திருப்புகலூர்


பண் :இந்தளம்

பாடல் எண் : 1

செய்யர் வெண்ணூலர் கருமான் மறிதுள்ளும்
கையர் கனைகழல் கட்டிய காலினர்
மெய்யர் மெய்ந்நின் றவர்க்கல்லா தவர்க்கென்றும்
பொய்யர் புகலூர்ப் புரிசடை யாரே.

பொழிப்புரை :

புகலூரிலுள்ள முறுக்கேறிய சடையினராகிய பெருமானார் நிறத்தில் செய்யராய் , வெண்ணீறு அணிந்தவராய் , கரிய மான் குட்டி துள்ளும் கையினராய் , ஒலிக்கும் வீரக்கழல் கட்டிய காலினராய் , உண்மையான நெறியில் ஒழுகும் அடியவர்களுக்கு மெய்யராய் , அத்தகுதியில்லாதவர்க்குப் பொய்யராய் உள்ளார் .

குறிப்புரை :

திருப்புகலூர்ச்சடையனார் செவ்வண்ணர் ; வெள்ளை நிறத்துப் பூணூலணிந்த மார்பர் ; திருக்கையிலே துள்ளுகின்ற கரிய மான் கன்றினை ஏந்தியவர் ; ஒலிக்கின்ற வீரக் கழலைக் கட்டிய திருவடியுடையவர் . மெய்ந்நெறி நின்று ஒழுகும் அடியவர்க்கு மெய்யர் ; அத்தகைமையரல்லாதவர்க்கு என்றும் பொய்யர் . ` மெய்யானைத் தன்பக்கல் விரும்புவார்க்கு ; விரும்பாத அரும்பாவியவர்கட்கு என்றும் பொய்யானை ..... ச் சேராதார் நன்னெறிக்கட் சேராதாரே ` ( தி .6 ப .66 பா .5) ` அன்பர்க்கு மெய்யானை அல்லாதார்க்கு அல்லாத வேதியனை ஐயாறமர்ந்தானைப் பாடுதுங் காண் அம்மானாய் ` ( தி .8 திருவா . 8.13) ` சேயவன்காண் நினையார்க்கு ; சித்தம் ஆரத் திருவடியே உள்கி நினைந்தெழுவாருள்ளம் ஏயவன் காண் எழிலாரும் பொழிலார் கச்சியேகம்பன்காண் அவன்எண் எண்ணத்தானே ` ( தி .6. ப .64 பா .4)

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

மேகந லூர்தியர் மின்போன் மிளிர்சடைப்
பாக மதிநுத லாளையொர் பாகத்தர்
நாக வளையினர் நாக வுடையினர்
போகர் புகலூர்ப் புரிசடை யாரே.

பொழிப்புரை :

புகலூர்ப் புரிசடையார் மேக நிறத்தினனான திருமாலாகிய காளையைப் பெரிய வாகனமாக உடையவர் . மின்னலைப் போல ஒளிவீசும் சடையோடு , பாம்பினைக் கங்கணமாக அணிந்து , யானைத்தோலை மேலுடையாகப் போர்த்திப் பிறை நுதலாளாகிய பார்வதி பாகராய்ப் போகியாயிருந்து உயிர்களுக்குப் போகத்தை அருளுபவராவார் .

குறிப்புரை :

திருப்புகலூர்ச் சடைமுடியார் ` புயல்வணற்கு அருளிப் பொன்னெடுஞ் சிவிகையா வூர்ந்த மேகநாயகன் ` ( தி .9 திருவிசை . 46). மேகவண்ணனை விடையாகக்கொண்டு ஊர்தல் உடையவர் ( தி .8 திருவாச .269). மின்னலைப் போலத் திகழும் சடைக்கண் உள்ள மதியின் பாகம் ஆகிய பிறையைப் போலும் நெற்றியையுடைய மங்கையை ஒரு பாகத்திலுடையவர் . நாகம் - பாம்பு , யானை . சர்ப்பகங்கணம் யானைத்தோலுடை இரண்டும் சிவபிரானுக்கு உள . பாம்பினைக் கங்கணமும் கச்சும் ஆக உடையவருமாம் . போகர் - ` போகியாயிருந் துயிர்க்குப் போகத்தைப் புரிதல் ` உடையவர் . மேகம் என்றதால் மால்விடையே கொள்ளப்படும் . அறவிடையும் மழ ( உயிர் ) விடையும் ஈண்டுப் பொருந்தா . வளை - கங்கணம் . உடை :- கச்சுடை .

