திருவீழிமிழலை


பண் :புறநீர்மை

பாடல் எண் : 1

புள்ளித்தோ லாடை பூண்பது நாகம் பூசுசாந் தம்பொடி நீறு
கொள்ளித்தீ விளக்குக் கூளிகள் கூட்டங் காளியைக் குணஞ்செய்கூத் துடையோன்
அள்ளற்கா ராமை யகடுவான் மதிய மேய்க்கமுட் டாழைக ளானை
வெள்ளைக் கொம்பீனும் விரிபொழில் வீழி மிழலையா னெனவினை கெடுமே.

பொழிப்புரை :

சிவபெருமான் புலித்தோல் ஆடை உடுத்தவர் . பாம்பை ஆபரணமாக அணிந்தவர் . நறுமணம் கமழும் திருநீற்றைப் பொடியாகப் பூசியவர் . சுடுகாட்டில் கொள்ளி நெருப்பை விளக்காகக் கொண்டு பூதகணங்கள் சூழக் காளியுடன் நடனம் புரிந்தவர் . சேற்றில் விளங்கும் ஆமையின் வயிறு போன்ற சந்திரனும் , யானையின் கொம்பு போன்ற தாழையும் விளங்கும் சோலைகளையுடைய திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் . அப்பெருமானின் திருநாமத்தை ஓத வினையாவும் கெடும் .

குறிப்புரை :

ஆமையின் வயிறு சந்திரனையும் , தாழம்பூ யானைக் கொம்பையும் ஒக்கும் எனக் கூறிய உவமை நயம் அறிந்து மகிழத் தக்கது .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 2

இசைந்தவா றடியா ரிடுதுவல் வானோ ரிழுகுசந் தனத்திளங் கமலப்
பசும்பொன்வா சிகைமேற் பரப்புவாய் கரப்பாய் பத்திசெய் யாதவர் பக்கல்
அசும்புபாய் கழனி யலர்கயன் முதலோ டடுத்தரிந் தெடுத்தவான் சும்மை
விசும்புதூர்ப் பனபோல் விம்மிய வீழி மிழலையா னெனவினை கெடுமே.

பொழிப்புரை :

அடியவர்கள் பக்திப் பெருக்குடன் மலர்தூவிப் போற்றவும் , தேவர்கள் நறுமணம் கமழும் பொற்றாமரை மாலைகளைச் சாத்தவும் அவர்கட்கு அருள்வாய் . பக்தி செயாதவர்கட்கு ஒளிந் திருப்பாய் . ஊற்று நீர் பாயும் கழனிகளில் மலர்களும் , கயல்களும் திகழ , அரிந்த கதிர்களிலிருந்து தூற்றும் நெல்லானது வானத்திலிருந்து உதிர்வன போன்று வளமுடன் விளங்குவது திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும் . அங்கு வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திரு நாமத்தை ஓத வினை யாவும் நீங்கும் .

குறிப்புரை :

துவல் - ( தூவல் என்பதன் விகாரம் ) மலர் - அடியார் இடும் தூவல் .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 3

நிருத்தன்ஆ றங்கன் நீற்றன்நான் மறையன் நீலமார் மிடற்றன்நெற் றிக்கண்
ஒருத்தன்மற் றெல்லா வுயிர்கட்கு முயிரா யுளனிலன் கேடிலி யுமைகோன்
திருத்தமாய் நாளு மாடுநீர்ப் பொய்கை சிறியவ ரறிவினின் மிக்க
விருத்தரை யடிவீழ்ந் திடம்புகும் வீழி மிழலையா னெனவினை கெடுமே.

