திருப்பல்லவனீச்சரம்


பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 1

பரசுபாணியர் பாடல்வீணையர் பட்டினத்துறை பல்லவனீச்சரத்
தரசுபேணி நின்றார் இவர்தன்மை யறிவாரார்.

பொழிப்புரை :

சிவபெருமான் மழுப்படையைக் கையில் ஏந்தியவர் . வீணையில் பாட்டிசைப்பவர் . காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் ஆட்சி புரிந்து அருள்புரிபவர் . இவரது தன்மை எத்தகையது என்பதை யார் அறிவார் ? ஒருவரும் அறியார் .

குறிப்புரை :

பரசு பாணியர் - பரசு என்னும் ஆயுதத்தைக் கையில் ஏந்தியவர் . பாடல் வீணையர் - பாடுதலுக்குரிய கருவியாகிய வீணையை உடையவர் என்றது ஒன்றோடொன்று மாறுபட்ட தன்மையை உடையவர் . ஆகையினால் இவர் தன்மை அறிவார் யார் என்றார் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 2

பட்டநெற்றியர் நட்டமாடுவர் பட்டினத்துறை பல்லவனீச்சரத்
திட்டமா யிருப்பார் இவர்தன்மை யறிவாரார்.

பொழிப்புரை :

தலைமைப் பட்டத்திற்குரிய அடையாள அணிகலன் அணிந்த நெற்றியர் . திருநடனம் செய்பவர் . காவிரிப்பூம் பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவர் . இவரது தன்மை எத்தன்மையது என்பதை யாவரே அறிவார் ?

குறிப்புரை :

பட்டம் வீரர் நெற்றியில் அணியும் ஓர் அணிகலன் . அது இராமாயணத்தில் ` நுதலணி ஓடையில் பிறங்கும் வீரபட்டிகை ` என வருவதால் அறிக . நட்டம் - திருக்கூத்து .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 3

பவளமேனியர் திகழுநீற்றினர் பட்டினத்துறை பல்லவனீச்சரத்
தழகரா யிருப்பார் இவர்தன்மை யறிவாரார்.

பொழிப்புரை :

சிவபெருமான் பவளம் போன்ற சிவந்த மேனியுடையவர் , ஒளிபொருந்திய திருவெண்ணீற்றினை அணிந்துள்ளவர் . காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் அழகர் . இவரது தன்மை எத்தன்மையது என்பதை யாவரே அறிவார் ?

குறிப்புரை :

பவளமேனியர் - செந்நிறம் பொருந்திய உடம்பை உடையவர் . ` வெள்ளிப் பொடி பவளப் புறம் பூசிய வேதியனே ` ( தி .4. ப .112. பா .1.); ` பவளமே மகுடம் , பவளமே திருவாய் , பவளமே திருவுடம்பு ` ( தி .9 திருவிசைப்பா . 95.); ` பவளம்போல் மேனியில் பால் வெண்ணீறு ` ( தி .4. ப .81. பா .4.) என்பன காண்க .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 4

பண்ணில்யாழினர் பயிலுமொந்தையர் பட்டினத்துறை பல்லவனீச்சரத்
தண்ணலா யிருப்பார் இவர்தன்மை யறிவாரார்.

பொழிப்புரை :

இறைவன் பண்ணிசைக்கும் யாழினை உடையவர் . மொந்தை என்னும் வாத்தியத்தை வாசிப்பவர் . காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் தலைவர் . இவரது தன்மை எத்தகையது என்பதை யார் அறிவார் ?

குறிப்புரை :

பண்ணில் யாழினர் - பண்ணோடு கூடிய யாழை உடையவர் . ஏழன் உருபு , மூன்றின் பொருளில் வந்ததால் வேற்றுமை மயக்கம் . மொந்தை - ஒருவகை வாத்தியம் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 5

பல்லிலோட்டினர் பலிகொண்டுண்பவர் பட்டினத்துறை பல்லவனீச்சரத்
தெல்லியாட் டுகந்தார் இவர்தன்மை யறிவாரார்.

பொழிப்புரை :

சிவபெருமான் பற்களே இல்லாத மண்டை யோட்டில் பிச்சையேற்று உண்பவர் . காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருள்பவர் . இரவில் நடனம் ஆடுதலை விரும்புபவர் . இவர் தன்மை யார் அறிவார் ?

குறிப்புரை :

பல்லில் ஓட்டினர் - பல் இல்லாத மண்டை ஓட்டைப் பிச்சைப் பாத்திரமாக உடையவர் . எல்லி ஆட்டு உகந்தார் - இரவில் ஆடுதலில் விருப்பம் உடையவர் . ஆட்டு - முதனிலை திரிந்த தொழிற் பெயர் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 6

பச்சைமேனியர் பிச்சைகொள்பவர் பட்டினத்துறை பல்லவனீச்சரத்
திச்சையா யிருப்பார் இவர்தன்மை யறிவாரார்.

