திருவீழிமிழலை


பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 1

துன்றுகொன்றைநஞ் சடையதே தூய கண்டநஞ் சடையதே
கன்றின் மானிடக் கையதே கல்லின் மானிடக் கையதே
என்று மேறுவ திடவமே யென்னி டைப்பலி யிடவமே
நின்ற தும்மிழலை யுள்ளுமே நீரெனைச் சிறிது முள்ளுமே.

பொழிப்புரை :

சிவபெருமான் நெருங்கிய கொன்றைமலரைச் சூடியுள்ளது சடையில் . அவருடைய தூயகழுத்து நஞ்சை அடக்கியுள்ளது . மான்கன்றை ஏந்தி உள்ளது இடக்கை . இமயமலையரசன் மகளான மான் போன்ற உமாதேவியைக் கொண்டுள்ளது இடப்பக்கம் . அவர் என்றும் ஏறும் வாகனம் இடபமே . பிச்சாடனரான நீர் நான் பிச்சையிட என்னிடத்து வருவீராக . நீர் வீற்றிருந்தருளுவது திருவீழி மிழலை என்னும் திருத்தலத்தில் , அதுபோல அடியேன் உள்ளத்திலும் எழுந்தருள நினைப்பீராக !

குறிப்புரை :

நம் - உமது . இடவழு அமைதி . ( காண்க : தி .3 ப .114. பா .6.) நஞ்சு அடையது - நஞ்சு அடைதலை உடையது . அடை - முதல் நிலைத் தொழிற்பெயர் . கன்றின் மான் - மான் கன்று , இடக்கையது . கல்லின் - இமயமலையின் மான் - மகளாகிய மான் போன்ற உமாதேவியார் . இடம்கைஅது - இடப்பக்கத்தில் இருப்பது . மான் என்பதற்கு ஏற்ப கையது என ஒன்றன் பாலால் முடித்தார் . கை - பக்கம் . பலியிட - நான் பிச்சைஇட . என் இடை - என்னிடத்திற்கு . வம் - வருவீராக . வம்மின் என்பது வம் என நின்றது . ` கதுமெனக் கரைந்து வம்மெனக்கூஉய் ` என்பது மதுரைக் காஞ்சி . ` செய்யாய் என்னும் முன்னிலை வினைச் சொல் செய்யென் கிளவி ஆகிடன் உடைத்தே ` ( தொல்காப்பியம் . சொல்லதிகாரம் - 450.) நின்றது மிழலையுள்ளும் - நின்றதும் என்பதின் உம்மை அசை . வம் என்பது ஏவற்பகுதி ; பன்மை ` மனிதர்காள் இங்கே வம் `

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 2

ஓதி வாயதும் மறைகளே யுரைப்ப தும்பல மறைகளே
பாதி கொண்டதும் மாதையே பணிகின் றேன்மிகு மாதையே
காது சேர்கனங் குழையரே காத லார்கனங் குழையரே
வீதி வாய்மிகும் வேதியா மிழலை மேவிய வேதியா.

பொழிப்புரை :

சிவபெருமான் ஓதுவன வேதங்களே . உரைப்பது பிறர் எவர்க்கும் தெரிவதற்கரிய பொருள்களே . திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டது உமாதேவியை . வழிபடுகின்றேன் அவ்வழகிய கோலத்தை . காதிலே அணிந்திருப்பது கனவிய குழை . அவர் தம்மிடத்து அன்பு செலுத்துபவர்களிடத்துக் குழைந்து நிற்பர் . வீதியிலே மிகுவது வேதஒலி . வேதங்களை அருளிச் செய்த அப்பெருமான் வீற்றிருந்தருளுவது திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் .

