திருவலம்புரம்


பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 1

கொடியுடை மும்மதி லூடுருவக் குனிவெஞ் சிலைதாங்கி
இடிபட வெய்த வமரர்பிரா னடியா ரிசைந்தேத்தத்
துடியிடை யாளையொர் பாகமாகத் துதைந்தா ரிடம்போலும்
வடிவுடை மேதி வயல்படியும் வலம்புர நன்னகரே.

பொழிப்புரை :

கொடிகளையுடைய மூன்று மதில்களையும் ஊடுருவிச் செல்லுமாறு மேருமலையை வில்லாக வளைத்துத் தாங்கி , பேரொலியுடன் அம்மதில்கள் அழியும்படி அம்பெய்த தேவர்களின் தலைவரான சிவபெருமான் , அடியார்களெல்லாம் மனமொன்றிக் கூடிப்போற்ற உடுக்கை போன்று குறுகிய இடையுடைய உமா தேவியைப் பிரிவில்லாமல் தம் உடம்பில் ஒரு பாகமாகக் கொண்டு வீற்றிருந்தருளுகின்ற இடமாவது அழகிய எருமைகள் வயலிலே படியும் திருவலம்புரம் என்னும் நன்னகராகும் .

குறிப்புரை :

கொடி - துவசம் . இடிபட - பேரொலி கிளம்ப ( எய்த பிரான் ). துடி - உடுக்கை . துதைந்தார் - பிரிவிலா ஓருடம்பாகக் கொண்டவர் . போலும் உரையசை , ` ஒப்பில்போலி ` என்பர் தொல்காப்பியனார் . வடிவுடை மேதி - அழகுடைய எருமைகள் . தலச் சிறப்பால் அவைகளும் அழகுடையனவாகத் தோன்றும் என்ற குறிப்பு . வலம்புர நன்னகர் துடியிடையாளை ஓர் பாகமாகத் துதைந்தார்க்கிடம் என்க .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 2

கோத்தகல் லாடையுங் கோவணமுங் கொடுகொட்டி கொண்டொருகைத்
தேய்த்தன் றநங்கனைத் தேசழித்துத் திசையார் தொழுதேத்தக்
காய்த்தகல் லாலதன் கீழிருந்த கடவுள் ளிடம்போலும்
வாய்த்தமுத் தீத்தொழி னான்மறையோர் வலம்புர நன்னகரே.

பொழிப்புரை :

சிவபெருமான் காவியுடையும் , கோவணமும் அணிந்தவர் . ஒரு கையில் கொடுகொட்டி என்னும் வாத்தியத்தை ஏந்தி வாசிப்பவர் . மன்மதனை அன்று உருவழியும்படி எரித்தவர் . எல்லாத் திசைகளிலும் உள்ளவர்கள் தொழுது வணங்கும்படி , காய்கள் நிறைந்த கல்லால மரத்தின் கீழ்த் தட்சிணாமூர்த்தி திருக்கோலத்தில் வீற்றிருந்தவர் . அக்கடவுள் விரும்பி வீற்றிருந்தருளும் இடம் , முத்தீ வளர்த்து , நான்கு வேதங்களையும் நன்கு பயின்ற அந்தணர்கள் வாழ்கின்ற திருவலம்புரம் என்னும் நன்னகராகும் .

குறிப்புரை :

கோத்த :- அணிந்த என்னும் பொருளில்வந்தது . காவி தோய்த்த உடையும் , கோவணமும் , ஒரு கையிற் கொடுகொட்டி என்னும் வாத்தியமும் கொண்டு . அநங்கனை - மன்மதனை . தேசு அழித்து - ஒளியுடலைப் போக்கி . தேய்த்து - அழித்து . தேசு - ஆகுபெயர் . மறையோர் ( வாழும் ) வலம்புரம் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 3

நொய்யதொர் மான்மறி கைவிரலின் னுனைமே னிலையாக்கி
மெய்யெரி மேனிவெண் ணீறுபூசி விரிபுன் சடைதாழ
மையிருஞ் சோலை மணங்கமழ இருந்தா ரிடம்போலும்
வைகலு மாமுழ வம்மதிரும் வலம்புர நன்னகரே.

