திருவலஞ்சுழி


பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 1

பள்ளம தாய படர்சடைமேற் பயிலுந் திரைக்கங்கை
வெள்ளம தார விரும்பிநின்ற விகிர்தன் விடையேறும்
வள்ளல் வலஞ்சுழி வாணனென்று மருவி நினைந்தேத்தி
உள்ள முருக வுணருமின்க ளுறுநோ யடையாவே.

பொழிப்புரை :

பள்ளம் போன்ற உட்குழிவுடைய படர்ந்த சடைமீது அலைகளையுடைய கங்கை நீர்ப் பெருக்கை விரும்பித் தாங்கி நின்ற வேறுபட்ட தன்மையுடையவர் சிவபெருமான் . அவர் இடபவாகனத்தில் ஏறும் வள்ளல் . திருவலஞ்சுழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவர் . அப்பெருமானை நினைந்து போற்றி உள்ளம் உருக உணருமின்கள் . உறுநோய் உங்களை அணுகாது .

குறிப்புரை :

பள்ளம் போன்ற சடைமீது கங்கைப் பெருக்கு தங்க விரும்பி நின்ற , விகிர்தன் - வேறுபட்ட தன்மையையுடையவன் ; தண்ணீர் தேங்கி நிற்குமிடம் பள்ளம் ஆகையினால் , சடையைப் பள்ளம் என்றார் . வள்ளல் வலஞ்சுழியில் ( வாழ்நன் என்பதன் மரூஉ வாணன் ) வாழுபவன் என்று அங்கேபோய்ச் சேர்ந்து , நினைந்து , ஏத்தி உள்ளம் உருக உணருமின்கள் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 2

காரணி வெள்ளை மதியஞ்சூடிக் கமழ்புன் சடைதன்மேல்
தாரணி கொன்றையுந் தண்ணெருக்குந் தழைய நுழைவித்து
வாரணி கொங்கைநல் லாள்தனோடும் வலஞ்சுழி மேவியவர்
ஊரணி பெய்பலி கொண்டுகந்த வுவகை யறியோமே.

பொழிப்புரை :

சிவபெருமான் , கருமேகத்திற்கு அழகு செய்கின்ற வெண்ணிறச் சந்திரனைச் சூடி , இயற்கை மணம் கமழும் சிவந்த சடைமேல் அழகிய கொன்றைமாலையையும் , குளிர்ச்சி பொருந்திய எருக்கம் பூ மாலையையும் நிரம்ப அணிந்துள்ளவர் . கச்சணிந்த அழகிய கொங்கைகளை உடைய உமாதேவியோடு திருவலஞ்சுழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவர் . ஊர்கள்தோறும் சென்று அவர் பிச்சையேற்று மகிழ்ந்த பெருமையைச் சிற்றறிவுடைய யாம் எங்ஙனம் அறிவோம் ? அறிய இயலவில்லை .

குறிப்புரை :

கார் அணி - மேகத்துக்கு அழகுசெய்கின்ற . வெள்ளை வெண்மையான . கமழ் - இயற்கையாக மணம் வீசுகின்ற , புன்சடை தழைய - மகாதேவனாகிய சிவன் அணியப்பெறுதலால் என்றும் வாடாத தன்மையுற . நுழைவித்து - செருகி , ந ( ல் ) லாள் தன்னோடும் வலஞ்சுழி மேவியவர் . ஊர் அணி - வரிசையான ஊர்கள் . ` இன்னாமை வேண்டின் இரவு எழுக ` என்பவும் , துன்புறுதற்குரிய பலிகொண்டே மகிழ்ச்சியுறுவரானால் , அவர் செய்கை சிற்றறிவோம் எங்ஙனம் அறிவோம் என்பார் , பெய்பலி கொண்டுகந்த உவகையறியோமே என்றார் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 3

பொன்னிய லுந்திரு மேனிதன்மேற் புரிநூல் பொலிவித்து
மின்னிய லுஞ்சடை தாழவேழ வுரிபோர்த் தரவாட
மன்னிய மாமறை யோர்கள்போற்றும் வலஞ்சுழி வாணர்தம்மேல்
உன்னிய சிந்தையி னீங்ககில்லார்க் குயர்வாம் பிணிபோமே.

