திருக்கழுமலம்


பண் :புறநீர்மை

பாடல் எண் : 1

மடன்மலி கொன்றை துன்றுவா ளெருக்கும் வன்னியு மத்தமுஞ் சடைமேற்
படலொலி திரைகண் மோதிய கங்கைத் தலைவனார் தம்மிடம் பகரில்
விடலொளி பரந்த வெண்டிரை முத்த மிப்பிகள் கொணர்ந்துவெள் ளருவிக்
கடலொலி யோத மோதவந் தலைக்குங் கழுமல நகரென லாமே.

பொழிப்புரை :

இதழ்கள் நிறைந்த கொன்றை மாலையும் , நெருங்கிய ஒளியுடைய வெள்ளெருக்க மாலையும் , ஊமத்தம் பூ மாலையும் அணிந்த சடையின்மேல் , ஒலி அடங்கிய அலை மோதும்படியான கங்கைக்குத் தலைவரான சிவபெருமான் வீற்றிருந் தருளும் இடம் எது என்றால் , ஒலி மிகுந்த வெள்ளிய அலைகள் முத்துக்களையும் , சிப்பிகளையும் அடித்துக் கொணர்ந்து ஒதுக்கும் கடலினொலி தன் வெள்ளப் பெருக்கைக் கரைமோதச் செய்யும் திருக்கழுமலநகர் எனக் கூறலாம் .

குறிப்புரை :

மடல் இதழ் . படல் ஒலி - ( ஒலிபடல் ) ஒலி பொருந்துதலை உடைய . விடல் - வீசுவதால் . ஒலிபரவிய . வெண்திரை - வெண்மையாகிய அலைகள் .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 2

மின்னிய வரவும் வெறிமலர் பலவும் விரும்பிய திங்களுந் தங்கு
சென்னிய துடையான் றேவர்தம் பெருமான் சேயிழை யொடுமுறை விடமாம்
பொன்னியன் மணியு முரிகரி மருப்புஞ் சந்தமு முந்துவன் றிரைகள்
கன்னிய ராடக் கடலொலி மலியுங் கழுமல நகரென லாமே.

பொழிப்புரை :

மின்னும் பாம்பும் , நறுமணம் கமழும் மலர்களும் , இறைவனின் திருவடியைச் சரணடைந்த பிறைச்சந்திரனும் தங்கிய தலையுடையவர் சிவபெருமான் . அவர் தேவர்கட்கெல்லாம் தலைவர் . அப்பெருமான் செம்மையான ஆபரணமணிந்த உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம் , பொன் , மணி , யானையின் வளைந்த தந்தம் , சந்தனக்கட்டை இவற்றை உந்தித் தள்ளுகின்ற வலிய அலைகளையுடையதும் , கன்னிப்பெண்கள் கடற்கரையில் விளையாடுதலையுடையதும் , கடலொலி மிகுதலையுடையதுமான திருக்கழுமலநகர் எனலாம் .

குறிப்புரை :

முரி - வளைந்த .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 3

சீருறு தொண்டர் கொண்டடி போற்றச் செழுமலர் புனலொடு தூபந்
தாருறு கொன்றை தம்முடி வைத்த சைவனார் தங்கிட மெங்கும்
ஊருறு பதிக ளுலகுடன் பொங்கி யொலிபுனல் கொளவுடன் மிதந்த
காருறு செம்மை நன்மையான் மிக்க கழுமல நகரென லாமே.

பொழிப்புரை :

பெருமை மிக்க சிவதொண்டர்கள் நறுமலரும் , நீரும் , தூபமுங் கொண்டு திருவடிகளைப் பூசிக்கும்படி , கொன்றை மாலையினைத் தமது திருமுடிமேல் வைத்தருளிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , பலவூர்களைத் தம்பாற் கொண்டுள்ள பதிகளை உலகுடன் கொள்ளும்படி கடல் பொங்கி எழுந்தபோது திருவருளால் தோணிபோல் மிதந்து மழையினாற் பெறும் நன்மைகள் குறைவறச் சிறந்துள்ள திருக்கழுமலநகர் எனலாம் .

