திருக்கயிலாயமும்-திருவானைக்காவும்,திருமயேந்திரமும் - திருவாரூரும்


பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 1

மண்ணது வுண்டரி மலரோன்காணா
வெண்ணாவல் விரும்பும யேந்திரரும்
கண்ணது வோங்கிய கயிலையாரும்
அண்ணலா ரூராதி யானைக்காவே. 

பொழிப்புரை :

மண்ணுண்ட திருமாலும், தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் காணமுடியாதபடி, திருமயேந்திர மலையில் எழுந்தருளி யிருப்பவரும், காட்சிமிக்க திருக்கயிலையில் எழுந்தருளி இருப்பவரும், திருவாரூரில் வீற்றிருப்பவரும், வெண்ணாவல் மரத்தின்கீழ் எழுந்தருள விரும்புபவரும் ஆகிய தலைவராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம் திருவானைக்காவேயாகும்.

குறிப்புரை :

மண் அது உண்ட அரி - பூமியை உண்ட திருமால். உண்டரி - பெயரெச்சத்து விகுதி அகரம் தொகுத்தல் விகாரம். பிரம விட்டுணுக்கள் காணமுடியாத மயேந்திரமலையில் எழுந்தருளி இருப்பவரும், காட்சி மிக்க கயிலையில் எழுந்தருளியிருப்பவரும், தலைமையமைந்த திருவாரூர் முதல்வரும் ஆகிய சிவபெருமான் வெண்ணாவல் மரத்தின்கீழ்த் தங்க விரும்பிய தலம் திரு வானைக்காவே ஆகும் என்பது பொழிப்புரை. கண் என்பது கருவி ஆகுபெயர். அண்ணல் - தலைமை.

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 2

வந்துமா லயனவர் காண்பரியார்
வெந்தவெண் ணீறணி மயேந்திரரும்
கந்தவார் சடையுடைக் கயிலையாரும்
அந்தணா ரூராதி யானைக்காவே. 

பொழிப்புரை :

சிவபெருமான், திருமாலும், பிரமனும் காண்பதற்கு அரியவர். அவர் வெந்த திருவெண்ணீற்றினை அணிந்தவராய்த் திருமயேந்திரத்திலும், நறுமணம் கமழும் சடையுடையவராய்த் திருக்கயிலையிலும், அழகிய, குளிர்ச்சிமிக்க திருவாரூரிலும், பழமை வாய்ந்த திருவானைக்காவிலும் விளங்குபவர்.

குறிப்புரை :

கந்தவார் சடை - வாசனை பொருந்திய நெடிய சடை .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 3

மாலயன் றேடிய மயேந்திரரும்
காலனை யுயிர்கொண்ட கயிலையாரும்
வேலைய தோங்கும்வெண் ணாவலாரும்
ஆலையா ரூராதி யானைக்காவே. 

பொழிப்புரை :

திருமாலும், பிரமனும் தேடிய சிவபெருமான் திருமயேந்திரத்தில் வீற்றிருந்தருளுகின்றார். அவரே மார்க்கண்டேயருக்காகக் காலனை மாய்த்த கயிலைநாதர். பஞ்சபூதத் தலங்களுள் அப்புத்(நீர்) தலமாக விளங்கும் திருஆனைக்காவில் வெண்ணாவல் மரத்தின்கீழ் வீற்றிருந்தருளுபவர். கருப்பங்கழனிகளை உடைய திருவாரூரில் வீற்றிருந்தருளுபவரும் அவரே.

குறிப்புரை :

வேலை (அது) ஓங்கும் வெண்ணாவல் - கடல்போல் நீர் பொங்கப் பெற்ற வெண்ணாவல். பஞ்சபூதத் தலங்களில் அப்புத்தலம் ஆதலாலும், \\\\\\\"செழுநீர்த் திரளைச்சென்று ஆடினேனே\\\\\\\" (தி.6. ப.63. பா.1) என அப்பர் அடிகள் கூறியவாறு, இறைவனே நீர்வடிவாய் இருத்தலாலும், வேலையது ஓங்கும் என்று கூறப்பட்டது. ஆலை ஆரூர் - கருப்பங் கழனிகளையுடைய திருவாரூர். ஆலை என்பது தானியாகு பெயர்.

