திருக்கழிப்பாலை


பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

வனபவள வாய்திறந்து வானவர்க்குந் தானவனே யென்கின் றாளாற்
சினபவளத் திண்டோண்மேற் சேர்ந்திலங்கு வெண்ணீற்ற னென்கின் றாளால்
அனபவள மேகலையொ டப்பாலைக் கப்பாலா னென்கின் றாளால்
கனபவளஞ் சிந்துங் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ.

பொழிப்புரை :

அழகிய பவளம் போன்ற வாயைத் திறந்து தேவர்களுக்கும் அருள் வழங்குகின்றவனே என்கின்றாள் . சிவந்த பவளம் போன்ற திண்ணிய தோள்களின்மேல் சேர்ந்து விளங்கும் வெள்ளிய திருநீறு அணிந்தவனே என்கின்றாள் . அன்னம் போன்ற நடையினளாய்ப் பவளத்தாலாகிய மேகலையை அணிந்த பார்வதியோடு சுத்தாவத்தைகளுள் துரியத்துக்கு அப்பாற்பட்ட துரியாதீதத்தில் உள்ளவன் என்கின்றாள் . பெரிய பவளங்களைக் கடல் கரையில் சேர்க்கும் திருக்கழிப்பாலையில் உள்ள எம்பெருமானை என்மகள் தரிசித்தாளோ ?

குறிப்புரை :

இது செவிலி கூறுவதாகக் கொள்ளற்பாலது . கன பவளம் சிந்தும் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் வாய்திறந்து , தானவனே வெண்ணீற்றன் , அப்பாலான் என்கின்றாள் என்று முடிக்க . மேலும் இவ்வாறே கொள்க . கழிப்பாலையிற் சேர்வான் என்று ஏழனுருபு விரிக்க ; சேர்தற்கு இடம் ஆதலின் . இரண்டன் றொகையாயின் வலி மிகாது . வனபவள வாய் - அழகிய பவளம் போன்ற செவ்வாய் . வானவர்க்கும் தானவன் - தேவர்களுக்கும் அருள்பவன் . ஏகாரம் அசை . ` தானம் ` என்னும் வடசொல்லடியாகப் பிறந்த வினை ( க்குறிப்பு ) ப்பெயர் . தேவர்களுள் ஒருவனாகக் கருதப்பெறாது தானாக ( த்தனித்து ) ப் போற்றப் பெறுவோன் எனலுமாம் . ` நம்மவரவரே மூவர் என்றே எம்பிரானொடும் எண்ணி விண்ஆண்டு மண்மேல் தேவர் என்றே இறுமாந்து என்ன பாவம் திரித ( ர் ) வரே ` ( தி .8 திருவா .). வானவர்க்குப் பகைவராகிய தானவரை ஈண்டுக் கருதற்க . சின பவளத் திண் தோள்மேல் சேர்ந்து இலங்கு வெள்நீற்றன் - கோபச் செம்மையுடைய பவளம் போன்ற திண்ணியனவாகிய தோள்களின் மேற் பொருந்தி விளங்கும் திருவெண்ணீற்றையுடையன் . ` சிவனவன் திரள் தோள்மேல் நீறுநின்றது கண்டனை ` ( தி .8 திருவாசகம் ). சினம் கோபத்தால் ஆகும் செம்மைக்கு ஆகு பெயர் . ` சிவப்பு நிறத்துருவு முணர்த்தும் ` என்றார் தொல்காப்பியர் . திருநீற்றுச் சின்னமெனலுமாம் . அனபவள மேகலை - அன்னம் போன்றவள் ; பவள நிறமுடைய மேகலையுடுத்தவள் ; பாதியுறுமாது ; உவமத்தொகை நிலைக் களத்துப் பிறந்த அன்மொழி . அப்பாலைக்கு - சுத்தாவத்தைகளுள் துரியத்துக்கு . அப்பாலான் - துரியாதீதத்தில் உள்ளவன் . கனபவளம் :- பவளத்தின் சீர் ( கனம் ) உணர்த்திற்று . கழிப்பாலையிற் பவளம் சிந்தும் .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

