பொது


பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 1

பற்றற் றார்சேர் பழம்பதியைப் பாசூர் நிலாய பவளத்தைச்
சிற்றம் பலத்தெந் திகழ்கனியைத் தீண்டற் கரிய திருவுருவை
வெற்றி யூரில் விரிசுடரை விமலர் கோனைத் திரைசூழ்ந்த
ஒற்றி யூரெ முத்தமனை யுள்ளத் துள்ளேவைத்தேனே.

பொழிப்புரை :

உலகப் பற்றற்றவர்கள் சேரும் பழைய திருத்தலங்களில் திகழ்பவன் , பாசூரில் உறையும் பவளம் , சிற்றம்பலத்தில் உள்ள கனி , தீண்டுதலுக்கு அரிய திருஉருவம் , வெற்றியூரில் விரிந்த ஒளி , தூயவர்கள் தலைவன் , கடல் ஒருபுறம் சூழ்ந்த ஒற்றியூர் உத்தமன் ஆகிய பெருமானை அடியேன் உள்ளத்தில் நிலையாக இருத்தினேன் .

குறிப்புரை :

பற்றற்றார் சேர் ழம் பதியை - பாசப்பற்று நீங்கிச் சிவப்பற்று உடையவர் அடைந்து வழிபடும் பழையவாகிய தலங்களாகித் திகழும் சிவபெருமானை . திருப்புன வாயிலுக்குப் ` பழம்பதி ` என்றும் அத்தலத்து மூர்த்திக்குப் ` பழம்பதிநாதர் ` என்றும் பெயர் வழங்குதலின் அதனைக் கொள்ளல் பொருந்தும் . பாசூர் :- பசுபதியூர் என்றதன் மரூஉ . அம்பிகை பசுபதி நாயகி . பாசூரில் எழுந்தருளிய சிவமூர்த்தி தீண்டாத் திருமேனி யாதலின் , தீவண்ணத்தைக் குறிக்கப் பவளத்தை என்றார் . ` திருச்சிற்றம்பலத்துக்கனி ` ( ப .15 பா .1) என்பது தொல்வழக்கு ` ஈசன் எனுங் கனி சாலவும் இனிது ` ( தி .5 ப .91 பா .7) ` நமச்சிவாயப் பழம் ` ` நமச்சிவாயக்கனி ` ( தி .10 திருமந்திரம் ). தீண்டாத் திருமேனி உள்ள திருக்கூவம் திருவூறல் முதலிய தலங்களைக் குறித்தும் தீண்டற் கரிய திருவுருவை ` எனலாம் . வெற்றியூர் என்றது கஞ்சனூர் , காட்டுப்பள்ளி , புகலூர் , வன்னியூர்ப் பக்கத்தது ஒன்று போலும் . ` உஞ்சேனை மாகாளம் ... ... வெற்றியூரும் கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக்கையும் கயிலாய நாதனையே காணலாமே ` ( தி .6 ப .70 பா .8) என்று பிறாண்டும் உள்ளது உணர்க . விமலர் - மலம் நீங்கியவர் . கோன் - ( கோமகன் ) தலைவன் . திரை - கடல் ( ஆகு பெயர் ). திருவொற்றியூர் கடற்கரைக்கண் உள்ளது . உத்தமன் :- ( படம் பக்கநாதர் ) எழுத்தறியும் பெருமாள் . ` படம்பக்கம் கொட்டும் கட லொற்றியூர் ` ( தி .2 ப .39 பா .7) ` திருக்கடவூர் உறை உத்தமன் ` என்றதிற் போல , உத்தமன் என்பது அத்தலத்து மூர்த்தியின் திருப்பெயராம் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 2

ஆனைக் காவி லணங்கினை யாரூர் நிலாய வம்மானைக்
கானப் பேரூர்க் கட்டியைக் கானூர் முளைத்த கரும்பினை
வானப் பேரார் வந்தேத்தும் வாய்மூர் வாழும் வலம்புரியை
மானக் கயிலை மழகளிற்றை மதியைச் சுடரை மறவேனே.