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

பெருந்தாழ் சடைமுடி மேற்பிறை சூடிக்
கருந்தாழ் குழலியுந் தாமுங் கலந்து
திருந்தா மனமுடை யார்திறத் தென்றும்
பொருந்தார் புகலூர்ப் புரிசடை யாரே.

பொழிப்புரை :

புகலூர்ப் புரி சடையார் பெரிய தாழ்ந்த சடைமுடி மேலே பிறையைச் சூடிக் கரியதாய் நீண்ட கூந்தலை உடைய பார்வதியோடு தாமும் கலந்து , திருந்தாத மனமுடையவர் பக்கல்தாம் என்றும் பொருந்தாராக உள்ளார் .

குறிப்புரை :

திருப்புகலூர்க்கடவுள் , நாலுகின்ற பெரிய சடையின் முடிமேல் பிறையை அணிந்து , தொங்கிய கருங் கூந்தலாளாகிய அம்பிகையும் தாமும் கூடித் ( திருந்தியமனம் உடையவர் திறத்தில் இடைவிடாது பொருந்தியிருப்பாராய்த் ) திருந்தாத மனமுடையவர் திறத்தில் எப்பொழுதும் பொருந்துவரல்லர் . புகலூர் அம்பிகை ` கருந்தாழ்குழலி `, ` திருந்தா அமணர்தம் தீ நெறிப் பட்டுத் திகைத்து , முத்திதரும் தாளிணைக்கே சரணம் புகுந்தேன் . வரையெடுத்த பொருந்தா அரக்கன் உடல் நெரித்தாய் ` என்று ( தி .4 ப .94 பா .10) பின் வருவதும் , திருந்தாமை பொருந்தாமைகட்கு ஒரு விளக்கம் ஆகும் . ` சிந்தனையைத் திருத்தி ஆண்ட சிவலோகா ` ( தி .8 திருவாசகம் - 32.9) ` திருந்து தொண்டர்கள் ` .

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

அக்கா ரணிவட மாகத்தர் நாகத்தர்
நக்கா ரிளமதிக் கண்ணியர் நாடொறும்
உக்கார் தலைபிடித் துண்பலிக் கூர்தொறும்
புக்கார் புகலூர்ப் புரிசடை யாரே.

பொழிப்புரை :

புகலூர்ப் புரி சடையார் உருத்திராக்கம் நிறைந்த மாலையைப் பூண்ட மார்பினராய் , பாம்பினை உடையவராய் , ஒளி வீசும் பிறையை முடிமாலையாகச் சூடியவராய் , நாள்தோறும் இறந்தவர் மண்டையோட்டினை ஏந்திப் பிச்சை உணவு வாங்க ஊர் தோறும் செல்பவர் ஆவர் .

குறிப்புரை :

திருப்புகலூர்ச்சடைப்பெருமான் , அக்கு (- உருத்தி ராக்கம் ) நிறைந்த அழகிய மாலையைப் பூண்ட மார்பர் . பாம்பு அணிந்தவர் . விளக்கம் உடைய இளம் பிறையைத் தலையிற் கண்ணியாகச் சூடியவர் . ` மாதர்ப் பிறைக் கண்ணியான் ` ( தி .4 ப .3 பா .1) நாள் தொறும் பிரம கபாலத்தினைக் கைப்பிடித்து , உண்ணும் பலி வேண்டி , ஊர்தொறும் புகுந்தவர் . ` உலந்தார் தலைகலன் ஒன்று ஏந்தி வானோர் உலகம் பலிதிரிவாய் ` ( தி .6 ப .47 பா .8) ` பல்லார்ந்த வெண்டலை கையில் ஏந்திப் பசுவேறி ஊரூரன் பலி கொள்வானே ` ( தி .6 ப .47 பா .9) ` உலந் தார் வெண்டலை உண்கலனாகவே வலந்தான் ` ( தி .5 ப .54 பா .12)

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

ஆர்த்தா ருயிரடு மந்தகன் றன்னுடல்
பேர்த்தார் பிறைநுதற் பெண்ணினல் லாளுட்கக்
கூர்த்தார் மருப்பிற் கொலைக்களிற் றீருரி
போர்த்தார் புகலூர்ப் புரிசடை யாரே.

