திருச்சிறுகுடி


பண் :சாதாரி

பாடல் எண் : 1

திடமலி மதிளணி சிறுகுடி மேவிய
படமலி யரவுடை யீரே
படமலி யரவுடை யீருமைப் பணிபவர்
அடைவது மமருல கதுவே.

பொழிப்புரை :

வலிமைமிக்க மதில்களையுடைய அழகிய திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , படமெடுக்கும் பாம்பை அணிந்துள்ள சிவபெருமானே ! அவ்வாறு படமெடுக்கும் பாம்பை அணிந்துள்ள உம்மை வணங்குபவர்கள் சிவலோகம் அடைவர் .

குறிப்புரை :

திடம் மலி - வலிமைமிக்க . மதிள் - மதில் . ல , ள ஒற்றுமை . படம் மலி - படத்தையுடைய , உம்மைப் பணிபவர் அடைவது , அமர் உலகு அது - வானவர் உலகிற்கு அப்பாலதாகிய சிவலோகமாம் . உரையிலடங்காப் பெருமையது ஆகலின் அது என்று சுட்டளவோடு நிறுத்தப்பட்டது .

பண் :சாதாரி

பாடல் எண் : 2

சிற்றிடை யுடன்மகிழ் சிறுகுடி மேவிய
சுற்றிய சடைமுடி யீரே
சுற்றிய சடைமுடி யீரும தொழுகழல்
உற்றவ ருறுபிணி யிலரே.

பொழிப்புரை :

குறுகிய இடையையுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு மகிழ்ச்சியுடன் திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற சுற்றிய சடைமுடியுடைய சிவபெருமானே ! சுற்றிய சடைமுடியுடைய உம் திருவடிகளைத் தொழுது வணங்குபவர்கட்குப் பிணி எதுவும் இல்லை .

குறிப்புரை :

சிறு இடை - சிற்றிடையையுடைய உமாதேவியாரோடு மகிழ்ந்து சிறுகுடியில் இருக்கும் சடைமுடியீரே . கழல் உற்றவர் - திருவடியைப் பற்றுக்கோடாகக் கொண்டவர் . உறு - தம்மைப் பற்றியுற்ற . பிணி - பாசபந்தம் , இலர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 3

தெள்ளிய புனலணி சிறுகுடி மேவிய
துள்ளிய மானுடை யீரே
துள்ளிய மானுடை யீரும தொழுகழல்
உள்ளுதல் செயநல முறுமே.

பொழிப்புரை :

தெளிந்த நீர்வளமுடைய திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , துள்ளிக் குதிக்கும் மானைக் கரத்தில் ஏந்தியுள்ள சிவபெருமானே ! துள்ளிக் குதிக்கும் மானை உடைய உம்முடைய திருவடிகளை நினைத்துத் தியானிக்கும் அடியவர்கள் எல்லா நலன்களையும் பெறுவர் .

குறிப்புரை :

தெள்ளிய - தெளிவான . துள்ளிய - துள்ளிக் குதிக்கும் . மான் உடையீர் - மானை உடையீர் , ஏந்தியுள்ளீர் . இனி உடை என்பதற்கு ஆடையென்றும் பொருள் உண்மையால் , மான் தோலை அணிந்தருளினீர் எனலுமாம் . ` புள்ளியுழை மானின் தோலான் கண்டாய் ` ( தி .6. ப .23. பா .4.) என்ற திருத்தாண்டகத்தாலும் அறிக . உள்ளுதல் செய - நினைக்க .

பண் :சாதாரி

பாடல் எண் : 4

செந்நெல வயலணி சிறுகுடி மேவிய
ஒன்னலர் புரமெரித் தீரே
ஒன்னலர் புரமெரித் தீருமை யுள்குவார்
சொன்னல முடையவர் தொண்டே.

பொழிப்புரை :

செந்நெல் விளையும் வயல்வளமிக்க திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , நம்மோடு சேராது பகைமை கொண்ட அசுரர்கள் வாழும் திரிபுரங்களை எரித்த சிவபெருமானே ! திரிபுரம் எரித்த உம்மை நினைத்துப் போற்றும் சொல் நலமுடையவர்களே திருத்தொண்டர்கள் ஆவர் . ( உமது வழிபாட்டின் பலனைப் பற்றிப் பிறருக்கு உபதேசிக்கும் தக்கோர் ஆவர் என்பர் ).

குறிப்புரை :

செந்நெல் - செந்நெல் விளைகின்றனவாகிய . வயல் அணி - வயல் சூழ்ந்த . ஒன்னலர் - ஒன்றலர் என்பதன் மரூஉ . ஒன்றலர் - நம்மோடு சேராதவர் . தொண்டு - உமது வழிபாட்டைப் பற்றிப் பிறர்க்கு உபதேசிக்கும் தக்கோர் ஆவர் . சொல் நலம் - சொல்லும் நலம் . நலம் - தகுதி .