குறிப்புரை :

சைவனார் - சிவனுக்கு ஒரு பெயர் . ஊர் உறுபதிகள் - பல ஊர்களுக்குத் தலைமையாய் உற்ற நகரங்கள் . கார் உறு செம்மை - பருவ காலத்தில் பெய்யாதொழிதலும் மிகுமழையும் குறைமழையும் இல்லாமையுமாம் .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 4

மண்ணினா ரேத்த வானுளார் பரச வந்தரத் தமரர்கள் போற்றப்
பண்ணினா ரெல்லாம் பலபல வேட முடையவர் பயில்விட மெங்கும்
எண்ணினான் மிக்கா ரியல்பினா னிறைந்தா ரேந்திழை யவரொடு மைந்தர்
கண்ணினா லின்பங் கண்டொளி பரக்குங் கழுமல நகரென லாமே.

பொழிப்புரை :

மண்ணுலக மெய்யன்பர்கள் போற்றி வணங்கவும் , வானத்திலுள்ள தேவர்கள் துதிக்கவும் , பிரமன் , திருமால் முதலியோர்கள் போற்றவும் விளங்கி , எல்லாவற்றையும் ஆக்கியருளியவரும் , பலபல சிவமூர்த்தங்களாக விளங்குபவருமான சிவ பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , இறைவனின் திருவடி மறவா நினைவால் சிறந்த உள்ளம் உடையவர்களும் , செவ்விய அணிகலன்கள் அணிந்துள்ள மகளிரும் அவரொடு நீங்காது ஒன்றித்து வாழும் ஆண்மை மிக்க ஆடவர்களும் , காணுந்தோறும் இன்பம் நுகரத் திருவருள் ஒளியைப் பரப்புகின்ற திருக்கழுமலநகர் எனக் கூறலாம் .

குறிப்புரை :

பரச - துதிக்க . அமரர் - தேவர் . வானுளோர் அவர் ஒழிந்த பிரம விட்டுணுக்கள் முதலியோர் .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 5

சுருதியான் றலையும் நாமகண் மூக்குஞ் சுடரவன் கரமுமுன் னியங்கு
பரிதியான் பல்லு மிறுத்தவர்க் கருளும் பரமனார் பயின்றினி திருக்கை
விருதினான் மறையு மங்கமோ ராறும் வேள்வியும் வேட்டவர் ஞானங்
கருதினா ருலகிற் கருத்துடை யார்சேர் கழுமல நகரென லாமே.

பொழிப்புரை :

பிரமனது தலையையும் , சரஸ்வதியின் மூக்கையும் , தீக்கடவுளின் கையையும் , காலம் காட்டி முன் செல்லும் சூரியனின் பல்லையும் இறுத்து , பின் உமாதேவி வேண்ட அவர்கட்கு அருளும் புரிந்த சிவபெருமான் பயின்று இனிதாக வீற்றிருந்தருளும் இடமாவது , வழிவழிக் கேட்கும் தொழிலாகப் பயின்று வரும் புகழுடைய நான்கு வேதங்களையும் , ஆறு அங்கங்களையும் அறிந்து , அவற்றின்படி வேத வேள்விகளைச் செய்பவர்களும் , ஞான வேட்கை உடையவர்களும் , உலகில் பிறந்ததன் பெரும்பயனை அடைய விரும்பும் கருத்துடையவர்களும் வசிக்கின்ற திருக்கழுமலநகர் எனக் கூறலாம் .

குறிப்புரை :

சுருதியான் - பிரமா . சுருதியான் தலையும் நாமகள் மூக்கும் :- கணவனுக்குத் தலையும் மனைவிக்கு மூக்கும் போயினது என்பது ஓர் நயம் . சுடரவன் - அக்கினி . கரம் - கையை ( வெட்டினமை ) ` வெய்யவன் அங்கி விழுங்கத் திரட்டிய கையைத் தறித்தான் என்று உந்தீபற ` ( தி .8 திருவுந்தியார் - 7)

பண் :புறநீர்மை

பாடல் எண் : 6

புற்றில்வா ளரவு மாமையும் பூண்ட புனிதனார் பனிமலர்க் கொன்றை
பற்றிவான் மதியஞ் சடையிடை வைத்த படிறனார் பயின்றினி திருக்கை
செற்றுவன் றிரைக ளொன்றொடொன் றோடிச் செயிர்த்துவண் சங்கொடு வங்கங்
கற்றுறை வரைகள் கரைக்குவந் துரைக்குங் கழுமல நகரென லாமே.

