திருநாரையூர்


பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 1

கடலிடை வெங்கடு நஞ்சமுண்ட கடவுள் விடையேறி
உடலிடை யிற்பொடிப் பூசவல்லா னுமையோ டொருபாகன்
அடலிடை யிற்சிலை தாங்கியெய்த வம்மா னடியார்மேல்
நடலைவி னைத்தொகை தீர்த்துகந்தானிட நாரை யூர்தானே.

பொழிப்புரை :

கடலில் தோன்றிய வெப்பம் மிகுந்த கடுமையான நஞ்சையுண்ட கடவுள் இடபவாகனத்தில் ஏறி , திருமேனியில் திரு வெண்ணீற்றினைப் பூசி , உமாதேவியைத் தம் ஒரு பாகமாகக் கொண்டவர் . முப்புர அசுரர்களுடன் போரிடும் சமயத்தில் மேரு மலையாகிய வில்லைத் தாங்கிக் கணைஎய்த பெருமான் , தம்முடைய அடியார்கள் மேல் வரும் துன்பம்தரும் வினைத் தொகுதிகளைத் தொலைத்து மகிழ்பவர் . இத்தகைய சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் இடம் திருநாரையூர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

கடலிடை நஞ்சம் - கடலில் தோன்றிய நஞ்சம் . உடலிடையில் - உடம்பில் , பொடிபூசவல்லான் . ` நீறணிந்த கோலம் நெஞ்சம் பிணிக்கும் எழிலுடைமையான் , அக்கோலம் தொழுவார் உள்ளத்து நீங்காது நிற்றலான் , ஆண்டுள்ளவினை நீறு ஆம் ` என்னும் திருக்கோவையா ( தி .8) ருரை (118) இங்குக் கொள்ளத்தக்கது . நடலை வினைத்தொகுதி - துன்பம் தரும் கன்மங்களின் கூட்டம் . நடலை இப் பொருட்டாதலை . ` நடலை வாழ்வு கொண்டு என்செய்தீர் நாணிலீர் ` என்னும் அப்பர் பெருமான் திருவாக்காலும் ( தி .5. ப .90. பா .4.) அறிக . பலதிறத்தான் வந்து தொகுதலின் கன்மம் வினைத் தொகுதி எனப் பட்டது .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 2

விண்ணின்மின் னேர்மதி துத்திநாகம் விரிபூ மலர்க்கொன்றை
பெண்ணின்முன் னேமிக வைத்துகந்த பெருமா னெரியாடி
நண்ணிய தன்னடி யார்களோடுந் திருநாரை யூரானென்
றெண்ணுமி னும்வினை போகும்வண்ண மிறைஞ்சுந் நிறைவாமே.

பொழிப்புரை :

ஆகாயத்தில் விளங்கும் , மின்னல் போன்ற ஒளியுடைய சந்திரனையும் , படப்புள்ளிகளையுடைய பாம்பினையும் , விரிந்த கொன்றைமலரையும் , கங்காதேவிக்கு முன்னே சடையிலணிந்து மிகவும் மகிழ்ந்த பெருமான் , நெருப்பேந்தி ஆடுபவர் . திரு நாரையூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற அச்சிவ பெருமானை மனம் , வாக்கு , காயத்தால் வழிபடுகின்ற அடியார்கள் கூட்டத்தோடு நீங்களும் சேர்ந்து தியானம் செய்யுங்கள் . உங்கள் வினைகள் தொலைந்துபோகும் வண்ணம் வணங்குங்கள் . எல்லா நலன்களும் நிறையக் குறைவிலா இன்பம் உண்டாகும் .

குறிப்புரை :

மதி - பிறையையும் , துத்திநாகம் - படப்புள்ளிகளை உடைய பாம்பையும் . விரிபூமலர்க் கொன்றை - விரிந்த பொலிவை உடைய கொன்றை மலரையும் . பெண்ணின் முன்னே - கங்காதேவிக்கு முன் . ( சடையில் ) வைத்து - அணிந்து . மிக உகந்த - மிகவும் மகிழ்ந்த பெருமான் . இறைஞ்சும் நிறைவாமே - வணங்குங்கள் இன்பம் குறையாது வரும் . இறைஞ்சும் - பன்மை ஏவல் வினைமுற்று .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 3

தோடொரு காதொரு காதுசேர்ந்த குழையா னிழைதோன்றும்
பீடொரு கால்பிரி யாதுநின்ற பிறையான் மறையோதி
நாடொரு காலமுஞ் சேரநின்றதிரு நாரை யூரானைப்
பாடுமி னீர்பழி போகும்வண்ணம் பயிலு முயர்வாமே.

