திருஆலவாய்


பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 1

ஆலநீழ லுகந்த திருக்கையே யானபாட லுகந்த திருக்கையே
பாலினேர்மொழி யாளொரு பங்கனே பாதமோதலர் சேர்புர பங்கனே
கோலநீறணி மேதகு பூதனே கோதிலார்மன மேவிய பூதனே
ஆலநஞ்சமு துண்ட களத்தனே யாலவாயுறை யண்டர் களத்தனே.

பொழிப்புரை :

சிவபெருமான் கல்லால நிழலை விரும்பி இருப்பிடமாகக் கொண்டவர் . அவருக்கு விருப்பமான பாடல் இருக்கு வேதமாகும் . அவர் பால் போன்று இனிய மொழி பேசும் உமா தேவியை ஒரு பாகமாகக் கொண்டவர் . தம் திருவடிகளைப் போற்றாத அசுரர்களின் முப்புரங்களை அழித்தவர் . அழகிய திருநீற்றைப் பூசிய சிறந்த பூதகணங்களைப் படையாக உடையவர் . குற்றமற்றவர்களின் உள்ளத்தில் தங்கிய உயிர்க்கு உயிரானவர் . ஆலகால விடமுண்ட கண்டத்தையுடையவர் . தேவர்கட்கெல்லாம் தலைவரான அவர் திருவாலவாய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

ஆலம் நீழல் - கல்லாலின் நீழலில் . உகந்தது - விரும்பியது . இருக்கை - இருப்பிடம் . இருக்கை - வேதத்தை . ஓர் பங்கன் - ஒரு பங்கில் , இடப்பாகத்தில் உடையவன் . பாதம் ஓதலர் சேர் புரபங்கன் - தமது திருவடியைத் துதியாதவராகிய அசுரர் இருந்த திரிபுரத்தை அழித்தவன் . கோலம் நீறு அணி - அழகிய திருநீற்றைப் பூசிய . மேதகுபூதனே - சிறந்த பூதகணங்களை உடையவனே . கோது இலார் - குற்றமற்ற அடியாரது . மனம் மேவிய - மனத்தின் கண் தங்கிய . பூதன் - உயிர்க்கு உயிராய் இருப்பவனே . பூதம் - உயிர் . ` பூதம் யாவையின் உள் அலர் போதென ` எனவரும் சேக்கிழார் திருவாக்கால் அறிக . ( தி .12 திருமலைச் சிறப்பு பா .33) களத்தன் - கண்டத்தை உடையவன் . அண்டர்கள் அத்தன் - தேவர்களுக்குத் தந்தை . மேவி அபூதனெனலே பொருந்துவது - பொருந்திக் காணப்படாதவன் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 2

பாதியாவுடன் கொண்டது மாலையே பாம்புதார்மலர்க் கொன்றைநன் மாலையே
கோதினீறது பூசிடு மாகனே கொண்டநற்கையின் மானிட மாகனே
நாதனாடொறு மாடுவ தானையே நாடியன்றுரி செய்தது மானையே
வேதநூல்பயில் கின்றது வாயிலே விகிர்தனூர்திரு வாலநல் வாயிலே.

பொழிப்புரை :

சிவபெருமான் தம் உடம்பில் பாதியாகக் கொண்டது திருமாலை . பாம்பும் , கொன்றை மலரும் அவருக்கு நன்மாலைகளாகும் . குற்றமற்ற திருநீறு பூசிய மார்பை உடையவர் . இடத் திருக்கரத்தில் மானை ஏந்தியுள்ளவர் . அவர் நாள்தோறும் அபிடேகம் கொள்வது பஞ்ச கவ்வியத்தால் . அவர் உரித்தது யானையை . வேத நூல்களை அருளுவது அவரது திருவாய் . விகிர்தரான அவர் விரும்பி வீற்றிருந்தருளுவது திரு ஆலவாய் .

