திருக்கலிக்காமூர்


பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 1

மடல்வரை யின்மது விம்முசோலை வயல்சூழ்ந் தழகாருங்
கடல்வரை யோதங் கலந்துமுத்தஞ் சொரியுங் கலிக்காமூர்
உடல்வரை யின்னுயிர் வாழ்க்கையாய வொருவன் கழலேத்த
இடர்தொட ராவினை யானசிந்தும் மிறைவன் னருளாமே.

பொழிப்புரை :

பூ இதழ்களில் அளவற்ற தேன் பெருகுகின்ற சோலைகளும் , வயல்களும் சூழ , மலைபோன்று வரும் அலைகளில் கலந்து முத்துக்களைக் கடல் சொரிகின்ற திருக்கலிக்காமூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றவனும் , உடல் எல்லையில் தங்கும் உயிர் வாழ்வதற்குக் காரணமான உயிராகிய ஒப்பற்றவனுமாகிய சிவபெருமான் திருவடிகளை வணங்கித் துதிக்கத் துன்பங்கள் தொடரமாட்டா . அத்துன்பங்கட்குக் காரணமான , அநுபவித்துக் கழிந்தவை போக எஞ்சியுள்ள வினைகளும் அழிந்துபோகும் . இறைவனின் திருவருட்சக்தி பதியும் பேரின்பம் பெறுவர் .

குறிப்புரை :

மடல் - பூ இதழ்களில் . வரை இல் - அளவற்ற . மது - தேன் . விம்மு - மிகவும் ஊற்றெடுக்கும் , சோலையும் வயலும் சூழ்ந்து . வரை - மலை போன்ற . ஓதம் - அலைகளில் கலந்து வந்து . முத்தம் - முத்துக்கள் . சொரியும் - சொரியப் பெற்ற . உடல் வரையின் - உடலின் எல்லையுள் ( தங்கும் ). உயிர் - ஆன்மாவின் . வாழ்க்கை ஆய - வாழ்தற்குக் காரணம் ஆம் உயிர் ஆகிய என்றது உடல் உயிர்க்கு இருப்பிடம் ஆதல் போல உயிர் இறைவனுக்கு இருப்பிடம் . எவ் வுயிரும் ஈசன் சந்நிதியதாகும் என்னும் கருத்து . தொடர இருக்கும் வினைகள் தொடரமாட்டா ; எஞ்சிய வினைகளும் சிதறும் ; இறைவன் திருவருட் சத்தி பதியும் ; முடிவிலின்பப் பேறும் உறுவர் என்பது ஈற்றடியின் கருத்து .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 2

மைவரை போற்றிரை யோடுகூடிப் புடையே மலிந்தோதங்
கைவரை யால்வளர் சங்கமெங்கும் மிகுக்குங் கலிக்காமூர்
மெய்வரை யான்மகள் பாகன்றன்னை விரும்ப வுடல்வாழும்
ஐவரை யாசறுத் தாளுமென்பர் அதுவுஞ் சரதமே.

பொழிப்புரை :

மேகம் படியும் மலைபோன்ற அலைகளோடு கூடிவரும் கடல் , கரையின் கண்ணே பருத்த சங்குகளை எங்கும் மிகுதியாகக் குவிக்கும் திருக்கலிக்காமூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற , மலையரசன் மகளான உமாதேவியைத் தம் இடப்பாகமாகக் கொண்டவரான சிவபெருமானை விரும்பி அடைய , அப்பெருமான் நமது உடலில் வாழும் ஐந்து இந்திரியங்களையும் குற்றமறுத்து நம்மை ஆட்கொள்வர் என்று அறிஞர்கள் கூறுவர் . அஃது உண்மையேயாம் .

குறிப்புரை :

ஓதம் - கடலானது . மைவரைபோல் - மேகம் படியும் மலை போன்ற , திரையோடும் கூடி , ( வந்த ) வளர் - பருத்த . சங்கம் - சங்குகளை . கை - கரையின் கண்ணே . மிகுக்கும் - மிகக் குவிக்கும் , ஓதமானது மலை போல் வரும் அலைகளோடு கலந்து வந்த சங்குகளைக் கரையின் மிகக் குவிக்கும் கலிக்காமூர் என்க . மெய் - உடம்பின்கண் . வரையான் மகள் - இமயமலையரையன் மகளாகிய உமையம்மையாரை . பாகன் - இடப்பாகத்தில் உடையவன் . உடல்வாழும் ஐவர் - பஞ்சேந்திரியங்கள் . ஆசு அறுத்து - பற்றுதலை ஒழித்து . ஆளும் - கொள்வான் . சரதம் - நிச்சயம் ஆம் . பாகன் தன்னை விரும்ப அவன் நமது உடலில் வாழும் ஐவரையறுத்து ஆளும் என்பர் என்பது வினைமுடிபு . ஐவர் இகழ்ச்சிக்குறிப்பு ` இவ்வரும் பிறவிப் பௌவநீர் நீந்தும் ஏழையேற் கென்னுடன் பிறந்த ஐவரும் பகையே ` ( தி .9 திருவிசைப்பா . 81.)