வண்டுலவு கொன்றை வளர்புன் சடையானே யென்கின் றாளால்
விண்டலர்ந்து நாறுவதொர் வெள்ளெருக்க நாண்மலருண் டென்கின் றாளால்
உண்டயலே தோன்றுவதொ ருத்தரியப் பட்டுடைய னென்கின் றாளால்
கண்டயலே தோன்றுங் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ.

பொழிப்புரை :

வண்டுகள் உலவும் கொன்றைப் பூக்கள் தங்கிய செந்நிறச் சடையனே ! இதழ் விரிந்து நறுமணம் கமழும் புதிய வெள்ளெருக்க மலரும் அச்சடையில் உள்ளது . பக்கத்தில் காட்சி வழங்கும் மேலாடையாகப் பட்டினை அவன் அணிந்திருத்தலும் உண்டு என்று கூறுகின்ற என் பெண் கழிமுள்ளி கடற்கரையருகே வளருகின்ற கழிப்பாலைப் பெருமானைக் கண்டாளோ ?

குறிப்புரை :

` வண்டு உலவு கொன்றை வளர்புன் சடையானே ` என்றது , மரத்திலுள்ளபோது கொன்றையில் வண்டு மொய்க்கும் . சடையில் ஏறிய பின்னரோ அணுகவும் அஞ்சி அகலவும் மாட்டாமல் உலவுகின்றமை தோற்ற . புன்சடை - பொன்னார் சடை . புன்மை பொன்மையைக் குறித்தல் உண்டு . கங்கையைத் தடுத்த சடை வன்மைக்குப் புன்மை கூறலாமோ ? ` புல்லிய சடை ` என்பாருமுளர் . விண்டு - விள்ளுதல் உற்று . அலர்ந்து - விரிந்து . நாறுவது - மணப்பது . ஓர் வெள் எருக்க மலர் :- என்னப் பெறும் ஒப்பில்லாத வெளிய எருக்கம்பூ . ` வெள்ளெருக்கஞ் சடைமுடியான் ` ( கம்பரா . ) நாள் மலர் - காலையிற் பூத்த பூ . உண்டு - உளது ஆகி என ஆக்கம் விரித்துத் தோன்றுவது என்பதனொடு இயைக்க . உத்தரியம் - மேற்புனையும் ஆடை . கீழ் உடுப்பது வேறு . பட்டுடுக்கும் பழக்கம் நெடுங்காலத்தது . கண்டலயலே என்னும் பாடத்தில் ஒரு லகாரம் தொக்கதாயிற்று . ` களிவண்டார் கரும் பொழில்சூழ் கண்டல் வேலிக் கழிப்பாலை ` ( தி .6 பா .12 ப .3) கயல் பாயும் கண்டல் சூழ்வுண்ட வேலிக் கழிப்பாலை ` ( தி .6 பா .12 ப .5) ( திருத்தாண்டகம் . 3,8). ` கைதல் மடல் புல்கு கழிப்பாலை ` ( தி .4 ப .106 பா .1) கண்டல் - கழிமுள்ளி ; நீர்முள்ளி ; கண்டு என்னும் பாடமும் கண்டல் என்னும் பொருள் பயக்கும் . ( தி .7 சுந்தரர் . 234)

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

பிறந்திளைய திங்களெம் பெம்மான் முடிமேல தென்கின் றாளால்
நிறங்கிளருங் குங்குமத்தின் மேனி யவனிறமே யென்கின் றாளால்
மறங்கிளர்வேற் கண்ணாள் மணிசேர் மிடற்றவனே யென்கின் றாளால்
கறங்கோத மல்குங் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ.

