திருப்பரிதிநியமம்


பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 1

விண்கொண்ட தூமதி சூடிநீடு விரிபுன் சடைதாழப்
பெண்கொண்ட மார்பில்வெண் ணீறுபூசிப் பேணார் பலிதேர்ந்து
கண்கொண்ட சாயலொ டேர்கவர்ந்த கள்வர்க் கிடம்போலும்
பண்கொண்ட வண்டினம் பாடியாடும் பரிதிந் நியமமே.

பொழிப்புரை :

ஆகாயத்தை இடமாகக் கொண்ட வெண்ணிறப் பிறைச்சந்திரனைச் சூடிய நீண்ட விரிந்த சிவந்த சடைதாழ , உமா தேவியை ஒரு பாகமாகக் கொண்டு தம் திருமார்பில் திருவெண்ணீற்றினைப் பூசி , பெருமைக்கு ஒவ்வாமல் பிச்சை ஏற்று , கண்ணைக் கவரும் தோற்றப்பொலிவொடு வந்து என் அழகைக் கவர்ந்த கள்வரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , வண்டுகள் பண்ணிசையோடு பாடியாடும் திருப்பரிதிநியமம் என்னும் திருத்தலம் ஆகும் .

குறிப்புரை :

விண்கொண்ட - ஆகாயத்தை இடமாகக் கொண்ட . தூமதி - வெண் பிறையை . நீடு - நெடிய . விரி - விரிந்த , புன் சடை . தாழ - தொங்க . பேணார் - ` இரத்தலின் இன்னாததில்லை ` யெனலைப் பேணாதவராய் ( பேணார் - முற்றெச்சம் ). பலி தேர்ந்து - பிச்சைக்கு வருபவராய் . கண்கொண்ட - கண்ணைக் கவரும் . சாயலோடு - ( எனது ) தோற்றப் பொலிவோடு . ஏர் - அழகையும் கவர்ந்த கள்வர்க்கு இடம் போலும் . முற் பதிகத்துக்கு உரைத்ததையேயுரைக்க . பண் கொண்ட - இசையையுடைய . வண்டு இனம் பாடி ஆடும் (- சுற்றித் திரியும் சோலைகளையுடைய ) பரிதி நியமம் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 2

அரவொலி வில்லொலி யம்பினொலி யடங்கார் புரமூன்றும்
நிரவவல்லார் நிமிர்புன் சடைமே னிரம்பா மதிசூடி
இரவில் புகுந்தெ னெழில்கவர்ந்த விறைவர்க் கிடம்போலும்
பரவவல் லார்வினை பாழ்படுக்கும் பரிதிந் நியமமே.

பொழிப்புரை :

வாசுகி என்னும் பாம்பாகிய நாணின் ஓசையும் , மேருமலையாகிய வில்லின் ஓசையும் , காற்று , திருமால் , நெருப்பு ஆகிய அம்பின் ஓசையும் எழ , பகையசுரர்களின் மூன்று புரங்களையும் அழித்துத் தரையோடு தரையாக்கியவர் சிவபெருமான் . நிமிர்ந்த மெல்லிய சடைமேல் கலைநிரம்பாத சந்திரனைச் சூடி இரவில் வந்து என் எழிலைக் கவர்ந்த இறைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , தன்னை வணங்கிப் போற்றுவார்களின் வினையை அழிக்கும் திருப்பரிதிநியமம் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

அரவு ஒலி - வாசுகியென்னும் பாம்பாகிய நாணின் ஓசையும் , வில் ஒலி - மேரு மலையாகிய வில்லின் ஓசையும் . அம்பு ஒலி - காற்று திருமால் நெருப்பு ஆகிய அம்பின் ஓசையும் ஆம் . இவற்றால் , அடங்கார் - பகை யசுரர்களது . புரம் மூன்றும் கோட்டை களையும் . நிரவ வல்லார் - அழித்துத் தரையோடு தரையாக்க வல்லவர் . நிரம்பாமதி - கலை நிறையாத பிறை . புகுந்து - வந்து .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 3

வாண்முக வார்குழல் வாணெடுங்கண் வளைத்தோண் மாதஞ்ச
நீண்முக மாகிய பைங்களிற்றின் னுரிமே னிகழ்வித்து
நாண்முகங் காட்டி நலங்கவர்ந்த நாதர்க் கிடம்போலும்
பாண்முக வண்டினம் பாடியாடும் பரிதிந் நியமமே.

