திருநாரையூர்


பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 1

காம்பினை வென்றமென் றோளி பாகங் கலந்தா னலந்தாங்கு
தேம்புனல் சூழ்திகழ் மாமடு விற்றிரு நாரை யூர்மேய
பூம்புனல் சேர்புரி புன்ச டையான் புலியின் னுரிதோன்மேல்
பாம்பினை வீக்கிய பண்ட ரங்கன் பாதம் பணிவோமே.

பொழிப்புரை :

சிவபெருமான் , மூங்கிலைப் போன்ற தோளையுடைய உமாதேவியைத் தம் ஒரு பாகமாகக் கொண்டவர் . நலம் தரும் இனிய நீர் சூழ்ந்த சிறந்த நீர்நிலைகளையுடைய திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவர் . அழகிய கங்கையையும் , முறுக்குண்ட சிவந்த சடையையுமுடையவர் . புலித்தோலாடை அணிந்தவர் . பாம்பைக் கச்சாகக் கட்டியவர் . பண்டரங்கன் என்னும் திருப்பெயர் உடையவர் . அத்தகைய சிவபெருமானின் திருப்பாதங்களை நாம் பணிவோமாக .

குறிப்புரை :

காம்பினை வென்ற மென்தோளி - மூங்கிலை வென்ற மெல்லிய தோளையுடைய உமாதேவியார் . மென்மைத் தன்மையால் வென்றதென்பதற்கு ` மென்தோளி ` என்றார் ; தேம் புனல் - இனிய நீர் சூழ்ந்த சிறந்த பெரிய மடுக்களையுடைய திருநாரையூர் . பூம் புனல் - மெல்லிய கங்கை நீர் தங்கிய . புரி - முறுக்கிய . புன் சடையான் - சிறு சடைகளையுடையவன் . உரி தோல் - உரித்த தோலாகிய உடையின் , பாம்பைக் கச்சையாகக் கட்டிய . பண்டரங்கன் ஆடிய கூத்து பாண்டரங்கம் எனப்படும் . ` திருத் தோணிபுரத்துறையும் பண்டரங்கர் ` என முன்னும் வந்தமை ( தி .1. ப .60. பா .1.) காண்க . பண்டரங்கன் சிவபெருமானுக்கு ஒரு பெயர் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 2

தீவினை யாயின தீர்க்க நின்றான் றிருநாரை யூர்மேயான்
பூவினை மேவு சடைமுடி யான்புடை சூழப் பலபூதம்
ஆவினி லைந்துங்கொண் டாட்டு கந்தா னடங்கார் மதின்மூன்றும்
ஏவினை யெய் தழித்தான் கழலே பரவா வெழுவோமே.

பொழிப்புரை :

சிவபெருமான் தம்மை வழிபடுபவர்களின் தீவினைகளைத் தீர்த்தருள்பவர் . திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருள்பவர் . பூமாலையணிந்த சடைமுடி உடையவர் . பூதகணங்கள் புடைசூழ விளங்குபவர் . பசுவிலிருந்து பெறப்படும் ஐந்து பொருள்களால் ( பஞ்சகவ்வியம் ) அபிடேகம் செய்து கொள்வதில் விருப்பமுடையவர் . அடங்காது திரிந்த பகையசுரர்களின் மும்மதில்களை ஓர் அம்பு எய்து அழித்தவர் . அப்பெருமானின் திருவடிகளை நாம் வழிபட்டு உயர்வடைவோமாக !.