பொழிப்புரை :

இளையபிறைச்சந்திரன் எம்பெருமான் முடிமேல் உள்ளது . அவன் திருமேனியின் நிறம் ஒளிவீசும் குங்குமத்தின் நிறமே . வீரத்தை வெளிப்படுத்தும் வேல் போன்ற கண்களையுடைய பார்வதிதேவியின் கண்மணிபோன்ற நீலகண்டன் என்று கூறுகின்ற என் பெண் ஒலிக்கின்ற கடல் வெள்ளம் மிகுகின்ற கழிப்பாலையை உகந்தருளியிருக்கும் பெருமானைத் தரிசித்தாளோ ?

குறிப்புரை :

பிறந்து இளைய திங்கள் :- ` பிறை ` என்னும் காரணப் பெயரைப் புலப்படுத்துகின்றது . இளைய :- பண்படியாகத் தோன்றிய பெயரெச்சம் . பிறந்து என்னும் எச்சம் ` இளைய ` என்பதன்கண் விரியும் வினைக் குறிப்பைக்கொண்டது . இளந்திங்கள் என்புழி இளையதாகிய திங்கள் என்று விரியும் ; ஐம்பாலறியும் பண்பு தொகுமொழியாதலின் . அப்பொருட்டே ` இளைய திங்கள் ` என்பதூஉம் . எனவே , அங்கு விரியும் வினையே பிறந்து என்பதற்கு முடிபாயிற்று . பிறந்த எனக் கொண்டு பெயரெச்சத்து அகரம் தொக்கதெனலும் கூடும் . எம் பெம்மான் முடிமேலது திங்கள் ; அவன் நிறமே நிறம் கிளரும் குங்குமத்தின் மேனி ; மறம் கிளர் வேற்கண்ணாள் கண்டாள் என்றியைக்க . அன்றி , அன்னையைக் குறித்ததாகக் கொண்டு , அவளது கண்மணியை ஒத்த திருநீலகண்டனே என்கின்றதும் பொருந்தும் . கறங்கு ஓதம் - சுழலும் அலையொலி . ஓதும் காரணம் பற்றியது ஓதம் . (` ஓரோதம் ` தி .4 ப .6 பா .8.) மல்குதல் - மலிதல் . காதல்பற்றிய சொல் ஆதலின் , முறையும் காரணமும் அமைந்தில .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

இரும்பார்ந்த சூலத்த னேந்தியொர் வெண்மழுவ னென்கின் றாளால்
சுரும்பார் மலர்க்கொன்றைச் சுண்ணவெண் ணீற்றவனே யென்கின் றாளால்
பெரும்பால னாகியொர் பிஞ்ஞக வேடத்த னென்கின் றாளால்
கரும்பானல் பூக்குங் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ.

பொழிப்புரை :

இரும்பினாலாய சூலமும் மழுப்படையும் ஏந்தியவன் , வண்டுகள் பொருந்திய கொன்றை மலரைச் சூடித் திருநீற்றை அணிந்தவன் . பெரிய இடப்பகுதியைப் பார்வதி பாகமாகக் கொண்டு அப்பகுதியில் விளங்கும் தலைக்கோலத்தை உடையவன் என்று கூறுகின்ற என்பெண் கருங்குவளை மலர்கள் பூக்கும் கழிப்பாலைப் பெருமானைத் தரிசித்தாளோ ?