பொழிப்புரை :

சிவபெருமான் இடக் காதில் தோடும் , வலக் காதில் குழையும் அணிந்துள்ளவர் . மார்பில் பூணூல் அணிந்துள்ளவர் . ஒரு காலத்திலும் பெருமை நீங்காமல் நிலைத்து நிற்பவர் . பிறைச் சந்திரனை அணிந்துள்ளவர் . வேதங்களை ஓதுபவர் . ஒவ்வொரு காலத்திலும் நாட்டிலுள்ள அடியார்கள் வணங்குதற்கு வந்து சேரும்படி வீற்றிருந்தருளுகின்ற திருநாரையூர்ப் பெருமானைப் பாடுவீர்களாக . உங்கள் பழிகள் நீங்கும் வண்ணம் இடைவிடாது வணங்குங்கள் . உங்கட்கு உயர்வு உண்டாகும் .

குறிப்புரை :

தோடு ஒருகாது ஒருகாது சேர்ந்த குழையான் - இடக்காதில் தோடும் , வலக்காதில் குழையும் அணிந்தவன் . பீடு ஒருகால் பிரியாது நின்ற - ஒருகாலத்திலும் பெருமை நீங்காமல் நிலைத்து நின்ற , பிறையான் . பழிபோகும் வண்ணம் பயிலும் - பழி முதலிய தீமைகள் நீங்குமாறு இடைவிடாது போற்றுங்கள் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 4

வெண்ணில வஞ்சடை சேரவைத்து விளங்குந் தலையேந்திப்
பெண்ணி லமர்ந்தொரு கூறதாய பெருமா னருளார்ந்த
அண்ணன் மன்னியுறை கோயிலாகு மணிநாரை யூர்தன்னை
நண்ணல மர்ந்துற வாக்குமின்கள் நடலை கரிசறுமே.

பொழிப்புரை :

வெண்ணிறப் பிறைச்சந்திரனைத் தலையிலே அணிந்து , விளங்குகின்ற பிரமகபாலத்தைக் கையிலேந்தி , உமா தேவியைத் தன்னுடம்பில் ஒரு கூறாகக் கொண்ட பெருமானும் , அருள் நிறைந்த தலைவனுமாகிய சிவபெருமான் நிலையாக வீற்றிருந் தருளும் கோயிலுள்ள அழகிய திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் சேர்ந்து இறைவனிடம் அன்பு செலுத்துங்கள் . உங்கள் துன்பங்கள் நீங்கும் .

குறிப்புரை :

நிலவம் - நிலவு , அம்சாரியை . சேர - பொருந்த . திருநாரையூர் தன்னை , நண்ணல் அமர்ந்து - விரும்பி அடைந்து . ( அமர்தல் - விரும்பல் ) உறவு ஆக்குமின்கள் - அன்பைச் செலுத்துங்கள் . உறவு - அன்பு ` உறவு கோல் நட்டு உணர்வு கயிற்றினால் முறுகவாங்கிக் கடைய முன்னிற்குமே ` என்ற ( தி .5. ப .90. பா .10) அப்பர்பெருமான் திருவாக்காலறிக .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 5

வானமர் தீவளி நீர்நிலனாய் வழங்கும் பழியாகும்
ஊனம ரின்னுயிர் தீங்குகுற்ற முறைவாற் பிறிதின்றி
நானம ரும்பொரு ளாகிநின்றான் றிருநாரை யூரெந்தை
கோனவ னைக்குறு கக்குறுகா கொடுவல் வினைதானே.

