பொது


பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 1

பருவரை யொன்றுசுற்றி யரவங்கைவிட்ட விமையோரிரிந்து பயமாய்த்
திருநெடு மானிறத்தை யடுவான்விசும்பு சுடுவானெழுந்து விசைபோய்ப்
பெருகிட மற்றிதற்கொர் பிதிகாரமொன்றை யருளாய்பிரானே யெனலும்
அருள்கொடு மாவிடத்தை யெரியாமலுண்ட வவனண்டரண்ட ரரசே.

பொழிப்புரை :

பெரிய மலையைச் சுற்றிக் கடைகயிறாகக் கொண்ட பாம்பினை விடுத்து நீங்கிய தேவர் ஓடி அஞ்சும்படியாகத் திருமால் திருமேனியை ஒழித்தற்பொருட்டும் , விண்ணைச்சுடும் பொருட்டும் எழுந்து விசையொடு சென்று அந்நஞ்சு எங்கும் பரவ , ` பெருமானே ! இவ் விடத்துன்பம் நீங்குதற்கு ஒரு கழுவாய் அருளிச்செய்வாயாக ` என்று எல்லோரும் வேண்டவும் அருளினால் , அப்பெரிய விடத்தை , மற்றவர்களைத் தாக்காதவாறு உண்ட பெருமானே எல்லா அண்டங்களுக்கும் அரசனாவான் .

குறிப்புரை :

பருவரை - மந்தரமலை , மேரு எனலுமுண்டு . அரவம் - ` வாசுகி ` என்னும் பாம்பு . கைவிட்ட இமையோர் :- நஞ்சு எழுதல் கண்டு அஞ்சிக் கடைதலைக் கைவிட்டு இரிந்தோடிய விண்ணவர் . பிரானே இதற்கு ஒரு பிரதிகாரம் ( பிதிகாரம் , கழுவாய் ) அருள் செய்வாய் என்று வேண்டினர் . அவர் வேண்டியவாறு நல்கியருள இறைவன் திருவுள்ளத்திற் பேரிரக்கம் கொண்டான் . கொண்டு , ` கண்டாரைக் கொல்லும் நஞ்சு உண்டால் என்ன ஆகும் என்று கருதாமல் அதனை உண்டும் நின்றான் . உண்ணற்கரிய நஞ்சை உண்டதால் , ஒருதோழம் தேவர் எரியாமை விண்ணிற் பொலியலாயினர் ( தி .1 ப .74 பா .7). திருநெடுமால் திருமேனியை ஒழித்தற் பொருட்டும் , விண்ணைச் சுடும் பொருட்டும் , எழுந்து விசையொடு சென்று பெருகிய அந்நஞ்சு , தன்னைக் கண்டு அஞ்சி ஓடிய இமையோர் முதலோரை எரிக்குமேயன்றித் திருநீலகண்டனை எரிக்குமோ ? பிறரை எரியாமல் அந்நஞ்சினை உண்ட அவனே தேவதேவேசன் . அண்டர் - தேவர் . அண்டரண்டர் - தேவதேவர் . அண்டரண்டரரசு - தேவதேவேசன் . சுற்றிக் கைவிட்ட இமையோர் இரிந்து ஆய் , அடுவான் சுடுவான் எழுந்துபோய்ப் பெருகிட அருளாய் எனலும் , கொடு , உண்ட அவனே அரசு என்க . ஏகாரம் பிரித்துக் கூட்டப்பட்டது . சரண் - புகல் . வெலற்கரிய செயலாற்றி வென்ற திறம் தோன்ற வெற்றிக்கொடி தூக்கினன் என்ன ; ` உண்ணற்கரிய நஞ்சை உண்டு ஒரு தோழம் தேவர் விண்ணிற் பொலிய அமுதம் அளித்த விடைசேர் கொடியண்ணல் ` என்று அருளினார் ஆளுடைய பிள்ளையார் . ( தி .8 திருவாசகம் . 34, 219.)

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 2

நிரவொலி வெள்ளமண்டி நெடுவண்டமூட நிலநின்றுதம்ப மதுவப்
பரமொரு தெய்வமெய்த விதுவொப்பதில்லை யிருபாலுநின்று பணியப்
பிரமனு மாலுமேலை முடியோடுபாத மறியாமைநின்ற பெரியோன்
பரமுத லாயதேவர் சிவனாயமூர்த்தி யவனாநமக்கொர் சரணே.

பொழிப்புரை :

பரவிய ஓசையை உடைய வெள்ளப்பெருக்கு மேற் சென்று நீண்ட கண்டங்களை மூழ்க்க , நிலத்திலே நின்ற தீத்தம்பத்தில் பரம்பொருளாகிய ஒப்பற்ற தெய்வம் அடைய , பிரமனும் திருமாலும் இதனை ஒத்த தீப்பிழம்பு முன்னும் இல்லை என்று கருதி அந்நாளில் இரு பக்கங்களிலும் நின்று பணியுமாறு அவர்கள் அதன் முடியையும் அடியையும் அறிய முடியாமல் நின்ற பெரியோனாய் மேம்பட்ட முற்பட்ட தேவனாம் சிவமூர்த்தியாகிய பெருமானே நமக்குப் பாதுகாவல் நல்கும் சரணியன் ஆவான் .