குறிப்புரை :

இரும்புருவச் சூலம் . ஏந்திய ஓர் வெண்மழு . சுரும்பு - வண்டு . சுருள்பு என்பதன் மரூஉ . விரியுங்காறும் மலரைச் சுற்றிக் கொண்டிருத்தலாகிய காரணம் பற்றிய பெயர் . இருள்பு - இரும்பு . இருள்போல்வது . அருள்பு - அரும்பு . அருள்தோற்றுவது . அருள் பெறத் துணைப்பொருளாயிருப்பது . ` அருப்போடு மலர் பறித்து , இட்டு உண்ணா ஊர் ஊர் அல்ல அடவிகாடே ` என்று பின்னர் ஆசிரியர் அருளியதுணர்க . கருள்பு - கரும்பு . கருமை பற்றியது . ` செங்கரும்பு ` என்றதால் உணர்க . சுண்ணம் - பொடி ( தி .4 ப .6 பா .10). வெண்ணீற்றுச் சுண்ணம் . ` சுண்ணவெண் சந்தனச் சாந்தும் ` ( தி .4 ப .2 பா .1) பெரும் பாலன் ஆகித் தாருகவனத்து மகளிர் முன்நின்ற கோலம் . விருத்த குமார பாலரான திருக்கோலமுமாம் . ஆகி என்பது வேடத்தன் என்பதில் விரியும் வினைக்குறிப்புக் கொண்டது . பிஞ்ஞகவேடத்தன் - தலை முடியணி வேடத்தையுடையவன் . கரும்பானல் - கருங்குவளை . சூலத்தன் , மழுவன் , கொன்றை ( யன் ), நீற்றன் , வேடத்தன் என்கின்றாள் .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

பழியிலான் புகழுடையன் பானீற்ற னானேற்ற னென்கின் றாளால்
விழியுலாம் பெருந்தடங்கண் ணிரண்டல்ல மூன்றுளவே யென்கின் றாளால்
சுழியுலாம் வருகங்கை தோய்ந்த சடையவனே யென்கின் றாளால்
கழியுலாஞ் சூழ்ந்த கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ.

பொழிப்புரை :

எம்பெருமான் பழியில்லாதவன் , புகழுடையவன் , பால்போன்ற நீறு அணிந்தவன் , காளை வாகனத்தை உடையவன் , அவனுக்கு விழிகளாக அமைந்தவை இரண்டல்ல , மூன்று . அவன் நீர்ச் சுழிகளோடு பரவும் கங்கை வந்து தங்கிய சடைமுடியை உடையவன் என்று கூறுகின்ற என்பெண் , எங்கும் பரவி ஓடுகின்ற உப்பங்கழிகளால் சூழப்பட்ட திருக்கழிப்பாலைப் பெருமானைத் தரிசித்தாளோ ?

குறிப்புரை :

பழியின்மையும் புகழுண்மையும் ஓரிடத்திலிருப்பன . பழியும் புகழும் வெவ்வேறிடத்தன . மெய்ப்புகழ் பழியிலானிடத்தில் தான் இருக்கும் . புகழிலானிடத்தில் பழி உண்மையும் கூடும் ; இன்மையும் கூடும் . உலகில் இரண்டும் இன்றிப் பலர் இருத்தல் கண்கூடு . பால்நீற்றன் :- ` பவளம்போல் மேனியிற் பால் வெண்ணீறு `( தி .4 ப .81 பா .4) ஆன் ஏற்றன் - ` ஏறூர்தி ` விழி - ( விழித்தல் உடையது ). கருவிழி . உலாம் - உலாவும் . பெருந்தடங்கண் - பெரியனவும் அகன்றனவும் ஆன கண்கள் . முச்சுடரும் , பெருமையும் , அகற்சியும் உடையன ஆதலின் ` பெருந்தடங்கண் ` எனப்பட்டன . ` இரண்டு அல்ல ` என்றலின் , இரண்டிறந்த பன்மையாம் . ஆயினும் இரண்டனை இறந்து பலவாதல் தொடராமை தோன்ற , ` மூன்றுளவே ` என்றாள் . ` இரண்டல்ல ` ` மூன்றுள ` என்பவற்றுள் ஒன்று சொல்ல மற்றது தோன்றும் . இரண்டுங் கூறியது மிகைபடக் கூறல் அன்றோ எனின் . ` கண்ணிரண்டே யாவர்க்கும் ` ஆதலின் , என்றும் எவர்க்கும் முக்கண் உண்டெனக் கேட்டிராதவற்றை உணர்த்தி வியந்ததாம் . சுழியுலாம் கங்கை . வரு கங்கை . கங்கை தோய்ந்த சடை என்க . ` கழிப்பாலை ` என்னும் பெயரது காரணத்தைத் தோற்றிற்று அடை . உலாம் சூழ்ந்த என்னும் எச்சங்களைத் தனித்தனி சேர்த்துக் கொள்க . ` உலாம் ` என்பது இயக்கம் என்னும் பொருளதாகிய பெயருமாம் போலும் . ( பா .60. ` கழியுலாம் `).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

