திரு வீழிமிழலை


பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 1

வேலினேர்தரு கண்ணினாளுமை பங்கனங்கணன் மிழலைமாநகர்
ஆலநீழலின் மேவினானடிக் கன்பர்துன் பிலரே.

பொழிப்புரை :

வேல் போன்று கூர்மையும் , ஒளியுமுடைய கண்களை உடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவர் அழகிய கண்களையுடைய சிவபெருமான் . அவர் திருவீழிமிழலை என்னும் மாநகரில் வீற்றிருந்தருளுகின்றார் . ஆலமரநிழல் கீழிருந்து அறம்உரைத்தவர் . அப்பெருமானின் திருவடிகளை அன்புடன் வணங்குபவர்கட்குத் துன்பம் இல்லை .

குறிப்புரை :

வேலின் நேர்தரு - வேலை ஒத்த .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 2

விளங்குநான்மறை வல்லவேதியர் மல்குசீர்வளர் மிழலையானடி
உளங்கொள்வார்தமை யுளங்கொள்வார்வினை யொல்லை யாசறுமே.

பொழிப்புரை :

நான்கு வேதங்களையும் நன்கு கற்றுவல்ல அந்தணர்கள் வசிக்கின்ற , புகழ்மிக்க திருவீழிமிழலையில் வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிகளை உள்ளத்தால் தியானிப்பவர்கள் சிவனடியார்கள் , அவ்வடியார்களை வழிபடும் அன்பர்களின் வினையான குற்றம் விரைவில் நீங்கும் .

குறிப்புரை :

நான் மறை வல்ல வேதியர் மல்குசீர் வளர்மிழலை என்பது தில்லை மூவாயிரம் ; திருவீழிமிழலை ஐந்நூறு ; என்னும் பழ மொழிப்படி அந்தணர்கள் மிகுதியைக் குறித்ததாம் . ` ஐந்நூற்று அந்தணர் ஏத்தும் எண்ணில் பல்கோடி குணத்தர் ஏர்வீழி , இவர் நம்மை ஆளுடையாரே ` ( தி .9 திருவிசைப்பா . 54) என்று சேந்தனார் கூறுவதுங் கொள்க . வினை ஆசு அறும் - வினை பற்று அற நீங்கும் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 3

விசையினோடெழு பசையுநஞ்சினை யசைவுசெய்தவன் மிழலைமாநகர்
இசையுமீசனை நசையின்மேவினான் மிசைசெயா வினையே.

பொழிப்புரை :

வேகமாகப் பரவும் கொல்லும் தன்மையுடைய விடத்தை உண்டு சிவபெருமான் திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான் . நஞ்சுண்டும் சாவாது புகழுடன் விளங்கும் அப்பெருமானை நாடி வணங்கினால் வினையானது துன்பம் செய்யாது .

குறிப்புரை :

விசையினோடு எழு - வேகமாகப் பரவிய . பசையும் நஞ்சினை - பற்றிக் கொல்லும் விடத்தை . அசைவு செய்தவன் - உண்டவன் . நசையின் மேவினால் - விருப்பத்தோடு அடைந்தால் . மிசை - மிகை ; தீங்கு .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 4

வென்றிசேர்கொடி மூடுமாமதிண் மிழலைமாநகர் மேவிநாடொறும்
நின்றவாதிதன் னடிநினைப்பவர் துன்பமொன் றிலரே.

பொழிப்புரை :

சிவபெருமானின் வெற்றிக்கொடிகள் வானத்தை மூடும்படி விளங்கும் , உயர்ந்த மதில்களையுடையது திருவீழி மிழலை என்னும் மாநகர் . அப்பெருமாநகரினைவிரும்பி ஆங்கு வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிகளை நாள் தோறும் நினைத்து வழிபடுபவர்கட்குத் துன்பம் சிறிதும் இல்லை .

