திருவேகம்பம்


பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 1

பாயுமால்விடை மேலொரு பாகனே பாவைதன்னுரு மேலொரு பாகனே
தூயவானவர் வேதத் துவனியே சோதிமாலெரி வேதத் துவனியே
ஆயுநன்பொரு ணுண்பொரு ளாதியே யாலநீழ லரும்பொரு ளாதியே
காயவின்மதன் பட்டது கம்பமே கண்ணுதற்பர மற்கிடங் கம்பமே.

பொழிப்புரை :

இறைவர் பாய்ந்து செல்லும் பெருமையுடைய இடபத்தைச் செலுத்துபவர் . உமாதேவியைத் தம் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டவர் . தேவர்கள் போற்றுகின்ற வேதத்தின் தொனியானவர் . சுடர்விட்டு எரியும் வெம்மையுடைய வேள்வித்தீ ஆனவர் . ஆராயத்தக்க நல்ல கருத்துக்கள் எல்லாவற்றிலும் நுட்பமான கருத்தாக விளங்குபவர் . ஆலநிழலின் கீழ்த் தட்சிணாமூர்த்தியாய் விளங்கிச் சனகாதி முனிவர்கட்கு அரும்பொருள் உரைத்த முதல்வர் . போர்புரிய வந்த வில்லையுடைய மன்மதன் முதற்கண் அடைந்தது நடுக்கமேயாம் . நெற்றிக் கண்ணுடைய சிவபெருமான் வீற்றிருந் தருளும் இடம் திருக்சச்சியேகம்பமே .

குறிப்புரை :

பாயும் மால் விடைமேல் , ஒரு பாகன் - செலுத்துபவன் . பாவை - பெண்ணை . தன் உருமேல் - தன் உடம்பின்மேல் . ஒருபாகன் - ஒருபாகத்தில் உடையவன் . வேதத்துவனி - வேதத்தின் முழக்கம் . மால் - பெரிய . எரி - எரிகின்ற . வேதத்து - வெம்மையையுடைய . வனியே - நெருப்பே . எரிவன்னி - வினைத் தொகை . வேது - வெம்மை . அத்து - சாரியை ஆயும் - ஆராயத்தக்க . நன் பொருள் - நல்ல கருத்துக்கள் எல்லாவற்றிலும் , நுண்பொருள் - நுட்பமான கருத்தாக . ஆதி - ஆவாய் . அரும் பொருள் ஆதியே - கிடைத்தற்கு அரிய பொருளாயுள்ள முதல்வனே . காய - போர் புரிய ( வந்த ). வில்மதன் - வில்லையுடைய மன்மதன் . பட்டது - முதற்கண் அடைந்தது . கம்பம் - நடுக்கமேயாம் . காய - காரியம் காரணமாக உபசரிக்கப்பட்டது . காமன் பட்டது கம்பம் என்பதை ` நந்தி தேவர் காப்பும் ஆணையும் உற்று நோக்கி நெடிதுயிர்த்து உளம் துளங்கி விம்மினான் ` எனவரும் காம தகனப் படலத்தான் அறிக . கம்பம் :- ஏகம்பம் என்பது கம்பம் என முதற் குறைந்து நின்றது . ஏக + ஆம்பரம் = ஏகாம்பரம் - ( ஒற்றை மாமரம் ) ஏகம்பம் என மருவிற்று . வேதத்து + வனி = வேத விதிப்படி வளர்க்கப்பெறும் வேள்வித் தீ எனலே பொருந்துவது .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 2

சடையணிந்ததும் வெண்டலை மாலையே தம்முடம்பிலும் வெண்டலை மாலையே
படையிலங்கையிற் சூலம தென்பதே பரந்திலங்கையிற் சூலம தென்பதே
புடைபரப்பன பூதக ணங்களே போற்றிசைப்பன பூதக ணங்களே
கடைகடோறு மிரப்பது மிச்சையே கம்பமேவி யிருப்பது மிச்சையே.