பொழிப்புரை :

சிவபெருமான் பச்சைநிறம் கொண்ட திருமேனி உடையவர் . பிச்சையேற்று உண்பவர் . காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவர் . இவர் தன்மை யார் அறிவார் ?

குறிப்புரை :

பச்சைமேனியர் - சிவபெருமானுக்குப் பச்சை நிறம் உண்டென்பது ` பச்சை நிறம் உடையர் பாலர் , சாலப் பழையர் , பிழையெலாம் நீக்கி ஆள்வர் ` ( தி .6. ப .17. பா .7.) எனவரும் தாண்டகத்தால் அறிக . சதாசிவமூர்த்தியின் ஐம்முகங்களில் ஒன்றாகிய சத்தியோ ஜாதம் பச்சை நிறம் உடையது என்றும் , அது அத்திருத்தாண்டகத்துப் பாலர் என அடுத்துக் குறித்தமையால் அறியப்படும் எனவும் கூறுப .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 7

பைங்கணேற்றினர் திங்கள்சூடுவர் பட்டினத்துறை பல்லவனீச்சரத்
தெங்குமா யிருப்பார் இவர்தன்மை யறிவாரார்.

பொழிப்புரை :

இறைவன் பசிய கண்களையுடைய எருதின்மேல் ஏறுபவர் . பிறைச்சந்திரனை சூடியுள்ளவர் . காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளினாலும் , எங்கும் வியாபித்துள்ளவர் . இவர் தன்மை யார் அறிவார் ?

குறிப்புரை :

எங்குமாய்ப் பல்லவனீச்சரத்து இருப்பார் என்றது :- அகண்டிதன் ஆகி எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அடியாரை ஆட்கொள்வான் வேண்டி , குருலிங்கசங்கமங்களில் கண்டனாய்த் தோன்றும் தன்மை விளக்கியவாறு . கண்டன் சிறு அளவில் காணப்படுபவன் . ` கண்டனைக் கண்டிராதே காலத்தைக் கழித்தவாறே ` என்ற திருநேரிசையால் அறிக .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 8

பாதங்கைதொழ வேதமோதுவர் பட்டினத்துறை பல்லவனீச்சரத்
தாதியா யிருப்பார் இவர்தன்மை யறிவாரார்.

பொழிப்புரை :

தம் திருவடிகளைக் கைகளால் தொழுது உலகத்தினர் நன்மையடையும் பொருட்டு வேதங்களைச் சிவ பெருமான் அருளிச்செய்தார் . காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் ஆதிமூர்த்தியாய் இருப்பவர் . இவரது தன்மையை யார் அறிவார் ?

குறிப்புரை :

பாதம் கை தொழ - தமது திருவடிகளைக் கையால் தொழுது உய்தி கூடும் பொருட்டு . வேதம் ஓதுவார் - வேதம் முதலிய நீதிகளை உபதேசித்தருள்பவர் . வேதம் , என்பது உபலட்சணம் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 9

படிகொண்மேனியர் கடிகொள்கொன்றையர் பட்டினத்துறை பல்லவனீச்சரத்
தடிகளா யிருப்பார் இவர்தன்மை யறிவாரார்.

பொழிப்புரை :

இறைவன் உலகம் முழுவதையும் தம் திருமேனியாகக் கொண்டவர் . நறுமணம் கமழும் கொன்றை மாலையை அணிந்துள்ளவன் . காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் தலைவனாய் விரும்பி வீற்றிருந்தருளுபவன் . இவன் தன்மை யார் அறிவார் ?

குறிப்புரை :

படிகொள் - பல்வேறு வடிவங்களில் திருவுடம்பு கொள்பவர் . கடி - வாசனை .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 10

பறைகொள்பாணியர் பிறைகொள்சென்னியர் பட்டினத்துறை பல்லவனீச்சரத்
திறைவரா யிருப்பார் இவர்தன்மை யறிவாரார்.

பொழிப்புரை :

இறைவன் பறை என்னும் இசைக்கருவியை உடையவன் . பிறைச்சந்திரனைத் தலையிலே அணிந்துள்ளவன் . காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் யாவர்க்கும் தலைவனாய் விரும்பி வீற்றிருந்தருளுபவன் . இவர் தன்மை யார் அறிவார் ?

குறிப்புரை :

பறை - வாத்தியம் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 11

வானமாள்வதற் கூனமொன்றிலை மாதர்பல்லவ னீச்சரத்தானை
ஞானசம்பந்தன் நற்றமிழ் சொல்லவல்லவர் நல்லவரே.

பொழிப்புரை :

அழகிய காவிரிப்பூம்பட்டினப் பல்லவனீச்சரத்து இறைவனைப் போற்றி , ஞானசம்பந்தன் அருளிய இந்நற்றமிழ்த் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள் நற்குணங்கள் வாய்க்கப் பெறுவர் . அவர்கள் மறுமையில் வானுலகை ஆள்வதற்குத் தடையொன்றுமில்லை .

குறிப்புரை :

ஊனம் - தடை . மாதர் - அழகிய .
சிற்பி