குறிப்புரை :

( தீவினை ) ஆயின :- முதல் வேற்றுமையின் சொல்லுருபு , தீர்க்க - பற்றற ஒழிக்க . ` தீர்தலும் தீர்த்தலும் விடற் பொருட்டாகும் `. ( தொல் சொல் சேனாவரைய உரியியல் சூத் . 22.) பல் பூதம் புடை சூழ என மாற்றுக . ஆட்டு உகந்தான் - அபிடேகங் கொள்ளுதலை விரும்பியவன் . ஆடு - ஆடுதல் : நீராடுதல் ; முதனிலை திரிந்ததொழிற்பெயர் . ஏவினை - அம்பை . எய்து - செலுத்தி . அழித்தான் . அம்பை எய்ய வில்லை ஆயினும் , அம்பின் கூறாகிய நெற்றி விழியின் தீயால் எரித்ததால் அவ்வாறு உபசரித்தார் . பரவா - பரவி . துதித்து . எழுவோம் - அடிமைத் திறத்தில் ஓங்குவோமாக .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 3

மாயவன் சேயவன் வெள்ளி யவன் விடஞ்சேரு மைமிடற்றன்
ஆயவ னாகியொ ரந்தர மும்மவ னென்று வரையாகம்
தீயவ னீரவன் பூமி யவன்றிரு நாரை யூர்தன்னில்
மேயவ னைத்தொழு வாரவர் மேல்வினை யாயின வீடுமே.

பொழிப்புரை :

கருநிறமுடைய திருமால் , செந்நிறமுடைய உருத்திரன் , வெள்ளைத் தாமரைப் பூவில் வீற்றிருக்கும் பிரமன் விடமுண்ட நீலகண்டமுடைய மகேசுவரன் ஆகிய மூர்த்தி பேதங்களும் , மற்றும் பல வேறுபாடான மூர்த்தி பேதங்களும் தாமேயாகியவர் . மலைபோன்ற திருமேனி உடையவர் . நெருப்பு , நீர் , பூமி ( உப லட்சணத்தால் காற்று , ஆகாயம் , சூரியன் , சந்திரன் , உயிர் ) இவற்றையும் உடம்பாக உடையவர் . திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருள்பவர் . அப்பெருமானைத் தொழுவாருடைய வினைகள் முழுதும் அவர்களைவிட்டு நீங்கும் .

குறிப்புரை :

மாயவன் - கருநிறத்தான் . சேயவன் - செந்நிறத்தன் . வெள்ளியவன் - வெண்ணிறத்தவன் . இவை சதாதசிவமூர்த்தியின் ஐம் முகங்களில் முறையே அகோரம் , வாமதேவம் , சத்தியோசாத முகங்களைக் குறிக்கும் , உபலக்கணத்தால் பொன்மை , பளிங்கு நிறங்களையும் உடன் எண்ணித் தற்புருட ஈசான முகங்களையும் கொள்க . ஆயவன் - ஆகியவன் . ஓர் அந்தரமும் அவனென்று ஆகி - இவ்வாறே ஒவ்வொரு வேறுபாடும் தானேயென்று ஆகி . வரை ஆகம் - மலை போன்ற உடம்பு . தீயவன் - நெருப்பாயுள்ளவன் . நீரவன் , பூமியவன் , தண்ணீராயும் உள்ளவன் ; இன்னும் காற்று , வெளி , பரிதி , மதி , உயிர் இவையும் தன்னுடம்பாக உள்ளவன் எனவும் உபலக்கணத்தாற் கொள்க . அவன் திருநாரையூரில் இருப்பவன் . அவனைத் தொழுவார் முற்பிறப்பிற் செய்த வினை முழுதும் விட்டு ஒழியும் . தொழுதல் கரும மாதலால் இப்பிறப்பின் வினையும் , எடுக்கும் பிறப்பின் வினையும் ஒழிதல் கூறல் வேண்டாவாயிற்று என்க . திரிமூர்த்தி நிறமே கொள்க .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 4

துஞ்சிரு ளாடுவர் தூமுறுவல் துளங்குமு டம்பினராய்
அஞ்சுட ராரெரி யாடு வரார்அழ லார்வி ழிக்கண்
நஞ்சுமிழ் நாக மரைக்கசைப் பர்நல னோங்கு நாரையூர்
எஞ்சிவ னார்க்கடி மைப்படு வார்க்கினி யில்லை யேதமே.