பொழிப்புரை :

ஆனைக்காவில் உள்ள தெய்வம் , ஆரூரில் உறையும் தலைவன் , கானப் பேரூரில் உள்ள கரும்பின் கட்டி , கானூரில் முளைத்த கரும்பு , வானத்தினின்றும் நீங்காதவராகிய தேவர் வந்து வழிபடும் திருவாய்மூரில் உறையும் வலம்புரிச் சங்குபோல்வான் . பெருமைமிக்க கயிலைமலையில் உறையும் இளைய களிறு , சந்திரனும் , சூரியனும் ஆகியவன் என்னும் பெருமானை அடியேன் மறக்க மாட்டேன் .

குறிப்புரை :

திருவானைக்காவில் எழுந்தருளிய அகிலாண்ட நாயகியாயிருப்பவனை , அன்புடையார்க்கெல்லாம் ஒரு நெறியாய் இருந்து அன்னமிட்டுக் காக்கத் திருவாரூரில் புகழ்பெற்ற அம்மகனை . திருக்கானப்பேரூரிலே கருப்பங்கட்டி போல இனிமை செய்பவனை . திருக்கானூரில் தான்றோன்றியான ( முக்கட் ) கரும்பினை ` கரும்பினிற் கட்டிபோல்வார் கடவூர் வீரட்டனாரே ` வானப் பேரார் - வானத்தினின்றும் பேராதவராகிய தேவர்கள் . பேர்ந்து வந்து ஏத்தும் திருவாய்மூர் வாழும் வலம்புரிச் சங்குபோல் உயர்வும் தூய்மையும் உடையவனை . அங்குச் சங்கு ஒலிக்கும் வழக்கம் பற்றிய குறிப்பு இது . மற்றைய விடங்கத் தலம் எல்லாவற்றிலும் சங்கொலிச் சிறப்பு உண்டேனும் , திருவாய்மூரில் அதன் தனிப் பெருமையைக் கண்டு கூறியதாகத் தோன்றுகிறது . அங்கு அக்காலத்தில் ஊதியவர் திறம் ஆசிரியர் திருவுள்ளத்தைக் குழைவித்திருக்கலாம் . மானக்கயிலை - பெருமையையுடைய கயிலைமலை . மலையிற் களிறு வாழ்கின்ற பொருத்தம் . மதி - திங்கள் , சுடர் - ஞாயிறு , தீ இரண்டற்கும் உண்மையால் அம்மூன்றுமாகக் கொள்ளப்பெற்றான் சிவபிரான் ( ப .15 பா .3). முற்பாடலில் ` உள்ளத்துள் வைத்தேன் ` என்றும் , இதில் ` மறவேன் ` என்றும் மேல் உள்ளம் நிறைந்தது முதலியவாகக் குறித்தும் நின்ற பேரின்பத் தாக்கம் உணரற்பாலது .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 3

மதியங் கண்ணி ஞாயிற்றை மயக்கந் தீர்க்கு மருந்தினை
அதிகை மூதூ ரரசினை யையா றமர்ந்த வையனை
விதியைப் புகழை வானோர்கள் வேண்டித் தேடும் விளக்கினை
நெதியை ஞானக் கொழுந்தினை நினைந்தேற் குள்ள நிறைந்ததே.

பொழிப்புரை :

பிறையைக் குறுங்கண்ணியாக உடைய சூரியன் , உலகமயக்கத்தைப் போக்கும் மருந்து , திருவதிகையாகிய பழைய ஊரில் உறையும் அரசு , திருவையாற்றில் விரும்பி உறையும் தலைவன் , வேதவிதியாக உள்ளவன் , எல்லாப் புகழும் தன்பால் வந்து சேரும் மெய்ப்பொருள் , தேவர்கள் விரும்பித்தேடும் ஞானஒளி , பெருஞ்செல்வம் , ஞானக் கொழுந்து , ஆகிய பெருமானை விருப்புற்று நினைத்த அளவில் அடியேனுடைய உள்ளம் மகிழ்ச்சியில் நிறைவுற்றது .