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 4

கருடனை யேறரி யயனோர்காணார்
வெருள்விடை யேறிய மயேந்திரரும்
கருடரு கண்டத்தெங் கயிலையாரும்
அருளனா ரூராதி யானைக்காவே. 

பொழிப்புரை :

கருடவாகனம் கொண்ட திருமாலும், பிரமனும் காணமுடியாதவராகிய சிவபெருமான், பகைவர் அஞ்சத்தக்க இடப வாகனத்தில் விளங்குகின்ற திருமயேந்திரர், கருநிறக் கண்டத்தையுடைய திருக்கயிலைநாதர். அருளே திருமேனியாகக் கொண்ட திருஆரூரர். அவரே ஆதியாகிய திருவானைக்காவில் வீற்றிருந்தருளுபவர்.

குறிப்புரை :

அரி அயனோர் காணார் - திருமால், பிரமன் முதலியோரால் காணப்படாதவராகிய. காணார் - செயப்படு பொருள் விகுதி குன்றிய முற்றெச்சம். வெருள் விடை - பகைவர் அஞ்சத்தக்க விடை, கருள்தரு கண்டத்து - கருமை பொருந்திய கழுத்தை உடைய. அருளன் - அருளையே திருமேனியாக உடையவன். \\\\\\\"உருமேனி தரித்துக் கொண்ட தென்றலும் உருவிறந்த, அருமேனியதுவுங் கண்டோம், அருவுரு ஆனபோது, திருமேனி உபயம் பெற்றோம் செப்பிய மூன்று நந்தம், கருமேனி கழிக்கவந்த கருணையின் வடிவு காணே.\\\\\\\" (சித்தியார் . சூத். 1.55 .)

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 5

மதுசூதன் நான்முகன் வணங்கரியார்
மதியது சொல்லிய மயேந்திரரும்
கதிர்முலை புல்கிய கயிலையாரும்
அதியனா ரூராதி யானைக்காவே. 

பொழிப்புரை :

மது என்ற அசுரனைக் கொன்றவனாகிய திருமாலும், பிரமனும் வணங்குதற்கு அரியராய் விளங்குபவர் சிவபெருமான். ஆகமங்களை உபதேசித்தருளிய திருமகேந்திர மலையில் வீற்றிருந்தருளுபவர். ஒளி பொருந்திய கொங்கைகளையுடைய உமாதேவியைத் தழுவிய திருக்கயிலைநாதர். எவர்க்கும் மேம்பட்டவர். திருவாரூரில் வீற்றிருந்தருளுபவர். அவரே ஆதியாகிய திருவானைக்காவில் வீற்றிருந்தருளுகின்றார்.

குறிப்புரை :

மது சூதனன் - மது என்னும் அசுரனைக் கொன்றவனாகிய திருமால் வணங்கரியார். (வணங்க + அரியார்). மதியது சொல்லிய மயேந்திரரும் - ஆகமங்களை உபதேசித்தருளிய மகேந்திர மலையில் எழுந்தருளியிருப்பவரும். அது \\\\\\\"மன்னுமாமலை மகேந்திர மதனில் சொன்ன வாகமந் தோற்றுவித் தருளியும்\\\\\\\" (திருவாசகம் கீர்த்தித் திருவககல். அடி. 9 - 10.) கதிர் முலை புல்கிய - ஒளிபொருந்திய தனபாரங்களை உடைய உமாதேவியார் தழுவிய.
அதியன் - எவர்க்கும் மேம்பட்டவனாகிய சிவபெருமான். \\\\\\\"யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையான்\\\\\\\" என்பது திருவாசகம். அதியன், வடசொல் அடியாகப் பிறந்த பெயர்ப்பகுபதம்.

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 6

சக்கரம் வேண்டுமால் பிரமன்காணா
மிக்கவர் கயிலை மயேந்திரரும்
தக்கனைத் தலையரி தழலுருவர்
அக்கணி யவராரூ ரானைக்காவே. 