பொழிப்புரை :

ஆகாயம் , நெருப்பு , காற்று , நீர் , நிலம் , ஆகிய ஐம்பூதங்களின் தொடர்பாய் விளங்குகின்ற , பழிக்கு இடமாகிய தசையாகிய இவ்வுடம்பில் தங்குகின்ற இனிய உயிர் தீமை பயக்கும் குற்றம் புரியும் இயல்பாயுள்ளது . அக்குற்றங்களிலிருந்து உய்தி பெறப் பிறிதொரு வழியின்றி , அடியேன் விரும்பிச் சார்தற்குப் பற்றுக் கோடாக விளங்கும் பெருமான் திருநாரையூரில் வீற்றிருந்தருளுகின்ற என் தந்தையும் , தலைவனுமாவான் . அப்பெருமானைச் சரணடையக் கொடிய வல்வினைகள் நம்மை வந்து சாரா .

குறிப்புரை :

வான் ஆகாயமும் . அமர் - அதன்கண் அடங்கும் , தீ வளி முதலியவையுமாகிய பஞ்சபூத சம்பந்தமாய்த் திரிகின்ற . பழியாகும் ஊன் - பழிக்கு இடமாகிய உடம்பில் . அமர் - தங்குகிற . இன் உயிர் - இனிய உயிர் . தீங்கு - தீமைதருவதாகிய . குற்றம் உறைவு ஆல் - பாவத்திற்கு இடமாயிருத்தலினால் . பிறிது இன்றி - ( அதின் நீங்கி , நன்மைபெறும் வழி ) வேறொன்றும் இன்மையால் . நான் - அடியேன் . அமரும் - விரும்பி அடையும் . பொருள் ஆகி நின்றான் - பற்றுக்கோடாகிய பொருளாகி நின்றவன் . ( திருநாரையூரெந்தை ). கோன் - அவனே தலைவன் . அவனைக் குறுக - அவனைச் சரணம் அடைந்தால் . வல்வினை - முற்கூறிய தீமைகளும் , அவற்றின் காரணமாகிய பாவமும் , அவற்றிற்கு ஏதுவாகிய வலிய கன்மமலங்களும் . குறுகா - நம்மைவந்தடையமாட்டா .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 6

கொக்கிற குங்குளிர் சென்னிமத்தங் குலாய மலர்சூடி
அக்கர வோடரை யார்த்துகந்த வழகன் குழகாக
நக்கம ருந்திரு மேனியாளன்றிரு நாரை யூர்மேவிப்
புக்கம ரும்மனத் தோர்கடம்மைப் புணரும் புகறானே.

பொழிப்புரை :

சிவபெருமான் தலையில் கொக்கின் இறகையும் , குளிர்ந்த பொன்னூமத்தையின் செழித்த மலரையும் சூடியவர் . எலும்பைப் பாம்போடு சேர்த்து இடுப்பில் கட்டி மகிழும் அழகர் . இளமையாய்த் திகம்பரராய்த் திகழும் திருமேனியுடையவர் . அப் பெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருநாரையூர் என்னும் திருத்தலத்தை அடைந்து , அவரை விரும்பி வழிபடும் மனத்தையுடையவர் களிடத்துத் திருவருட்சத்தி பதியும் .

குறிப்புரை :

சென்னி - தலையின்கண் . கொக்கு இறகு - கொக்கின் இறகும் . குளிர் மத்தம் - குளர்கின்ற பொன் ஊமத்தையின் . குலாய - செழித்த . மலர் - மலரும் . ( உம்மையை மேலுங் கூட்டுக ). சிவ பெருமான் கொக்கின் இறகு அணிவர் என்பதைத் திருக்கோவையா ( தி .8) ரில் காண்க . அரை ஆர்த்து - இடுப்பில் கட்டி . உகந்த - விரும்பிய . குழகு ஆக - இளமையோடு . நக்கு அமரும் திருமேனி ஆளன் - ஆடை இல்லாமையை விரும்பிய திருவுடம்பை உடையவன் . நக்கு - இது நக்கம் என்பதன் கடைக்குறை . நக்நம் வடசொல் . மேவிப்புக்கு - போய்ச்சேர்ந்து . புகல் - திருவருட்சத்தி பதிதல் . புணரும் - கூடும் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 7

ஊழியு மின்பமுங் காலமாகி யுயருந் தவமாகி
ஏழிசை யின்பொருள் வாழும்வாழ்க்கை வினையின் புணர்ப்பாகி
நாழிகை யும்பல ஞாயிறாகிநளிர் நாரை யூர்தன்னில்
வாழியர் மேதகு மைந்தர்செய்யும் வகையின் விளைவாமே.