குறிப்புரை :

மறைகளே - வேதங்களே . மறைகளே - பிறர் எவர்க்கும் தெரிய அரிய பொருள்கள் . மறை - இரகசியம் . மாதை - பெண்ணை மிகும்மாதை - மிகும் அழகை . குழையர் - குண்டலத்தை உடையவர் . காதலார் - காதல் செய்யும் பெண்களின் . கனம் - மனத்திண்மையை .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 3

பாடு கின்றபண் டாரமே பத்த ரன்னபண் டாரமே
சூடு கின்றது மத்தமே தொழுத வென்னையுன் மத்தமே
நீடு செய்வதுந் தக்கதே நின்ன ரைத்திகழ்ந் தக்கதே
நாடு சேர்மிழலை யூருமே நாக நஞ்சழலை யூருமே.

பொழிப்புரை :

சிவபெருமான் ஊழி இறுதியில் பாடுகின்ற பண் தாரம் என்னும் இசை ஈறாகிய எழுவகை இசையுமே . பக்தர்கட்கு ஞானக்கருவூலமாய் விளங்குபவர் . அவர் சூடுவது ஊமத்த மலர் . அவரை வணங்கும் என்னைப் பித்தனாக்கினார் . அவரையே நீளத் தியானித்துப் போற்றுமாறு செய்தார் . இது தகுமோ ? அவருடைய இடுப்பில் விளங்குவது அக்குப்பாசியே . அப்பெருமான் மிழலை நாட்டிலுள்ள திருவீழிமிழலையில் வீற்றிருந்தருளுகின்றார் . அவருடைய திருமேனியில் நாகமும் , கண்டத்தில் நஞ்சும் , கரத்தில் நெருப்பும் விளங்குகின்றன .

குறிப்புரை :

( பாடுகின்ற ) பண்டாரம் - சைவ அடியார் . பண்டாரம் - நிதிநிலை . மத்தம் - பொன்னூமத்தை , ( தொழுத என்னை உன் மத்தம் நீடு செய்வது ) தக்கதே - தகுமா ? அரை - இடுப்பில் . திகழ்ந்தது - விளங்குவது . அக்கு அதே - அக்குப்பாசியே . திகழ்ந்தது - திகழ்ந்தென மருவி நின்றது . நாடு சேர் - மிழலை நாட்டைச் சேர்ந்த , மிழலை ஊரும் - உமது ஊராவதும் , மிழலை வெண்ணிநாட்டிலொன்றுளதாகலின் , இங்குக் குறித்தது மிழலை நாட்டினதென்பார் ` நாடுசேர் ` என எங்கள் சம்பந்தப் பெருமான் அருளினார் . இதனை , ` மிழலை நாட்டு மிழலை , வெண்ணி நாட்டு மிழலையே ` என்ற வன்றொண்டப் பெருந்தகையார் வாக்காலறிக . ( தி .7. ப .12. பா .5.) நஞ்ச - நைந்த . அழல் - விடம் . ஐகாரம் சாரியை , நாகம் , ஊரும் - உமது உடம்பில் ஊரும் ` நாதன் மேனியில் மாசுணம் ஊருமே ` என மேல் முற்பதிகம் ஆறாம் பாடலில் வந்ததூஉம் காண்க .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 4

கட்டு கின்றகழ னாகமே காய்ந்ததும் மதன னாகமே
இட்ட மாவதிசை பாடலே யிசைந்த நூலினமர் பாடலே
கொட்டுவான் முழவம் வாணனே குலாயசீர் மிழலை வாணனே
நட்ட மாடுவது சந்தியே நானுய்தற் கிரவு சந்தியே.

பொழிப்புரை :

சிவபெருமான் திருவடிகளில் வீரக்கழலாக அணிந்துள்ளது நாகத்தையே . அவர் எரித்தது மன்மதனது உடம்பையே . அவர் விரும்புவது அடியவர்கள் பாடும் இசைப் பாடலே . பொருந்திய நூலின் அமைதிக்கு ஏற்றதாயிருப்பது அவர் ஆடலே . அவ்வாடலுக்கு முழவங் கொட்டுபவன் வாணனே . இவை திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமானின் சிறப்புக்கள் . அவர் நடனமாடுவது சந்தி என்னும் நாடக உறுப்பின்படி . நான் காம வாதையினின்றும் பிழைப்பதற்கு இராக்காலம் தக்க சமயமாகும் .