பொழிப்புரை :

சக்கராயுதத்தை வேண்டிப் பெற்ற திருமாலும், பிரமனும் காணாத வண்ணம் விளங்கிய, யாவரினும் மேம்பட்டவரான சிவபெருமான், திருக்கயிலைமலையிலும், திருமயேந்திரத்திலும் வீற்றிருந்தருளுகின்றார். அவர் தக்கனின் தலையை அரிந்தவர். நெருப்புருவானவர். உருத்திராக்கமாலை அணிந்தவர். திருவாரூரிலும், திருவானைக்காவிலும் வீற்றிருந்தருளுபவர்.

குறிப்புரை :

சக்கரம் வேண்டும் மால் - சக்கராயுதத்தை வேண்டிப் பெற்ற திருமாலும். காணா - காணப்படாத. மிக்கவர் - யாவரினும் மேம்பட்டவராகிய. அக்கு அணியவர் - உருத்திராக்கங்களை அணியாகக் கொண்டவர்.

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 7

கண்ணனு நான்முகன் காண்பரியார்
வெண்ணாவல் விரும்பு மயேந்திரரும்
கண்ணப்பர்க் கருள்செய்த கயிலையெங்கள்
அண்ணலா ரூராதி யானைக்காவே. 

பொழிப்புரை :

கருநிறத் திருமாலும், பிரமனும் காண்பதற்கு அரியவரான சிவபெருமான் திருமயேந்திரத்தில் வீற்றிருந்தருளுகின்றார். அவர் கண்ணப்பர்க்கு அருள்செய்த கயிலைநாதர். எங்கள் தலைவரான திருவாரூரர். அவர் வெண்ணாவல் மரத்தின்கீழ் வீற்றிருக்க விரும்பும் திருவானைக்காவிலுள்ள ஆதிமூர்த்தி ஆவார்.

குறிப்புரை :

கண்ணன் - கரிய நிறத்தையுடைய திருமால். கிருட்டிணன் என்பதன் சிதைவு.

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 8

கடல்வண்ணன் நான்முகன் காண்பரியார்
தடவரை யரக்கனைத் தலைநெரித்தார்
விடமது வுண்டவெம் மயேந்திரரும்
அடல்விடையா ரூராதி யானைக்காவே. 

பொழிப்புரை :

கடல்போலும் கருநிறமுடைய திருமாலும், பிரமனும் காண்பதற்கரிய சிவபெருமான், பெரிய கயிலைமலையின் கீழ் இராவணனின் தலையை நெரித்த கயிலைநாதர். விடமுண்ட திருமயேந்திரர். வலிய இடபத்தில் ஏறும் திருவாரூரர். அவரே திருவானைக்காவில் வீற்றிருந்தருளும் ஆதிமூர்த்தி ஆவார்.

குறிப்புரை :

கடல் வண்ணன் - கடல்போலும் கரிய நிறத்தை உடைய திருமால். தடவரையரக்கனைத் தலைநெரித்தார் - பெரிய கயிலை மலையின் கீழ் இராவணனைத் தலையை நெரித்தவர். அடல் விடை ஆரூர் - வலிய விடையை ஏறிய திருவாரூரரும். ஆரூர் என்பது ஆரூரர் என்னும் பொருளில் வந்துள்ளது.

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 9

ஆதிமா லயனவர் காண்பரியார்
வேதங்கள் துதிசெயு மயேந்திரரும்
காதிலொர் குழையுடைக் கயிலையாரும்
ஆதியா ரூரெந்தை யானைக்காவே. 

பொழிப்புரை :

தொன்றுதொட்டுத் திருமாலும், பிரமனும் காண்பதற்கு அரியவராய் ஓங்கிய சிவபெருமான், வேதங்களால் துதிக்கப்பெறும் மயேந்திரரும், காதில் குழையணிந்த கயிலைநாதரும், ஆதியாகிய திருவாரூர் எந்தையும் ஆவர். அவரே திருவானைக்காவில் வீற்றிருந்தருளுகின்றார்.

குறிப்புரை :

ஆதிமால் அயன் அவர் - தொன்றுதொட்டுத் திருமால் அயன் முதலியோர், காண்பரியார். ஆதி - (நான்காம் அடியில் வரும் ஆதி). முதன்மையானவர் என்னும் பொருளது.

