திருஆலவாய்


பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 1

வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
ஆத மில்லியமணொடு தேரரை
வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே
பாதி மாதுட னாய பரமனே
ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயி லுறையுமெம் மாதியே

பொழிப்புரை :

உமாதேவியைத் தன் உடம்பில் ஒரு பாதியாக வைத்துள்ள பரமனே ! தென் ஆலவாயில் வீற்றிருந்தருளும் எம் ஆதிமூர்த்தியே ! வேதத்தையும் , வேள்வியையும் , பழித்துத் திரியும் பயனற்றவர்களாகிய சமணர்களையும் , புத்தர்களையும் வாதில் வென்றழிக்க உம்மை வேண்டுகின்றேன் . உமது திருவுள்ளம் யாது ? உலகனைத்தும் உமது புகழே மிக வேண்டும் . திருவருள்புரிவீராக !

குறிப்புரை :

வேதவேள்வி - வேதத்தையும் வேள்வியையும் . நிந்தனைசெய்து உழல் - பழித்துத் திரிகின்ற . ஆதம் இல்லி - பயன்பெறாதவர்களாகிய . அமணொடு - சமணர்களோடு . ஆதம் இல்லி ஒருமைச்சொல் அமணொடு தேரரை என்ற பன்மையோடு சேர்வது வழு அமைதியால் கொள்க . ` ஏவல் இளையர் தாய்வயிறு கரிப்ப ` என்பதுபோல . எல்லாச் சமயங்களிலும் சொல்லப்படும் கடவுள் சிவன் ஒருவனே ஆகவும் , ஒரு சமயத்தை அழிக்கப்புகுவது அவன் திருவுள்ளத்திற்கு ஏற்குமா ? என்பதை உணர்த்த ` வாதில் வென்றழிக்தத் திருவுள்ளமே ` என்று வினவுகிறார் . ஆயினும் சைவ நன்னெறி பரவுதல் இன்றியமையாமையின் ஞால நின்புகழே மிக வேண்டும் என வற்புறுத்தியும் வேண்டுகிறார் . ஆதி - சிவபெருமானுக் குரிய பெயர் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 2

வைதி கத்தின் வழியொழு காதவக்
கைத வம்முடைக் காரமண் தேரரை
எய்தி வாதுசெ யத்திரு வுள்ளமே
மைதி கழ்தரு மாமணி கண்டனே
ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயி லுறையுமெம் மாதியே.

பொழிப்புரை :

கருநீலமணி போன்ற கண்டத்தையுடைய சிவபெருமானே ! வேதநெறிகளைப் பின்பற்றி ஒழுகாத வஞ்சனையையுடைய கரிய சமணர்களையும் , புத்தர்களையும் கூட்டி வாது செய்து வெல்ல விரும்புகின்றேன் . உமது திருவுள்ளம் யாது ? தென் ஆலவாயில் வீற்றிருந்தருளும் எம் முதல்வரே ! உலகனைத்தும் உம் புகழே மிக வேண்டும் . திருவருள்புரிவீராக !

குறிப்புரை :

வைதிகம் - வேதத்திற் சொல்லும் நெறி . கைதவம் - வஞ்சனை . காரமண் - நெற்றியில் நீறு பூசாமையாலும் , நீராடாமை யாலும் , ஒளி குன்றிய தன்மையாலும் காரமண் எனப்பட்டனர் . எய்தி - நின்று .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 3

மறைவ ழக்கமி லாதமா பாவிகள்
பறித லைக்கையர் பாயுடுப் பார்களை
முறிய வாதுசெ யத்திரு வுள்ளமே
மறியு லாங்கையின் மாமழு வாளனே
ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயி லுறையுமெம் மாதியே.

பொழிப்புரை :

மான்கன்றையும் , மழுவையும் கைகளில் ஏந்தியுள்ள சிவபெருமானே ! வேத நெறிப்படி ஒழுகாத கொடிய பாவிகளாகிய , கையினால் முடி பறிக்கப்பட்ட தலையோடு பாயை உடுத்தித் திரியும் சமணர்கள் தோல்வியுறும்படி அவர்களோடு வாது செய்ய உமது திருவுளம் யாது ? தென் ஆலவாயில் வீற்றிருந்தருளும் எம் முதல்வரே ! உலகனைத்தும் உம் புகழே மிக வேண்டும் . திருவருள்புரிவீராக !

