திருக்கழுமலம்


பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 1

உற்றுமை சேர்வது மெய்யினையே உணர்வது நின்னருண் மெய்யினையே
கற்றவர் காய்வது காமனையே கனல்விழி காய்வது காமனையே
அற்ற மறைப்பது முன்பணியே அமரர்கள் செய்வது முன்பணியே
பெற்று முகந்தது கந்தனையே பிரம புரத்தை யுகந்தனையே.

பொழிப்புரை :

இறைவரே ! உமாதேவியார் பிரியாது பொருந்தி இருப்பது உம் திருமேனியையே . சிவஞானிகள் உணர்ந்து போற்றுவது உமது பேரருளையே . கற்றுணர்ந்த துறவிகள் வெறுப்பது மனைவி முதலிய குடும்பத்தையே . நெற்றிக்கண் எரித்தது மன்மதனையே . உமது திருமேனியை மறைப்பது பாம்பே . தேவர்கள் செய்வது உமது பணிவிடையே . நீர் பெற்றெடுத்து விரும்பி அணைத்தது முருகப் பெருமானையே . நீர் திருப்பிரமபுரம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றீர் .

குறிப்புரை :

பிரமபுரத்தை உகந்தனையே - திருப்பிரமபுரத்தை விரும்பியருளிய பெருமானே ! உமை - உமாதேவியார் . உற்று - பிரியாது பொருந்தி . மெய்யினை - உமது திருவுடம்பை . உணர்வதும் - சிவஞானிகள் அறிவதும் . நின் அருள் மெய்யினையே - உமது உண்மையான அருளையே . கற்றவர் - ஞானநூலைக் கற்ற துறவிகள் . காய்வது - வெறுப்பது . கா - காத்திருந்த . மனையே - மனைவி முதலியவவற்றையே ; என்றது மனைவி முதலிய மூவகை ஏடணையையும் . கனல்விழி - நெற்றிக்கண் . காய்வது - எரித்தது . காமனையே - மன்மதனையே . முன்பக்கத்தில் படம் விரித்துக் கோவணமாகத் தங்கி . அற்றம் மறைப்பது - உனது மானத்தைக் காப்பது . பணியே - பாம்பே . அமரர்கள் செய்வதும் உன் பணியே - உனது பணிவிடையேயாம் . பெற்று முகந்தது கந்தனையே - பெற்று வாரி எடுத்து அணைத்தது முருகக் கடவுளையே . காமன் - உடற் பற்றுக்கு ஆகுபெயர் . காவடி போல உடம்பைக் குறித்தது , சுமக்கும் மனை என்பதால் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 2

சதிமிக வந்த சலந்தரனே தடிசிர நேர்கொள் சலந்தரனே
அதிரொளி சேர்திகி ரிப்படையா லமர்ந்தன ரும்பர்து திப்படையால்
மதிதவழ் வெற்பது கைச்சிலையே மருவிட மேற்பது கைச்சிலையே
விதியினி லிட்டவி ரும்பரனே வேணு புரத்தை விரும்பரனே.

பொழிப்புரை :

வஞ்சனை செய்து வந்தவன் சலந்தரன் என்னும் அசுரனே . அவன் தலையை வெட்டியவன் கங்கையைத் தாங்கிய அரன் . கண்டவர்கள் நடுங்கத்தக்க ஒளிபொருந்திய சக்கராயுதத்தால் சலந்தரனைக் கொல்லத் தேவர்கள் துதித்து மகிழ்ந்தனர் . சந்திர மண்டலத்தை அளாவிய மேருமலை , கையிலேந்திய வில்லாம் . பொருந்திய நஞ்சை உணவாக ஏற்பதில் வெறுத்திலீர் . விதிக்கப்பட்ட அறவழியில் உலகவர் ஒழுகுவதில் விருப்பத்தையுடைய பெரிய மேலான கடவுளே . வேணுபுரம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் அரனே !

குறிப்புரை :

