திருக்கச்சியேகம்பம்


பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

கரவாடும் வன்னெஞ்சர்க் கரியானைக் கரவார்பால்
விரவாடும் பெருமானை விடையேறும் வித்தகனை
அரவாடச் சடைதாழ வங்கையினி லனலேந்தி
இரவாடும் பெருமானை யென்மனத்தே வைத்தேனே.

பொழிப்புரை :

பெருமானை மறைத்தலும் மறத்தலும் செய்து உலகப் பொருள்களில் திளைக்கும் வலிய நெஞ்சினை உடையவர்கள் உணர்தற்கு அரியவனாய் , வஞ்சனையில்லாத அடியவர் உள்ளத்தில் கலந்து கூத்து நிகழ்த்தும் பெருமானாய் , காளையை இவரும் திறனுடையவனாய் , பாம்புகள் படமெடுத்து ஆடவும் சடை தொங்கவும் , உள்ளங்கையில் தீயினை ஏந்தி இரவினில் கூத்தாடும் பெருமானை என் மனத்தில் நிலையாக வைத்துக் கொண்டேன் .

குறிப்புரை :

கரவு ஆடும் வல்நெஞ்சர்க்கு அரியானை - ( தனக்குச் ) சிறிதும் இடம் இல்லாதவாறு மறைத்தலும் மறத்தலும் செய்து உலகப் பொருளில் ஓடி ஆடும் வலிய நெஞ்சுடையவர்க்கு , உணர , உரைக்க , உள்ள தொண்டுசெய்து பணிய எளியனல்லாத திருவேகம்பனை . ` கரவிலா மனத்தராகிக் கைதொழுவார்கட்கு ... ஆடி இன்னருள் செய்யும் எந்தை ` ( தி .4 ப .58 பா .3). வலிய நெஞ்சிற் கரவு ஆடுகின்றது என்றாராயினும் , நெஞ்சியல்புணர இவ்வாறுரைக்கலாம் . ஏகம்பன் ஆடத்தக்க நெஞ்சினுள் ஆடத்தகாத கரவு ஆடுகின்றது எனலுமாம் . ( கருளன் - கள்ளன் .) கருள் - கரவு . உழுதல் - உழவு . வருதல் - வரவு , தருதல் - தரவு . உறுதல் - உறவு . அறுதல் - அறவு . நடுதல் - நடவு . ` கள்ளரோ புகுந்தீர் என்னக் கலந்துதான் நோக்கி நக்கு , வெள்ளரோம் என்று நின்றார் விளங்கிளம் பிறையனாரே ` என்னும் அருண் மொழியில் ( தி .4 ப .75 பா .9) கள்ளர் , வெள்ளர் என்பவற்றின் கருளர் , வெருளர் என்பவற்றின் மரூஉவேயாம் ). கரவார் - சதா சிவசிந்தனையாளர் . விரவு - கலப்பு . விரவாடல் - கலப்பை ஆளுதல் . வித்தகன் - ஞானசொரூபன் . சதுர்ப்பாட்டினனுமாம் . அரவு - பாம்பு . அங்கை - உள்ளங்கை . இரவு - கேவலாவத்தையில் . ` நள்ளிருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே ` ( தி .8 திருவாசகம் . 1).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

தேனோக்குங் கிளிமழலை யுமைகேள்வன் செழும்பவளம்
தானோக்குந் திருமேனி தழலுருவாஞ் சங்கரனை
வானோக்கும் வளர்மதிசேர் சடையானை வானோர்க்கும்
ஏனோர்க்கும் பெருமானை யென்மனத்தே வைத்தேனே.

பொழிப்புரை :

தேனை ஒத்து இனிமையதாய்க் கிளி மழலை போன்ற மழலையை உடைய உமாதேவியின் கணவனாய் , செழும் பவளம் போன்ற செந்நிறமேனியனாய்த் தழல் உருவனாய் , எல்லோருக்கும் நன்மை செய்பவனாய் , சிவந்த வானத்தை ஒத்த செஞ்சடையில் பிறையைச் சூடியவனாய்த் தேவர்களுக்கும் மற்றவர்களுக்கும் தலைவனாகிய பெருமானை என் மனத்தில் நிலையாக வைத்துக்கொண்டேன் .