பொழிப்புரை :

இலேசான உடம்பையுடைய மான்கன்றைத் தன் கைவிரல் நுனிமேல் நிலையாக நிற்குமாறு செய்து , நெருப்புப் போன்ற சிவந்த மேனியில் திருவெண்ணீற்றினைப் பூசி , விரிந்த சிவந்தசடை தாழ விளங்கும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , நாள்தோறும் நித்திய பூசையே திருவிழாப்போல் முழவதிரச் சிறப்புடன் நடக்கும் , இருளடர்ந்த பெரிய சோலைகளின் நறுமணம் கமழும் திருவலம்புரம் என்னும் நன்னகராகும் .

குறிப்புரை :

நொய்யது - இலேசான உடம்பை யுடையதாகிய மான்கன்று . மானின் உடம்பு நொய்யதென்றும் அதனாலேயே அது ஏனையவற்றிலும் வேகமாக ஓடக்கூடியதென்றும் வாயு பகவானின் வாகனமாக அதனைக் கூறுவது அதனாலே யென்றும் கூறுப . நுனை - நுனி . நிலை ஆக்கி - நிலையாக நிற்கச் செய்து . மெய் எரி மேனி - உடம்பின் தீப்போன்ற மேனியில் வெண்ணீறுபூசி ( மேனி - உடம்பின் தோற்றப் பொலிவு ). தாழ - தொங்க . மை - இருளடர்ந்த . இரு - பெரிய சோலை ( மணம் ) கமழ - ( இருந்தார் ) காரண காரியப் பொருளின்றி வந்தது . அது ` வாவிதொறும் வண்கமலம் முகங்காட்டச் செங்குமுதம் வாய்கள் காட்டக் காவியிருங் கருங்குவளை கருநெய்தல் கண்காட்டும் கழுமலமே ` ( தி .1. ப .129. பா .1.) வைகலும் - நாடோறும் மாமுழவம் அதிரும் என்றது , நித்திய பூசையே திருவிழாப்போற் சிறப்புற நடக்கும் என்ற குறிப்பு .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 4

ஊனம ராக்கை யுடம்புதன்னை உணரிற் பொருளன்று
தேனமர் கொன்றையி னானடிக்கே சிறுகாலை யேத்துமினோ
ஆனம ரைந்துங்கொண் டாட்டுகந்த வடிக ளிடம்போலும்
வானவர் நாடொறும் வந்திறைஞ்சும் வலம்புர நன்னகரே.

பொழிப்புரை :

தசை முதலியவற்றால் கட்டப்பட்ட இவ்வுடம்பு நிலையற்றது என்பதை உணர்ந்து , அதனைப் பேணுதலையே பொருளாகக் கொள்ளாது , தேன்மணம் கமழும் கொன்றைமாலை அணிந்த சிவபெருமான் திருவடிகளையே சிறுவயது முதல் போற்றி வழிபடுங்கள் . பசுவிலிருந்து பெறப்படும் பஞ்சகவ்வியங்களால் அபிடேகம் செய்யப்படுவதால் மகிழும் தலைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற இடம் தேவர்கள் நாள்தோறும் வந்து வழிபடுகின்ற திருவலம்புரம் என்னும் நன்னகராகும் .