பண் :சாதாரி

பாடல் எண் : 5

செற்றினின் மலிபுனற் சிறுகுடி மேவிய
பெற்றிகொள் பிறைமுடி யீரே
பெற்றிகொள் பிறைமுடி யீருமைப் பேணிநஞ்
சற்றவ ரருவினை யிலரே.

பொழிப்புரை :

பாத்திகளில் குன்றாது பாயும் நீர்வளமுடைய திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , முடியில் தங்கும் பேறுபெற்ற பிறைச்சந்திரனை அணிந்த சடைமுடி உடைய சிவபெருமானே ! பேறுபெற்ற பிறைச்சந்திரனை அணிந்த திருமுடியுடைய உம்மை மனம் குழைந்து வழிபடுபவர்கள் உலகப் பற்றற்றவர்கள் . அதன் காரணமாக மேல்வரும் அருவினையும் இல்லாதவராவர் .

குறிப்புரை :

செற்றினில் - பாத்திகளில் . மலிபுனல் - குன்றாது பாயும் நீர் வளமுடைய சிறுகுடி . செறுத்தல் - நீரைத் தேக்குதல் , ` செறுத் தோறுடைப்பினும் செம்புனலோடூடார் , மறுத்துஞ்சிறை செய்வர் நீர் நசைஇ வாழ்நர் ` ( நாலடியார் - 222). செறு - இ - செற்றி . இகரம் வினைமுதற் பொருள் விகுதி . அதனால் பாத்தியைச் செறுவென்பது காரணப்பெயராம் . பெற்றிகொள்பிறை - இறைவன் முடியில் தங்கும் பேற்றைக் கொண்ட பிறை . நஞ்சு - நைந்து , மனம் குழைந்து . நைதல் - உருகுதலுக்குமுன் உறும் நிகழ்ச்சி . இதனை ` என்புநைந்து உருகி நெக்குநெக்குருகி `. நஞ்சு - போலி , நைந்து என்பதற்கு வினை முதல் வருவித்துரைக்க , அற்றவரென்பதற்கும் இவ்விதியால் பற்று அற்றவர் என்க . அதன் காரணமாக மேல்வருவினையும் இலராவர் . நெஞ்சு என்பது பிழைபட்டது .

பண் :சாதாரி

பாடல் எண் : 6

செங்கயல் புனலணி சிறுகுடி மேவிய
மங்கையை யிடமுடை யீரே
மங்கையை யிடமுடை யீருமை வாழ்த்துவார்
சங்கைய திலர்நலர் தவமே.

பொழிப்புரை :

செங்கயல்மீன் விளங்கும் நீர்வளமிக்க திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , உமாதேவியைத் தம் இடப்பாகமாகக் கொண்டு விளங்கும் சிவபெருமானே ! உமாதேவியைத் தம் இடப்பாகமாகக் கொண்டு விளங்கும் உம்மை வாழ்த்தும் அடியவர்கள் அச்சம் இல்லாதவராவர் . நலமிக்கவரும் , தவப்பேறு உடையவரும் ஆவர் .

குறிப்புரை :

செங்கயல் - ஒருவகைமீன் . கயலையுடைய புனல் சூழ்ந்த சிறுகுடி . நலர்தவம் - நல்தவர் என விகுதி பிரித்துக் கூறுக . நல்ல தவத்தையுடையவர் ஆவர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 7

செறிபொழி றழுவிய சிறுகுடி மேவிய
வெறிகமழ் சடைமுடி யீரே
வெறிகமழ் சடைமுடி யீருமை விரும்பிமெய்ந்
நெறியுணர் வோருயர்ந் தோரே.

பொழிப்புரை :

அடர்ந்த சோலைகள் விளங்கும் திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற நறுமணம் கமழும் சடைமுடியுடைய சிவபெருமானே ! நறுமணம் கமழும் சடைமுடியுடைய உம்மை விரும்பி , அடைவதற்குரிய நெறிகளில் சன்மார்க்க நெறியில் நிற்போர் உயர்ந்தோராவர் .

குறிப்புரை :

செறி - அடர்ந்த பொழில் . வெறி - வாசனை . மெய்ந்நெறி - உண்மையான மார்க்கம் . சன்மார்க்கம் சகமார்க்கம் சற்புத்திர மார்க்கம் தாசமார்க்கம் என்று சங்கரனையடையும் நன்மார்க்கம் நான்கு எனச் சித்தியாரிற் குறித்தவை . உயர்ந்தோர் அவற்றில் உயர்ந்த சன்மார்க்க நெறியில் நிற்போர் ஆவர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 8

திசையவர் தொழுதெழு சிறுகுடி மேவிய
தசமுக னுரநெரித் தீரே
தசமுக னுரநெரித் தீருமைச் சார்பவர்
வசையறு மதுவழி பாடே.

