பொது


பண் :இந்தளம்

பாடல் எண் : 1

ஒன்றுகொ லாமவர் சிந்தை யுயர்வரை
ஒன்றுகொ லாமுய ரும்மதி சூடுவர்
ஒன்றுகொ லாமிடு வெண்டலை கையது
ஒன்றுகொ லாமவ ரூர்வது தானே.

பொழிப்புரை :

எம்பெருமானுடைய உள்ளத்தைப்போல உயர்ந்த கயிலை மலையும் , அவர் சூடும் உயர்ந்த பிறையும் அவர் பிச்சை எடுக்குமாறு கையில் ஏந்திய மண்டையோடும் , அவர் இவரும் காளையும் எண்ணிக்கையில் ஒன்று ஒன்றே போலும் .

குறிப்புரை :

அவர் - சிவபிரானார் . சிந்தை உயர்வரை - உள்ளம் உயர்கின்ற எல்லையில் உள்ள திருக்கயிலை மலை . சிந்தையுயர்வரை ( ஒல்லை ) ஒன்று என்பது சுத்தாத்துவிதத்தை உணர்த்துவதாகக் கொள்ளல் நன்று . பிறத்தலும் இறத்தலும் தேய்தலும் வளர்தலும் இன்றி , சென்னியில் வாழ்கின்ற பேற்றால் உயரும் பிறை அணிவர் . எல்லாரும் தற்போதத்தைப் பலியாக இடுதற்குரிய பிச்சைப் பாத்திரமாகப் பிரம கபாலம் திருக்கையின்கண் உளது . ஊர்வது - ஊர்ந்து செல்லும் விடை . ஒன்று வரை . ஒன்று சூடுவர் . ஒன்று கையது . ஒன்று ஊர்வது என்க . ` ஒன்று போலும் உகந்தவர் ஏறிற்று ` ( தி .5. ப .24 பா .8) ` ஒன்று வெண் பிறைக் கண்ணியோர் கோவணம் ` ( தி .5. ப .89 பா . 1-10) என்பன முதலிய திருக்குறுந்தொகைகளை இப் பதிகத்தொடு ஒருங்கு நோக்குக .

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

இரண்டுகொ லாமிமை யோர்தொழு பாதம்
இரண்டுகொ லாமிலங் குங்குழை பெண்ணாண்
இரண்டுகொ லாமுரு வஞ்சிறு மான்மழு
இரண்டுகொ லாமவ ரெய்தின தாமே.

பொழிப்புரை :

தேவர்களும் தொழும் எம்பெருமானுடைய பாதங்களும் , விளங்கும் அவருடைய காதணிகளும் பெண்ணும் ஆணுமாகிய அவர் உருவமும் . அவர் ஏந்திய மான்குட்டியும் மழு வாயுதமும் இரண்டு என்ற எண்ணிக்கையுடையனபோலும் . ஏந்தின தாமே - பாடம் .

குறிப்புரை :

இமையோர் - துவாதசாந்தப் பெருவெளியில் கண்ணிமைத்துக் காணாராய் விழித்துறங்குந் தொண்டர் . அவரே வானோர் . ` கண்ணிமைத்துக் காண்பார்தம் கண் என்னகண்ணே ` ( சிலப்பதிகாரம் ). குழை எனவே தோடும் கொள்ளப்படும் . பெண்ணும் ஆணும் ஆகிய உருவம் இரண்டும் ` சத்தியும் சிவமும் ஆய தன்மை இவ்வுலகம் எல்லாம் ஒத்து ஒவ்வா ஆணும் பெண்ணும் உணர் குணகுணியுமாகி வைத்தனன் ` ( சித்தியார் . 89) அம்மையப்பர் திருக்கோலம் . ` இருபெண் ஆண் ` ( தி .1 ப .11 பா .2), ` இரண்டினர் உருவம் ` ( தி .1 ப .79 பா .3) ` மாதியலும் பாதியன் `. உருவம் :- 1. சொரூபம் . 2. தடத்தம் எனக் கொண்டுரைத்தலுமாம் . 1. அருவம் . 2. உருவம் . 3. அருவுருவம் . 4. அருளுருவம் ஆகிய நான்கனுள்ளே முதல் மூன்றும் தடத்தம் . நான்காவது சொரூபம் . ` பதிபரமே அதுதான் ... ... அருவுரு இன்றி ... ... உயிர்க்குணர்வாகி ... ... ஆனந்தவுருவாய் அன்றிச் செலவரிதாய் ... ... திகழ்வது . தற்சிவம் ( சிவப் . 13 ) ` சிவன் அருவுருவும் அல்லன் .` ` கரசரணாதி சாங்கம் ... ... உபாங்கம் எல்லாம் ... ... அருள் ` ` காயமோ மாயையன்று காண்பது சத்தி தன்னால் ` ( சித்தியார் ) ` அருவும் உருவும் அறிஞர்க்கு அறிவாம் உருவும் உடையான் உளன் ` ( திருவருட்பயன் . 5 ). மான் மழு இரண்டும் எய்தின . இரண்டு பாதம் . இரண்டு குழை . இரண்டு உருவம் . மான் , மழு இரண்டு எய்தின .

