பொது - திருஅங்கமாலை


பண் :சாதாரி

பாடல் எண் : 1

தலையே நீவணங்காய் - தலை
மாலை தலைக்கணிந்து
தலையா லேபலி தேருந் தலைவனைத்
தலையே நீவணங்காய்.

பொழிப்புரை :

தலைகளால் ஆகிய மாலையைத் தலையில் அணிந்து மண்டையோட்டில் எடுக்கும் பிச்சைக்கு உலாவும் தலைவனைத் தலையே! நீ வணங்குவாயாக.

குறிப்புரை :

தலையே நீ வணங்கு; தலைக்குத் தலைமாலையை அணிந்து தலையிலே பலிதேரும் தலைவனைத் தலையே நீ வணங்கு. வணக்கம் தலைவனுக்கே உரியது. மகாநாராயணோபநிடதம் சிவபிரானுக்கே எவ்வுயிர்களின் வணக்கமும் உரியது என்கின்றது. பலிதேர்வோன் எனினும் தலைவனே. ஏனையோர் தேரும்பலி தத்தம் வறுமையைக் குறித்து. (தாம் உய்யும் பொருட்டு). இறைவன் பலிதேர்வது உயிர்கள் உய்யும் பொருட்டு. பிறர் பலி தேர உதவுங் கருவி, அவர் வறுமை நிலைக்கேற்ற (பிச்சைப்) பாத்திரம். சிவபிரானுக்கோ பிரமகபாலம் பிச்சைப் பாத்திரம் ஆதலின், அவனது தலைமை புலனாகும். அது மட்டுமோ? தலையில் அணிந்த மாலை, நூறு கோடி பிரமர்களும் ஆறு கோடி நாராயணரும் ஏறு கங்கை மணலெண்ணின் அளவுடைய இந்திரரும் ஆகிய முத்திறத்தர் தலைகளைக் கோத்தவை. `தலைக்குத் தலைமாலை அணிந்த தென்னே` (தி.7 ப.4 பா.1). இத் தலைமை சிவனடியார்க்கன்றி, `செத்துச் செத்துப் பிறப்பதே தேவென்று பத்திசெய் மனப் பாறைகட்கு ஏறுமோ?` ஏறின், அவர்க்கு மாதேவன் அலால் தேவர் மற்று இல்லையே. அத்தலைவனுக்கே வணக்கம் உரியது. அதனால், தலையே நீ வணங்கு. அவனை நேரே வணங்காமல், வேறு எங்கு வணங்கினும், அங்குத் தாபரமோ சங்கமமோ அவனது உருவாய் நிற்கும். அத் தாபர சங்கமங்கள் என்ற இரண்டு உருவில் நின்று நீ செய்யும் வணக்கத்தை (பூசையை)க் கொண்டு அருளை வைப்பவன் மாபரனே. `யாவரும் சென்று ஏத்தும் ஆமாத்தூரம்மான் அத்தேவர் தலைவணங்கும் தேவர்க்கும் தேவனே` (தி.2 ப.44 பா.6). `கானப்பேர் தலையினால் வணங்குவார் நாளும் நாள் உயர்வதோர் நன்மையைப் பெறுவரே` (தி.3 ப.26 பா.8). `தலையினால் வணங்குவார் தவம் உடையார்களே` (தி.3 ப.26 பா.9). இத் திருமுறைக் கருத்தே கொண்டு, `எண்குணத்தான் தாளை வணங்காத் தலை கோளில் பொறியிற் குணம் இலவே` என்றார் பொய்யாமொழியார். ஆசிரியரது திருத்தலை, ஏனையோர் தலையும் பெருவிரல் இறை ஊன்றலும் பொறாது பற்கழல அங்காந்து அலறி வீழ்ந்த வரைபொரு தோளரக்கன் தலையும் போலாது இருவரும் ஒருவனாய அவ்வள்ளல் திருவடி சுமந்து கொண்டு திரியும் (தி.4 ப.75 பா.10) பெருமையதாதலின், `தலையே` என்று அதன் பயிற்சி தோன்ற விளித்தார். ஏனைக் கண், செவி முதலியவற்றிற்கும் இவ்வாறு பொருந்துவன கொள்க. இருமுறை கூறியதன் கருத்து:- வணங்கிப் பயின்ற தலை முதலிய உறுப்புகளை யுடையாராயினும், தமக்குத் தாமே தூண்டிக்கொள்ளும் வகையில் ஒருமுறைக்கு இருமுறை தம் வாயால் ஏவிக்கொண்டு, தம் உடலின் பயனைத் தம் தலைவன் வழிபாட்டுத் திறத்தில் நிலைபெறுவித்துக்கொள்வாரானார் தாண்டகச் சதுரர். `தலைசுமந்து இருகை நாற்றித் தரணிக்கே பொறைய தாகி நிலையிலா` (தி.4 ப.69 பா.2)ப் பொய்வாழ்வு வேண்டா. மெய் வாழ்வு வேண்டின், `தலையே நீ வணங்காய்` என்று ஏவுகின்றார்.

பண் :சாதாரி

பாடல் எண் : 2

கண்காள் காண்மின்களோ - கடல்
நஞ்சுண்ட கண்டன்றன்னை
எண்டோள் வீசிநின் றாடும்பி ரான்றன்னைக்
கண்காள் காண்மின்களோ. 

பொழிப்புரை :

கண்களே! கடல்விடத்தை உண்ட நீலகண்டனாய் எட்டுத் தோள்களையும் வீசிக் கொண்டு நின்ற நிலையில் ஆடும் பெருமானை நீங்கள் காணுங்கள்.

குறிப்புரை :

காட்சியின் பயன், காணும் வினைமுதல்வனுக்குத் தீர்த்தற்கு அரியதொரு துயரின் நீக்கம். உயிர்கள் அடிமைகள். அவை உடையவனைக் காண்டலின் பயன் தம் பிறவி நீக்கம். அப்பெருந் துன்பம் போக்கவல்லான் பிறவியில்லாதவனாதல் வேண்டும். `பிறவா யாக்கைப் பெரியோன்` இறவாமை திண்ணம். அது நஞ்சுண்டும் சாவாமையால் உறுதியாயிற்று. ஆகவே,`கண்காள் கடல் நஞ்சுண்ட கண்டன் றன்னைக் காண்மின்கள்` என்றருளினார். ஆட்டம் எனப்படுவன பற்பல உள. அவையெல்லாம் பிறப்பு, நிலைப்பு, இறப்பு, ஒளிப்பு, அளிப்பு என்னும் ஐந்தனுள் அடங்கும். `ஐந்து நலமிகு தொழில்களோடும் நாடகம் நடிப்பன் நாதன்` (சித்தியார்.5:-7) `பஞ்சகிருத்திய தாண்டவம்` என்றலும் உணர்க. உயிர்களுடைய பிறப்பிறப் பாட்டம் ஒழிய உடையவனது அருளாட்டத்தை என்றும் மறவாது காண்டல் வேண்டுதலின், `எண் தோள் வீசி நின்று ஆடும் பிரான்றன்னைக் கண்காள் காண்மின்கள்` என்றருளினார். `குனித்த புருவம் முதலிய ஐந்தும் திருவாய் பவளத் திருமேனி இரண்டும் ஆகிய ஏழும் காணப்பெற்றவர்க்குப் பிறப்பில்லை என்பதுறுதியாதலின், மன்றாடற் காட்சி அன்றாடம் பெற்று உவக்க, நீங்கும் பிறவியும் நீங்காதிருக்க வேண்டும் என்று வெளியிட்டருளினார். `சிற்றம்பலத் தரன் ஆடல் கண்டாற் பீழையுடைக் கண்களால் பின்னைப்பேய்த் தொண்டர் காண்பதென்னே` (தி.4 ப.80 பா.1) ஆடல் அன்றிக் கண்கொண்டு காண்பது யாதும் இல்லை.