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 10

அறிவி லமண்புத்த ரறிவுகொள்ளேல்
வெறியமான் கரத்தாரூர் மயேந்திரரும்
மறிகட லோனயன் றேடத்தானும்
அறிவரு கயிலையோ னானைக்காவே. 

பொழிப்புரை :

இறைவனைப் பற்றி எதுவுமே கூறாத அறிவிலிகளாகிய சமணர்களும், புத்தர்களும் கூறும் உரைகளைக் கொள்ள வேண்டா. மடங்கிவீசும் அலைகளையுடைய பாற்கடலில் பள்ளி கொள்ளும் திருமாலும், பிரமனும் அறிவதற்கரியவரான கயிலை மலையில் வீற்றிருந்தருளும் சிவபெருமானே, மருண்ட பார்வையுடைய மான்கன்றைக் கையிலேந்தித் திருவாரூரிலும், திருமயேந்திரத்திலும், திருவானைக்காவிலும் வீற்றிருந்தருளுகின்றார்.

குறிப்புரை :

வெறிய மான் கரத்து ஆரூரர் - மருண்டு நோக்குதலையுடைய மானை ஏந்திய கையையுடைய ஆரூரர். வெறிய - குறிப்புப் பெயரெச்சம். ஆரூர் - என்பதற்குமேல் எட்டாவது பாட்டுக் குறிப்புக் காண்க. மறி - மடக்கி வீசும் அலைகளையுடைய. கடலோன் - பாற் கடலில் துயில்வோனாகிய திருமால் - அறிவு அரு - அறிவதற்கரிய.

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 11

ஏனமா லயனவர் காண்பரியார்
கானமார் கயிலைநன் மயேந்திரரும்
ஆனவா ரூராதி யானைக்காவை
ஞானசம் பந்தன் றமிழ்சொல்லுமே. 

பொழிப்புரை :

பன்றி உருவமெடுத்த திருமாலும், பிரமனும் காண்பதற்கு அரியவராய் ஓங்கிய சிவபெருமான், சோலைகள் சூழ்ந்த திருக்கயிலையிலும், நல்ல திரு மயேந்திரத்திலும், திருவாரூரிலும், திருவானைக்காவிலும் வீற்றிருந்தருளுகின்றார். அத்தகைய சிவ பெருமானைப் போற்றி ஞானசம்பந்தர் அருளிய இத்தமிழ் மாலையை ஓதவல்லவர்கள் பெறலரும் பிறவிப் பயனைப் பெறுவார்கள்.

குறிப்புரை :

ஏனம் மால் - பன்றி உருவமெடுத்த திருமால். கானம் ஆர் கயிலை - சோலைகள் சூழ்ந்த கயிலை. தமிழ் சொல்லுமே - தமிழைப் பாடுவீர்களாக. பாடின் பெறலரும் பயன் பெறுவீர் என்பது குறிப்பெச்சம்.
பதிகக்குறிப்பு:- ஒவ்வொரு பாடலிலும் நான்கு தலங்கள் குறிக்கப்பட்டதாதலால் கூடற் சதுக்கம் என்னப்பட்டது. சதுஷ்கம் என்பது வடசொல். ஒவ்வொரு பாடலிலும் திருமாலும் பிரமனும் காணமுடியாதவர் என்று குறிக்கப்படுகிறது. திருமாலின் பல தன்மைகள் பதிகத்தில் குறிக்கப்படுகின்றன. நான்கு தலங்களையும் சொன்னபோதிலும், ஒவ்வொரு பாசுரமும் \\\\\\\"ஆனைக்காவே\\\\\\\" என்று முடிகின்றது. முதல் எட்டுப் பாடல்கள், ஆரூர் ஆதி (ஆனைக்கா) என்றே முடிகின்றன. ஒன்பதாவது பாடல் \\\\\\\"ஆரூர் எந்தை\\\\\\\" என்று முடிகின்றது. பத்தாவது பாடல் \\\\\\\"கயிலையோன் ஆனைக்கா\\\\\\\" என்று முடிகிறது. பதினோராவது பாடல் இந்நான்கு தலங்களிலும் எழுந் தருளியிருப்பவனது திருவானைக்காவை ஞானசம்பந்தன் பாடிய தமிழ் என்று வருகிறது.
சிற்பி