பெறாதவர் ஆகார் .

குறிப்புரை :

இமையவர் - தேவர் , கண்ணிமையாதவர் , இன்னம்பர் மேவிய உடையீர் என்க . உ ( ம் ) மை நினைப்போர் , பேரன்பு படைத்தவர் ஆவர் . அன்பு அமைகிலர் - அன்பு அமையமாட்டாதவர் . ஆகார் எனவே அன்பு அமையப்பெற்றவர் ஆவர் என்றதாம் . இரண்டு எதிர் மறை ஓர் உடம்பாட்டை வலியுறுத்திற்று .

பண் :சாதாரி

பாடல் எண் : 6

எண்ணரும் புகழுடை யின்னம்பர் மேவிய
தண்ணருஞ் சடைமுடி யீரே
தண்ணருஞ் சடைமுடி யீருமைச் சார்பவர்
விண்ணவ ரடைவுடை யோரே.

பொழிப்புரை :

நினைத்தற்கரிய அளவில்லாத பெரும்புகழை யுடைய திருஇன்னம்பர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற , குளிர்ந்த சடைமுடியுடைய சிவபெருமானே ! குளிர்ந்த சடைமுடியுடைய உம்மைச் சார்ந்து வழிபடுபவர்கள் தேவர்களுக்குரிய சிறப்பினை அடைவர் .

குறிப்புரை :

எண் அரும் புகழ் உடை - நினைத்தற்கரிய அளவிலாத பெரும் புகழை உடைய இன்னம்பர் , தண் அரு - அரிய குளிர்ச்சியை உடைய , சடைமுடியீரே , கங்கைநீரும் , சந்திரனும் தங்குதலால் அரிய குளிர்ச்சியுடையதாயிற்று . உம்மைச் சார்வர் . விண்ணவர் அடைவு உடையோர் - ஏனைத் தேவர்க்குத் தாம் சார்பாகும் தன்மையுடைய வராவார் . அடைவு - ( சார்பாக ) அடைதல் , சார்பு - பற்றுக்கோடு .

பண் :சாதாரி

பாடல் எண் : 7

எழிறிக ழும்பொழி லின்னம்பர் மேவிய
நிழறிகழ் மேனியி னீரே
நிழறிகழ் மேனியி னீருமை நினைபவர்
குழறிய கொடுவினை யிலரே.

பொழிப்புரை :

அழகுடன் விளங்கும் சோலைகள் சூழ்ந்த திருஇன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , ஒளி விளங்கும் திருமேனியுடைய சிவபெருமானே ! ஒளி விளங்கும் திருமேனியுடைய உம்மை நினைப்பவர்களுடைய , வாட்டும் குழம்பிய கொடுவினை கெட்டழியும் .

குறிப்புரை :

எழில் திகழ் பொழில் - அழகால் விளங்கும் சோலை . பசுமை நிறத்தாலும் , பல நிற அரும்பு பூ , காய்கனி இவற்றின் தோற்றத்தாலும் எய்தும் அழகு . நிழல்திகழ் - ஒளியால் விளங்கும் மேனியினீர் , உமை நினைபவர் குழறிய இப்பொருட்டு ஆதலை , ` கடுஅடுத்த நீர்கொடுவா காடிதாவென்று நடுநடுத்து நாநடுங்கா முன்னம் - பொடியடுத்த பாழ்க்கோட்டம் சேராமுன் பன்மாடத் தென்குடந்தைக் கீழ்க்கோட்டம் செப்பிக் கிட ` எனும் பதினொன்றாந் திருமுறையாலறிக .

பண் :சாதாரி

பாடல் எண் : 8

ஏத்தரும் புகழணி யின்னம்பர் மேவிய
தூர்த்தனைத் தொலைவுசெய் தீரே
தூர்த்தனைத் தொலைவுசெய் தீருமைத் தொழுபவர்
கூர்த்தநற் குணமுடை யோரே.