குறிப்புரை :

வென்றிசேர் கொடி - வெற்றியினால் எடுத்த கொடிகள் . மூடும் - வானை மூடுகின்ற . மாமதில் - உயர்ந்த மதிலையுடைய . நாடொறும் நின்ற - என்றும் நிலைபெற்று நின்ற . ஒன்று - ஒரு சிறிதும் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 5

போதகந்தனை யுரிசெய்தோன்புய னேர்வரும்பொழின் மிழலைமாநகர்
ஆதரஞ்செய்த வடிகள்பாதம் அலாலொர்பற் றிலமே.

பொழிப்புரை :

செருக்குடன் முனிவர்களால் கொடுவேள்வி யினின்றும் அனுப்பப்பட்ட மதங்கொண்ட யானையின் தோலை உரித்த சிவபெருமான் , மேகம்படியும் சோலைகளையுடைய திருவீழி மிழலை என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றார் . அப்பெருமானின் திருவடிகளைத்தவிர வேறு பற்று எதுவும் எமக்கு இல்லை .

குறிப்புரை :

போதகம் - யானை . புயல் நேர் வரும் - மேகங்கள் படியும் . ஆதரம் செய்த அடிகள் - விரும்பித் தங்கிய சிவபெருமான் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 6

தக்கன்வேள்வியைச் சாடினார்மணி தொக்கமாளிகை மிழலைமேவிய
நக்கனாரடி தொழுவர் மேல்வினை நாடொறுங் கெடுமே.

பொழிப்புரை :

சிவபெருமான் , தக்கன் வேள்வியைத் தகர்த்தவர் . இரத்தினங்கள் பதிக்கப்பெற்ற மாளிகைகளையுடைய திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் திகம்பரரான சிவபெருமானின் திருவடிகளை நாள்தோறும் தொழுபவர்கட்கு மேல்வினை உண்டாகாது .

குறிப்புரை :

சாடினார் - மோதி அழித்தார் . மணி தொக்க மாளிகை - இரத்தினங்கள் பதிக்கப் பெற்ற மாளிகை . நக்கனார் - ஆடையில்லாதவர் , தொழுவார்மேல் - தொழுவார்கள் இடத்து .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 7

போரணாவுமுப் புரமெரித்தவன் பொழில்கள்சூழ்தரு மிழலைமாநகர்ச்
சேருமீசனைச் சிந்தைசெய்பவர் தீவினை கெடுமே.

பொழிப்புரை :

போர்க்குணத்தை விரும்பி அதனை மேற்கொண்ட அசுரர்களின் முப்புரங்களை எரித்த சிவபெருமான் , சோலைகள் சூழ்ந்த திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் . அப்பெருமானைச் சிந்தித்து வழிபடும் அடியவர்களின் தீவினை அழிந்துவிடும் .

குறிப்புரை :

போர் அணாவு - போரை மேற்கொண்ட .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 8

இரக்கமிஃறொழி லரக்கனாருட னெருக்கினான்மிகு மிழலையானடி
சிரக்கொள்பூவென வொருக்கினார்புகழ் பரக்குநீள் புவியே.

பொழிப்புரை :

இரக்கம் அற்ற தொழில்புரியும் அரக்கனான இராவணனின் உடல் நெரியும்படி கயிலைமலையின் கீழ் அடர்த்த சிவபெருமான் திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந் தருளுகின்றார் . அப்பெருமானின் திருவடிக் கமலங்களை சிரசின்மேல் வைத்த மலர்போலக் கொண்டு , சிந்தையை ஒருமுகப்படுத்தி வழி படுபவர்கள் , உலகில் புகழுடன் விளங்குவர் .

