திருவதிகைவீரட்டானம்


பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 1

முளைக்கதி ரிளம்பிறை மூழ்க வெள்ளநீர்
வளைத்தெழு சடையினர் மழலை வீணையர்
திளைத்ததோர் மான்மறிக் கையர் செய்யபொன்
கிளைத்துழித் தோன்றிடுங் கெடில வாணரே.

பொழிப்புரை :

மண்ணைத் தோண்டிய அளவிலே சிவந்த பொன் வெளிப்படும் கெடில நதிக்கரையில் உகந்தருளியிருக்கும் பெருமான் கிரணங்களை உடைய பிறை முழுகுமாறு கங்கை வெள்ளத்தைத் தேக்கிய நிமிர்ந்த சடையினராய் , இனிய வீணையை ஒலிப்பவராய் , மான்குட்டி மகிழ்ந்திருக்கும் கையினை உடையவராய் , அடியவர் கண்ணுக்குக் காட்சி வழங்குகிறார் .

குறிப்புரை :

கெடிலவாணர் - கெடில ஆற்றங்கரைக்கண் உள்ள திருவதிகை வீரட்டானத்துறைபவர் ; சிவபிரானார் . முளைக்கதிர் இளம்பிறை - முளைபிறை . கதிர்ப்பிறை . இளம்பிறை . பிறத்தலுடையது பிறை . முளைத்தலுடையது முளை . பிறத்தல் மறைந்தமை நோக்கியது . முளைத்தல் வெளிப்பட்டுத் தோன்றும் இடம் நோக்கியது . ` வெள்ளி முளைத்தது ` என்னும் வழக்கு நோக்குக . கதிர் - நிலா . இளமை :- ஒரு கலையுடைமை தோன்றியது . பிறை மூழ்க நீர்வெள்ளம் வளைத்து எழும் சடை . மான்மறி திளைத்ததொருகை . கிளைத்தல் - மண்ணைத் தோண்டுதல் . உழி - இடம் . செய்யபொன் - செம்பொன் . வாணர் சடையினர் , வீணையர் , கையர் என்று இயைக்க . மழலை வீணை :- ` மிக நல்ல வீணை `. ( தி .2. ப .85. பா .1) நல்வீணை .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 2

ஏறின ரேறினை யேழை தன்னொரு
கூறினர் கூறினர் வேத மங்கமும்
ஆறின ராறிடு சடையர் பக்கமும்
கீறின வுடையினர் கெடில வாணரே.

பொழிப்புரை :

கெடிலவாணர் காளைவாகனம் உடையவர் . பார்வதி பாகர் . நான்கு வேதமும் ஆறு அங்கங்களும் அடியார்களுக்கு உபதேசித்தவர் . கங்கை தங்கும் சடையினர் . பக்கத்திலும் கிழிந்த உடையைக் கொண்டவர் .

குறிப்புரை :

ஏறினை - விடையை . ஏழை - பேதை ; உமாதேவி . ` ஏழை பங்காளன் ` ` எருதேறி ஏழையுடனே ... என் உளமே புகுந்த அதனால் நல்ல `. கூறினர் - பங்கினார் . வேதமும் அங்கமும் கூறினார் . கூறினர் - வகுத்தார் . ` அங்கமும் ஆறினர் ` என ஆறங்கமும் கூறியதால் ` நால் வேதமும் ` என்றுரைத்துக்கொள்க . ஆறு இடுசடையர் - கங்கையை அடக்கியிட்ட சடையினார் . பக்கமும் கீறின உடையினர் - பக்கத்திலும் கிழிந்த உடை கொண்டவர் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 3

விடந்திகழ் கெழுதரு மிடற்றர் வெள்ளைநீ
றுடம்பழ கெழுதுவர் முழுதும் வெண்ணிலாப்
படர்ந்தழ கெழுதரு சடையிற் பாய்புனல்
கிடந்தழ கெழுதிய கெடில வாணரே.