பொழிப்புரை :

சிவபெருமான் திருநடனம் செய்பவர் . வேதத்தின் அங்கமாக விளங்குபவர் . திருநீறு பூசியுள்ளவர் . நால்வேதங்களை அருளிச்செய்து அவ்வேதங்களின் பொருளாய் விளங்குபவர் . நீலகண்டத்தர் . நெற்றிக் கண்ணுடையவர் . ஒப்பற்றவர் . எல்லா உயிர்கட்கும் உயிராய் விளங்குபவர் . பதிஞானத்தால் உணர்பவர்க்கு உளராவார் . பசு ஞானத்தாலும் , பாச ஞானத்தாலும் அறிய முற்படுபவர்கட்கு இலராவார் . உயிர்களின் தீமையைப் போக்குபவர் . உமா தேவியின் கணவர் . புனித தீர்த்தத்தால் நாள்தோறும் அபிடேபிக்கப் படுபவர் . வயதில் சிறியோர் அறிவு சால் சான்றோரின் திருப்பாதத்தை அட்டாங்க நமஸ்காரமாக வணங்கிப் போற்றச் சீலம் மிக்கவர்கள் வாழும் திருவீழிமிழலையில் வீற்றிருந்தருளுபவர் . அவருடைய திருநாமத்தை ஓத வினை நீங்கும் .

குறிப்புரை :

திருத்தம் - தீர்த்தம்

பண் :புறநீர்மை

பாடல் எண் : 4

தாங்கருங் காலந் தவிரவந்திருவர் தம்மொடுங் கூடினா ரங்கம்
பாங்கினாற் றரித்துப் பண்டுபோ லெல்லாம் பண்ணிய கண்ணுதற் பரமர்
தேங்கொள்பூங் கமுகு தெங்கிளங் கொடிமாச் செண்பகம் வண்பலா விலுப்பை
வேங்கைபூ மகிழால் வெயிற்புகா வீழி மிழலையா னெனவினை கெடுமே.

பொழிப்புரை :

மகாசங்கார காலத்தில் திருமால் , பிரமன் ஆகிய இருவரின் எலும்புகளை அழகுற அணிந்து , பின் முன்பு போல் மீண்டும் எல்லாம் படைத்துத் தொழிலாற்றும் நெற்றிக் கண்ணுடையவர் சிவபெருமான் . அவர் கமுகு , தென்னை , மா , செண்பகம் , பலா , இலுப்பை , வேங்கை , மகிழ் , ஆல் முதலியன சேர்ந்த வெயில்புகாத சோலைகள் சூழ்ந்த திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந் தருளுவார் . அப்பெருமானுடைய திருநாமத்தை ஓத வினை யாவும் நீங்கும் .

குறிப்புரை :

வெயில் புகா - மரங்களின் அடர்த்தியால் வெயிலும் நுழையாத சோலை . ` வெயில் நுழைபு அறியாக்குயின் நுழை பொதும்பர் ` ( மணிமேகலை , பளிக்கறை புக்க காதை அடி . 5) தாங்க அரும் காலம் - மகா சங்காரகாலத்தில் . தவிர - தம் தொழிலும் நீங்க , இருவர் தம்மொடுங் கூடினார் . பிரமன் திருமால் இடத்தும் திருமால் உருத்திரபகவானிடத்திலுமாகக் கூடினார் . ஒடுங்கினவர்களாகிய அவ்விருவரின் , அங்கம் - எலும்புகளை .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 5

கூசுமா மயானங் கோயில்வா யிற்கட் குடவயிற் றனசில பூதம்
பூசுமா சாந்தம் பூதிமெல் லோதி பாதிநற் பொங்கர வரையோன்
வாசமாம் புன்னை மௌவல்செங் கழுநீர் மலரணைந் தெழுந்தவான் தென்றல்
வீசுமாம் பொழிற்றேன் றுவலைசேர் வீழி மிழலையா னெனவினை கெடுமே.