பொழிப்புரை :

சிவபெருமான் சடையில் அணிந்திருப்பது வெண்டலை மாலை ஆகும் . உடம்பிலும் தலைமாலை அணிந்துள்ளார் . அழகிய கையில் சூலப்படை ஏந்தி உள்ளவர் . பரந்து விளங்கும் கையைப் படை போன்று கொண்டு தோண்டிய அழகு செய்வதாகிய அணிகலன் திருமாலின் கண் ஆகும் . பக்கத்தில் சூழ்ந்து விளங்குவனவும் , போற்றிசைப்பனவும் பூதகணங்களே . அப் பெருமான் வாயில்கள் தோறும் சென்று இரப்பது உணவே . அவர் திருக்கச்சியேகம்பம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

சடையணிந்தது வெண்டலையாகிய மாலை - ( நகு வெண்தலை ) தம் உடம்பிலும் வெள்ளிய தலையைக் கோத்த மாலை . படையில் - ஆயுதத்தைப் போல் அழகிய கை விரலால் . சூல் - தோண்டிய . அம் - அழகு செய்வதாகிய அணிகலன் . அது - அத் திருமாலின் கண் . என்பது - என்க . சூலம் - சூல் + அம் எனப்பிரிக்க . சூலுதல் - தோண்டுதல் . ` நுங்கு சூன்றிட்டன்ன ` என்னும் நாலடியாரிற் காண்க . அம் - அழகு . அது அணிகலனுக்கு ஆனது - காரிய ஆகு பெயர் . அப்பொதுப்பெயர் சிறப்புப் பெயராகிய மோதிரத்துக்கு ஆயிற்று . மச்சாவதாரத்தின் செருக்கையடக்க உருத்திர பகவான் திருமாலின் கண்ணைக் கை விரலால் தோண்ட அது விரலுக்கு அணிகலமாகிய கணையாழியாயிற்று என்ற வரலாறு . இதனை ` வெருவாழி கொள்பவனோ விரலாழி கொடுப்பவனோ , மரு வாழி யென்றுரைக்கும் மடைப்பள்ளி காப்பவனோ ` என்னும் மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பாடிய வாட்போக்கிக் கலம்பகத்தால் அறிக . அங்கை - விரலைக் குறித்தது . முதலாகுபெயர் என்பது வியங்கோள் . பரந்து - ஒளி பரந்து . இலங்கு - விளங்குகின்ற . சூலம் ( அது ) என்பதே - சூலம் என்பதாம் . அயில் - ஆயுதமாவது . அயில் - இங்குப் பொதுப் பெயராய் ஆயுதம் என்னும் பொருள் தந்து நின்றது . புடை பரப்பன பூதகணங்களே - பக்கத்தில் பரந்து வருவன பூத கணங்களே . போற்றிசைப்பன - துதி சொல்வன . கடை - வீட்டுவாயில் . மிச்சையே - உணவு மிசை ( தல் ). முதனிலை திரிந்த தொழிற் பெயர் . இச்சை - விருப்பம் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 3

வெள்ளெருக்கொடு தும்பை மிலைச்சியே வேறுமுன்செலத் தும்பை மிலைச்சியே
அள்ளிநீறது பூசுவ தாகமே யானமாசுண மூசுவ தாகமே
புள்ளியாடை யுடுப்ப துகத்துமே போனவூழி யுடுப்ப துகத்துமே
கள்ளுலாமலர்க் கம்ப மிருப்பதே காஞ்சிமாநகர்க் கம்ப மிருப்பதே.

பொழிப்புரை :

சிவபெருமான் வெள்ளெருக்கமும் , தும்பையும் சூடியுள்ளவர் . தும்புக் கயிற்றைக் கொண்டு இடபத்தைக் கட்டியுள்ளவர் . திருநீற்றினை உடம்பிலே பூசியுள்ளவர் . உடம்பைப் பாம்புகளால் மூடியுள்ளவர் . புள்ளிகளையுடைய புலித்தோல் , மான்தோல் ஆடைகளை விரும்பி அணிபவர் . ஊழிக்காலத்தில் உயிர்கள் இளைப்பாறும் பொருட்டுத் தம்முள் ஒடுக்கிக் கொள்வார் , ஒவ்வொரு யுகத்திலும் , தேன் பொருந்திய மலர்களை அணிந்துள்ள , உலகைத் தாங்கும் தூண் போன்ற சிவபெருமான் காஞ்சி மாநகரிலுள்ள திருவேகம்பம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்து அருளு கின்றார் .