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

மூன்றுகொ லாமவர் கண்ணுத லாவன
மூன்றுகொ லாமவர் சூலத்தின் மொய்யிலை
மூன்றுகொ லாங்கணை கையது வின்னாண்
மூன்றுகொ லாம்புர மெய்தன தாமே.

பொழிப்புரை :

எம்பெருமானுடைய நெற்றிக்கண்ணோடு சேர்த்துக் கண்கள் மூன்று . அவர் ஏந்திய சூலத்தில் இலை வடிவான பகுதி மூன்று . அவர் கையிலுள்ள வில் , நாண் , கணை என்பன மூன்று . அவர் அம்பு எய்து அழித்த பகைவர்களின் மதில் மூன்று போலும் .

குறிப்புரை :

கண்ணுதல் :- ( நுதற்கண் ) நெற்றிக்கண் ` திரிசூலம் ` என்னும் பெயர்கொண்டே மூன்று என்பது புலனாம் . கையின்கண் உள்ள வில் , நாண் , அம்பு மூன்றும் கொள்க . அக்கணையை எய்தது முப்புரம் . ` திரிபுரம் `. கணையின் முக்கூறு ஈர்க்கு ( காற்று ), உடல் ( திருமால் ), கூர் ( தீ ) எனலும் உண்டு . சொல்லமைதிக்கேற்றதன்று அது .

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

நாலுகொ லாமவர் தம்முக மாவன
நாலுகொ லாஞ்சன னம்முதற் றோற்றமும்
நாலுகொ லாமவ ரூர்தியின் பாதங்கள்
நாலுகொ லாமறை பாடினதாமே.

பொழிப்புரை :

எம்பெருமானுடைய திருமுகங்கள் நான்கு . அவரால் படைக்கப்பட்ட படைப்பு - நிலம் , கருப்பை , முட்டை , வியர்வை , இவற்றிலிருந்து தோன்றும் நால்வகையது . அவர் வாகனமாகிய காளையின் பாதங்கள் சரியை , கிரியை , யோகம் , ஞானம் என்பன . அவர் பாடிய வேதங்கள் இருக்கு , யசுர் , சாமம் , அதர்வம் என்ற நான்கு போலும் .

குறிப்புரை :