பொழிப்புரை :

போற்றுதற்கு அரிய புகழுடைய அழகிய திருஇன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவரும் , தூர்த்தனான இராவணனை அடர்த்தவருமான சிவபெருமானே ! தூர்த்தனான இராவணனை அடர்த்த உம்மைத் தொழுபவர் பேரறிவும் , நற்குணமும் உடையவராவர் .

குறிப்புரை :

ஏத்த அரும் - துதித்தற்கரிய , புகழ் . துர்த்தன் - பரதார விருப்பினனாகிய இராவணன் , தொலைவு செய்தீர் - வலிமையழியச் செய்தீர் , கூர்த்த - மிகுத்த , நற்குணம் - சத்துவகுணம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 9

இயலுளோர் தொழுதெழு மின்னம்பர் மேவிய
அயனுமா லறிவரி யீரே
அயனுமா லறிவரி யீரும தடிதொழும்
இயலுளார் மறுபிறப் பிலரே.

பொழிப்புரை :

நல்லியல்புடையோர் தொழுது எழுகின்ற திருஇன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் சிவபெருமானே ! பிரமனும் , திருமாலும் அறிவதற்கரிய உம் திருவடிகளைத் தொழும் இயல்பு உடையவர்கட்கு மறுபிறப்பு இல்லை .

குறிப்புரை :

இயல்உளர் - சமய விசேடாதி தீக்கை பெற்ற தகுதி யுடைய அடியார் , மறுபிறப்பு இலர் ஆவர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 10

ஏரமர் பொழிலணி யின்னம்பர் மேவிய
தேரமண் சிதைவுசெய் தீரே
தேரமண் சிதைவுசெய் தீருமைச் சேர்பவர்
ஆர்துய ரருவினை யிலரே.

பொழிப்புரை :

ஏர் எனப்படும் திருத்தலத்திற்கு அருகிலுள்ள சோலைகள் சூழ்ந்த அழகிய திரு இன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றவராய் , சமண , புத்த நெறிகளிலுள்ள குறைகளைக் காட்டித் தாழ்ச்சியுறச் செய்த சிவபெருமானே ! சமண , புத்த நெறிகள் தாழ்வடையும்படி செய்த உம் திருவடிகளைப் போற்றி வணங்குபவர்கட்குத் துன்பமும் , அதற்குக் காரணமான தீவினையும் இல்லை .

குறிப்புரை :

ஏர் அமர் - அழகு பொருந்திய என்பதினும் ஏர் என்னும் தலத்துக்கு அணியதாய்ப் பொருந்திய என்பது சிறக்கும் , ஏர் - இன்னம்பருக்கு அருகிலுள்ள ஒரு வைப்புத்தலம் , அது ` ஏரார் இன்னம்பரார் ,` என்னும் திருத்தாண்டகத்தால் அறியத்தகும் . அத்தலம் ஏரகரம் என இப்போது வழங்கும் , திருஏரகம் என்னும் சாமிமலையும் இதற்கு அணித்து , ஆர்தரு - கட்டிய . வினை - அரியவினை , துயர்விக்கும் வினை என இயையும் , தேரர் அமணர் என்பது தேரமண் எனமரீயது .

பண் :சாதாரி

பாடல் எண் : 11

ஏடமர் பொழிலணி யின்னம்பர் ரீசனை
நாடமர் ஞானசம் பந்தன்
நாடமர் ஞானசம் பந்தன நற்றமிழ்
பாடவல் லார்பழி யிலரே.

பொழிப்புரை :

இதழ்களையுடைய மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த அழகிய திருஇன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானைப் போற்றி , தேசமெல்லாம் விரும்புகின்ற ஞானசம்பந்தன் அருளிய நற்றமிழாலான இத்திருப் பதிகத்தை ஓதவல்லவர்கள் பழியற்றவர் ஆவர் .

குறிப்புரை :

ஏடு - இதழ் , மலருக்கானமையின் சினையாகுபெயர் , தேசமெல்லாம் விரும்பும் ஞானசம்பந்தன் , நல்தமிழ்பாடவல்லார் பழியிலர் ஆவர் .
சிற்பி