குறிப்புரை :

மிலைச்சி - சூடி . வேறு - வேறாகி முன் செல்ல . தும்பை - தும்புக் கயிற்றை இடபத்துக்குக் கட்டியவனே . தாகம் - விருப்பம் . மாசுணம் - பாம்புகள் . மூசுவது - மூடுவது . ஆகமே - உடம்பையே . புள்ளி ஆடை உடுப்பதும் கத்து - புள்ளியையுடைய ஆடையாக உடுப்பது கத்துமே . ஊழி - பிரளய காலத்தில் . போன - தனுகரண புவன போகங்கள் அழியப்பெற்ற உயிர்களை . உடுப்பது - தன்னுள் ஒடுக்கிக் கொள்வது . உகத்தும் - ஒவ்வோர் உகத்திலும் . உடுப்பது - ஒடுக்கிக் கொள்வதென்னும் பொருளில் வந்தது . கள் உலாம் - தேன் பொருந்திய . மலர் - மலரையணிந்த . கம்பம் - ( உலகைத் தாங்கும் ) தூண் . சிவபெருமான் . இலக்கண நூலார் இதனை வெளிப்படையென்ப . நடக்கும் மலை யென்பபோல . இருப்பு முதலிற் பெயர்ச் சொல்லாயும் , பின் தொழிற் பெயராயும் பொருளுணர்த்திற்று . கள் ...... கம்பம் - கரும்பு . ` ஆனந்தத் தேன் காட்டும் முக்கட்கரும்பு ` ( சிதம்பரமும்மணிக்கோவை . 15 ) நகர்வளம் குறித்தது இது .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 4

முற்றலாமை யணிந்த முதல்வரே மூரியாமை யணிந்த முதல்வரே
பற்றிவாளர வாட்டும் பரிசரே பாலுநெய்யுகந் தாட்டும் பரிசரே
வற்றலோடு கலம்பலி தேர்வதே வானினோடு கலம்பலி தேர்வதே
கற்றிலாமனங் கம்ப மிருப்பதே காஞ்சிமாநகர்க் கம்ப மிருப்பதே.

பொழிப்புரை :

சிவபெருமான் ஆமையோட்டை அணிந்த முதல்வர் . வலிய ஆனேற்றை அழகு செய்து ஏறிய முதல்வர் . ஒளி பொருந்திய பாம்பைப் பிடித்து ஆட்டும் தன்மையர் . பாலாலும் , நெய்யாலும் திருமுழுக்காட்டப்படும் பெருமையுடையவர் . வற்றிய மண்டையோட்டைப் பாத்திரமாகக் கொண்டு பிச்சையேற்றுத் திரிபவர் . தேவர்களாலும் , ஏனைய உலகிலுள்ள அடியவர்களாலும் போற்றிப் பூசை செய்யப்படுபவர் . அவரைப் போற்றாதவர்கள் மனம் இரும்புத்தூண் போன்றது . அப்பெருமான் திருவேகம்பம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

முற்றல் ஆமை அணிந்த முதல்வர் - ஆமை ஓட்டை அணிந்த முதல்வர் . முதல்வர் - தலைவர் . மூரி - வலிய . ஆமை - ஆனேற்றை . அணிந்த - அழகு செய்து ஏறிய . முதல்வர் - முதலில் தோன்றியவர் . பரிசர் - தன்மை உடையவர் . வாள் அரவு - ஒளி பொருந்திய பாம்பை . பற்றி - பிடித்து . ஆட்டும் - ஆட்டுகின்ற . பரிசர் - தன்மையுடையவர் . ஆட்டும் - அபிடேகம் செய்யப்பெறும் . பரிசர் - பெருமையையுடையவர் . இனி வாளரவு ஆட்டும் பரிசர் என்பதற்கு , போர்வீரர் கையிற் பற்றும் பரிசையைப் போலப் பாம்பைப்பற்றி ஆட்டி வருபவர் என்ற கருத்தாகவும் கொள்ளலாம் . வற்றல் ஓடு - வற்றிய மண்டையோடாகிய . கலம் - பாத்திரத்தில் பலிதேர்வது ( அவர் ) பிச்சை யெடுப்பது . வானினோடு - தேவர் உலகிலுள்ளவர்களுடன் . கலம் ( ஏனையுலகிலுமுள்ள ) கலம் - சற்பாத்திரங்களாகிய அடியார்கள் . தேர்வது - ஆராய்வதும் . பலி - ( அவருக்குச் செய்யும் ) பூசை முறைகளையேயாம் ( பலி - பூசை ). கற்றிலா - ( அவரைக் ) கல்லாத . மனம் - மனம் . கம்பம் இருப்பு ( அது ) - இருப்புத் தூண்போன்றது .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 5

வேடனாகி விசையற் கருளியே வேலைநஞ்ச மிசையற் கருளியே
ஆடுபாம்பரை யார்த்த துடையதே யஞ்சுபூதமு மார்த்த துடையதே
கோடுவான்மதிக் கண்ணி யழகிதே குற்றமின்மதிக் கண்ணி யழகிதே
காடுவாழ்பதி யாவது மும்மதே கம்பமாவதி யாவது மும்மதே.