நாலு கொல் ஆம் அவர்தம் முகம் ஆவன :- ` ஆதி நான்முகத் தண்டவாண ... நின்மூவிலை நெடுவேல் பாடுதும் ( சிவபெருமான் திருமும்மணிக்கோவை . 28 ). திருப்பெருந்துறைப் புராணம் ( சதாசிவமூர்த்தம் . பா .7 ) பார்க்க . கர்த்திரு சாதாக்கியத்திற்கு நான்முகம் ; ` கர்த்திரு சாதாக்கியப் பெயர் ஞானம் என்றதன் எழிற்பெயர் ஆதலினாலும் , ஞானசத்தி இலகுதலாலும் , ஊனம் இல் மறைகள் உரைத்திடும் அதுதான் , சுத்தம் ஆதலின் தூய் பளிங் கொளியாய் , இத் தகு திவ்வியலிங்கமும் ஆய் அதன் , மத்தியில் நாலு முகத்தொடு மன்னி , நலமிகு பன்னிரு நயனம் உடைத்தாய் , வலதுகை சூலம் மழுவாள் அபயம் , இடதுகை நாகம் இலங்கிய பாசம் , படுமணி வரதம் எனும் படை ஏந்தி , ஒடியில் இலக்கணம் உடன் இருப்பதுவே .` ( சதாசிவரூபம் . 12:- 20 - 31 ). ` கர்த்திருசாதாக்கியம் இலிங்க வடிவாய் , நாலுமுகம் பன்னிரு கண் படிகவொளி எட்டு கைகளில் வலம் இடங்களில் , சூலம் , மழு , வாள் , அபயம் , நாகம் , பாசம் , மணி , வரதம் ஆக இருக்கும் ` ( திருவாசக வியாக்கியானம் . பக்கம் 218 ). ` தற்புருட மந்திரத்தின் நான்கு கலைகளும் நான்கு முகம் . அகோரத்தின் எட்டுக் கலைகளும் தோள்கள் .` ( சிவார்ச்சனாசந்திரிகை . பக்கம் 101 ) சனனம் - பிறப்பு . 1. அண்டசம் . 2. சுவேதசம் . 3. உற்பிசம் . 4. சராயுசம் . ஊர்தி - விடை . ` உணர்வு என்னும் ஊர்வது உடையாய் போற்றி ` ( அப்பர் ) ` இருள்கெட அருளிய இன்பவூர்தி ( தி .8 திருவாச .) என்பதன் நாலு பாதம் சரியை , கிரியை , யோகம் , ஞானம் , என்பன . நாலு அவர்தம் உகம் (` ஒரு உகம்போல் ஏழ் உகமாய் நின்ற நாளோ `) எனப் பிரிக்கலாமேனும் , காலாதீதனுக்கு உகம் இன்மையாலும் , ஏழுகமாய் நின்றது உயிர்கட்கு ஆதலாலும் , ` சதாசிவனே நின்பாதம் போற்றி போற்றி ` என்று பிறாண்டும் சாதாக்கியத்தைக் குறித்தலாலும் அது கொள்ளற்பாற்றன்று .

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

அஞ்சுகொ லாமவ ராடர வின்படம்
அஞ்சுகொ லாமவர் வெல்புல னாவன
அஞ்சுகொ லாமவர் காயப்பட் டான்கணை
அஞ்சுகொ லாமவ ராடின தாமே.

பொழிப்புரை :

எம்பெருமான் ஆட்டுகின்ற பாம்பின் படங்கள் ஐந்து , அவர் வென்ற புலன்களும் ஐந்து . அவரால் வெகுளப்பட்ட மன்மதனுடைய பூ அம்புகளும் ஐந்து . அவர் அபிடேகம் செய்வன பசுவினிடத்திலிருந்து தோன்றும் பஞ்சகவ்வியம் என்ற ஐந்து போலும் .

குறிப்புரை :

அவர் ஆடு அரவின் படம் அஞ்சு :- ஆடரவு - ஆடும் பாம்பு . அவர் அரவு - அவர் பூண்ட பாம்பு அவர் ஆடும் அரவு எனல் சைவத்திற்கேலாது . அவர் பிடித்தாடும் அரவு எனலாம் . ` கடுத்தாடும் கரதலத்தில் தமருகமும் எரி அகலும் கரிய பாம்பும் பிடித்து ஆடி புலியூர்ச் சிற்றம்பலத்தெம் பெருமான் ` அவர் வெல் புலன் ஐந்து :- ` பொறிவாயிலைந் தவித்தான் .` இறைவற்குப் புலன் இருந்து நீங்கியதன்று . இயல்பில் இன்மை என்க . அவரால் அடியவர் வெல்லும் புலன் ஐந்து எனலும் நன்று . ` வஞ்சக் கள்வர் ஐவரையும் என்மேல் தர அறுத்தாய் ` ( தி .6 ப .99 பா .3) என்று ஆசிரியர் அருளியதுணர்க . ` விடுக்ககிற்றிலேன் வேட்கையும் சினமும் ; வேண்டின் ஐம்புலன் என்வசம் அல்ல ` ( தி .7 ப .60 பா .7) என்ற சுந்தரர் திருவுள்ளப்படி , என்வசம் அல்லாத புலன்களை நின்வசப் படுத்தி வெல்லும் ஆற்றல் நின் அருட்கே உண்டு என்றவாறாம் . அவர் காய மன்மதன் பட்டான் . பட்டவன் மலர்க்கணை அஞ்சு . காய்தல் - தீவிழியால் எரித்தல் . ஆடின - அபிடேகம் செய்யப்பட்டன . அஞ்சு - ஆனைந்து ; பால் , தயிர் , நெய் . ` ஆடினாய் நறுநெய் யொடு பால்தயிர் .` ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சு ஆடுதல் ( தி .4 ப .11 பா .2) திருவண்ணாமலைக் கல்வெட்டில் ஆனீரும் அதன் சாணமும் முறையே உழக்களவும் ஆழாக்களவும் கொண்ட வழக்கு உளது . அது பஞ்சகௌவியத்துக்கென்பர் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