பொழிப்புரை :

எவரும் அடைவதற்குக் கூச்சப்படுகின்ற மயானத்தில் பெரிய வயிற்றையுடைய பூதங்கள் சூழ நறுமணம் கமழும் சாந்துபோலத்திருநீறு பூசிப் , பார்வதிபாகராய் , ஆடுகின்ற பாம்பை இடுப்பில் அணிந்து விளங்குபவர் , சிவபெருமான் . அவர் நறுமணம் கமழும் புன்னை , முல்லை , செங்கழுநீர் மலர் ஆகிய மணங்கமழும் மலர்களில் கலந்து தென்றல் வீசும் சோலைகளிலிருந்து தேன்துளிகள் சிதறும் திருவீழிமிழலையில் வீற்றிருந்தருளுவார் . அப்பெருமானின் திருநாமத்தை ஓத வினையாவும் நீங்கும் .

குறிப்புரை :

கூசும் - எவரும் அடைவதற்குக் கூசுகின்ற . குடவயிறு - குடம் போலும் வயிறு .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 6

பாதியோர் மாதர் மாலுமோர் பாகர் பங்கயத் தயனுமோர் பாலர்
ஆதியாய் நடுவா யந்தமாய் நின்ற வடிகளா ரமரர்கட் கமரர்
போதுசேர் சென்னிப் புரூரவாப் பணிசெய் பூசுரர் பூமக னனைய
வேதியர் வேதத் தொலியறா வீழி மிழலையா னெனவினை கெடுமே.

பொழிப்புரை :

இறைவன் உமாதேவியைத் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டு விளங்குபவர் . திருமாலையும் , பிரமனையும் தம்பாகமாகக் கொண்டு ஏகபாத திரிமூர்த்தியாகத் திகழ்பவர் . அவர் உலகத் தோற்றத்திற்கும் , நிலைபெறுதலுக்கும் , ஒடுக்கத்திற்கும் நிமித்த காரணராய் விளங்கும் தலைவர் . தேவர்கட்குக் கடவுள் . மலரணிந்த தலையையுடைய புரூரவச் சக்கரவர்த்தியால் திருப்பணி செய்யப் பெற்றுப் பிரமனையொத்த வேதியர்கள் ஓதுகின்ற வேத ஒலி இடையறாது ஒலிக்கின்ற திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் . அப்பெருமானின் திருநாமத்தை ஓத வினை யாவும் நீங்கும் .

குறிப்புரை :

பாதியோர் மாதர் - உடம்பிற் பாதியில் ஒரு பெண்ணையுடையவர் . மாலுமோர் பாகர் பங்கயத்தனுமோர் பாகர் என்றது ஏகபாத திரிமூர்த்தி வடிவம் . புரூரவா : சந்திரகுலத்து அரசன் ; பாண்டவர் முன்னோன் . இங்கு அவன் திருப்பணி செய்த வரலாறு கூறுகிறது . இவ்வாறே கோச்செங்கட்சோழர் திருப்பணி முதலியவற்றைக் கூறுதல் மேற்காண்க .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 7

தன்றவம் பெரிய சலந்தர னுடலந் தடிந்தசக் கரமெனக் கருளென்
றன்றரி வழிபட் டிழிச்சிய விமானத் திறையவன் பிறையணி சடையன்
நின்றநாள் காலை யிருந்தநாண் மாலை கிடந்தமண் மேல்வரு கலியை
வென்றவே தியர்கள் விழாவறா வீழி மிழலையா னெனவினை கெடுமே.

பொழிப்புரை :

சிவபெருமான் திருவருளால் தோன்றிய சக்கரப்படை சலந்தராசுரனை அழித்ததைக் கண்ட திருமால் , அத்தகைய சக்கரப்படையைத் தனக்கு அருள வேண்டித் தேவ லோகத்திலிருந்து விமானத்தைக் கொண்டு வந்து சிவனைப் பூசித்தார் . சிவபெருமான் சந்திரனை அணிந்த சடையையுடையவர் . அவர் வீற்றிருந்தருளும் இடமாவது எல்லாக் காலத்திலும் மண்ணுலகத்தின் சேர்க்கையால் உண்டாகும் துன்பத்தை வென்ற அந்தணர்கள் வாழ்கின்ற , திருவிழாக்கள் நீங்காத திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும் . அத்திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் இறைவனுடைய திருநாமத்தை ஓத , வினை யாவும் நீங்கும் .