பொழிப்புரை :

சிவபெருமான் பொன்போன்ற அழகிய திருமேனி மீது முப்புரிநூல் அழகுற விளங்குமாறு அணிந்துள்ளவர் . மின்னலைப் போல ஒளிவீசும் சடைதாழ , யானையின் தோலை உரித்துப் போர்த்தவர் . ஆடும் பாம்பை அணிந்தவர் . நிலைபெற்ற , பெருமையுடைய வேதங்களில் வல்ல அந்தணர்கள் போற்றும் திருவலஞ்சுழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானை இடையறாது சிந்தித்து வழிபடும் அடியவர்கட்கு எல்லா நலன்களும் உண்டாகும் . நோய் நீங்கும் .

குறிப்புரை :

மின் இயலும் - ஒளி பொருந்திய , சடை , தாழ - தொங்க . அரவு ஆட வலஞ்சுழிவாணராயிருப்பவர் என்க . உயர்வு ஆம் - முத்தி எய்தும் . உயர்வு ஆகுபெயர் . உன்னிய சிந்தையின் நீங்ககில்லார் என்றது ` ஓயாதே உள்குவார் ` என்ற கருத்து ( தி .8 திருவாசகம் ).

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 4

விடையொரு பாலொரு பால்விரும்பு மெல்லியல் புல்கியதோர்
சடையொரு பாலொரு பாலிடங்கொள் தாழ்குழல் போற்றிசைப்ப
நடையொரு பாலொரு பால்சிலம்பு நாளும் வலஞ்சுழிசேர்
அடையொரு பாலடை யாதசெய்யுஞ் செய்கை யறியோமே.

பொழிப்புரை :

சிவபெருமானுக்கு இடபவாகனம் ஒரு பக்கம் , விரும்பிச் சேர்ந்த மெல்லியல்புடைய கங்காதேவி ஒரு பக்கம் . விரிந்து பரந்த சடை ஒரு பக்கம் . தாழ்ந்த கூந்தலையுடைய உமாதேவி ஒரு பக்கம் . ஏறுபோல் பீடுநடை பயிலும் திருவடி ஒருபக்கம் . சிலம்பு அணிந்த திருவடி ஒருபக்கம் . திருவலஞ்சுழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமானை நாளும் வழிபடுக . முற்கூறியவை வேறெங்கும் சென்றடையாது சிவனையே அடையும் சிறப்பைச் சிற்றறிவுடைய நாம் அறியோம் .

குறிப்புரை :

விடை ஒருபால் - இடபம் ஒருபுறம் , ஒருபால் ...... மெல்லியல் - ஒருபுறம் அம்பிகை . மெல்லியல் புல்கியதோர் சடை - கங்காதேவி தங்கியதாகிய சடை . ஒருபால் ( மெல்லியல் என்ற தொடரை மீளவும் கூட்டிப் பொருள் கொள்க . ` பாதமலர் சூடுகின்றிலை சூட்டுகின்றதுமிலை ` என்னும் திருவாசகத்திற்போல இடம் ஒருபால் கொள் குழல் என்று கூட்டி இடப்பக்கமாகிய ஒருபால் பொருந்திய குழல் என்க . நடை ஒருபால் - ஏறுபோற் பீடுநடை நடக்கும் திருவடி ஒருபால் . நடை - காரிய ஆகுபெயர் . சிலம்பு ஒருபால் - சிலம்பு அணிந்த திருவடி ஒருபால் . சிலம்பு - தானியாகு பெயர் . ஒரு பால் - வேறு ஓரிடத்தும் . அடையாத - இல்லாததாகிய . அடை ( வு ) - முறைமையையும் . ( அடை - விகுதிபுணர்ந்து கெட்ட பண்புப் பெயராக ). செய்யும் செய்கை - பொருந்தாதன செய்யும் செய்கையும் . சிற்றறிவுடையேம் எங்ஙனம் அறிவோம் என்பது ஈற்றடியின் கருத்து .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 5

கையம ரும்மழு நாகம்வீணை கலைமான் மறியேந்தி
மெய்யம ரும்பொடிப் பூசிவீசுங் குழையார் தருதோடும்
பையம ரும்மர வாடவாடும் படர்சடை யார்க்கிடமாம்
மையம ரும்பொழில் சூழும்வேலி வலஞ்சுழி மாநகரே.