பண்ணார்ந்த வீணை பயின்ற விரலவனே யென்கின் றாளால்
எண்ணார் புரமெரித்த வெந்தை பெருமானே யென்கின் றாளால்
பண்ணார் முழவதிரப் பாடலொ டாடலனே யென்கின் றாளால்
கண்ணார் பூஞ்சோலைக் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ.

பொழிப்புரை :

பண்கள் நிறைந்து ஒலித்தற்கு இடமான கருவியாகிய வீணையை ஒலியெழுப்பும் விரல்களை உடையவனே ! பகைவருடைய மும்மதில்களையும் தீக்கு இரையாக்கிய எம் தந்தையாகிய பெருமானே ! பண்களுக்கு ஏற்ப முழவு என்ற தோற்கருவி ஒலிக்கப் பாடிக் கொண்டு கூத்து நிகழ்த்துபவனே ! என்று கூறுகின்ற என் பெண் கண்ணுக்கு நிறைவைத் தரும் பூக்கள் நிறைந்த சோலைகளையுடைய திருக்கழிப்பாலை இறைவனைத் தரிசித்தாளோ ?

குறிப்புரை :

பண் ஆர்ந்த வீணை :- பண்( ணும் திறமும் ) நிறைந்து ஒலித்தற்கு இடமான கருவியாய் ` வீணை ` என்னும் பெயருடையது . ` பண்ணும் முழவு ` என்புழியும் இவ்வாறுணர்க . பயின்ற - பல்காற் பழகிய . எண்ணார் - நினையாதார் ( பகைவர் ). எந்தை பெருமான் - எம்மைத் தந்தவனைத் தந்த பெருமகன் . பாட்டன் என்றபடி . பாடலொடு ஆடலன் - பாடலும் ஆடலும் உடையவன் . கண்ணுக்கு ஆர்ந்த பூஞ்சோலைகளையுடைய கழிப்பாலை . விரலவனே , பெருமானே , ஆடலனே என்கின்றாள் .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

முதிருஞ் சடைமுடிமேன் மூழ்கு மிளநாக மென்கின் றாளால்
அதுகண் டதனருகே தோன்று மிளமதிய மென்கின் றாளால்
சதுர்வெண் பளிக்குக் குழைகாதின் மின்னிடுமே யென்கின் றாளால்
கதிர்முத்தஞ் சிந்துங் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ.

பொழிப்புரை :

நன்கு செறிந்து நிறைந்த சடைமுடிமேல் இளநாகம் மறைந்து கிடக்கிறது . அதனைக் கண்டு அஃது ஊறுதாராது என்ற கருத்தோடு அதன் அருகிலே பிறை காட்சி வழங்குகின்றது . வேலைப்பாடு அமைந்த வெண்ணிறத்ததாகிய பளிங்கினாலாகிய காதணி காதில் இருந்து கொண்டு ஒளி வீசுகின்றது என்று கூறுகின்ற என்பெண் ஒளி வீசுகின்ற முத்துக்களைக் கடல் அலை கரைக்கண் செலுத்தும் திருக்கழிப்பாலைப் பெருமானைத் தரிசித்தாளோ ?