குறிப்புரை :

தேன் நோக்கும் கிளிமழலையுமை - இத்தகைய இனிமை வாய்க்குமாறு யாதென்று தேன் நோக்கும் பெருமை வாய்ந்த ` குதலைமொழி மழலைக்கிளி ` போலும் உமையம்மையார் . கேள்வன் - கணவன் . இன்ப துன்பங்களைக் கேட்டற்குரியவன் என்னும் காரணம்பற்றிக் , கேள் , கேள்வன் , கேளிர் என்றனர் . ` ஏந்தெழில் மிக்கான் இளையான் இசை வல்லான் , காந்தையர் கண்கவர் நோக்கத்தான் வாய்ந்த நயனுடை இன்சொல்லான் கேள் எனினும் மாதர்க்கு அயலார்மேல் ஆகும் மனம் ` ( நீதிநெறிவிளக்கம் . 81 ). ` தன்னுடைக் கேள்வன் மகன் தகப்பன் ` ( தி .8 திருவாசகம் . 207). ` தன்கேளிர் துன்பம் துடைத்தூன்றுந்தூண் ` ( குறள் . 615 ). செழும் பவளம் திருமேனியை நோக்குமாம் ; தனக்கு அதன் நிறத்தின் நலம் வாய்ப்பது என்றென்று . அத்திருமேனி தழலின் உருவாம் வண்ணம் உடைய சங்கரன் . தழலின் உருவென்றது கொண்டுவெம்மை கருதாதிருக்கச் ` சங்கரன் ` ( இன்பம் செய்பவன் ) என்றருளினார் . வானோர் - திருவடி நிழலடைந்தவர் . ஏனோர் - அடைய முயல்பவர் . விண்ணேர் மண்ணோர் முதலியோர் எனல் சிறவாது . பெருமான் - பெருமகன் . கோமகன் - கோமான் . சேரன்மகன் - சேரமான் . மலையன்மகன் - மலையமான் . ( ஒருமை ). குருக்கள் மகார் - குருக்கள்மார் . செட்டி மகார் - செட்டிமார் . மகவர் - மகாஅர் . கிழவர் - கிழாஅர் . சிறுவர் - சிறாஅர் . ` கல்வியென் என்னும் வல்லாண் சிறாஅன் ` ( புறம் .336;325,334,382 ). ஆவூர் மூலங்கிழார் ( பன்மை ) என்பவற்றை நோக்குக .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

கைப்போது மலர்தூவிக் காதலித்து வானோர்கள்
முப்போது முடிசாய்த்துத் தொழநின்ற முதல்வனை
அப்போது மலர்தூவி யைம்புலனு மகத்தடக்கி
எப்போது மினியானை யென்மனத்தே வைத்தேனே.

பொழிப்புரை :

கைகளால் , அலரும் பருவத்து மொட்டுக்களையும் பூக்களையும் அர்ப்பணித்து விருப்போடு தேவர்கள் காலை நண்பகல் மாலை என்ற மூன்று வேளைகளிலும் தலையால் வணங்கித் தொழுமாறு நிலைபெற்ற முழுமுதற் கடவுளாய் எனக்கு எப்பொழுதும் இனியனாக உள்ள பெருமானை ஐம்புலன்களையும் உள்ளத்தால் அடக்கி , அபிடேக நீரையும் மலர்களையும் அர்ப்பணித்து என் மனத்தில் நிலையாக வைத்துக் கொண்டேன் .

குறிப்புரை :