பொழிப்புரை :

சிவபெருமான் வேட்டுவ வடிவம் தாங்கி அர்ச்சுனனுக்கு அருள்புரிந்தவர் . கடலில் தோன்றிய நஞ்சை உண்டு கண்டம் கறுத்தவர் . ஆடும் பாம்பை அரையில் கச்சாகக் கட்டி அதன்மேல் ஆடை அணிந்தவர் , பிரளயகாலத்தில் ஐம்பூதங்களால் ஆகிய உலகம் அவரால் அழிக்கப்பட்டது . வளைந்த ஆகாயத்தில் விளங்கும் பிறையைத் தலைமாலையாக அழகுற அணிந்தவர் . களங்கமில்லாத மெய்யடியார்களின் பக்தியாகிய வலை உணர்தற்கு இனிமையானது . சுடுகாடே அவர் வாழும் இருப்பிடம் , திருக்கச்சியேகம்பத்தையும் தாம் விரும்பும் திருத்தலமாகக் கொண்டு வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

விசயற்கு - அருச்சுனனுக்கு . அருளி - அருள் செய்தோன் . நஞ்சு , மிசையால் - உண்டலால் . கருளி - ( கண்டம் ) கறுப்பு அடைந்தவர் . கருள் - கருமை . ஆடும் பாம்பு அரை ஆர்த்தது உடையது - ஆடும் பாம்பை அரையில் கச்சாகக் கட்டிய உடையின் மேலது . அஞ்சு பூதமும் - ஐம்பூத முதலிய தத்துவங்களாலும் . ஆர்த்தது - பிணைக்கப்பட்டதாகிய இவ்வுலகம் . துடையது - அவரால் அழிக்கப் பட்டது என்றது உலகிற்குச் சங்கார கருத்தா சிவன் என்பது . கோடு வான்மதி - வளைந்த ஆகாயத்தில் வருகின்ற பிறையாகிய . கண்ணி - தலைமாலை . அழகிது - அழகியதாக உள்ளது . குற்றம் இல் - களங்கமில்லாத . மதி - மெய்யடியார்களின் . மதி - அன்போடு கூடிய அறிவால் வீசும் . கண்ணி - வலையானது . அழகிது - உணர்தற்கு இனிமையானது என்றது . ` பத்தி வலையிற் படுவோன் ` என்ற கருத்து . காடுவாழ் பதியாவதும் உம்மதே - சுடு காட்டில் வாழ்வது உமது இருப்பிடமானால் . கம்பமாபதி ஆவது உம்மதே - காஞ்சிபுரமாகிய சிறந்த நகரமும் உம்முடையது என்று சொல்லலாகுமா ? என்றது .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 6

இரும்புகைக்கொடி தங்கழல் கையதே யிமயமாமக டங்கழல் கையதே
அரும்புமொய்த்த மலர்ப்பொறை தாங்கியே யாழியான்றன் மலர்ப்பொறை தாங்கியே
பெரும்பகனட மாடுதல் செய்துமே பேதைமார்மனம் வாடுதல் செய்துமே
கரும்புமொய்த்தெழு கம்ப மிருப்பதே காஞ்சிமாநகர்க் கம்ப மிருப்பதே.

பொழிப்புரை :

இறைவர் கொடிபோன்று பெரிய புகையுடன் எழும் நெருப்பைக் கையிலேந்தியவர் . இமயமலையரசனின் மகளான உமாதேவியின் கைகளால் அவருடைய திருவடிகள் வருடப்படுவன . அடியவர்களால் பூசிக்கப்படும் அரும்புகளையும் , மலர்களையும் பாரமாகத் தாங்குபவர் . சக்கரப் படையுடைய திருமாலின் பெரிய உடலெலும்பாகிய கங்காளத்தைச் சுமப்பவர் . பகலில் திருநடனம் செய்பவர் . தாருகாவனத்து முனிபத்தினிகளின் மனம் வாடச் செய்பவர் . கருப்பங்கழிகள் நிறைந்து கம்பம் போலப் பருத்துக் காணப்படும் திருக் கச்சியேகம்பம் என்ற திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவர் .