பண் :சாதாரி

பாடல் எண் : 3

செவிகாள் கேண்மின்களோ - சிவன்
எம்மிறை செம்பவள
எரிபோல் மேனிப்பி ரான்திற மெப்போதும்
செவிகாள் கேண்மின்களோ.

பொழிப்புரை :

செவிகளே! சிவபெருமானாகிய எங்கள் தலைவனாய், செம்பவளமும் தீயும் போன்ற திருமேனியனாகிய பெருமானுடைய பண்புகளையும் செயல்களையும் எப்பொழுதும் கேளுங்கள்.

குறிப்புரை :

செவிகாள்! சிவனும், எம் இறையும், செம்பவளமும் எரியும் போன்ற மேனிப் பிரானும் ஆகிய முழுமுதல்வன் திறத்தை எப்போதும் கேண்மின்கள். குறைவிலா மங்கல குணத்தன் திறம் கேட்டலே முழுப்பயன் ஆகிய துன்ப நீக்கமும் இன்பப் பேறும் விளைக்கும் என்பார் சிவன் என்றும் இவ்வடிமையின் செவிகள் ஆண்டவன் திறமே கேட்கற்பாலன என்பார் `எம் இறை` என்றும், கண்ணுக்குப் பிடிக்காதவர் திறத்தைக் காது கேளாது; கண் களிக்கக் காணத்திகழ்வார் திறத்தையே காதுகள் கேட்க விரும்பும் ஆதலின், `செம்பவளம்போல், எரிபோல் மேனி` என்றும், உயிர்க்குயிராய் நின்று என்றும் பிரியாதவனது திறத்தைக்கேட்டலே உயிர்க்கு உய்தி தருமென்பார், `பிரான்` என்றும், சிவாகமத்திறம், சைவத்திறம், முப்பொருட்டிறம், ஈசன் திறம் முதலிய எல்லாம் அடங்கத் `திறம்` என்றும், பாசிபடுகுட்டத்திற் கல்லினை விட்டெறியப்படும் பொழுதின் நீங்கி அது விடும்பொழுதிற் பரக்கும்; ஆசுபடும் மலம் மாயை அருங்கன்மம் அனைத்தும் அரனடியை உணரும்போது அகலும்; (உணர்தலைவிட்ட) பின் அணுகும்`; அதனால், `நேசமொடும் திருவடிக் கீழ் நீங்காதே தூங்கும் நினைவுடையோர் நிலை அதுவேயாகி நின்றிடுவர்; ஆசையொடு அங்கும் இங்கும் ஆகி அலமருவோர் (அறுத்தற்கு) அரும் பாசம் அறுக்கும் வகை` இடை விடாதும் இரண்டாட்டாதும் ஈசன் திறமே பேணுதல் என்பார் `எப்போதும்` என்றும், கற்றலிற் கேட்டலே நன்று என்பார் (முன்னும், பின்னும்) கேண்மின்கள்! என்றும் பணித்தருளினார். ஆளாகாதும், ஆளானாரை அடைந்துய்யாதும், மீளா ஆட்செய்து மெய்மையுள் நில்லாதும் வாளா மாய்ந்து மண்ணாகிக் கழியும் தொழும்பர் செவி தோளாத சுரை (தி.5 ப.90 பா.3). `இளையகாலம் எல்லாம் எம்மானை அடைகிலாத் துளையிலாச் செவி(த் தொண்டர்)` (தி.5 ப.66 பா.3) எனப் பழிக்கப்படாமை வேண்டி, செவிகாள் பிரான் திறம் எப்போதும் கேண்மின்கள் என்றருளினார்.

பண் :சாதாரி

பாடல் எண் : 4

மூக்கே நீமுரலாய் - முது
காடுறை முக்கணனை
வாக்கே நோக்கிய மங்கைம ணாளனை
மூக்கே நீமுரலாய். 

பொழிப்புரை :

மூக்கே! சுடுகாட்டில் தங்குகின்ற முக்கண்ணனாய்ச் சொல் வடிவமாய் இருக்கும் பார்வதி கேள்வனை நீ எப்பொழுதும் போற்றி ஒலிப்பாயாக.

குறிப்புரை :

முரலாய் - முரல்வாய். (மூக்கால் ஒலிப்பாய்) `சூழ்த்து மதுகரம் முரலும் தாரோய்` தி.8 திருவாசகம். முதுகாடு:- பழங்காடு. சுடுகாடு. அதற்கு முதுமை, தன்கண்வரும் பிணங்களின் முதுகைத் தான் பார்த்துத் தன் முதுகைப் பிறிதொன்று பாராதவாறு நெடுங்காலம்நிற்றல். (புறம்.356).
வாக்கே நோக்கிய மங்கை - வாக்கு (வாசகம்) மங்கை. வாச்சியம் - மங்கைமணாளன். சொல்:- மங்கையுமை. பொருள்:- மணாளசிவம் முரலுதல் - மூக்கின்றொழில். உயிர்ப்புக்கால் (பிராணவாயு) மூக்கின் வழி வெளிப்படுவது. அதனியக்கம் இன்றேல், உடலின் நீங்கும் உயிர். உடல் முதுகாட்டிற் கிடத்தியெரிக்கப்படும். அங்கு உறையும் முக்கண்ணனை உடலோடிருக்கும்போதே முரன்று கொண்டிருப்பின், அவனருளால், இறவாது வீடு பெற்று இன்புறலாம் என்பார் `முதுகாடுறை முக்கண்ணனை மூக்கே நீ முரலாய்` என்றார்.
மூக்குவழி யியங்கும் மூச்சு, உலகில் இரவியும் திங்களும் எரியும் இன்றேல் நின்றொழியும். அம் மூன்றனையும் இயக்கியும் உருவெனவும் கண்ணெனவும் கொண்டும் உயிர்கட்கருளும் இறைவனை முரல்வாய் என்பார் `முக்கணனை` என்றார். இறைவனைக் குறித்த தாகலின், வாக்கால் உரைத்தபடி விளங்கிக் கொள்ளும் நிலைமை மூக்கால் முரன்றாலும் அவனுக்கு இனிது விளங்குவது இயல்பும் எளிமையும் ஆம் என்பார், `வாக்கே நோக்கிய மங்கை மணாளனை மூக்கே நீமுரலாய்` என்றார்.
சொல்லும் பொருளும் ஆனான் அம்மை யப்பனே எனலும் அதனால் விளக்கலாயிற்று. `சிவ சிவ` என்னும் வாக்கே அவன் ஆன்மாக்களிடத்திலிருந்து நோக்கியிருக்கின்றான். அவன் அத்திருவைந்தெழுத்து நினைவோடு, வாயால் உரையாது மூக்கால் முரல்கினும், அவனது நோக்கம் அதுவாதலின், மங்கை மணாளனாம் தனது மங்கலகுண நிறைவாகிய சிவாநந்தாநுபவத்தை வழங்குவதில் ஒருபோதும் தவறான் என்பார், `மங்கைமணாளனை முரலாய்` என்றார். மணாளன் நோக்குவது வாக்கின் பொருளையுடைய மூக்கின் முரற்சி. மங்கை நோக்குவது அம்முரற்சியாயமைந்த வாக்கு என்பாராய் `மூக்குவாய் செவிகண்ணுடலாகி.....காக்கும் நாயகன் கச்சியேகம்பனே` என்புழி மூக்கினை முற்கூறினார். அதன் கருத்துணர்க.
வாக்கே நோக்கிய மங்கைமணாளன், உயிர்ப்பாய்ப் புறம் போந்தும் அகம்புக்கும் உயிரினுள்ளே நிற்பான். அவ்வீசனுக்கு அவ்வுயிர்ப்பியங்கும் வாசலாதல் தோன்ற `மூக்கே` என்றார். `மூக்கினால் முரன்றோதி அக்குண்டிகை தூக்கினார் குலம்` (தி.5 ப.58 பா.2). `ஞமணஞாஞண ஞாண ஞோணமென் றோதி` (தி.7 ப.33 பா.9) வீண்காலம் போக்குமவர் போலாது முக்கணனை முரல்வாய் என்றார். நோக்கம் பிறிதொன்றன்கண் இன்றி வாக்கின்கண்ணதேயாதலின், மூக்கின் முரற்சியும் வாக்கின் வரும் விளக்கத்தை விளைவிக்கும் என்பார் மூக்கே நீ முரலாய் என்றார் எனலுமாம்.