பொழிப்புரை :

புகலூர்ப் புரிசடையார் ஆரவாரித்துக் கொண்டு உயிர்களைக் கொல்லும் கூற்றுவனுடைய உடலை அழித்தார் . பிறைபோன்ற நெற்றியை உடைய பார்வதி அஞ்சுமாறு கூரிய தந்தங்களை உடைய கொலைத் தொழில் புரியும் யானையைக்கொன்று அதனுடைய உதிரப் பசுமை கெடாத தோலினை உடம்பில் போர்த்தி உள்ளார் .

குறிப்புரை :

திருப்புகலூரில் எழுந்தருளிய சடையுடையவர் , பெருமுழக்கம் இட்டு உடல்களின் அரிய உயிர்களை நீக்கும் அந்தகனது உடலையும் உயிரையும் கூறாக்கினார் . பிறைநுதலையுடைய பெண்ணினல்லாள் அச்சம் உறும்படி , யானையை உரித்துப் போர்வையாகக் கொண்டார் . கூர்த்து ஆர் மருப்பு - கூர்மையுடையதாய்ப் பொருந்திய கொம்பு , கொலை செய்யும் களிறு (- ஆண் யானை ). ஈர் உரி - ஈர்ந்து உரித்த தோல் , உரி :- முதனிலைத் தொழில் ஆகு பெயர் ` பெண்ணினல்லாளொடும் பெருந்தகை இருந்ததே ` ஈர் - ஈரிய , குளிர்ந்த எனலுமாம் . ஆருயிரை ஆர்த்து அடும் அந்தகனும் ஆம் . ஆர்த்தல் சடையாரதுமாம் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

தூமன் சுறவந் துதைந்த கொடியுடைக்
காமன் கணைவலங் காய்ந்தமுக் கண்ணினர்
சேம நெறியினர் சீரை யுடையவர்
பூமன் புகலூர்ப் புரிசடை யாரே.

பொழிப்புரை :

வலிமை பொருந்திய சுறாக்கொடியை உடைய மன்மதன் விடுத்த அம்புகளின் வலிமையைக் கோபித்த மூன்றாம் கண்ணையுடையவர் . அடியவர்களுக்குப் பாதுகாவலை உடைய வழியை அருளுபவர் . மரவுரியை உடுப்பவர் . அவர் முருகனார் தொடுத்தளித்த பூக்களை எப்போதும் அணிந்தவராகிய , புகலூரில் உகந்தருளியிருக்கும் முறுக்கேறிய சடையினை உடையவர் .

குறிப்புரை :