பொழிப்புரை :

சிவபெருமான் அனைத்தும் ஒடுங்குகின்ற ஊழிக் காலத்தில் திருநடனம் செய்பவர் . தூய புன்சிரிப்போடு விளங்கும் திருமேனியர் . அழகிய சுடரானது நன்கு எரியும்படி கைகளை வீசி ஆடுவார் . நெற்றியில் நெருப்புக் கண்ணுடையவர் . நஞ்சைக் கக்கும் நாகத்தை அரையில் கச்சாகக் கட்டியவர் . நலம் பெருகச் செய்யும் திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற எம் சிவபெருமானுக்கு அடிமைத் தொண்டு செய்பவர்கட்கு இனி எந்நாளும் துன்பம் என்பதே இல்லை .

குறிப்புரை :

துஞ்சு - அனைத்தும் ஒடுங்கும் . இருள் - இராக்காலமாகிய மகாசங்காரகாலத்தில் ஆடுவாராம் , முறுவல் - புன்சிரிப்போடு , அசையும் உடம்பினராகி , அழகிய ஒளிபொருந்திய தீயின்கண் நின்று ஆடுவார் . ( நெற்றி ) விழியினிடத்து நெருப்பை யுடையவர் . எம் சிவனார்க்கு - எமது சிவபிரானார்க்கு அடிமைப்படுவார்க்கு இனி யெய்தக் கூடியதுன்பு இல்லை . ( ஏதம் - இங்கே துன்பைக் குறித்தது ) ` சிவனும் இவன் செய்தி யெல்லாம் என் செய்தி யென்றும் , செய்த தெனக் கிவனுக்குச் செய்ததென்றும் கொள்வன் ` ( சித்தியார் . சூத் . 10. 1. )

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 5

பொங்கி ளங்கொன் றையினார் கடலில் விடமுண் டிமையோர்கள்
தங்களை யாரிடர் தீர நின்ற தலைவர் சடைமேலோர்
திங்களை வைத்தன லாட லினார்திரு நாரை யூர்மேய
வெங்கனல் வெண்ணீ றணிய வல்லா ரவரே விழுமியரே.

பொழிப்புரை :

சிவபெருமான் , செழித்து விளங்கும் இளங் கொன்றை மலரைச் சூடியவர் . பாற்கடலில் தோன்றிய விடத்தை உண்டு தேவர்களின் பெருந்துயரைத் தீர்த்த தலைவர் . சடைமேல் ஒரு சந்திரனை அணிந்து நெருப்பைக் கையிலேந்தி ஆடுபவர் . திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவர் . வெங்கனலால் நீறாக்கப்பட்ட வெண்ணீற்றினை அணியவல்ல அப்பெருமானே யாவரினும் மேலானவர் ஆவர் .

குறிப்புரை :

பொங்கு - தழைத்த ( இளம் கொன்றையினார் ). கொன்றையினார் - கொன்றையின் நாண் மலரையணிந்தவர் . இளமை - இங்குப் புதுமையை யுணர்த்திற்று . பழம் பூ - முதிய பூவைக் குறிக்கும் . ஆர் இடர் - ஆர்த்த இடர் , பிணித்ததுயர் . ( வெம் ) கனல் வெண்ணீறு அணியவல்லவர் . அவரே விழுமியவர் - ` யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையான் . ( தி .8 திருவெண்பா . 8 )

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 6

பாரு றுவாய் மையினார் பரவும் பரமேட்டி பைங்கொன்றைத்
தாரு றுமார் புடையான் மலையின் றலைவன் மலைமகளைச்
சீரு றுமா மறுகிற் சிறைவண் டறையுந் திருநாரை
யூரு றையெம் மிறைவர்க் கிவையொன் றொடொன் றொவ்வாவே.

பொழிப்புரை :

சிவபெருமான் , இந்நிலவுலகம் முழுவதும் புகழ் பரவும் மெய்யுணர்வுடையவர்களால் வணங்கப்படும் மேலான பரம்பொருள் ஆவார் . பசுமைவாய்ந்த கொன்றை மாலையை அணிந்த மார்புடையவர் . கைலைமலையின் தலைவர் . மலைமகளைச் சிறப்புடன் ஒரு பாகமாகக் கொண்டவர் . வீதிகளில் சிறகுகளையுடைய வண்டுகள் ஒலிக்கின்ற திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருள்கின்ற இறைவர் அணிந்துள்ள பொருள்கள் ஒன்றோடொன்று ஒவ்வாதனவாம் .