பண் :சாதாரி

பாடல் எண் : 5

வாயே வாழ்த்துகண்டாய் - மத
யானை யுரிபோர்த்துப்
பேய்வாழ் காட்டகத் தாடும்பி ரான்றன்னை
வாயே வாழ்த்துகண்டாய். 

பொழிப்புரை :

வாயே! மதயானையின் தோலைப் போர்த்துப் பேய்கள் வாழும் சுடுகாட்டில் கூத்து நிகழ்த்தும் பெருமானை நீ எப்போதும் வாழ்த்துவாயாக.

குறிப்புரை :

`வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் தாழ்த்தச் சென்னியும் தந்த` அத் தலைவனையே (தி.5 ப.90 பா.7). `வாழ்த்த வாயினை வைத்தார்` (தி.4 ப.30 பா.3) என்றுணர்ந்து வாழ்த்திப் பயின்ற தமது பெருமை தோன்ற `வாயே` என விளித்தார். இருந்தமிழே படித்தும் இறைவனுக்கு ஆளாகும் பேற்றினை உறாத ஆயிரம் சமணர் வாய் அவர்களை அழித்தற்குப் பயன்பட்டன. (தி.5 ப.58 பா.9) அவ்வெவ்வாய் போல்வது அன்று தம் செவ்வாய் என்பது தோன்ற விளித்ததுமாம். வாழ்த்துவதன் பயன் தமக்கு வாழ்ச்சி யெய்துதல். வாழ்த்தப் பெறுவோனால் வாழ்த்துவோற்கு வாழ்ச்சியுறாதேல் அவ் வாழ்த்துப் பயனிலாததாம். `வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான் மனம்நின்பால் தாழ்த்துவதும் தாம் உயர்ந்து தம்மையெல்லாம் தொழவேண்டிச் சூழ்த்து மதுகரமுரலும் தாரோயை நாயடியேன் பாழ்த்த பிறப்பறுத்திடுவான் யானும் உன்னைப் பரவுவனே` என்பதால், மணிவாசகரும், சிற்றின்ப வாழ்வுறுதலும் பிறப்பறுத்துப் பேரின்ப வாழ்வுறுதலும் ஆகிய இரண்டும் வாழ்த்துப் பயன் என்று அருளியவாறு உணர்க. அப்பயன்களுள் யாது வேண்டினும் அது கொடுக்கவல்லான் சிவபிரானே யாவன். பிறரெல்லாரும் அழிவுறாத மெய்யினரல்லர். தான் ஒருவனே அழியாத மெய்ப்பொருள் என்று தன்னை அறியாத உயிரெல்லாம் உணர்ந்து தன்னையே வாழ்த்தி வாழ, ( சிந்தாமணி 2787. `வேள்வி` உரை.) மதயானையுரி போர்த்தும் மாளாதும் (நஞ்சுண்டும் சாவாதும்) நிலையாக விளங்குகின்றவன் என்பார் `மதயானையுரி போர்த்து` என்றார். வாழ்த்தி வாழாதவர் உடலுக்கு இடமான காட்டிலே வாழும் பேய் அஞ்ச ஆடும் பிரானை வாழ்த்துவதே அக்காடு போகாதவாறு வீடுபேறு நல்கும் என்பார். `பேய் வாழ் காட்டகத்தாடும் பிரான்` என்றார். வாழ்:- தன்வினை. வாழ்த்து:- பிறவினை. வாழ்த்து வோர்க்கே வாழ்வுண்டு என்னும் உண்மையை உணர்ந்த மக்கள், தம்முள் இருக்கும் இறைவனை வாழ்த்தும் வழக்கம் உடைமை அநாதியாக நிலவுகின்றது. நாத்திகரும் இதை அறியாது செய்து வருகின்றனர். அமண்கையர் எனைக் கல்லினோடு பூட்டி நீர்புக ஒல்லை நூக்க, நெல்லு நீள்வயல் நீலக்குடியரன் நல்ல நாமம் என் வாக்கினால் நவிற்றி உய்ந்தேன் நன்றே. `நாள்தொறும் நல்குவான் நலன்` என்புழிப் போல் இங்குப் பிரிக்க. நன்றே ஆகிய அனுபவம் காட்டித் தெளிவிப்பாராய், `வாயே வாழ்த்து` என்று விளித்து ஏவியருளினார். `நாக்கொண்டு பரவும் அடியார்வினைபோக்கவல்ல புரிசடைப்புண்ணியன்` `நாக்கைக்கொண்டு அரன்நாமம் நவில்கிலார் காக்கைக்கே இரையாகிக் கழிவர்` என்பார் வாயே வாழ்த்து என்றார்.

பண் :சாதாரி

பாடல் எண் : 6

நெஞ்சே நீநினையாய் - நிமிர்
புன்சடை நின்மலனை
மஞ்சா டும்மலை மங்கை மணாளனை
நெஞ்சே நீநினையாய். 

பொழிப்புரை :

நெஞ்சே! மேல் நோக்கிய செஞ்சடையை உடைய புனிதனாய், மேகங்கள் அசையும் இமயமலை மகளாகிய பார்வதி கேள்வனை எப்பொழுதும் நினைப்பாயாக.