குறிப்புரை :

ஆலயத்திற்கு விண்ணிழி விமானம் என்று பெயர் . அது திருமாலால் கொணர்ந்து தாபிக்கப்பெற்றது எனல் இரண்டாம் அடியில் குறித்த பொருள் .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 8

கடுத்தவா ளரக்கன் கைலையன் றெடுத்த கரமுரஞ் சிரநெரிந் தலற
அடுத்ததோர் விரலா லஞ்செழுத் துரைக்க வருளினன் றடமிகு நெடுவாள்
படித்தநான் மறைகேட் டிருந்தபைங் கிளிகள் பதங்களை யோதப்பா டிருந்த
விடைக்குலம் பயிற்றும் விரிபொழில் வீழி மிழலையா னெனவினை கெடுமே.

பொழிப்புரை :

கோபமுடைய , வாளேந்தியுள்ள அரக்கனான இராவணன் முன்பு கயிலைமலையைப் பெயர்த்தெடுக்க , அவன் கரமும் , சிரமும் நெரிபட்டு அலறும்படி தம் திருப்பாதவிரலை ஊன்றியவர் சிவபெருமான் . பின் இராவணன் தன் தவறுணர்ந்து அஞ்செழுத்தை யாழில் மீட்ட நீண்ட வாளை அவனுக்குக் கொடுத்தருளினார் . அத்தியயனம் செய்த நான்மறைகளைக் கற்றுணர்ந்த வேதியர்கள் ஓதக்கேட்ட கிளிகள் அப்பதங்களை ஓத , அருகிருந்து கேட்ட பசுக் கூட்டங்களும் அவற்றைக் கேட்கத் தம் செவிகளைப் பழக்கும் , விரிந்த சோலைகளையுடைய திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும் . அங்கு வீற்றிருந் தருளும் இறைவனின் திருநாமத்தை ஓத , வினையாவும் கெடும் . விடைக்குலம் - வேதம் பயிலும் சிறுவர் குழாமுமாம் .

குறிப்புரை :

கடுத்த - சினத்த . இராவணன் திருவைந்தெழுத்தை ஓதி , சிவனுக்கு இழைத்த பிழையினின்றும் தப்பினன் என்பது இரண்டாமடியில் குறித்த பொருள் . இதனைப் ` பண்டை இராவணன் பாடி உய்ந்தனன் ` என மேல் வந்தமை காண்க . ( தி .3 ப .22. பா .8.)

பண் :புறநீர்மை

பாடல் எண் : 9

அளவிட லுற்ற வயனொடு மாலு மண்டமண் கெண்டியுங் காணா
முளையெரி யாய மூர்த்தியைத் தீர்த்த முக்கணெம் முதல்வனை முத்தைத்
தளையவிழ் கமலத் தவிசின்மே லன்னந் தன்னிளம் பெடையொடும் புல்கி
விளைகதிர்க் கவரி வீசவீற் றிருக்கு மிழலையா னெனவினை கெடுமே.

பொழிப்புரை :

பிரமனும் , திருமாலும் முடியையும் , அடியையும் தேட முற்பட்டு , அண்டங்கட்கு மேலெல்லாம் பறந்து சென்றும் , பூமி மண்ணை இடந்து கீழே பாதாளலோகம் முழுவதும் சென்றும் காண முடியாவண்ணம் நெருப்புப் பிழம்பாய் விளங்கியவர் முக்கண் உடைய முதல்வரான சிவபெருமான் . முத்துத் தரும் இதழ் விரிந்த தாமரைச் சிம்மாசனத்தில் அன்னப்பறவையானது தனது பெடையுடன் இருக்க , நெற்கதிர்கள் கவரிவீசுவதைப் போன்று விளங்கும் வயல்களை உடைய திருவீழிமிழலையில் வீற்றிருந்தருளும் பெருமானுடைய திருநாமத்தை ஓத வினை தீரும் .