குறிப்புரை :

பார் - பூமி முற்றும் . உறு - ( புகழ் ) பரவுதலையுடைய . வாய்மையினார் - சைவ சீலத்தையுடையவர்கள் . பரவும் - துதிக்கும் . பரமேட்டி - மேலான இடத்தில் உள்ளவன் , மேலான யாக சொரூபியாய் உள்ளவன் எனினுமாம் . தார் உறும் மார்பு உடையான் - மாலைகள் அணிந்த மார்பை யுடையவன் . மலையின் தலைவன் - கைலை மலையின் தலைவன் . ` உயர்ந்ததன்மேற்றே யுள்ளுங்காலை ` என்றதனால் ( தொல் . பொருள் . 274) மலை என்ற அளவில் கைலையைக் குறிப்பதறிக . மலைமகளைச் சீர் உறும் - உமாதேவியாரைச் சிறப்போடு தழுவியிருக்கும் . சீர் உறும் - மூன்றன் உருபும் பயனும் தொக்க தொகை . திருநாரையூர் - மறுகில் சிறைவண்டு அறையும் , பூசி எஞ்சிய கலவைகளை வீதியிற் கவிழ்த்தலால் அவற்றில் வண்டுகள் ஒலிக்கும் , திருநாரையூர் என்க . இனிப் புலவியிலெறிந்த பூ மாலைகளில் வண்டுகள் மொய்த்து ஒலித்துலுங்கொள்க .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 7

கள்ளி யிடுதலை யேந்துகை யர்கரி காடர் கண்ணுதலர்
வெள்ளிய கோவண வாடை தன்மேல் மிளிரா டரவார்த்து
நள்ளிரு ணட்டம தாடுவர் நன்னல னோங்கு நாரையூர்
உள்ளிய போழ்தி லெம்மேல் வருவல் வினையாயின வோடுமே.

பொழிப்புரை :

சிவபெருமான் கள்ளிச் செடிகள் நிறைந்த சுடு காட்டில் இடப்பட்ட மண்டையோட்டை ஏந்திய கையையுடையவர் . சுடுகாட்டில் இருப்பவர் . நெற்றிக் கண்ணர் . வெண்ணிறக் கோவண ஆடையை அணிந்து , அதன்மேல் ஒளிரும் , ஆடுகின்ற பாம்பைக் கச்சாகக் கட்டி நள்ளிருளில் நடனமாடுபவர் . நல்ல நலன்களை எல்லாம் மேன்மேலும் பெருகத் தருகின்ற திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானை நினைத்த மாத்திரத்தில் எம்மேல் வருகின்ற வலிய வினைகள் யாவும் ஓடிவிடும் .

குறிப்புரை :

கள்ளி - கள்ளிகளையுடைய மயானத்தில் . ` கள்ளி முதுகாட்டிலாடி கண்டாய் ` ( தி .6. ப .23. பா .4.) இடு - இடப்பட்ட . தலையேந்துகையர் . கரிகாடர் - ` கோயில் சுடுகாடு ` ( தி .8 திருச் சாழல் - 3.) ஆகவுடையவர் . வெள்ளிய கோவண ஆடை ` தூவெளுத்த கோவணத்தை அரையிலார்த்த கீளானை ` ( தி .6. ப .67. பா .1.) நன்னலன் ( நல் + நலன் ) நல்ல நலங்கள் . உள்ளிய போழ்தில் - நினைத்த மாத்திரத்தில் . வல்வினை ஓடும் - ஒளியைக் கண்ட இடத்து இருள் போல ஓடும் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 8

நாமமெ னைப்பல வும்முடை யான்நல னோங்கு நாரையூர்
தாமொம் மெனப்ப றையாழ் குழல் தாளார் கழல்பயில
ஈம விளக்கெரி சூழ்சு டலை யியம்பும் மிடுகாட்டில்
சாம முரைக்கநின் றாடு வானுந் தழலாய சங்கரனே.