ஆறுகொ லாமவ ரங்கம் படைத்தன
ஆறுகொ லாமவர் தம்மக னார்முகம்
ஆறுகொ லாமவர் தார்மிசை வண்டின்கால்
ஆறுகொ லாஞ்சுவை யாக்கின தாமே.

பொழிப்புரை :

அவர் வேதத்துக்கு அங்கங்களாகப் படைத்தன ஆறு . அவருடைய மகனாகிய முருகனுடைய முகங்கள் ஆறு . அவர் மாலைமிசை அமர்ந்துள்ள வண்டின் கால்களும் ஆறு . அவர் உணவுச் சுவையாக அமைத்தனவும் ஆறுபோலும் .

குறிப்புரை :

அங்கம் :- ` நன்றாய்ந்த ... ... ஈரிரண்டின் ஆறுணர்ந்த ஒரு முதுநூல் ` ( புறம் . 166 ). 1. சிக்கை . 2. கற்பசூத்திரம் . 3. வியாகரணம் . 4. நிருத்தம் . 5. சந்தோவிசிதி . 6. சோதிடம் என்ற ஆறும் வேதாங்கம் . அவற்றுள் 1. வேதங்களை எடுத்தல் படுத்தல் முதலிய இசை வேறுபாட்டால் உச்சரிக்குமாறு உணர்த்துவது சிக்கை . 2. வேதங்களிற் கூறும் கருமங்களை அநுட்டிக்கும் முறைமை உணர்த்துவது கற்பசூத்திரம் . 3. வேதங்களின் எழுத்துச் சொற்பொருளியல்பு உணர்த்துவது வியாகரணம் . 4. வேதங்களின் சொற்பொருள் உணர்விப்பது நிருத்தம் . 5. வேத மந்திரங்களிற் காயத்திரி முதலிய சந்தங்களின் பெயரும் அவற்றிற்கு எழுத்து இனைத்து என்றலும் உணர்த்துவது சந்தோவிசிதி . 6. வேதத்திற் சொல்லப்படும் கருமங்கள் செய்தற்குரிய கால விசேடங்களை உணர்த்துவது சோதிடம் . இங்ஙனம் ஆதலின் , இவை ஆறும் வேதத்திற்கு அங்கம் எனப்பட்டன . புராணம் , நியாயம் நூல் . மீமாஞ்சை , மிருதி என்னும் நான்கும் வேதத்திற்கு உபாங்கம் . 1. பரமசிவன் உலகத்தைப் படைக்குமாறு முதலாயின கூறும் வேதவாக்கியப் பொருள்களை வலியுறுத்தி விரித்துணர்த்துவது புராணம் . இதிகாசமும் ஈண்டு அடங்கும் . 2. வேதப்பொருளை நிச்சயித்தற்கு அநுகூலமான பிரமாணம் முதலியவற்றை உணர்த்துவது நியாயநூல் . 3. வேதப்பொருளின் தாற்பரியம் உணர்தற்கு அநுகூலமான நியாயங்களை ஆராய்ச்சிசெய்து உணர்த்துவது மீமாஞ்சை . அது பூருவ மீமாஞ்சை உத்தர மீமாஞ்சை என்று இருவகைப்படும் . அவற்றுள் முன்னையது மீமாஞ்சை எனவும் வேதம் எனவும் , பின்னையது வேதாந்தம் எனவும் வழங்கப்படும் . 4. அவ்வவ் வருணங் ( குடி ) கட்கும் ஆசிரமங்களு ( நிலை ) க்கும் உரிய தருமங்களை உணர்த்துவது மிருதிநூல் . உபவேதம் நான்கு உள . 1. எல்லாம் அநுட்டித்தற்குச் சாதனமான யாக்கையை நோயின்றி நிலைபெறச் செய்யுமாறுணர்த்துவது ஆயுள்வேதம் . 2. பகைவரால் நலிவின்றி உலகம் காத்தற்கு வேண்டப்படும் படைக்கலம் பயிலும் வகையை உணர்த்துவது வில்வேதம் . 3. எல்லாக் கடவுளர்க்கும் உவகை வரச் செய்யும் இசை முதலியவற்றை உணர்விப்பது காந்தருவ வேதம் . 4. இம்மைக்கும் மறுமைக்கும் ஏதுவாகிய பொருள்களை ஈட்டும் உபாயம் உணர்விப்பது அருத்த நூல் . அங்கங்களை அறிவார் இவற்றையும் அறிதல் நன்று என்று இங்குணர்த்தலாயிற்று . ` அறுமுகப் பெருமான் ` ` அறுகால் வண்டு ` ` அறுசுவை ` இவை மூன்றும் அவ்வாறு .