குறிப்புரை :

மதியம் கண்ணி - ( தி .6 ப .59 பா . 2,5) திங்களைத் தலை மாலையாகவுடைய . ` பால்புரை பசுங்கதிர்க் குழவித் திங்களைக் குறுங் கண்ணியாகவுடைய அழலவிர் சோதி அருமறைக் கடவுள் ` ( இறை . களவியல் . சூ . 1 உரை ). ஞாயிற்றை - செங்கதிரவனை . பிறவிக்கு அடியான மும்மலக்கலக்கத்தைப் போக்கும் சிவஞானமான மருந்தாய் உள்ளவனை . ` மருளியலும் சிந்தையார்க்கு மருந்து ` ( தி .6. ப .33 பா .7) திருவதிகையான தொல்லூரில் உள்ள மாநகரை ஆளும் சிவபிரானை ; திருவையாற்றில் எழுந்தருளிய முதல்வனை ; விதியை - ஊழாக , வேத விதியாக உள்ளவனை ; புகழை - எல்லாப் புகழும் தன்பால் வந்து சேரும் மெய்ப்பொருளை , ` பொருள்சேர் புகழ் `. அழியும் இன்பத்தில் அதற்கு உரிய வினையுலக்கும் வரையில் திளைக்கும் விண்ணோர்க்கு , அழியா இன்ப நாட்டமுற்றால் அதைப் பெற விரும்பித் தேடும் மெய்ஞ்ஞான தீபத்தை . மெய்ஞ்ஞான விளக்கானை ` ( தி .6. ப .33 பா .3) ` ஞானச் சுடர்விளக்காய் நின்றாய் நீயே ` ( தி .6. ப .38 பா .7) வான் - பேரின்ப வீடு . ` தொண்டாகிப் பணிவார்க்குத் தொல்வான் ஈயவல் லான் காண் ` ( தி .2 ப .62 பா .1) என்றதால் மெய்யுணரும் சிவயோகிகள் உள்ளே விரும்பித் தேடும் பிராசாத மார்க்கத்தை ; விளக்கும் தீபத்தை எனலும் சிறக்கும் . ` ஒளிசேர் நெறி `. ` ஒளிநெறி காட்டினை `. ` நிதி ` - ` நெதி ` என மருவிற்று ` ஞானக் கொழுந்து ( தி .10 திருமந்திரக் காப்பு ) சிவக்கொழுந்து என்ற தொடர் இரண்டும் முறையே துரியம் , துரியாதீதம் , ஆகிய நிலைகளின் தொடக்கத்தில் நிகழும் அநுபவத்தைக் குறித்துத் தோன்றியவை . உள்ளம் நிறைந்தது :- ` நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன் `. நிறையாதேல் இறைவர்க்கே இடமாகாது ஏனைய வற்றிற்கும் இடமாகும் . ` சத்தி முற்றத்து உறையும் சிவக்கொழுந்தே ` ` புவிக் கெழிலாம் சிவக்கொழுந்தை ` ( தி .6. ப .37 பா .4). ` விண்ணுளார் தொழுதேத்தும் விளக்கு ` ( தி .5 ப .57 பா .2)

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 4

புறம்ப யத்தெம் முத்தினைப் புகலூ ரிலங்கு பொன்னினை
உறந்தை யோங்கு சிராப்பள்ளி யுலகம் விளக்கு ஞாயிற்றைக்
கறங்கு மருவிக் கழுக்குன்றிற் காண்பார் காணுங் கண்ணானை
அறஞ்சூ ழதிகை வீரட்டத் தரிமா னேற்றை யடைந்தேனே.