பொழிப்புரை :

நலன்களைப் பெருகச் செய்யும் திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமான் பல திருப்பெயர்களை உடையவர் . பறை , யாழ் , குழல் முதலியன தாம் ஒம் என ஒலிக்க , அவற்றொடு ஒத்துத் தம் திருவடிகளில் அணிந்துள்ள கழல்கள் ஒலிக்க , காட்டில் , கொள்ளி விளக்கு எரிய , சாமகானம் ஒலிக்க நின்றாடுகின்ற பெருமான் நெருப்புருவான சங்கரனே ஆவார் .

குறிப்புரை :

நாமம் எனை பலவும் :- ` ஒரு நாமம் ஓருருவம் ஒன்றுமில்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ ` ( தி . 8 தெள்ளேணம் . 1.) என்ற பொருளது . தாம் ஒம் எனப்பறை அறையும் - இம் முழவோசைகள் , யாழ் குழல் தாள் ஆர் கழல் பயில - யாழும் , குழலும் , கழலும் ஆகிய இவற்றோசையோடு ஒத்து ஒலிப்ப . ஈம விளக்கு - கொள்ளி . எரிதல் - நாடக அரங்கிற்கேற்றிய விளக்காக எரிதல் . சுடலை இயம்பும் - சுடலையில் உண்டாகும் ஓசை , ஒலிக்கும் . மயானத்தில் சாமம் உரைக்க - அச்சுடலையோசையே சாமவேதம் ஒலிப்பதாகக் கொண்டு ஆடுவானும் . தழல் ஆய - அக்கினியே சொரூபமான சங்கரனும் ஆம் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 9

ஊனுடைவெண் டலைகொண் டுழல்வா னொளிர்புன் சடைமேலோர்
வானிடைவெண் மதிவைத் துகந்தான் வரிவண் டியாழ்முரலத்
தேனுடைமா மலரன்னம் வைகுந் திருநாரை யூர்மேய
ஆனிடையைந் துகந்தா னடியே பரவா வடைவோமே.

பொழிப்புரை :

சிவபெருமான் ஊனுடை மண்டையோட்டை உண்கலனாகக் கொண்டு , பிச்சையேற்றுத் திரிபவர் . ஒளிர்கின்ற சடைமேல் , வானத்தில் தவழும் வெண்ணிறச் சந்திரனை அணிந்து , மகிழ்பவர் . வரிகளையுடைய வண்டுகள் யாழிசைபோல் ஒலிக்க , தேன் உடைய சிறந்த தாமரை மலரில் அன்னம் தங்க விளங்கும் திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவர் . பசுவில் இருந்து பெறப்படும் பஞ்சகவ்வியங்களால் அபிடேகம் செய்யப் படுதலை விரும்புபவர் . அப்பெருமானின் திருவடிகளை வணங்கி நற் கதி அடைவோமாக !

குறிப்புரை :

ஊன் உடை - ஊனையுடைய வெண்தலை . கொண்டு - பாத்திரமாகக் கொண்டு . உழல்வான் - பிச்சைக்குத் திரிபவன் . சடை மேல் . வான் இடை - ஆகாயத்தில் தவழும் . ( மதி ) வைத்து - அணிந்து (` மத்தமும் மதியமும் வைத்திடும் அரன் மகன் ` என்ற திருப்புகழிலும் இப்பொருள் ஆண்டமை அறிக .) உகந்தான் - மகிழ்ந்தவன் . மா - சிறந்த . மலர் - தாமரை மலரில் . ` பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை ` ஆகையால் மாமலர் - தாமரை மலர் என்க . வரிவண்டு யாழ் போல் ஒலிக்க அவ்வோசையைக் கேட்டுத் தாமரை மலரில் அன்னம் வைகும் திருநாரையூர் . அடியையே பரவி அடைவோமாக .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 10

தூசுபு னைதுவ ராடை மேவுந் தொழிலா ருடம்பினிலுள்
மாசுபு னைந்துடை நீத்தவர்கண் மயனீர்மை கேளாதே
தேசுடை யீர்கள் தெளிந்தடைமின் திருநாரை யூர்தன்னில்
பூசுபொ டித்த லைவ ரடியா ரடியே பொருத்தமே.