குறிப்புரை :

கழல் - வீரகண்டை . நாகமே - பாம்பே . ( மதனன் ) ஆகம் - உடம்பு . காய்ந்ததும் - எரித்ததும் , இட்டமாவது - விருப்பம் ஆவது , இசை பாடல் - அடியார் இசைபாடக் கேட்டலில் , அதனை ` கோழைமிடறாக கவிகோளுமிலவாக இசைகூடும் வகையால் ஏழையடியாரவர்கள் யாவை சொன , சொன்மகிழும் ஈசன் ` எனவும் ` அளப்பில கீதம் சொன்னார்க் கடிகடாம் அருளுமாறே ` எனவும் வரும் திருப்பதிகங்களால் உணர்க . இசைந்த - பொருந்திய , நூலின் - நூலின் அமைதிக்கு . அமர்பு - ஏற்றதாயிருப்பது . ஆடலே - அவர் திருக்கூத்தே . பரத சாத்திர முறையே ஆடுகின்றனர் என்ற கருத்து . அவ்வாடலுக்கு வாணன் முழவங் கொட்டுபவன் . மிழலை வாணன் - அவர் மிழலையில் வாழ்பவர் . நட்டம் ஆடுவது - திருக்கூத்தாடுவது , சந்தி என்னும் நாடக உறுப்பின்படியேயாம் . சந்தியாவது நாடக நூலின் ஒரு சிறந்த பகுதி . அது , நெற்பயிர் வளர்ந்து நிமிர்ந்து , கருக்கொண்டு , காய்த்து , வளைந்து முடிசாய்வது போன்றது . இது நூலின் இலக்கணமாயினும் ஆடுதலிலும் நுதலிய பொருளை அங்ஙனம் அமைத்துக் காட்டுக என்னும் வழியை இங்கே நமது சம்பந்தப் பெருமான் விளக்கியருளுகிறார் . ` சந்தியிற்றொடர்ந்து ` என்பது தண்டியலங்காரம் ` சந்தியின் வளர்ந்து ` என்பர் திருவாவடுதுறை ஆதீனம் கச்சியப்ப முனிவர் . ( பேரூர்ப்புராணம் நாட்டுப்படலம் ) நான் , உய்தற்கு - காமன் வாதையினின்றும் பிழைப்பதற்கு . இரவு - இராக் காலம் . சந்தி - சந்து செய்விப்பதாகும் . தலைவிகூற்று .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 5

ஓவி லாதிடுங் கரணமே யுன்னு மென்னுடைக் கரணமே
ஏவு சேர்வுநின் னாணையே யருளி னின்னபொற் றாணையே
பாவி யாதுரை மெய்யிலே பயின்ற நின்னடி மெய்யிலே
மேவி னான்விறற் கண்ணனே மிழலை மேயமுக் கண்ணனே.

பொழிப்புரை :

மிழலையை உகந்தருளியிருக்கும் முக்கண் இறைவரே படைப்புக் காலமுதல் மகாசங்கார காலம் வரை ஓய்வின்றித் தொழிலாற்றும் கரணபூதர் . மனம் முதலிய அகக்கருவிகள் உம்மையே நினைக்கும் . மன்மதபாணம் என்மேல் தைப்பதும் உம் ஆணையால் , உம் பொன்போன்ற திருவடிகளை நீர் அருளினால் துன்பம் எனக்கு நேருமோ ? உம்மைக் கருதாது உரைப்பன மெய்ம்மையாகாது . வலியோனாகிய திருமால் உம்முடைய திருவடியை உண்மையாகவே பொருந்தப் பெற்றான் .

