திருவையாறு


பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 1

விடகிலே னடிநாயேன் வேண்டியக்கா லியாதொன்றும்
இடகிலே னமணர்கள்த மறவுரைகேட் டலமந்தேன்
தொடர்கின்றே னுன்னுடைய தூமலர்ச்சே வடிகாண்பான்
அடைகின்றே னையாறர்க் காளாய்நா னுய்ந்தேனே.

பொழிப்புரை :

கீழான நாய் போன்ற யான் பொருட்பற்றை விடுவேன் அல்லேன் . வறியவராய் என்னிடம் இரந்து வந்தவர்களுக்கு யாதொன்றும் பிச்சையாக இடுவேன் அல்லேன் . சமணத்துறவியரின் அறவுரைகளைக்கேட்டு மனம் சுழன்றேன் . உன்னுடைய தூய மலர் போன்ற திருவடிகளைத் தரிசித்து வழிபடத் தொடர்ந்து அடைகின்றேன் . ஐயாறனாகிய உனக்கு அடிமைப்பட்டேனாய் அடியேன் கடைத்தேறினேன் . இனி உன் திருவடிகளை விடமாட்டேன் .

குறிப்புரை :

ஐயாறர்க்கு - திருவையாற்றப்பனார் திருவடிக்கு . அடி நாயேன் , விடகிலேன் - விடமாட்டேன் . பொருட்பற்றை விடகிலேன் . பிறர் யாதேனும் வேண்டியபோது யாதும் ஒரு சிறிதும் இடமாட்டேன் . அமணரது ( தருமோபதேசம் ) அறவுரையைக் கேட்டுத் தெளிவில்லாத கருத்தினனாய்க் கலங்கினேன் . உன்னுடைய தூய தாமரை மலர் போன்ற செய்ய திருவடியைக் கண்டு வழிபடத் தொடர்ந்து அடை கின்றேன் . இம்மீளா அடிமையாகின்ற நான் உமக்கே ஆளாய் ( விட்டதால் ) இனிப் பிறவிப் பெருந்துன்பத்தினின்றும் உய்தி பெற்றேன் . ` ஐயாறர் ` என்பதிலே உள்ள ரஃகான் ஒற்று , பலரறி சொல்லிற்குரியதன்று . ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவி ( உயர் சொல் ) ஆதலின் , ஐயாறனாகிய நினக்கு ஆளாய் உய்ந்தேன் என்று முன்னிலைக் கேற்பவுரைக்கலுமாம் . ஈற்றுப் பாடலிரண்டும் , ` ஐயாறர் ` என்பது சிவபிரானையே குறித்தலின் , முன்னைய எட்டுப் பாடலிலும் ` ஐயாறர் ` என்பது அடியார் முதலியோரைக் குறித்தலும் கூடும் என்பது பொருந்தாது .

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 2

செம்பவளத் திருவுருவர் திகழ்சோதி குழைக்காதர்
கொம்பமருங் கொடிமருங்குற் கோல்வளையா ளொருபாகர்
வம்பவிழு மலர்க்கொன்றை வளர்சடைமேல் வைத்துகந்த
அம்பவள வையாறர்க் காளாய்நா னுய்ந்தேனே.

பொழிப்புரை :

செம்பவளம் போன்ற அழகிய வடிவினராய் , ஒளி வீசும் குழைகளை அணிந்தகாதினராய் , கொம்பினை விரும்பிப்படரும் கொடி போன்ற இடையையும் திரண்டவளையல்களையும் உடைய பார்வதியின் பாகராய் , புதிதாக மலரும் கொன்றைப்பூவை வளரும் சடைமேல் வைத்து உகப்பவராகிய அழகிய பவளம் போன்ற நிறத்தையுடைய ஐயாற்றெம்பெருமானுக்கு அடியேன் அடிமையாகிக் கடைத்தேறினேன் .