பொழிப்புரை :

மஞ்சட் காவி உடை உடுத்தும் புத்தர்களும் , உடம்பிலும் , உள்ளத்திலும் , அழுக்கினைக் கொண்டு ஆடை உடுத்தலை ஒழித்தவர்களாகிய சமணர்களும் கூறும் மயக்கும் தன்மையுடைய மொழிகளைக் கேளாதீர்கள் . மெய்யறிவுடையவர்களே ! சிவபெருமானே மெய்ப்பொருள் என்பதைத் தெளிவாக உணர்ந்து , திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , திருவெண்ணீறு பூசிய தலைவராகிய சிவபெருமானின் திருவடிகளையும் , அவர் அடியார்களின் திருவடிகளையும் வணங்குவதே பொருந்தும் எனக்கொண்டு அவற்றைச் சரணாக அடையுங்கள் .

குறிப்புரை :

தூசு - ஆடையாக . புனை - உடுக்கும் . தொழிலார் - புத்தர் . உடம்பில் - உடம்பிலும் . உள் - மனத்திலும் . மாசு புனைந்து - அழுக்கையும் , அறியாமையையும் அணிந்து . உடை நீத்தவர்கள் - ஆடையை நீக்கியவராகிய சமணர் . ஒழிப்பவற்றைக் கொண்டும் கொள்வனவற்றை யொழித்தும் உள்ளவரென்ற குறிப்பு . மயல் நீர்மை - மயக்கும் உபதேசங்களைக் கேளாது . தேசு உடையீர்கள் - மெய்யறிவுடையீர்களே . தெளிந்து - சிவனே பொருளெனத் தெளிவாக உணர்ந்து . பூசு பொடித் தலைவர் - திருநீறு பூசிய தலைவர் . அடியே பொருத்தம் ஆம் - பொருந்துவது ஆகும் . அவ்வடியையே அடைமின் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 11

தண்மதி தாழ்பொழில் சூழ் புகலித் தமிழ்ஞான சம்பந்தன்
ஒண்மதி சேர்சடை யானுறையுந் திருநாரை யூர்தன்மேல்
பண்மதி யாற்சொன்ன பாடல் பத்தும் பயின்றார் வினைபோகி
மண்மதி யாதுபோய் வான்புகுவர் வானோ ரெதிர்கொளவே.

பொழிப்புரை :

குளிர்ச்சி பொருந்திய சந்திரன் தவழ்கின்ற சோலைகள் சூழ்ந்த திருப்புகலி என்னும் திருத்தலத்தில் அவதரித்த தமிழ் வல்ல ஞானசம்பந்தன் , ஒளி பொருந்திய சந்திரனை அணிந்த சடையையுடைய சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் திருநாரையூர் என்னும் திருத்தலத்தின் மேல் , பயில்வோருக்கு இசையறிவு உண்டாகும் வண்ணம் பாடியருளிய இப்பாடல்கள் பத்தையும் பயின்று ஓத வல்லவர்கள் மண்ணுலக வாழ்க்கை நிலையற்றதென உணர்ந்து அதனை மதியாது , தேவர்கள் எதிர் கொண்டழைக்க வானுலகை அடைவர் .

குறிப்புரை :

தண் மதி தாழ் பொழில் - சந்திரன் தங்கும் சோலை சூழ் புகலித் தமிழ் ஞானசம்பந்தன் திருநாரையூர் தன்மேல் பண்மதியால் சொன்ன. (பயில்வோர்க்கு) இசையறிவு உண்டாகும் வகையாற் பாடிய பாடல் பத்தும் பயின்றார். வினை போகி - வினை நீங்கப் பெற்று. மண் - மண்ணுலக இன்பை மதியாது போய் வானோர் எதிர் கொள்ள வான் புகுவர்.
சிற்பி