குறிப்புரை :

ஓவிலாது - ( மகாசங்கார காலம் வரையும் ) ஓயாமல் , இடும் ( சக்தியைச் செலுத்தி ஐந்தொழிலையும் ) நடத்தும் . கரணம் - சிறந்த கரண பூதராய் இருப்பவரே ` யாது சிறந்த காரணம் அது கரணம் ` என்பது தருக்க நூல் . கரணம் - ( என்னுடைய ) மனமுதலிய அகக்கருவிகள் . உன்னும் - உம்மையே நினைக்கும் . ஏவு - மன்மத பாணம் . சேர்வும் - என்மேல் தைப்பதும் , நின்ஆணையே - உமது ஆணையின்படிதானோ ? நின்ன - உம்முடைய . பொற்றாள் - பொன்போன்ற திருவடிகளை . அருளின் - அருளினால் . நை ( தல் ) ஏ - துன்புறுதல் எனக்கு நேருமா ? நை - நைதல் . ஏ - வினாப் பொருட்டு . இதுவும் தலைவி கூற்று . பாவியது - ( உம்மை மனத்துக் ) கருதாது . உரை - உரைப்பன . மெய்இல் - உண்மையில்லாதனவே . இல் - பகுதியே நின்று வினைமுற்றுப் பொருளையுணர்த்திற்று , ` பெறுவது கொள்வாரும் கள்வரும் நேர் ` ( குறள் . 814) என்றதிற் போல . விறல் - வலியோனாகிய , கண்ணன் - திருமால் . உன்அடி - உமது திருவடியை . மெய்யிலே - உண்மையாகவே . மேவினான் - பொருந்தப் பெற்றான் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 6

வாய்ந்த மேனியெரி வண்ணமே மகிழ்ந்து பாடுவது வண்ணமே
காய்ந்து வீழ்ந்தவன் காலனே கடுநடஞ் செயுங் காலனே
போந்த தெம்மிடை யிரவிலே யும்மிடைக் கள்வ மிரவிலே
வேய்ந்ததும் மிழலை யென்பதே விரும்பியே யணிவ தென்பதே.

பொழிப்புரை :

சிவபெருமானின் திருமேனி நெருப்புப் போன்று சிவந்த வண்ணமுடையது . அவர் மகிழ்ந்து பாடுவது பல வண்ணப் பாடல்களையே . அவரால் உதைக்கப்பட்டு வீழ்ந்தவன் காலன் . அவர் அழகிய திருநடனம் செய்யும் கால்களை உடையவர் . அவர் எங்கள் வீட்டிற்குப் பிச்சையேற்க வந்தது இரவில் . எம் உள்ளம் புகுந்து கவர்ந்தது இரவில் . அப்பெருமான் வீற்றிருந்தருளுவது திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும் . அவர் விரும்பி அணிவது எலும்பு மாலையே .

குறிப்புரை :

மேனி , எரிவண்ணம் - தீயின் வண்ணம் . பாடுவது - தேவரீர் பாடுவதும் . வண்ணம் - பலவண்ணப் பாடல்களையே ,. வண்ணம் சந்தம் இவை தாளத்தோடு பாடற்குரிய இயலிசைப் பாடல்கள் . காலன் - யமன் , கால்களையுடையவன் . எம்மிடைப் போந்தது - எங்கள் வீட்டிற்கு வந்தது இரவில் - பிச்சை யேற்றலை முன்னிட்டு , உம்மிடை - உம்மோடு . இரவில் - இராக்காலத்தில் . கள்வம் - கள்ளத்தனமாகப்புணர்வோம் . இடை - உருபு மயக்கம் . ( அணிவது ) என்பு . ( அது ) எலும்பு - தலைவிகூற்று .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 7

அப்பி யன்றகண் ணயனுமே யமரர் கோமகனு மயனுமே
ஒப்பி லின்றமரர் தருவதே யொண்கையா லமரர் தருவதே
மெய்ப்ப யின்றவ ரிருக்கையே மிழலை யூரும திருக்கையே
செப்புமின் னெருது மேயுமே சேர்வுமக் கெருது மேயுமே.