குறிப்புரை :

கெண்டி - இடந்து . தாமரைப்பூ சிம்மாசனமாகவும் அதன்மேல் பெடையோடிருந்த அன்னம் அரசியோடு வீற்றிருக்கும் அரசனாகவும் , கழனிகளில் விளைந்த நெற்கதிர்கள் வெண்சாமரையாகவும் உருவகித்தமை அறிந்து மகிழத்தக்கது .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 10

கஞ்சிப்போ துடையார் கையிற்கோ சாரக் கலதிகள் கட்டுரை விட்டு
அஞ்சித்தே விரிய வெழுந்தநஞ் சதனை யுண்டம ரர்க்கமு தருளி
இஞ்சிக்கே கதலிக் கனிவிழக் கமுகின் குலையொடும் பழம்விழத் தெங்கின்
மிஞ்சுக்கே மஞ்சு சேர்பொழில் வீழி மிழலையா னெவினை கெடுமே.

பொழிப்புரை :

கஞ்சியைக் கையில் வாங்கி உண்பவர்களும் , ஆடையணியாத் துறவிகளுமான சமணர்கள் , உரைக்கும் மொழிகளை ஏற்க வேண்டா . தேவர்கள் அஞ்சும்படி எழுந்த நஞ்சைத் தாம் உண்டு அவர்கட்கு அமுதம் அருளியவர் சிவபெருமான் . உயர்ந்த கமுகின் பழக்குலை விழ , அதனால் வாழையின் கனிகள் மதில்மேல் உதிரும் . மிக உயர்ந்த தென்னை மரங்களின் உச்சியில் மேகம் படியும் . இத்தகைய வளம் பொருந்திய சோலைகள் சூழ்ந்த திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார் . அப்பெருமான் திருநாமத்தை ஓத வினையாவும் நீங்கும் .

குறிப்புரை :

மிகஉயர்ந்த வாழைமரத்தின் கனிகள் , மதிலின்மேல் உதிருமாறு அவற்றின் உயர்ந்த கமுகின் பழக்குலை விழ அவற்றினும் உயர்ந்த தென்னைமரங்களின் உச்சியில் மேகம் படியும் சோலைகள் சூழ்ந்த திருவீழிமிழலை என்பது பின்னிரண்டடிகளின் கருத்து .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 11

வேந்தர்வந் திறைஞ்ச வேதியர் வீழி மிழலையுள் விண்ணிழி விமானத்
தேய்ந்ததன் றேவி யோடுறை கின்ற வீசனை யெம்பெரு மானைத்
தோய்ந்தநீர்த் தோணி புரத்துறை மறையோன் றூமொழி ஞானசம் பந்தன்
வாய்ந்தபா மாலை வாய்நவில் வாரை வானவர் வழிபடு வாரே.

பொழிப்புரை :

இந்திரன் முதலான தேவர்கள் வந்து வழிபட , வேதங்களைக் கற்ற அந்தணர்கள் வாழ்கின்ற திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் விண்ணிழி விமானத்தில் உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இறைவனான எங்கள் சிவபெருமானை , நீர்வளம் மிகுந்த தோணிபுரத்தில் அவதரித்த மறைவல்ல தூயமொழி பேசும் ஞானசம்பந்தன் , போற்றி உரைத்த இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள் வானவர்களால் வணங்கப்படுவார்கள் .

குறிப்புரை :

தேவியோடுறைகின்ற ஈசனை - இறைவன் இங்குத் திருமணக் கோலத்தோடு வீற்றிருந்தருளும் தன்மை கூறப்படுகின்றது .
சிற்பி