பொழிப்புரை :

ஒளிபொருந்திய திருமுகத்தையும் , நீண்ட கூந்தலையும் , வாள்போன்று ஒளியும் கூர்மையும் மிக்க நீண்ட கண்களையும் மூங்கில் போன்ற மென்மை வாய்ந்த தோள்களையும் உடைய உமாதேவி அஞ்சும்படி , நீண்ட துதிக்கையையுடைய யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டவர் சிவபெருமான் . அவர் நான் நாணம் கொண்டு விளங்குமாறு செய்தவர் . என் பெண்மை நலத்தை இழந்து அவரையே பற்றுமாறு செய்தவர் . அத் தலைவர் வீற்றிருந்தருளும் இடம் வண்டுகள் முரன்று பாடியாடும் திருப்பரிதிநியமம் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

வாள் முகம் - ஒளி பொருந்திய முகத்தையும் . வார் குழல் - தொங்கும் கூந்தலையும் . வாள் நெடும் கண் - வாள் போன்ற நெடிய கண்களையும் . வளைத்தோள் - மூங்கில் போன்ற தோளையும் உடைய . மாது - உமை அம்மையார் , அஞ்ச . பைங் களிறு - கரிய யானை ( பச்சை , நீலம் , கறுப்பு இந்நிறங்களுள் ஒன்றனை மற்றொன்றாகக் கூறுதல் மரபு ) மேல் நிகழ்வித்து - உடம்பின்மேற் போர்த்து . நாண் - பிறர்முன் நான் நாணுதலை . முகம் - என்னிடத்து . காட்டி - உண்டாகச்செய்து . நலம் - பெண்மை நலத்தை . பாண் முகம் - மூக்கால் ஒலித்துப் பாடுதலையுடைய வண்டு இனம் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 4

வெஞ்சுரஞ் சேர்விளை யாடல்பேணி விரிபுன் சடைதாழத்
துஞ்சிருண் மாலையும் நண்பகலுந் துணையார் பலிதேர்ந்து
அஞ்சுரும் பார்குழல் சோரவுள்ளங் கவர்ந்தார்க் கிடம்போலும்
பஞ்சுரம் பாடிவண்டி யாழ்முரலும் பரிதிந் நியமமே.

பொழிப்புரை :

சிவபெருமான் கொடிய பாலைவனம் போன்ற சுடுகாட்டில் நடனம் செய்பவர் . விரிந்த சிவந்த சடை தொங்க அனைவரும் உறங்குகின்ற இரவிலும் , மாலையிலும் , நண்பகலிலும் , பூத கணங்கள் துணைவரப் பிச்சை ஏற்பவர் . அழகிய வண்டுகள் ஒலிக்கக் கூந்தல் சரிய என் உள்ளத்தைக் கவர்ந்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , வண்டுகள் யாழொலி போன்று பஞ்சுரம் முதலிய பண்ணிசைத்துப் பாடும் திருப்பரிதிநியமம் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

வெம் சுரம் - கொடிய பாலைவனம் போன்ற சுடு காட்டில் . சேர் - அடைவதாகிய . ஓர் ஆடல் - ஒரு திருவிளையாடலை . பேணி - மேற்கொண்டு . இருண் மாலை - பின்மாலையாகிய இரவிலும் நடுப்பகலிலும் . துணையார் - பூதங்கள் முதலிய துணையுடையவராய்ப் , பலி தேர்ந்து . அம் - அழகிய . சுரும்பு ஆர் - வண்டுகள் ஒலிக்கும் . குழல் சோர - கூந்தல் சரிய ; கூந்தல் சரிதல் , வளை நெகிழ்தல் முதலியன காதல் கொண்டவர் மெய்ப்பாடுகள் . உள்ளம் - என் உள்ளத்தை , வண்டுகள் பஞ்சுரம் முதலிய பண்களை வண்டுகள் யாழிசை போல முரன்று பாடும் . பாடி முரலும் என்பதன் விகுதி பிரித்து மாறிக் கூட்டுக .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 5

