திருஆலவாய்


பண் :புறநீர்மை

பாடல் எண் : 1

மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாடொறும் பரவப்
பொங்கழ லுருவன் பூதநா யகன்நால் வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடு மமர்ந்த ஆலவா யாவது மிதுவே.

பொழிப்புரை :

மங்கையர்க்கரசியார் சோழ மன்னரின் புதல்வி . கைகளில் வரிகளையுடைய வளையல்களை அணிந்தவர் . பெண்மைக்குரிய மடம் என்னும் பண்புக்குரிய பெருமையுடையவர் . தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளுக்கு ஒப்பானவர் . பாண்டிய மன்னனின் பட்டத்தரசி . சிவத்தொண்டு செய்து நாள்தோறும் சிவபெருமானைப் போற்றி வழிபடும் தன்மையுடையவர் . அச்சிவபெருமான் ஓங்கி எரியும் நெருப்புப் போன்று சிவந்த வண்ணமுடைய தூய உருவினர் . உயிர்கட்கெல்லாம் தலைவர் . நான்கு வேதங்களையும் , அவற்றின் பொருள்களையும் அருளிச் செய்தவர் . அப்பெருமான் அங்கயற் கண்ணி உடனாக வீற்றிருந்தருளும் திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவே யாகும் .

குறிப்புரை :

வரிவளைக்கைமடமானி - வரிகளையுடைய வளையல்களை அணிந்த . இளமைவாய்ந்தமானி - மானாபரணரென்று சோழர்கள் சொல்லப்படுவதால் . மானி - சோழர் குடியிற் பிறந்தார் என்பதால் ` வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் ` ( தி .7. ப .39. பா .11) எனத் திருத்தொண்டத்தொகையில் வருகிறது .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 2

வெற்றவே யடியா ரடிமிசை வீழும் விருப்பினன் வெள்ளைநீ றணியும்
கொற்றவன் றனக்கு மந்திரி யாய குலச்சிறை குலாவிநின் றேத்தும்
ஒற்றைவெள் விடைய னும்பரார் தலைவ னுலகினி லியற்கையை யொழித்திட்
டற்றவர்க் கற்ற சிவனுறை கின்ற வாலவா யாவது மிதுவே.

பொழிப்புரை :

பற்றற்ற உள்ளத்தோடு , சிவனடியார்களைக் காணும்போது கீழே விழுந்து அவர் திருவடிகளை வணங்கும் பக்தியுடையவரும் , திருவெண்ணீறு திருஞானசம்பந்தரால் பூசப்பெறும் புண்ணியப் பேறுடையவனாகிய பாண்டிய மன்னனுக்கு அமைச்சருமாகிய குலச்சிறை நாயனார் மகிழ்வோடு வணங்கித் துதிக்கும் சிவபெருமான் ஒப்பற்ற வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவர் . தேவர்களின் தலைவர் . உலகியல்புகளை வெறுத்து அகப்பற்று , புறப்பற்று ஆகியவற்றைக் கைவிட்டுத் தம்மையே கருதும் அன்பர்க்கு அன்பராய் விளங்குபவர் . அப்பெருமான் வீற்றிருந் தருளும் திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவேயாகும் .

குறிப்புரை :

வெள்ளை நீறணியும் கொற்றவன் தனக்கு மந்திரி :- இதனால் அரசன் சைவத்தினின்று சமணம் புக்கமை அறியலாகிறது . ஒற்றை - ஒப்பற்ற . அற்றவர்க்கு - அகப்பற்றும் புறப்பற்றும் விட்டுத் தன்னையே கருதும் அன்பர்க்கு . அற்ற - தானும் அத்தகைய அன்பு உடைய ( சிவன் ). அற்ற என்பது அன்புடைய என்னும் பொருளதோ ?

பண் :புறநீர்மை

பாடல் எண் : 3

செந்துவர் வாயாள் சேலன கண்ணாள் சிவன்றிரு நீற்றினை வளர்க்கும்
பந்தணை விரலாள் பாண்டிமா தேவி பணிசெயப் பாரிடை நிலவும்
சந்தமார் தரளம் பாம்புநீர் மத்தந் தண்ணெருக் கம்மலர் வன்னி
அந்திவான் மதிசேர் சடைமுடி யண்ண லாலவா யாவது மிதுவே.