குறிப்புரை :

இரும் - பெரிய ( புகைக்கொடி தங்கு ). அழல் - நெருப்பு . கையது - கையின் கண்ணது . தம்கழல் - தமது திருவடி . இமய மாமகள் - உமாதேவியாரின் . கையது - கையால் வருடப்படுவது . ` மாலைதாழ் குழல் மாமலையாள் செங்கை சீலமாக வருடச் சிவந்தன ` என்னும் தடுத்தாட் கொண்ட புராணக் (192) கருத்து . அரும்பும் - அரும்புகளும் . மொய்த்த - வண்டுகள் மொய்க்கப் பெற்ற . மலர் - மலர்களும் . பொறை - பாரமாக . தாங்கி - தாங்கினவன் . அன்பரிட்டமையாகலின் பொறையாயினுந்தாங்கினான் ` எம் போலிகள் பறித்திட்ட அரும்பும் முகையும் ` என்னும் அப்பர் வாக்கால் , மலரேயன்றி அரும்பும் பூசைக்காதல் அறிக . ஆழியான் தன் - திருமாலின் மலர் . பரந்த - பெரிய . பொறை - உடலெலும்பாகிய கங்காளத்தை . தாங்கி - சுமப்பவன் . ( உடல் எலும்புக் கூட்டுக்குக் கங்காளம் என்று பெயர் .) ` கங்காளம் தோள்மீது காதலித்தான் காணேடி ` என்பது திருவாசகம் ( தி .8). திருமாலின் திருவிக்கிர மாவதாரத்திற் செருக்கையடக்கி அதற்கறிகுறியாக அவன் உடலெலும்பைச் சிவபெருமான் தாங்குவர் . ஏனையரெவரும் அழிவர் எனலை விளக்குதற்குக் , ` கண்டவிடம் நித்தியத்தைக் காட்டவும் கங்காளம் முதல் , அண்டவிடந்தர வைத்தாய் அம்புயம் செய்குற்றம் எவன் ` என்னும் வாட்போக்கிக் கலம்பகத்தால் அறிக . பெரும் பகல் , நடம் ஆடுதல் செய்தும் , பேதையர் மனம் - தாருகவனத்து முனிபத்தினிமார் மனம் . வாடுதல் செய்தும் - வாடச் செய்தீர் என்றது திருக்கூத்து . எவருக்கும் மகிழச் செய்விப்பதாகவும் , பேதையரை மட்டும் வாட்டியது என்பது புதுமை என்ற கருத்து . செய்தும் - செய்தீர் . தன்மை முன்னிலைக்கண் வந்தது . அது ` நாமரையாமத்தென்னோ வந்து வைகி நயந்ததுவே ` என்ற திருக்கோவையாரிலும் ( தி .8) ` நடந்தவரோ நாம் ` என்னக் கம்பராமாயணத்தும் வருதல் காண்க . செறிந்து ஓங்கிய தூண்கள் போலக் கரும்புகள் இருக்கும் காஞ்சியில் ஏகாம்பரம் உன் இருப்பிடம் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 7

முதிரமங்கை தவஞ்செய்த காலமே முன்புமங்கை தவஞ்செய்த காலமே
வெதிர்களோடகில் சந்தமு ருட்டியே வேழமோடகில் சந்த முருட்டியே
அதிரவாறு வரத்தழு வத்தொடே யானையாடு வரத்தழு வத்தொடே
கதிர்கொள்பூண்முலைக் கம்ப மிருப்பதே காஞ்சிமாநகர்க் கம்ப மிருப்பதே.

பொழிப்புரை :

மேகம் போலும் நிறத்தையுடைய அம்பிகை முற்காலத்தில் இமயமலையில் சிவபெருமானைக் கணவராக அடையத் தவம் செய்தாள் . பின் அம்பிகை கம்பையாற்றில் தவம் செய்யும் இக்காலத்திலும் மூங்கில் , அகில் , சந்தனம் , மற்றும் ஏனைய முருட்டு மரங்களையும் , யானை முதலிய மிருகங்களையும் ஓட முடியாதவாறு ஆரவாரத்தோடு கம்பையாறு அடித்துக் கொண்டு வர , பஞ்சகவ்வியங்களால் அபிடேகம் செய்யப்படும் சிவபெருமானைத் தழுவுவதால் முலைத்தழும்பு தம்பம்போல் உறுதியான அவர் மார்பில் விளங்குகின்றது . அப்பெருமான் காஞ்சிமாநகரிலுள்ள திருவேகம்பத்தில் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