நீர்புல்கு புன்சடை நின்றிலங்க நெடுவெண் மதிசூடித்
தார்புல்கு மார்பில்வெண் ணீறணிந்து தலையார் பலிதேர்வார்
ஏர்புல்கு சாய லெழில்கவர்ந்த விறைவர்க் கிடம்போலும்
பார்புல்கு தொல்புக ழால்விளங்கும் பரிதிந் நியமமே.

பொழிப்புரை :

சிவபெருமான் மென்மையான சடையில் கங்கை நதியைத் தாங்கியதோடு , இளம்பிறைச் சந்திரனையும் சூடியவர் . மலர்மாலை அணிந்த திருமார்பில் திருவெண்ணீறும் அணிந்தவர் . பிரம கபாலம் ஏந்திப் பிச்சையேற்றுத் திரிபவர் . என் தோற்றப் பொலிவையும் , அழகையும் கவர்ந்த அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , உலகம் முழுவதும் பரவிய பழம் புகழையுடைய திருப்பரிதிநியமம் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

தார் - மாலை . புல்கு - பொருந்திய . தலை ஆர் - மண்டையோட்டில் நிறைவிக்கும் பலி தேர்வாராய் . ஏர் புல்கு - அழகோடு கூடிய . சாயல் எழில் - மிக்க தோற்றப் பொலிவை . எழில் - எழுச்சி , வளர்ச்சி . பார் புல்கு - உலகம் முழுவதும் பரவிய தொல் புகழால் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 6

வெங்கடுங் காட்டகத் தாடல்பேணி விரிபுன் சடைதாழத்
திங்கள் திருமுடிமேல் விளங்கத் திசையார் பலிதேர்வார்
சங்கொடு சாய லெழில்கவர்ந்த சைவர்க் கிடம்போலும்
பைங்கொடி முல்லை படர்புறவிற் பரிதிந் நியமமே.

பொழிப்புரை :

சிவபெருமான் மிகுந்த வெப்பமுடைய சுடுகாட்டில் திருநடனம் செய்பவர் . விரிந்த சிவந்த சடைதொங்கச் சந்திரனைத் திருமுடிமேல் சூடியவர் . எல்லாத் திசைகளிலும் சென்று பிச்சையேற்றுத் திரிபவர் . நான் அணிந்துள்ள சங்காலாகிய வளைகள் சோர , என் தோற்றப் பொலிவைக் கவர்ந்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , பசுமையான முல்லைக்கொடி படர்ந்துள்ள திருப்பரிதிநியமம் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

திசை - திசைகளில் . ஆர் - பொருந்திய ( கிடைக்கக் கூடிய ) பலி தேர்வாராய் . சங்கு , சாயல் - எழில் . கவர்ந்த - உடம்பில் தங்காதவாறு செய்த என்பது பொருள் . புறவின் - முல்லை நிலத்தை யடுத்ததாகிய . சைவன் - சிவனுக்கு ஒரு பெயர் ` சைவா போற்றி தலைவா போற்றி ` என்பது திருவாசகம் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 7

பிறைவளர் செஞ்சடை பின்றயங்கப் பெரிய மழுவேந்தி
மறையொலி பாடிவெண் ணீறுபூசி மனைகள் பலிதேர்வார்
இறைவளை சோர வெழில்கவர்ந்த விறைவர்க் கிடம்போலும்
பறையொலி சங்கொலி யால்விளங்கும் பரிதிந் நியமமே.