குறிப்புரை :

இரக்கமிஃறொழில் ( இரக்கம் இல் தொழில் ) - ` குறில் வழி லளத்தவ் அணையின் ஆய்தம் ஆகவும் பெறூஉம் அல்வழி யானே ` ( நன்னூல் . 228) என்பது விதி . சிரக்கொள் பூவென ( சிரம் கொள் பூவென ) - தலையில் அணியும் பூவைப்போல . எதுகை நோக்கி சிரக்கொள் என வலித்தது . ஒருக்கினார் - சிந்தையை ஒருமைப் படுத்தினவர் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 9

துன்றுபூமகன் பன்றியானவ னொன்றுமோர்கிலா மிழலையானடி
சென்றுபூம்புன னின்றுதூவினார் நன்றுசேர் பவரே.

பொழிப்புரை :

இதழ் நெருங்கிய தாமரைப் பூவில் வீற்றிருக்கும் பிரமனும் , பன்றி உருவெடுத்த திருமாலும் உணர்தற்கரியவனான சிவபெருமான் , திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந் தருளுகின்றான் . அப்பெருமானின் திருவடிகளை , பூவும் , நீரும் கொண்டு பூசிப்பவர்கள் , முத்தி பெறுவர் .

குறிப்புரை :

துன்று பூமகன் - ( பூ துன்று மகன் ) பூவில் வாழும் பிரமன் . சென்று - திருவீழிமிழலைக்குச் சென்று . மிழலையானடி - அக் கடவுளின் திருவடிகளில் . பூம் புனல் தூவினார் - பூவையும் நீரையும் தூவினவர்கள் . பூம் புனல் - பூவும் நீரும் . பூவோடு நீர் கூறுவதை ` பொக்கம் மிக்கவர் பூவும் நீருங்கண்டு ` ( தி .5. ப .90. பா .9) எனவும் , ` போதொடு நீர் சுமந்தேத்தி ` ( தி .4. ப .3. பா .1) எனவும் வருவன கண்டு அறிக . நன்று சேர்பவர் - முத்தி அடைபவர் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 10

புத்தர்கைச்சமண் பித்தர்பொய்க்குவை வைத்தவித்தகன் மிழலைமாநகர்
சித்தம்வைத்தவ ரித்தலத்தினுண் மெய்த்தவத் தவரே.

பொழிப்புரை :

புத்தர்களும் , சமணர்களும் கூறும் பொய்க் குவியல்களாகிய உபதேசங்களைத் தோற்க வைத்த ஞானசொரூபரான சிவபெருமான் , திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந் தருளுகின்றார் . அப்பெருமான் மீது சித்தம் வைத்து வழிபடுபவர்கள் இப்பூவுலகில் மெய்யான தவத்தைப் புரிந்தவராவர் .

குறிப்புரை :

கை - அற்பத்தனத்தை உடைய . சமண் பித்தர் - பித்தர் ஆகிய சமணர் . ` ஏதம் கொண்டு ஊதியம் போக விடுதலின் ` பித்தர் என்பார் . பொய்க்குவை வைத்த வித்தகன் - பொய்க் குவியலாகிய உப தேசங்களைத் தோற்க வைத்த சாமர்த்தியசாலி . வித்தகன் - ஞான சொரூபர் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 11

சந்தமார்பொழின் மிழலையீசனைச் சண்பைஞானசம் பந்தன்வாய்நவில்
பந்தமார் தமிழ் பத்தும் வல்லவர் பத்தரா குவரே.

பொழிப்புரை :

சந்தன மணம் கமழும் சோலைகளையுடைய திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவ பெருமானைப் போற்றி , சண்பையில் அவதரித்த ஞானசம்பந்தர் அருளிய திருவருளால் பிணிக்கப்படும் இத்தமிழ்ப்பதிகத்தை ஓத வல்லவர்கள் பத்தர்கள் ஆவர் .

குறிப்புரை :

சந்தம் ஆர் பொழில் - சந்தன மரங்கள் நிறைந்த சோலை. பந்தம் ஆர் தமிழ் - கேட்டார்ப் பிணிக்கும் தகையவாயின தமிழ்.
சிற்பி