குறிப்புரை :

மறை வழக்கம் - மறையின்படி ஒழுகுதல் . வழக்கம் , தொழிற் பெயர் ; நடத்தல் என்பது பொருள் . பறிதலை - பறிக்கப்பட்ட தலை . கையர் - வஞ்சகர் . முறிய - தோற்க . மறி - மான் கன்று .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 4

அறுத்த வங்கமா றாயின நீர்மையைக்
கறுத்த வாழமண் கையர்கள் தம்மொடும்
செறுத்து வாதுசெயத்திரு வுள்ளமே
முறித்த வாண்மதிக் கண்ணி முதல்வனே
ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயி லுறையுமெம் மாதியே.

பொழிப்புரை :

ஒளிபொருந்திய பிறைச்சந்திரனை அணிந்த முதல்வனே ! வரையறுக்கப்பட்ட வேதத்தின் ஆறு அங்கம் வகுக்கும் கொள்கைகளை வெறுக்கும் சமணர்களாகிய கீழோர்களைத் தடுத்து அவர்களோடு அடியேன் வாது செய்ய உமது திருவுள்ளம் யாது ? தென் ஆலவாயில் வீற்றிருந்தருளும் எம் ஆதிமூர்த்தியே ! உலகனைத்தும் உம் புகழே மிகவேண்டும் . திருவருள்புரிவீராக !

குறிப்புரை :

அறுத்த - வரையறுத்துக்கூறிய . அங்கம் ஆறு ஆயின நீர்மையை - வேதத்தின் அங்கங்கள் ஆறு ஆயின தன்மையை . கறுத்த - கோபித்த . ` கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள ` ( தொல்காப்பியம் உரி இயல் . 76.) வாழ் அமண் கையர்கள் - வாழ்க்கையையுடைய அமணர்களாகிய கீழோர் . வாழ் என்பது பகுதியே நின்று தொழிற் பெயர் உணர்த்திற்று . செறுத்து - தடுத்து . ` செறுத்தோறு உடைப்பினும் செம்புனலோடு ஊடார் ` ( நாலடியார் . 222) முறித்த - வளைத்த . கண்ணி - தலைமாலை .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 5

அந்த ணாளர் புரியு மருமறை
சிந்தை செய்யா அருகர் திறங்களைச்
சிந்த வாதுசெ யத்திரு வுள்ளமே
வெந்த நீற தணியும் விகிர்தனே
ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயி லுறையுமெம் மாதியே.

பொழிப்புரை :

நெருப்பில் வெந்த திருவெண்ணீற்றினை அணியும் வேறுபட்ட இயல்புகளையுடைய சிவபெருமானே ! அந்தணர்கள் செய்யும் அரிய வேதக்கிரியைகளை நினைத்துப் பார்க்காத சமணர்களின் வலிமைகள் சிதறும்படி அடியேன் வாது செய்ய உமது திருவுள்ளம் யாது ? அழகிய திருஆலவாயில் வீற்றிருந்தருளும் எம் ஆதி மூர்த்தியே ! உலகனைத்தும் உம் புகழே மிக வேண்டும் . திருவருள் புரிவீராக !

குறிப்புரை :

அந்தணாளர் - அந்தணர் , ` அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத `. ( தி .7. ப .55. பா .1.) என்றதும் காண்க . புரியும் - செய்கின்ற . அருமறை - அரிய வேதக்கிரியைகளை , காரண ஆகுபெயர் . சிந்தை செய்யா - நினைத்துப் பார்க்காத . திறங்களை - வலிமைகளை . சிந்த - சிதற .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 6

வேட்டு வேள்விசெ யும்பொரு ளைவிளி
மூட்டு சிந்தை முருட்டமண் குண்டரை
ஓட்டி வாதுசெ யத்திரு வுள்ளமே
காட்டி லானை யுரித்தவெங் கள்வனே
ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயி லுறையுமெம் மாதியே.