பொழிப்புரை :

புற்றில் வாழுந் தன்மையுடைய ஒளிமிக்க பாம்பையும் , ஆமையோட்டையும் ஆபரணமாகப் பூண்ட புனிதரும் , குளிர்ச்சி பொருந்திய கொன்றை மலருடன் , வானத்திலுள்ள சந்திரனையும் சடையில் வைத்த எம் உள்ளம் கவர் கள்வருமான சிவபெருமான் பயின்று இனிதாக வீற்றிருந்தருளும் இடம் , வலிய அலைகள் ஒன்றோடொன்று மோதிப் பொரும் கடலானது வளமையான சங்குகளோடு , கப்பல்களையும் கொண்டு வந்து மலைகள் போலக் கரை வந்து சாரச் செய்யும் திருக்கழுமலநகர் எனக் கூறலாம் .

குறிப்புரை :

படிறனார் - வஞ்சகர் . காலில் தேய்த்த மதியையே தலையில் வைத்தமையின் படிறனார் என்றார் . ( படிறு - வேறு கருத்து உண்மை ).

பண் :புறநீர்மை

பாடல் எண் : 7

அலைபுனற் கங்கை தங்கிய சடையா ரடனெடு மதிலொரு மூன்று
கொலையிடைச் செந்தீ வெந்தறக் கண்ட குழகனார் கோயில தென்பர்
மலையின்மிக் குயர்ந்த மரக்கலஞ் சரக்கு மற்றுமற் றிடையிடை யெங்குங்
கலைகளித் தேறிக் கானலில் வாழுங் கழுமல நகரென லாமே.

பொழிப்புரை :

அலைகளோடு கூடிய கங்கையைத் தாங்கிய சடையை உடையவர் சிவபெருமான் . நீண்ட மூன்று மதில்களும் கொலை நிகழ்வதாகிய போரினிடையே செந்தீயினால் வெந்தழியும்படி செய்தவர் , இளமையும் , அழகுமுடைய சிவபெருமான் ஆவார் . அவர் வீற்றிருந்தருளும் கோயிலையுடைய திருத்தலமாவது , மலைகளை விட மிக்குயர்ந்த சரக்கு மரக்கலங்கள் கடற்கரையில் நிற்க , கடற்கரைச் சோலைகளில் மான்கள் மகிழ்ந்து ஓடி வாழ்தலுடைய திருக்கழுமலநகர் எனக் கூறலாம் .

குறிப்புரை :

கண்ட - செய்த . சிறப்புவினை பொதுவினைக்காயிற்று .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 8

ஒருக்கமுன் னினையாத் தக்கன்றன் வேள்வி யுடைதர வுழறிய படையார்
அரக்கனை வரையா லாற்றலன் றழித்த வழகனா ரமர்ந்துறை கோயில்
பரக்கும்வண் புகழார் பழியவை பார்த்துப் பலபல வறங்களே பயிற்றிக்
கரக்குமா றறியா வண்மையார் வாழுங் கழுமல நகரென லாமே.

பொழிப்புரை :

இறைவனை நினையாது முற்காலத்தில் தக்கன் செய்த யாகமாவது ஒருங்கே அழியும்படி கலக்கிய பூதப்படைகளை உடையவரும் , அரக்கனான இராவணனது ஆற்றலை மலையைச் சற்றே கால்விரலால் ஊன்றி நெருக்குதலால் அழித்த அழகருமான சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் கோயிலுள்ள திருத்தலமாவது பரவுதலையுடைய மெய்ம்மையான புகழையுடையவரும் , குற்றங்கள் வாராவண்ணம் நன்கு ஆராய்ந்து ஒல்லும் வகையான் ஓவாது அறம்புரியும் மிக்க பயிற்சியுடையாரும் , கனவிலும் கரக்கும் எண்ணம் இல்லாத வள்ளன்மையுடையாரும் ஆகிய செந்நெறிச் செல்வர்கள் வாழும் கழுமலநகரெனக் கூறலாம் .

குறிப்புரை :

உழறிய - உழற்றிய ; கலங்கச் செய்த . இசைநோக்கி உழறிய என்று ஆயிற்று . பயிற்றி - மிகச்செய்து .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 9

அருவரை பொறுத்த வாற்றலி னானு மணிகிளர் தாமரை யானும்
இருவரு மேத்த வெரியுரு வான விறைவனா ருறைவிடம் வினவில்
ஒருவரிவ் வுலகில் வாழ்கிலா வண்ண மொலிபுனல் வெள்ளமுன் பரப்பக்
கருவரை சூழ்ந்த கடலிடை மிதக்குங் கழுமல நகரென லாமே.