பொழிப்புரை :

முழுவதும் பிறையின் வெள்ளிய ஒளி பரவி , அழகாக நிமிர்ந்த சடையில் பாய்ந்த கங்கைப் புனல் தங்கி அழகுறுத்தும் கெடிலவாணர் , விடக்கறை தங்கி விளங்கும் நீலகண்டர் . வெண்ணீற்றை உடம்பில் அழகாக அணிந்தவர் .

குறிப்புரை :

விடம் - பாற்கடலின் எழுந்த நஞ்சு . ( விஷம் ). திகழ் மிடறு . கெழுதருமிடறு . கெழுதரல் - விளக்கம் செய்தல் . மிடற்றர் - திருநீலகண்டர் . வெள்ளை நீறு உடம்பு அழகு எழுதுவர் :- திருவெண்ணீற்றால் திருமேனியைச் சிவப்பொலிவு எழ எழுதுவர் . வெள்நிலாப் படர்ந்து அழகு எழுதருசடை - வெள்ளை நிலாவொளிப் பிறையணிந்து படர்ந்து , அழகு இத்தன்மையது என்று எழுதுதற்கு அரிய சடை . சடையினழகு எழுத அரியது . வெண்ணிலாச் சடை . படர்ந்து எழுதருசடை . நிலாப்படர்ந்து எனினும் பொருந்தும் . புனல் கங்கை . அழகு எய்திய கெடிலவாணர் . வாழ்நர் என்பதன் மரூஉ ` வாணர் `. வீழ்நர் ( வீணர் ).

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 4

விழுமணி யயிலெயிற் றம்பு வெய்யதோர்
கொழுமணி நெடுவரை கொளுவிக் கோட்டினார்
செழுமணி மிடற்றினர் செய்ய வெய்யதோர்
கெழுமணி யரவினர் கெடில வாணரே.

பொழிப்புரை :

கெடிலவாணர் விரும்பத்தக்க சிறந்த இரத்தினங்களை உடைய மேருமலையை , நாகரத்தினங்களையுடைய பாம்பினை நாணாக இணைத்துக் கூரிய பற்களை உடைய அம்புகளைச் செலுத்துவதற்காக வளைத்தார் . அவர் நீலகண்டர் . நிறத்தால் சிவந்த இரத்தினத்தை உடைய கொடிய நாகபாம்பை அணிகலனாக உடையவர் .

குறிப்புரை :

மணி - நாகரத்நம் . அயில் - கூர்மை . எயிறு - பல் . கொளுவி - கொளுத்தி ; கொள்ளச்செய்து . கோட்டினார் - செழுமணி . மிடற்றினார் - செழித்த நீலமணி போலும் திருக்கழுத்துடையார் . செய்ய அரவு . வெய்யதோர் அரவு .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 5

குழுவினர் தொழுதெழு மடியர் மேல்வினை
தழுவின கழுவுவர் பவள மேனியர்
மழுவினர் மான்மறிக் கையர் மங்கையைக்
கெழுவின யோகினர் கெடில வாணரே.

பொழிப்புரை :

கெடில வாணர் கூட்டமாய்த் தம்பக்கல் வந்து தம்மைத் தொழுது எழும் அடியவர்களுக்கு மேல்வரக்கடவ வினைகளைப் போக்குபவர் . பவளம் போன்ற செந்நிற மேனியை உடையவர் . மழுவையும் மான்குட்டியையும் ஏந்திய கையினர் . பார்வதி பாகராய் இருந்தே யோகத்தில் இருப்பவர் .

குறிப்புரை :

குழுவினர் - கூட்டத்தினர் . அடியர் மேல் தழுவின ( பழ ) வினைகளைக் கழுவித் தூய்மையாக்குவர் . பவளம் போலும் திருமேனியர் . ` பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீறும் `. மேல்வினை ஆகாமியம் ஆம் . மழுவும் மானும் ஏந்திய மழுவினர் . மான்மறி - மான்கன்று . மங்கையைக் கெழுவின யோகினர் - யோகத்திற்கும் மங்கையைக் கெழுவியதற்கும் நெடுவாசி உண்டேனும் , யோகியாயிருந்து உயிர்க்கு யோகமுத்தியை உதவுதலும் , போகியாயிருந்து போகத்தைப் புரிதலும் வல்ல முழுமுதல்வர் என்றது இது .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 6

அங்கையி லனலெரி யேந்தி யாறெனும்
மங்கையைச் சடையிடை மணப்பர் மால்வரை
நங்கையைப் பாகமும் நயப்பர் தென்றிசைக்
கெங்கைய தெனப்படுங் கெடில வாணரே.