குறிப்புரை :

பாதியா - உடம்பில் பாதியாக . மாலை - திருமாலை . ( சங்கர நாராயண வடிவம் ) ஆகன் - மார்பை உடையவன் கையில் மான்இடம் , ஆகன் - ஆகியவன் . ஆகு + அன் = இரண்டு உறுப்பால் முடிந்த பகுபதம் . ஆடுவது ஆன் ஐ - அபிடேகம் கொள்வது பஞ்சகவ்யம் . உரிசெய்ததும் - உரித்ததும் . வேதநூல் பயில்கின்றது - வேதநூலைப் படிப்பது . வாயிலே - தமது திருவாயினால் . விகிர்தன் ஊர் நல் திருவாலவாயில் - ஊராக இருப்பது நல்ல திருவாலவாயில் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 3

காடுநீட துறப்பல கத்தனே காதலால்நினை வார்தம கத்தனே
பாடுபேயொடு பூதம சிக்கவே பல்பிணத்தசை நாடிய சிக்கவே
நீடுமாநட மாடவி ருப்பனே நின்னடித்தொழ நாளுமி ருப்பனே
ஆடனீள்சடை மேவிய வப்பனே யாலவாயினின் மேவிய வப்பனே.

பொழிப்புரை :

இறைவர் , பெரிய சுடுகாட்டில் எல்லாவற்றிற்கும் கர்த்தாவாயிருப்பவர் . தம்மைப் பத்தியால் நினைவார்தம் உள்ளத்தில் இருப்பவர் . பாடுகின்ற பேய் , மற்றும் பூதகணங்களுடன் குழைந்திருப்பவர் . அக்கணங்கள் பிணத்தசைகளை விரும்பியுண்ண நடனம் ஆடுபவர் . திருவடிகளைத் தொழுபவர்கட்கு நாளும் அருள்புரிபவர் . அசைகின்ற சடைமீது கங்கையைத் தாங்கியுள்ளவர் . திருஆலவாயில் வீற்றிருந்தருளும் தந்தை அவரே .

குறிப்புரை :

நீடது - பரவியதாகிய . காடு - சுடுகாடு . பலகத்தனே - எல்லாவற்றிற்கும் கர்த்தாவாய் இருப்பவனே . அகத்தனே - மனத்தில் இருப்பவனே . பூதம் - பூதகணங்கள் . மசிக்க - குழைவித்து . பல பிணத் தசை நாடி அசிக்கவே - பலபிணத்தினுடைய சதைகளை விரும்பி உண்ண . நடமாடவிருப்பன் - திருக்கூத்தாடுதலில் விருப்பமுடையவன் . இருப்பான் - இருப்போன் . ஆடல் - அசைதலையுடைய . சடை மேவிய அப்பன் - சடையில் பொருந்திய தண்ணீரை உடையவன் . அப்பன் - சர்வலோகத் தந்தை .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 4

பண்டயன்றலை யொன்று மறுத்தியே பாதமோதினர் பாவ மறுத்தியே
துண்டவெண்பிறை சென்னி யிருத்தியே தூயவெள்ளெரு தேறியி ருத்தியே
கண்டுகாமனை வேவ விழித்தியே காதலில்லவர் தம்மை யிழித்தியே
அண்டநாயக னேமிகு கண்டனே யாலவாயினின் மேவிய கண்டனே.

பொழிப்புரை :

முற்காலத்தில் நீர் பிரமனின் தலை ஒன்றை அறுத்தீர் . உம் திருவடிகளை வணங்கும் அன்பர்களின் பாவங்களை அறுப்பீர் . பிறைச்சந்திரனைச் சடையில் அணிந்துள்ளீர் . தூய வெண்ணிற இடபத்தின் மீது ஏறி இருப்பீர் . மன்மதன் சாம்பலாகுமாறு நெற்றிக்கண்ணால் விழித்தீர் . அன்பில்லாதவரை இகழ்வீர் . தேவர்கட்குத் தலைவரே ! குற்றங்களை நீக்குபவரே . திருஆலவாயின்கண் வீற்றிருந்தருளும் அளவிடமுடியாத பரம்பொருளே .

குறிப்புரை :

அறுத்தி - அறுத்தாய் . பாதம் ஓதினர் பாவம்மறுத்தி - பாதத்தைத் துதிப்பவர்களுக்கு பாவம் உண்டு என்பாரை மறுத்து இல்லை என்று கூறுவாய் . இருத்தி - இருக்கச்செய்தவன் . ஏறிஇருத்தி - ஏறிஇருப்பாய் . இருத்தி - முதலது வினையால் அணையும் பெயர் . மற்றது வினைமுற்று . விழித்தி - விழித்துப்பார்த்தாய் . காதல் இல்லவர் தம்மை - அன்புஇல்லாதவர்கள் . இழித்தி - கீழ்ப்படச்செய்வாய் . அண்டநாயகனே - தேவர்களுக்குத் தலைவனே . அண்டர் நாயகன் ` சிலவிகாரமாம் உயர்திணை ` என்பது விதி . மிகுகண்டனே - குற்றங்களை நீக்குபவன் என்பதில் பண்புப்பெயர் விகுதியாகிய ஐகாரம் கெட்டது . (` பிழையெல்லாம் தவிரப்பணிப்பானை ` என்றதன் கருத்து .) மேவிய + அகண்டன் - எழுந்தருளியுள்ள அளவிட முடியாதவன் . மேவிய என்னும் பெயரெச்சத்து விகுதி விகாரத்தால் தொக்கது . ` தொட்டனைத்தூறும் மணற்கேணி ` - என்ற திருக்குறளிற் போல .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 5

