திருநெல்வெண்ணெய்


பண் :சாதாரி

பாடல் எண் : 1

நல்வெணெய் விழுதுபெய் தாடுதிர் நாடொறும்
நெல்வெணெய் மேவிய நீரே
நெல்வெணெய் மேவிய நீருமை நாடொறும்
சொல்வண மிடுவது சொல்லே.

பொழிப்புரை :

நல்ல வெண்ணெய் விழுதாகப் பெய்து செய்யப்பட்ட திருமஞ்சனம் நாள்தோறும் கொண்டருளுவீர் . திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் சிவபெருமானே ! திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் உம்மைத் தினந்தோறும் துதித்துச் சொல்லப்படுகின்ற சொற்களே பயன்தரும் சொற்களாகும் .

குறிப்புரை :

நல்வெ ( ண் ) ணெய் விழுது - நல்ல வெண்ணெயை உருக்கிய நெய்யை . பெய்து - ஏனைய பால் , தயிர் , கோமயம் , கோசலம் என்பவற்றோடு நாள்தோறும் பஞ்சகவ்யமாகக் கூட்டி ` நாள்தோறும் ஆடுதிர் - திருமஞ்சனம் கொண்டருள்வீர் , உம்மை நாள்தோறும் துதிக்கும் சொற்களே , பயன்தரும் சொல்லெனப்படுவன . வண்ணம் - அழகு , சொல்லுக்கு அழகாவது , சுருங்கச் சொல்லல் முதலிய பத்தும் . சொல் இடுவது - துதிப்பது , புகழ்வது , வாழ்த்துவது முதலியன . ` தீவண்ணர் திறம்ஒருகாற் பேசா ராகில் ` ` பெரும் பற்றப் புலியூ ரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே .` ` வணங்கத் தலைவைத்து , வார்கழல் வாய் வாழ்த்தவைத்து ` என்பன இங்குக் கொள்ளத்தக்கன .

பண் :சாதாரி

பாடல் எண் : 2

நிச்சலு மடியவர் தொழுதெழு நெல்வெணெய்க்
கச்சிள வரவசைத் தீரே
கச்சிள வரவசைத் தீருமைக் காண்பவர்
அச்சமொ டருவினை யிலரே.

பொழிப்புரை :

நாள்தோறும் அடியவர்கள் தொழுது எழுகின்ற , நெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , இளமையான பாம்பைக் கச்சாக இடையில் அணிந்துள்ள சிவ பெருமானே ! அவ்வாறு கச்சாக இளம் பாம்பை அணிந்துள்ள உம்மைத் தரிசிப்பவரே துன்பங்களைக் கண்டு அச்சப்படாதவர் , கொடிய வினைகளும் இல்லாதவர் .

குறிப்புரை :

நிச்சல் - நித்தல் ; நித்தம் நித்தல் என்பதன் போலி , இளஅரவு - இளம்பாம்பைக் கச்சு ( ஆக ). அசைத்தீரே - கட்டியருளினீரே . என்றும் இளமையுடையவன் ஆகையால் அவனைச்சார்ந்தனவும் இளமையுடையனவே ஆயின , ` இளநாகமோடு ` என முன்னும் வந்தமை காண்க . ( தி .1. ப .1. பா .2.) காண்பவர் - தரிசிப்பவர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 3

நிரைவிரி தொல்புகழ் நெல்வெணெய் மேவிய
அரைவிரி கோவணத் தீரே
அரைவிரி கோவணத் தீருமை யலர்கொடு
உரைவிரிப் போருயர்ந் தோரே.

பொழிப்புரை :

வரிசையாக உலகெங்கும் பரந்த தொன்மையான புகழினையுடைய திருநெல்வெண்ணெயில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , இடையில் விரித்துக் கட்டிய கோவணத்தையுடைய சிவ பெருமானே ! அவ்வாறு கோவணத்தை விரித்துக் கட்டிய உம்மை மலர்களைக் கொண்டு பூசித்து , உமது புகழைப் போற்றிப் பாடுபவர்கள் உயர்ந்தவர்கள் ஆவர் .

குறிப்புரை :

நிரை - வரிசை வரிசையாக , விரி - உலகமெங்கும் விரிந்த , ( தொல் - புகழ் ) அரையின் விரித்துக் கட்டிய கோவணத்தையுடையீரே . உம்மை அலர்கொடு - மலர் முதலியவற்றால் ( பூசித்து ) உமது புகழை விரிவாகத்துதித்துப்பாடுவோர் உயர்ந்தோர் ஆவர் . பூசித்து என ஒரு சொல் வருவிக்க .

பண் :சாதாரி

பாடல் எண் : 4

நீர்மல்கு தொல்புகழ் நெல்வெணெய் மேவிய
ஊர்மல்கி யுறையவல் லீரே
ஊர்மல்கி யுறையவல் லீருமை யுள்குதல்
பார்மல்கு புகழவர் பண்பே.