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 3

தூவிய நீர்மல ரேந்திவையத் தவர்க டொழுதேத்தக்
காவியி னேர்விழி மாதரென்றுங் கவினார் கலிக்காமூர்
மேவிய வீசனை யெம்பிரானை விரும்பி வழிபட்டால்
ஆவியுள் நீங்கல னாதிமூர்த்தி யமரர் பெருமானே.

பொழிப்புரை :

அபிடேகம் செய்யும் பொருட்டுத் தூய நீரையும் , பூசிக்கும் பொருட்டு மலர்களையும் ஏந்தி வந்து இவ்வுலகத்தவர்களும் , நீலோற்பல மலர்போன்ற கண்களை உடைய பெண்களும் வணங்கிப் போற்ற , என்றும் அழகுடன் திகழும் திருக்கலிக்காமூர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , எம் தலைவனான சிவபெருமானை விரும்பி வழிபட்டால் , ஆதிமூர்த்தியும் தேவர்கட்கெல்லாம் தலைவனுமான அப்பெருமான் உயிரினுள் நீங்கலாகாத தன்மையோடு விளங்குவான் .

குறிப்புரை :

தூவிய நீர்மலரை ஏந்திச் சொரிந்து அபிடேகிக்கும் பொருட்டு நீரையும் சொரிந்து . பூசிக்கும் பொருட்டு மலரையும் முறையே ஏந்தி வந்து வையத்தவர்கள் தொழுது ஏத்தவும் . காவியின் நேர்விழி மாதர் - நீலோற்பல மலரையொத்த விழிகளையுடைய மாதர்கள் , தொழுதேத்தவும் ( அதனால் என்றும் ). கவின் ஆர் - அழகு நிறைந்த , கலிக்காமூர் . தூவிய ( நீர் மலரேந்தி ) சுருங்கச் சொல்லல் என்னும் அழகு . அது செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம் . வையத்தவர் - பூமியிலுள்ளவர்களாகிய ( ஆடவரும் ) காவியின் நேர்விழி மாதரும் தொழுதேத்தக் கவினார் கலிக்காமூர் என்க . மாதர் என , பின்வருதலால் வையத்தவர் என்பது பெண்ணொழி மிகு சொல் . தொழுதேத்த இடை நிலைத் தீவகம் . ஆதி மூர்த்தியாகிய அவ் அமரர் பெருமான் உயிருள் நீங்கலனாம் தன்மை விளங்கத் தோன்றுவன் என்பது ஈற்றடியின் பொருள் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 4

குன்றுகள் போற்றிரை யுந்தியந்தண் மணியார் தரமேதி
கன்றுடன் புல்கியா யம்மனைசூழ் கவினார் கலிக்காமூர்
என்றுண ரூழியும் வாழுமெந்தை பெருமா னடியேத்தி
நின்றுணர் வாரை நினையகில்லார் நீசர் நமன்றமரே.

பொழிப்புரை :

குன்றுகளைப் போன்ற உயர்ந்த கடலலைகள் அழகிய குளிர்ச்சி பொருந்திய முத்துக்களைத் தள்ளிக் கொண்டு வந்து சேர்த்தலும் , எருமைக் கூட்டங்கள் கன்றுகளோடு கூடித் தத்தம் மனைகளைச் சென்று சேர்தலுமுடைய அழகு பொருந்திய திருக்கலிக்காமூர் என்ற திருத்தலத்தில் ஊழிக்காலத்திலும் வீற்றிருந்தருளும் எந்தையாகிய சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி நின்று வழிபடுகின்ற அடியவர்களை நினையாதவர்கள் கீழ்மக்கள் ஆவர் . அவர்கள் இயமனது சுற்றத்தாரும் ஆவர் .