பொழிப்புரை :

புறம்பயத்தில் உறையும் எங்கள் முத்து , புகலூரில் விளங்கும் பொன் , உறையூரில் ஓங்கிக் காணப்படும் சிராப்பள்ளிக் குன்றிலுள்ள உலகுக்கு ஒளிதரும் சூரியன் , அருவிகள் ஒலிக்கும் கழுக்குன்றத்தில் தரிசிக்க வருபவர்களுக்குப் பற்றுக்கோடு , அறச்செயல்கள் யாண்டும் செய்யப்படுகின்ற அதிகை வீரட்டத்தில் உள்ள ஆண் சிங்கம் ஆகிய பெருமானை அடியேன் அடைந்தேன் .

குறிப்புரை :

திருப்புறம்பயத்திலே முத்தும் ; திருப்புகலூரிலே பொன்னும் ( தி .12 பெரிய - 1681 - 82); ஊரெனப்படும் உறையூரிலே உலகாண்ட சோழர்குல முதலாய் விளங்கி உலகை விளக்கிடும் ஞாயிற்றை உடம்பாகக் கொண்டுலவும் உயிரும் ; திருக்கழுக்குன்றத்திலே காண்பவர் காண்கின்ற கண்ணுக்குள் கண்ணாயிருந்து தன்னைக் காட்டும் அருளும் ; திருவதிகையிலே வீரத்தைக் காட்டிய சிங்கத்தின் திறனும் ஆசிரியர் அனுபவமாகக்கண்டு உணர்ந்தவர் போலும் ! ` அருக்கனாவான் அரனுரு அல்லனோ ` ` தேய நாதன் சிராப்பள்ளி மேவிய நாயனாரென நம்வினை நாசமே `. ஞாயிறு :- சூரியகுலத்தாட்சி உறந்தையில் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 5

கோலக் காவிற் குருமணியைக் குடமூக் குறையும் விடமுணியை
ஆலங் காட்டி லந்தேனை யமரர் சென்னி யாய்மலரைப்
பாலிற் றிகழும் பைங்கனியைப் பராய்த் துறையெம் பசும்பொன்னைச்
சூலத் தானைத் துணையிலியைத் தோளைக் குளிரத் தொழுதேனே.

பொழிப்புரை :

கோலக்காவில் உள்ள நல்ல நிறமுடைய மாணிக்கம் , குடமூக்கில் உறையும் விடமுண்டபெருமான் , ஆலங்காட்டில் உறையும் அழகிய தேன் , தேவர்கள் தலைகளுக்குச் சூட்டப்படும் அழகிய மலர் , பால்போல் இனிக்கும் புதுமை மாறாத பழம் , பராய்த்துறையில் உள்ள பசிய பொன் , சூலம் ஏந்தியவன் , ஒப்பற்றவன் ஆகிய பெருமானை அடியேன் தோள்கள் குளிருமாறு கைகூப்பி வணங்கினேன் .

குறிப்புரை :

திருக்கோலக்காவிலே சடையும் , பிறையும் , சாம்பற் பூச்சும் கீளுடையும் கொண்ட குருமணி உருவத்தைக் குறித்தது காண்க . திருக்குடமூக்கிலே நஞ்சுண்ட கண்டனென்றது போலத் திருக்குடந்தைக் கீழ்க்கோட்டத்திலும் ` கடல் நஞ்சம் உண்டிருண்ட கண்டர் போலும் ` என்றருளினார் . காட்டிலே தேன் உண்மை இயல்பு . தேவர் தலைமேல் அழகிய பூவாய் விளங்குவது திருவடி . ` வாசமலரெலாம் ஆனாய் நீயே ` என்றதால் அம்மலரென்றே சொல்லலாம் . ` பால் வெண்ணீறு ` பூசிய பவளம் போலும் மேனியனாதலின் பாலில் திகழும் பசிய பழத்தை என்றார் . பால்போலும் இனிய சுவையுடைய பழத்தை எனலுமாம் . ` பாற்றிரளைப் பயின்றாட வல்லான் ` ( தி .6. ப .19 பா .3) சிற்றம்பலத்தெம் திகழ் கனியை ( ப .15 பா .1) திருப்பராய்த்துறைப் பசும் பொன் ; செல்வமல்கிய செல்வர் ; பராய்த்துறைச் செல்வர் ; என்று கன்றும் ; திருப்பராய்த்துறை மேவிய செல்வர் ` பராய்த் துறைச் சோதி யான் ` என்று பதிகமுழுதும் அரசும் பாடியவற்றால் , ` பொன் ` என்றதன் பொருத்தம் உணர்க . சூலத்தானாதலின் அவனுக்குத் துணைவேண்டா . சூலத்தானுக்கு ஒப்பு ( ம் உயர்வும் ) இல்லை . தோளைத் தொழுதல் ; குளிரத் தொழுதல் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 6