பொழிப்புரை :

இறைவன் கையில் மழு , பாம்பு , வீணை , கலை மான்கன்று என்பனவற்றை ஏந்தியுள்ளவர் . திருமேனியில் திரு வெண்ணீற்றைப் பூசியுள்ளவர் . ஒளியை வீசிஅசைகின்ற குழையும் தோடும் காதில் அணிந்துள்ளவர் . படமாடும் பாம்பை அணிந்து நடனமாடுபவர் . படர்ந்த சடையையுடைய அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் , நாற்புறமும் வேலிபோன்று , இருளடர்ந்த சோலைகள் சூழ்ந்த திருவலஞ்சுழி என்னும் மாநகரமாகும் .

குறிப்புரை :

கையின்கண் விரும்பத்தக்க , நாகம் , வீணை , கலைமான் கன்று , இவற்றையேந்தி , மெய் - உடம்பில் . அமர்தல் - விரும்புதல் . வீசும் - ஒளியை வீசுகின்ற ( எனச் செயப்படுபொருள் வருவிக்க ) குழையும் . ஆர் தரு - பொருந்திய , தோடும் , அரவும் ஆடும்படி , திருக்கூத்தாடும் சடையார்க்கிடம் . மை - கருமை . பொழில் வேலியாகச் சூழும் வலஞ்சுழி .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 6

தண்டொடு சூலந் தழையவேந்தித் தையலொருபாகம்
கண்டிடு பெய்பலி பேணிநாணார் கரியி னுரிதோலர்
வண்டிடு மொய்பொழில் சூழ்ந்தமாட வலஞ்சுழி மன்னியவர்
தொண்டொடு கூடித் துதைந்துநின்ற தொடர்பைத் தொடர்வோமே.

பொழிப்புரை :

சிவபெருமான் தண்டு , சூலம் இவற்றை ஒளிமிக ஏந்தியுள்ளவர் . உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டுள்ளவர் . இடப்படுகின்ற பிச்சையை விரும்பி ஏற்பதில் வெட்கப்படாதவர் . யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டவர் . வண்டுகள் மொய்க்கின்ற சோலைகள் சூழ்ந்த மாடங்களையுடைய திருவலஞ்சுழி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருள்பவர் . அப்பெருமான் திருத்தொண்டர்களோடு கூடி நெருங்கி நின்று அருள்வதை உணர்ந்து , நாமும் அவருடைய தொடர்பைத் தொடர்வோமாக !

குறிப்புரை :

தழைய - ஒளிமிக . ஒருபாகம் கண்டு - ஒருபால் குடிகொண்டு . இடுதல் - போடுதல் . பெய்தல் - வார்த்தல் ; எனவே இட்டும் , வார்த்தும் ஈயும் பிச்சை என்பது இடுபெய்பலி என்பதன் பொருளாகக் கொள்க . தொண்டு - தொண்டர் . தொடர்பைத் தொடர்வோம் - பின்பற்றுவோம் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 7

கல்லிய லும்மலை யங்கைநீங்க வளைத்து வளையாதார்
சொல்லிய லும்மதின் மூன்றுஞ்செற்ற சுடரா னிடர்நீங்க
மல்லிய லுந்திர டோளெம்மாதி வலஞ்சுழி மாநகரே
புல்கிய வேந்தனைப் புல்கியேத்தி யிருப்பவர் புண்ணியரே.

பொழிப்புரை :

சிவபெருமான் கல்லின் தன்மை பொருந்திய மேருமலையை அதன் கடினத்தன்மை நீங்க வளைத்து , செருக்குற்ற திரிபுர அசுரர்களின் , பழிச்சொல்லுக்கு இடமாகிய மும்மதில்களையும் அழித்தவர் . ஒளிவடிவானவர் . அடியவர்களின் இடர் நீங்க , மற்போர் பயின்ற திரண்ட தோளையுடைய எம் முதல்வராய்த் திருவலஞ்சுழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் . மன்னுயிர்களை ஆளும் அரசரான அச்சிவபெருமானைச் சார்ந்து போற்றி வழிபடுபவர்கள் புண்ணியர்கள் ஆவர் .