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

ஏழுகொ லாமவ ரூழி படைத்தன
ஏழுகொ லாமவர் கண்ட விருங்கடல்
ஏழுகொ லாமவ ராளு முலகங்கள்
ஏழுகொ லாமிசை யாக்கின தாமே.

பொழிப்புரை :

அவர் படைத்த படைப்புக்கள் எழுவகையன . அவர் படைத்த கடல்கள் ஏழாகும் . அவர் ஆளும் உலகங்களும் மேல் உலகம் ஏழும் கீழ் உலகம் ஏழும் . அவர் படைத்த இசைகளும் ஏழு போலும் .

குறிப்புரை :

ஊழி :- ஊழியும் மடங்கலும் உகமுடி வாகும் ` ( பிங்கலத்தை . 307 ). ஊழி படைத்தன ஏழு - ஊழிதொறும் படைத்தவை ஏழு பிறப்பு . ` மூவேழ் சுற்றம் முரணுறு நரகிடை ஆழாமே அருள் அரசே போற்றி ` ( தி .8 திருவாசகம் ) என்பதற்கேற்பப் பொருள் கொள்ளலும் ஆம் . ` அளவிலாப் பல்லூழிகண்டு நின்ற தீர்த்தன் ` ( தி .6 ப .19 பா .11) ` ஊழிமுதல்வனாய் நின்றாய் நீயே ` ( தி .6 ப .38 பா .5) பார்க்க . அவர் கண்ட கடல் ஏழு :- 1. உப்பு . 2. தேன் . 3. கருப்பஞ்சாறு . 4. தயிர் . 5. நெய் . 6. பால் . 7. நீர் . ` உப்புத் தேன் இக்கு வெண்டயிர் நெய்பால் அப்புக் கடல் ஏழ்ஆகும் என்ப ` ( பிங்கலந்தை . 585 ). ஏழுலகங்கள் :- மேலேழுலகம் :- 1. பூ . 2. புவம் . 3. சுவர்க்கம் . 4. மா . 5. தவம் . 6. பிரமம் . 7. சிவலோகம் . கீழேழுலகம் :- 1. அதலம் . 2. விதலம் 3. சுதலம் . 4. நிதலம் . 5. தராதலம் . 6. ரசாதலம் . 7. பாதலம் . ஏழிசை :- ` குரலே துத்தம் கைக்கிளை உழையே , இளியே விளரி தாரம் என்றிவை , ஏழும் யாழின் இசைகெழு நரம்பே ` ( பிங்கலந்தை . 1402 ) ` ஆறொன்றுமானார் . ( தி .6 ப .16 பா .6).

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

எட்டுக்கொ லாமவ ரீறில் பெருங்குணம்
எட்டுக்கொ லாமவர் சூடு மினமலர்
எட்டுக்கொ லாமவர் தோளிணை யாவன
எட்டுக்கொ லாந்திசை யாக்கின தாமே.