குறிப்புரை :

திரை உந்தி - அலைகளால் தள்ளப்பட்டு . அம் தண் - அழகிய குளிர்ச்சி பொருந்திய . மணி - முத்துக்கள் . மேதி ஆயம் - எருமைக் கூட்டங்கள் . கன்றுடன் - கன்றுகளோடு . புல்கி - சேர்ந்து . மனைசூழ் கவின் ஆர் - மருதத்திணையின் அழகுமிக்க கலிக்காமூர் . திணை மயக்கம் என்று உணர்க . ஊழியும் - சூரியனை முதன் முதலின் அறிந்த கற்பகாலத்திலும் வாழும் எந்தை பெருமான் . உலகம் படைக்கப்பட்ட நாள் தொட்டுள்ள தலம் அது என்பது கூறியவாறு . ஏத்தி நின்று உணர்வாரை நினையாதவர் நீசர் . இங்கே கொடியவரென்னும் பொருட்டு .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 5

வானிடை வாண்மதி மாடந்தீண்ட மருங்கே கடலோதங்
கானிடை நீழலிற் கண்டல்வாழுங் கழிசூழ் கலிக்காமூர்
ஆனிடை யைந்துகந் தாடினானை யமரர் தொழுதேத்த
நானடை வாம்வண மன்புதந்த நலமே நினைவோமே.

பொழிப்புரை :

வானத்தில் ஒளிரும் சந்திரனைத் தொடுமளவு உயர்ந்த மாடங்களும் , பக்கங்களில் கடலலைகள் மோதச் சோலைகளில் நிழலில் செழித்து வளரும் தாழைகளும் கொண்டு உப்பங் கழிகள் சூழ்தலுமுடையது திருக்கலிக்காமூர் . இத்திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றவரும் , பசுவிலிருந்து பெறப்படும் பஞ்ச கவ்வியங்களால் அபிடேகம் செய்யப்படுகின்றவரும் ஆய சிவபெரு மானைத் தேவர்கள் தொழுது போற்ற அவர்கள் அடையாத நலன்களை அடியேன் அடையும் வண்ணம் அன்புடன் அவன் அருள்புரிந்த சிறப்பினை என்றும் நினைந்து போற்றுவோமாக !

குறிப்புரை :

வான் இடை - ஆகாயத்தில் . தீண்ட - அளாவ . மருங்கே - பக்கத்திலே . கடல் ஓதம் - கடல் திரைகள் ( மோத ). கான் - கடற்கரைச் சோலை . கண்டல் - தாழைகள் . வாழும் - செழிக்கும் . அன்பு தந்த நலம் - பேருதவி . அமரர் தொழுது ஏத்த , காரியப்பொருளில் வந்த வினையெச்சம் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 6

துறைவளர் கேதகை மீதுவாசஞ் சூழ்வான் மலிதென்றல்
கறைவள ருங்கட லோதமென்றுங் கலிக்குங் கலிக்காமூர்
மறைவள ரும்பொரு ளாயினானை மனத்தா னினைந்தேத்த
நிறைவள ரும்புக ழெய்தும்வாதை நினையா வினைபோமே.

பொழிப்புரை :

கடற்கரையில் வளர்ந்துள்ள தாழையின் பூவின் நறுமணத்தைக் கவர்ந்து வீசுகின்ற தென்றலோடு , மிக்க கருநிறமுடைய கடலலைகள் எக்காலத்தும் ஒலிக்கின்ற திருக்கலிக்காமூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற , நால்வேதங்களின் உட் பொருளாக விளங்கும் சிவபெருமானை மனத்தால் நினைந்து போற்ற எக்காலத்தும் அழியாத புகழ் வந்து சேரும் . துன்பம் வந்து சேர நினையாது . அத்துன்பத்திற்குக் காரணமான வினைகளும் நீங்கும் .

குறிப்புரை :

துறை - கடல் துறை . கேதகை - தாழை . வாசம் - மகரந்தத்தை ( வாசம் - காரிய ஆகு பெயர் ) சூழ்வான் - தன் உடல் முழுதும் பூசிக்கொள்வதன் பொருட்டு . மலி - மிக வீசுகின்ற தென்றற் காற்றோடு . கறை வளரும் - மிகக் கருமையையுடைய கடல் . ஓதம் - அலைகள் . கலிக்கும் - ஆரவாரிக்கும் . மறை வளரும் - வேதத்தில் எவரினும் எடுத்து வற்புறுத்தப்படும் பொருள் ஆயினானை நினைந்து ஏத்த . நிறை ( புகழ் ) வளரும் புகழ் எய்தும் . வாதை - வாதனாமலம் . நினையா - நம்மையடைய நினையமாட்டா . வினைகளும் போம் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 7

கோலநன் மேனியின் மாதர்மைந்தர் கொணர்மங் கலியத்திற்
காலமும் பொய்க்கினுந் தாம்வழுவா தியற்றுங் கலிக்காமூர்
ஞாலமுந் தீவளி ஞாயிறாய நம்பன் கழலேத்தி
ஓலமி டாதவ ரூழியென்று முணர்வைத் துறந்தாரே.