குறிப்புரை :

செம்பவளம் இயைபின்மை நீக்கிய அடை . ` செம் பவளத்திரள் போல்வான் ` ( தி .6 ப .24 பா .4). ` பவளம் போல் மேனியிற் பால்வெண்ணீறு .` ` எரிபவள வண்ணன்காண் ` திகழ் சோதி - விண்மீன் போல விட்டு விட்டோளிரும் ஒளியை உடைய ( குழை ). ` குழைக் காதர் ` - ` குழைத்திகழ் காதினன் ` ( தி .4 ப .107 பா .5)` குழையார் திருத்தோடு காதிற் கண்டேன் ` ( தி .6 ப .77 பா .7) ` குழைகொள் காதினர் ` ( தி .5. ப .38 பா .1) ( கொம்பமருங் ) கொடி மருங்குலுக்கு (- இடைக்கு ) ஒப்பு . கோல் வளையாள் - அழகிய வளையலை அணிந்த அம்மையார் . வம்பு - மணம் . அம் - அழகிய . பவள ஐயாறர் :- ஆற்றிற்குப் பவளம் அடையாதலும் ஐயாறர்க்கு ஒப்பாதலும் பொருந்தும் . ` சோதிக்குழை ` எனலும் பாடம் .

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 3

நணியானே சேயானே நம்பானே செம்பொன்னின்
துணியானே தோலானே சுண்ணவெண் ணீற்றானே
மணியானே வானவர்க்கு மருந்தாகிப் பிணிதீர்க்கும்
அணியானே யையாறர்க் காளாய்நா னுய்ந்தேனே.

பொழிப்புரை :

அருகிலும் சேய்மையிலும் உள்ளவனே ! பொன்மயமான ஆடையை உடையவனே ! தோலாடையையும் உடையவனே ! பொடியாகிய வெண்ணீறு அணிந்தவனே ! சிந்தாமணி போல்பவனே ! தேவர்களுக்கும் பிணியைத்தீர்க்கும் மருந்தாகி நெருங்கியிருப்பவனே ! ஐயாறனாகிய உனக்கு அடிமையாய் அடியேன் கடைத்தேறினேன் .

குறிப்புரை :

நணியானே - அருகிலிருப்பவன் . சேயன் - சேய்மையில் ( தொலைவில் ) இருப்பவன் . அணியன் சேயன் . நண்ணற் கெளியவன் அரியவன் என்னும் இருதிறமும் உடையவன் என்றவாறு . ` காண்டற்கு அரிய கடவுள் கண்டாய் கருதுவார்க்கு ஆற்ற எளியான் கண்டாய் ` ( தி .6 ப .23 பா .1) ` நணுகாதார் ` ` நண்ணார் ` முதலியவற்றின் முதனிலையை உணர்ந்து , நணியான் ` என்பதற்கு உரைத்துக்கொள்க . ` அடியார்க்கும் அண்டத்தார்க்கும் அணியவன்கான் சேயவன்காண் ` ( தி .6 ப .48 பா .8) ` வஞ்சனையால் அஞ்செழுத்தும் வழுத்துவார்க்குச் சேயானை `( தி .6 ப .50 பா .4) ` மெய்த்தவன்காண் மெய்த் தவத்தின் நிற்பார்க்கெல்லாம் .` ( தி .6 ப .52 பா .8) ` விருப்பிலா இருப்புமன வினையர்க்கு என்றும் பொய்த்தவன்காண் ` ( தி .6 ப .48 பா .4) ` மெய்யர் மெய்நின்றவர்க்கு , அல்லாதவர்க்கு என்றும் பொய்யர் `, ` அஞ்சடக்கும் அடியவர்கட்கு அணியார் `, ` அன்பாகி நின்றார்க்கு அணியாய் போற்றி ` ( தி .6 ப .56 பா .2) ` சேயவன்காண் நினையார்க்கு ; சித்தம் ஆரத் திருவடியே உள்கி நினைந்தெழுவார் உள்ளம் ஏயவன்காண் .` ( தி .6 ப .64 பா .4) ` பழித்தவன்காண் அடையாரை , அடைவார் தங்கள் பற்றவன்காண் .` ( தி .6 ப .64 பா .6) ` மெய்யானைத் தன்பக்கல் விரும்புவார்க்கு , விரும்பாத அரும்பாவியவர்க்கு என்றும் பொய்யானை ` ( தி .6 ப .66 பா .5) ` துரிசறத் தொண்டு பட்டார்க்கு எரியானை , யாவர்க்கும் அரியான் தன்னை ` ( தி .6 ப .66 பா .9) ` பத்தர் பத்திக்குளைவானை அல்லாதார்க்குளையாதானை ` ( தி .6 ப .67 பா .3) என்பவற்றால் , ஈண்டுப் பொருள்கொள்ளும் ஆறு நன்கு விளங்கும் . செம்பொன்னின் துணியானே - பீதாம்பரத்தவனே . ( துணி , கிழி , ஆடை , அறுவை , வேட்டி முதலிய பலவும் ஒரு பொருட்பெயர்கள் .) பிணி தீர்க்கும் அணியானே :- ஆணவப் பிணி அகற்றி ஆட்கொள்ள உயிர்கட்கு உள்ளுயிராய்ப் பொருந்தியவனே . ` உள்ளுயிர்க் குயிராய்த் தெளிக்கும் அறிவு திகழ்ந்துளது .... திரிமலத்தே குளிக்கும் உயிர் அருள் கூடும்படி கொடி கட்டினனே .` ( கொடிக் கவி .1) ` ஆரேனும் அடியவர்கட்கு அணியான்றன்னை ` சுண்ணம் - பொடி . வானவர் - வீட்டுலகை நாடியவர் . மருந்து - சிவஞானம் சிவாநந்த அமிர்தமுமாம் . பிணி - மும்மல நோய்ப் பிணி . நோதலால் நோய் . பிணித்தலாற் பிணி . ` அணியான ` எனலும் பாடம் .