குறிப்புரை :

ஊன் அமர் ஆக்கை உடம்பு - தசை முதலியவற்றை வைத்துக் கட்டப்பட்டதாகிய உடம்பு . அமர் - அமர்த்தியெனப் பகுதியே வினையெச்சப் பொருள் தந்தது , ` அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி ` ( தி .11 திருமுருகாற்றுப் படை . அடி . 58) என்பதுபோல , ` குடி பொன்றி ` ( குறள் . 171) போல , பிறவினை விகுதியும் தொக்கு நின்றது . சிறு காலை - இளவயதிலேயே உடம்பு தன்னை யுணரில் அது பொருள் அன்று எனலறியலாகும் . ஆதலின் அதனைப் பேணுதலையே பொருளாகக் கொள்ளாது , அதனைக் கொன்றையினான் அடிக்கே செலுத்திச் சிறுகாலை ஏத்துமின் என்றவாறு . அவ்வாறு அவனை ஏத்துதற்கு உரியவிடம் அவன் இருந்த வலம்புர நன்னகராம் என்க .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 5

செற்றெறியுந் திரையார் கலுழிச் செழுநீர்கிளர் செஞ்சடைமேல்
அற்றறியா தனலாடு நட்ட மணியார் தடங்கண்ணி
பெற்றறிவா ரெருதேற வல்ல பெருமா னிடம்போலும்
வற்றறியாப் புனல்வாய்ப் புடைய வலம்புர நன்னகரே.

பொழிப்புரை :

கரைகளில் மோதி வீசுகின்ற அலைகளையுடைய கங்கை நதியினை , ஒளி பொருந்திய சிவந்த சடையின்மீது நீங்காது தங்கவைத்த சிவபெருமான் நெருப்பைக் கையிலேந்தி நடனம் செய்பவர் . அழகு பொருந்திய அகன்ற கண்களையுடைய உமா தேவியை ஒரு பாகமாகக் கொண்டவர் . இடபத்தை வாகனமாக ஏற்றவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் , வற்றுதலை அறியாத நீர்பெருகும் வாய்ப்புடைய திருவலம்புரம் என்னும் நன்னகர் ஆகும் .

குறிப்புரை :

செற்று - மோதி . எறியும் - வீசும் . திரை ஆர் - அலைகளையுடைய . கலுழி - ( கங்கை ) நதியின் செழுநீர் சடைமேல் . அற்று அறியாது - நீங்காது தங்குவதாக . அனல் ஆடும் நட்டம் - அனலின்கண் நின்று ஆடும் திருக்கூத்தின் . பெற்று - ( பெற்றி ) தன்மையை . அணி ஆர் - அழகு பொருந்திய . தடம் கண்ணி - விசாலமான கண்களையுடைய உமாதேவியார் . அறிவார் - அறிவாராக . எருது வல்ல பெருமான் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 6

உண்ணவண் ணத்தொளி நஞ்சமுண்டு உமையோ டுடனாகிச்
சுண்ணவண் ணப்பொடி மேனிபூசிச் சுடர்ச்சோதி நின்றிலங்கப்
பண்ணவண் ணத்தன பாணிசெய்யப் பயின்றா ரிடம்போலும்
வண்ணவண் ணப்பறை பாணியறா வலம்புர நன்னகரே.

பொழிப்புரை :

தேவர்கள் அமுதுண்ணும் பொருட்டு , கருநிறமும் ஒளியுமுடைய நஞ்சைத் தாம் உண்டவர் சிவபெருமான் . உமா தேவியை உடனாகக் கொண்டவர் . மணம் பொருந்திய திருவெண்ணீற்றைத் திருமேனியில் பூசியவர் . சுடர்விடும் சோதியாய் விளங்குபவர் . பல்வேறு பண்களில் சிவபூதங்கள் நடனம் செய்பவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , பலவகைப் பட்ட பறை முதலிய வாத்தியங்களின் முழக்கு நீங்காத திருவலம்புரம் என்னும் நன்னகர் ஆகும் .