குறிப்புரை :

பெரியோன் சிவனாய பரமுதலாய மூர்த்தி . தேவர் சிவன் . மூர்த்தி என்க . நிரவொலி - நிரந்த (- பரவிய ) ஓசை . ஓங்காரநாதம் . ` நிரந்த பாய்மா - மாப்பரந்தன ` ( சிந்தாமணி . 1859 ). வெள்ளம் - பெருக்கு . மண்டி - மேற்சென்று . நெடு அண்டம் மூட - நீண்ட அண்டங்களை உட்படுத்த . தம்பமது நிலம் நின்று அப் பரம் ஒரு தெய்வம் எய்த - தூண் நிலத்தே நின்று அதிலே அப் பரம்பொருளாகிய ஒப்பற்ற தெய்வம் அடைய ; பிரமனும் மாலும் இது ஒப்பது இல்லை ( என்று ) இருபாலும் நின்று பணிய , அவ்விருவரும் முறையே மேலை முடியொடு பாதம் அறியாமை ( அழற்றூணாக ) நின்ற பெரியோன் பரமுதலாய தேவன் . சிவனா ( கி ) ய மூர்த்தி . ` தேவர் `:- ஐயாறர் ( தி .4 ப .13. பா .1) க்கு உரைத்தாங்கு உரைத்துக்கொள்க . நமக்கு ஒருபுகலாம் அவன் ஆ ( கு ) ம் . ஒரு கற்பத்திலே , பாற்கடலிற்றுயின்ற திருமாலுக்கும் அவனை மகனே என்றெழுப்பிய நான்முகனுக்கும் அதனாற் சொற்போர் விளைந்தது . அங்குச் சிவதாணு தோன்றிற்று . அதன் அடி முடி தேடியறியவல்லேன் என்றிருவரும் செருக்குற்று , மாற்பன்றி அடியையும் பிரமக்கழுகு முடியையும் தேடலாயின ; திகைத்தன . ஐந்து திருமுகத்துடன் ஓங்காரநாத வெள்ளம் அண்டமெல்லாம் பரவ , மூவர்கோனாய் நின்ற முதல்வன் , அத்தாணுலிங்கத்திலே காட்சி தந்து , அவர்க்குத் , தானே பரம் என்று காட்ட , அவர் இது ஒப்பது இல்லை என்று தெளிந்து வழிபட்டனர் . ( வாமன புராணம் ; சிவ மகாபுராணம் முதலத்தியாயம் பார்க்க ). ` பூவார் பொற்றவிசின் மிசையிருந்தவனும் பூந்துழாய் புனைந்த மாலும் ` கழுகுருக் கொண்ட உண்மை விளங்கும் ( தி .2 ப .32 பா .9. இரண்டாவது திருமுறையின் எம் குறிப்பை நோக்குக ). ` ஓவாது கழுகு ஏனமாய் உயர்ந்து ஆழ்ந்து உறநாடி உண்மைகாணாத்தேவாரும் திருவுருவன் ` ( தி .1 ப .131 பா .9) ` ஏனம் கழுகானவர் உன்னை முன் என்கொல் வானம் தலம் மண்டியும் கண்டிலாவாறே ` ( தி .2 ப .37 பா .9) ` பருத்துருவதாகி விண் அடைந்தவன் ஓர் பன்றிப் பெருத்துருவதாய் உலகிடந்தவன் ` ( தி .2 ப .32 பா .9) ` புண்டரிகத்துள் இருந்த புத்தேள் கழுகுருவாய் , அண்டரண்டம் ஊடுருவ ஆங்கோடிப் பண்டொருநாள் , காணான் இழியக் கனக முடிகவித்துக் கோணாது நின்ற குறிபோற்றி ` ( 11, நக்கீரர் , போற்றித் திருக்கலி வெண்பா . ) என்பவற்றால் , அயன் ` பிரமனரி என்றிருவரும் தம்பேதைமையால் பரமம் யாம்பரம் என்றவர்கள் பதைப்பொடுங்க அரனார் அழலுருவாய் அங்கே அளவிறந்து பரமாகிநின்றவா தோணோக்கம் ஆடாமோ .` ( தி .8 திருவா . 326) மகாவிட்டுணுவும் பிரமதேவனும் சிவஞான உண்மையாகிய திருவடியே எல்லாத் தேவர்கட்கும் உயிர்ப் பிரேரக மகாதேவன் எனத் தெரியாது ... ... தாமே பரப்பிரமம் என வாதம் கூறி அமரிட்டனர் . ( தாண்டவராய சுவாமி உரை ).

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 3

காலமு நாள்களூழி படையாமுனேக வுருவாகிமூவ ருருவில்
சாலவு மாகிமிக்க சமயங்களாறி னுருவாகிநின்ற தழலோன்
ஞாலமு மேலைவிண்ணோ டுலகேழுமுண்டு குறளாயொராலி னிலைமேல்
பாலனு மாயவற்கொர் பரமாயமூர்த்தி யவனாநமக்கொர் சரணே.