குறிப்புரை :

முதிர் சடை இளநாகம் :- முரண் . அது - அப்பாம்பு . முதுநாகம் அன்மையின் அருகே தோன்றிற்று . முற்றாமுளைமதியம் ஆதலின் நாகத்தருகே தோன்றிற்று எனலுமாம் . வெண்குழை . பளிக்குக்குழை . காதிற்குழை மின்னிடும் . சதுர் - மேம்பாடு . பளிங்கு + குழை = பளிக்குக் குழை . கதிர் முத்தம் ( கடலலைகள் ) ` சிந்தும் கழிப்பாலை `. முழுகுதல் பல்சடையுளேனும் மேலுள்ள கங்கையுளேனும் கூடும் .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

ஓரோத மோதி யுலகம் பலிதிரிவா னென்கின் றாளால்
நீரோத மேற நிமிர்புன் சடையானே யென்கின் றாளால்
பாரோத மேனிப் பவள மவனிறமே யென்கின் றாளால்
காரோத மல்குங் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ.

பொழிப்புரை :

ஓர்ந்து கொள்ளத்தக்க வேதங்களை ஓதிக்கொண்டு உலகம் முழுதும் பிச்சை ஏற்றுத் திரிகின்றவனே ! கங்கை நீர்வெள்ளம் உயர அதற்கேற்ப உயர்ந்து தோன்றும் செந்நிறச் சடையவனே உலகைச் சூழ்ந்த கடலில் உள்ள செந்நிறப் பவளம் எம்பெருமானுடைய திருமேனியின் நிறமே என்று கூறுகின்ற என்பெண் , கரிய கடல்வெள்ளம் மிகும் திருக்கழிப்பாலையின் பெருமானைத் தரிசித்தாளோ ?

குறிப்புரை :

ஓர் ஓதம் - ஓர்ந்து கொள்ளத்தகும் மறைகள் . வினைத்தொகை . ஓதுவது ஓத்து ; ஓதம் . ( பா .54. பார்க்க .) ஓது - பாடு ; ஓத்து - பாட்டு ; ஓதம் - பாடம் . எனவருஞ்சொல்லமைதி உணர்க . பாடம் என்னும் வடசொல்வேறு இதுவேறு . ` பாடம் ( பாடு + அம் ) கருத்தே சொல்வகை சொற்பொருள் ` என்புழி வருவது தமிழ்ச் சொல்லுமாம் . ` பாடம் படித்தான் ` என்புழி நிற்பது வடசொல் . நீர் ஓதம் - கங்கை . கங்கை நீரோதமுமாம் . பார் ஓதம் - உலகு சூழ் கடல் . ஓதப் பவளம் - கடலிலுள்ள பவளம் . மேனிப் பவளம் - நிறமுடைய பவளம் . அவன் நிறமே பவள மேனி எனலுமாம் . கார் ஓதம் - கருங் கடல் .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

வானுலாந் திங்கள் வளர்புன் சடையானே யென்கின் றாளால்
ஊனுலாம் வெண்டலைகொண் டூரூர் பலிதிரிவா னென்கின் றாளால்
தேனுலாங் கொன்றை திளைக்குந் திருமார்ப னென்கின் றாளால்
கானுலாஞ் சூழ்ந்த கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ

பொழிப்புரை :

வானத்தில் உலவ வேண்டிய பிறைதங்கிய செஞ் சடையனே ! புலால் நாற்றம் கமழும் வெண்ணிற மண்டையோட்டைக் கையில் கொண்டு ஊர்ஊராகப் பிச்சைக்குத் திரிகின்றவனே ! தேன் என்ற வண்டினங்கள் சுற்றும் கொன்றைப் பூக்கள் சிறந்து விளங்கும் திருமார்பினனே ! என்று எம்பெருமானைப் பற்றிக்கூறும் என்மகள் , எங்கும் பரவுகின்ற நறுமணம் சூழ்ந்த திருக்கழிப்பாலையிலுள்ள பெருமானைத் தரிசித்தாளோ ?