குறிப்புரை :

கல் இயலும் மலை - கல்லின் தன்மை பொருந்திய மலை , மேரு . நீங்க - ( கல்லின் தன்மை ) வளையாமை நீங்க . அம்கை - அழகிய கையால் , வளைத்து . வளையாதார் - செருக்குற்ற திரிபுரத் தசுரர் . சொல் இயலும் - பழிச்சொல்லுக்கு இடமாகிய , மதில் . செற்ற - அழித்த . சுடரான் - ஒளிவடிவானவன் . இடர் நீங்க - அடியாருக்கு இடர் நீங்கும் பொருட்டு . மல் இயலும் - மற்போர் பயின்ற . திரள் தோள் - திரண்ட தோளையுடைய . எம் ஆதி - எமது முதல்வனும் , திருவலஞ் சுழியாகிய பெரிய தலத்தையே . புல்கிய - இடமாகக் கொண்டருளிய . வேந்தனை - அரசனுமாகிய சிவபெருமானை . ஆன்மாக்கள் குடிகளாக அவற்றை ஆளுந்தன்மையால் இறைவனை ` வேந்தன் ` என்றார் . ` வேந்தாகி விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் நெறிகாட்டும் விகிர்தனாகி ` ( தி .1. ப .130. பா .6.) என்றார் முன்னும் . ` அரைசே போற்றி ` என்றார் திருவாசகத்திலும் ( தி .8 போற் . திருவக . அடி 104).

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 8

வெஞ்சின வாளரக்கன் வரையை விறலா லெடுத்தான்றோள்
அஞ்சுமொ ராறிரு நான்குமொன்று மடர்த்தா ரழகாய
நஞ்சிருள் கண்டத்து நாதரென்று நணுகு மிடம்போலும்
மஞ்சுல வும்பொழில் வண்டுகெண்டும் வலஞ்சுழி மாநகரே.

பொழிப்புரை :

கடுஞ்சினமுடைய கொடிய அசுரனான இராவணன் தன் வலிமையால் கயிலை மலையைப் பெயர்க்க , அவன் இருபது தோள்களையும் அடர்த்தவர் சிவபெருமான் . அவர் நஞ்சுண்டு இருண்ட அழகிய கண்டத்தையுடைய தலைவர் . அவர் விரும்பி வீற்றிருந்தருளும் இடம் மேகத்தைத் தொடும்படி உயர்ந்துள்ள சோலைகளிலுள்ள மலர்களை வண்டுகள் காலால் கிண்டும் திரு வலஞ்சுழி என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

அரக்கன் தோள் ; அஞ்சு , ஓர் ஆறு , இருநான்கும் , ஒன்றும் அடர்த்தவர் - (5 + 6 + 8 + 1) இருபதையும் நெருக்கியவர் . பொழில் வண்டு கெண்டும் - சோலையில் உள்ள மலர்களில் வண்டுகள் கால் விரலால் ஊரும் வலஞ்சுழி .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 9

ஏடிய னான்முகன் சீர்நெடுமா லெனநின் றவர்காணார்
கூடிய கூரெரி யாய்நிமிர்ந்த குழக ருலகேத்த
வாடிய வெண்டலை கையிலேந்தி வலஞ்சுழி மேயவெம்மான்
பாடிய நான்மறை யாளர்செய்யுஞ் சரிதை பலபலவே.

பொழிப்புரை :

இதழ்களையுடைய தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் , திருமாலும் காணமுடியாத வண்ணம் நெருப்புப் பிழம்பாய் ஓங்கி நின்றவர் சிவபெருமான் . அவர் உலகோர் போற்றி வணங்குமாறு , வற்றிய பிரமகபாலத்தைக் கையிலேந்தி திருவலஞ்சுழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் . எம் தலைவரான அவரை நான்கு வேதங்களையும் நன்கு கற்றுவல்லவர்கள் பாடிப் போற்றும் தன்மையில் அவர் புரியும் திருவளையாடல்கள் பலபல வாகும் .

குறிப்புரை :

ஏடு இயல் நான்முகன் - இதழ்களை உடைய தாமரை மலரில் தங்கும் பிரமன் . ஏடு - பூவிதழ் . அது மலருக்கு ஆனது சினை ஆகு பெயர் . பொதுப்பெயர் , சிறப்புப்பெயர்க்கு வரும் முறையால் தாமரை மலருக்காயிற்று . காணார் - காணாதவர்களாக , எரியாய் நிமிர்ந்த குழகர் . வாடிய வெண் தலை - உலர்ந்த தலையோடு , பிச்சைப் பாத்திரம் . சரிதை - திருவிளையாடல்கள் . காணார் - முற்றெச்சம் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 10

குண்டரும் புத்தருங் கூறையின்றிக் குழுவா ருரைநீத்துத்
தொண்டருந் தன்றொழில் பேணநின்ற கழலா னழலாடி
வண்டம ரும்பொழின் மல்குபொன்னி வலஞ்சுழி வாணனெம்மான்
பண்டொரு வேள்வி முனிந்துசெற்ற பரிசே பகர்வோமே.