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 4

ஊழித்தீ யாய்நின்றா யுள்குவா ருள்ளத்தாய்
வாழித்தீ யாய்நின்றாய் வாழ்த்துவார் வாயானே
பாழித்தீ யாய்நின்றாய் படர்சடைமேற் பனிமதியம்
ஆழித்தீ யையாறர்க் காளாய்நா னுய்ந்தேனே.

பொழிப்புரை :

உலகத்தை அழிக்கும் ஊழித்தீயாய் நின்றவனே ! விரும்பித்தியானிப்பவர் உள்ளத்தில் உள்ளவனே ! உடம்பகத்து இருந்து உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத முத்தீயாய் இருப்பவனே ! வாழ்த்தும் அடியவர் வாயில் உள்ளவனே ! பிரமனும் திருமாலும் காணமுடியாதபடி பெரிய தீத்தம்பமாக நின்றவனே ! பரவிய சடையின் மேல் , உலகத்தாருக்குக் குளிர்ச்சி தரும் சந்திரனாய் , தலைவனைப் பிரிந்த தலைவிக்குக் கடலின் உள்ளிருக்கும் குதிரை முகத்தீப்போல வருத்தும் பிறையைச் சூடியவனே ! ஐயாறனாகிய உனக்கு ஆளாய் நான் உய்ந்தேனே .

குறிப்புரை :