தூ - வலி , மன் - பொருந்திய , சுறவம் - சுறாமீன் , சுறாக் கொடி - மீனக்கொடி . அதையுடைய காமன் கருவேள் ( மன்மதன் ). அவன் எய்த அம்பின் வன்மையைக் காய்ந்த நெற்றிக்கண்ணொடு இரு சுடரையும் இரு கண்ணாக உடையவர் . ` சுறவக் கொடி கொண்டவன் நீறதுவாய் உற நெற்றி விழித்த எம் உத்தமனே ` ( தி .2 ப .23 பா .4) சேமம் - நன்மை . சேமநெறி - நன்னெறி . ` எம்பிரான் அன்பர் என்றே நன்னெறி காத்த சேதி நாதனார் ` ( தி .12 பெரியபுரா . 24) என்றதால் , ` காத்தற்குரிய நெறி ` எனலுமாம் . சீரையுடை - மரவுரியாடை . ` சீரை உடையவர் ` என்பதற்குச் சீர் கொண்டவர் எனலுமாம் . ` சீருடையார் ..... பெரும்புலியூர் பிரியார் ` ( தி .2 ப .67 பா .9) 1. ` முருகன் முப்போதும்செய் முடிமேல் வாசமாமலர் உடையார் வர்த்தமானீச்சரத்தாரே ` ( தி .2 ப .92 பா .5) என்று பிள்ளையார் போற்றிய முருக நாயனார் பூமாலை கட்டி வழிபட்ட திருத்தலம் ஆதலின் பூ ( மாலை ) மன் ( னிய ) சடையார் ஆனார் . 2. பூமன்புகலூர் - பூக்கள் மன்னிய திருப்புகலூர் . ( சோலை பொய்கை நிலம் முதலிய வளம் எல்லாம் குறித்தவாறு ). 3. பூ - பூமி . மன் - நிலைபெற்ற . பூலோகத்துக்குத் துன்பம் நேர்ந்துழிப் புகலாம் ஊர் . 4. பூமன் - மலரவன் என்று கொண்டு அவன் காணாத சடையொடு பொருந்தக் கூறலும் கூடும் . ` தூமென் மலர்க்கணை ` ( தி .4 ப .103 பா .3)

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

உதைத்தார் மறலி யுருளவொர் காலால்
சிதைத்தார் திகழ்தக்கன் செய்தநல் வேள்வி
பதைத்தார் சிரங்கரங் கொண்டுவெய் யோன்கண்
புதைத்தார் புகலூர்ப் புரிசடை யாரே.

பொழிப்புரை :

புகலூர்ப் புரிசடையார் கூற்றுவன் உருளுமாறு அவனை ஒரு திருவடியால் உதைத்தவர் . சிறப்பாக விளங்கிய தக்கன் செய்த பெரிய வேள்வியைச் சிதைத்தவர் . அவ்வேள்வியில் பங்கு கொண்ட தம் தவறு கருதி நடுங்கிய தேவர்களின் தலைகளையும் கைகளையும் போக்கிச் சூரியனுடைய கண்ணை அவித்தவர் .

குறிப்புரை :

திருப்புகலூர்ச் சடைப்பிரானார் , காலன் உருள ஒரு காலால் உதைத்தார் ; தக்கன் செய்த நல்ல வேள்வியை (- யாகத்தை ) அழித்தார் ; பதை பதைத்து ஓட முயன்ற மலரவன் தலையையும் வெய்யதீயின் கையையும் கொண்டார் ; வெய்யோன் கண்ணையும் அவித்தார் . ` எச்சன் .... பகன் கண் கொண்டார் ; ....... வியாத்திரன் தலையும் வேறாக் கொண்டார் ; விறல் அங்கிகரம் கொண்டார் ; ..... தக்கன்றன் வேள்வியெல்லாம் ..... அழித்துக்கொண்டு அருளும் செய்தார் ` ( தி .6 ப .96 பா .9) ( தி .8 திருவா . திருவுந்தியார் . 7.12.13.16.) சில பதிப்பில் இதுவும் அடுத்ததும் முன்பின்னாயுள்ளன .

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

கரிந்தார் தலையர் கடிமதின் மூன்றும்
தெரிந்தார் கணைகள் செழுந்தழ லுண்ண
விரிந்தார் சடைமேல் விரிபுனற் கங்கை
புரிந்தார் புகலூர்ப் புரிசடை யாரே.

பொழிப்புரை :

புகலூர்ப் புரிசடையார் இறந்தவருடைய தலை மாலையை அணிந்தவர் . காவல் பொருந்திய மும்மதில்களையும் சிவந்த நெருப்பு உண்ணுமாறு அம்புகளைத் தேர்ந்து எடுத்தவர் . விரிந்து பரந்த சடையின்மேல் நீர்மிக்க கங்கையை விரும்பி ஏற்றவர் .