பொழிப்புரை :

நாண்மீன்கள் முதல் ஊழி முடியப் பாகுபட்ட காலத்தையும் படைத்தற்கு முன்பு ஒன்றாய் நின்றவனாய் , மும் மூர்த்திகள் உருவிலும் அவர்கள் உயிருக்கு உயிராய் அமைந்தவனாய் , அறுவகைச் சமயத்தோருக்கும் அவ்வவர் பொருளாய் விளங்கி நிற்பவனாய் , உள்ள சோதி வடிவான பெருமான் வாமனனாகி மண்ணும் மேலை விண்ணுலகும் அடங்கிய ஏழுலகமும் உண்டு , ஓர் ஆலிலை மேல் சிறு குழந்தையாய்ப் பள்ளி கொண்ட திருமாலுக்கும் மேம்பட்ட மூர்த்தியாய் உள்ளவன் . அவன் தான் நமக்கு ஒப்பற்ற சரணியன் .

குறிப்புரை :

நாள் ( அசுவினி முதலியவை ) முதல் ஊழி முடியப் பாகுபட்ட காலத்தையும் படைத்தற்கு முன்பு ஒன்றாய் நின்றவன் ; மூவர் உருவிலும் அவர் உயிர்க்குயிராய் அமைந்தவன் ; ` அறுவகைச் சமயத்தோர்க்கும் அவ்வவர் பொருளாய் ` விளங்கி நிற்பவன் . ` ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதி ` வடிவானவன் ; மண்ணும் மேலை விண்ணும் அடங்கிய ஏழு உலகும் உண்டு குறளனாய் ஓர் ஆலிலைமேலே பாலனாய்ப் பள்ளிகொண்ட திருமாலுக்குப் பரமாயதொருமூர்த்தி . அவன் நமக்குப் புகல் ஆவான் . தழலோன் பரமாய மூர்த்தி என்க . ` காலங்கள் ஊழியாய் நின்றாய் நீயே ` ` காற்றாகிக் கார்முகிலாய்க் காலம் மூன்றாய் ` ` கூறும் நாளாம் கொள்ளும் கிழமையாம் கோளேதானாம் ` ` கொண்ட சமயத்தோர் தேவனாகி ` ` வானோர் தங்கட்கு எல்லாம் காலனாம் ` ` ஆனாய் என்பது அனைத்தும் அவ்வவை தானாகாமையைச் சாற்றிடும் என்க ` ( சங்கற்பநிராகரணம் நிமித்தகா . பரி . நிரா . 80-81 ) என்றவாறு ஆகாத முன்னைய நிலைமை ஒன்று உண்டு . அவ்வொன்றே ` ஏக வுரு ` எனப்பெற்றது ` முன்னம் இருமூன்று சமயங்களவை ஆகிப் பின்னை அருள் செய்த பிறையாளன் ` ( தி .2 ப .29 பா .5) ` ஆறு சமயங்கட்கு ஒரு தலைவன் ` ( தி .1 ப .131 பா .1) ` அறிவினான் மிக்க அறுவகைச் சமயம் அவ்வவர்க்கு அங்கே ஆரருள் புரிந்து ` ( தி .7 ப .55 பா .9). ` அவசங்கரா சலம்கொண்டு ` ( திருப்புகலூரந்தாதி . 95. )

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 4

நீடுயர் விண்ணுமண்ணு நெடுவேலைகுன்றொ டுலகேழுமெங்கு நலியச்
சூடிய கையராகி யிமையோர்கணங்கள் துதியோதிநின்று தொழலும்
ஓடிய தாரகன்ற னுடலம்பிளந்தும் ஒழியாதகோப மொழிய
ஆடிய மாநடத்தெ மனலாடிபாத மவையாநமக்கொர் சரணே.

பொழிப்புரை :

நெடிது உயர்ந்த விண்ணும் மண்ணும் நெடிய கடல் மலைகளொடு ஏழுலகமும் முழுதும் வருந்த வருத்திய தாரகனுடைய கொடுமைகளுக்கு ஆற்றாமல் தேவர் கூட்டத்தார் குவித்த கையராகிப் பெருமானுடைய புகழ்களைக் கூறியவாறு தொழுத அளவில் , தன் இறுதியை நினைத்து உயிர்தப்பி ஓடிய தாரகனுடைய உடலைப் பிளந்தும் நீங்காத கோபம் நீங்குதற்பொருட்டு மகாதாண்டவத்தை ஆடிய தீயாடியப்பருடைய திருவடிகளே நமக்கு ஒப்பற்ற அடைக்கலம் நல்குவன .