ஊழித் தீயாய் நின்றாய் :- பிரளய காலாக்கினியாய் இருந்து உலகங்களை அழிக்கும் அத்துணைப் பரியாய் ஆயினும் , உள்கிநினைந்து எழுவார் உள்ளத்தில் உறையும் அத்துணை நுண்ணியனும் ஆனாய் . ` பெரியதிற் பெருமையும் சிறியதிற் சிறுமை யும் உரியது நினக்கே உண்மை பெரியோய் எனக்கு இன்று ` ( இருபா இருபஃது 6 ) ` பரியர் நுண்ணியர் ` ( தி .5 ப .27 பா .5) ` அணுவை யார்க்கும் தெரியாத தத்துவனை .... பெரியானை ` ( தி .6. ப .1 பா .1) ` சிறியையாய்ப் பெரியையாய் நின்ற நாளோ `, ` அணுத்தரும் தன்மையில் ஐயோன் ( நுண்ணியன் ) காண்க . இணைப்பரும் பெருமையில் ஈசன் காண்க ` ` அண்டப் பகுதியின் ........ விரிந்தன ........ அணுப்புரையைச் சிறிய ஆகப் பெரியோன் `. ( தி .8 திருவாசகம் .3). ` அண்டமோரணுவாம் பெருமை கொண்டு அணு ஓர் அண்டமாம் சிறுமை கொண்டு அடியேன் உண்ட ஊண் உனக்கு ஆம் வகை எனது உள்ளம் உள் கலந்து எழு பரஞ்சோதீ !` ( தி .9 திருவிசைப்பா .138) தீயாய் நின்றாய் எனினும் வாழ்த்துவார் வாயானாகிக் குளிர்விக்கின்றாய் . தீவண்ணனாயினும் செஞ் சடைமேல் வெண்மதியம் சூடினை . மகாசங்கார காலத்திலே ` ஊழிமுதல்வனாய் ` நின்ற ஒருவன் அன்றி , ஏனைய கடவுளர் எல்லோரும் அவ்வொருவனிடத்தில்தான் ஒடுங்குதல் வேண்டும் . அப்பொழுது , எல்லா வுலகங்களையும் அழிப்பது ( ப்ரளயாக்நி ) ஊழித்தீ . அத்தீயாய்ப் புறத்தே நின்றாலும் உள்குவார் உள்ளத்திலே ( அகத்தே ) யும் நிற்கும் ஈரியல்பும் வல்லான் . இது புறத்தீ . வாழித்தீ என்பது உடம்பகத்துள் இருந்து உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத முத்தீ . உடலில் என்றும் முத்தீ உள்ளன . பிரச்நோபநிஷத் . 4:- 3. அபாநன் காருகபத்தியம் . பிராணன் ஆகவனீயம் . வியாநன் தாக்கிணாக்கினி . அவற்றால்தான் உடல் வாழ்க்கை உயிர்க்குள்ளதாகின்றது . உடம்பில் உயிர் இனிது வாழ்வதாயின் , வாழவைத்தருளுங் கடவுளை வாழ்த்தும் . அவ் வாழ்த்தும் வாயிலே அக்கடவுள் சொல்லுருவாய் நின்று வாழ்த்து வித்து வாழ்த்துவான் . ` வாயானை மனத்தானை மனத்துள் நின்ற கருத்தானை `. உடம்பில் ஆகவநீயம் , காருக பத்தியம் , தாக்கி ணாக்கினி என்னும் முத்தீ இருந்து உயிர்க்கு வாழ்வளிப்பதால் ` வாழித்தீ ` என்றார் . அழிப்பது ஊழித்தீ . காப்பது வாழித்தீ . படைப்பது பாழித்தீ . பாழி - பெருமை . மாலும் அயனும் அஞ்சப் பெருகியதீ . ` நீண்ட மாலும் அயனும் வெருவ நீண்ட நெருப்பு ` ( தி .8 திருவாசகம் . 440) ஆழியினி ( கடலினி ) ன்றெழும் நெருப்புருண்டை போல்வ தாலும் , ஒளியுடைமையாலும் , காதலர் பிரிவாற்றாமைத் துன்பத்தை வளர்க்குந்தீ எனலாலும் பிறை மதியம் ` ஆழித்தீ ` எனப்பட்டது . மதியமாகிய ஆழித்தீயைப் படர்சடைமேல் ( உடைய ) ஐயாறர் என்க . மதியமும் ( செங்கதிராகிய ) ஆழித்தீயும் என்றுமாம் . எட்டுருவ ( அட்டமூர்த்த ) த்தில் இருசுடரும் அடங்குதல் காண்க .` திங்களாய் ஞாயிறாகி ` ` ஞாயிறும் தண்மதியும் ஆகி ` ` பால் மதியோடாதியாய் .

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 5

சடையானே சடையிடையே தவழுந்தண் மதியானே
விடையானே விடையேறிப் புரமெரித்த வித்தகனே
உடையானே யுடைதலைகொண் டூரூருண் பலிக்குழலும்
அடையானே யையாறர்க் காளாய்நா னுய்ந்தேனே.