பொழிப்புரை :

தீவினைக்கஞ்சாத சமணர்கள் , ஆடையின்றிக் கூட்டமாயிருப்பவர்கள் . அவர்களும் புத்தர்களும் இறைவனை உணராது கூறும் மொழிகளைத் தள்ளிவிடுங்கள் . தொண்டர்கள் சரியைத் தொழிலில் விரும்பி வழிபட்டு நிற்க . கழலணிந்த திருவடிகளையுடைய சிவபெருமான் அழல் ஏந்தி ஆடுபவன் . வண்டுகள் விரும்புகின்ற சோலைகளையுடையதும் , காவிரியாறு வலஞ்சுழித்துப் பாய்கின்றதுமான திருவலஞ்சுழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமான் முன்னொரு காலத்தில் அவனை நினையாது தக்கன் செய்த வேள்வியைத் கோபித்து அழித்த தன்மையைப் பகர்வோமாக . ( நீவிர் அவனை நினைந்து வழிபட்டு உய்மின் என்பது குறிப்பு ).

குறிப்புரை :

குண்டர் - தீவினைக்கஞ்சாதவர் ; ஆததாயிகள் என்பர் வடநூலார் . கூறை இன்றிக் குழுவார் குண்டர் எனக் கூட்டுக . ஆடையின்றிக் கூட்டமாயிருப்பவர் என்பது பொருள் . தொண்டு அருந்தன் தொழில் பேண - தொண்டர்கள் பிறர் செய்தற்கரிய தனது பணி விடைகளைப் போற்றிச் செய்ய . தொண்டு - தொண்டர் ; பண்பாகு பெயர் . வலஞ்சுழிவாணர் - வலஞ்சுழியில் வாழ்பவர் . பண்டு - முற்காலத்தில் . ஒரு வேள்வி - தக்கனுடைய வேள்வியை . முனிந்து - கோபித்து . செற்ற - அழித்த . பரிசே - தன்மையையே . பகர்வோம் - புகழ்ந்து பேசுவோமாக . திருவாசகத் ( தி .8) திருவுந்தியார் இருபது பாடல்களுள் பதின்மூன்று பாடல்கள் தக்கன் வேள்வி தகர்த்தமையைக் கூறுவது காண்க .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 11

வாழியெம் மானெனக் கெந்தைமேய வலஞ்சுழி மாநகர்மேல்
காழியுண் ஞானசம் பந்தன்சொன்ன கருத்தின் றமிழ்மாலை
ஆழியிவ் வையகத் தேத்தவல்லா ரவர்க்குந் தமருக்கும்
ஊழி யொருபெரு மின்பமோக்கும் உருவும் முயர்வாமே.

பொழிப்புரை :

எம் தலைவனும் , தந்தையுமான , சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருவலஞ்சுழி என்னும் மாநகரை வாழ்த்தி , சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய சிறந்த பயனைத்தரும் கருத்துக்கள் அடங்கிய தமிழ்மாலையாகிய இத்திருப்பதிகத்தை ஏத்த வல்லவர்களும் , அவர்களுடைய சுற்றத்தார்களும் கடல் சூழ்ந்த இவ்வையகத்திலேயே பேரின்பம் துய்ப்பர் . ஊழிக்காலத்திலும் நனி விளங்கும் உயர்ந்த புகழடைவர் .

குறிப்புரை :

கருத்து இன்தமிழ் மாலை - சிறந்த பயனைத் தரும் கருத்துக்கள் அடங்கிய தமிழ்மாலை . தமிழ்மாலை ஏத்தவல்லார்க்கும் அவர் சுற்றத்தாருக்கும் உருவும் உயர்வாம் . ( புகழுடம்பும் உயர் வடையும் .) உயர்ந்த புகழ் அடைவர் என்பது கருத்து . ஏத்த வல்லாரன்றி அவர் தமரும் உயர்வடைவரென்றது - ` மூவேழ் சுற்றம் முரணுறு நரகிடை ஆழாமே அருள் அரசே போற்றி ` ( தி .8 போற்றித் திருவகவல் . அடி . 118 - 119.) என்ற திருவாசகத்தாலும் அறிக .
சிற்பி