குறிப்புரை :

நெடிதுயர்ந்த விண்ணும் மண்ணும் நெடிய கடல் மலைகளொடு , ஏழுலகு முழுதும் வருந்த வருத்திய தாரகன் கொடுமைகளுக்கு ஆற்றாமல் , தேவர் கூட்டத்தினர் , தலைமேற் குவித்து வணங்கித் தூவும்பொருட்டு மலர்களைக் கொண்டு சிவனடி சூடிய கைகளை உடையவராகிப் புகழ் பாடி நின்று தொழுதனர் . தொழுததும் , இனி நமக்கு முடிவுண்டாவது உறுதி (` தொழுவார்க்கே அருளுவது சிவபெருமான் ` தி .12 பெரிய . 1981) எனத் தெரிந்து ஓடிய தாரகாசுரனது உடலைப் பிளந்தும் ஒழியாத சீற்றம் ஒழிதற்கு ஏதுவாகிய மகாதாண்டவத்தை ஆடிய தீயாடியின் திருவடிகளே நமக்கு ஒரு புகலாகும் . சிவபிரானுக்குரிய இது மற்ச புராணத்திலுள்ளது . கந்த புராணத்தினது முருகப்பிரானுக்குரியது . சூடுகழல் . 139. சித்தாந்தம் தொ .8 ப . 6 பக்கம் 121-2.

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 5

நிலைவலி யின்றியெங்கு நிலனோடுவிண்ணு நிதனஞ்செய்தோடு புரமூன்
றலைநலி வஞ்சியோடி யரியோடுதேவ ரரணம்புகத்த னருளால்
கொலைநலி வாளிமூள வரவங்கைநாணு மனல்பாயநீறு புரமா
மலைசிலை கையிலொல்க வளைவித்தவள்ள லவனாநமக்கொர் சரணே.

பொழிப்புரை :

எதிர்த்து நிலைத்து நிற்பதற்குரிய வலிமை இல்லாமையால் , மண்ணையும் , விண்ணையும் எங்கும் அழித்துக் கொண்டு சஞ்சரிக்கும் திரிபுரங்கள் துன்புறுத்தும் துயரத்துக்கு அஞ்சி ஓடித் திருமாலோடு தேவர்கள் அடைக்கலம் என்று அடையத் தன் அருளால் கொலைத் தொழிலால் வருத்தும் திருமாலாகிய அம்பில் தீக்கடவுள் இணையவும் , கையிலுள்ள வாசுகி என்ற பாம்பாகிய நாணில் தீப்பாயவும் மேருமலையாகிய வில் கையில் தளரவும் முப்புரங்களும் சாம்பலாகிவிடுமாறு வில்லை வளைவித்துச் செயற்படுத்திய அருட் கொடையாளனாம் அப்பெருமானே நமக்கு ஒப்பற்ற அடைக்கலம் நல்குபவனாவான் .

குறிப்புரை :

நிலைக்கும் வலிமை இல்லாமல் , மண்ணோடு விண்ணெங்கும் அழிவு செய்தோடும் முப்புரம் அலைக்கும் வருத்தத்தை அஞ்சித் திருமால் முதலிய தேவர் யாவரும் காவலானதோரிடத்திற் புக்கொளிய , தன் இரக்கத்தால் , கொலைத் தொழிலால் வருத்தும் மால்கணை கூரெரிகொள்ளவும் கையில் உள்ள வாசுகி நாணின் அனல் பாயவும் மேரு மலை ( யாகிய ) வில் கையில் தளரவும் வளையச் செய்த அருட்கொடையாளனாகிய அவன் நமக்கு ஒரு புகலாவான் ; இது முப்புரம் எரித்த மாண்புணர்த்திற்று . ` அப்பணி செஞ்சடை ஆதி புராதனன் , முப்புரஞ் செற்றனன் என்பர்கள் மூடர்கள் , முப்புரமாவது மும்மல காரியம் , அப்புரம் எய்தமை ஆர் அறிவாரே .` ( தி .10 திருமந்திரம் . 343) நிதநம் - அழிவு . நிதனம் - திரிபு . ( அமரம் - க்ஷத் - சு .116) ( கீதை - 3 35)

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 6

நீலநன் மேனிசெங்கண் வளைவெள்ளெயிற்ற னெரிகேச னேடிவருநாள்
காலைநன் மாலைகொண்டு வழிபாடுசெய்யு மளவின்கண்வந்து குறுகிப்
பாலனை யோடவோடப் பயமெய்துவித்த வுயிர்வவ்வுபாசம் விடுமக்
காலனை வீடுசெய்த கழல்போலுமண்டர் தொழுதோதுசூடு கழலே.

பொழிப்புரை :

கருநீல மேனியனும் சிவந்த கண்ணினனும் வளைந்த வெள்ளைக் கோரப் பற்களை உடையவனும் நெருப்புப் போன்ற சிவந்த மயிர் முடியை உடையவனும் ஆகிய காலன் , மார்க்கண்டேயனைத் தேடிவந்த அன்று , அம்முனிவன் காலையிலே நல்ல மலர் மாலைகளைக் கொண்டு சிவபெருமானை வழிபாடு செய்த நேரத்தில் அவனிடத்து வந்து அணுகி அவனை மிகவும் அச்சுறுத்தி அவன் உயிரைக் கவரக்கயிற்றை வீசினானாக , அக்காலனை உதைத்து அழித்த சிவபெருமான் திருவடிகளே தேவர்கள் தொழுது வாழ்த்தித் தலைமேல் சூடும் திருவடிகளாகும் .