பொழிப்புரை :

சடையை உடையவனே ! சடையில் தவழும் பிறையைச் சூடியவனே ! காளைவாகனனே ! காளை மீது இவர்ந்து முப்புரங்களையும் எரியச்செய்த திறமை உடையவனே ! எல்லோரையும் அடிமையாக உடையவனே ! மண்டை ஓட்டை ஏந்தி ஊர்தோறும் பிச்சை உணவுக்கு அலைபவனாய் எல்லோரும் அடையத்தக்க சரணியனே ! ஐயாறனாகிய உனக்கு அடியேன் ஆளாகி உய்ந்தேனே .

குறிப்புரை :

சடையான் ; சடைமேல் தவழும் குளிர்வெண்டிங்களான் ; விடை ( யின் மேல் வருவது ) உடையான் . விடையேறித் திரிபுரம் எரித்த ஞான சொரூபன் . ` முப்புரமாவது மும்மல காரியம் ` என்பது தமிழ்ச் சிவாகமம் ஆகிய திருமந்திரம் . உடையானே - சுவாமீ ! ஊர் ஊர் - ஊர்தொறும் . உண்பலிக்கு ஊர் ஊர் ( ஊர்தொறும் ) உழலும் . அடையான் - எவ்வுயிர்க்கும் தானே சரணியன் . உழலும் பொருட்டு அடையத் தக்கவனல்லன் எனலும் ஆம் . ` அடை ` முதனிலைத் தொழிற்பெயர் .

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 6

நீரானே தீயானே நெதியானே கதியானே
ஊரானே யுலகானே யுடலானே யுயிரானே
பேரானே பிறைசூடீ பிணிதீர்க்கும் பெருமானென்
றாராத வையாறர்க் காளாய்நா னுய்ந்தேனே.

பொழிப்புரை :

` நீரும் நெருப்பும் செல்வமும் செல்லும் வழியும் ஊரும் உலகமும் உடலும் உயிருமாகி இருப்பவனே ! பலதிரு நாமங்களை உடையவனே ! பிறை சூடியே ! பிணிகளைப் போக்கும் பெருமானே !` என்று பலகால் அழைத்தும் ஆர்வம் அடங்கப் பெறாது மேன்மேல் வளர்ந்து வரும் நிலையில் அடியேனை ஆட்கொண்டு அருளும் ஐயாறனாகிய உனக்கு ஆளாய் நான் உய்ந்தேன் .

குறிப்புரை :

நீரும் , நெருப்பும் , நிதியும் , செலவும் , ஊரும் , உலகும் . உடலும் , உயிரும் ஆயிருப்பவன் . ` பிறைசூடீ ` என நெடிலாகக் கொள்க . ` பித்தாபிறைசூடீ எனப் பெரிதாந் திருப்பதிகம் ` ( தி .12 பெரிய ). பிணி - மும்மலப்பிணி , ஊனுடற்பிணியுமாம் . ஆராத ஐயாறர் - ஆர்வம் அடங்கப் பெறாது மேல்மேல் வளர்த்துவரும் நிலையில் என்னை ஆட்கொண்டருளும் ஐயாறப்பர் .

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 7

கண்ணானாய் மணியானாய் கருத்தானா யருத்தானாய்
எண்ணானா யெழுத்தானா யெழுத்தினுக்கோ ரியல்பானாய்
விண்ணானாய் விண்ணிடையே புரமெரித்த வேதியனே
அண்ணான வையாறர்க் காளாய்நா னுய்ந்தேனே.

பொழிப்புரை :

கண்ணாகவும் கண்ணின் மணியாகவும் , அக நோக்கத்திற்கு உரிய கருத்தாகவும் , நுகர்ச்சியாகவும் , எண்ணாகவும் , எழுத்தாகவும் , எழுத்தின் இயல்பாகவும் , பரவெளியாகவும் , வானத்தில் இயங்கிய மும்மதில்களை அழித்த வேதியனாகவும் , அடியேனுக்கு நெருங்கியவனாகவும் உள்ள ஐயாறனாகிய உனக்கு ஆளாய் நான் உய்ந்தேனே .