பொழிப்புரை :

சிவபெருமான் ஊழிக்காலமும் , இன்பமும் , காலங்களும் ஆகியவர் . உயர்ந்த தவம் ஆகியவர் . ஏழிசையின் பயனாக விளங்குபவர் . வாழ்கின்ற வாழ்க்கையில் உயிர்கள் செய்கின்ற வினையின் பயன்களை உயிர்கட்குச் சேர்ப்பிப்பவர் . நாழிகை முதலிய சிறு காலங்களின் அளவுகளாகிப் பலவாகிய நாள்களும் ஆகியவர் . இவைகளெல்லாம் குளிர்ச்சி பொருந்திய திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவ பெருமானின் அருள் விளையாடல்களின் விளைவுகளேயாகும் .

குறிப்புரை :

ஊழியும் - பெருங்கால எல்லையாகிய பிரளய காலமும் . காலம் - கார் முதலிய பருவகாலமும் . ஏழு இசையின் பொருளாகி - ஏழிசையின் பயனாகியும் . வாழும் வாழ்க்கை வினையின் புணர்ப்பாகி - உலக வாழ்க்கையில் நிகழும் வினைகளின் சேர்க்கையாகி . நாழிகையும் - சிறு கால எல்லையாகிய நாழிகையும் . பல ஞாயிறு ஆகி - பல தினங்களும் ஆகி . ( இவைகளெல்லாம் ). நளிர் - குளிர்ச்சி பொருந்திய . மைந்தர் செய்யும் - சிவபெருமான் செய்யும் . வகையின் விளைவாம் - திருவிளையாடல்களின் வகைகளினால் விளைந்த விளைவேயாகும் . இங்கே ஞாயிறு நாள் என்னப்பட்டது இலக்கணை .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 8

கூசமிலா தரக்கன் வரையைக் குலுங்க வெடுத்தான்றோள்
நாசம தாகி யிறவடர்த்த விரலான் கரவாதார்
பேசவி யப்பொடு பேணநின்ற பெரியோ னிடம்போலும்
தேசமு றப்புகழ் செம்மைபெற்ற திருநாரை யூர்தானே.

பொழிப்புரை :

கூசுதல் இல்லாது திருக்கயிலாய மலையைக் குலுங்க எடுத்த இராவணனுடைய தோள்கள் நெரியும்படி அடர்த்த திருப்பாத விரலையுடையவர் சிவபெருமான் . நெஞ்சில் வஞ்ச மில்லாத உண்மையடியார்கள் மிகவும் வியப்போடு பேசும்படியும் , இடைவிடாது தியானிக்கும்படியும் நின்ற பெருமையுடையவர் . இத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , தேசம் முழுவதும் புகழுகின்ற சிறப்புடைய திருநாரையூர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

கூசம் - கூசுதல் ( அம் - தொழிற்பெயர் விகுதி ). இற - ஒழிய . கரவாதார் - வஞ்சமற்ற அடியார்கள் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 9

பூமக னும்மவ னைப்பயந்த புயலார் நிறத்தானும்
ஆமள வுந்திரிந் தேத்திக்காண்ட லறிதற் கரியானூர்
பாமரு வுங்குணத் தோர்களீண்டிப் பலவும் பணிசெய்யும்
தேமரு வுந்திகழ் சோலைசூழ்ந்த திருநாரை யூர்தானே.