பொழிப்புரை :

பாற்கடலில் , துயிலும் கண்ணுடைய திருமாலும் , தேவேந்திரனும் , பிரமனும் கேட்டவற்றை ஒப்பின்றி உமது திருக்கரம் வழங்கி வருதலால் அது கற்பக விருட்சம் ஆகும் . மெய்த்தவம் செய்பவர்களின் உள்ளக்கோயில் உமது இருப்பிடமாகும் . திருவீழிமிழலை என்னும் திருத்தலமும் நீர் வீற்றிருந்தருளும் இடமாகும் . உமக்கென்றுள்ள விளைநிலமாகிய என் மனநிலத்தில் எருது புகுந்து கேடு விளைவித்தல் தகுமோ ? அதை ஓட்டி என்னை ஆட்கொள்ள அங்கு வருவதற்கு உமக்கு எருதும் இருக்குமே .

குறிப்புரை :

அப்பு - கடலில் . இயன்ற - தூங்குகின்ற , கண் - கண்ணையுடைய . ஐயனும் - திருமாலும் . அயனும் - பிரமனும் . ஐயன் - அயன் என வந்தது போலி . அப்பு - ஆகுபெயர் . ஒப்பு இல் - ஒப்பு இல்லாதது . ஒண் - சிறந்த . கையால் - கையினால் , அமரர்தரு அதே - தேவர்களின் கற்பக விருட்சமே ஆயினீர் . திருமால் முதலிய தேவர்கட் கெல்லாம் கேட்டவற்றை ஒப்பின்றி வழங்கி வருவதால் உமது திருக்கரம் கற்பகவிருட்சத்துக்குச் சமமாகும் என்பது முன்னிரண்டடி களின் கருத்து . மெய் - மெய்யுணர்தலோடு . பயின்றவர் - தவம் புரிவோர்களின் உள்ளமே . இருக்கை - உமது இருப்பிடமாம் . செப்பு மின் - சொல்வீராக . எருது மேயுமே - உமக்கென்றுள்ள விளைபுல மாகிய என் பெண்மை நலத்தில் மன்மதன் அம்பாகிய எருது மேயல் ஆகுமா ? தலைவிகூற்று . குறிப்புருவகம் . சேர்வு - அதை ஓட்ட அங்கு வருவதற்கு நான்கனுருபுத் தொகை . உமக்கு எருது ஏயும் - உமக்கு எருதும் இருக்குமே .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 8

தான வக்குலம் விளக்கியே தாரகைச் செல விளக்கியே
வான டர்த்த கயிலாயமே வந்து மேவு கயிலாயமே
தானெ டுத்தவல் லரக்கனே தடமுடித் திரள ரக்கனே
மேன டைச்செல விருப்பனே மிழலை நற்பதி விருப்பனே.

பொழிப்புரை :

சிவபெருமான் , பகைத்து நிற்கும் அசுரர் அழிவர் என்பதை விளக்கியவர் . தாரகை முதலான ஒளிதரும் பொருள்களின் ஒளியைத் தம் பேரொளியால் குன்றச் செய்தவர் . வானை முட்டும் உயர்ந்த கயிலைமலையைத் தம் வல்லமையால் எடுத்த அரக்கனான இராவணனின் பெரிய முடிகளைநெரித்தவர் . மனைகள் தோறும் சென்று பிச்சை எடுத்தலில் விருப்பமுடையவர் . திருவீழிமிழலை என்னும் நற்பதியில் விரும்பி வீற்றிருந்தருளுபவர் .

குறிப்புரை :

தானவர்குலம் - அசுர குலத்தை . விளக்கி - ( சிவனைப் பகைத்த எவ்வலியினோரும் அழிவரென்பதை ) விளக்கினீர் . தாரகை - தாரகை முதலாக ஒளிதரும் பொருளெல்லாவற்றின் . செலவு - ஒளி வீசுவதை . இளக்கி - உமது பேரொளியாற் குன்றச் செய்தீர் . தாரகை - உபலட்சணம் . இளகுதல் - திண்மை குலைதல் . வான் - தேவர்களை . அடர்த்த - மோதிய . கையில் ஆயம் - கையின் வலிமை மிகுதியினால் . ஆயம் - கூட்டம் . இங்கே வலிமையின் மிகுதியைக் குறித்தது . கயிலாயம் எடுத்த அரக்கன் . தடமுடித்திரள் அரக்கனே - பெரிய தலையின் கூட்டங்கள் நொறுங்கப் பட்டவன் ஆனான் . மேல் நடைச்செல - ( விமானத்திலின்றி ) நடையாகச் செல்ல . இருப்பன் - இருப்பீர் . இடவழுமைதி .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 9