பொழிப்புரை :

கோவர்த்தன மலையைக் குடையாகத் தாங்கிய ஆற்றலுடைய திருமாலும் , அழகிய செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் ஏத்தித் துதிக்கும்படியாகத் தீப்பிழம்பின் உருவாய் நின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , ஒருவரும் இவ்வுலகில் வாழ இயலா வண்ணம் , பேரூழிக் காலத்தில் பெருவெள்ளம் பெருக்கெடுக்க , அப்பரப்பில் கருவரை போன்ற திருமால் கிடந்து அறிதுயில் கொள்ளும் கடலிடைத் திருத்தோணி போன்று மிதந்த சிறப்பு வாய்ந்த திருக்கழுமலநகர் எனக் கூறலாம் .

குறிப்புரை :

அருவரை - கோவர்த்தனமலை . கருவரை - கரிய மலை போன்ற மலை - அன்மொழித் தொகை .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 10

உரிந்துய ருருவி லுடைதவிர்ந் தாரு மத்துகில் போர்த்துழல் வாருந்
தெரிந்துபுன் மொழிகள் செப்பின கேளாச் செம்மையார் நன்மையா லுறைவாங்
குருந்துயர் கோங்கு கொடிவிடு முல்லை மல்லிகை சண்பகம் வேங்கை
கருந்தடங் கண்ணின் மங்கைமார் கொய்யுங் கழுமல நகரென லாமே.

பொழிப்புரை :

உயர்ந்த தமது உடலின்றும் உடையினை நீக்கிய சமணர்களும் , மிக்க ஆடையினை உடல் முழுவதும் போர்த்துத் திரியும் புத்தர்களும் ஆராய்ந்துணரும் அறிவிலாது ஏனைச் செந்நெறியாளர்களை இழிமொழிகளால் இகழ்ந்துரைப்பர் . அப்புன் மொழிகளைப் ` புறம் கேளோம் ` என்ற மறையின்படி ஒரு பொருளாகக் கொள்ளாத செம்மையாளர்கட்கு நன்மைபுரியும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , குருந்து , கோங்கு , முல்லை , மல்லிகை , சண்பகம் , வேங்கை ஆகிய மலர்களைக் கரிய அகன்ற கண்களையுடைய மங்கையர்கள் கொய்கின்ற திருக்கழுமலநகர் எனக் கூறலாம் .

குறிப்புரை :

உரிந்து - ஆடை உரிந்து . ( உடையை நீக்கி ). ஒரு கூட்டத்தார் ஆடையே இல்லாதவர் . மற்றொரு கூட்டத்தார் ஒன்றுக்கு ஐந்தாக ஆடை போர்த்தவர் என ஒரு நயம் . அத்துகில் - ஐந்து என்னும் குறிப்பில் வந்த பண்டறிசுட்டு .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 11

கானலங் கழனி யோதம்வந் துலவுங் கழுமல நகருறை வார்மேல்
ஞானசம் பந்த னற்றமிழ் மாலை நன்மையா லுரைசெய்து நவில்வார்
ஊனசம் பந்தத் துறுபிணி நீங்கி யுள்ளமு மொருவழிக் கொண்டு
வானிடை வாழ்வர் மண்மிசைப் பிறவார் மற்றிதற் காணையும் நமதே.

பொழிப்புரை :

கடற்கரைச் சோலைகளை அடுத்த வயல்களில் கடல்நீர் வந்து பாய்தலையுடைய திருக்கழுமலம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் இறைவனைப் போற்றிப் பாடிய ஞான சம்பந்தனுடைய நல்ல தமிழ்மாலைகளைப் பத்தியோடு பொருள் உணர்ந்து பாடித் துதிப்பவர்கள் உடலுடன் தொடர்பு கொண்டதான பிறவிப் பிணி நீங்கி , உள்ளம் ஒருமைப்பாட்டினையுடைய சிவலோகத்தில் வாழ்வர் . மீண்டும் நிலவுலகில் வந்து பிறவார் . இதற்கு ஆணையும் நம்முடையதே ஆகும் .

குறிப்புரை :

கானல் - கடற்கரைச்சோலை . கானல் கழனி என வருவதால் கீழ்ப்பால் நெய்தல் நிலமும் , ஏனைப்பால் மருதநிலமும் உள்ளமை குறித்தவாறு .
சிற்பி