கைப்போது மலர் தூவி - கையால் ( அரும்பும் ) போதும் மலரும் தூயிட்டு ,` அருப்போடு மலர்பறித்து இட்டு உண்ணாவூரும் .... காடே ` ( தி .6 ப .95 பா .5.) காதலித்து :- கருதல் என்பது காதல் என மருவிற்று . அப்பெயரடியாகப் பிறிதொரு தொழிற்பெயர் காதலித்தல் என்றுண்டாயிற்று . அதினின்று இவ்வினையெச்சம் அமைந்தது . ` முயற்சித்து ` என்றதுபோலும் குற்றமுடையதன்று . காதல் பெயராதலின் அது பெயரடியாலாம் வினை முதனிலையாதற்கு ` இ ` சேர்ந்து காதலி என்றாதற்கிடனுண்டு . அங்ஙனமாகாது முதல் தானே வினை முதனிலையாதலின் அதற்குச் ` சி ` அநாவசியம் ஆம் . ` கருதியது முடித்தல் ` ( சிறுபாண் . நச்சர் .) முப்போதும் :- காலை மாலை பகல் . நள்ளிரவொடு நாற்போது ஞானியர் சந்தி செய் காலம் . ` எப்போதும் ` என்றது சீவன் முத்தர்க்கு . முடி :- தலையும் தலையிலணிந்த மணிமுடியும் . வானோர்கள் :- நிலமிசை நீடுவாழ்வாரும் துறக்கத்தில் வாழ்வாரும் . எப்போதும் இனியானை ( ச் சிவாகமங்களில் விதித்த காலங்களாகிய ) அப்போது மலர்தூவி ஐம்புலனும் அகத்து அடக்கி என்மனத்தே வைத்தேன் . அப்போது மலர் - அவ்வேளையிற் பூத்த பூவுமாம் . பழம்பூ வாகாமை சிவாகம விதியிற் காண்க . முதலடியிற் குறித்த அப்போதும் மலரும் எனலுமாம் . அடக்கியது அகத்து . வைத்தது மனத்து . அகம் - உள் என்னும் துணையாம் . மனம் அந்தக்கரணத்தொன்று . அதனாற் கூறியது கூறலன்று . புலனடக்காத பூசையாற் பயனின்று .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

அண்டமா யாதியா யருமறையொ டைம்பூதப்
பிண்டமா யுலகுக்கோர் பெய்பொருளாம் பிஞ்ஞகனைத்
தொண்டர்தா மலர்தூவிச் சொன்மாலை புனைகின்ற
இண்டைசேர் சடையானை யென்மனத்தே வைத்தேனே.

பொழிப்புரை :

உலகங்களாய் , உலகங்களுக்குக் காரணனாய் அரிய வேதங்களாய் , ஐம்பெரும் பூதங்களின் பிண்டமாகவும் உலகத்தார்க்குக் கருத்துப் பொருளாகவும் உள்ளவனும் , தலைக் கோலத்தை உடையவனாய் , அடியவர்கள் மலர்களை அர்ப்பணித்துச் சொல்லால் ஆகிய பாமாலை புனைந்து அணிவிக்கின்ற , தலைமாலை அணிந்த சடையை உடைய பெருமானுமாயவனை என் மனத்தில் நிலையாக வைத்துக் கொண்டேன் .

குறிப்புரை :

அண்டமாயும் அவற்றின் ஆதியாயும் அருமறையாயும் ஐம்பெரும்பூதப் பிண்டமாயும் உலகுக்கு ஒரு பெய்பொருளாயும் உள்ளவன் . பிஞ்ஞகன் - தலைக்கோலத்தான் . துவண்டு அடிமை செய்பவர் தொண்டர் . துவளாதார் தொண்டர் என்னும் பெயர்ப் பொருளுக்கு ஏலார் . மலரும் ஆம் . அலரும் ஆம் . ` சொன்மாலை `:- ` கீர்த்தனாவளி ` என்பர் வடநூலார் . ` சொன்மாலை பயில்கின்ற குயிலினங்காள் ` ( தி . ப .12 பா .1) ` உரைமாலை எல்லாம் உடைய அடி ` ( தி .6 ப .6 பா .7) ` நாயேன் குழைத்த சொன்மாலை கொண்டருள் போற்றி ` ( தி .8 திருவா . 4) புனைகின்ற சடை . சேர்சடை . தூவிச் சொல்லும் மாலையுமாம் . புனைவதுசடை . சேர்வது இண்டை . இண்டை :- இணையடை ` என்பதன் மரூஉ . சுமையடு என்பது சும்மாடு என மருவியதறிக . இண்டைசேர் சடையிற் புனைகின்றமையாற் சொன்மாலை யுயர்ச்சி விளங்கும் . பூத்தூவுதலும் போற்றுரைத்தலும் இன்றியமையாதன .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

ஆறேறு சடையானை யாயிரம்பே ரம்மானைப்
பாறேறு படுதலையிற் பலிகொள்ளும் பரம்பரனை
நீறேறு திருமேனி நின்மலனை நெடுந்தூவி
ஏறேறும் பெருமானை யென்மனத்தே வைத்தேனே.

பொழிப்புரை :

கங்கை தங்கிய சடையினனாய் , ஆயிரம் திருநாமங்களை உடைய தலைவனாய் , பருந்துகள் படிகின்ற இறந்து பட்ட மண்டையோட்டில் பிச்சை ஏற்கும் மேம்பட்ட இறைவனாய் , திருநீறு அணிந்த திருமேனியை உடைய தூயோனாய் நீண்ட வாலினை உடைய காளையை இவரும் பெருமானை என்மனத்தில் நிலையாக வைத்துக் கொண்டேன் .