மருக லுறைமா ணிக்கத்தை வலஞ்சு ழி( ய் )யின் மாலையைக்
கருகா வூரிற் கற்பகத்தைக் காண்டற் கரிய கதிரொளியைப்
பெருவே ளூரெம் பிறப்பிலியைப் பேணு வார்கள் பிரிவரிய
திருவாஞ் சியத்தெஞ் செல்வனைச் சிந்தை யுள்ளே வைத்தேனே.

பொழிப்புரை :

மருகலில் தங்கும் மாணிக்கம் , வலஞ்சுழியில் உள்ள தமிழ்ப்பாமாலை , கருகாவூரில் உள்ள கற்பகம் , காண்பதற்கு எளிதில் இயலாத கதிரவன் ஒளி , பெருவேளூரில் உள்ள பிறவாயாக்கைப் பெரியோன் , விரும்பித் தொழுபவர்கள் பின் பிரிந்து செல்ல மனம் கொள்ளாதவகையில் உள்ள திருவாஞ்சியத்தில் உறையும் எம் செல்வன் ஆகிய பெருமானை அடியேன் மனத்தில் நிலையாக இருத்தினேன் .

குறிப்புரை :

திருமருகற் பெருமான் திருப்பெயர் மாணிக்கவண்ணர் . திருமருகல் நகரின்கண் ... ... மாணிக்கவண்ணர் கழல் வணங்கிப் போற்றி ... ... இருந்தார் பெரும்புகலிப் பிள்ளையார் . ( தி .12 பெரிய . திருஞான . 472). ` மருகல்வாய்ச் சோதி மணிகண்டன் ` ( தி .6. ப .22 பா .5) திருவலஞ்சுழியில் ( மாலை ) என்றது ஞானசம்பந்தன் சொன்ன கருத்தின் தமிழ்மாலை ; ` வாய் நவிற்றிய தமிழ்மாலை ` பூண்டமையாற் போலும் ! கருகாவூரில் கற்பகத்தை :- நிற்பதொத்து நிலையிலாப் புலாலுடம்பே புகுந்து நின்ற கற்பகம் ஆதலின் , வான் தருவின் மேலாய தென்க . காண்டற்கரிய கதிரொளி :- தீண்டற்கரிய திருவுருவே யன்றிக் காண்டற்கரிய கதிரொளியும் ஆயின் , அதனால் வரும் பயன் யாதுமில்லை என்னாவாறு , ` பெருவேளூர் எம் பிறப்பிலியை ` என்று குறித்துப் பிறப்பிலி உயிராய் இருந்து எமக்கும் எம்போல்வார்க்கும் பிறவியறுக்கும் பிரிவரிய செல்வன் என்றார் . ` வாஞ்சியம் ` என்றதன் பொருள் தோன்றப் பேணுவார்கள் என்றார் . சிந்தையுள்ளே வைத்தல் :- இடையறாப் பேரன்புடன் சிவபெருமான் திருவடிக்கே பதித்த நெஞ்சினாராதல் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 7

எழிலா ரிராச சிங்கத்தை யிராமேச் சுரத்தெ மெழிலேற்றைக்
குழலார் கோதை வரைமார்பிற் குற்றா லத்தெங் கூத்தனை
நிழலார் சோலை நெடுங்களத்து நிலாய நித்த மணாளனை
அழலார் வண்ணத் தம்மானை யன்பி லணைத்து வைத்தேனே.