குறிப்புரை :

வான் உலாம் திங்கள் :- ` வான் ஊர் மதியம் ` ( நாலடி ) ` உலாவும் `.- செய்யும் என்னும் எச்சத்தில் உயிர்மெய் ஏகிற்று . ( ப .6 பா .5. பார்க்க ). ஊன் உலாம் வெள்தலை - பிரமகபாலம் . மார்பில் திளைக் கும்வண்ணம் அணிந்த கொன்றை மாலை பெறல் தலைவியின் குறிப்பு . ` கான் உலாம் ` ( ப .6 பா .9), ` கழியுலாம் ` ( ப .6 பா .5) இரண்டும் நோக்கின் , உலாம் என்பதைப் பெயராகக் கொள்ளல் பொருந்துமாறு உணர்க .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

அடர்ப்பரிய விராவணனை யருவரைக்கீ ழடர்த்தவனே யென்கின் றாளால்
சுடர்ப்பெரிய திருமேனிச் சுண்ணவெண் ணீற்றவனே யென்கின் றாளால்
மடற்பெரிய வாலின்கீ ழறநால்வர்க் கன்றுரைத்தா னென்கின் றாளால்
கடற்கருவி சூழ்ந்த கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ

பொழிப்புரை :

துன்புறுத்தி வெல்லுவதற்கரிய இராவணனைக் கயிலைமலையின்கீழ் வருத்தியவனே ! ஒளிவீசும் பெருமையை உடைய திருமேனியில் நீறு பூசியவனே ! பெரிய இலைகளை உடைய கல்லால மரத்தின் கீழிருந்து சனகர் முதலிய முனிவர் நால்வருக்கு ஒரு காலத்தில் அறத்தை உபதேசித்தவனே என்று கூறுகின்ற என்பெண் கடலின் தொகுதிகளாகிய உப்பங்கழிகள் சூழ்ந்த திருக்கழிப் பாலையின் பெருமானைத் தரிசித்தாளோ ?

குறிப்புரை :

அடர்ப்பு அரிய - கொன்று வெல்லுதற்கு எவராலும் மாட்டாத . இராவணனது திறல் உணர்த்தியவாறு . அருவரை - எடுத்தற்கு எளிதல்லாத கயிலாயம் . சுடர்த்திருமேனி , பெரிய திருமேனி - ` பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்அற நிறைகின்ற பரிபூரணானந்த ` மய ரூபம் . பவளம் போலும் அம்மேனியிற் பால் போலும் வெண்ணீற்றை அணிந்தவனே . மடல் - இலை . பெரிய ஆல் - சுத்த மாயையாகிய கல்லால் . அறம் - ` சிவதன்மம் ` ` அறங்கொண்டு சிவதன்மம் உரைத்த பிரான் ` ( தி .2 ப .43 பா .6). இருவர் , நால்வர் :- அகத்தியர் முதலியவரும் , சநகர் முதலியோரும் என்றிருதிறத்தர் . இருவர் :- திருமால் , நான்முகன் . ` அணிபெறு வடமர நிழலின் அமர் வொடும் அடியிணை இருவர்கள் , பணிதர அறநெறி மறையொடும் அருளிய பரன் ` ( தி .1 ப .20 பா .5). ஒருவர் :- திருநந்திதேவர்க்குரைத்த தும் உணர்த்துவர் . ` ஆல்வருக்கந் தனிலுயர்ந்த வயநிழற்கே தென் முகங்கொண்டறவோர் ஆய , நால்வருக்குள் இருவருக்கும் ஒருவருக் கும் நவின்றருளி நவிலொணாத , நூல்வருக்கம் ஒருவருக்கு நுவலாமல் நுவன்றான் `. ( திருக்குற்றாலப் புராணம் கடவுள் வாழ்த்து . 7 )
சிற்பி