குறிப்புரை :

காலன் கரியமேனியன் . செங்கண்ணன் . வளைந்த வெள்ளைக் கோரப் பல்லினன் . தீயைப்போலும் குஞ்சியன் . ( தி .2 ப .18 பா .9) மார்க்கண்டேய முனிவரைத் தேடி வருகின்றான் . அந் நாளிலேயும் , வழக்கம்போல் , காலையில் நல்ல ( மணமலர் ) மாலை ( முதலிய பூசைக்குரிய பொருள்களைக் ) கொண்டு வழிபாடு ஒழிபாடு இன்றிச் செய்து கொண்டிருக்கின்றார் அம்முனிவர் . அவ்வளவில் அக்காலன் வந்தணுகினான் . காலனார் அப்பாலனாரை அச்சுறுத்தி , அவ்விடத்தின் நீக்கி ஓட்ட , உயிரைக் கவரும் கயிறு வீசினான் . அவனைக் காலால் வீசினான் கடவுள் . அக்கடவுளின் கழற்காலே வானோர் வாழ்த்தி வணங்கித் தலைமேற் சூடும் மலர்க்கழல் . காலக் கடவுள் வாழ்த்தாகப் பதிற்றுப்பத்தின் காப்பெனப்படுவது ஒன்றுண்டு . அஃது ஈண்டு நோக்கற்பாலது . 1. ` எரியெள்ளுவன்ன நிறத்தன் ; 2. விரியிணர்க் கொன்றையம் பைந்தார் அகலத்தன் ; 3. பொன்றார் எயில் எரியூட்டிய வில்லன் ; 4. பயில் இருட்காடு அமர்ந்து ஆடிய ஆடலன் ; 5. நீடிப்புறம்புதை தாழ்ந்த சடையன் ; 6. குறங்கு அறைந்து வெண்மணி ஆர்க்கும் விழவினன் ; 7. நுண்ணூற் சிரந்தை இரட்டும் விரலன் ; 8. இரண்டு உருவாய் ஈர் அணிபெற்ற எழில் தகையன் ; 9. ஏரும் இளம் பிறை சேர்ந்த நுதலன் ; 10. களங்கனிமாறு ஏற்கும் பண்பின் மறுமிடற்றன் ; 11. தேறிய சூலம் பிடித்த சுடர்ப்படைக் காலக்கடவுட்கு உயர்கமா வலனே .` இது சாவா நலம்பெற விரும்புவார்க்கு உள்ளற்பாடல் ( தியாந சுலோகம் ) ஆகும் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 7

உயர்தவ மிக்கதக்க னுயர்வேள்விதன்னி லவியுண்ணவந்த விமையோர்
பயமுறு மெச்சனங்கி மதியோனுமுற்ற படிகண்டுநின்று பயமாய்
அயனொடு மாலுமெங்க ளறியாமையாதி கமியென்றிறைஞ்சி யகலச்
சயமுறு தன்மைகண்ட தழல்வண்ணனெந்தை கழல்கண்டுகொள்கை கடனே.

பொழிப்புரை :

தவத்தில் மேம்பட்ட தக்கன் நிகழ்த்திய மிகச் சிறப்பான வேள்வியில் அவியைப் பெற்று உண்ண வந்த தேவர்களும் அச்சம் மிக்குற்ற வேள்வித் தலைவனும் அக்கினியும் சந்திரனும் ஒறுக்கப்பட்டு அடைந்த நிலைமையை நோக்கி அச்சத்தோடு நின்று பிரமனும் , திருமாலும் , ` எங்கள் அறியாமை முதலிய குற்றங்களைப் பொறுத்தருள்வாய் `, என்று வணங்கி அப்பாற் செல்ல , வெற்றியுற்ற தன்மையைக் கண்ட , தீயைப் போன்ற செந்நிறத்தன் ஆகிய எங்கள் தந்தையின் திருவடிகளைக் கண்டு வழிபடுவதே பிறவாதிருக்க விரும்பும் உயிர்களின் கடமையாகும் .

குறிப்புரை :