குறிப்புரை :

உண்ண - தேவர்கள் அமுது உண்ணும் பொருட்டு . அண்ணத்து வாசுகி யென்னும் பாம்பின்மேல் வாலில் . ஒளி - அடங்கியிருந்த . நஞ்சம் - விடம் ( வெளிப்படவே .) உண்டு - அதனை உண்டு . உண்ண என்பதற்கு வினை முதலும் செயப்படு பொருளும் வருவிக்க . சுடர் - கதிரையுடைய . சோதி - ஒளியானது . பண்ண - பண் களினுடைய . வண்ணத்தன - கூறுபாடுகளை யறிந்தனவாகிய பூதங்கள் . பாணி செய்ய - பாட . பயின்றார்க்கு - ஆடல் புரிந்தவராகிய சிவ பெருமானுக்கு வண்ண வண்ணம் பலவகையான . பறை - வாத்தியங்களின் ( சிறப்புப் பெயர் - பொதுப்பெயர்க்காயிற்று ) பாணி - ஓசை . அறா - நீங்காத வலம்புர நன்னகர் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 7

புரிதரு புன்சடை பொன்றயங்கப் புரிநூல் புரண்டிலங்க
விரைதரு வேழத்தி னீருரிதோன் மேன்மூடி வேய்புரைதோள்
அரைதரு பூந்துகி லாரணங்கை அமர்ந்தா ரிடம்போலும்
வரைதரு தொல்புகழ் வாழ்க்கையறா வலம்புர நன்னகரே.

பொழிப்புரை :

முறுக்குண்ட மென்மையான சடை பொன்போல் ஒளிர , முப்புரிநூல் மார்பில் புரண்டு விளங்க , மிக வேகமாகச் செல்லக்கூடிய யானையின் இழுத்து உரிக்கப்பட்ட தோலை உடலின் மேல் போர்த்தி , மூங்கிலையொத்த தோளையுடையவளாய் , இடையில் அழகிய ஆடையை அணிந்துள்ள உமாதேவியை உடனாகக் கொண்டு சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , புலவர்களால் போற்றப்படும் பழம் புகழுடைய , குடிமக்களின் செல்வ வாழ்க்கை என்றும் குறையாத திருவலம்புரம் என்னும் நன்னகர் ஆகும் .

குறிப்புரை :

புரிதரு - முறுக்குண்ட புன்சடை . பொன்தயங்க - பொன்னைப்போல் ஒளிர , புரிநூல் , புரண்டு இலங்க - மார்பில் புரண்டு விளங்க . விரைதரு - விரைந்து செல்ல வல்ல . வேழத்தின் - யானையின் . ஈர் உரித்தோல் - இழுத்து உரித்த தோலை . மேல் - உடம்பின் மேல் . மூடி - போர்த்து . வேய் புரைதோள் - மூங்கிலை யொத்த தோளையுடைய . அரை - இடுப்பில் . தரு - அணிந்த . பூந்துகில் - பொலிவுடைய ஆடை . ஆரணங்கு ( அருமை + அணங்கு ) அரிய தெய்வமாகிய உமாதேவியாரை . அமர்ந்தார் - விரும்பினவராகிய சிவபெருமான் . வரை தரு - புலவராற் கவியெழுதிப் புகழப்படும் . தொல் புகழ் - பழமையான புகழையுடைய . வாழ்க்கை - குடிமக்களின் செல்வம் . அறா - குறையாத . வலம்புர நன்னகர் . வரைதரு புகழ் ` உயர் குடியுட் பிறப்பின் என்னாம் பெயர் பொறிக்கும் பேராண்மை யில்லாக்கடை ` ( நாலடியார் . 199)

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 8

தண்டணை தோளிரு பத்தினொடுந் தலைபத் துடையானை
ஒண்டணை மாதுமை தானடுங்க வொருகால் விரலூன்றி
மிண்டது தீர்த்தருள் செய்யவல்ல விகிர்தர்க் கிடம்போலும்
வண்டணை தன்னொடு வைகுபொழில் வலம்புர நன்னகரே.