பொழிப்புரை :

தென் திசையின் கங்கை என்று போற்றப்படும் கெடிலநதிக் கரையின் வீரட்டத்தில் உறையும் பெருமானார் உள்ளங்கையில் நெருப்பினை ஏந்தி , கங்கை என்னும் மங்கையைச் சடையில் சேர்த்தியவர் . பார்வதியைத் தம் திருமேனியின் ஒருபாகமாக விரும்புபவர் .

குறிப்புரை :

அங்கை - அழகிய கை . உள்ளங்கை எனல் பொருந்தாது . அனல் எரி - வெம்மை வீசுந் தீ . கையில் அனல் தலையிற் புனல் . கங்கை தலைமேல் மணக்கும் . மால்வரை நங்கை - பெரிய பனிமலையிற்றோன்றிய உமை . பாகம் - இடப்பால் . ` தென்திசைக் கெங்கையது எனப்படும் கெடிலம் ` என்றதால் , கெடில நதியின் சிறப்புணர்க . கங்கை , கெங்கை .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 7

கழிந்தவர் தலைகல னேந்திக் காடுறைந்
திழிந்தவ ரொருவரென் றெள்க வாழ்பவர்
வழிந்திழி மதுகர மிழற்ற மந்திகள்
கிழிந்ததே னுகர்தருங் கெடில வாணரே.

பொழிப்புரை :

தேன் கூடு கிழிந்ததால் வழிந்த தேனோடு கீழே இறங்கும் வண்டுகள் ஒலிக்க ஒழுகும் தேனைப் பெண் குரங்குகள் நுகரும் கெடிலவாணர் இறந்தவர்களின் மண்டை ஓட்டினை உண்கலனாக ஏந்திச் சுடுகாட்டில் தங்கிக் கீழ் நிலையில் உள்ளவர் என்று அறிவிலிகள் பரிகசிக்குமாறு வாழ்பவர் .

குறிப்புரை :

கழிந்தவர் தலை கலன் - மாய்ந்த மலரவர் தலையாகிய பிச்சைப் பாத்திரம் ; பிரமகபாலம் . நூறுகோடி பிரமர்களும் ஆறுகோடி நாராயணர்களும் ஏறுகங்கை மணலினும் எண்ணில்லாத இந்திரர்களும் ஆகிய முத்திறத்தரும் அழிவோர் . யானே ஈறிலாதவன் எனத் தோற்றும் பொருட்டு , பிரம விட்டுணு தலைகளைக் கோத்த மாலைக்கலனும் ஆம் . காடு - சுடுகாடு . உறைந்து - தங்கி . ` இழிந்தவர் ஒருவர் ` என்று இகழ்ந்து பேச வாழ்பவர் . மது வழிந்து இழியும் . அம்மதுவைச் செய்வது பற்றி வண்டுகட்கு ` மதுகரம் ` என்று பெயர் ஆயிற்று . வண்டுகள் மிழற்ற (- பாட ). மந்தி (- பெண் குரங்கு ) கள் . கிழிந்த தேன் :- கூட்டின் கிழிவு தேனுக்காயிற்று . கூடுகிழிந்து ஒழுகுந்தேன் என்றவாறு . நுகர்தல் மந்திவினை . வழிந்திழிதேன் என்றும் இயைக்கலாம் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 8

கிடந்தபாம் பருகுகண் டரிவை பேதுறக்
கிடந்தபாம் பவளையோர் மயிலென் றையுறக்
கிடந்தநீர்ச் சடைமிசைப் பிறையு மேங்கவே
கிடந்துதா னகுதலைக் கெடில வாணரே.