பொழிப்புரை :

அவருடைய அழிவில்லாத பெருங்குணங்களும் எட்டு . அவர் சூடும் மலர்களில் இனங்களும் எட்டு . அவருடைய ஒன்றற்கொன்று இணையான தோள்களும் எட்டு . அவர் படைத்த திசைகளும் எட்டுப் போலும் .

குறிப்புரை :

எட்டுக் குணம் :- ( குறள் . 9. உரை பார்க்க ) 1. பிறவின்மை . 2. இறவின்மை . 3. பற்றின்மை . 4. பெயரின்மை . 5. உவமைஇன்மை . 6. ஒருவினையின்மை . 7. குறைவிலறிவுடைமை . 8. குடிநுதல் ( கோத்திரம் ) இன்மை என்பது பழந்தமிழர் ` நன்றாய்ந்த நீள் நிமிர்சடை முதுமுதல்வன் ` ( புறம் . 166 ) உடைய பண்பெட்டும் வழங்கினர் . 1. முற்றறிவு ( சருவஞ்ஞத்துவம் ). 2. வரம்பிலின்பம் ( திருப்தி , பூர்த்தி ). 3. இயற்கையுணர்வு ( அநாதிபோதம் , நிராம யான்மா ). 4. தன்வயம் ( சுதந்திரம் , சுவதந்திரதை ). 5. குறைவிலாற்றல் ( அலுப்தசக்தி , பேரருளுடைமை ). 6. வரம்பிலாற்றல் ( அநந்தசக்தி , அளவிலாற்றல் ). 7. தூய உடம்பு ( விசுத்ததேகம் ). 8. இயல்பாகவே பாசங்களில்லாமை ( அநாதி முத்தத் தன்மை ) என்றலும் உண்டு . எட்டு மலர் :- ( அட்டபுட்பம் 5-54. 1-10 முழுதும் பார்க்க ) ` எட்டுக் கொண்டார்தமைத் தொட்டுக் கொண்டே நின்றார் , விட்டார் உலகம் என்று உந்தீபற . வீடே வீடாகுமென்றுந்தீபற .` (24) கிரியைக்குரிய எண் மலர் வேறு . ஞானத்திற்குரிய எண்மலர் வேறு . ஞானபூசைக்குரியன :- 1. கொல்லாமை . 2. ஐம்பொறியடக்கல் , 3. பொறுமை , 4. இரக்கம் , 5. அறிவு , 6. மெய் , 7. தவம் , 8. அன்பு என்பன . ( சிவஞானபாடியம் . சூ . 9. அதி . 3 ) ` நலஞ்சிறந்தார் மனத்தகத்து மலர்களெட்டும் ` ( புகையெட்டும் ). காலை , உச்சி , மாலை நள்ளிரவு , புலரி முதலிய எல்லாக் காலங்கட்கும் வகுத்த எண் மலர் வகையைப் புட்பவிதி தி .4 ப .2 பா .6,7,8,9 இல் அறிக . எட்டுத் தோளிணை :- ` எண்டோளினன் முக் கண்ணினன் ` ( தி .7 ப .71 பா .9) ` எண்டோள் வீசிநின்றாடும் பிரான் ` ` படையிலங்கு கரம் எட்டுடையான் ` ` அட்டமாம் புயம் ஆரூரரே ` என்றது வேற்றுருவம் குறித்து . எட்டுத் திசை :- ` ஈறாய் ... எட்டுத் திசைதானாய் ... வீழிம்மிழலையே `

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

ஒன்பது போலவர் வாசல் வகுத்தன
ஒன்பது போலவர் மார்பினி னூலிழை
ஒன்பது போலவர் கோலக் குழற்சடை
ஒன்பது போலவர் பாரிடந் தானே.

பொழிப்புரை :

இவ்வுடம்பில் அவர் வகுத்த துவாரங்கள் ஒன்பது . அவர் மார்பில் அணிந்த பூணூலின் இழைகள் ஒன்பது . அவருடைய அழகிய சுருண்ட சடை ஒன்பதாக வகுக்கப்பட்டது . அவர் படைத்த நிலவுலகம் ஒன்பது கண்டங்களை உடையது போலும் .