சதி - வஞ்சனை . சலந்தரன் - சலந்தரனை . தடிசிரம் - தலையைவெட்டுவதற்குரிய . சலந்தரனே - வஞ்சகத்தையுடையவனே . வஞ்சகமாவது காலால் சக்கரம்போல் கோடுகிழித்து அதை எடுக்கச் சொல்லியது . அதிர் - கண்டார் நடுங்கத் தக்க . திகிரிப் படையால் - அச்சலந்தரனைக் கொன்ற சக்கராயுதத்தால் . உம்பர் - தேவர்கள் . துதிப்பு - துதித்தல் . அமர்ந்தனர் - மகிழ்ச்சியுற்றனர் . அடை - முதல் நிலைத் தொழிற்பெயர் . மதிதவழ் வெற்பது கைச்சிலையே - சந்திர மண்டலத்தை அளாவிய மேரு மலை , கையிலேந்திய வில்லாம் . மரு ( வு ) விடம் ஏற்பது கைச்சிலையே - பொருந்திய நஞ்சை உணவாக ஏற்பதில் வெறுத்திலீர் . விதியினில் - விதித்த முறையில் உலகர் ஒழுகுவதில் . இட்ட ( ம் ) - விருப்பத்தை உடைய . இரும் - பெரிய . பரனே - மேலான கடவுளே ! இட்டம் + இரும்பரன் - மவ்வீறொற்றொழிந்து உயிரீறு ஒத்தது . ( நன்னூல் . 219.) இட்டு அவிரும் எனலே தகும் . வேணுபுரத்தை விரும்பு அரனே - வேணு புரத்தை விரும்புகின்ற சிவபெருமானே .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 3

காதம ரத்திகழ் தோடினனே கானவ னாய்க்கடி தோடினனே
பாதம தாற்கூற் றுதைத்தனனே பார்த்த னுடலம் புதைத்தனனே
தாதவிழ் கொன்றை தரித்தனனே சார்ந்த வினைய தரித்தனனே
போத மமரு முரைப்பொருளே புகலி யமர்ந்த பரம்பொருளே.

பொழிப்புரை :

இறைவர் காதில் தோட்டை அணிந்தவர் . வேடுவனாகி மிக விரைந்து சென்றவர் . யமனைக் காலால் உதைத்தவர் . அர்ச்சுனனது உடலைக் கவசம் போல் மூடினவர் . மகரந்தத்தோடு மலர்ந்த கொன்றையை அணிந்தவர் . அன்பர்களின் வினைகளை அழித்தவர் . சிவஞானக் கருத்தடங்கிய உபதேச மொழியின் பொருளாயுள்ளவர் . அவரே திருப்புகலி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் பரம்பொருள் .

குறிப்புரை :

புகலியை அமர்ந்த - விரும்பி யுறைகின்ற பரம் பொருளே - கடவுளே . காது அமரத்திகழ்தோடினனே - காதில் பொருந்த விளங்குகின்ற தோட்டையணிந்தவர் . கானவன் ஆய் - வேடுவனாகி . கடிது ஓடினனே - மிக விரைந்து சென்றவர் . ( பாதம் அதால் ) கூற்று - யமனை உதைத்தனனே . பார்த்தன் - அருச்சுனனது . உடல் - உடம்பை . அம்பு தைத்தனனே - அம்பு தொடுத்து அதனால் கவசம்போல் மூடினவர் . தாது அவிழ் - மகரந்தத் தோடு மலர்ந்த . தன் அன்பர்களுக்கு சார்ந்த - பொருந்திய . வினை ( அது ) அரித்தனனே - கொன்று அருளியவர் . போதம் அமரும் உரைப்பொருளே - சிவஞானக் கருத்தடங்கிய உபதேச மொழியின் பொருளாயுள்ளவன் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 4

மைத்திகழ் நஞ்சுமிழ் மாசுணமே மகிழ்ந்தரை சேர்வது மாசுணமே
மெய்த்துடல் பூசுவர் மேன்மதியே வேதம தோதுவர் மேன்மதியே
பொய்த்தலை யோடுறு மத்தமதே புரிசடை வைத்தது மத்தமதே
வித்தக ராகிய வெங்குருவே விரும்பி யமர்ந்தனர் வெங்குருவே.

பொழிப்புரை :

கருநிறமுடைய நஞ்சைக் கக்கும் பாம்பை மகிழ்ந்து இடுப்பில் அணிந்துள்ளவர் . திருநீற்றினையே சந்தனம் போல் உடம்பில் பூசியவர் . அவர் தலைமேல் விளங்குவது சந்திரனே . அவர் வேதம் அருளியது உயிர்கட்கு மேலான ஞானம் அருளவே . மண்டையோடு ஏந்தி மயானத்தில் விளங்குபவர் . முறுக்குண்ட சடையில் அவர் அணிந்துள்ளது ஊமத்த மலரே . வித்தகராகிய அப் பெருமான் எம் குரு ஆவார் . அவர் விரும்பி வீற்றிருந்தருளுவதும் திருவெங்குரு என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