பொழிப்புரை :

நீர்வளம்மிக்க தொன்மையான புகழ் பொருந்திய திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தை விரும்பி அவ்வூரில் நிலையாக வீற்றிருந்தருளும் சிவபெருமானே ! அவ்வாறு அவ்வூரில் நிலையாக வீற்றிருந்தருளுகின்ற உம்மை எப்போதும் இடையறாது தியானித்தலே உலகின் உயர்ந்த புகழையுடைய சிவஞானிகள் இயல்பாகும் .

குறிப்புரை :

நீர்மல்கு - நீர்வளம்பொருந்திய , நெல்வெண்ணெய் மேவிய ஊர் - நெல்வெண்ணெயென்னும் பெயர் பொருந்திய ஊரில் . மல்கி - நிலைபெற்று , உறையவல்லீர் - வாழ்தலையுடையீர் , உம்மை எப்பொழுதும் ஒழியாது நினைத்திருத்தல் உலகில் உயர்ந்த புகழையுடைய சிவஞானிகளின் இயல்பாம் . ` இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார் பெருமை பிறங்கிற் றுலகு ` ( குறள் - 23 ) என்புழியும் இவ்வாறு வருதல் காண்க .

பண் :சாதாரி

பாடல் எண் : 5

நீடிளம் பொழிலணி நெல்வெணெய் மேவிய
ஆடிளம் பாப்பசைத் தீரே
ஆடிளம் பாப்பசைத் தீருமை யன்பொடு
பாடுள முடையவர் பண்பே.

பொழிப்புரை :

நீண்ட இளமரங்களையுடைய சோலைகள் சூழ்ந்த அழகிய திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற , ஆடுகின்ற இளம்பாம்பினைக் கச்சாகக் கட்டியுள்ள சிவபெருமானே ! அவ்வாறு ஆடுகின்ற இளம்பாம்பைக் கச்சாக அணிந்த உம்மை அன்போடு பாடுகின்ற உள்ளம் உடையவர்களின் பண்பே சிறந்ததாகும் .

குறிப்புரை :

நீடு - நெடிய , இளம்பொழில் - இளமரச்சோலை , பாப்பசைத்தீர் - ( பாம்பு ) அசைத்தீர் , கச்சையாகக் கட்டியருளினீர் , உம்மைப் பாடும் விருப்பமுடையவர் பண்பே , சிறந்த பண்பாவது , உளம் - இங்கே விருப்பம் . இரண்டாம் அடி ` ஆடிளம்பாம்பசைத் தானும் ` ( தி .4. ப .4. பா .1.) என அப்பர் வாக்கிலும் , வருவது .

பண் :சாதாரி

பாடல் எண் : 6

நெற்றியோர் கண்ணுடை நெல்வெணெய் மேவிய
பெற்றிகொள் பிறைநுத லீரே
பெற்றிகொள் பிறைநுத லீருமைப் பேணுதல்
கற்றறி வோர்கள்தங் கடனே.

பொழிப்புரை :

நெற்றிக்கண்ணை உடையவரும் , திருநெல் வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருள்பவரும் , அடியவர்கட்கருளும் பண்புடைய பிறை போன்ற நெற்றியையுடைய உமாதேவியை உடையவருமாகிய சிவபெருமானே ! அவ்வாறு பிறை போன்ற நெற்றியுடைய உமாதேவியை உடைய உம்மை வழிபடுதலே ஞான நூல்களைக் கற்றறிந்த அறிஞர்களின் கடமையாகும் .

குறிப்புரை :

பெற்றி கொள் - அடியவர்க்கருள்வதையே தன்மையாகக் கொண்ட . பிறைநுதலீர் - பிறைபோன்ற நெற்றியையுடைய உமையம்மையாரை . உரையீர் , பிறைநுதல் - அன்மொழித்தொகை . பேணுதல் - பாராட்டி நிட்டை கூடுதல் , கற்றறிவோர்கள் தம் கடன் - ஞான நூல்களைக் கற்றறிந்த அறிஞர்கள் கடமையாகும் . கல்வியறிவிற்குப் பயன் கூறியவாறு .

பண் :சாதாரி

பாடல் எண் : 7

நிறையவர் தொழுதெழு நெல்வெணெய் மேவிய
கறையணி மிடறுடை யீரே
கறையணி மிடறுடை யீருமைக் காண்பவர்
உறைவதும் உம்அடிக் கீழே.

பொழிப்புரை :

நிறையுடையவர்கள் தொழுது எழுகின்ற திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , விடமுண்ட கறுத்த கண்டத்தையுடைய சிவபெருமானே ! அவ்வாறு விடமுண்ட கறுத்த கண்டத்தையுடைய உம்மைத் தரிசிப்பவர்கள் உம் திருவடிக்கீழ் என்றும் வீற்றிருப்பர் .

குறிப்புரை :

நிறையவர் - ` காப்பன காத்துக் கடிவன கடிந்து ஒழுகும் ஒழுக்கம் ` உடையவர் . ( களவியலுரை ) ` உம்மைக் காண்பவர் ...... கீழே ` என்றது , ` அறியாமை யறிவகற்றி யறிவினுள்ளே , அறிவுதனை யருளினால் அறியாதே அறிந்து ...... குழைந்திருப்பையாயின் ...... ஆயே ` ( சிவஞானசித்தி சுபக்கம் . சூத் . 8.30) என்ற சாத்திரக் கருத்து .