பொழிப்புரை :

காட்டில் வாழும் யானையின் தோலை உரித்துப் போர்த்த என் உள்ளங் கவர்ந்த கள்வரே ! அந்தணர்கள் விரும்பிச் செய்கின்ற வேள்விச் செயல்களை இகழ்ந்து பேசும் வன்னெஞ்சினராகிய அமண்குண்டர்களை அடியேன் வாது செய்து விரட்ட உமது திருவுள்ளம் யாது ? அழகிய ஆலவாயில் வீற்றிருந்தருளும் எம் ஆதி மூர்த்தியே ! உலகனைத்தும் உம் புகழே மிக வேண்டும் . திருவருள் புரிவீராக !

குறிப்புரை :

வேட்டு - விரும்பி . பொருளை - காரியத்தை . விளி மூட்டு - இகழ்ச்சி செய்கின்ற . விளி இப்பொருளாதலை ` கூற்றத்தைக் கையால் விளித்தற்று ` என்ற திருக்குறளிற் காண்க . முருடு அமண் - வன்னெஞ்சை உடைய அமணர் . முருடு - இலேசில் பிளக்க முடியாத கட்டை . ` வன்பராய் முருடு ஒக்கும் என் சிந்தை ` என்பது திருவாசகம் . முருடு இங்குப் பண்பாகுபெயர் . ஓட்டி வாது செய - வாது செய்து ஓட்ட என வினையெச்ச விகுதி மாறிக் கூட்டுக . காட்டிலானை - காட்டில் வாழும் யானை . வனசரம் . ஏனைய கிரிசரம் , நதிசரம் என்பன .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 7

அழல தோம்பு மருமறை யோர்திறம்
விழல தென்னு மருகர் திறத்திறம்
கழல வாதுசெ யத்திரு வுள்ளமே
தழலி லங்கு திருவுருச் சைவனே
ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயி லுறையுமெம் மாதியே.

பொழிப்புரை :

நெருப்புப் போன்று விளங்கும் சிவந்த திரு மேனியுடைய சிவபெருமானே ! அழலோம்பி அருமறையாளர்கள் செய்யும் காரியங்களைப் பயனற்றவை என்று கூறும் சமணர்களின் பலவகைத் திறமைகளும் விலக வாது செய்ய எண்ணுகின்றேன் . உமது திருவுள்ளம் யாது ? அழகிய ஆலவாயில் வீற்றிருந்தருளும் எம் ஆதிமூர்த்தியே ! உலகனைத்தும் உம் புகழே மிக வேண்டுகின்றேன் . திருவருள்புரிவீராக !

குறிப்புரை :

அழல் ( அது ) ஓம்பும் - அக்நி காரியங்களைச் செய்துவரும் . திறம் - தன்மை , விழலது - விழலின் தன்மையது ; பயனற்றது . விழல் - பயனற்ற ஒரு வகைப்புல் . திறத்திறம் - பலவகைப் பட்ட திறமைகள் . திறம் - வகை . தன்மை ` எத்திறத்து ஆசான் உவக்கும் ` என்பது நன்னூல் . கழல - தங்கள் சமயத்தினின்றும் விலக . சைவன் - சிவன் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 8

நீற்று மேனிய ராயினர் மேலுற்ற
காற்றுக் கொள்ளவு நில்லா வமணரைத்
தேற்றி வாதுசெ யத்திரு வுள்ளமே
ஆற்ற வாள ரக்கற்கு மருளினாய்
ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயி லுறையுமெம் மாதியே.

பொழிப்புரை :

சிறந்த வாள்வீரனான இராவணனுக்கு மிக்க அருள் புரிந்தவரே ! திருநீறு பூசியவர் மேல் பட்டு வீசும் காற்றடிக்கும் இடத்திலும் நில்லாத வன்கண்மை பொருந்திய உள்ளமுடைய சமணர்களின் பிழையைத் தெளிவித்து வாது செய்ய , உமது திருவுள்ளம் யாது ? அழகிய ஆலவாயில் வீற்றிருந்தருளும் எம் ஆதிமூர்த்தியே ! உலகனைத்தும் உம் புகழே மிக வேண்டும் . திருவருள்புரிவீராக !