உயர்ந்த தவத்தில் மிக்க தக்கனது வேள்வியில் அவியுணவுகொள்ளவந்த வானவரும் அச்சம் மிக்குற்ற வேள்விக் கோவும் அக்கினியும் சந்திரனும் அடைந்த நிலை நோக்கி அஞ்சி நின்று பிரமனும் விண்டுவும் ` எங்கள் அறியாமை முதலிய குற்றங்களைப் பொறுத்தருள்வாய் ` என்று வணங்கி நீங்க , வெற்றியுற்ற தன்மையைக் கண்ட தீ வண்ணன் ஆகிய என் அப்பனுடைய திருவடியைக் கண்டு கொள்வதே ( பிறவாதிருக்க விரும்பும் உயிர்களின் ) கடனாகும் . அங்கி - தீ ; ( அக்நீ ). கமி - க்ஷமி , பொறு . சயம் - ஜயம் . கண்டுகொள்ளல் . ` உடையாய் என்னைக் கண்டுகொள்ளே ` ( திருவாசகம் . 5). ` கண்டுகொள் என்று காட்டிய ... ... சேவடி ` ( தி .8 திருவாசகம் . 583) ` கண்டுகொள் என்று உன் மெய்க்கழலடி காட்டிப் பிரியேன் என்றென்றருளிய அருள் ` ( தி .8 திருவாசகம் . 600). ` வண்டார் குழலியைக் கண்டுகொள் என்றது ( தி .8 திருக்கோவைக்கொளு 212) இது தக்கன் வேள்வி யழித்ததுணர்த்திற்று . இதனைத் தி .8 திருவாசகம் :- 189, 212, 259, 278, 289 ஆம் பாடல்களிலும் திருவுந்தியாரிலும் காண்க . 6. 53. 4; 6. 88. 2.

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 8

நலமலி மங்கைநங்கை விளையாடியோடி நயனத்தலங்கள் கரமா
உலகினை யேழுமுற்று மிருண்மூடமூட விருளோடநெற்றி யொருகண்
அலர்தர வஞ்சிமற்றை நயனங்கைவிட்டு மடவாளிறைஞ்ச மதிபோல்
அலர்தரு சோதிபோல வலர்வித்தமுக்க ணவனாநமக்கொர் சரணே.

பொழிப்புரை :

அழகும் பண்பும் மிக்க பார்வதி எம்பெருமானோடு ஓடி விளையாடிய பொழுது அவனுடைய கண்களைக் கைகளால் பொத்த , ஏழு உலகங்களையும் முழுதுமாக இருட்டுக் கவர்ந்து கொள்ளவே , எம்பெருமானுடைய ஒற்றை நெற்றிக்கண் அந்த இருள் அகலுமாறு திறக்க , அதுகண்டு அஞ்சிப் பார்வதி கண்களை மூடிய கைகளை எடுத்துவிட்டு எம்பெருமானை வணங்க , சந்திரனைப் போலவும் , சூரியனைப் போலவும் ஏனைய இருகண்களையும் ஒளிவிடச் செய்த அம்முக்கண் மூர்த்தியே நமக்கு ஒப்பற்ற அடைக்கலம் நல்குபவனாவான் .

குறிப்புரை :

நலம் - சிவம் . அழகுமாம் . மங்கை - சிவமணாட்டி . நங்கை - தெய்வநாயகி . நயனம் - கண் . தலம் - இடம் . அலர் தரல் - விரிதல் . மடவாள் - மடப்பம் உடையவள் . மதி - பூரண சந்திரன் . அலர்தரு சோதி - உதயசூரியன் . அலர்வித்த - ஒளிரச்செய்த . முக்கண் அவன் ஏ நமக்கு ஓர் சரண் ஆம் - முச்சுடரையும் முக்கணாக உடைய அம்முழு முதல்வனே அடிமைகளாகிய நமக்குத் தனிப்புகலாவான் . இருள் உலகினை மூடக் கரம் நயனத்தை மூட என்க . திருக்கண் புதைத்ததன் பயன் :- புவனமூன்றும் தவப்பயன் முற்ற , மண்ணைப் புகழ் மணக்க , தென்பால் முன்பால் வெல்ல , தமிழ்நாடு அமிழ்தாக , தொண்டைநாடு செழிக்க , காஞ்சியே கவின் வளம்சால , ஆறு சமயமும் வீறுபெற , உலகெங்கும் வைதிக சைவமே உயர்ந்தோங்கி நிற்க , எங்கணும் சிவ வழிபாடே ஒப்புயர்வில்லதென்று உலகம் உணர்ந்து தெளிந்துய்ய , அறமோங்க , மறம் நீங்க . உயிர் வளர , முப்பாலுள் முதலிருபாலும் எப்பாலும் தழைப்ப எப்பால் உலகத்தொளி யாவையும் , அப்பாலைக்கு அப்பாலானது தப்பா வழியின் ஒளிச் சால்பே என யாவரும் காண , அப்பார்சடையார் அடித்தொண்டர் அகம் களிப்ப , காதல் கைம்மிக்க குறிப்பின் விம்மிப் பணைந்து வீங்கிஎழுந்த கொம்மைப் பொம்மற் பிராட்டி , செம்மற்பிறை வேணியனார் வெரிந்புறத்து எய்தி , வல்லே திருக்கண் புதைத்தாள் . நாயகன்கண் நாயகி நயப்பால் புதைப்ப , எங்கும் பாய் இருளாகி மூடப்பெற்றது . நெற்றிக்கண் சுடரொளி கொடுத்தது . அஞ்சிய நாயகி அகற்றினள் கைம்மலர் . அல்கின ஒளிகள் , அஃகியது இருள் . மறைத்து நீக்கிய சிறு பொழுது உலகுக்கெல்லாம் சென்றன எண்ணில் ஊழி .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 9

கழைபடு காடுதென்றல் குயில்கூவவஞ்சு கணையோனணைந்து புகலும்
மழைவடி வண்ணனெண்ணி மகவோனைவிட்ட மலரானதொட்ட மதனன்
எழில்பொடி வெந்துவீழ விமையோர்கணங்க ளெரியென்றிறைஞ்சி யகலத்
தழல்படு நெற்றியொற்றை நயனஞ்சிவந்த தழல்வண்ணனெந்தை சரணே.