சென்றுதாதை யுகுத்தனன் பாலையே சீறியன்பு செகுத்தனன் பாலையே
வென்றிசேர்மழுக் கொண்டுமுன் காலையே வீடவெட்டிடக் கண்டுமுன் காலையே
நின்றமாணியை யோடின கங்கையால் நிலவமல்கி யுதித்தன கங்கையால்
அன்றுநின்னுரு வாகத் தடவியே யாலவாயர னாகத் தடவியே.

பொழிப்புரை :

தந்தையாகிய எச்சதத்தன் சிவபூசைக்குரிய பாலைக் கவிழ்த்துவிட , புதல்வராகிய விசாரசருமர் சினந்து அருகிலுள்ள கோலை எடுத்து ஓச்ச அது மழுவாக மாறித் தந்தையின் முன்காலை வெட்டிற்று . ஆங்குச் சிவபூசை ஆற்றிய பிரமசாரியான அவ்விசார சருமருக்குக் கங்கை முதலானவற்றை அணிந்த திருக்கோலத்தோடு தோன்றிக் காட்சி நல்கியவர் சிவபெருமான் . அப்பெருமான் , தந்தையாகிய எச்சதத்தனை வீழ்த்திய அடியவரின் பாவத்தைப் போக்கித் தம் திருக்கையால் வருடிச் சிவசாரூபம் பெறத்தடவிச் சண்டீச பதம் தந்து அருளினர் . அப்பெருமான் திருஆலவாயில் வீற்றிருந்தருளும் அரன் ஆவார் .

குறிப்புரை :

முன்காலை - முற்காலத்தில் . நன்பாலை - அபிடேகத்திற்கு வைத்த நல்லபாலை . தாதை - தந்தையாகிய எச்சத்தன் , சென்று - போய் . சீறி - சினந்து . உகுத்தனன் - கவிழ்த்து . அன்பு - அன்போடு செய்யும் பூசையை . செகுத்தனன்பால் ( ஐ ) - அழித்த அவனிடத்தில் . மழுக்கொண்டு - கிடந்த கோலை மழுவாகக் கொண்டு . முன்காலை - முன்கால்களை . வீட - துண்டித்துவிழ . வெட்டிட - வெட்ட . நின்றமாணியை - அங்கேயிருந்த பிரமசாரியாகிய அவ்விசாரசருமரை . கண்டு - பார்த்து . ஓடினகங்கையால் - பரந்த கங்கைநதி முதலியவற்றை அணிந்தகோலத்தோடு . உதித்து - இடப வாகனத்தின்மேல் வெளிப்பட்டருளி . அனகம் - அவர்செய்த பாதகம் புண்ணியமான தன்மையினாலே . அன்று - அன்றைக்கு . நின்னுருவாகத் தடவி - மானிட உருவம்மாறி நினது வடிவமாகக் கையால் தடவினவனே ! ஆலவாய் அரன் - ஆலவாயில் எழுந்தருளிய சிவபெருமானே . அகத்தது - உமது உடம்பில் அணிவதாகிய ஆடை , மாலை முதலியவற்றையும் . அடு - உமக்கென்று சமைத்த . அவி - உணவையும் அல்லவா ? அன்று நீர் அருளியது . உகுத்தனிடன் - முற்றெச்சம் . அன்பு - பூசைக்கு , ஆகு பெயர் . ஓடின கங்கையால் - ஆல் , ஒடுப்பொருளில் வந்தது . சிவபெருமான் வந்த கோலம் ` செறிந்தசடை நீண்முடியாரும் தேவியோடும் விடையேறி ` எனவும் , தடவினமை ` மடுத்த கருணையால் உச்சிமோந்து மகிழ்ந்தருள ` எனவும் , ( நின்னுருவாக ) உரு மாறினமை ` செங்கண்விடையார் திரு மலர்க்கை தீண்டப்பெற்ற சிறுவனார் , அங்கண்மாயை யாக்கையின் மேலளவின்றுயர்ந்த சிவமயமாய் ` எனவும் , ஆகத்தது அடு அவியும் அருளியது - ` நாம் உண்டகலமும் , உடுப்பனவும் சூடுவனவும் உனக்காக ` எனவும் , சேக்கிழார் பெருமான் அருளிச்செய்கின்றார் . ஆகத்தது - ஆகத்து என விகாரமுற்றது . அருளியது என்பது அவாய் நிலையான் வந்தது . ` எல்லாம் மழை ` என்ற திருக்குறளிற்போல .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 6