குறிப்புரை :

கண்ணும் மணியும் புறப்பார்வைக்குரியன . கருத்தும் அருத்தும் அகநோக்கத்திற்குரியன . அருத்து - நுகர்ச்சி . அருந்து - அருத்து . பொருந்து - பொருத்து . திருந்து - திருத்து . இவை அம் ஈறு உற்று அருத்தம் , பொருத்தம் , திருத்தம் என்றாகும் . ` அருத்தம் ` என்ற வடசொல் வேறு . எண்ணும் எழுத்தும் எழுத்தியல்பும் ஆனாய் என்பன , நாதம் , விந்து , விந்து காரியங்களின் இயல்பு உணர்த்தியன . ` எண்ணென்ப ஏனை எழுத்தென்ப ` என்ற குறட்பொருளும் ஆம் . விண் - வெளி . முப்புரம் எரித்த மறையவன் சிவபிரான் . அண்ணான் அவ்வையாறர்க்கு . யாவர்க்கும் அண்ணாதவன் . ` அண்ணலாகா அண்ணல் நீழல் ஆரழல் போலுருவம் ` ( தி .1 ப .49 பா .9) ` உடம்பெல்லாம் கண்ணாய் அண்ணா வெள்ளம்தான் பாயாதால் ` ( தி .8 திருவாசகம் .) அண் ஆன - அண்ணுதல் ஆகிய எனலும் அப்பரை நோக்கிற் பொருந்தும் . அண் - அண்மை . அணிமையிலுள்ள ஐயாறர்க்கு .

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 8

மின்னானா யுருமானாய் வேதத்தின் பொருளானாய்
பொன்னானாய் மணியானாய் பொருகடல்வாய் முத்தானாய்
நின்னானா ரிருவர்க்குங் காண்பரிய நிமிர்சோதி
அன்னானே யையாறர்க் காளாய்நா னுய்ந்தேனே.

பொழிப்புரை :

மின்னாகவும் இடியாகவும் வேதத்தின் பொருளாகவும் , பொன்னாகவும் மணியாகவும் அலைகள் மோதும் கடலில் உள்ள முத்தாகவும் உள்ளவனே ! நின்னைப் போலத் தம்மைப் பரம்பொருளாகக் கருதிய பிரமனும் திருமாலும் காணமுடியாத உயர்ந்த தீப்பிழம்பாய் நின்ற அத்தன்மையனே ! இவ்வாறு உள்ள ஐயாறனாகிய உனக்கு ஆளாய் நான் உய்ந்தேனே .

குறிப்புரை :

மின்னும் அம்மின்னுருமும் ஆனாய் . ` மின்னுருவை விண்ணகத்தில் ஒன்றாய் ` ( திருத்தாண்டகம் ). ` மின்னானை மின்னிடைச்சேர் உருமினானை வெண்முகிலாயெழுந்து மழை பொழிவான்றன்னை ` ` அளவில் சோதி மின்னவன்காண் உருமவன் காண் ` கடிய உருமொடு மின்னே போற்றி ` என்ற தாண்டகப் பகுதிகளை நோக்கின் , ` உருவானாய் ` என்றது பிழை எனல் புலப்படும் . வேதப்பொருள் :- வாசகம் வேதம் . வாச்சியம் சிவபிரான் . பொன் மணி முத்து ஆனாய் :- ` இப்பொன்நீ இம்மணிநீ இம்முத்தும்நீ இறைவன்நீ ஏறூர்ந்த செல்வன் நீயே .` ` பொன்னானாய் மணியானாய் நின்னானார் :- ` யான் கடவுள் ` எனத் தனித்தனி நீயானார் . காண்பு - காண்டல் . அரிய சோதி . நிமிர் சோதி . ` காண்பினிய செழுஞ்சுடர் ` ` நின்னாவார் பிறரன்றி நீயே ஆனாய் ` சோதி அன்னான் - அனலுருவாகிய அவ்வளப்பரிய தன்மையன் . ஒத்தவனுமாம் .