பொழிப்புரை :

கரும்புகள் காடுபோல வளர்ந்துள்ள கருப்பங் கொல்லையில் தென்றல் உலவ , குயில்கூவ , ஐந்துமலரம்புகளை உடையவனாய் நெருங்கி வந்து , தனக்குப் பக்க பலமாக இருப்பதாகக் கூறிய கார்மேக வண்ணனாகிய திருமாலையும் இந்திரனையும் விட்டு நீங்கிய , மலர் அம்புகளை விடுத்த மன்மதனுடைய அழகிய உடல் சாம்பலாகித் தரையில் விழ அதனைக் கண்ட தேவர் கூட்டங்கள் நெருப்பு என்று சொல்லி அஞ்சி நீங்குமாறு நெருப்பை வெளிப் படுத்தும் நெற்றியின் ஒற்றைக்கண் சிவந்த தீ நிறத்தவனாகிய எங்கள் தந்தையே நமக்குச் சரணியன் ஆவான் .

குறிப்புரை :

இதிற்கூறும் மன்மதனை எரித்த வரலாறாவது :- கங்கைச் சடையன் மலைமங்கையின் கொங்கையுற நின் செங்கை மலர்க்கணை எய்துக ! ஏக ! என்று மதனை ஏவினன் மலரவன் . உடனே அக்கூற்றழல் காதுவழிப்போய் அகத்தை எரித்தது . செவி பொத்திச் சிவ சிவ என்றோதி உய்ந்தான் . பல பிறவித் தீமையும் ஒருங்குற்ற அக்கடுஞ்சொல் கேட்டு , வாட்டிய மலர் போல் அழகழிந்து , ` இவ்வாழ்க்கையெல்லாம் சிவ சத்தியால் வந்த ஆக்கம் ; என் செயலாவது யாதொன்றும் இல்லை ; அதனால் என் வீறு ஏறேறியிடம் ஏறாது என்றான் . ` உலகைத் தோற்ற உமையைத் தோற்றி ஒருபால் , தானாக இருத்திய தற்பரனை நானா மயல் செய்வது ? நன்று நன்று ; புங்கவனுக்கு மாறு கொண்டு பொரேன் ` என்றான் . வெகுண்ட வேதன் வெஞ்சூளிடுவேன் என்றான் . நின் சூளின் துன்பத்தினும் காளகண்டன் முன்பு கணைகள் ஏவி மாள்வதே சிறந்தது ; அது பின் வாழ்விக்கும் என்றான் வேள் . விதியின் செய்கையை யார் கடக்கவல்லார் ? கயிலையை அணுகினான் . நறுமலர்வாளி ஐந்தும் நாதன் மேற் செல்ல விட்டான் . வேளைப் பார்த்தான் விமலன் . சுட்டது புறத்தையும் தூய நெற்றிக்கண் . இரதி இரங்கி இரப்ப வேளை அருளினான் . கழை - கரும்பு மழைவடி வண்ணன் - திருமால் . மகவோனை - இந்திரன் . மதனன் - மன்மதன் . ` எண்ணிவேள் மதனை ஏவ எரிவிழித்து இமவான் பெற்ற பெண்ணினைப் புணர்ந்து உயிர்க்குப் பேரின்பம் அளித்தது ` இது . ( சித்தியார் 73 )

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 10

தடமல ராயிரங்கள் குறைவொன்றதாக நிறைவென்றுதன்க ணதனால்
உடன்வழி பாடுசெய்த திருமாலையெந்தை பெருமானுகந்து மிகவும்
சுடரடி யான்முயன்று சுழல்வித்தரக்க னிதயம்பிளந்த கொடுமை
அடல்வலி யாழியாழி யவனுக்களித்த வவனாநமக்கொர் சரணே.

பொழிப்புரை :

பெரிய தாமரைப் பூக்கள் ஆயிரத்தில் ஒன்று குறைய , வழிபாடு நிறைவதற்காகத் தன் செந்தாமரைக் கண் ஒன்றை இடந்து அதனால் அருச்சித்து வழிபாட்டை நிறைவு செய்த திருமாலை எம் தந்தையாகிய பெருமான் மகிழ்ந்து , தன் ஒளிமிக்க சேவடியால் வட்டமாகச் சக்கரத்தை உண்டாக்கி அதனைச் சுழலச் செய்து , சலந்தரனுடைய மார்பைப் பிளந்த கொடுமை மிக்க வலிமை உடைய சக்கரத்தைப் பாற்கடலையுடைய திருமாலுக்கு அளித்தான் . அவனே எமக்கு ஒப்பற்ற அடைக்கலம் நல்குபவனாவான் .