நக்கமேகுவர் நாடுமோ ரூருமே நாதன்மேனியின் மாசுண மூருமே
தக்கபூமனைச் சுற்றக் கருளொடே தாரமுய்த்தது பாணற் கருளொடே
மிக்கதென்னவன் றேவிக் கணியையே மெல்லநல்கிய தொண்டர்க் கணியையே
அக்கினாரமு துண்கல னோடுமே யாலவாயர னாருமை யோடுமே.

பொழிப்புரை :

சிவபெருமான் நாடுகளிலும் , ஊர்தோறும் ஆடையில்லாக் கோலத்தோடு பிச்சைக்குச் செல்வார் . அவர் திரு மேனியில் பாம்பு ஊர்ந்து கொண்டிருக்கும் . திருநீலகண்ட யாழ்ப் பாணரை அழைத்து வரும்படி அடியார்களுக்குக் கனவில் ஏவ , அவ்வாறே வந்து அப்பாணர் பாடும்போது பொற்பலகை அருளி அமரச் செய்தார் . தென்னவன் தேவியாகிய மங்கையர்க்கரசியாருக்கு மங்கலியம் முதலான மங்களகரமான அணிகளை அருளியவர் . திருத் தொண்டர்க்கு அண்மையாய் விளங்குபவர் . எலும்புமாலை அணிந்துள்ளவர் . மண்டையோட்டை உண்கலனாகக் கொண்டவர் . அப்பெருமான் திருஆலவாயில் உமாதேவியை உடனாகக் கொண்டு வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

நாடும் - நாடுகளிலும் . ஓர் ஊரும் - ஓவ்வொரு ஊர்தோறும் . நக்கம் ஏகுவர் - ஆடையில்லாத கோலத்தோடு பிச்சைக்குச் செல்வர் . மேனியில் - திருமேனியில் . மாசுணம் - பாம்பு . ஊரும் - ஊர்ந்துகொண்டிருக்கும் . ` தக்க பூமனைச் சுற்றக் கருளொடே தாரமுய்த்தது பாணற்கருளொடே ` என்றது திருவாலவாயில் தரிசிக்க வந்த திருநீலகண்டயாழ்ப்பாணரைக் கோயிலுக்கு அழைத்துவரும்படி அடியார்களுக்குச் சிவபெருமான் கனவில் ஏவ , அவ்வாறே வந்து அவர்பாடும்பொழுது அவர்க்குப் பொற்பலகை தந்த திரு விளையாடலைச் சம்பந்தப்பெருமான் அருளிச்செய்தது . தக்க - சிறந்த . பூ - பொலிவுற்ற . மனை - திருநீலகண்ட யாழ்ப்பாணர் தங்கியிருந்த மனையில் . சுற்ற - அடியார் சுற்றிக்கொண்டு அழைக்க . அருளொடு - இரவில் கனவில் அவர்களுக்கு அருளியபடி . பாணற்கு - அவ்வாறு வந்து கோயிலில் பாடிய திரு நீலகண்ட யாழ்ப்பாணர்க்கு , அருளோடு உய்த்தது - அருளோடு செலுத்தியது . தாரம் - உயர்ந்த பொருளாகிய பொற்பலகை . கருள் - கருமைநிறம் . மும்மடியாகுபெயராய் வந்தது . கருமை இருட்டுக்கானது பண்பாகு பெயர் . இரவுக்கானது தானியாகு பெயர் . இரவு , கனவிற்கானது காலவாகுபெயர் . இவ்வரலாறு பெரிய புராணத்தில் ` தொண்டர்க்கெல்லாம் மற்றை நாட் கனவில் ஏவ , அருட்பெரும் பாணனாரை தெற்றினார் புரங்கள் செற்றார் திருமுன்பு கொண்டு புக்கார் ` ` மாமறை பாடவல்லார் முன்பிருந்து யாழிற்கூடல் முதல்வரைப் பாடுகின்றார் ` ` பாணர் பாடும் சந்தயாழ் தரையில் சீதம் தாக்கில் வீக்கு அழியுமென்று சுந்தரப் பலகை முன் நீரிடுமெனத் தொண்டர் இட்டார் ` எனக் கூறப்படுகிறது . ( தி .12 திருநீலகண்ட யாழ்ப் பாண நாயனார் புராணம் பா . 3,4,6.) சேக்கிழார் பெருமான் இப் பதிகத்து ஆறாம்பாடலில் திருஞான சம்பந்தப் பிள்ளையார் திருநீல கண்ட யாழ்ப்பாணரைக் குறித்தனர் என்பதை ` திருவியமகத்தினுள்ளும் திரு நீலகண்டப்பாணர்க்கு அருளிய திறமும் போற்றி ` என அருளிச் செய்கின்றார் . ( தி .12 திருஞானசம்பந்தர் புராணம் பா .870 ) பாணற்கு - திருநீலகண்ட யாழ்ப்பாணர்க்கு . அருளொடு - கிருபையோடு . தென்னவன் தேவி - மங்கையர்க்கரசியார்க்கு . அணியை - மங்கிலியம் முதலிய ஆபரணங்களை , மெல்ல நல்கிய - மெல்லக்கொடுத்தருளிய என்றது ` பாண்டி மாதேவியார் தமது பொற்பின் பயிலும் நெடுமங்கல நாண் பாதுகாத்தும் பையவே செல்க ` என்று இக்கருத்தைச் சேக்கிழார் சுவாமிகள் விளக்குகிறார் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 7