குறிப்புரை :

ஆறு - கங்கையாறு ` எண்ணாயிரம் கோடி பேரார் போலும் ` ` ஆயிரம் பேருகந்தானும் ஆரூரமர்ந்த அம்மான் ` ` பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மான் `. பேர் :- பெயர் என்பதன் மரூஉ . பாறு - உலர்தல் , வற்றுதல் . தலை - பிரம கபாலம் . பலி - பிச்சை . பரம்பரன் - விண்ஆளும் தேவர்க்கும் மேலாயவேதியன் . நீறு - வினைவளம் நீறுசெய்வது ( தி .8 திருக்கோவை . 117). தூவி - வால் . ` வாலுடை விடையாய் உன்றன் மலரடி மறப்பிலேனே ` ( தி . 4 ப .63 பா .9). ஏறு - விடை . ` ஏறேறும் பெருமான் ` என்றதால் . ஏறும் காரணம் பற்றியும் ஏறெனப் பெயர் ஆயிற்று எனலும் கூடும் .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

தேசனைத் தேசங்கள் தொழநின்ற திருமாலால்
பூசனைப் பூசனைக ளுகப்பானைப் பூவின்கண்
வாசனை மலைநிலம்நீர் தீவளியா காசமாம்
ஈசனை யெம்மானை யென்மனத்தே வைத்தேனே.

பொழிப்புரை :

ஒளிவடிவினனாய் , உலகங்கள் வழிபடுமாறு உள்ள திருமாலால் வழிபடப்படுபவனாய் , அடியார்கள் செய்யும் வழிபாட்டை உகப்பவனாய் , பூவின்கண் நறுமணம் போல எங்கும் பரந்திருப்பவனாய் , மலைகளாகவும் ஐம் பூதங்களாகவும் விளங்குகின்றவனாய் , எல்லோரையும் அடக்கி ஆள்பவனாய் , எங்கள் தலைவனாய் உள்ள பெருமானை என் மனத்தில் நிலையாக வைத்துக் கொண்டேன் .

குறிப்புரை :

தேசன் - ஒளியுருவானவன் . ` மெய்ச் சுடருக்கெல்லாம் ஒளிவந்த பூங்கழல் ` ( தி .8 திருவாசகம் . நீத்தல் . 15). ` அருக்கனிற் சோதியமைத்தோன் ` ( தி ,8 திருவாசகம் . திருவண்டப்பகுதி ). தேசங்கள் - திருமால் ஆட்சிக்குட்பட்ட புவனங்கள் . பூசனை :- பூசிக்கப் பெறுவோனை . வினைக்குறிப்பாலணையும் பெயர் ; செயப்பாட்டுப் பொருளில் நின்றது . பூசனைகள் - வழிபாடுகள் . உகப்பான் - விரும்புவோன் . பூவின்கண் வாசனை - ` பூவினில் வாசம் புனலிற் பொற்புப்புதுவிரைச் சாந்தினினாற்றத்தோடு , நாவினி பாடல் நள்ளாறுடைய நம்பெருமான் ` ( தி .1 ப .7 பா .4). ` பூவாகிப் பூவுக்கோர் நாற்றம் ஆகி ` ( தி .6 ப .94 பா .8). ` பூவில் வாசத்தை ( தி .7 ப .68 பா .3). மலை நிலத்திலடங்குமேனும் . தனியே சொல்லும் வழக்குப் பயிற்சி நோக்கி அதன் சிறப்புணர்க . ` ஏழுலகுமாயினான்காண் ` ` ஏழ்கடலும் சூழ்மலையும் ஆயினான்காண் ` ( தி .6 ப .8 பா .10) ` மலையானை மாமேரு மன்னினானை ` ( தி .6 ப .19 பா .10). ` மலையானை வரிமலையன்றுரித்தான் ` ( தி .6 ப .88 பா .7). ` மண்ணாகி விண்ணாகி மலையும் ஆகி ` ( தி .6 ப .94 பா .2). ஐம்பெரும் பூதங்களும் கூறப்பட்டன . இனம்பற்றி ஏனைய மூன்றும் ( இருசுடரும் இய மானனும் ) கொள்க . ` இருநிலனாய்த் ... அட்டமூர்த்தி ` ( தி .6 ப .9 பா .1).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

நல்லானை நல்லான நான்மறையோ டாறங்கம்
வல்லானை வல்லார்கண் மனத்துறையு மைந்தனைச்
சொல்லானைச் சொல்லார்ந்த பொருளானைத் துகளேதும்
இல்லானை யெம்மானை யென்மனத்தே வைத்தேனே.