குறிப்புரை :

திருமால் சக்கிரம் பெற்ற வரலாறு :- ஆழிபெற ஆயிரம் பூவால் அருச்சனை புரிந்தான் அன்புடைமையால் ஆழியான் . பத்தியின் விளைவு காண்பான் பரம்பொருள் ஆயிரத்துள் ஒரு தாமரை மலரை மறைத்தான் நினைப்பால் . பவன் எனும் நாமம் முதலான ஆயிரமும் எடுத்தேத்தி அருச்சிக்கின்றபோது , ஒருபோது ஒரு பெயர்க்குப் பற்றாமை உணர்ந்து , கழிவிரக்கம் உற்று , ஓர்ந்து , உணர்ந்து , தன் கண்ணை இடந்து , பவளக் குன்றர் சுவணபாதத்திற் சார்த்திக் களிகூர்ந்தான் . மெய்யைக் கொடுத்தேனும் விரதத்தை மெய்ப்படுத்தும் மெய்யர் கொள்கைக்குப் பொய்யாத சான்றானான் . இறையவன் காட்சி அருளப்பெற்றான் . வணக்கம் பலவும் முறைமை வழாது புரிந்தான் . திருமாற்பேறு என ஊரை நிகழ்த்திச் சுதரிசனம் என்னும் ஆழியை அருளி வாழி என்று தீண்டச் சிவந்து வாட்டம் தவிர்த்த விரூபாக்கன் பதுமாக்கனை விடுத்தருளினான் . தடம் - குளம் . உகந்து - விரும்பி . முயன்று சுழல்வித்துப் பிளந்த கொடுமை ஆழி என்க . அது சுதரிசனம் என்னும் பெயருடைய சக்கிரம் . சுடர் அடியால் - சிவபிரானுடய ஒளிமிக்க சேவடியால் . அடியால் சக்கிரமாகச் சுழல்வித்து . அடல்வலி - கொல்லும் வன்மை ; வினைத்தொகை . ஆழியவன் - பாற்கடலான் . அரக்கன் - சலந்தரன் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 11

கடுகிய தேர்செலாது கயிலாயமீது கருதேலுன்வீர மொழிநீ
முடுகுவ தன்றுதன்ம மெனநின்றுபாகன் மொழிவானைநன்று முனியா
விடுவிடு வென்றுசென்று விரைவுற்றரக்கன் வரையுற்றெடுக்க முடிதோள்
நெடுநெடு விற்றுவீழ விரலுற்றபாத நினைவுற்றதென்றன் மனனே.

பொழிப்புரை :

`விரைந்து செல்லும் தேராயினும் அது கயிலை மலை மீது செல்லாது ; உன் வீரத்தைப் பெரிதாகக் கருதாது விட்டு ஒழி . என்னிடத்தில் கோபிப்பது அறம் அன்று ` என்று நிறுத்திய தேரில் நின்று கூறிய பாகனை வெகுண்டு , வேகமாகச் சென்று விரைவாக இராவணன் கயிலையைப் பெயர்க்க முற்பட , அவனுடைய தலைகளும் தோள்களும் நெடுநெடு என்னும் ஓசையோடு இற்றுவிழுமாறு அழுத்தியது சிவபெருமானுடைய திருவடியின் விரல் ஒன்று . அத்தகைய திருவடிகளை என் உள்ளம் எண்ணலுற்றது .

குறிப்புரை :

இலங்கைக் கோமான் பாகனைப் பார்த்துத் திருக் கயிலையை நோக்கித் தேரோட்டு என்று ஏவினான் . அவன் ` கடுந்தேராயினும் கயிலாயமீது விடுந்தேர் அன்று , விட்டாலும் செல்லாது . உன் வீரம் வீரபத்திரனிடத்தில் வேண்டா . வீரத்தை விட்டொழி . என்னை முடுகுவது அறன் அன்று ` என்று மொழிந்தான் . அவனை மிகச் சினந்து ` விடுவிடு ` என்று முடுகினான் . அவனும் முடுக்கினான் தேரை . சென்றான் இராவணன் . விரைவுற்றான் வரையுற்றான் ; எடுக்க முயன்றான் . முடியும் தோளும் நெடுநெடு என இற்று விழுந்தன . அவ்வாறு நிகழ ஊன்றி , பெருவிரலைக் கொண்ட திருவடிகளை என் உள்ளம் எண்ணலுற்றது . ` மூர்த்திதன்மலை ` ( தி .4 ப .32 பா .10) எனத் தொடங்கும் திருநேரிசையை ஈண்டுணர்தல் வேண்டும் . ` தர்மம் ` தன்மம் என்றாதலும் தமிழ்மரபே . ` நல்ல சிவதன்மத்தால் நல்ல சிவயோகத்தால் நல்ல சிவஞானத்தால் நான் அழியும் ` ( திருக்களிற்றுப்படியார் . 15 ) முனியா - முனிந்து . செய்யா என்னும் வாய்பாட்டு இறந்தகால வினையெச்சம் விரலின் ஆற்றல் தோன்றக் கூறினார் .
சிற்பி