குறிப்புரை :

பிஞ்ஞகன் பேர் மறப்பன்கொலோ என்று கிடந்து மறுகிடும் உள்ளம் என்பார் `நெஞ்சே?` என்று விளித்து `நீ நினையாய்` என வினாக்குறிப்புணரக் கூறினும், `விச்சையும் வேட்கையும் நிச்சல் நீறணிவாரை நினைப்பதே` (தி.5 ப.92 பா.8) `வந்தவரவும் செலவும் ஆகி மாறாது என் உள்ளத்து இருந்தார்` (தி.6 ப.16 பா.9) அவரை நினையாது ஒருபோதும் இருந்தறியேன்` `கவலைக்கடல் வெள்ளத் தேனுக்கு விளைந்த தெள்ளத்தேறித் தெளிந்து தித்திப்பதோர் உள்ளத் தேறல்` (தி.5 ப.91 பா.9) `உள்ளமே தகழி` (தி.4 ப.75 பா.4) `நெஞ்சத்துள் விளக்கு` (தி.4 ப.29 பா.2) `சிந்தையுட் சிவம் ` (தி.4 ப.29 பா.4) (தி.5 ப.48 பா.5) `நினைப்பவர் மனம் கேயிலாக் கொண்டவர்` (தி.5 ப.2 பா.1) `என் உள்ளத்துள்ளே ஒளித்து வைத்த சிறையான்` (தி.6 ப.66 பா.7) கை தொழுவார் மனம் ஆலயம் (தி.4 ப.17 பா.8) நெஞ்சினால் நினைந்தேன் நினைவெய்தலும் வஞ்ச ஆறுகள் வற்றின (தி.5 ப.44 பா.4) `துன்பமெலாம் அறநீங்கிச் சுபத்தராய்....ஏத்திநின்று இன்பராய் நினைந்து என்றும் இடையறா அன்பர் ஆம் அவர்க்கு அன்பர்` என்ற அநுபவஞான சொரூபராதலின், தம் நெஞ்சம் செய்த மாதவத்தைத் தாமே வியந்து `நெஞ்சமே எந்த மாதவம் செய்தனை` (தி.5 ப.7 பா.2) `என்னை மாதவம் செய்தனை` (தி.5 ப.77 பா.2) எனப் போற்றும் பெருமை தோன்றவும் `நெஞசே?` என்று விளித்தார். `நெஞ்சுள் நின்று நினைப்பிக்கும் நீதி` யாகிய, உடையான் ஏவல் வழி ஒழுகுவதே நின்கடன். நினைப்பார் தம் மனத்துக்கோர் வித்து (தி.6 ப.95 பா.7) முளைத்தோற்றமான நீ பின்னை மறத்தல் பிழை. உன்னைத் தூய்மை செய்து நினைக்குமா நினைப்பியாதே கழித்தானாயினும், (தி.4 ப.14 பா.9) நினைவாயேல் அவ்வஞ்சக் கள்வன் நின்னுள் மன்னுவான் (தி.6 ப.62 பா.4) என்பார், `நீ நினையாய்` என்றார். பற்றுள்ளவரை நினைந்தாற் பற்றறாது; பிறவிப் பெருங்கடலில் விழுந்து கரையேறாக் கழிபேரிடர் கழியாது; பற்றற்றான் தாளிணையைப் பற்றறப் பற்றுவதே நினைப்பின் முடிந்த பயன் என்பார் `நின்மலனை` என்றார்.
அவன் நின்மலனாதலைப் புறக்குறியாய் விளக்குவது ஈதென்பார் `சடை` என்றும், அதனை உடையார்க்கும் அவனை அடைவார்க்கும் என்றும் உள்ளது உயர்ச்சியே என்பார் `நிமிர்சடை` என்றும், அது நிறத்தாலும் விளங்கும் என்பார் `புன்சடை` என்றும் அருளினார். `பொன்சடை` என்பது `புன்சடை` என மருவிற்று. ஈண்டுப் புன்மை கொள்வார் புல்லரே. நினைந்து, நினைப்பு நிறைவெய்தப்பெற்ற ஆட்சி (அநுபவம்) உடைய சாட்சி வேண்டு மேல், பனிமலையில் தனி மகளாய்த் தவம் புரிந்து, தவனை உமாதவனாக்கிய மங்கையைக் கண்டுணர்க என்பார் `மலைமங்கை மணாளனை` என்றார்.
வேறு எப்பொருளை நினைப்பினும் வெப்பமே மேவும்; தட்பம் சாராது; அம்மையப்பனையே நினைத்தாற்றான் பிறவிக் கோடையையும் தீர்க்கும்; பேரின்பக் குளிர்ச்சியையு முண்டாக்கும் என்பார் `மஞ்சாடும் மலைமங்கை மணாளனை நெஞ்சே நீ நினையாய்` என்றார். மலைமங்கை தன் நினைப்பால் தனது தாட்சாயணி என்ற பெயர் நீங்கினாற்போல், நின் நினைப்பால் நினது சீவன் என்ற பெயர் நீங்குவாய்; அவள் அவனை அடைந்தவாறு அடைந்தும் இடையறா தின்புறுவாய் என்பார் `(மலைமங்கை மணாளனை) நீ நினையாய்` என்றருளினார். நினைக்க முயலும் முன்னரே பத்திவெள்ளம் பரந்தது (தி.5 ப.44 பா.6) என்பார் `நினையாய்` என விரைவித்தார். `சிந்தையால் நினைவார்களைச் சிக்கெனப் பந்துவாக்கி உயக்கொளும் காண்` (தி.5 ப.71 பா.9) என்பார், விரைவுக் குறிப்புணர, `நெஞ்சே நீ நினையாய்` என்று அருளினார். செல்வப்பாவைக்கு வேந்தனார் வஞ்ச நெஞ்சத்தவர்க்கு வழிகொடார் ( என்னைப் போலும்) நைஞ்ச நெஞ்சர்க்கு அருளுவார் (தி.5 ப.68 பா.7) `நாறுசாந்தணி நன்முலை மென்மொழி மாறிலா மலைமங்கையொர் பாகமாகக் கூறனாரை நினைந்து ஊறுவார்க்கு ஊனம் ஒன்றும் இல்லை` (தி.5 ப.70 பா.8) பொக்க மிக்கவர் பூவும் நீரும் கண்டு நாணி நக்கு நிற்பானாயினும், நெக்கு நெக்கு நினைப்பவர் நெஞ்சுளே புக்குநிற்பன் பொன்னார் சடைப் புண்ணியன் என்பார், `மலைமங்கை மணாளனை நெஞ்சே நீ நினையாய்` என்றார். நின்னை நினைய வொட்டான்; நீ நினைத்தால் மறப்பித்துப் பேர்த்து ஒன்று நாடுவிப்பான்; அவனை மறந்து அவனுக்கு இனியனாய் உள்ள உனக்கு நிகர் ஒருவரும் இலர் என்பார் `நீ` என்றார்.

பண் :சாதாரி

பாடல் எண் : 7

கைகாள் கூப்பித்தொழீர் - கடி
மாமலர் தூவிநின்று
பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக்
கைகாள் கூப்பித்தொழீர். 

பொழிப்புரை :

கைகளே! மணங்கமழும் சிறந்த மலர்களைச் சமர்ப்பித்துப் படம் எடுக்கும் வாயை உடைய பாம்பினை இடையில் இறுகக் கட்டிய மேம்பட்ட பெருமானைக் கூப்பித் தொழுவீராக.