பொழிப்புரை :

சிவபெருமான் பிறைச்சந்திரனை அணிந்த சிவந்தசடை பின்புறம் விளங்கித் தொங்க , பெரிய மழுப்படையைக் கையிலேந்தி , வேதங்களைப் பாடி , திருவெண்ணீற்றினைப் பூசி வீடுகள்தோறும் பிச்சையேற்றுத் திரிவார் . அவர் , என் முன்கையில் அணிந்துள்ள வளையல்கள் கழன்றுவிழ , என் தோற்றப் பொலிவைக் கவர்ந்த இறைவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் , பறை யொலியும் , சங்கொலியும் விளங்கத் திருவிழாக்கள் நிகழும் திருப்பரிதிநியமம் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

பின் தயங்க - பின்புறம் விளங்கித் தொங்க . மனைகள் - வீடுகளில் . இறை - முன் கையில் அணிந்த . வளை - வளையல்கள் , சோர - நழுவ .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 8

ஆசடை வானவர் தானவரோ டடியா ரமர்ந்தேத்த
மாசடை யாதவெண் ணீறுபூசி மனைகள் பலிதேர்வார்
காசடை மேகலை சோரவுள்ளங் கவர்ந்தார்க் கிடம்போலும்
பாசடைத் தாமரை வைகுபொய்கைப் பரிதிந் நியமமே.

பொழிப்புரை :

அனைத்துயிர்கட்கும் பற்றுக்கோடாக விளங்கும் சிவபெருமான் தேவர்களும் , வித்தியாதரர்களும் உடன் திகழ , அடியவர்கள் அமர்ந்து ஏத்தி வழிபடப்படுபவர் . அவர் , பாவத்தை அடைவியாது நீக்க வல்ல திருவெண்ணீற்றினைப் பூசி வீடுகள்தோறும் சென்று பிச்சை ஏற்றுத் திரிபவர் . அவர் மணிகள் பதிக்கப்பெற்ற மேகலை நழுவி விழுமாறு என்னை மெலியச்செய்து , என் உள்ளம் கவர்ந்தவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் , பசுமையான இலைகளையுடைய தாமரைகள் விளங்கும் பொய்கையுடைய திருப்பரிதிநியமம் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

ஆசு - பற்றுக் கோடாக . அடை - அடையும் . வானவர் தானவரோடு அடியார் . மாசு அடையாத - பாவத்தை அடைவியாது நீக்க வல்ல என்பது ` பராவணமாவது நீறு பாவம் அறுப்பது நீறு ` என்னும் திருநீற்றுப் பதிகத்தாலும் அறிக . காசு - மணிகள் . அடை - பதிக்கப்பெற்ற . மேகலை ` பல் காசு நிறைத்த சில்காழல்குல் ` என்பது திருமுருகாற்றுப்படை . பாசடைத்தாமரை - பசிய இலைகளையுடைய தாமரை .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 9

நாடினர் காண்கிலர் நான்முகனுந் திருமா னயந்தேத்தக்
கூடல ராடல ராகிநாளுங் குழகர் பலிதேர்வார்
ஏடலர் சோர வெழில்கவர்ந்த இறைவர்க் கிடம்போலும்
பாடல ராடல ராய்வணங்கும் பரிதிந் நியமமே.

பொழிப்புரை :

தேடிக் காணாதவர்களாகிய பிரமனும் , திருமாலும் பணிந்து ஏத்த அவர்களிடத்துக் காணக் கூடாதவராகி எம்மிடத்து விளையாடுதலை உடையவராய் நாடோறும் இளமையும் , அழகு முடையவராய்ப் பிச்சையேற்றுத் திரிபவர் , சிவபெருமான் . அவர் இதழ்களையுடைய தாமரை போன்ற என்முகம் சோர்வடைய என் அழகைக் கவர்ந்த கள்வர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் அடியவர்கள் பக்திப் பாடல்களைப் பாடி , ஆடி வணங்கும் திருப் பரிதிநியமம் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

தேடிக் காணாதவர்களாகிய நான்முகனும் திருமாலும் என உம்மை விரிக்க . கூடலர் - அவர்களிடத்துக் காணக் கூடாதவராகி எம்மிடத்து . ஆடலர் ஆகி - விளையாடுதலை யுடையவராய் . நாளும் நாடோறும் . குழகர் - அழகினையுடையவர் . ஏடு அலர் - ( கூந்தலி லணிந்த ) இதழ்களையுடைய மலர்கள் , பாடலர் ஆடலராய் அடியார் வணங்கும் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 10