பொழிப்புரை :

மங்கையர்க்கரசியார் சிவந்த பவளம் போன்ற வாயையுடையவர் . சேல் மீன் போன்ற கண்களை உடையவர் . சிவபெருமானது திருநீற்றின் பெருமையை வளர்ப்பவர் . விரல்நுனி பந்து போன்று திரட்சியுடைய பாண்டிமா தேவியார் சிவத்தொண்டு செய்ய , உலகில் சிறந்த நகராக விளங்குவதும் , அழகிய முத்துக்கள் , பாம்பு , கங்கை , ஊமத்தை , குளிர்ச்சி பொருந்திய எருக்க மலர் , வன்னிமலர் , மாலைநேரத்தில் தோன்றும் பிறைச்சந்திரன் இவற்றை சடைமுடியில் அணிந்துள்ள தலைவரான சிவபெருமான் வீற்றிருந் தருளுவதும் ஆகிய திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவேயாகும் .

குறிப்புரை :

பந்தணை விரலாள் - மகளிர் விரல் நுனியின் திரட்சிக்குப் பந்தினை உவமை கூறுதல் மரபு .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 4

கணங்களாய் வரினுந் தமியராய் வரினு மடியவர் தங்களைக் கண்டால்
குணங்கொடு பணியுங் குலச்சிறை குலாவுங் கோபுரஞ் சூழ்மணிக் கோயில்
மணங்கமழ் கொன்றை வாளரா மதியம் வன்னிவண் கூவிள மாலை
அணங்குவீற் றிருந்த சடைமுடி யண்ண லாலவா யாவது மிதுவே.

பொழிப்புரை :

சிவனடியார்கள் கூட்டமாக வந்தாலும் , தனியராக வந்தாலும் , அவர்களைக் காணும்போது அவர்களின் குணச்சிறப்புக்களைக் கூறி , வழிபடும் தன்மையுடைய குலச்சிறையார் வழிபாடு செய்யும் , கோபுரங்கள் சூழ்ந்த அழகிய கோயிலைக் கொண்டதும் , மணம் கமழும் கொன்றை , பாம்பு , சந்திரன் , வன்னி , வில்வம் , கங்கை இவை விளங்கும் சடைமுடியுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளுவதும் ஆகிய திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவே யாகும் .

குறிப்புரை :

அணங்கு - தெய்வப் பெண் ( இங்கே கங்கை ).

பண் :புறநீர்மை

பாடல் எண் : 5

செய்யதா மரைமே லன்னமே அனைய சேயிழை திருநுதற் செல்வி
பையரா வல்குற் பாண்டிமா தேவி நாடொறும் பணிந்தினி தேத்த
வெய்யவேற் சூலம் பாசமங் குசமான் விரிகதிர் மழுவுடன் றரித்த
ஐயனா ருமையோ டின்புறு கின்ற வாலவா யாவது மிதுவே.

பொழிப்புரை :

சிவந்த தாமரைமலர் மேல் வீற்றிருக்கும் இலக்குமி போன்று அழகுடையவரும் , சிறந்த ஆபரணங்களை அணிந்துள்ள வரும் , அழகிய நெற்றியையும் , பாம்பின் படம் போன்ற அல்குலையும் உடையவருமான பாண்டிமாதேவியாராகிய மங்கையர்க்கரசியார் நாள்தோறும் மனமகிழ்வோடு வழிபாடு செய்து போற்ற , வேல் , சூலம் , பாசம் , அங்குசம் , மான் , மழு ஆகியவற்றைத் தாங்கியுள்ள சிவ பெருமான் உமாதேவியோடு இன்புற்று வீற்றிருந்தருளுகின்ற திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவே .

குறிப்புரை :

செய்யதாமரைமேல் அன்னம் - இலக்குமி . ( முதற் பாட்டில் பங்கயச் செல்வி என்பதுவும் காண்க .)

பண் :புறநீர்மை

பாடல் எண் : 6

நலமில ராக நலமதுண் டாக நாடவர் நாடறி கின்ற
குலமில ராகக் குலமதுண் டாகத் தவம்பணி குலச்சிறை பரவும்
கலைமலி கரத்தன் மூவிலை வேலன் கரியுரி மூடிய கண்டன்
அலைமலி புனல்சேர் சடைமுடி யண்ண லாலவா யாவது மிதுவே.