குறிப்புரை :

`தொழுது தூமலர் தூவித் துதித்து நின்று அழுது காமுற்று அரற்றுகின்றாரைக் கீழ்க்கணக்கில் எழுதும் (தி.5 ப.21 பா.8) மெய்மையை அறிந்து, சலம் பூவொடு தூபம் மறந்தறியாராய் வழிபட்டு வந்து, நகமெலாம்தேயக் கையால் நாண்மலர் தொழுது தூவி, முகமெலாம் கண்ணீர்வார முன்பணிந்து ஏத்தும் தொண்டர் அகமலாற் கோயில் இல்லை (தி.4 ப.40 பா.8) அம்போது எனக்கொள்ளும் (தி.4 ப.12 பா.10) எம்போலிகள் பறித்து இட்ட இலையும் முகையும் எல்லாம் என்று உணர்ந்து தெளிந்த நம் கைகளுக்குத் தாம் கூப்புவித்தல் வேண்டாதே அவையே கூம்பும் என்பார் அப் பயிற்சி மிகுதி தோன்றக், `கைகாள்` என்றார். குவிதலும் தொழுகையும் தம் கைகளுக்குச் சிவபிரான்கண்ணவேயன்றிப் பிறாண்டில்லை என்பார் `கூப்பித் தொழீர்` என்றார். புள்போல `யோசனைபோய்ப் பூக்கொணர்ந்து ஒரு நாளும் ஒழியாமே பூசனை செய்தினிதிருந்த` பேரன்பின் வழிபாட்டை மேற்கொண்டு பயின்ற நுமக்குப் பிறிதொரு செயலும் வேண்டா. எங்கேனும் போய், ஏற்றமலர் ஏற்றுவந்துதூவுக என்பார் `கடிமலர் தூவி நின்று` என்றார். சிவாகம விதியிற் கடிந்த மலர்களைக் கடிந்து விதித்த மணமலர்களை எடுத்துவருதல் வேண்டும் என்பார், `கடிமா மலர்` என்றார். மலர் தூவிப் பரவினும் மனம் புறம்போய்ப் பாசப் படுகுழியில் வீழ்ந்து பாழாகாதவாறு, அதன் இயக்கத்திற்கு வாயிலான ஐம்பொறிகளையும் அவற்றின் வழிவரும் புலன்களையும் அடக்கி வழிபடல் வேண்டும்; அவ்வடக்கத்தை எய்தற்பொருட்டு, அவை அடங்காரையும் அடக்க வல்லரல்லாரையும் வணங்கிற் பயனில்லை; அவற்றை அடக்கும் ஆற்றலை இயல்பாக உடைய சிவபிரானையே தொழு என்பார், `பைவாய்ப் பாம்பரை ஆர்த்த பரமனைத் தொழீர்` என்றார். ஐம்பொறிகளையும் அடக்காதவனாதலின், பாம்பணை மேல் தூங்கும வனானான் மாலோன்; அவற்றை அடக்கும் ஆற்றலை, உடலிற் பாம்பினை அணிந்தும் தலைமேல் ஐந்தலைப் பாம்பு ஏந்தியும் தோற்றினான் நீற்றினை நிறையப்பூசிய நின்மல சிவன்; நீர் கைகூப்பித் தொழலால் அவனுக்கு ஒரு பயனும் இல்லை; அவன் `கரைந்து கைதொழுவாரையும் காதலன் வரைந்து வைதெழுவாரையும் வாடலன்` நும்குவித்தலும் தொழலும் நுமக்கே பயன் விளைவிப்பன என்பார் `கைகாள் கூப்பித்தொழீர்` என்று மீண்டும் தூண்டினார். ஐம்புலனும் அகத்தடக்கி எப்போதும் இனியானை மனத்தே வைத்து `நாண்மலர் தூவி யழுதிரேல் வஞ்சம் தீர்த்திடும்` (தி.5 ப.82 பா.6) `புரமூன்றெய்த செருவனைத் தொழத் தீவினை தீரும்` `ஐயனைத் தொழுவார்க்கு அல்லல் இல்லை` (தி.5:- ப.82 பா.5, ப.83 பா.9). `பூக்கைக்கொண்டு அரன் பொன்னடி போற்றிலார் காக்கைக்கே இரையாகிக் கழிவர்` என்பார் `தூவிநின்று கூப்பித் தொழீர்` என்றார். `கழலடியே கைதொழுது காணினல்லால் மற்றோர் களைகண் இல்லீர்` என்பார் `தொழீர்` என்றார்.

பண் :சாதாரி

பாடல் எண் : 8

ஆக்கை யாற்பயனென் - அரன்
கோயில் வலம்வந்து
பூக்கையா லட்டிப் போற்றியென் னாதஇவ்
ஆக்கை யாற்பயனென். 

பொழிப்புரை :

எம் பெருமானுடைய கோயிலை வலமாகச் சுற்றி வந்து பூக்களைக் கையால் சமர்ப்பித்து அவனுக்கு வணக்கம் செய்யாத உடம்பினால் யாது பயன்?

குறிப்புரை :