மைத்திகழ் நஞ்சு உமிழ்மாசுணமே - கரிய நிறம் விளங்கும் நஞ்சைக் கக்கும் பாம்பே . மகிழ்ந்து அரை - இடுப்பில் சேர்வது அரை ஞாணாகவும் கோவணமாகவும் சேர்வது . மாசு ( ண் ) ணமே மெய்த்து உடல் பூசுவர் - சிறந்த திரு நீற்றையே உடம்பின்மேற் பூசுவதாகிய சந்தனமாகத் திருமேனியிற் பூசுவர் . சுண்ணம் , பொடி , திருநீறு . மெய்த்து - உடம்பிற் பூசுவதாகிய சந்தனத்தைக் குறித்தது , ` சாந்தமும் வெண்ணீறு ` என்ற திரு விசைப்பாவின் கருத்து . மேல் மதியே - ( தலை ) மேல் ( இருப்பதும் ) சந்திரனே . மேல் மதியே வேதமது ஓதுவர் - மேலான புத்தியைத் தரும் கருத்துக்களை வேதம் முதலிய நூல்களால் ஓதியருளியவர் ( அவ்வாறு ஓதியருளும் ) வித்தகர் ஆகிய எம் குருவே . சமர்த்தராகிய எம் குருநாதன் விரும்பி அமர்ந்தனர் . வெங்குருவே - வெங்குருவென்னும் தலத்தில் விரும்பி அமர்ந்தனர் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 5

உடன்பயில் கின்றனன் மாதவனே உறுபொறி காய்ந்திசை மாதவனே
திடம்பட மாமறை கண்டனனே திரிகுண மேவிய கண்டனனே
படங்கொ ளரவரை செய்தனனே பகடுரி கொண்டரை செய்தனனே
தொடர்ந்த துயர்க்கொரு நஞ்சிவனே தோணி புரத்துறை நஞ்சிவனே.

பொழிப்புரை :

இறைவனே ! திருமாலைத் தம்முடன் இடப் பாகத்தில் இருக்கும்படி செய்கின்றவர் . தம்வழிச் செல்லும் இயல்புடைய இந்திரியங்களை அடக்கும் பெரிய தவம் செய்தவர் . உறுதி பயக்கும் சிறந்த வேதங்களை அருளியவர் . முக்குண வயப்பட்டுச் செய்த புறச்சமயக் கொள்கைகளைக் கண்டனம் செய்பவர் . பட மெடுக்கும் பாம்பை இடுப்பில் அணிந்தவர் . யானையின் தோலை உரித்து அதைக் கொன்றவர் . தொடர்ந்த துன்பங்களை அழிப்பதில் இவர் விடம் போன்றவர் . இவரே திருத்தோணிபுரம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் நம் சிவபெருமான் ஆவார் .

குறிப்புரை :

உடன் பயில்கின்றனன் மாதவன் - தம்மோடு கூடவேயிருக்கும் பேறுடையவன் திருமால் . ஏனெனில் , உறு - தம் வழியிற் செல்லுகின்ற . பொறி - இந்திரியங்களை . காய்ந்து இசை - கோபித்து மடக்கிச் செலுத்திய . மாதவன் - பெருந் தவஞ்செய்தோனாதலினால் பொறிகளை யடக்குதல் அவற்கு ஆகும் என்க . ` சென்ற விடத்தாற் செலவிடா தீது ஒரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு ` என்னும் திருக்குறள் கொண்டு அறிக . திடம்பட - உறுதிப்பாடு அமைய . மாமறை - சிறந்த வேதங்களை . கண்டனன் - செய்தருளியவர் . வேதத்தை யருளியவரும் சிவபெருமானேயென்பது . இதனை ` உம்பரின் நாயகன் திருவாக்கிற் பிரணவம் உதித்தது , அதனிடை வேதம் பிறந்தன ` என்னும் திருவிளையாடற் புராணத்தால் அறிக . ( வேதத்துக்கு 804 ). திரிகுணம் மேவிய - முக்குண வயப்பட்டுச் செய்தனவாகிய புறச்சமயக் கொள்கைகளை . கண்டனன் - கண்டனம் செய்வோன் . படங்கொள் அரவு , அரை செய்தனனே - அரையிலணிந்தவன் . பகடு - யானையின் . உரிகொண்டு - தோலையுரித்து . அரை செய்தனன் - அதை அழித்தவன் . ( தொடர்ந்த ) துயர்க்கு - துன்பங்களுக்கு ஒரு நஞ்சு இவனே - ஒருவிடம்போல் நின்று அழிப்பவன் இவனே . பிற தெய்வங்கள் வேதனைப்படும் , இறக்கும் , பிறக்கும் , மேல் வினையும் செய்யும் ஆதலால் இவையிலாதான் அறிந்தருள் செய்வன் எனப் பிரிநிலை ஏகாரம் வைத்தார் . சிவன் வெங்குருமேவிய நம் சிவனே என்க .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 6

திகழ்கைய தும்புகை தங்கழலே தேவர் தொழுவதுந் தங்கழலே
இகழ்பவர் தாமொரு மானிடமே யிருந்தனு வோடெழின் மானிடமே
மிகவரு நீர்கொளு மஞ்சடையே மின்னிகர் கின்றது மஞ்சடையே
தகவிர தங்கொள்வர் சுந்தரரே தக்க தராயுறை சுந்தரரே.