காய மிக்கதொரு பன்றியே கலந்த நின்னவுரு பன்றியே
ஏய விப்புவி மயங்கவே யிருவர் தாமன மயங்கவே
தூய மெய்த்திர ளகண்டனே தோன்றி நின்றமணி கண்டனே
மேய வித்துயில் விலக்கணா மிழலை மேவிய விலக்கணா.

பொழிப்புரை :

பன்றி உருவெடுத்த திருமால் , பிரமன் ஆகிய இருவரும் சேர்ந்து தேடவும் , உம் உருவத் திருமேனியைக் காண்பதற்கு இயலாதவராய் , இப்புவியில் மயங்கி நின்று , மனம் கலங்கிய நிலையில் , தூய சோதித் திரளாய் அகண்ட திருமேனியராய்த் தோன்றி நின்ற நீலகண்டத்தை உடையவரே . எம் தலைவரே ! அடியேனின் தூக்கம் பிடிக்கா நிலையை விலக்குவீராக ! திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அழகரே .

குறிப்புரை :

காயம் மிக்கது ஒரு பன்றி - பெரிய உடம்பையுடைய திருமாலாகிய பன்றியும் . இருவர் - பிரமனுமாகிய இருவரும் . இப்புவி - இப்பூமியில் . மயங்க - சேர . நின்ன உருபு அன்றி - உமது அடிமுடிகளின் உருவம் தங்களாற் காணப்படுவ தொன்று அல்லாமையினால் , மனம் மயங்க - மனம் கலங்க . மெய்த்திரள் - உடம்பாகிய அக்கினிப் பிழம்பு . அகண்டனே - அளவிடப்படாதவனாகி . தோன்றி நின்ற மணிகண்டனே - அவர்கட்கு முன் வெளிப்படுகின்ற நீல கண்டத்தையுடையவரே . மேய - நான் இப்போது உற்ற , இத்துயில் - இப்பொய்த் தூக்கத்தை . தூக்கம்பிடியாத . அண்ணா - தலைவனே . விலக்கு - நீக்குவீராக . இலக்கணா - அழகனே , லட்சணம் என்பது வடசொல் . அண்ணா - தலைவனே என்ற பொருளில் ` அண்ணா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே ` ( தி .7. ப .24. பா .5.) எனப் பயின்று வருவது காண்க .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 10

கஞ்சியைக் குலவு கையரே கலக்கமா ரமணர் கையரே
அஞ்ச வாதிலருள் செய்யநீ யணைந்திடும் பரிசு செய்யநீ
வஞ்சனே வரவும் வல்லையே மதித்தெ னைச்சிறிதும் வல்லையே
வெஞ்ச லின்றிவரு வித்தகா மிழலைசே ரும்விறல் வித்தகா.

பொழிப்புரை :

சிவபெருமானே ! கஞ்சி உண்ணும் கையையுடைய பௌத்தர்களும் , சமணர்களும் அஞ்சுமாறு , அடியேன் வாதில் வெற்றி கொள்ள அருள்செய்தீர் நீவிர் . பிறர் செய்யும் சூழ்ச்சியை அறிய வல்லீரும் நீவிர் . அடியவரின் துயர் நீக்கிட வருவதற்கு வல்லீர் . நீவிர் என் உரையைச் சிறிதளவேனும் மதித்து விரைவில் வரவும் இல்லையே . குறைதலில்லாமல் மேன்மேலும் வருகின்ற இத்துயரங்கள் எனக்குத் தகா . திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் வலிமை மிக்க வித்தகரே .