பொழிப்புரை :

நல்ல குணங்களை உடையவராயினும் , அவை இல்லாதவராயினும் , எந்த நாட்டவராயினும் , நாடறிந்த உயர்குடியிற் பிறந்தவராயினும் , பிறவாதாராயினும் அடியவர்களைக் காணும்போது அவர்களை வணங்கி வழிபடுதலையே தவமாகக் கொண்டவர் குலச்சிறையார் . அத்தகைய குலச்சிறையார் வழிபடுகின்ற , மான் ஏந்திய கையினரும் , மூவிலைச் சூலத்தவரும் , வேலரும் , யானைத் தோலைப் போர்த்த நீலகண்டரும் , கங்கையைத் தாங்கிய சடை முடியை உடையவருமான சிவபெருமான் வீற்றிருந்தருளும் திரு ஆலவாய் என்னும் திருத்தலம் இதுவே .

குறிப்புரை :

தவம்பணி - தவமாகக் கொண்டு அடியாரைப் பணிகின்ற . ` எவரேனும் தாமாக இலாடத்திட்ட திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி ... ஈசன் திறமே பேணி ` ( தி .6. ப .61. பா .3) என்ற திருத்தாண்டகக் கருத்து இப்பாடலின் முற்பகுதிக்குக்கொள்க .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 7

முத்தின்றாழ் வடமுஞ் சந்தனக் குழம்பு நீறுந்தன் மார்பினின் முயங்கப்
பத்தியார் கின்ற பாண்டிமா தேவி பாங்கொடு பணிசெய நின்ற
சுத்தமார் பளிங்கின் பெருமலை யுடனே சுடர்மர கதமடுத் தாற்போல்
அத்தனா ருமையோ டின்புறு கின்ற வாலவா யாவது மிதுவே.

பொழிப்புரை :

முத்துமாலையும் , சந்தனக் குழம்பும் , திருநீறும் தம் மார்பில் விளங்கப் பக்தியோடு பாண்டிமாதேவியாரான மங்கையர்க்கரசியார் வழிபடுகின்ற , தூய பளிங்குமலை போன்ற சிவபெருமானும் , சுடர்விடு மரகதக் கொடி போன்ற உமாதேவியும் மகிழ்ந்து வீற்றிருந் தருளும் திரு ஆலவாய் இதுவே .

குறிப்புரை :

முத்தின் தாழ்வடம் பாண்டியர்க்கே சிறப்பாய் உரியது . பளிங்கின் பெருமலை - சதாசிவ மூர்த்தியின் திருமேனி பளிங்கு போன்றது என்ப . ( சைவர்களைக் கண்டாலும் தீட்டு , அவர்கள் கூறுவதைக் கேட்டாலும் தீட்டு என்று சமணர்கள் வாழ்ந்த காலத்திலே , சமணநெறி ஒழுகிய தம் கணவரான பாண்டிய மன்னர் மனம் புண்படாதிருக்க மங்கையர்க்கரசியார் திருநீற்றினைத் தம் மார்பில் பூசிக்கொண்டார் . இது அம்மையாரின் மாண்பை உணர்த்தும் .)

பண் :புறநீர்மை

பாடல் எண் : 8

நாவணங் கியல்பா மஞ்செழுத் தோதி நல்லராய் நல்லியல் பாகும்
கோவணம் பூதி சாதனங் கண்டாற் றொழுதெழு குலச்சிறை போற்ற
ஏவணங் கியல்பா மிராவணன் றிண்டோ ளிருபது நெரிதர வூன்றி
ஆவணங் கொண்ட சடைமுடி யண்ண லாலவா யாவது மிதுவே.

பொழிப்புரை :

நாவிற்கு அழகு செய்யும் இயல்பினதாகிய திருவைந்தெழுத்தை ஓதி , நல்லவராய் , நல்லியல்புகளை அளிக்கும் கோவணம் , விபூதி , உருத்திராக்கம் முதலிய சிவசின்னங்கள் அணிந்தவர்களைக் கண்டால் வணங்கி மகிழ்பவர் குலச்சிறை நாயனார் . அவர் வழிபாடு செய்கின்ற , பகைவரது அம்புகள் பணிந்து அப்பாற் செல்லும் பெருவலிமை படைத்த இராவணனின் இருபது தோள்களும் நெரியுமாறு தம் திருப்பாதவிரலை ஊன்றிப் பின் அவனைச் சிவ பக்தனாகும்படி செய்தருளிய சடைமுடியுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவே .

குறிப்புரை :

நா - அணங்கு இயல்பாம் ஐந்தெழுத்து ஒதி :- அணங்கு - ` நாவினுக்கருங்கலம் நமச்சிவாயவே ` ( தி .4. ப .11. பா .2.) என்ற கருத்து .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 9

மண்ணெலா நிகழ மன்னனாய் மன்னு மணிமுடிச் சோழன்றன் மகளாம்
பண்ணினேர் மொழியாள் பாண்டிமா தேவி பாங்கினாற் பணிசெய்து பரவ
விண்ணுளா ரிருவர் கீழொடு மேலு மளப்பரி தாம்வகை நின்ற
அண்ணலா ருமையோ டின்புறு கின்ற வாலவா யாவது மிதுவே.