பொழிப்புரை :

இறைவன் அழகிய கையில் ஏந்தியுள்ளது புகைகொண்டு எழும் நெருப்பே . தேவர்கள் போற்றுவது அவருடைய திருக்கழல்களையே . தம்மை இகழ்ந்த தாருகவனத்து முனிவர்கள் ஏவிய மானை இடக்கரத்தில் ஏந்தியுள்ளார் . பக்குவான்மாக்கட்கு ஞானோபதேசம் செய்ய அவர் காட்சி தந்தது மானிட உடம்பில் . பெருக்கெடுக்கும் கங்கையைத் தாங்கியது அழகிய சடையிலே . மின்னலைப் போன்று ஒளிரும் அழகிய சடையை உடையவர் . தகுந்த விரதம் கொள்ளும் சுந்தர வடிவினர் . அவர் எக்காலத்திலும் அழியாது நிலைத்து நிற்கும் பூந்தராய் என்னும் திருப்பதியில் வீற்றிருந்தருளும் அழகர் .

குறிப்புரை :

திகழ் - விளங்குகின்ற , கையதுவும் புகை தங்கு , அழலே , நெருப்பே , தேவர்தேவர் ( கள் ) தொழுவதும் , தம் கழலே - தமது திருவடியையேயாம் . இகழ்பவர் - தம்மை அலட்சியம் செய்தவர்களாகிய . தாம் - தாருகவனத்துமுனிவர் ( ஏவிய ) ஒருமான் , இடம் - இடக்கரத்தில் உள்ளது . இருந்தனுவோடு - பக்குவ ஆன்மாக்களுக்கு ( உபதேசிக்கும் பொருட்டு ) அவர்தம் பெருமைபொருந்திய உடம்பிற்கு . எழில் - அழகிய . மானிடவடிவமே என்றது ` மானிடரை ஆட்கொள்ள மானிட வடிவங்கொண்டு வருவன் ` என்ற கருத்து . அது ` அருபரத் தொருவன் அவனியில் வந்து , குருபரனாகியருளிய கொள்கை ` எனவும் , ` இம்மண் புகுந்து மனித்தரை யாட்கொள்ளும் வள்ளல் ` எனவும் வரும் திருவாசகத்தால் ( தி .8) அறிக . மிகவரும் , நீர் கொளும் - தண்ணீரைத் தன்னகத்து அடக்கிய , மஞ்சு - மேகங்கள் . அடைவு - தம்மிடம் சேர்தலையுடையது . என்றது சிவபெருமான் சடாபாரத்தில் மேகங்கள் இருப்பதைக் குறித்தது . இதனைத் திரு விளையாடல் நான்மாடக்கூடலான படலத்தால் அறிக . மின் - மின்னலை . நிகர்கின்றதும் - ஒப்பதுவும் . அம்சடையே - அழகிய சடையே . தக - தகுமாறு . விரதம் - மனத்தையடக்கல் முதலிய விரதங் காத்தலை . கொள்வர் - பாராட்டியேற்றுக் கொள்பவராகிய சுந்தரர் . கொள்வர் - இவ்வுலகிற்குத் தலைவர் . ` விரதமெல்லாம் மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய் ` எனவும் , ` விரதங் கொண்டாட வல்லானும் ` எனவும் வரும் அப்பர் திருவாக்கிலும் ஒலிக்கிறது . வசுந்தரர் எனற்பாலது சுந்தரர் என நின்றது முதற்குறை . உலகத்தை உடையவர் என்று பொருள் . தக்க தராய் - பூந்தராய் . உறை - வீற்றிருக்கும் , சுந்தரர் அழகர் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 7

ஓர்வரு கண்க ளிணைக்கயலே யுமையவள் கண்க ளிணைக்கயலே
ஏர்மரு வுங்கழ னாகமதே யெழில்கொளு தாசன னாகமதே
நீர்வரு கொந்தள கங்கையதே நெடுஞ்சடை மேவிய கங்கையதே
சேர்வரு யோக தியம்பகனே சிரபுர மேய தியம்பகனே.