குறிப்புரை :

சடையார் கரிந்தவர் தலையை உடையர் ; மூன்றுகடி மதிலும் செழுந்தழல் உண்ணக் கணைகள் தெரிந்தார் . ` சடைமேல் விரிபுனற் கங்கை விரிந்தார் `. ` புனற்கங்கை ` ` செழு நீர்ப் புனற் கங்கை ` என்றது எஞ்ஞான்றும் நீருடைமை குறித்து . விரிந்தது கங்கையாயினும் , விரிவித்தார் செயலாதலின் விரிந்தார் என்றார் . இது பிற வினைப்பொருளில் வந்த தன்வினை .

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

ஈண்டா ரழலி னிருவருங் கைதொழ
நீண்டார் நெடுந்தடு மாற்ற நிலையஞ்ச
மாண்டார்த மென்பு மலர்க்கொன்றை மாலையும்
பூண்டார் புகலூர் புரிசடை யாரே.

பொழிப்புரை :

புகலூர்ப் புரிசடையார் செறிந்த தீப்பிழம்பாய்ப் பிரமனும் திருமாலும் கைகளால் தொழுமாறு நீண்டவர் . தம்முடைய நீண்டகாலத் தடுமாற்ற வாழ்வை நினைந்து அஞ்சுமாறு வாழ்ந்து இறந்தவர்களின் எலும்பையும் கொன்றைமலர் மாலையையும் அணிந்தவர் .

குறிப்புரை :

ஈண்டு ஆர் அழலின் நீண்டார் ; ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியாய் எங்கும் நிறைந்தார் . கைதொழ நீண்டார் . நெடுந்தடுமாற்ற நிலையை ( யாவரும் ) அஞ்ச நீண்டார் . கண்டபோதெல்லாம் நெடுங்காலத்துக்கு முன் நிகழ்ந்த தடுமாற்ற நிலையை எண்ணி அஞ்சும்படி , மாண்டார் எலும்பையும் பூண்டார் . மாலையையும் பூண்டார் . ` இருவர்களுடல் பொறையொடு திரி எழிலுருவுடையவன் ` ( தி .1 ப .22 பா .7) ` பெருங்கடன் மூடிப் பிரளயங் கொண்டு பிரமனும் போய் இருங்கடன் மூடி இறக்கும் ; இறந்தான் களேபரமும் கருங்கடல் வண்ணன் களேபரமும் கொண்டு கங்காளராய் வருங்கடன் மீளநின்றெம் இறை நல்வீணை வாசிக்குமே ` ( தி .4 ப .112 பா .7) ` சிரமாலை சூடி நின்றுவந்தான் இருக்கும் சரக்கறையோ என்தனி நெஞ்சமே `, ` தலைமாலை தலைக்கணிந்து .... தேரும் தலைவன் `.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

கறுத்தார் மணிகண்டங் கால்விர லூன்றி
இறுத்தா ரிலங்கையர் கோன்முடி பத்தும்
அறுத்தார் புலனைந்து மாயிழை பாகம்
பொறுத்தார் புகலூர்ப் புரிசடை யாரே.

பொழிப்புரை :

புகலூர்ப் புரிசடையார் இரத்தினம் போன்ற செந்நிறமான கழுத்துக் கறுத்து நீலகண்டராயினார் . கால் விரலை ஊன்றி இராவணனுடைய பத்துத் தலைகளையும் செயலற்றவை ஆக்கினார் . ஐம்புல நுகர்ச்சியையும் துறந்தவர் . பார்வதியைப் பாகமாகக் கொண்டவர் .

குறிப்புரை :

மணி - நீலமணி ( போலும் ). கண்டம் - ` திருநீல கண்டம் `. கறுத்தார் - நஞ்சு உண்டமையால் கறுத்தார் . கறுப்பு நிறத்துரு உணர்த்திற்று . ( தொல் . உரி . 77.) இலங்கையர் கோன் ( இராவணன் ) பத்து முடியும் ஒரு கால் விரலை ஊன்றி இறச்செய்தார் . புலனைந்தும் அறுத்தார் :- யோக முத்தி உதவும் யோகியானார் . ஆயிழை பாகம் பொறுத்தார் :- உயிர்க்குப் போகத்தைப் புரியப் போகியானார் . அறுத்தார் .... பொறுத்தார் :- பொருள் முரண் .
சிற்பி