வெய்யவன்பல் லுகுத்தது குட்டியே வெங்கண்மாசுணங் கையது குட்டியே
ஐயனேயன லாடிய மெய்யனே யன்பினால்நினை வார்க்கருண் மெய்யனே
வையமுய்யவன் றுண்டது காளமே வள்ளல்கையது மேவுகங் காளமே
ஐயமேற்ப துரைப்பது வீணையே யாலவாயரன் கையது வீணையே

பொழிப்புரை :

சிவபெருமான் சூரியனுடைய பல்லை உதிர்த்தது கையால் குட்டி . அவர் கையிலிருப்பது கொடிய கண்களையுடைய பாம்புக்குட்டி . அவரே தலைவர் . அனலில் ஆடும் திருமேனி யுடையவர் . அன்பால் நினைந்து வழிபடும் அடியவர்கட்கு அருள் வழங்கும் மெய்யர் . உலகமுய்ய அன்று அவர் உண்டது விடமே . வேண்டுவார்க்கு வேண்டுவன ஈயும் வள்ளலான அவர் கையில் விளங்குவது எலும்புக்கூடே . அவர் பிச்சை ஏற்பதாக உலகோர் உரைப்பது வீண் ஆகும் . திருஆலவாயில் வீற்றிருந்தருளும் அரனார் கையிலுள்ளது வீணையே .

குறிப்புரை :

வெய்யவன் - சூரியன் . பல் உகுத்தது குட்டி - பல்லை உதிர்த்தது கையால் குட்டி . கையது - கையில் . வெங்கண் - கொடிய . மாசுணங்குட்டி - பாம்புக்குட்டி . கையது - கையில் இருப்பது . அனலாடிய மெய்யனே - நெருப்பில் ஆடிய உடம்பை உடையவன் . அருள் மெய்யன் - நிச்சயமாக அருள்பவன் . காளம் - விடத்தை . வள்ளல் - கடவுளது . கையது - கையில் இருப்பது . மேவு கங்காளம் - பொருந்திய எலும்புக் கூடு . ஐயம் ஏற்பது - பிச்சை எடுப்பதும் . வீண் - பயனற்றது .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 8

தோள்கள்பத்தொடு பத்து மயக்கியே தொக்கதேவர் செருக்கை மயக்கியே
வாளரக்க னிலத்துக் களித்துமே வந்தமால்வரை கண்டு களித்துமே
நீள்பொருப்பை யெடுத்தவுன் மத்தனே நின்விரற்றலை யான்மத மத்தனே
ஆளுமாதி முறித்தது மெய்கொலோ வாலவாயர னுய்த்தது மெய்கொலோ.