கல்வள ராடையர் கையிலுண்ணுங் கழுக்க ளிழுக்கான
சொல்வள மாக நினைக்கவேண்டா சுடுநீ றதுவாடி
நல்வளை சோர நலங்கவர்ந்த நாதர்க் கிடம்போலும்
பல்வளர் முல்லையங் கொல்லைவேலிப் பரிதிந் நியமமே.

பொழிப்புரை :

காவிக்கல்லால் துவர்நிறம் பெற்ற ஆடையணிந்த புத்தர்களும் , கையில் உணவு வாங்கி உண்ணும் கழுக்களான சமணர்களும் கூறும் , குற்றமுடைய சொற்களைப் பொருளென நினைக்க வேண்டா . சுட்ட திருவெண்ணீறு அணிந்து , என் நல் வளையல்கள் கழல , என் பெண்மை நலத்தைக் கவர்ந்த தலைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , பெண்களின் பற்களைப் போல அரும்பு அடர்ந்த முல்லைவனமே வேலியாக உடைய திருப் பரிதிநியமம் என்னும் திருத்தலமாகும் . அப்பெருமானை வழிபட்டு உய்வீர்களாக என்பது குறிப்பு .

குறிப்புரை :

கல் - காவிக்கல்லால் . வளர் - நிறம் மிகுந்த . ஆடையர் - புத்தர் . கையில் உண்ணும் கழுக்கள் - ( சமணர் ) ` கழுக்கையர் ` எனப் பின்னர் வருவதறிக . இழுக்கு ஆன சொல் - குற்றமுடைய சொற்களை . சொல்வளமாக - பயனுடைய சொல்லாக . பல் வளர் - மாதர் பற்களைப்போல அரும்பு அடர்ந்த ( முல்லை ) கொல்லை - காடு வேலி - வேலியாகவுடைய .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 11

பையர வம்விரி காந்தள்விம்மு பரிதிந் நியமத்துத்
தையலொர் பாக மமர்ந்தவனைத் தமிழ்ஞான சம்பந்தன்
பொய்யிலி மாலை புனைந்தபத்தும் பரவிப் புகழ்ந்தேத்த
ஐயுற வில்லை பிறப்பறுத்தல் அவலம் அடையாவே.

பொழிப்புரை :

படத்தையுடைய பாம்பு போல மலர் விரிந்த காந்தட்செடிகள் செழித்துள்ள திருப்பரிதிநியமம் என்னும் திருத் தலத்தில் உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு வீற்றிருந்தருளும் பொய்யிலியாகிய சிவபெருமானைப் போற்றி , தமிழ்வல்ல ஞான சம்பந்தன் உண்மையன்போடு அருளிய இப்பத்துப் பாட்டுக்களாலாகிய பாமாலையால் புகழ்ந்து வணங்குபவர்களின் பிறப்பு அறும் என்பதில் ஐயமில்லை . அவர்கட்கு இம்மையில் துன்பம் எதுவும் இல்லை .

குறிப்புரை :

பை அரவம் விரிகாந்தள் - படத்தையுடைய பாம்பு போல மலர் விரிந்த காந்தட் செடிகள் . விம்மு - தழைத்த . படம் விரிந்த மலரையும் தண்டு பாம்பின் உடலையும் ஒக்கும் . காந்தள் - திணைமயக்கம் . பொய்யிலி - சிவனுக்கு ஒரு பெயர் . (` பொய் யிலியைப் பூந்துருத்திக் கண்டேனானே ` அப்பர் திருத்தாண்டகம் ). ஆன் - விகுதிமேல் விகுதி , பிறப்பு அறுக்கப்பட்டு அங்கு அவலம் அடையா என்பதற்குச் சற்றும் ஐயுற வில்லை என்க .
சிற்பி