தில்லையம்பலத்துக் கூத்தனுக்கு ஆட்பட்டிருப்பதன்றோ நம்தமக்கு வாய்த்த உடம்பின் பயன்? `கொடுமாநுடமேனும் இறைவன் கழலேத்தியிருக்கில் ஒரு குறைவும் இல்லோம்` (தி.5 ப.39 பா. 5) குனித்தபுருவம் முதலியவற்றைக் காணப்பெறாத மனித்தவுடல் அநித்தவுடலே, உடையானிடத்தில் நிலாவாத நெஞ்சத்தை யுடைய புலாலுடம்பு நிற்பது ஒத்து நிலையிலாதது. இந் நிலையிலா ஆக்கை நிற்கும்போதே இதனால் ஆகும் பயனை விரைந்து பெற்றுக் கொள்வதே அறிவுடைமைக்கு உகந்தது. அங்ஙனம் பெறாதார்க்கு ஒரு பயனும் இல்லை என்பார், `ஆக்கையால் பயன் என்` என்றார். ஊனாலும் உயிராலும் உள்ள பயன்கொளநினைந்து வானாறு பொதி சடையார் மலரடி வணங்குந் தமக்குத் துணையாய் நின்றமை தோன்ற `ஆக்கை` என்றருளினார். ஆக்கை பெற்றது மீண்டும் அதனை ஆக்கை ஒழித்தற்கே. அது நிகழ, உயிரைச் சாரும் கட்டினை ஒழித்து வீடுநல்குவது முழுமுதற் பொருளே என்பார் `அரன்` என்றார். கோயில் (கோ+இல்). வருமொழி முதலிகரவுயிர் யகரமெய்யை அடுத்தது. உடம்படுமெய்க்குப் பண்டு வரையறை இன்மை அறிக. இ+அன்=இவன். ஐ+அர்=ஐவர். நீவிர், ஆயா,(ஆயன் விளி ஆயா) மியாயிக. `ஆயிரண்டும்` என்புழி ஆயஇரண்டும் என்றலும் உண்டு. `ஆயிருமுதலின்` என்பதற்கு `இளம்பூரணர் ஆகிய இரண்டு காரணத்தால்` என்று எழுதியதுணர்க. (அதனை உடம்படுமெய் எனல் நியதம் அன்று) அரனே கோ ஏனையோர் அடிமையே அன்றிக் கோவாகார் என்பார் `அரன் கோயில்` என்றிணைத்தார். ஆக்கை அற நோக்குற்றார்க்கு ஆக்கை முதலிய ஐந்தொழிலுட்படாதும் ஐம் மலத்துள் அழுந்தாதும் அகலவேண்டுதலின், ஐந்து முதலிய சுற்றுஉறச் சிவாகம விதிப்படி அமைந்த திருக்கோயில்களை வலம் புரிந்து சிவதரிசனம் செய்தல் வேண்டுமென்பார். `கோயில் வலம் வந்து` என்றார். `திருக்கோயிலில்லாத திருவிலூர்` `பாங்கினொடு பலதளிகள் இல்லாவூர்` களில் எடுத்த உடலாய், `ஒருகாலும் திருக்கோயில் சூழா`தேல், அவ்யாக்கை பெயர்த்தும் போக்குவரவு புரியும் உயிர்க்குச் சுமை என்பார் `வலம் வந்து போற்றி என்னாத இவ்வாக்கை` என்றார். `பூக் கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார்` `உண்பதன்முன் அருப்போடு மலர் பறித்து இட்டு உண்ணார்` `நாக்கைக் கொண்டரன் நாமம் நவில்கிலார்` நெஞ்சம் தன்னுள் (- அடைந்தார்க்கு இன்பங்கள் தரும் தன்னுள்) நிலாவாததும் நிற்பது ஒத்து நிலையிலாததுமாகிய புலாலுடம்பிலும் புகுந்து நின்ற அக்கற்பகத்தைத் தலையாரக் கையாரக் கும்பிட்டு வாயார நாவாரப்பாடிச் சித்தமாரநினைந்து போற்றி அலறாநிற்றலைச் செய்யாதார் யாவர்க்கும், அவ்வுடம்பால் ஒரு பயனும் இல்லை என்பார் `பூக் கையாலட்டிப் போற்றியென்னாத இவ்வாக்கையாற் பயன் என்` என்றார். வழிபாடில்லையேற் பயனிலாத யாக்கை யென்பது கண்கூடாம் என்பார். `இவ்வாக்கை` எனச் சுட்டிக் கூறினார். இரை தேடி அலமந்து கழியச் செய்து காக்கைக்கே இரையாகும் ஆக்கை என்பார் `பயன் என்` என்றார்.ஆக்கைக்கே இரைதேடி அலமந்து காக்கைக்கே இரையாகிக் கழிவதில் எவ்வாற்றானும் அதனுள் வாழும் உயிர்க்குப் பயனின்று என்பார் `ஆக்கையாற் பயன் என்` என வினவினார். ஆயிரம் ஆரணம் ஓதினும் பொறியிலார்க்குக் கோயில் முதலியவற்றின் உண்மையை அறிய மனம் புகாது; பொறியுடையார்க்குப் புகுமாயினும். பூக் கைக்கொண்டு அரன் பொன்னடி போற்றிக் கருத்திற் கழலடி நாட்டி,நாண்மலர்துவி வலஞ்செயில் வாட்டம் தீர்த்திடும் என்பார்` அரன் கோயில் வலம் வந்து பூக் கையால் அட்டிப் போற்றி யென்னாத இவ்வாக்கையாற் பயன் என்` என்றார். `கடலின் நஞ்சமுண்டவர் கைவிட்டால் உடலினார் கிடந்து ஊர்முனி பிண்டம்` ஆவார். அப்பண்டம் கடலை சேர்வது சேய்த்தன்று. மிக நணித்து. போகும் எனச் சொல்லுமுன் செல்லும் சொற்பிரமாணமே. வாயும் நெஞ்சும் சென்னியும் முறையே வாழ்த்த நினைக்கத் தாழ்த்தத் தந்த அத்தலைவனை நன்றி மறவாது, சூழ்ந்த மாமலர் தூவித் துதியாதே நெடுங்காலம் வீழ்த்தல் தீவீனைப் பயனாகும்;ஆதலின், `இவ்வாழ்க்கையாற் பயன் என்` என்று வெறுத்தமை தோற்றினார். இங்குவெவ்வேறு பயன் கருதி முன் உரைத்த பகுதி பின்னுங் கொள்ளப்பட்டமை கூறியது கூறல் அன்று.

பண் :சாதாரி

பாடல் எண் : 9

கால்க ளாற்பயனென் - கறைக்
கண்ட னுறைகோயில்
கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக்
கால்க ளாற்பயனென்.

பொழிப்புரை :

நீலகண்டனான எம்பெருமான் தங்கியிருக்கும் கோயிலாகிய, அழகான கோபுரத்தை உடைய கோகரணம் என்ற தலத்தை வலம் வாராத கால்களால் யாது பயன்?

குறிப்புரை :

பல கால்களாகி விரிந்து செல்லும் காவிரி முதலியனவும் திருக்கோயில்களைச் சூழ்ந்து செல்லும் சிவநல்வினையை எய்து கின்றன. இவ்வுடம்பின் கால்கள், திருக்கோயில் சூழாக் கால்களாய் அவ்வாய்க்கால்களிலும் இழிந்தன என்பார்` கால்களாற் பயன் என்` என்றார். ஒரு காலும் தீவண்ணர் திருக்கோயில் சூழாவாகில் அளியற்றவராய்ப் பெருநோய்கள் மிக நலியப் பெயர்த்தும் செத்துப் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கும்கால் என்பார் `கறைக்கண்டன் உறைகோயில் கோலக் கோகரணம் சூழாக் கால்களாற் பயன் என்` என்று வினவினார். திருக்கோயில் வலம் வரும் மெய்யன்பரை நஞ்சு தீண்டாப் பேறு தோன்றக், `கறைக் கண்டன் கோயில்` என்றார். `ஓட்டை மாடத்தின் ஒன்பது வாசலும் காட்டில் வேவதன் முன்னம், கழலடி நாட்டி நாண்மலர்தூவி வலஞ்செயில் வாட்டம் தீர்த்திடும்` என்பார் அங்ஙனம் கூறினார் எனினும் பொருந்தும். ஆக்கையின் பிரிவாய தலை, கண், செவி, மூக்கு, வாய், நெஞ்சு, கை எல்லாம் முற்கூறிவிட்டமையால் எஞ்சிய கால்களை ஈண்டுக் கூறினார். பிற்கூறற்பாலதாய ஆக்கையை முற்கூறியதென்னை எனின், கால்கள் ஆக்கையின் ஒரு பிரிவேயாயினும், அவ்வுறுப்பால் ஏனைய உறுப்புக்கள் (ஆக்கை) தாங்கப்படுதலின், முற்கூறினார். அக் கால்களிலிருந்தும் கூற்றால் உயிர் நீங்கும் போது உய்ந்து போக்கில்லை, என்பார் `கால்களாற் பயன் என்` என்று அடுத்துள்ளதன் தொடர்பு தோற்றினார். கோபுரம் - தலைவன் ஊர். கோலம் - அழகு. கோகரணம் வடநாட்டுத் தலம். கோ - பசு. கர்ணம் - காது. மாலைக் கடன் முடிக்க, தரையில் வைத்தலை வெறுத்து, என்செய்வது என்று ஆழ்ந்த இராவணனது கையிலிருந்த சிவலிங்கத்தைச் சிறான்போல் எதிர்வந்த பிள்ளையார் ஏற்று, குறித்தவாறு அவன் விரைந்து மீளாமையால், நிலத்தில் வைத்திட்டார். வந்து எடுக்க முயன்றான் இராவணன். அவன் வலியெல்லாம் அங்குப் பலியாயின. மகாபலி லிங்கம் கீழழுந்திற்று. மேலே ஆவின் காதளவே தெரிந்தது. அதனால், `கோகரணம்` என்று பெயர் ஆயிற்று என்பர்.