பொழிப்புரை :

தண்டு முதலிய ஆயுதங்களையுடைய இருபது தோள்களும் , பத்துத் தலைகளுமுடைய இராவணன் கயிலையைப் பெயர்த்த போது , தம் உடம்போடு ஒன்றாக அணைந்துள்ள உமாதேவி நடுங்க , சிவபெருமான் தம்காற் பெருவிரலை ஊன்றி அவ்வரக்கனின் செருக்கை அடக்கி , பின் அவன் தன் தவறுணர்ந்து துதித்தபோது , அருளும் செய்த மாறுபட்ட தன்மையுடையவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் ஆண் வண்டுகள் தம் பெடை வண்டுகளைத் தழுவித் தங்கும் சோலைகளை உடைய திருவலம்புரம் என்னும் நன்னகர் ஆகும் .

குறிப்புரை :

தண்டு அணை - தண்டு முதலிய ஆயுதங்களைத் தாங்கிய ஒண்டணை ஒன்று . அணை - தம் உடம்போடு ஒன்றாக அணைந்த . மாது உமை - உமை அம்பிகை . ஒரு கால் விரல் - ( கால் ஒரு விரல் ) காலின் ஒரு விரலால் ஊன்றி . மிண்டு - செருக்கை . தீர்த்து - போக்கி . விகிர்தர் - வேறான தன்மையுடையவர் . ` பிறவாதே தோன்றினான் காணாதே காண்பான் துறவாதே யாக்கை துறந்தான் - முறைமையால் ஆழாதே யாழ்ந்தான் அகலாதகலியான் ஊழால் உயராதே யோங்கி னான் ` ( திருக்கயிலாய ஞான உலா . 3-5.) என்றதும் காண்க . ` வண்டு அணை தன்னொடு ` வண்டு - ஆண் வண்டுகள் . அணை தன்னொடு - தாங்கள் தழுவும் பெடைவண்டோடு . வைகு - தங்கும் பொழில் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 9

தாருறு தாமரை மேலயனுந் தரணி யளந்தானும்
தேர்வறி யாவகை யாலிகலித் திகைத்துத் திரிந்தேத்தப்
பேர்வறி யாவகை யானிமிர்ந்த பெருமா னிடம்போலும்
வாருறு சோலை மணங்கமழும் வலம்புர நன்னகரே.

பொழிப்புரை :

மாலையாக அமைதற்குரிய தாமரை மலர்மேல் வீற்றிருக்கும் பிரமனும் , உலகை இரண்டடிகளால் அளந்த திருமாலும் உண்மையை உணரமுடியாது , தம்முள் யார் பெரியவர் என்று மாறுபாடு கொண்டு , முழுமுதற் பொருளின் அடிமுடி காணமுடியாது திகைத்துத் திரிந்து , பின் தம் குற்றம் உணர்ந்து இறைவனைப் போற்றி வணங்க , அசைக்க முடியாத நெருப்புப் பிழம்பாய் நிமிர்ந்து நின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , நீண்ட சோலைகளையுடைய நறுமணம் கமழும் திருவலம்புரம் என்னும் நன்னகர் ஆகும் .

குறிப்புரை :

தார் உறு - தனக்கு மாலையாகப் பொருந்திய . தாமரை மேல் - தாமரை மலர்மேல் தங்கும் . அயனும் - பிரமனும் பிரமனுக்குத் தாமரை மலரே மாலை ; தாமரை மலரே இருக்கை . இகலி - தம்முள் மாறுபட்டு . தேர்வு - அடி முடி தெரிதலை . அறியா வகையால் - அறியாத தன்மையினால் திகைத்துத்திரிந்து . ஏத்த - துதிக்குமாறு , பேர்வு அறியாவகையால் நிமிர்ந்த , அசைக்க முடியாத தன்மையோடு ஓங்கிய பெருமான் . வார் உறு - நெடிய சோலை . வார் - நெடுமை என்னும் பொருளில் வந்த உரிச்சொல் . ` வார்தல் , போகல் , ஒழுகல் , நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள் ` ( தொல்காப்பியம் . சொல் . உரியியல் . 21.)