பொழிப்புரை :

உலகம் முழுவதும் தனது செங்கோல் ஆட்சி நிகழ் மன்னனாய் விளங்கிய மணிமுடிச் சோழனின் மகளார் , மங்கையர்க்கரசியார் . பண்ணிசை போன்ற மொழியுடையவர் . பாண்டிய மன்னனின் பட்டத்தரசியார் . அத்தேவியார் அன்போடு வழிபாடு செய்து போற்றுகின்ற , விண்ணிலுள்ள திருமாலும் , பிரமனும் கீழும் மேலுமாய்ச் சென்று இறைவனின் அடிமுடி தேட முயன்று காண முடியாவண்ணம் அனற்பிழம்பாய் நின்ற சிவபெருமான் உமாதேவியோடு மகிழ்ந்து வீற்றிருந்தருளும் திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவே .

குறிப்புரை :

மண்ணெலாம்நிகழ - உலகமுழுதும் ஒரு செங்கோல் ஆட்சியின் கீழ் நடைபெற

பண் :புறநீர்மை

பாடல் எண் : 10

தொண்டரா யுள்ளார் திசைதிசை தோறுந் தொழுதுதன் குணத்தினைக் குலாவக்
கண்டுநா டோறு மின்புறு கின்ற குலச்சிறை கருதி நின்றேத்தக்
குண்டரா யுள்ளார் சாக்கியர் தங்கள் குறியின்க ணெறியிடை வாரா
அண்டநா யகன்றா னமர்ந்துவீற் றிருந்த வாலவா யாவது மிதுவே.

பொழிப்புரை :

சிவத்தொண்டர்கள் எல்லாத் திசைகளிலும் சிவபெருமானைத் தொழுது , அவர் அருட்குணத்தைப் போற்றி , அருட் செயல்களை மகிழ்ந்து கூறக்கேட்டு இன்புறும் தன்மையுடையவர் குலச்சிறையார் . அவர் பக்தியுடன் வழிபடுகின்ற , புத்த , சமணத்தைப் பின்பற்றுபவர் கொள்ளும் குறியின்கண் அடங்காத நெறியுடைய , இவ்வண்டத்துக்கெல்லாம் நாயகனாகிய சிவபெருமான் வீற்றிருந் தருளும் திருத்தலம் இதுவேயாகும் .

குறிப்புரை :

தன் குணத்தினைக் குலாவக்கண்டு - ( தனது - சிவ பெருமானது ) குணங்களைப்பாராட்டும் அடியார்களைக்கண்டு மகிழ்கின்ற குலச்சிறை .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 11

பன்னலம் புணரும் பாண்டிமாதேவி குலச்சிறை யெனுமிவர் பணியும்
அந்நலம் பெறுசீ ராலவா யீசன் றிருவடி யாங்கவை போற்றிக்
கன்னலம் பெரிய காழியுண் ஞான சம்பந்தன் செந்தமி ழிவைகொண்
டின்னலம் பாட வல்லவ ரிமையோ ரேத்தவீற் றிருப்பவ ரினிதே.

பொழிப்புரை :

பலவகைச் செல்வ நலன்களும் வாய்க்கப் பெற்ற பாண்டிமா தேவியாராகிய மங்கையர்க்கரசியாரும் , குலச்சிறையார் என்னும் மந்திரியாரும் வழிபட்டுப் போற்ற அவ்விருவர் பணிகளையும் ஏற்றருளும் சிறப்புடைய திருஆலவாய் இறைவன் திருவடிகளைப் போற்றி , கருப்பங் கழனிகளையுடைய பெருநகரான சீகாழிப் பதியில் அவதரித்த ஞானசம்பந்தர் அருளிய செந்தமிழ்ப் பாமாலையாகிய இத்திருப் பதிகத்தை இன்னிசையோடு ஓதவல்லவர்கள் தேவர்கள் வணங்கச் சிவலோகத்தில் வீற்றிருப்பர் .

குறிப்புரை :

பல்நலம் - பலவிதமான செல்வ நலன்கள் . புணரும் - ஒருங்கே அமையப்பெற்ற . அந்நலம் - அத்தகைய வளம் . கன்னல் ( அம் ) கழனி - கருப்பங் கழனிகளை உடைய .
சிற்பி