பொழிப்புரை :

இறைவனையும் , அடியாரையும் காணாத கண்கள் புறம்பானவை . உமாதேவியின் கண்கள் இரு கயல்மீன்கட்கு ஒப்பானவை . அழகிய திருவடிகளில் கட்டியிருப்பது நாகத்தையே . அவருடைய திருமேனியானது நெருப்பு வண்ணம் உடையது நீர்மயமான கொத்தான கூந்தல் ஒழுங்காய் உள்ளது . நெடுஞ்சடையில் தங்கியுள்ளது , கங்கையே . சேர்தற்கரிய யோகநிலையைக் காட்டிய மூன்று கண்களையுடையவரே . நெருப்பாகிய அம்பைக் கையின் இடத்துக்கொண்டு சிரபுரம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து அருளுகின்றார் .

குறிப்புரை :

ஓர்வு அரு கண்கள் - மாலற நேயம் மலிந்தவர் வேடத்தை அரனென நினைக்காத கண்கள் . இணைக்க - அன்பரொடு மருவுதற்கு . அயல் - புறம்பானவை . வேடத்தைக் கண்டு நினைப்பிக்கும் கருவியாகலான் கண்கள்மேல் வைத்து ஓதினாரேனும் , மாந்தர்மேல் வைத்துக் கூறியதாகக் கொள்க . எனவே வேடத்தை மதியாதவர் திருக்கூட்டத்திற்குப் புறம்பு என்ற கருத்தாம் . உமையவள் கண்கள் , இணைக்கயல் - இரு மீன்களுக்கு ஒப்பாகும் . ஏர் மருவும் - அழகு பொருந்திய . கழல் - வீரக்கண்டையாக இருப்பது . நாகம் அது - பாம்பாம் . எழில் கொள் - அழகிய . உதாசனன் - அக்கினி . ஆகம் அது - திருவுடம்பாக இருப்பது . நீர்வரு - நீர்மயமான . கொந்து அளகம் - கொத்தான கூந்தல் . கையது - ஒழுங்காய் உள்ளது . கங்கையது - கங்கையாகிய மங்கைக்கு உரியது . ஒரு மங்கையே நீர்மயமாக இருப்பாளேயானால் அவளது சாங்கமும் நீர்மயமானதே என்று கொள்வதற்கு நீர்வரு கொந்தளகம் என்று கூறினார் . சேர்வரு - சேர்தற்கரிய . யோகம் - யோகநிலையைக் காட்டிய . தியம்பகன் - மூன்று கண்களை உடையவன் . தியம்பகன் - திரியம்பகன் என்பதன் மரூஉ . சிரபுரம் , மேய - எழுந்தருளிய . தீ - நெருப்பாகிய . அம்பு - அம்பைக்கொண்ட . அகன் - கையினிடத்தை உடையவன் . தீ - குறுக்கல் விகாரமாய் தி என நின்றது . அகம் - இடம் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 8

ஈண்டு துயிலம ரப்பினனே யிருங்க ணிடந்தடி யப்பினனே
தீண்டல ரும்பரி சக்கரமே திகழ்ந்தொளி சேர்வது சக்கரமே
வேண்டி வருந்த நகைத்தலையே மிகைத்தவ ரோடு நகைத்தலையே
பூண்டனர் சேர லுமாபதியே புறவ மமர்ந்த வுமாபதியே

பொழிப்புரை :

பாற்கடலில் துயில் கொள்ளும் திருமால் , தமது பெரிய கண்ணைத் தோண்டிச் சிவபெருமானின் திருவடிகளில் அர்ச்சித்தனர் . தீண்டுதற்கரிய தன்மையுடைய அந்தக் கரத்தில் ஒளியுடையதாய் விளங்குவது சக்கரமே . தாருகாவனத்து முனிவர்கள் விரும்பி யாகம் செய்து சிரமப்படச் சிவனைக் கொல்ல வந்தது நகுவெண்டலை . அம்முனிவர்களைப் பரிகசிப்பது போல வெண்டலை களை மாலையாக அணிந்து கொண்டனர் . அவர் சேர்வது எவற்றிலும் சிறந்த அடியார் உள்ளமாகிய இடமாம் . புறவம் என்னும் திருத் தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவரும் அந்த உமாபதியே ஆவார் .