குறிப்புரை :

கஞ்சியை - கஞ்சியை . குலாவு - கொண்டாடிப் பற்றிய . கையர் - கையையுடையவர்களாகிய புத்தர் . கஞ்சி தானியாகு பெயர் . கையர் - வஞ்சகர் . வாதில் அஞ்ச அருள் - வாதில் தோற்று அஞ்ச அருளிய . செய்ய - செய்யோனாகிய நீ . அணைந்திடும் பரிசு செய்யத் தழுவும் சூழ்ச்சி , செய்வதை நீ வஞ்சனே - நீக்கும் வஞ்சகனே . ( வினைத்தொகை ). எனைச் சிறிதும் - சிறிதளவேனும் , மதித்து வல்லையே - விரைவில் வரவும் வல்லையே . வருவீரா , அடியருக்கு பகைவர் அஞ்ச - அடியருக்கு அருளும் செவ்வியோனாகிய நீ காமன் அஞ்சுமாறு எனக்கும் அருளுவை என்பாள் ( செய்ய -) நடு நிலைமையோன் ஆகிய நீ என்றாள் . எஞ்சல் இன்றி - குறைதல் இல்லாமல் . வரு - மேன்மேலும் வருகின்ற . இவ் - இத்துயரங்கள் , தகா - எனக்குத் தகா . ( இவ் + தகா = இத்தகா என்றாயிற்று . புறனடைச் சூத்திர விதியால் உ - ம் ` பூசனை ஈசனார்க்குப் போற்ற இக் காட்டினோம் ` ( இவ் + காட்டினோமே என்னும் திருநேரிசை ) வித்தகா - சதுரப் பாட்டை உடையவனே ! அவிஎனல் ஆகாதோ ?

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 11

மேய செஞ்சடையி னப்பனே மிழலைமே வியவெ னப்பனே
ஏயு மாசெய விருப்பனே யிசைந்த வாசெய விருப்பனே
காய வர்க்கசம் பந்தனே காழி ஞானசம் பந்தனே
வாயுரைத்த தமிழ் பத்துமே வல்லவர்க்கு மிவை பத்துமே.

பொழிப்புரை :

சிவபெருமான் சிவந்த சடையில் கங்கையை அணிந்தவர் . திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் என் அப்பர் . முத்தொழிலையும் அவருடைய சந்நிதியில் அவரவர் செய்ய வாளா இருப்பவர் . தம்மைப் போற்றி வழிபடும் பக்தர்கட்கு விருப்பமானவர் . பஞ்ச பூதங்களோடும் தோய்ந்தும் தோயாமல் இருப்பவர் . அப்பெருமானைப் போற்றி , சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இத்தமிழ்த் திருப்பதிகத்தை ஓத வல்லவர்களுக்கு , இவை ஞானத்தின் படிநிலைகள் பத்தாய் அமையும் . ( இறுதியில் சிவபோகம் பெறுவர் என்பது குறிப்பு ).

குறிப்புரை :

சடையின் அப்பன் - சடையில் தரித்த நீரையுடையவன் . என் அப்பனே - எந்தையே . ஏயும் ஆ ( று ) - பொருந்திய விதமாக . செய - முத்தொழிலையும் உன் சந்நிதியில் அவரவர் செய்ய . இருப்பனே - வாளா இருப்பவனே ! என்பது ` மூவண்ணல் தன் சந்நிதி முத்தொழில் செய்ய வாளா மேவண்ணல் ` என்னும் திருவிளையாடற் புராணத்தில் வருங் கருத்து . காயவர்க்கம் - ஆகாயம் முதலிய பஞ்ச பூதங்களோடு - அசம்பந்தனே ( தோய்ந்தும் ) தோய்வில்லாமல் இருப்பவனே . வர்க்க + அசம் பந்தன் - வர்க்க சம்பந்தன் என மருவி வந்தது . காயம் - முதற்குறை . ( காயவர்க்கம் - உடற்கூட்டம் . பிறப்பிலான் ).
சிற்பி