பொழிப்புரை :

அழகுமிக்க அரச சிங்கம் , இராமேச்சுரத்தில் உறையும் அழகிய காளை , குழல்வாய் மொழியம்மையைத் தன் மலை போன்ற மார்பில் கொண்ட குற்றாலத்தில் உறையும் எங்கள் கூத்தன் . நிழல் மிகுந்த சோலைகளையுடைய நெடுங்களத்தில் உறையும் நித்தியகலியாணன் , தீ நிறத்தலைவன் ஆகிய பெருமானை அடியேன் அன்பினால் அடியேனோடு இணைத்து வைத்துக்கொண்டேன் .

குறிப்புரை :

எழில் - அழகு , எழுச்சி , இராசசிங்கம் :- அரிமானேறு . இராமேச்சுரத்து ஏறு :- இராவணனை வென்ற இராமனுக்கு விளைத்தருளிய விறல் குறித்தது . குழலார் கோதை :- ` குழல்வாய் மொழியம்மை ` அம்பிகை திருப்பெயர் . கூத்தன் :- சித்திரசபைத் திருக்கூத்தன் . ( தி .4 ப .9 பா .10) நிலாய :- நிலாவிய , என்றும் பிரசித்தியுற்ற . மணாளன் - சிவமணாளன் . நித்திய மணாளன் . ` அழல் வண்ணன் ` - தீ வண்ணன் . அன்பு இல் - அன்பே கோயிலாக உள்ள தலம் . அன்பால் - விருப்பால் எனலுமாம் . ( தி .6:- ப .44 பா .6, ப .81 பா .4)

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 8

மாலைத் தோன்றும் வளர்மதியை மறைக்காட் டுறையு மணாளனை
ஆலைக் கரும்பி னின்சாற்றை யண்ணா மலையெம் மண்ணலைச்
சோலைத் துருத்தி நகர்மேய சுடரிற் றிகழுந் துளக்கிலியை
மேலை வானோர் பெருமானை விருப்பால் விழுங்கி யிட்டேனே.

பொழிப்புரை :

மாலையில் தோன்றும் ஒளி வளரும் சந்திரன் , மறைக்காட்டுள் உறையும் தலைவன் , ஆலையில் பிழியப்படும் கரும்பின் இனிய சாறு , அண்ணாமலையிலுள்ள எம் தலைவன் , சோலைகளை உடைய துருத்திநகர்க் கோயிலில் விரும்பி உறையும் சூரியனைப் போல ஒளிவீசும் அசைவற நின்ற பேராற்றலன் , மேலே உள்ள தேவர்கள் தலைவன் ஆகிய பெருமானை அடியேன் விருப்பத்தோடு விழுங்கி விட்டேன் .

குறிப்புரை :

` மாலை மதியம் ` மறைக்காட்டுறையும் மணாளன் :- தூண்டு சுடர் ... மணாளன் தானே ` ( திருத்தாண்டகம் ). ஆலைக் கரும்பின் சாற்றை :- ` கரும்பினிற் கட்டி போல்வார் `. அண்ணாமலை எம் அண்ணல் :- அண்ணாமலை என்றதன் காரணம் யாது ? துருத்தியில் இன்றும் சோலைவளம் பெரிது . சுடரின் :- சுடரினும் ( ஞாயிற்றினும் ) அசைவற நின்ற பேராற்றலனை . துளக்கு - அசைவு . வானோர் பெருமானை விருப்பினால் விழுங்கியிட்டேன் . சிவபிரானை விழுங்கியிடுதல் :- தி .10 திருமந்திரம் . 2592.