பண் :சாதாரி

பாடல் எண் : 10

உற்றா ராருளரோ - வுயிர்
கொண்டு போம்பொழுது
குற்றா லத்துறை கூத்தனல் லால்நமக்
குற்றா ராருளரோ.

பொழிப்புரை :

கூற்றுவன் நம் உயிரைக் கைப்பற்றிக்கொண்டு போகும் பொழுது, குற்றாலத்தில் விரும்பித் தங்கியிருக்கும் கூத்தப் பிரானைத் தவிர நமக்கு வேண்டியவர் என்று யாவர் உளர்?

குறிப்புரை :

உறுதல் - நன்றும் தீதும் எய்துதல். அதன் முதனிலை நீண்டு `ஊறு` என்றாகி, தீயதனைக் குறித்தல் வழக்கு. `இடையூறு` எனல் வெளிப்படை. உற்றார் என்பதோ (தீயோரை உணர்த்தாது) நல்லோரையே உணர்த்தும். உயிர்க்கு நற்றுணை ஆவாரே உற்றார். உயிர்த்துணையின் பயன் உடம்பின் நீங்கும் பொழுது உறாதேல், அவ்வுற்றாரால் உயிர்க்கு நன்று ஒன்றும் இன்று. அத்தகையோர் யாரையும் இல்லாதவராய், எல்லாத் தொடர்பும் அற்று, தாமும் பிறிதொன்றும் பற்றிடல் இன்றி, தன்னையே துணையாகக் கொண்டவர்க்கு உற்ற நற்றுணையாவான் சிவனெனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி யெம்மான் அன்றி வேறு இல்லை என்பார் `உற்றார் ஆர் உளரோ? என்று வினாவினார். உடல், பொருள், இடம், ஏவல் முதலியவற்றை உடையதாயிருக்கும்பொழுதும் துணைவேண்டும் உயிர்க்கு, அவற்றைவிட்டு நீங்கும் வண்ணம், உடலையும் தன்னையும் கூறுபடுத்தித் தன்னைக் கொண்டேகும் காலனை அக்காலத்தில் தடுத்துக் காக்கும் துணை இன்றியமையாதது என்பார் `உயிர்கொண்டு போம்பொழுது உற்றார்ஆர்` என்றார். `வைத்த மாடும் மடந்தை நல்லார்களும் ஒத்தொவ்வாத உற்றார்களும் என் செய்வார்` உடலின் நீங்கினாலும் தன்னுள்ளே நீங்காதிருக்கும் மெய்த்துணை ஐந்தொழில் புரிந்து ஆட்டி ஆடும் முழுமுதல் என்பார் `கூத்தன் அல்லால் உற்றார் ஆர் உளரோ?` என்றார். எங்கும் நிறைந்த பொருள் உடற்குள் இருக்கும் உயிர்க்குள்ளும் அகலாதுஇருந்து, அதனை அவ்வப்பொழுது துன்பத்தினின்றும் தடுத்தாட்கொண்டு வருகின்றது. முடிவான துன்பமாகிய இரப்பினின்றும் காத்து அருள்வது. நெட்டாலத்து நிழற்கீழிருந்து அறம் புகன்றது பேருணர்வினார்க்கு. சிற்றுணர் வினார்க்குக் குற்றாலத்துறைகின்றது என்பார் `குற்றாலத்துறை கூத்தன்` என்றார். கூத்தனே என்றுஅறுதியிட்டுணர்த்துவார், `கூத்தன் அல்லால் ஆர் உளரோ` என்றார். பதிபசுபாசம் என்னும் முப்பொருளுள் பதியின் துணை பசுக்கட்கே என்பார் `நமக்கு` என்றார். ஏனைய சமயத்தார், சிவன் முதலே அன்றி முதல் இல்லை` என்பதுணராமையின், அம்முதலே முதல் எனக்கொள்ளும் சைவர்க்கு அவன் சரணங்களே, மரணம் பிறப்பென்றிவையிரண்டின் மயக்கறுக்க வல்லன என்பது தெள்ளிது என்பார் `நமக்கு உற்றார் ஆர் உளரோ` என்றார் எனலும் பொருந்தும். `கடலினஞ்சமுதுண்டவர் கைவிட்டால் உடலினார் கிடந்து ஊர் முனிபண்டமே` ஆதலால் `உயிர் கொண்டுபோம்பொழுது உற்றார் ஆர் உளரோ` என்றாரேனும் `எண்ணிநாளும் எரியயிற் கூற்றுவன் துண்ணென் தோன்றில் துரக்கும் வழிகண்டேன், திண்ணந் சேறைச் திருச்செந்நெறியுறை அண்ணலார் உளர் அஞ்சுவது என்னுக்கே` மண்ணின்மேல் பிறக்குமாறும், இறக்குமாறும் காட்டினும், தன்னை மறக்குமாறிலாது உறுதுணையாதல் அறிந்து போற்றும் உயிர்கட்கு அவனே துறக்குமாறும் சொல்லப்படாத உற்றான் ஆவான். பிறர் எவரும் உற்றார் அல்லர் என்பார் `ஆர்` என்று ஒரு பொருளெனக் கருதாமை தோன்ற வினாவினார். `என்றும் வாழ்வுகந்தே இறுமாக்கும் நீர் பொன்றும்போது நுமக்கு அறிவொண்ணுமே` என்பார் `உயிர் கொண்டுபோம்பொழுது` என்றார். அப்பொழுது `சங்கரா` என வரல் அரிது. இப்பொழுதே சொல்லிச் சொல்லிப் பழகு. சொல்லத்தக்க வலிமைதரவேண்டும். (யான்) `சாம் அன்று, நின் நாமம் பரவி நமச்சிவாய என்னும் அஞ்சழுத்தும் சாமன்று உரைக்கத் தருதிகண்டாய் எங்கள் சங்கரனே` (தி.4 ப.103 பா.3) `உன்னை நினைந்தே கழியும் என் ஆவி` (தி.4 ப.112 பா.3) என்னைத் தென்திசைக்கே உந்திடும்போது மறக்கினும் என்னைக் குறிக்கொள்மின்` (தி.4 ப.95 பா.1-10) பார்க்க. `நின்றன் நாமம் உரையா உயிர்போகப் பெறுவேனாகில் உறு நோய்........உற்றால் என்னே` (தி.6 ப.47 பா.3) `உறவனாய் நிறைந் துள்ளம் குளிர்ப்பவன் இறைவனாகி நின்று எண்ணில் நிறைந்தான்.
`அவன்` அன்றி உற்றார் இலர் என்பார் `உளரோ` எனத் தேற்றப் பொருட்டாய ஓகாரம் கொடுத்துரைத்தாரும் ஆவர். `உறவாவார் உருத்திர பல்கணத் தோர்கள்` அப்பன், அம்மை, ஐயன், மாமன், மாமி முதலியவராக` `உற்றவன் காண்` `உறவெல்லாம் ஆவான் தான்காண்` `உற்றாராய் உறவாகி உயிர்க்கெலாம் பெற்றாராய்ப் பிரானார்` `உற்றார் இலாதார்க்கு உறுதுணையாவன` (தி.4 ப.92 பா.13) `உற்றானை உடல் தனக்கோர் உயிரானானை` `உற்றிருந்த உணர்வெலாம் ஆனாய் நீயே உற்றவர்க்கோர் சுற்றமாய் நின்றாய் நீயே` `குற்றாலத் தெங்கூத்தனை` உறவு கோல்நட்டு...... முறுக வாங்கிக் கடைய முன்நிற்கும்.