பொழிப்புரை :

வாளைக் கையிலேந்திய இராவணன் தன் இருபது தோள்களின் வலிமையையும் சேர்த்துக் கொண்டு திக்குவிசயம் செய்து , தன்னை எதிர்க்க வந்த தேவர்களின் வலிமையை மயங்கச் செய்து , இப்பூவுலகில் களித்து நிற்க , தன் தேரைத் தடுத்த கயிலை மலையைக் கண்டு வெகுண்டு பாய்ந்து சென்று அதனைப் பெயர்த்து எடுத்து உன்மத்தன் ஆயினன் . அந்நிலையில் இறைவர் தம் திருப்பாத விரலை ஊன்ற , இராவணனின் தலை நெரிய , அவன் செருக்கு அழிந்தவன் ஆயினான் . உலகனைத்தும் ஆளுகின்ற முதல்வராகிய தாம் அவ்வரக்கனின் உடலை முறியச் செய்தது மெய்கொல் ? திரு ஆலவாயில் வீற்றிருந்தருளும் அரனே ! பின்னர் அவனது பாடலைக் கேட்டு அருள்செய்ததும் உண்மையான வரலாறு தானோ ?

குறிப்புரை :

தோள்கள் பத்தொடு பத்து மயக்கி - இருபது தோள் வலிமையையும் சேர்த்து . தேவர் செருக்கை , மயக்கி - மயங்கச்செய்து ( அழித்து ) இது திக்குவிசயம்பண்ணின காலத்தின் நிகழ்ச்சி . வந்த - தன்னைத் தடுக்க வந்த ( வந்த - நின்ற என்னும் பொருட்டு ) உகளித்து - துள்ளி ( உகள் - பகுதி ) உன்மத்தன் - ஒன்றும் தெரியாதவன் ஆகி . நின்விரல் தலையால் - உமது விரல் நுனியால் . மதம் - தனது மதம் . அத்தன் - அழிந்தவனாகி . ஆளும் - அனைத்து உலகையும் ஆளுகின்ற . ஆதி - முதல்வராகியதாம் . முறித்தது - முறியச்செய்தது . மெய்கொலோ - அவனது உடம்பைத் தானோ ? ஆலவாய் , அரன் - அரனே ! உய்த்ததும் - வரங்கொடுத்து அவனை மீளச் செலுத்தியதும் . மெய்கொலோ - உண்மையான வரலாறு தானோ ?

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 9

பங்கயத்துள நான்முகன் மாலொடே பாதநீண்முடி நேடிட மாலொடே
துங்கநற்றழ லின்னுரு வாயுமே தூயபாடல் பயின்றது வாயுமே
செங்கயற்கணி னாரிடு பிச்சையே சென்றுகொண்டுரை செய்வது பிச்சையே
அங்கியைத்திகழ் விப்ப திடக்கையே யாலவாயர னார திடக்கையே.

பொழிப்புரை :

செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமன் திருமாலோடு இறைவனின் அடியையும் , முடியையும் தேட , அவர்கள் மயங்க , உயர்ந்த நல்ல அக்கினி உருவாய் நின்றான் . பின்னர்த் தங்கள் பிழைகளை மன்னித்து அருளுமாறு தூய பாடல்களைப் பாடின , அவர்கள் வாய் . சிவந்த கயல்மீன்கள் போன்ற கண்களையுடைய முனிபத்தினிகள் இறைவருக்கு இட்டது பிச்சையே . அதனை ஏற்று அவர் உரைசெய்தது அவர்கட்குப் பித்து உண்டாகும் வண்ணமே . அவர் நெருப்பேந்தியுள்ளது இடத் திருக்கரத்திலே . திருஆலவாய் சிவபெருமான் திடமாக வீற்றிருந்தருளும் இடம் ஆகும் .