பொழிப்புரை :

தாமரைப் பூவில் வீற்றிருந்தருளும் பிரமனும் , அவனைப் பெற்ற மேகம் போன்ற நிறத்தையுடைய திருமாலும் , தங்களால் இயன்ற அளவு திரிந்து தேடியும் , ஏத்தியும் காண்பதற்கு அரியவனாக விளங்கிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் ஊர் , நீதி நூல்களில் சொல்லிய நற்குண , நற்செய்கை உடையவர்கள் கூடி , திருத்தொண்டுகள் பலவும் செய்யும் , தேன்மணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருநாரையூர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

பூமகனும் - பிரமனும் . அவனைப் பயந்த - அவனைப் பெற்ற . புயலார் நிறத்தான் - மேகம் போன்ற நிறத்தை உடைய திருமால் . நாசமதாகி இற - அழிந்து ஒழிய . அடர்த்த - நெருக்கிய . ஆம் அளவும் - தம்மால் இயன்றவரை முற்றிலும் . பாமருவும் குணத்தோர் - நீதி நூல்களில் சொல்லிய நற்குண நற்செய்கை உடையவர்கள் . ஈண்டி - கூடி .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 10

வெற்றரை யாகிய வேடங்காட்டித் திரிவார் துவராடை
உற்றரை யோர்க ளுரைக்குஞ்சொல்லை யுணரா தெழுமின்கள்
குற்றமி லாததோர் கொள்கையெம்மான் குழகன் றொழிலாரப்
பெற்றர வாட்டிவரும் பெருமான்றிரு நாரை யூர்சேர்வே.

பொழிப்புரை :

ஆடையற்ற கோலத்துடன் திரியும் சமணர்களும் , மஞ்சட் காவியாடை போர்த்துத் திரியும் புத்தர்களும் உரைக்கின்ற சொற்களை ஏற்க வேண்டா . குற்றமில்லாத கொள்கை உடைய எம் தலைவரும் , இளமையானவரும் , அடியவர்கட்கு அருள்புரியும் தொழிலையுடையவரும் , அரவம் அணிந்துள்ளவருமான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருநாரையூர் என்னும் திருத்தலத்தைச் சேர்ந்து , வழிபட்டு உய்வீர்களாக .

குறிப்புரை :

வெற்றரையாகிய வேடம் - நிர்வாணக்கோலம் . காட்டித் திரிபவர் சமணர் . துவர் ஆடை உற்ற அரையோர்கள் - புத்தர்கள் . உற்றரை - உற்ற + அரை , பெயரெச்ச விகுதி அகரம் தொக்கது . ( தொழில் ஆரப்பெற்று ) அரவு ஆட்டிவரும் பெருமான் என்பது ` பச்சைத்தாள் அரவாட்டீ ` என்ற திருவாசகத்திலும் ( தி .8) வருவது . சிவபெருமான் பாம்பை ஆட்டிவரும் தன்மை தன் அடியார் அஞ்சத் தக்க வினைகளைப்போக்கும் தொழிலையுடையவன் தானேயென்பது அறிவித்தற்கு . அக்கருத்தே தொழில் ஆரப்பெற்றும் என்பதாற் குறித்த பொருளாம் . தொழில் - தான் அடியார்க்குச் செய்யும் அருள் . ஆரப் பெற்று - அதை நிறைவேற்றி .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 11

பாடிய லுந்திரை சூழ்புகலித் திருஞான சம்பந்தன்
சேடிய லும்புக ழோங்குசெம்மைத் திருநாரை யூரான்மேல்
பாடிய தண்டமிழ் மாலைபத்தும் பரவித் திரிந்தாக
வாடிய சிந்தையி னார்க்குநீங்கு மவலக் கடல்தானே.

பொழிப்புரை :

அலைஓசையுடைய கடல்சூழ்ந்த சீகாழியில் அவதரித்த திருஞானசம்பந்தன் , பெருமை பொருந்தியதும் ஓங்கும் புகழ் உடையதும் , சிவத்தன்மை உடையதுமான திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமான் மீது பாடிய பத்துப் பாடல்களாலாகிய இத்தண்டமிழ் மாலையாகிய பதிகத்தைப் பாடித் துதிக்கும் சிந்தையுடைய அடியார்களின் கடல் போன்ற பெருந்துன்பம் நீங்கும் .

குறிப்புரை :

பாடு இயலும் - ஓசை உடைய . திரைசூழ் - கடல் சூழ்ந்த . சேடு இயலும் - பெருமை பொருந்திய .
சிற்பி