பண் :சாதாரி

பாடல் எண் : 11

இறுமாந் திருப்பன்கொலோ - ஈசன்
பல்கணத் தெண்ணப்பட்டுச்
சிறுமா னேந்திதன் சேவடிக் கீழ்ச்சென்றங்கு
இறுமாந் திருப்பன்கொலோ.

பொழிப்புரை :

எல்லோரையும் அடக்கி ஆளும் எம்பெருமானுடைய பலவாகிய சிவகணத்தவருள் ஒருவனாகிச் சிறிய மானை ஏந்திய அப்பெருமானுடைய சிவந்த திருவடிகளின் கீழ்ச் சென்று அங்கு இன்பச் செருக்கோடு இருப்பேனோ?

குறிப்புரை :

இறுதல் - ஒடிதல். உயிர் உடலின் நீங்குதலையும் இறுதல் என்பர். நீங்கும்பொழுது உயிர் பேரொலி செய்தலும் உண்டு. போர் முதலியவற்றில் இறப்போர் செய்யும் ஆர்ப்பு `இறும்ஆர்ப்பு` எனப்படும். அதன் மரூஉவே `இறுமாப்பு`. அது கருத்திற்குரியதாயிற்று. இங்கு இன்பச் செருக்குணர்த்தி நின்றது. சிற்றின்பத்தினும் செருக்கு மிகுமாயின், பேரின்பத்திற் செருக்குறல் பொருந்துமன்றோ? பொன்றும் வாழ்வுகந்தே என்றும் இறுமாக்கும் (தி.5 ப.72 பா.6) உயிர், என்றும் பொன்றாப் பேரின்ப வாழ்வுற்றால் இறுமாப்புறாதிரா தென்பார். `இறுமாந்திருப்பன் கொலோ` என்றார். `உறவாவார் உருத்திர பல்கணத்தினோர்கள்` என்பார். `ஈசன் பல்கணத்து எண்ணப் பட்டு இருப்பன்` என்றார். `என்றும் நாம் யாவர்க்கும் இடைவோம் அல்லோம். எமக்கு எதிரா ஆரும் இல்லை. சிறுதெய்வம் சேர்வோம் அல்லோம். முப்பத்து மூவர் தேவர்களும் மிக்கோரும் சிறந்து வாழ்த்தும் சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றோம். ஒன்றினாற் குறையுடையோம் அல்லோம். எண்குணத்துளோம். ஆதலின் ஏமாப்போம்`. `நாம் ஆர்க்கும் குடியல்லோம் யாதும் அஞ்சோம்` என்பார். `சிறுமா னேந்திதன் சேவடிக்கீழ்ச் சென்று அங்கு இறுமாந் திருப்பன் கொலோ` என்றார். `கொல்` இரண்டும் அசைநிலை. `அங்கு` சில பதிப்பில் இல்லை.

பண் :சாதாரி

பாடல் எண் : 12

தேடிக் கண்டுகொண்டேன் - திரு
மாலொடு நான்முகனும்
தேடித் தேடொணாத் தேவனை யென்னுளே
தேடிக் கண்டுகொண்டேன்.

பொழிப்புரை :

திருமாலும் நான்முகனும் தேடியும் காணமுடியாத தேவனைத் தேடி அவன் என் நெஞ்சத்துள்ளேயே இருக்கின்றான் என்ற செய்தியை அறிந்து கொண்டேன்.

குறிப்புரை :

அண்ணாமலையான் திருந்தடி ஏத்தத் தேடிச் சென்று காணாதார்போல்வேன் அல்லேன் என்பார் `தேடிக் கண்டுகொண்டேன்` என்றார். தேடுவார் பிரமன் திருமால். அவரும் அவன் ஆடு பாதம் அறிகிலார்; யான் அறிந்தேன் என்பார் `கண்டு கொண்டேன்` என்றார். மாலும் அயனும் தேடியும் தேட ஒன்றாத தேவன், யான்தேட ஒன்றினான் என்பார். `திருமாலொடு நான்முகனும் தேடித் தேடொணாத்தேவன்` என்றார். அவர் தத்தம் உள்ளே தேடாமல் வெளியே தேடிக் காணாராயினர், யான் `என் உள்ளே தேடிக் கண்டுகொண்டேன்` என்னும்படி அத் தேவாதிதேவன் `என் உள்ளத்துள்ளே விள்ளாதிருந்தான்` என்பார் `தேவனை என் உள்ளே தேடிக் கண்டுகொண்டேன்` என்றார். `பாடுவார் பணிவார் பல்லாண்டிசை கூறு பத்தர்கள் சித்தத்துள் புக்குத் தேடிக் கண்டுகொண்டேன்` (தி.4 ப.20 பா.10) என்று தேடிய இடமும் கண்டுகொண்ட இடமும் தெளிக. கண்டு விட்டார் பலர். விடாது கொண்டார் சிலர். அச்சிலருள் யானும் அடங்குவேன் என்பார் `கொண்டேன்` என்றார். `வித்தும் அதன் அங்குரமும் போன்றிருக்கும் மெய்ஞ்ஞானம் வித்தும் அதன் அங்குரமும் மெய்யுணரில் வித்ததனிற் காணாமையால் அதனைக் கைவிடுவர் கண்டவர்கள் பேணாமையால் அற்றார் பேறு.` (திருக்களிற்றுப் படியார். 57) `பிறையுடை வார்சடையானைப் பேணவல்லார் பெரியாரே` (தி.2 ப.63 பா.4) தேடிக் காணாமைக்கு ஏது விளங்க `மால்` என்றும் ஒருமுகமன்றிப் பல முகத்தால் பலதலை யுணர்வாய் ஒருதலை யுணர்புறாதொழிந்தது என்பதும் தோன்ற `நான்முகன்` என்றும் இடத்திற்கேற்ற பெயர் குறித்ததறிக. `மன்னுவது என் நெஞ்சில் மால் அயன்காண்கிலார்` (தி.8 திருவா. 343) `ஓட்டற்று நின்ற உணர்வு பதிமுட்டித் தேட்டற்று நின்ற இடம் சிவமாம் நாட்டற்று நாடும் பொருள் அனைத்தும் நானாவிதமாகத் தேடும் இடம் அன்று சிவம்` (திருக்களிறு 29) பேசாதே `எண்ணொன்றும் வண்ணம் இருக்கின்ற யோகிகள்பால் உள்நின்றும் போகான் உளன். (தி.8 திருவாசகம் - 28.)` `தேடிக் காணொணாத் தேவன்` என்று இருந்ததோ?
சிற்பி