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 10

காவிய நற்றுவ ராடையினார் கடுநோன்பு மேல்கொள்ளும்
பாவிகள் சொல்லைப் பயின்றறியாப் பழந்தொண்ட ருள்ளுருக
ஆவியு ணின்றருள் செய்யவல்ல வழக ரிடம்போலும்
வாவியி னீர்வயல் வாய்ப்புடைய வலம்புர நன்னகரே.

பொழிப்புரை :

காவி நிறத்தைத் தருவதாகிய துவர்நீரில் தோய்த்த ஆடையினையுடைய புத்தர்களும் , கடுமையான நோன்புகளை மேற்கொள்ளும் பாவிகளாகிய சமணர்களும் கூறும் சொற்களைச் சிறிதும் கேளாத , வழிவழியாகச் சிவனடிமை செய்யும் தொண்டர்கள் உள்ளம் உருகி ஏத்த , அவர்களின் உயிர்க்குள்ளுயிராயிருந்து அருள் செய்யவல்ல அழகர் சிவபெருமான் ஆவார் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் , குளங்களிலிருந்து வயல்கட்குப் பாயும் நீர்வளமுடைய திருவலம்புரம் என்னும் நன்னகர் ஆகும் .

குறிப்புரை :

காவிய கல்துவர் ஆடையினார் - காவியைத் தருவதாகிய நல்ல துவரில் தோய்த்த ஆடையையுடைய புத்தர்களும் , கடுநோன்பு மேல்கொள் பாவிகள் - இரண்டு உவாவும் அட்டமியும் பட்டினி நோன்பையே மேலாகக்கொண்ட பாவிகளாகிய சமணர்களும் ( சிந்தாமணி . 1547) சொல்லும் சொல்லைப் பயின்று அறியா - கேளாத . பழந் தொண்டர் - வழிவழித் தொண்டர்கள் . ஆவியுள் நின்று - அவர்கள் ஆன்மாவினுள் நின்று , அருள் செய்ய வல்ல அழகர் . வாவியில் - குளங்களிலும் . வயல் - வயல்களிலும் நீர் வாய்ப்பு உடைய வலம்புரம் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 11

நல்லிய னான்மறை யோர்புகலித் தமிழ்ஞான சம்பந்தன்
வல்லியந் தோலுடை யாடையினான் வலம்புர நன்னகரைச்
சொல்லிய பாடல்கள் பத்துஞ்சொல்ல வல்லவர் தொல்வினைபோய்ச்
செல்வன சேவடி சென்றணுகிச் சிவலோகஞ் சேர்வாரே.

பொழிப்புரை :

நல்லொழுக்கமுடைய , நான்கு வேதங்களையும் நன்கு கற்று வல்லவர்கள் வாழ்கின்ற திருப்புகலி என்னும் திருத்தலத்தில் அவதரித்த தமிழ் ஞானசம்பந்தன் , புலியின் தோலை ஆடையாக உடுத்திய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருவலம்புரம் என்னும் நன்னகரைப் போற்றிப் பாடிய இப்பாடல்கள் பத்தையும் சொல்ல வல்லவர்கள் , தொல்வினை நீங்கிச் சிவலோகம் சென்றணுகி முத்திச் செல்வத்தைத் தருகின்ற சிவபெருமானின் சேவடிகளைச் சேர்ந்திருப்பர் .

குறிப்புரை :

நல் இயல் - நல்ல ஒழுக்கத்தையுடைய நால்மறையோர் . வல்லியம்தோல் - புலியின் தோலை . உடை ஆடையினான் - இடுப்பில் உடுக்க ஆடையாய்க் கொண்டருளியவன் . சிவலோகம் சென்று அணுகி முத்திச் செல்வத்தை யருள்வானாகிய சிவபெருமான் சேவடியைச் சேர்ந்திருப்பர் என ஈற்றடிக்குப் பொருள் கொள்க .
சிற்பி