பொழிப்புரை :

பெருமான் திருமார்பில் கிடந்த பாம்பினைத் தன் அருகில் கண்டு பார்வதி மயங்க , அப்பாம்பு அவளை மயிலோ என்று ஐயப்பட , கங்கை தங்கிய சடைமேல் உள்ள பிறையும் பாம்பினைக் கண்டு மனம் வருந்த , இவற்றை எல்லாம் கண்டு சிரிக்கும் மண்டை ஓட்டினைக் கையில் கொண்டவர் கெடில வாணராவர் .

குறிப்புரை :

சிவபிரான் திருமேனியிலே பாதி கொண்டுள்ள அரிவை ( உமையம்மை ) யார் அத்திருமேனியிற்கிடந்த பாம்பைத் தம் அருகே கண்டு பேதுற்றார் . தலைமேற் கிடந்த பாம்பு அம்மையாரை ஒரு மயில் என்று கருதி ஐயுற்றது . அப்பாம்பைக் கண்டு பிறையும் ஏங்கிற்று . அரிவை பேதுறச் சடைமிசைக் கிடந்த பாம்பு அவளை மயில் என்று ஐயுறச் சடைமிசைக் கிடந்த பிறை . பிறை ஏங்கக் கிடந்து நகு ( கின்ற ) தலை . தலையையுடைய கெடிலவாணர் . இவ்வாறு கொள்ளாக்கால் முடிபு விளங்காது .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 9

வெறியுறு விரிசடை புரள வீசியோர்
பொறியுறு புலியுரி யரைய தாகவும்
நெறியுறு குழலுமை பாக மாகவும்
கிறிபட வுழிதர்வர் கெடில வாணரே.

பொழிப்புரை :

கெடில வாணர் நறுமணம் கமழ்கின்ற விரிந்த சடை புரளுமாறு தலையை அசைத்து , புள்ளிகளை உடைய புலித்தோலை இடையில் அணிந்து , சுருண்ட கூந்தலை உடைய உமாதேவி தம்திருமேனியில் ஒருபாகமாக இருக்கத் தந்திரமாக மாயக் கூத்தாடுவர் .

குறிப்புரை :

வெறி - மணம் . சடை புரள வீசி உழிதர்வர் என்று இயைக்க . உழிதரல் - ஆடல் . ` உழிதருகால் அத்த ` ( திருவாசகம் ). பொறி - புள்ளி . உரி - தோல் . அரையது - இடுப்பிலுள்ளது . கிறி :- பொய் . ( எள்ளும்நிலை ). ( படிறு - பொய் ). ` கிறிபேசிப்படிறாடித் திரிவீர் ` நெறி - குழலின் நெறிப்பு .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 10

பூண்டதே ரரக்கனைப் பொருவின் மால்வரைத்
தூண்டுதோ ளவைபட வடர்த்த தாளினார்
ஈண்டுநீர்க் கமலவாய் மேதி பாய்தரக்
கீண்டுதேன் சொரிதருங் கெடில வாணரே.

பொழிப்புரை :

பெருக்கெடுத்தோடும் நீர்நிலையில் மலர்ந்திருக்கும் தாமரைப் பூவின் பக்கம் எருமை பாய்தலால் தாமரை இதழ் கிழியத் தேன் வெளிப்படுகின்ற கெடிலவாணர் புட்பக விமானத்தைச் செலுத்தி வந்த இராவணனை ஒப்பற்ற மேம்பட்ட கயிலைமலையைப் பெயர்க்கமுற்பட்ட தோள்கள் நசுங்குமாறு வருத்திய திருவடியை உடையவர் .

குறிப்புரை :

பூண்ட - பூண்களையுடைய . பொருஇல் மால்வரை - ஒப்புயர்வில்லாத பெரிய திருக்கயிலை . தூண்டு - எடுத்த . ஈண்டு - கூடிமிக்க . மேதிபாய்தர நீர்க் கமலவாய் கீண்டு தேன் சொரிதரும் கெடிலம் .
சிற்பி