பொழிப்புரை :

பெரியவனாய் , மேம்பட்ட நான்மறைகளும் ஆறு அங்கங்களும் வல்லவனாய் , தன்னை உள்ளவாறு உணரவல்லார்களுடைய உள்ளத்தில் தங்கும் வலியவனாய் , வேத வடிவினனாய் , வேதத்தில் நிறைந்திருக்கும் பரம்பொருளாய் , இயல்பாகவே களங்கம் ஏதும் இல்லாதவனாய் , எங்கள் தலைவனாய் உள்ள பெருமானை என் மனத்தில் நிலையாக வைத்துக் கொண்டேன் .

குறிப்புரை :

நல்லானை - சிவனை . மங்களம் . நலம் . ` குறைவிலா மங்கலகுணத்தன் ` ( காஞ்சிப்புராணம் ) நல்லான - நலத்தனஆகிய , ஈண்டு நல் என்னும் முதனிலை நன்மையன என்னும் பொருட்டு . நான்மறை :- எழுத்ததிகாரத்துப் பாயிரத்தின் உரைக்கண் நச்சினார்க்கினியர் எழுதியவற்றைக் காண்க . வல்லானை - அறிவிற்கறிவாய் நின்றுணர்த்த வல்லவனை . வல்லார்கள் - அங்ஙனம் உணர வல்லவர்களுடைய . மைந்தனை - வலிமையுடையவனை . சொல்லானை - சொல்லுருவாகிய தனது ஆற்றலாய்த் தோன்றுவானை . பொருளானை - பொருளுருவாகிய தன்னை . துகள் ஏதும் இல்லானை - இயல்பாகவே துகளின் நீங்கிய உணர் வினனை . ` துகள் அறுபோதம் ` பசுத்துவம் நீங்கிய ஆன்மாக்களுக்கு உளதாவது ( ஆகந்துகம் ). துகளின்மை பதியின் இயல்பு ( சகசம் , சுவபாவிகம் ). எம் மகனை - எம் இறைவனை . ` எம்மான் ` மரூஉ .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

விரித்தானை நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள்
புரித்தானைப் பதஞ்சந்திப் பொருளுருவாம் புண்ணியனை
தரித்தானைக் கங்கைநீர் தாழ்சடைமேன் மதின்மூன்றும்
எரித்தானை யெம்மானை யென்மனத்தே வைத்தேனே.

பொழிப்புரை :

சனகர் முதலிய நால்வருக்கு வேதப் பொருள்களை வெவ்வேறு விதங்களில் விரித்து உரைத்தவனாய் , வேதங்களால் பரம் பொருளாக விரும்பப்பட்டவனாய் , சொற்களும் , சந்தியால் ஆகிய தொடர்களும் அவற்றின் பொருளுமாக உள்ள நல்வினை வடிவினனாய் , தாழ்ந்த சடைமுடி மீது கங்கை நீரை ஏற்றவனாய் , மும்மதில்களையும் எரித்தவனாய் உள்ள எம் பெருமானை என் மனத்தே வைத்தேனே .

குறிப்புரை :

நால்வர் ( அகத்தியர் முதலோர் சநகாதியர் ) க்கு வெவ்வேறு வேதங்கள் விரித்தவனை . ` வெவ்வேறு ` என்பது வேதங்கட்கும் , விரித்தற்கும் பொது . புரித்தல் - விரும்பச் செய்தல் . பிரிதல் என்பதன் மரூஉவாயின் பதங்களைப் பிரித்தல் என்றாகும் . சந்தி - புணர்ச்சி . பதப்பொருளும் , தொடர்ப்பொருளும் கொள்க . சொல்லுருவாதலும் பொருளுருவாதலும் மேல் உள்ள திருப்பாடலிலும் உணர்த்தப்பட்டன . புண்ணியன் :- ` புண்ணியனைப் பூசித்த புண்ணியத்தினாலே ` ( சித்தியார் .) ` புண்ணியம் (- சிவபூசை ) செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு ` ( தி .10 திருமந்திரம் ). தாழ் (- தொங்கிய ) சடைமேல் கங்கைநீர் தரித்தானை (- தாங்கியவனை ). திரிபுரம் எரித்தவனை .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

ஆகம்பத் தரவணையா னயனறிதற் கரியானைப்
பாகம்பெண் ணாண்பாக மாய்நின்ற பசுபதியை
மாகம்ப மறையோது மிறையானை மதிற்கச்சி
யேகம்ப மேயானை யென்மனத்தே வைத்தேனே.