குறிப்புரை :

மாலொடு - திருமாலொடு . நேடிட - தேட . மாலொடு - மயக்கத்தோடு . துங்கம் நல் தழலின் உரு ஆயும் - உயர்ந்த நல்ல அக்கினி வடிவமாயும் . தூயபாடல் பயின்றது வாயுமே - அவருடைய வாயும் . தங்கள் பிழையை மன்னித்து அருள்புரியும்படி தூய பாடல்களைப் பாடியது . செங்கயல் க ( ண் ) ணினார் - முனிவர் பத்தினிகள் . இடு - இட்ட . பிச்சை - பிச்சையை . சென்று - போய் . கொண்டு - ஏற்று . உரை செய்வது - பேசுவது . பிச்சை - அவர்களுக்குப் பித்து உண்டாக்கும் விதத்தையே .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 10

தேரரோடம ணர்க்குநல் கானையே தேவர்நாடொறுஞ் சேர்வது கானையே
கோரமட்டது புண்டரி கத்தையே கொண்டநீள்கழல் புண்டரி கத்தையே
நேரிலூர்க ளழித்தது நாகமே நீள்சடைத்திகழ் கின்றது நாகமே
ஆரமாக வுகந்தது மென்பதே யாலவாயர னாரிட மென்பதே.

பொழிப்புரை :

சிவபெருமான் தம்மைப் போற்றாத புத்தர்கட்கும் , சமணர்கட்கும் அருள்புரியாதவர் . தேவர்கள் நாள்தோறும் சென்று வணங்குவது அவர் எழுந்தருளியிருக்கும் கடம்பவனத்தை . அவர் வெற்றிகொண்டு வீழ்த்தியது புலியையே . திருமால் இறைவனைப் பூசித்துத் திருவடியில் சேர்த்தது தாமரை மலர் போன்ற கண்ணையே . பகைமை கொண்ட மூன்று புரங்களை அழித்தது மேருமலை வில்லே . பெருமானின் நீண்ட சடைமுடியில் விளங்குவது நாகமே . இறைவன் மாலையாக விரும்பி அணிவது எலும்பே . அப்பெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் இடம் திருஆலவாய் என்பதே .

குறிப்புரை :

நல்கானை - அருள் செய்யாதவனை . கானை - ( கடம்ப ) வனத்தை . கோரம் அட்ட புண்டரிகத்தை - கொடும் தன்மையைக் கொன்று ஒழித்தது புலியை . கொண்ட நீள்கழல் புண்டரிகத்தையே - திருமால் இட்ட கண்ணாகிய தாமரைப்பூவை கொண்டன திருவடிகளே . நேரில் ஊர்கள் அழித்தது நாகமே - தமக்கு விரோதமாகிய திரிபுரத்து அசுரர் ஊர்களை அழித்த ( மகாமேரு ) மலையாம் . என்புஅது - எலும்பு . ஆரமாக உகந்தது - மாலையாக விரும்பியது . அரனார் இடம் என்பது ஆலவாய் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 11

ஈனஞானிக டம்மொடு விரகனே யேறுபல்பொருண் முத்தமிழ் விரகனே
ஆனகாழியுண் ஞானசம்பந்தனே யாலவாயினின் மேயசம் பந்தனே
ஆனவானவர் வாயினு ளத்தனே யன்பரானவர் வாயினு ளத்தனே
நானுரைத்தன செந்தமிழ் பத்துமே வல்லவர்க்கிவை நற்றமிழ் பத்துமே.

பொழிப்புரை :

தேவர்களால் துதிக்கப்படும் தலைவரே . அடியவர்களின் இனிய உள்ளத்தில் இருப்பவரே ! நல்லறிவு அற்றவர்கள்பால் பொருந்தாத கொள்கையுடையவரே . பல பொருள்களை அடக்கிய , முத்தமிழ் விரகரான சீகாழியுள் அவதரித்த ஞான சம்பந்தர் , திருஆலவாய் இறைவரிடம் உரிமையுடையவராய் அவரைப் போற்றிப் பாடிய இச்செந்தமிழ்ப் பாடல்கள் பத்தும் ஓதவல்லவர்கட்கு எல்லா நன்மைகளும் உண்டாகும் .

குறிப்புரை :

ஈனஞானிகள் தம்மொடு விரகனே - அறிவிலிகளுடன் சேராத சூழ்ச்சியை உடையவன் . விரகு - சூழ்ச்சி . ஏறுபல்பொருள் - பல பொருள்களை அடக்கிய . முத்தமிழ்விரகன் . சம்பந்தன் - உரிமையுடையவன் . ஆன - பொருந்திய . வானவர் , வாயினுள் - வாயினுள் துதிக்கப்படுகின்ற . அத்தன் - சர்வலோகநாயகன் . அன்பரானவர் - அடியார்களுக்கு . வாய் - வாய்த்த . இன் - இனிய . உளத்தன் - உள்ளத்தில் இருப்பவன் .
சிற்பி