குறிப்புரை :

ஈண்டு - இங்கே ( திருவீழிமிழலையில் ). துயில் அமர் அப்பினன் - கடலில் தூங்கும் திருமால் . அப்பு - தண்ணீர் , கடலைக் குறித்தது தானியாகுபெயர் . இரு - பெரிய . கண் - கண்ணை . இடந்து - தோண்டி . அடி - திருவடியின்கண் . அப்பினன் - சேர்த்தான் . தீண்டல் அரு - தீண்டுவதற்கு அரிய . பரிசு - தன்மையுடன் . அக்கரம் - அந்தக்கரத்தில் . திகழ்ந்து - விளங்கி . ஒளிசேர்வது - ஒளி உடையதாய் இருப்பது . சக்கரம் - சக்கர ஆயுதமாம் . வேண்டி - ( தாருகாவனத்து முனிவர் ) விரும்பி . வருந்த - யாகம் செய்து சிரமப்பட ( தோன்றிய ). நகைத்தலை - நகுவெண்டலையானது . அவரோடு - அம்முனிவ ரோடு . மிகைத்து - மிக்க மாறுகொண்டு . நகைத்தலையே பூண்டனர் - நகைத்தலை உடையதாக . பூண்டனர் - தலைக்கண் அணிந்தனர் . சிவனைக் கொல்லவந்த நகுவெண்டலை சிரிப்பது , அம் முனிவரைப் பரிகசிப்பதைப் போலக் காணும்படி அதனை அணிந்தனர் என்பது கருத்து . புறவு அமர்ந்த உமாபதி , சேரலும் - சேர்வதும் . மா - எவற்றிலும் சிறந்த ( அடியார் உள்ளமாகிய ). பதி - இடமாம் . ` மலர்மிசை ஏகினான் ` ( குறள் .3) என்ற திருக்குறளு க்குப் பரிமேலழகர் உரைத்தது இங்குக் கொள்க .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 9

நின்மணி வாயது நீழலையே நேசம தானவர் நீழலையே
உன்னி மனத்தெழு சங்கமதே யொளியத னோடுறு சங்கமதே
கன்னிய ரைக்கவ ருங்களனே கடல்விட முண்டக ருங்களனே
மன்னிவ ரைப்பதி சண்பையதே வாரி வயன்மலி சண்பையதே.

பொழிப்புரை :

சிவபெருமானே ! மணிகட்டிய உன் கோயில் வாசலின் நிழலையே அருளிடமாகக் கொண்ட நேசமுடைய அடியவர்களிடமிருந்து நீங்கமாட்டாய் . அவர்களின் அடிச்சுவட்டை எண்ணி . மனத்தில் தொழுகின்ற அடியவர்கள் விளங்குகின்ற இடமே அடியவர் திருக்கூட்டம் எனத்தகும் . அவர் தாருகாவனத்தில் வாழும் மகளிர் உள்ளத்தைக் கவர்ந்த கள்வர் . கடலில் எழுந்த விடத்தை உண்ட கரிய கண்டத்தர் . அப்பெருமான் நிலையாக விரும்பி வீற்றிருந்தருளும் வரையறுத்தலை உடையபதி சண்பைப்புல்லாலே அழகாகச் சூழப் பட்டதாகிய . கடல்வளமும் , வயல் வளமும் உடைய சண்பை நகராகும் .

குறிப்புரை :

நின்மணிவாயது - உமது ஆராய்ச்சி மணிகட்டிய , கோயிலின் திருவாயிலினுடைய . நீழலையே - நிழலையே . நேசமது ஆனவர் - விருப்பமாகக் கொண்டவர் ; என்றது திருக்கோயிலில் வழிபாடுசெய்து வாயிலில் காத்திருக்கும் அடியர் என்றபடி . ` மூவாவுருவத்து முக்கண் முதல்வ ...... காவாய் எனக் கடைதூங்கும் மணி ` என்ற அப்பர் வாக்கின்படி மணிவாய் என்பதற்குப் பொருள் கொள்ளப்பட்டது . வாய் - வாயில் . நீளலை ( அவ்வடியவரினின்றும் ) நீங்கமாட்டாய் . உன்னி மனத்து - மனத்தில் உம்மை நினைத்து . எழு - எழுகின்ற . சங்க ( ம ) ம் - அடியார் . ஒளியதனோடு - சைவ தேஜஸோடு . உறு - வருகின்ற . சங்கமது - கூட்டமாகும் . சங்கம் ; சங்கமம் என்பதன் மரூஉ . கடவுள் வெளிப்படும் நிலைகளாகிய குரு , லிங்க , சங்கமங் களில் ஒன்று . கன்னியரை - முனிபத்தினியரை . கவரும் - மனம் கவர்ந்த . களன் - கள்ளன் . கடல் விடமுண்ட , கருங்களன் - கரிய கழுத்தை உடையவன் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 10

இலங்கை யரக்கர் தமக்கிறையே யிடந்து கயிலை யெடுக்கிறையே
புலன்கள் கெடவுடன் பாடினனே பொறிகள் கெடவுடன் பாடினனே
இலங்கிய மேனி யிராவணனே யெய்து பெயரு மிராவணனே
கலந்தருள் பெற்றது மாவசியே காழி யரனடி மாவசியே.