குறிப்புரை :

திருநீறு பூசியவர்மேல் பட்டு வீசும் காற்றடிக்கும் இடத்திலும் நில்லாத சமணர் என்பது முன் இரண்டடியின் கருத்து . தேற்றி - அவர்கள் பிழையைத் தெளிவித்து . அரக்கர்க்கும் - இழிவு சிறப்பும்மை . ஆற்ற - மிகவும் . அருளினாய் - அருள் புரிந்தவனே என்ற குறிப்பு தீமை செய்தவர்களுக்கும் பேரருள் புரியும் பெருங்கருணைக் கடல் . ஆகையினால் தீயவர்களாகிய அமணர் திறத்தும் அக்கருணை காட்டின் சைவம் குன்றுமே என்னும் கருத்து .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 9

நீல மேனி யமணர் திறத்துநின்
சீலம் வாதுசெ யத்திரு வுள்ளமே
மாலு நான்முக னுங்காண் பரியதோர்
கோல மேனிய தாகிய குன்றமே
ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயி லுறையுமெம் மாதியே.

பொழிப்புரை :

திருமாலும் , பிரமனும் காணுதற்கரியவராய் , அழகிய திருமேனியோடு நெருப்பு மலையாய் ஓங்கி நின்ற சிவ பெருமானே ! கரிய உடலையுடைய சமணர்களோடு உமது உயர்வினை வெளிப்படுத்தும் வண்ணம் வாது செய்ய உமது திருவுள்ளம் யாது ? அழகிய ஆலவாயில் வீற்றிருந்தருளும் எம் ஆதிமூர்த்தியே ! உலகனைத்தும் உம் புகழே மிக வேண்டும் . திருவருள்புரிவீராக !

குறிப்புரை :

நீலமேனி அமணர் - மேல் 2 ஆம் பாட்டில் காரமண் என்பதற்கு உரைத்தது உரைக்க . நீலம் , பச்சை , கருமை இவற்றுள் ஒன்றை மற்றொன்றாகக் கூறுவது மரபு . திறத்து - எதிரில் . நின் சீலம் - உமது சமயக் கொள்கையை . குன்றம் - நெருப்பு மலை ( அண்ணா மலை ) யாய் நின்றமையைக் குறிக்கிறது .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 10

அன்று முப்புரஞ் செற்ற வழகநின்
துன்று பொற்கழல் பேணா வருகரைத்
தென்ற வாதுசெ யத்திரு வுள்ளமே
கன்று சாக்கியர் காணாத் தலைவனே
ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயி லுறையுமெம் மாதியே.

பொழிப்புரை :

சினந்து பேசும் இயல்புடைய சமண , புத்தர்களால் காணஇயலாத தலைவரே ! முன்னொரு காலத்தில் முப்புரங்களை எரித்த அழகரே ! உம்முடைய பொன்போன்ற திருவடிகளைப் போற்றாத சமணர்கள் தோற்றோட வாதம் செய்ய , உமது திருவுள்ளம் யாது ? அழகிய ஆலவாயில் வீற்றிருந்தருளும் எம் ஆதிமூர்த்தியே ! உலகனைத்தும் உம் புகழே மிக வேண்டும் . திருவருள் புரிவீராக !

குறிப்புரை :

தென்ற . கன்ற - கோபிக்கின்ற .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 11

கூட லாலவாய்க் கோனை விடைகொண்டு
வாடன் மேனி யமணரை வாட்டிட
மாடக் காழிச்சம் பந்தன் மதித்தவிப்
பாடல் வல்லவர் பாக்கிய வாளரே.

பொழிப்புரை :

நான்கு மாடங்கள் கூடும் திரு ஆலவாயில் வீற்றிருந்தருளும் இறைவரை வணங்கி , உண்ணாநோன்புகளால் வாடிய உடலைஉடைய சமணர்களோடு வாது செய்து அவர்களைத் தோல்வியுறும்படி செய்ய இறைவரது இசைவும் , அருளும் பெற்ற , மாடங்களையுடைய சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகப் பாடல்களை ஓத வல்லவர்கள் பாக்கியவான்களாவர் .

குறிப்புரை :

கூடல் ஆலவாய் - இரு பெயரொட்டுப் பண்புத் தொகை . நான்கு மாடங்கள் கூடுதலையுடைய ஆலவாய் எனினும் ஆம் . விடை கொண்டு - வாதில் வென்றழிக்க உத்தரவு பெற்றுக் கொண்டு . வாடல் மேனி அமணர் - பட்டினி நோன்பிகள் ` உண்ணா நோன்பிதன்னொடும் சூளுற்று ` என்பது மணிமேகலை .
சிற்பி