திருவீழிமிழலை


பண் :சாதாரி

பாடல் எண் : 1

வெண்மதி தவழ்மதிள் மிழலையு ளீர்சடை
ஒண்மதி யணியுடை யீரே
ஒண்மதி யணியுடை யீருமை யுணர்பவர்
கண்மதி மிகுவது கடனே.

பொழிப்புரை :

விண்ணிலுள்ள வெண்ணிறச் சந்திரனைத் தொடுமளவு உயர்ந்துள்ள மதில்களையுடைய திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றவரும் , சடையில் ஒளி பொருந்திய சந்திரனை அணிந்துள்ளவருமான சிவபெருமானே ! ஒளி பொருந்திய சந்திரனை அணிந்துள்ள உம்மை முதற்பொருளாக உணர்ந்து வழிபடுபவர்கள் சிவஞானம் பெறுவர் .

குறிப்புரை :

வெண் மதி - வானில் ஊரும் மதி . சடை மதி - சடையில் தங்கும் மதி . மதிள் - மதில் . ளகரலகர ஒற்றுமை : போலி என்னலாகாது ; சாம்பர் என்பதில் ஈற்றெழுத்து உரியதன்று ; லகரமே உரியது ஆகலின் ரகரம் போலி . ஒற்றுமை அங்ஙனமன்றி மஞ்சள் , மஞ்சல் , மங்களம் மங்கலம் என ஈரெழுத்தும் உரியவாய் வருவது . மதியைச் சடையில் அணியாக உடையார் . அணி - ஆபரணம் . கண் - ( உமது திருவடிப் பேற்றையே குறிக்கோளாகக் ) கருதும் . மதி - புத்தி . மிகுவது - அதிகரிப்பதும் . அவர்க்கு இயல்பாய் எய்திடக் கூடிய தன்மையாம் . கண்மதி - வினைத்தொகை . கண்ணுதல் இப்பொருளாதலை ` விண்ணினார்கள் விரும்பப்படுபவன் , கண்ணினார் கடம்பூர்க்கரக்கோயிலே ` என்னுந் திருக்குறுந்தொகையால் அறிக . உணர்பவர் - உம்மையே பதிப்பொருளாக உணர்பவர் . கடன் - இயல்பு ` மாலறியாக் கடனாம் உருவத்தரன் ` என்ற திருக்கோவையாரால் அறிக .

பண் :சாதாரி

பாடல் எண் : 2

விதிவழி மறையவர் மிழலையு ளீர்நடம்
சதிவழி வருவதொர் சதிரே
சதிவழி வருவதொர் சதிருடை யீருமை
அதிகுணர் புகழ்வது மழகே.

பொழிப்புரை :

வேதங்களில் விதிக்கப்பட்ட ஒழுக்க நெறிகளைப் பின்பற்றி வாழும் அந்தணர்கள் நிறைந்த திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருள்கின்றவரும் , தாளத்துக்கு ஏற்ப அழகாகத் திருநடனம் புரிபவருமான சிவபெருமானே ! தாளத்திற்கு ஏற்பத் திருநடனம் புரியும் பெருமையுடைய உம்மைச் சத்துவ குணமுடைய ஞானிகள் போற்றிப் புகழ்வது சிறப்பானது .

குறிப்புரை :

விதிவழி மறையவர் - விதிவழியில் ஒழுகும் மறையவர் . சதிவழி - தாள ஓத்தின்படி . நடம் வருவது - நடித்து ஆவர்த்தம் வருவதும் . ஓர் சதிரே - ஒரு அழகே . அதிகுணர் - சத்துவகுணம் உடையோராகிய ஞானிகள் . புகழ்வதும் ஒரு அழகே . சதிர் - இங்கு அழகென்னும் பொருளில் , அச்சொற்குப் பொருள் அனைத்தும் இங்கு ஏற்பதறிக . அதி என்பது மிகுதிப்பொருளது ஆயினும் இங்குச் சிறப்பு என்னும் பொருளில் வருவதால் சத்துவ குணம் எனப்பட்டது . குணர் :- மரூஉ .

பண் :சாதாரி

பாடல் எண் : 3

விரைமலி பொழிலணி மிழலையு ளீரொரு
வரைமிசை யுறைவதும் வலதே
வரைமிசை யுறைவதொர் வலதுடை யீருமை
உரைசெயு மவைமறை யொலியே.