பொழிப்புரை :

இலங்கை அரக்கர்கட்கு அரசனான இராவணன் கயிலையைப் பெயர்த்து எடுக்க , இறைவன் திருப்பாத விரலை ஊன்றக் கயிலையின் கீழ் நடுக்குண்டு , இந்திரியங்கள் மயங்கச் சோர்ந்து தான் பிழைக்கும் வண்ணம் இறையருளை வேண்டி உடனே பாடினன் . பழைய செருக்கு நீங்கி , பொறிகள் பக்தி நிலையில் செல்ல அவனுடைய பாடலுக்கு இறைவன் உடன்பட்டு அருளினன் . இரவு போன்ற கரிய நிறத்தை உடைய அவன் கயிலைமலையின் கீழ் நடுக்குண்டு அழுததனால் உண்டான பெயரே இராவணன் என்பதாம் . இறைவனின் அருளில் கலந்து அவன் பெற்றது சிறந்த வாளாயுதம் . சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடி சிறந்த வசீகரத்தை உடையதாகும் .

குறிப்புரை :

இலங்கை அரக்கர் தமக்கு , இறை - அரசனாகிய இராவணன் . கயிலை ( யை ) இடந்து எடுக்க இறையே சிறிதளவில் . புலன்கள் கெட - இந்திரியங்கள் எல்லாம் மயங்கச் ( சோர்ந்து ). உடன் பாடினனே - ( தான் பிழைக்கும் வண்ணம் ) உடனே பாடினன் . பொறிகள் - ஐம்பொறி முதலிய கரணங்கள் . கெட - பழைய செருக்கு நிலைகெட்டு ( பத்தி நிலையில் செல்ல ). உடன்பாடினனே - அவனுடைய பாடலுக்கு இறைவர் உடன்பட்டவராகி . இலங்கியமேனி இராவணன் - விளங்கின உடம்பையுடைய இராவணனுக்கு . எய்தும் பெயரும் இராவணனே - அதனால் உண்டான பெயரும் அழுதவன் என்பதாம் . கலந்து அருள்பெற்றதும் மாவசியே - அருளிற் கலந்து அவன் பெற்றதும் சிறந்த வாளாயுதமாம் . ( வசி - வாள் ) ` வசி கூர்மை வசியம் வாளே ` என்பது நிகண்டு . காழி அரன் அடி , மாவசி - சிறந்த வசீகரத்தை உடையதாகும் . வசி - முத்திபக்ஷாரம் என செந்திநாதையர் உரைப்பர் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 11

கண்ணிகழ் புண்டரி கத்தினனே கலந்திரி புண்டரி கத்தினனே
மண்ணிக ழும்பரி சேனமதே வானக மேய்வகை சேனமதே
நண்ணி யடிமுடி யெய்தலரே நளிர்மலி சோலையி லெய்தலரே
பண்ணியல் கொச்சை பசுபதியே பசுமிக வூர்வர் பசுபதியே.

பொழிப்புரை :

தாமரை போன்ற கண்களையுடைய திருமாலும் , அவனோடு சேர்ந்து திரிந்த உந்திக் கமலத்தில் தோன்றிய பிரமனும் , பூமியைத் தோண்டும் பன்றியாகவும் , வானத்தில் பறக்கும் பருந்தாகவும் அடி , முடி தேட முயன்று அடையாதவர் ஆயினர் . குளிர்ச்சி மிக்க சோலைகளில் உள்ள மலர்கள் சிவபூசை பண்ணப் பயன்படத் திருக்கொச்சை வயம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் , உயிர்கட்கெல்லாம் தலைவரான பசுபதி எனப்படும் சிவபெருமான் . அவர் ஆனேற்றில் ஏறுவதால் பசுபதி என்னும் பெயர் படைத்தவரும் ஆவார் .