முதிரம் மங்கை - மேகம் போலும் நிறத்தையுடைய அம்பிகை . தவம் செய்த - இமயமலையில் இளமைப்பருவத்தே சிவபிரானைக் கணவராகப் பெறத் தவம் செய்த . காலம் முன்பும் - முற்காலத்திலும் . ( அம்பிகையைக் கிழவடிவம் கொண்டு பரிசோதித்தற்கு வந்ததுபோலவே ) மங்கை தவம் செய்தகாலம் - அம்பிகை கம்பையாற்றில் தவம் புரிந்த இக்காலத்திலும் , ( ஆற்றைப் பெருக்கிப் பரிசோதித்தலாகிய ) அம் கைதவம் செய்தகாலம் - அழகிய வஞ்சனை செய்ய வந்த சமயத்தில் . கைதவம் - நன்மையை விளைக்க வந்தமையின் , அழகிய என்று விசேடிக்கப்பட்டது . வெதிர்களோடு அகில் சந்தம் , முருட்டி - மூங்கில் மரங்களோடு , அகில் , சந்தன மரங்களையும் , ( ஏனைய ) முருட்டு மரங்களையும் . வேழம் - யானை முதலிய மிருகங்களை . ஓடகில் சந்தம் - ஓடமுடியாதபடி . உருட்டி - உருட்டிக் கொண்டு . அதிர - ஒலிக்கும்படியாக . ஆறு - கம்பையாறு . அழுவத்தொடே - பரப்போடு . வரத்து - வருதலால் . ( வரத்து - தொழில்பெயர் மூன்றனுருபுத் தொகை ). ஆன் ஐ ஆடுவர - பஞ்ச கவ்வியம் அபிடேகம் கொள்வோராகிய சிவபெருமானை . ( இரண்டனுருபாகிய ` ஐ ` செய்யுளாதலின் அகரமாகத் திரிந்து நின்றது ). தழுவத்தொடே - தழுவத்தொடுதலால் ( தொடு - முதனிலைத் தொழிற் பெயர் ). முலை - முலைத் தழும்பு . ( காரண ஆகுபெயர் ). கம்பம் - தம்பம்போல் உறுதியான அவர்மார்பில் இருப்பது .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 8

பண்டரக்க னெடுத்த பலத்தையே பாய்ந்தரக்க னெடுத்த பலத்தையே
கொண்டரக்கிய துங்கால் விரலையே கோளரக்கிய துங்கால் விரலையே
உண்டுழன்றது முண்டத் தலையிலே யுடுபதிக்கிட முண்டத் தலையிலே
கண்டநஞ்ச மடக்கினை கம்பமே கடவுணீயிடங் கொண்டது கம்பமே.

பொழிப்புரை :

சிவபெருமான் , இராவணன் கைலைமலையை எடுத்த வலிமையை , மேற்சென்று சிதறுவித்தலால் , அவன் வலிமையற்றவன் என்பதை உணர்த்தும் வகையில் தம் திருப்பாத விரலை ஊன்றியவர் . தாருகவனத்து முனிவரேவலால் கொலை செய்ய வந்த மானை ஏந்தியுள்ளவர் . அவர் பிச்சையெடுத்துத் திரிந்தது தலை மண்டையோட்டிலே . சந்திரனுக்கு இடம் கொடுத்தது அவர் தலையிலே . நஞ்சைக் கண்டத்தில் அடக்கிய , உலகைத் தாங்கும் தூண் போன்றவன் சிவபெருமானே . கடவுளாகிய அப்பெருமான் விரும்பி வீற்றிருந்தருளுவது திருக்கச்சியேகம்பமே .

குறிப்புரை :

பண்டு , அரக்கன் - இராவணன் . எடுத்த - கயிலையையெடுத்த பலத்த வலிமையை . பாய்ந்து - மேற்சென்று . அரக்கல் - சிதறு வித்தலால் . நெடுத்த - மிக்க . அபலத்தையே - வலியின்மையையே . கொண்டு - கொள்வித்து ( பிறவினை விகுதி குன்றியது ) அரக்கியதும் - கால்விரலை அழுத்தியதும் . கோள் - முனிவரேவலால் கொலை செய்யும்பொருட்டு . அரக்கியது - அடர்த்துவந்தமையை . கால்வும் - கக்கியதும் - ( நீக்கியதும் ) இரலையே - மான்கன்றே என்றது முனிவர் வேள்வியினின்று கொல்ல வந்த மான்கன்றைக் கையிலேந்திய வரலாறு . உம்கால் என்பதைக் கால் + உம் என்று மாற்றிக் கால்வும் என்க . ` தொட்டனைத் தூறும் ` என்ற திருக்குறளிற்போல உம்மை பிரித்துக் கூறப்பட்டது . உண்டு - பிச்சை யெடுத்துண்டு . உழன்றதும் - திரிந்ததும் . தலைமுண்டத்திலே - தலைமண்டையோட்டிலே . உடுபதி - சந்திரன் . அத்தலையில் - அந்தத்தலையில் . இடம் உண்டு - தங்குவதற்கு இடம் உண்டு . ஒரு கம்பமே - உலகைத் தாங்கும் தூண் போன்ற சிவபெருமானே . கண்டம் - கழுத்து .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 9

தூணியான சுடர்விடு சோதியே சுத்தமான சுடர்விடு சோதியே
பேணியோடு பிரமப் பறவையே பித்தனான பிரமப் பறவையே
சேணினோடு கீழூழி திரிந்துமே சித்தமோடு கீழூழி திரிந்துமே
காணநின்றன ருற்றது கம்பமே கடவுணீயிட முற்றது கம்பமே.