பொழிப்புரை :

நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த அழகிய திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் நீர் பெருமையுடைய கயிலைமலையில் வாழ்வதும் சாமர்த்தியமே . கயிலைமலையில் வாழும் பெருமையுடைய உம்மைப் போற்றிப் புகழ்வன வேதங்கள் .

குறிப்புரை :

விரை - வாசனை . ஒரு வரை என்றது கயிலைமலையை . வலது - திறப்பாடுடையது . வன்மை என்னும் பகுதியடியாகப் பிறந்த குறிப்பு வினை முற்று . ஈற்றடியின் பொருளாவது :- நீரே பொருளாந் தன்மையை உலகிற்கு எடுத்து உரைப்பவை வேதங்களே . அவை வாசகம் . அவற்றின் வாச்சியம் அடிகளீர் என்பது குறிப்பெச்சம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 4

விட்டெழில் பெறுபுகழ் மிழலையு ளீர்கையில்
இட்டெழில் பெறுகிற தெரியே
இட்டெழில் பெறுகிற தெரியுடை யீர்புரம்
அட்டது வரைசிலை யாலே.

பொழிப்புரை :

மிகுந்த அழகும் , புகழுமுடைய திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றவரும் கையில் ஏந்தப்பட்டதால் அழகுபெற்ற நெருப்பை உடையவருமான சிவ பெருமானே ! அழகிய நெருப்பேந்திய நீர் திரிபுரத்தை எரித்தது மேரு மலையை வில்லாக வளைத்தும் ( அக்கினியைக் கணையாக எய்தும் ) அல்லவா ?

குறிப்புரை :

விட்டு எழில் - அழகு தங்கி , அதனாற் புகழ்பெறுகின்ற மிழலை . விட்டு - இப்பொருட்டாதலைப் புறப்பொருள் வெண் பாமாலை வஞ்சிப்படலம் 18 ஆம் பாட்டு உரையான் அறிக . கையில் இட்டு - இடப்பெற்று . அதனால் அழகுடையதாகியதும் நெருப்பே . அழகனைச் சேர்ந்தமையால் அழகில் பொருளும் அழகியதாயிற்று . அது ` நாறுபூம் பொழில் நாரையூர் நம்பனுக் காறுசூடினும் அம்ம அழகிதே ` என்பதாலும் உணர்க . கையது கனல் , எரித்ததும் கனல் ஆயின் , வரைசிலை எற்றுக்கு ? உமது தன்மை அறிவாரார் என்ற குறிப்பு .

பண் :சாதாரி

பாடல் எண் : 5

வேனிகர் கண்ணியர் மிழலையு ளீர்நல
பானிக ருருவுடை யீரே
பானிக ருருவுடை யீரும துடனுமை
தான்மிக வுறைவது தவமே.

பொழிப்புரை :

வேல் போன்று கூர்மையும் , ஒளியுமுடைய கண்களையுடைய பெண்கள் வாழ்கின்ற திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருள்கின்ற , நல்ல பால் போன்ற நிறமுடைய சிவபெருமானே ! பால் போன்ற நிறமுடைய உம்முடன் உமாதேவி வீற்றிருந்தருளுவது தவச்சிறப்புடையதாகும் .

குறிப்புரை :

வேல் நிகர் கண்ணியர் - வேலையொத்த கண்களை யுடைய பெண்கள் வாழும் மிழலை . ந ( ல் ) ல பால் நிகர் - பாலையொத்த . உரு - நிறம் . சதாசிவமூர்த்தியின் நிறம் வெண்மை என்பதால் பால் நிகர் உருவுடையீர் என்னப்பட்டது .

பண் :சாதாரி

பாடல் எண் : 6

விரைமலி பொழிலணி மிழலையு ளீர்செனி
நிரையுற வணிவது நெறியே
நிரையுற வணிவதொர் நெறியுடை யீரும
தரையுற வணிவன வரவே.

பொழிப்புரை :

நறுமணம் கமழும் சோலைகளையுடைய அழகிய திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளியுள்ளவரும் , மண்டையோட்டால் ஆகிய மாலையை அணிந்துள்ள வருமான ஆளுகையையுடைய சிவபெருமானே ! அவ்வாறு தலை மாலை அணிந்து ஆளுகை உடைய நீவிர் உமது அரையில் கச்சாகக் கட்டியது அரவமே .