குறிப்புரை :

ஒன்பது வாசல் :- நவத்வாரம் . ` என்பினாற் கழிநிரைத் திறைச்சி மண்சுவ ரெறிந்திது நம்மில்லம் , புன்புலால் நாறுதோல் போர்த்துப் பொல்லாமையான் முகடுகொண்டு . முன்பெலா மொன்பது வாய்தலார் குரம்பையின் மூழ்கிடாதே , அன்பனாரூர் தொழுதுய்ய லாம் மையல்கொண் டஞ்சல்நெஞ்சே` ( தி .2 ப .79 பா .8) ` புழுப் பெய்த பண்டிதன்னைப் புறமொரு தோலான்மூடி , ஒழுக்கறா வொன்பதுவா யொற்றுமை யொன்றுமில்லை , சழக்குடை யிதனுளைவர் சங்கடம் பலவுஞ்செய்ய , அழிப்பானாய் வாழமாட்டேன் ஆரூர்மூ லட்டனீரே ` ( தி .4 ப .52 பா .2). ` ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய் ஒக்க அடைக்கும்போது உணர மாட்டேன் ` ( தி .6 ப .99 பா .1) ` வருந்தும் உயிர் ஒன்பான் வாயில் உடம்பில் பொருந்துதல் தானே புதுமை ?` ( நன்னெறி .12 ) ஒன்பது மார்பினில் நூல் இழை :- ` ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண் ` ( தி .11 திருமுருகாற்று . 183) கோலம் - அழகு . குழற்சடை :- ` குழற் சடை யெங்கோன் ` ( தி .6 ப .31 பா .5) ` குழற்சிகை `. முடி , கொண்டை , குழல் , பனிச்சை , சுருள் என்னும் ஐம்பாலுள் ஒன்றேனும் , ஈண்டுப் பொதுவாய்ச் சடைமேல் நின்றது . குழல் ஆண் பெண் தலைமயிர்க்குப் பொது . ( பிங்கலந்தை . 1066 ) கொண்டை நீக்கித் தொங்கல் கொள்ளலும் உண்டு . ( பிங்கலந்தை . 1070 ) பாரிடம் - பார் இடம் , பூமி . ஒன்பது பாரிடம் - நவகண்டம் ` நவகண்ட பூமிப் பரப்பை வலமாக வந்தும் ` ( தாயுமானவர் ; ` பத்திநெறி நிலைநின்றும் ` ). ` பல்சடைப் பனிகால்கதிர் வெண்டிங்கள் சூடினாய் ` ` பத்து நூறவன் பல்சடை ` ( தி .5 ப .89 பா .10) என்பவற்றாற் சடைப் பன்மையை அறியலாம் . ` அலையுடையார் சடை யெட்டுஞ்சுழல அருநடஞ்செய் நிலையுடையார் ` ( தி .7 ப .19 பா .7) என்றது கொண்டு , வானைச் சேர்த்து , ஒன்பான் திசை நோக்கிய சடை ஒன்பது எனத் துணிவில்லை . நிலனை நோக்கியதெனலாகாது . ` ஒன்பது வாயிற் குடில் ` ( தி .8 திருவாசகம் .1.)

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

பத்துக்கொ லாமவர் பாம்பின்கண் பாம்பின்பல்
பத்துக்கொ லாமெயி றுந்நெரிந் துக்கன
பத்துக்கொ லாமவர் காயப்பட் டான்றலை
பத்துக்கொ லாமடி யார்செய்கை தானே.

பொழிப்புரை :

அவர் அணிந்த ஐந்தலைப் பாம்பின் கண்களும் உயிரைப் போக்கும் பற்களும் பத்து . அவரால் கோபிக்கப்பட்ட இராவணனுடைய தலைகளும் பத்து . அவர் அழுத்தியதால் நொறுங்கிய அவன் பற்களும் பத்து . அப்பெருமானுடைய அடியார்களுடைய தசகாரியம் என்னும் செயல்களும் பத்துப் போலும் .