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 9

முத்திசையும் புனற்பொன்னி மொய்பவளங் கொழித்துந்தப்
பத்தர்பலர் நீர்மூழ்கிப் பலகாலும் பணிந்தேத்த
எத்திசையும் வானவர்க ளெம்பெருமா னெனவிறைஞ்சும்
அத்திசையா மையாறார்க் காளாய்நா னுய்ந்தேனே.

பொழிப்புரை :

முத்துக்களோடு கூடிவரும் காவிரியின் வெள்ளம் , செறிந்த பவளங்களை அரித்துக் கரைசேர்க்க , பத்தர்பலர் காவிரி நீரில் மூழ்கிப் பலகாலும் வணங்கித்துதிக்க எல்லாத் திசைகளிலும் தேவர்கள் ` எம்பெருமான் !` என்று கூப்பிட்டவாறே வழிபடும் அத்திசைகளில் எல்லாம் அவர்கள் வழிபாட்டை ஏற்கும் ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே .

குறிப்புரை :

முத்து இசையும் புனல் பொன்னி மொய்பவளம் கொழித்து :- காவிரி முத்துக்களையும் பவளங்களையும் கொழித்து வருஞ் சிறப்புணர்த்திற்று . பத்தர் :- ` பத்துடையடியவர் ` என்றதால் , திருவடிப்பற்று ( பத்து . மரூஉ ) உடையவர் . பத்தர் எனலுமாம் . பலகால் :- காலை , மாலை , நடுப்பகல் , நள்ளிரவு , ஒருபோது , இரு போது , முப்போதும் , நாற்போதும் , எப்போதும் எனத் திருமுறைகளிற் பயின்றவாறறிக . எத்திசையும் எம்பெருமான் என்று போற்றி வழிபடும் வானவர்கட்கு அத்திசையில் நின்று அருளும் ஐயாறர்க்கு ஆளாய் உய்ந்தேன் . அத்திசையே யாகும் ஐயாறர் எனலும் ஆகும் .

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 10

கருவரைசூழ் கடலிலங்கைக் கோமானைக் கருத்தழியத்
திருவிரலா லுதைகரணஞ் செய்துகந்த சிவமூர்த்தி
பெருவரைசூழ் வையகத்தார் பேர்நந்தி யென்றேத்தும்
அருவரைசூ ழையாறர்க் காளாய்நா னுய்ந்தேனே.

பொழிப்புரை :

கடலிடையே பெரிய மலைகளால் சூழப்பட்ட இலங்கை நகர் மன்னனாகிய இராவணனை அவன் எண்ணம் அழியுமாறு திருவிரலால் அழுத்தி உதைத்தலாகிய செயலைச்செய்து அவன் செருக்கை அடக்கி மகிழ்ந்த சிவமூர்த்தியாய் , பெரிய கடலால் சூழப்பட்ட இந்நில உலகத்தவர் நந்தி என்று பெயரிட்டு வழிபடும் , பெரிய மூங்கிற் காடுகள் சூழ்ந்த ஐயாற்று எம்பெருமானுக்கு , அடியேன் அடிமையாகிக் கடைத்தேறினேன் .

குறிப்புரை :

கருவரை - பெரியமலை . கோமான் - கோமகன் . கருத்து ` யானே எல்லாம் செய்ய வல்லேன் ` என்னும் செருக்கு . திருவிரல் - திருக்காற் பெருவிரல் . உதைகரணம் - உதைத்தலாகிய செயல் . உகந்த - உயர்ந்த . சிவமூர்த்தி :- ` சிவனாய மூர்த்தி `. பெருவரைசூழ் வையகத்தார் :- பனிமலை முதலிய பெரிய மலைகள் சூழ இடைப்பட்டு நிலவும் மண்ணகமாகிய பரதகண்டத்துச் சிவனடியார்கள் நந்தி என்று பேரிட்டு ஏத்தும் ஐயாறர் . அருவரை :- அளவிடற்கு அரிய மூங்கிற் காடு முதலியவை . ஐயாற்றைச் சூழ்ந்து மலைகள் உளவோ ?
சிற்பி