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 9

சோற்றுத் துறையெஞ் சோதியைத் துருத்தி மேய தூமணியை
ஆற்றிற் பழனத் தம்மானை யால வாயெம் மருமணியை
நீற்றிற் பொலிந்த நிமிர்திண்டோ ணெய்த்தா னத்தெந் நிலாச்சுடரைத்
தோற்றக் கடலையட லேற்றைத் தோளைக் குளிரத் தொழுதேனே.

பொழிப்புரை :

சோற்றுத்துறையில் உறையும் ஞானஒளி , துருத்தியில் விரும்பி உறையும் தூயமணி , ஆற்றின்வளம் மிக்க திருப்பழனத் தலைவன் . ஆலவாயிலுள்ள சிந்தாமணி , திருநீற்றால் விளங்கும் திண்ணிய தோள்களை உடைய , நெய்த்தானத்தில் உறையும் எம் நிலவொளி , பிறவிக்கடலை அழிக்கும் ஆற்றல் மிக்க காளை ஆகிய பெருமானை அடியேன் தோள்கள் குளிருமாறு கைகூப்பித் தொழுதேன் .

குறிப்புரை :

சோற்றுத் துறைச் சோதி :- பெருமானது முடி மேலுள்ள பிறை , ( தி .4 ப . 85) மிகப் பாராட்டப்படுதலின் . துருத்தி மேயதூமணி :- முற்கூறிய துருத்தி திருத்துருத்தி . இது திருப்பூந்துருத்தி . ` யார்க்கும் அறிவரிய செந்தீயை வாட்டும் செம்பொன் ` ( தி .4 ப .88. பா .9). பழனத்தம்மான் :- அது சாலப் பொருத்தமுடையதேனும் , ஆற்றிற் பழனத்து என்றது காவிரிப் பாய்ச்சலுடைய வயல் வளம் குறித்து நின்ற பெயர்க்கு காரணமாம் . வாயில் புகுவார் என்றதும் ஆலவாய் தமிழ் ஆதல் காட்டும் . ஆலவாய் ... அருமணி :- திருவாலவாய் என்பது ஆலமரம் பற்றிய காரணப் பெயர் . ` கடுவாயர் தமைநீக்கி ` எனத் தொடங்குந் திருத்தாண்டகத்தில் அண்ணல் வாயில் , நெடுவாயில் , நெய்தல் வாயில் , முல்லைவாயில் , ஞாயில் வாயில் , மடுவார் தென்மதுரைநகர் ஆலவாயில் , புனவாயில் , குடவாயில் , குணவாயில் என்பனவற்றை நோக்கின் அது வடமொழிப் பெயரன்மை புலனாகும் . மணியை :- மாணிக்கம் விற்ற மாணிக்கத்தை . திருநீற்றினால் விளங்கிய தோள் . நிலாச் சுடர் . நெய்யொளி அதனொளி போன்றது . தோற்றக் கடலை கடல்போலும் தோற்றத்தையுடைய சிவாநந்தனை . பிறவிப் பெருங்கடலை . அடல் - அழிக்கும் . தோளைக் குளிரவைத்து இறைஞ்சுதல் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 10

புத்தூ ருறையும் புனிதனைப் பூவ ணத்தெம் போரேற்றை
வித்தாய் மிழலை முளைத்தானை வேள்விக் குடியெம் வேதியனைப்
பொய்த்தார் புரமூன் றெரித்தானைப் பொதியின் மேய புராணனை
வைத்தே னென்றன் மனத்துள்ளே மாத்தூர் மேய மருந்தையே.