குறிப்புரை :

` விடந் தீர்த்த திருப்பதிகம் ` என்னும் வாய்மை இதனால் விளங்குகின்றது . ` அவர் பாம்பு ` என்றதால் அவர் அணியும் பாம்பு ஐந்தலையுடையது என்பதும் , தலைக்கு இரண்டாகப் பத்துக் கண் உடையதென்பதும் , தட்டம் அதட்டம் என்னும் இரண்டும் அவ்வைந்தலைக்கண்ணும் உள்ளமையால் பத்துப்பல் உடையது என்பதும் புலப்படும் . ` எயிறுகளுக்கு மேலாம் தட்டம் அதட்டம் என்கின்ற எயிறுகள் ` என்றதால் இவ்வுண்மை அறியலாயிற்று . ` அவர் அரவின் படம் அஞ்சு ` (181) ` தோட்டீரே துத்தி ஐந்தலை நாகத்தை ஆட்டீரே ` ( தி .1 ப .54 பா .4) ` கடுவொடுங் கெயிற்றுத் துத்திக் கட்செவிப் பகுவாய் பாந்தள் ` ( தசகாரியம் . 12 ). ` கடுவொடொடுங்கிய தூம்புடை வாலெயிற்றழலென வுயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறற் பாம்பு ` ( தி .11 திருமுருகு . 148-50) என்றதனுரையும் , ` துளையெயிற்றுரகக் கச்சு ` ( சிலப் . வேட்டுவ . 59 ) என்றதற்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரையும் காண்க . பாம்பின் பல்லில் நஞ்சொழுகுந்துளையுடைமை உணரப்படும் . ` பொழிந்துநஞ் சுகுத்தல் அச்சம் இரைபெரு வெகுளிபோகம் கழிந்துமீ தாடல் காலம் பிழைப்பென எட்டின் ஆகும் பிழிந்துயிர் உண்ணும் தட்டம் அதட்டமாம் பிளிற்றின் உம்பர் ஒழிந்தெயி றூனம் செய்யும் கோள் என மற்றும் சொன்னான் ` - சிந்தாமணி . பதுமையார் . 121 என்பதன் உரையில் , நச்சினார்க் கினியர் , ` எயிறுகளுக்கு மேலாம் தட்டம் அதட்டம் என்கின்ற எயிறுகளில் உண்டான நஞ்சைக் கடித்த வாயிலே காலும் ஆயின் , பிழிந்து உயிர் உண்ணும் . அவற்றை ஒழிந்த எயிறுகளில் உண்டான நஞ்சைக் கடித்த வாயிலே காலும் ஆயின் , வருத்தம் செய்யும் ` என்றுரைத்தார் . அவ்வீரெயிறும் ஐந்தலைக்கும் தனித்தனி இருத்தலால் , பத்துப்பல் என்க . ஏனைய பற்கள் எண்ணத்தக்கன அல்ல . பாம்பிற்குரிய நால்வேறு பற்களின் பெயர் , காளி , காளாத்திரி , யமன் , யமதூதி எனப்படும் . ` கடுவமரும் நால் எயிற்றுக்கும் பெயர் சொல்வேன் காளி காளாத்திரி யமன் யமதூதனாம் ` ( சித்தராரூடச் சிந்து ). இது புகழுடல் எய்திய உ . வே . சாமிதையர் பதிப்பிலுள்ளது . தக்க யாகப் பரணி . 155. உரை . வைத்திய சார சங்கிரகம் . பக்கம் . 530-31. பார்க்க . நெரிந்து உக்க பத்து எயிறும் இராவணனுடையன . அக்கயிலாயபதி காயப் பட்டவனாகிய இலங்காதிபதியின் தலை பத்து , ` காயப்பட்டான் ` ( தி .4 ப .1 பா .5). அடியார் செய்கை பத்து :- தசகாரியம் . தத்துவரூபம் , தத்துவதரிசனம் . தத்துவசுத்தி , ஆன்மரூபம் , ஆன்ம தரிசனம் , சிவரூபம் , சிவதரிசனம் , சிவயோகம் , சிவபோகம் ( ஆன்ம லாபம் ). இவற்றினியல்பு , சிவஞானபோதம் . சிவஞானசித்தியார் . சிவப்பிரகாசம் , உண்மைநெறிவிளக்கம் , பண்டாரசாத்திரம் முதலியவற்றால் அறியலாம் . அநுபவஞானம் குரூபதேசத்தால்தான் எய்தும் . ` திருவருள் வினவல் திருந்திடும் ` ( சங்கற்பநிராகரணத்தின் முடிவில் என்றாரே அன்றி நிட்டை எய்தலாம் என்றாரல்லர் .) வினவல் - கேள்வி ; சிரவணம் .
சிற்பி