குறிப்புரை :

செ ( ன் ) னி நிரை - தலைமாலை . நிரை - வரிசை . வரிசையாகக் கோத்த மாலையையுணர்த்தலால் பண்பாகுபெயர் , மண்டையோட்டைக் கோத்தணிந்தது . நெறியே - முறையேபோலும் , நெறியென்றது அமுது உண்டும் வானவர் சாவ , விடமுண்டும் சாவான் தான் ஒருவனே எனத் தெரிவித்தற்கு , உமது அரை உற : அணிவதும் அரவே . அரை நாண் ஆகவும் கச்சையாகவும் , கோவணமாகவும் அணிந்தமையால் , அணிவன எனப் பன்மையாற் கூறினர் . அரவு :- ( அரவுகள் ) பால் பகா அஃறிணைப்பெயர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 7

விசையுறு புனல்வயன் மிழலையு ளீரர
வசையுற வணிவுடை யீரே
அசையுற வணிவுடை யீருமை யறிபவர்
நசையுறு நாவினர் தாமே.

பொழிப்புரை :

வேகமாக ஓடிப் புனல் வற்றாத நீர்வளம் மிக்க வயல்களை உடைய திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றவரும் , அரவம் அசையும்படி ஆபரணமாக அணிந்துள்ளவருமான சிவபெருமானே ! அவ்வாறு அசையும் அரவத்தை ஆபரணமாக அணிந்துள்ள உம்மை அறிபவர்களே , தாம் கூறுவனவற்றை அனைவரும் விரும்பிக் கேட்கும்வண்ணம் உண்மைப் பொருளை உபதேசிக்கும் வல்லுநர் ஆவர் .

குறிப்புரை :

அரவு அசைஉற அணிவு உடையீர் - பாம்பை அசையும்படி அணிதலையுடையீர் . உம்மை அறிபவரே உண்மைப் பொருளை உபதேசிக்க வல்லுநர் ஆவர் . அவர் கூறுவனவற்றை அனைவரும் விரும்பிக் கேட்பவர் என்பது ஈற்றடியின் கருத்து . நசை உறும் - ( கேட்போர் ) விரும்பும் . நாவினர் - பேச்சையுடையவர் . நா - கருவியாகுபெயர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 8

விலங்கலொண் மதிளணி மிழலையு ளீரன்றவ்
இலங்கைமன் னிடர்கெடுத் தீரே
இலங்கைமன் னிடர்கெடுத் தீருமை யேத்துவார்
புலன்களை முனிவது பொருளே.

பொழிப்புரை :

மலைபோன்ற உறுதியான மதிலையுடைய திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவரும் , அன்று இலங்கை மன்னனான இராவணனைக் கயிலையின் கீழ் அடர்த்தபோது , அவன் உம்மைப் போற்றிச் சாமகானம் பாட அவன் துன்பத்தைப் போக்கியவரும் ஆகிய சிவபெருமானே ! அவ்வாறு இலங்கை மன்னனின் துன்பத்தைப் போக்கிய உம்மைப் போற்றி வணங்குபவர்களே புலன்களை அடக்கி ஆளும் வல்லமையுடையவர் .

குறிப்புரை :

விலங்கல் - மலைபோன்ற . ஒள் மதில் - அழகிய மதில் . இடர் கெடுத்தீரே - செருக்கால் அவன் உற்ற துன்பத்தைப் போக்குதற்கு இரங்கி இடரை அகற்றியருளினீர் . வாசனாமலம் தம்மறிவினும் மிக்குப் புலன்களையீர்த்துச் செல்லுமாகலின் , திருவைந்தெழுத்தால் உம்மைத் துதிப்போர் , புலன்களைக் கோபித்து மடக்குவதும் உறுதி . ஏனை யோர்க்கு ஆகாது என்பதாம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 9

வெற்பமர் பொழிலணி மிழலையு ளீருமை
அற்புத னயனறி யானே
அற்புத னயனறி யாவகை நின்றவ
நற்பத மறிவது நயமே.