பொழிப்புரை :

பத்து அவதாரங்கள் எடுத்த , பாம்புப் படுக்கை உடைய திருமாலால் அறிய இயலாதவனாய் , ஒருபாகம் பெண்பாகமாகவும் மறுபாகம் ஆண்பாகமாகவும் , நிலைபெற்ற ஆன்மாக்கள் தலைவனாய் , பெரிய தூண்போல அசைக்கமுடியாத , ( என்றும் நிலைபெற்ற ) வேதங்களை ஓதும் தலைவனாய் , மதில்களை உடைய காஞ்சி நகரில் ஒற்றை மாமர நிழலில் உறையும் பெருமானை என் மனத்து வைத்தேனே .

குறிப்புரை :

ஆகம் - உடம்பு . பத்து ஆகம் - பத்துடம்பு . தசாவதாரம் . அரவணையான் - பாம்பணை மேல் அறிதுயில் புரிபவன் . அயன் - திருமால் . அறிதற்கு அரியான் - மண் அகழ்ந்தும் விண் பறந்தும் காண்டற்கு எளியனாகாதவன் . பெண் பாகமும் ஆண் பாகமும் ஆகி , பசுக்களுக்கு அம்மையப்பனாய் நின்ற முழுமுதல்வன் . மா - பெரிய . கம்பம் - நடுக்கத்தை விளைக்கும் . மறை ஓதும் இறையானை - வேதங்களை உயிர்கள் உய்யும் பொருளாய் ஓதியருளிய கடவுளை . கச்சித் திருமதில் உயரியது . ஏகம்பம் - ஒரு மா நிழல் .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

அடுத்தானை யுரித்தானை யருச்சுனற்குப் பாசுபதம்
கொடுத்தானைக் குலவரையே சிலையாகக் கூரம்பு
தொடுத்தானைப் புரமெரியச் சுனைமல்கு கயிலாயம்
எடுத்தானைத் தடுத்தானை யென்மனத்தே வைத்தேனே.

பொழிப்புரை :

தன்னை எதிர்க்க நெருங்கி வந்த யானையைக் கொன்று அதன் தோலை உரித்தவனும் , அருச்சுனனுக்குப் பாசுபதப் படை நல்கியவனும் , மேருமலையையே வில்லாகக் கொண்டு கூரிய அம்பினை மும்மதில்களும் எரியுமாறு செலுத்தியவனாய் , சுனைகள் நிறைந்த கயிலாய மலையைப் பெயர்க்க முற்பட்ட இராவணனை நசுக்கி செயற்பட முடியாதவாறு தடுத்தவனுமான பெருமானை என் மனத்தே வைத்தேனே .

குறிப்புரை :

அடுத்த ஆனை உரித்தானை - யாகத்தில் தோன்றித்தன்னை அடுத்த யானையை உரித்துப் போர்த்த தோலாடையனை . ஆனையை அடுத்து உரித்தான் என மாற்றினும் பொருந்தும் . அருச்சுனனுக்குப் பாசுபதாத்திரம் அருளிய வரலாறு பிரசித்தம் . குலவரை - மேருமலை . சிலை - சிலை என்னும் மரத்தாற் செய்யப் பெற்ற வில்லுக்குப் பெயராயிற்று . அதுவே மேருவாலானதற்கும் ஆயிற்று . கூர் அம்பு :- பண்புத்தொகை . கூர்த்த அம்பெனின் வினைத் தொகையாம் . புரம் எரிய அம்பு தொடுத்தான் . கயிலாய மலைக்குச் சுனை சாதியடை . வடகயிலையில் அதற்கேற்ற சுனையிருத்தலின் உரியதும் ஆகும் . எடுத்தானை - எடுத்த இராவணனை . தடுத்தானை - தடுத்து அறிவுறுத்தி ஆட்கொண்ட சிவபிரானை .
சிற்பி