பொழிப்புரை :

அம்பறாத் தூணியாகிய நெற்றிக்கண்ணிலிருந்து சுடர்விடும் நெருப்புப் பொறிகளை உடையவரே . அவற்றிலிருந்து தோன்றியவரே இயல்பாகவே பாசங்களின் நீங்கிய சுடர்விடு ஞானமயமான முருகக் கடவுளாவார் . தம் வலிமையைப் பாராட்டி முடி காண்பான் சென்ற பிரமன் அன்னப்பறவை வடிவு தாங்கி ஆகாயத்திலும் , திருமால் பன்றி உருவில் பாதாளத்திலும் செருக்கோடும் , கீழ்மைத்தன்மையோடும் இறைவனைக் காண முயன்று ஊழிக்காலம் வரை திரிந்தும் அவர்கள் கண்டது அக்கினித் தம்பமாகிய உமது வடிவத்தையே . பரம்பொருளாகிய நீ விரும்பி வீற்றிருந்தருளுவது திருக்கச்சியேகம்பமே ஆகும் .

குறிப்புரை :

தூணி - அம்பறாத் தூணியாகிய நெற்றி விழியினின்றும் . ஆன - தோன்றிய . சுடர்விடு - ஒளிவீசும் . சோதி - அக்கினிப் பொறிகள் . சுத்தமான - இயல்பாகவே பாசங்களின் நீங்கிய . சுடர்விடு - ஞானமயமாகிய . சோதி - முருகக்கடவுளாம் . நெற்றிவிழிப்பொறி அம்பாகநின்று காமனை எரித்தலால் நெற்றிவிழி தூணியாயிற்று . பேணி - தன்வலிமையைப் பாராட்டி . ஓடு - முடிகாண்பான் சென்ற . பிரமம் - பெரிய . பறவை - பறத்தலை உடைய , பித்தனான , பிரமப் பறவை - பிரமனாகிய அன்னப்பறவை . சேணினோடு - ஆகாயத்திலும் . ( திருமாலாகிய பன்றி ) கீழ் - பாதாளத்திலும் . ஊழி திரிந்து - ஊழிக்காலம் திரிந்து . சித்தமோடு - தங்கள் மனச்செருக்கோடு . கீழ் - தங்கள் கீழ்மைத் தன்மையும் . ஊழி - முறையே . திரிந்து - மாறுபட்டு . காண நின்றனர் - உம்மைக் காண நின்ற அவர்கள் . உற்றது - கண்டது . கம்பமே - அக்கினி ஸ்தம்பமாகிய உமது வடிவத்தையே . ஊழ் - முறை . ஊழ் + இ = ஊழி , முறையையுடையது . வினைமுதற் பொருள் விகுதி .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 10

ஓருடம்பினை யீருரு வாகவே யுன்பொருட்டிற மீருரு வாகவே
ஆருமெய்தற் கரிது பெரிதுமே யாற்றவெய்தற் கரிது பெரிதுமே
தேரரும்மறி யாது திகைப்பரே சித்தமும்மறி யாது திகைப்பரே
கார்நிறத்தம ணர்க்கொரு கம்பமே கடவுணீயிடங் கொண்டது கம்பமே.

பொழிப்புரை :

இறைவரே ! யானையின் உடம்பினை உரித்ததாகிய தோலை உடம்பில் போர்வையாக அணிந்துள்ளீர் . உம்முடைய உண்மைத்தன்மை சக்தி , சிவம் என இரண்டு திறத்தது . உமது பாகத்திலுள்ள அம்பிகையின் கரிய நிறம் ஒளிவாய்ந்தது . உயிர்கள் ஆன்ம முயற்சியினால் உம் திருவடிகளை அடைதல் அரிது . புத்தர்களும் உம்மை அறியாது திகைப்பர் . அவர்கள் அறிவும் தம் நிலைமை மாறமாட்டாதாதலால் உம்மைத் துதிப்பதை வெறுப்பர் . கருநிறமுடைய சமணர்கள் உம்மைக் கண்டு நடுங்குவர் . பரம்பொருளாகிய நீர் விரும்பி வீற்றிருந்தருளுவது திருக்கச்சியேகம்பமே .