பொழிப்புரை :

அழகிய நல்ல மேனியுடைய மகளிரும் , ஆடவரும் , காலமழை பொய்த்தாலும் , பூசைக்குரிய மங்கலப் பொருள்களை வழுவாது கொண்டுவந்து சேர்த்துப் பூசை நடத்தும் சிறப்புடையது திருக்கலிக்காமூர் என்னும் திருத்தலமாகும் . அங்கு வீற்றிருந்தருளுகின்ற நிலம் , நீர் , தீ , காற்று , ஆகாயம் , ஞாயிறு , திங்கள் ஆன்மா என்னும் அட்டமூர்த்தமாகிய சிவபெருமானின் திருவடிகளை வணங்கி , உள்ளம் உருகி ஓலமிடாதவர்கள் ஊழிக்காலம் வரை வாழ்ந்தாலும் சிவஞானம் கைவரப் பெறாதவர் ஆவர் .

குறிப்புரை :

மாதரும் , மைந்தரும் . கொணர் - பூசித்தற்குக் கொணர்ந்த . மாங்கலியத்தில் வழிபடற் குரிய சிறந்த பொருள்களால் கால மழை முதலியன பொய்த்தாலும் தமது பூசை சிறிதும் குறையாதபடி பூசிக்கும் கலிக்காமூர் . சிவன் - மங்கலகரமானவன் . ஆகவே அவனைச் சேர்ந்த பொருள்களும் , அவனுக்கு உரிய பொருள்களும் மங்களகரமாம் . ஆதலால் மாங்கலியம் என்பதற்கு - சிவனைப் பூசித்தற்குரிய பொருள்கள் என்று பொருள் . காரணப்பெயர் . ஞாலம் - நிலம் . வளி - காற்று . ஞாயிறும் ஆய என உம்மையைப் பிரித்துக் கூட்டுக , அது எதிரது தழுவிய எச்ச உம்மையாதலால் அட்டமூர்த்தங்களுள் ஏனையவும் கொள்ளப்படும் . அவை :- வான் , நீர் மதி , உயிர் என்பன . ஓலமிடுதல் - ` ஆரூரா என்றென்றே யலறா நில்லே ` ( தி .6. ப .31. பா .3.) ` கற்றாமன மெனக் கதறிப் பதறியும் ` ( தி .8 போற்றித் திருவகவல் . அடி . 73.) ஓலமிடாதவர் ஊழி வாழினும் சிவஞானம் கைவரப் பெறா என்பது ஈற்றடியின் கருத்து . உணர்வு - சிவஞானம் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 8

ஊரர வந்தலை நீண்முடியா னொலிநீ ருலகாண்டு
காரர வக்கடல் சூழவாழும் பதியாங் கலிக்காமூர்
தேரர வல்குலம் பேதையஞ்சத் திருந்து வரைபேர்த்தான்
ஆரர வம்பட வைத்தபாத முடையா னிடமாமே.

பொழிப்புரை :

ஊருகின்ற பாம்பைத் தலையிலுள்ள நீண்ட முடியில் அணிந்து , ஒலிக்கின்ற நீரையுடைய இவ்வுலகம் முழுமையும் ஆண்டு , கறுத்த ஆரவாரமுடைய கடல்சூழச் சிவபெருமான் வீற்றிருந்தருளும்பதி திருக்கலிக்காமூர் என்பதாம் . அது தேர் போன்ற அகன்ற அல்குலையுடைய உமாதேவி அஞ்சும்படி திருக்கயிலை மலையைப் பெயர்த்த இராவணன் அதன்கீழ் நசுக்குண்டு அலறும்படி தம் திருப்பாத விரலை ஊன்றிய சிவபெருமானுடைய இருப்பிடமாகும் .

குறிப்புரை :

ஆள்பவருக்கு முடி இன்றியமையாது வேண்டப் படுதலின் ஊரும் பாம்பைத் தலையிற் சுற்றிய முடியால் உலகாண்டு என்றார் . ` உலகாண்டு ` என்பது ` மண்ணுலகம் விண்ணுலகம் உம்மதே ஆட்சி ` ( தி .7. ப .46. பா .9.) ஆர் அரவம்பட - மிகக் கதற வைத்த பாதம் உடையான் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 9

அருவரை யேந்திய மாலுமற்றை யலர்மே லுறைவானும்
இருவரு மஞ்ச வெரியுருவா யெழுந்தான் கலிக்காமூர்
ஒருவரை யான்மகள் பாகன்றன்னை யுணர்வாற் றொழுதேத்தத்
திருமரு வுஞ்சிதை வில்லைச்செம்மைத் தேசுண் டவர்பாலே.