குறிப்புரை :

கண் நிகழ் புண்டரிகத்தினனே - கண்ணானது பொருந்திய தாமரையாக உள்ளவன் ; தாமரைக் கண்ணனாகிய திருமாலும் . கலந்து - அவனோடு சேர்ந்து . இரி - திரிந்த . புண்டரீகத் தினன் - ( உந்திக்கமலத்தில் தோன்றியவனாகிய ) பிரமனும் . மண் நிகழும் பரிசு - பூமியைத் தோண்டும் தன்மையை உடைய . ஏனம் அதே - பன்றியாகவும் . வானகம் ஏய் - ஆகாயத்தில் பறக்கின்ற . சேனம் அது - கழுகாகவும் . பிரமன் வானிற் பறக்க எடுத்த வடிவம் அன்னமாகவும் எமது ஆளுடையபிள்ளையார் வானிற் பறக்கும் கழுகாகவே அதனைக் கூறினர் . நண்ணி அடிமுடி எய்தலரே - சேர்ந்து அடி முடியையும் அடையாதவர் ஆயினர் . நளிர்மலி சோலையில் எய்து அலர் - குளிர்ச்சிமிக்க சோலையில் உள்ள மலர்கள் . பண் இயல் - சிவபூசை பண்ணுதற்குப் பொருந்திய . கொச்சை - கொச்சைவயம் என்னும் தலத்திலுள்ள . பசுபதியே - ஆன்மவர்க்கங்களுக்குத் தலைவராய் , அதனால் பசுபதி என்னும் பெயர் படைத்தவர் . பசு - ஆனேற்றை . மிக - என்றும் . ஊர்வர் - ஏறுவார் ; அதனால் பசு பதியே - பசுபதி என்னும் பெயர் படைத்தவரும் ஆவர் . பசுபதி - என்ற சொல் பசுக்களுக்கு ( ஆன்மாக்களுக்கு ) ப் பதியாம் தன்மையாலும் , பசு ஏறுதலாலும் , எய்திய பெயர் என்பது இங்குத் தெளிவிக்கப்பட்டது .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 12

பருமதில் மதுரைமன் னவையெதிரே பதிகம தெழுதிலை யவையெதிரே
வருநதி யிடைமிசை வருகரனே வசையொடு மலர்கெட வருகரனே
கருதலி லிசைமுர றருமருளே கழுமல மமரிறை தருமருளே
மருவிய தமிழ்விர கனமொழியே வல்லவர் தம்மிடர் திடமொழியே.

பொழிப்புரை :

பெரிய மதில்களையுடைய மதுரை நகரின்கண் அரசனது அவைமுன்னர்த் , திருப்பதிகத்தை ஓலையில் எழுதி வைகை நதியின் மீது செலுத்த அதனை எதிர் நோக்கிச் செல்லுமாறு செய்த கரத்தையுடையவர் சிவபெருமான் . அவர் சைவர்கட்கு வந்த பழியும் , பழிதூற்றலும் கெடுமாறு சமணர்களை அழித்தவர் . நினைக்கவும் முடியாதபடி சைவர்களின் புகழ் உலகம் முழுவதும் ஒலிக்கும்படி செய்த வியப்பான செயல் . திருக்கழுமலத்தில் வீற்றிருந்தருளும் இறைவனின் அருளே . அவ்வருளைப் பெற்ற முத்தமிழ் விரகரது பாடல்களை ஓதவல்லவர்கள் இடர் ஒழிதல் நிச்சயம் .

குறிப்புரை :

பருமதில் மதுரை மன் அவை எதிரே - பருத்த மதில்களை உடைய மதுரை அரசன் சபையின் முன் . பதிகம் அது எழுது இலை அவை - பனை ஏடும் அதில் எழுதிய பாடலும் ஆகியவைகள் . ( அவை - என்று பன்மையால் கூறினமையால் இங்ஙனம் கூறப் பட்டது .) வருநதி இடை - வரும் வைகையாற்றில் . மிசை - மேலே எதிரே வரு - எதிரேவரச் செய்த . கரன் - செய்கையை உடையவன் . வரு - என்பதில் பிற வினை விகுதி தொக்கு நின்றது . வசையொடும் அலர்கெட - சைவர்களுக்குவந்த பழியும் , பழிதூற்றலும் கெடுமாறு . அருகு அரன் சமணர்களை அழித்தவன் . அருகு - அருகர் . அரன் - ஹரன் ; அழித்தவன் . கருதலில் - நினைக்கவும் முடியாதபடி . இசை - சைவர் அடைந்த புகழ் . முரல்தரும் - உலகம் முழுவதும் ஒலிக்கும்படி செய்த . மருள் - வியப்பு . கழுமலம் அமர் இறைதரும் அருளே - கமுமலத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் செய்த திருவருட் பெருக்கே யாகும் . மருவிய - அவ்வருளைப் பெற்ற . தமிழ் விரகன - முத்தமிழ் விரகரது . மொழி - இப்பாடல்களை . வல்லவர் - வல்லவர்களது . இடர் திடம் ஒழி - இடர் ஒழிதல் நிச்சயம் . ஒழி - முதனிலைத் தொழிற் பெயர் .
சிற்பி