பண் :சாதாரி

பாடல் எண் : 8

நெருக்கிய பொழிலணி நெல்வெணெய் மேவியன்
றரக்கனை யசைவுசெய் தீரே
அரக்கனை யசைவுசெய் தீருமை யன்புசெய்
திருக்கவல் லாரிட ரிலரே.

பொழிப்புரை :

நெருங்கிய சோலைகள் சூழ்ந்து அழகுடன் விளங்கும் திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவரும் , அரக்கனான இராவணனை வலிகுன்றச் செய்தவருமான சிவபெருமானே ! அவ்வாறு அரக்கனை வலிகுன்றச் செய்தவரான உம்மை அன்புடன் வணங்குபவர்கள் துன்பமே இல்லாதவர்கள் ஆவர் .

குறிப்புரை :

நெருக்கிய - நெருங்கிய என்பதன் வலித்தல் விகாரம் . அசைவு செய்தீர் - வலிதளரச் செய்தீர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 9

நிரைவிரி சடைமுடி நெல்வெணெய் மேவியன்
றிருவரை யிடர்கள் செய்தீரே
இருவரை யிடர்கள் செய்தீருமை யிசைவொடு
பரவவல் லார்பழி யிலரே.

பொழிப்புரை :

வரிசையாக விரிந்த சடைமுடியினை உடையவராய் , திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவராய் , அன்று திருமாலும் , பிரமனும் உம் அடிமுடி காணாமல் துன்பம் அடையச் செய்த சிவபெருமானே ! அவ்வாறு திருமால் , பிரமன் என்னும் இருவரைத் துன்பம் அடையச் செய்தவராகிய உம்மை உள்ளும் , புறமும் ஒத்து வணங்கிப் போற்று பவர்கள் பழியில்லாதவர் ஆவர் .

குறிப்புரை :

இருவரை - பிரம விட்டுணுக்களிருவரையும் , இடர்கள் செய்தீரே - ஆழ்ந்தும் உயர்ந்தும் காணமாட்டாமை , அதனால் என்செய்தும் என அலமருதல் ( தம் செருக்கு நிலைகுலைதல் , நாணி நிற்றல் , ஆகம்பல ஆதலின் இடர்கள் எனப்பன்மையாற் கூறினார் . ) ` ஆழ்ந்து காணார் உயர்ந்தெய்த கில்லார் அலமந்தவர் , தாழ்ந்து தந்தம் முடிசாய நின்றார்க்கிடம் என்பரால் ` ( தி .2. ப .114. பா .9.) என்னும் திருக்கேதாரப்பதிகத்தால் அறிக .

பண் :சாதாரி

பாடல் எண் : 10

நீக்கிய புனலணி நெல்வெணெய் மேவிய
சாக்கியச் சமண் கெடுத் தீரே
சாக்கியச் சமண்கெடுத் தீருமைச் சார்வது
பாக்கிய முடையவர் பண்பே.

பொழிப்புரை :

வறுமை , பிணி முதலியவற்றை நீக்கியவரும் , திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவரும் , புத்தமும் , சமணமும் கெடுத்தவருமாகிய சிவபெருமானே ! அவ்வாறு புத்தமும் , சமணமும் கெடுத்த உம்மைப் பற்றுக்கோடாகச் சார்வது புண்ணியம் செய்தவர்களின் பண்பாகும் .

குறிப்புரை :

நீக்கிய - வறுமை , பிணி முதலியவற்றை நீக்கிய , புனல் அணி - நீர் வளம் உடைய . நெல் வெண்ணெய் சாக்கியச்சமண் - சாக்கியரோடு கூடிய சமண் . உம்மைப் பற்றுக்கோடாகச் சார்வது , பாக்கியம் உடையவர் பண்பு - ` தவமும் தவ முடையார்க்காகும் ,` ( குறள் . 262) ` சைவமாம் சமயம் சாரும் ஊழ்பெறல் அரிது ` ( சித்தியார் . சுபக்கம் சூ . 2.91) என்ற கருத்து .

பண் :சாதாரி

பாடல் எண் : 11

நிலமல்கு தொல்புகழ் நெல்வெணெ யீசனை
நலமல்கு ஞானசம் பந்தன்
நலமல்கு ஞானசம் பந்தன் செந்தமிழ்
சொலமல்கு வார்துய ரிலரே.

பொழிப்புரை :

நிலவுலகெங்கும் நிறைந்த தொன்மையான புகழையுடைய திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானைப் போற்றி , நன்மைகளைத் தருகின்ற ஞானசம்பந்தன் அருளிய இச்செந்தமிழ்ப் பதிகத்தைப் பாடுவதில் மகிழ்ச்சி மிக்கவர்கள் துன்பம் இல்லாதவர்கள் ஆவர் .

குறிப்புரை :

ஞானசம்பந்தன செந்தமிழ் , சொல மல்குவார் - சொல்வதில் மகிழ்ச்சி மிக்கவர் :- மகிழ்ச்சிமிக்குச் சொல்வோர் . ( துயர் இலர் ஆவர் ).
சிற்பி