பொழிப்புரை :

எல்லாத் திக்குக்களிலுமுள்ளவர்கள் தொழுது போற்றும் திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றவரும் , இராவணனின் வலிமை அடங்கும்படி கயிலைமலையின் கீழ் அவனை நெரித்தவருமான சிவபெருமானே ! அவ்வாறு இராவணனின் வலிமையை அடக்கிய உம்மைப் பற்றுக்கோடாகக் கொண்டு வழிபடுபவர்களின் குற்றம் யாவும் தீர்ந்து குணம் பெருகும் . அது உம்மை வழிபட்டதன் பலனாகும் .

குறிப்புரை :

தசம் - பத்து . உரம் - வலிமை . சார்பவர் - பற்றுக் கோடாக அடைபவர் . வசையறும் அது - குற்றம் அற்றதாகிய வழிபாடே வழிபாடெனப் படுவதாம் . என் போல்பவர் பறித்திட்ட முகையும் அரும்பும் எல்லாம் அம்போதெனக் கொள்ளும் ஐயன் தன்னடியார் குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டுந் தன்மையால் வழிபாடு வசையற்றதாயிற்று .

பண் :சாதாரி

பாடல் எண் : 9

செருவரை வயலமர் சிறுகுடி மேவிய
இருவரை யசைவுசெய் தீரே
இருவரை யசைவுசெய் தீருமை யேத்துவார்
அருவினை யொடுதுய ரிலரே.

பொழிப்புரை :

வயல்வளமிக்க திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றவரும் , மாறுபாடு கொண்ட திருமால் , பிரமன் இவர்களை வருத்தியவருமான சிவபெருமானே ! அவ்விருவரையும் வருத்திய உம்மைப் போற்றி வழிபடுபவர்கள் நீக்குவதற்குரிய வினையும் , அதன் விளைவால் உண்டாகும் துன்பமும் இல்லாதவர்கள் ஆவர் .

குறிப்புரை :

இருவரை - பிரம விட்டுணுக்களை . இருவர் தொகைக் குறிப்பு . அசைவு - வருத்தம் . அருவினை என்பது ஆகாமிய சஞ்சித கன்மங்களை . துயர் என்றது பிராரத்த வினையை . அதனையிலர் என்றது , ` சிவனும் இவன் செய்தியெலாம் என் செய்தியென்றும் செய்ததெனக் கிவனுக்குச் செய்த தென்றும் ` கொள்வன் ஆகையினால் . ( சித்தியார் சூ . 10.1 ).

பண் :சாதாரி

பாடல் எண் : 10

செய்த்தலை புனலணி சிறுகுடி மேவிய
புத்தரோ டமண்புறத் தீரே
புத்தரொ டமண்புறத் தீருமைப் போற்றுதல்
பத்தர்கள் தம்முடைப் பரிசே.

பொழிப்புரை :

வயல்களில் நீர்பாயும் அழகிய சிறுகுடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றவராய்ப் , புத்தர் , சமணர்கட்குப் புறம்பாக இருக்கும் சிவபெருமானே ! புத்தர் சமணர்கட்குப் புறம்பான உம்மைப் போற்றி வணங்குதலையே பக்தர்கள் தம்முடைய பேறாகக் கொள்வர் .

குறிப்புரை :

செய்த்தலை - வயல்களினிடத்து . புனல் - நீர் . அணி - அழகு செய்கின்ற . சிறுகுடி புறத்தீர் - அப்பாற் பட்டீர் . உம்மைப் போற்றுதலே பத்தர்கள் தம்முடைய பேறு ஆகக்கொள்வர் . பரிசு - பேறு . ` கூடும் அன்பினிற் கும்பிடலே அன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கினார் ` ( தி .12 திருக்கூட்டச்சிறப்பு . 8) என்றதும் நோக்குக .

பண் :சாதாரி

பாடல் எண் : 11

தேனமர் பொழிலணி சிறுகுடி மேவிய
மானமர் கரமுடை யீரே
மானமர் கரமுடை யீருமை வாழ்த்திய
ஞானசம் பந்தன தமிழே.

பொழிப்புரை :

வண்டுகள் விரும்பும் சோலைகளை உடைய அழகிய திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , மான் ஏந்திய கரமுடைய சிவபெருமானே ! மான் ஏந்திய கரமுடைய உம்மை வாழ்த்திப் போற்றிய ஞானசம்பந்தனின் இத் தமிழ்ப் பதிகத்தை ஓதவல்லவர்கள் இம்மை , மறுமைப் பலன்களைப் பெறுவர் .

குறிப்புரை :

தேன் அமர் - வண்டுகள் விரும்பும் , பொழில் . மான் அமர் - மான் தங்கிய , உம்மைப் பரவிய ஞானசம்பந்தன் தமிழே ( தனைப்பாடவல்லவர்க்கு அனைத்தும் நல்கும் ) என்பது குறிப்பெச்சம் .
சிற்பி