பொழிப்புரை :

மலைபோன்ற மாளிகைகளும் , சோலைகளுமுடைய அழகிய திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றவரும் , திருமாலும் , பிரமனும் அறியாவண்ணம் நின்றவருமான சிவபெருமானே ! அவ்வாறு திருமாலும் , பிரமனும் அறியாவண்ணம் நின்ற உம் நல்ல திருவடிகளை இடையறாது நினைப்பதே மானிடப் பிறவி எய்தினோர் அடையும் பயனாகும் .

குறிப்புரை :

வெற்பு - மலைபோன்ற மாளிகைகள் . வெற்பு - உவமை ஆகுபெயர் . அது ` குன்றொன்றோடொன்று ` ( தி .2. ப .88. பா .4) என்னும் தென்திருமுல்லைவாயிற் பதிகத்தால் அறிக . அமர் - பொருந்திய , சோலை சூழ்ந்த , மிழலை , ( அற்புதன் ) அல் - ஐந்து இராத்திரியில் . புதன் - ஞானங்களை வெளிப்படுத்தின திருமால் , புதன் - வடசொல் . அந்த மதத்துக்குப் பாஞ்சராத்திரம் ` அஞ்சலினவர்புகழ் அண்ணல் ` என்பது . மகாஸ்காந்தம் என்னும் பெயர் வழங்கும் . இனி அற்புதன் என்பதற்கு , கண்ணிடந்து பூசித்த அரிய செயலையுடையவன் எனலும் ஆம் . அற்புதனோடு அயனும் அறியாதவனானான் . ஒருவினையொடுச் சொல் நின்றது . நின்றவரே ! உமது நல்ல திருவடியை அறிவது - உணர்ந்து ஆர்வம் தழைப்பதுவே . நயம் மானிடப் பிறவி யெய்தினோர் அடையும் பயனாம் . நின்ற அந் நற்பதம் என்க .

பண் :சாதாரி

பாடல் எண் : 10

வித்தக மறையவர் மிழலையு ளீரன்று
புத்தரொ டமணழித் தீரே
புத்தரொ டமணழித் தீருமைப் போற்றுவார்
பத்திசெய் மனமுடை யவரே.

பொழிப்புரை :

நான்மறைகளைக் கற்றுவல்ல அந்தணர்கள் வாழும் திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றவரும் , புத்தமும் , சமணமும் வீழுமாறு செய்தவருமான சிவபெருமானே ! அவ்வாறு புத்தமும் , சமணமும் வீழ்ச்சியடையும்படி செய்த உம்மைப் போற்றுபவர்களே பத்தியுடைய நன்மனம் உடையவர்கள் .

குறிப்புரை :

பத்திசெய் மனம் உடையோரே உம்மைப் போற்றத் தக்கவர் என்றது ஈற்றடியின் கருத்து . ஏனையோர் உம்மால் நக்கு நிற்கப் படுவோர் ஆவர் என்பது குறிப்பு . ` பொக்கமிக்கவர் பூவு நீரும் கண்டு நக்கு நிற்பர் அவர்தமை நாணியே ` ( தி .5. ப .90. பா .9.)

பண் :சாதாரி

பாடல் எண் : 11

விண்பயில் பொழிலணி மிழலையு ளீசனைச்
சண்பையுண் ஞானசம் பந்தன
சண்பையுண் ஞானசம் பந்தன தமிழிவை
ஒண்பொரு ளுணர்வது முணர்வே.

பொழிப்புரை :

ஆகாயத்தைத் தொடும்படி உயர்ந்தோங்கிய சோலைகளையுடைய அழகிய திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் சிவபெருமானை , திருச்சண்பை என்னும் திருத்தலத்தில் அவதரித்த ஞானசம்பந்தன் போற்றி அருளினான் . அவ்வாறு , திருச்சண்பையில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இத்தமிழ்ப் பதிகத்தின் சீரிய கருத்தை உணர்ந்து ஓதுதல் நல்லுணர்வு ஆகும் .

குறிப்புரை :

இவை - இவற்றின் . ஒண்பொருள் - சீரிய கருத்தை . உணர்வதும் உணர்வு - உணர்வதுவே உணர்வெனப்படுவது . தேற்றேகாரம் பிரித்துக் கூட்டுக . உம்மை உயர்வு சிறப்பு .
சிற்பி