குறிப்புரை :

ஓர் உடம்பினை - யானையின் ஓர் உடம்பை . ஈர் - உரித்ததாகிய தோல் . உரு ஆக - உடம்பில் ( போர்வை ) ஆகவும் . ஈர் - ஈர்தல் , முதனிலைத் தொழிற்பெயர் இங்கு ஆகுபெயர் . உன் பொருள் திறம் - உம்முடைய உண்மைத் தன்மை . ஈர் உரு ஆக - சத்தி சிவம் என்னும் இரண்டு திறத்தது ஆகவும் . ஆரும் - உமது உடம்பில் கலந்த . மெய்தன் - அம்பிகையின் திருவுடம்பின் . கரிது - கரிய நிறம் . பெரிது - மிகவும் ஒளிவாய்ந்தது . ஆற்றல் - ஆன்ம முயற்சியினால் , எய்தற்குப் பெரிதும் அரிது - உம்முடைய திருவடி முற்றிலும் அடைய முடியாதது . தேரரும் - புத்தரும் . சித்தமும் - அவர் அறிவுகளும் . மறியா - தம் நிலைமை மாறமாட்டா . துதி கைப்பர் - ஆதலால் உம்மைத் துதித்தலை வெறுப்பர் . ஒரு கம்பமே - உம்மை நினைத்தாலே ஒரு பெரிய நடுக்கம் . மழைத்துளி போல வந்தீண்டலால் அறிவுகள் எனப்பட்டது .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 11

கந்தமார்பொழில் சூழ்தரு கம்பமே காதல்செய்பவர் தீர்த்திடு கம்பமே
புந்திசெய்வது விரும்பிப் புகலியே பூசுரன்றன் விரும்பிப் புகலியே
அந்தமில்பொரு ளாயின கொண்டுமே யண்ணலின்பொரு ளாயின கொண்டுமே
பந்தனின்னியல் பாடிய பத்துமே பாடவல்லவ ராயின பத்துமே.

பொழிப்புரை :

நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்து விளங்குவது திருவேகம்பம் என்னும் திருத்தலம் . அதனை விரும்பி வழிபடுபவர்கள் பழவினையால் வரும் துன்பங்கட்கு வருந்திச் சொரியும் துன்பக் கண்ணீரைத் தீர்த்திடும் . எல்லாம் சிவன் செயல் என்பதை நிச்சயித்து , புகலியில் அவதரித்த பூசுரனான திருஞான சம்பந்தன் , அந்தமில் பொருளாந்தன்மையை உட்கொண்டு , சிவபெருமானின் புகழையே பொருளாகக் கொண்டு அருளிய இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள் பக்தியில் மேம்பட்டு எல்லாம் கைகூடப்பெறுவர் .

குறிப்புரை :

கம்பமே - திரு ஏகம்பத்தையே . காதல் செய்பவர் - விரும்புபவர்கள் . தீர்ந்திடு ( தல் ) உகு அம்பம் - ( வருந்திச் ) சொரிகின்ற துக்கக் கண்ணீர் , தீர்த்திடுதல் முதனிலைத் தொழிற்பெயர் . அம்பம் - அம் சாரியை , அம்பு - தண்ணீர் . புந்தி செய்து - எல்லாம் சிவன் செயலாகப் பாவித்து . விரும்பி - விருப்பங்கொண்டு . புகலியே - சீகாழியையே இருப்பிடமாகக் கொண்ட . பூசுரன்தன் - சம்பந்தப் பெருமானின் , விரும்பிப் புகலியே - விரும்பிச் சரண்புக்க , இடமானவன் . அந்தமில் பொருள் ஆயின கொண்டு - அழிவிலாப் பொருளாந்தன்மையை உட்கொண்டு . அண்ணலின் - சிவபெருமானின் , பொருளாயின கொண்டு - புகழை விஷயமாகக் கொண்டு பாடிய பத்தும் வல்லவர்க்கு . ஆயின - உரியஆயின . பத்தும் - பத்தியின் வகைகளும் - ஆயின என்ற பண்பைப் பயனிலையாற் பத்தியின் வகைகள் என எழுவாய் கூறப்பட்டது . பத்தியின் வகைகள் பத்திசெலுத்தும் வகைகள் .
சிற்பி