பொழிப்புரை :

புத்தூரில் உறையும் தூயோன் , பூவணத்தில் உள்ள எம் போரிடும் காளை , மிழலையில் விதையாகி முளைத்தவன் , வேள்விக்குடியில் உறையும் எம் வேதியன் , நெறிதவறிய அசுரர்களின் மும்மதில்களையும் எரித்தவன் , பொதிய மலையில் விரும்பி உறையும் பழையோன் , மாத்தூரில் விரும்பி உறையும் அமுதம் ஆகிய பெருமானை அடியேன் மனத்துள்ளே நிலையாக இருத்தினேன் .

குறிப்புரை :

புத்தூர்ப் புனிதன் :- ` அறிவரிய நுண்பொருள்கள் ஆயினான் காண் ` என்று பின்வருவதுணர்க . திருப்பூவணத்தெம் போரேற்றை :- பற்றார் தம்மேல் சேணாக வரைவில்லால் எரித்தல் தோன்றும் பூவணத்தெம் புனிதனார்க்கே மிழலை முளைத்த வித்து :- ` வித்தினின் முளையர் வீழிமிழலையுள் விகிர்தனாரே ` ( தி .4 ப .64. பா .9) இளமைத் திருமணக் கோலத்தர் :- கலியாணசுந்தரர் . மணி மிழலை மணாளர் . வேள்விக்கு வேதமுதலாதல் ` வேத வேள்வி ` என்றதனால் விளங்கும் . பொய்த்தார் - பொய்ந்நெறி ஒழுகியவர் . புராணர் - தொல்லோர் ; மாத்தூர் மருந்து :- ` உன்னும் உளது ஐயம் இலது உணர்வாய் ஓவாது , மன்னு பாவம் தீர்க்கும் மருந்து ` ( திரு வருட்பயன் . 1.10 ) மாத்தூர் :- ஆமாத்தூர் என்பதன் முதற்குறையாம் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 11

முந்தித் தானே முளைத்தானை மூரி வெள்ளே றூர்ந்தானை
அந்திச் செவ்வான் படியானை யரக்க னாற்ற லழித்தானைச்
சிந்தை வெள்ளப் புனலாட்டிச் செஞ்சொன் மாலை யடிச்சேர்த்தி
எந்தை பெம்மா னென்னெம்மா னென்பார் பாவநாசமே.

பொழிப்புரை :

ஏனைய எல்லாப் பொருள்களுக்கும் முற்பட்டுத் தோன்றியவன் , மூத்த வெண்ணிறக் காளையை இவர்ந்தவன் . மாலைநேரச் செவ்வானின் நிறத்தினன் . இராவணன் ஆற்றலை அழித்தவன் ஆகிய பெருமானை உள்ளத்தில் தோன்றும் அன்பு என்னும் தீர்த்தத்தால் அபிடேகித்து , இனிய சொற்களாலாகிய பாமாலைகளை அவன் திருவடிகளில் சேர்ப்பித்து எந்தையே , இறைவனே , என் தலைவனே என்று பலகாலும் அவனை அழைத்து மகிழ்பவருடைய தீவினைகள் அழிந்துவிடும் .

குறிப்புரை :

`முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி ` மூரி - முதிரி என்பதன் மரூஉ . படி - ஒப்பு . பிரதிமை அரக்கன் - இராவணன் . ஆற்றல் திருக்கைலையைத் தூக்குமளவு பெருகிய வலிமை . சிந்தை வெள்ளப் புனலாட்டில் ` நேயமே நெய்யும் பாலா நிறைய நீர் அமைய ஆட்டி ` ( தி .6 ப .76. பா .4), ` தம் அன்பாம் மஞ்சனநீர் தாம் ஆட்டி ` ( திருக்களிற்றுப் படியார் 44 ), ` இறவாத ஆனந்தம் எனும் திருமஞ்சனம் ஆட்டி ` ( தி .12. பெரிய புரா . வாயிலார் . 8) என்பாரது பாவம் நாசமே . அடிச்சேர்த்தி - திருவடியிற் சேரச் சூட்டி , பெம்மான் , எம்மான் என்பன மரூஉ . பாவம் நாசம் - தீவினை தீரும் .
சிற்பி