பொழிப்புரை :

கோவர்த்தன மலையைக் குடையாகத் தூக்கிய திருமாலும் , தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் ஆகிய இருவரும் அஞ்சும்படி பெருஞ்சோதி வடிவாய் நின்றவரும் , திருக்கலிக்காமூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருள்கின்றவரும் , ஒப்பற்ற மலை அரசன் மகளை ஒரு பாகமாக உடையவருமான சிவபெருமானை மெய்யுணர்வால் தொழுது போற்றுபவர்களைச் செல்வம் வந்தடையும் . அவர்கட்கு எவ்விதக் குறைவும் இல்லை . மேலும் அவர்களிடம் செம்மையான சிவஞானம் உண்டாகும் . அச்சிவஞானத்தால் முத்திபெறுவர் என்பது குறிப்பு .

குறிப்புரை :

வரை - கோவர்த்தன மலை . ஒரு - ஒப்பற்ற . செம்மை - முத்தி . தேசு - சிவஞானம் . உண்டு - உளதாகும் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 10

மாசு பிறக்கிய மேனியாரு மருவுந் துவராடை
மீசு பிறக்கிய மெய்யினாரு மறியா ரவர்தோற்றங்
காசினி நீர்த்திரண் மண்டியெங்கும் வளமார் கலிக்காமூர்
ஈசனை யெந்தை பிரானையேத்தி நினைவார் வினைபோமே.

பொழிப்புரை :

நீராடாததால் அழுக்கு உடலையுடைய சமணர்களும் , மஞ்சட் காவியாடையைப் போர்த்திய உடலையுடைய புத்தர்களும் சிவபெருமானது பெருமையை அறியாதவர்கள் . எனவே அவர்களைப் பின்பற்றாது இந்நிலவுலகில் நீர்ப்பெருக்கு எங்கும் நிறைந்து நல்லவளம் பொருந்திய திருக்கலிக்காமூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற எம் தந்தையும் தலைவனுமான சிவபெருமானைப் போற்றித் தியானிப்பவர்களுடைய வினைகள் நில்லாது போம் .

குறிப்புரை :

மாசு - அழுக்கை . பிறக்கிய - மிகுவித்த . மேனியார் - சமணர் . மீசு ( மீது ) - மேல் . பிறக்கிய - விளங்குவித்த , போர்த்த மெய்யினார் - புத்தர் . பிறங்கிய - பிறக்கிய என ஈரிடத்தும் பிறவினை . மீசு , மீது என்பதன் மரூஉ . போலியெனினுமாம் . காசினி - பூமி . நீர்த்திரள் - நீர்ப்பெருக்கு .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 11

ஆழியு ணஞ்சமு தாரவுண்டன் றமரர்க் கமுதுண்ண
ஊழிதொறும்முள ராவளித்தா னுலகத் துயர்கின்ற
காழியுண் ஞானசம் பந்தன்சொன்ன தமிழாற் கலிக்காமூர்
வாழி யெம்மானை வணங்கியேத்த மருவா பிணிதானே.

பொழிப்புரை :

பாற்கடலில் தோன்றிய நஞ்சை அமுதமாகத் தாம் உண்டு அன்று தேவர்கட்கு அமுதத்தை அளித்து ஊழிதோறும் நிலைத்திருக்குமாறு அருள்செய்தவர் சிவபெருமான் . இவ்வுலகில் உயர்ச்சியடைகின்ற சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இத்தமிழ்ப் பாமாலையால் , திருக்கலிக்காமூர் என்னும் திருத்தலத்தில் வாழும் எம் தந்தையாகிய சிவபெருமானை வணங்கிப் போற்ற , அவ்வாறு வணங்குபவர்களை நோய்கள் வந்து அணுகா .

குறிப்புரை :

அமுதுண்ணவும் ( அதனால் ) ஊழிதோறும் உளரா ( க ) - பல ஊழிகள்தோறும் சாவாமலிருக்கவும் அமரர்க்கு அளித்தான் - ( நஞ்சு அமுது ஆர உண்டு ) தேவர்களுக்கு அருள் புரிந்தவன் . பிணி - உயிரைப்பற்றி நிற்பனவாகிய மலங்கள் மருவா .
சிற்பி