திருவாரூர்


பண் :சீகாமரம்

பாடல் எண் : 1

சூலப் படையானைச் சூழாக வீழருவிக்
கோலத்தோட் குங்குமஞ்சேர் குன்றெட் டுடையானைப்
பாலொத்த மென்மொழியாள் பங்கனைப் பாங்காய
ஆலத்தின் கீழானை நான்கண்ட தாரூரே.

பொழிப்புரை :

சூலப்படை உடையவனாய், குங்குமம் பூசிய அழகிய தோள்களாகிய, அருவிகள் விழும் எட்டு மலைகளை உடையவனாய், பால்போன்ற இனிய சொற்களை உடைய பார்வதி பாகனாய், தனக்குத் துணையான ஆலமரத்தின் கீழ் இருந்து அறம் உரைத்த பெருமானை நான் ஆரூரில் கண்டேன்.

குறிப்புரை :

சூலப்படையும் தோளெட்டும் பாலொத்த மொழியுமை பாகமும் ஆலின்கீழிருக்கையும் உடைய சிவபெருமானை நான் கண்டது திருவாரூரிலே என்க. ஏழனுருபு ஈற்றிற்றொக்கது. தோட்குன்று:- உருவகம். தோள்களாகிய மலைகள். கோலம் - அழகு. வடிவம். தோள்களிற் சூழ்ந்து ஒழுகும் குங்குமமும் குன்றிற் சூழ்ந்து வீழும் அருவியும் கோலத்தால் ஒத்துள்ளன. `பால்போலும் இன்சொல்` மென்மொழி - `மிருதுவசநம்` ஆலத்தின் கீழானை - ஆலமரத்தின் கீழிருந்து அறம் உரைத்த குருமணியை. பாங்கு:- பால் + கு. பக்கம். (நால் + கு = நான்கு) `கல்லாலின் கீழறங்கள் சொல்லினான்காண்`.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 2

பக்கமே பாரிடங்கள் சூழப் படுதலையில்
புக்கவூர்ப் பிச்சையேற் றுண்டு பொலிவுடைத்தாய்க்
கொக்கிறகின் றூவல் கொடியெடுத்த கோவணத்தோ
டக்கணிந்த வம்மானை நான்கண்ட தாரூரே. 

பொழிப்புரை :

இருபுறமும் பூதங்கள் சூழத்தாம் சென்ற ஊர்களில் மண்டையோட்டில் பிச்சை ஏற்று உண்டு, நல்ல விளக்கம் பொருந்து வனவாகக் கொக்கிறகின் தொகுதி, ஒழுங்காக அமைக்கப்பட்ட கோவணம், சங்குமணி இவற்றை அணிந்த தலைவனை அடியேன் கண்டவிடம் ஆரூராகும்.

குறிப்புரை :

பாரிடங்கள் - பூதங்கள். படுதலை -பிரமகபாலம். `கொக்கின் தூவலும் கூவிளங் கண்ணியும் மிக்க வெண்டலை மாலை விரிசடை நக்கன்` (தி.5 ப.55 பா.4) `கொக்கிறகு சென்னியுடையான் கண்டாய்` `கொக்கிறகர் குளிர்மதிச் சென்னியர். `ஆர்ப்பர் போலும் ஆவடுதுறைய னாரே` (தி.4 ப.56 பா.6) `அக்கு ஓட்டினைச்சேய் அரைகரம் கொண்டார்` (காஞ்சிப். 6). அக்கு:- பாசிமணி, சங்குமணி என்பர். `துன்னஞ்சேர் கோவணத்தாய்`.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 3

சேய வுலகமுஞ் செல்சார்வு மானானை
மாயப்போர் வல்லானை மாலைதாழ் மார்பானை
வேயொத்த தோளியர்த மென்முலைமேற் றண்சாந்தின்
ஆயத் திடையானை நான்கண்ட தாரூரே. 

பொழிப்புரை :

சேய்மையதாகிய வீட்டுலகமாகியபேறும் அதனை அடைவதற்குரிய வழியாகிய ஆறும் ஆகின்றவனாய், அழிக்கின்ற போரில் வல்லவனாய், மாலை தொங்கும் மார்பினனாய், தம் மென்முலைமேல் குளிர்ந்த சந்தனம் பூசிய, மூங்கிலை ஒத்த தோள்களை உடைய, தன்னை வழிபடும் மகளிர் கூட்டத்திடையே இருக்கும் பெருமானை நான் கண்ட இடம் ஆரூர் ஆகும்.

குறிப்புரை :

சேயவுலகம் - எல்லாவுலகிற்கும் அப்பாலான வீட்டுலகம்; பேரின்பவுலகு. தி.4 ப.4 பா.6 குறிப்புரை காண்க. `எல்லா வுலகமும் ஆனாய்நீயே` என்றதன் கருத்துமாம். செல்சார்வும் ஆனான்; `தாயாகித் தந்தையாய்ச் சார்வும் ஆகி` (தி.6 ப.94 பா.5) செல்சார்வுடையார்க்கு (-`தமக்குச் செல்சார்வாகிய கொழுநரை யுடையார்க்கு`) இனிய ... மாலை (ஐந்திணையைம்பது. 6) கற்புறு மகளிர்க்குக் கணவனே செல்சார்வானாற் போல உயிர்க்குக் கடவுளே செல்சார்வாதலைக் `கற்புறு சிந்தைமாதர்` எனத் தொடங்கும் தாயுமானவர் பாடலாலும் அறிக. `அரன் கழல் செலுமே` `செம்மலர் நோன்றாள் சேரல்` (சிவ.போ.சூ. 11.12.) என்பவற்றால், உயிர்ச்செலவிற்கும் உயிர்ச்சார்விற்கும் பரமேசுரனன்றி வேறின்மையால், \\\\\\\\\\\\\\\"ஆனந்தவுருவாய் அன்றிச் செலவரிதாய்ச் செல்கதியாய் ... ... திகழ்வது தற்சிவம்\\\\\\\\\\\\\\\" என்றது சிவப்பிரகாசம். மாயப்போர் - மும்மல காரியமாகிய திரிபுரப்போர்; `திரிபுரம் அழித்தல் மும்மலந்தீர்த்தல்` `திரிபுர மும்மலதகனம்` `போரார்புரம் பாடி - திரிபுரத்தைப் பொடியாகச் செய்ததைத் துதித்து` (தி.8 திருவாசகம்; தாண்டவராய சுவாமிகள் வியாக்கியானம். பக்கம். 672 - 84). மாலை:- கொன்றை மாலை முதலியன. `காமர் வண்ணமார்பிற்றாரும் கொன்றை` (புறம்) `விலையிலா ஆரம்சேர் மார்பர் (தி.6 ப.82 பா.8). வேய் - மூங்கில், `வேயுறுதோளி` `வேய்த்தோளி` (சம்பந்தர்) சாந்தின் ஆயம் - சந்தனத்திரட்சி. `சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி` `அருமணித்தடம் பூண்முலை யரம்பையர்` தொகை ஆரூரில் வழிபடுவோர் தொகையுள் ஒன்று. (தி.4 ப.20 பா.3; ப.21 பா.8 பார்க்க.) `நறப்படு பூமலர் தூபம் தீபம் நல்ல நறுஞ் சாந்தம் கொண்டு ஏத்தி நாளும் வானோர் சிறப்போடு பூசிக்கும் திருவாரூர்` (தாண்டகம்). தியாகராசரைக் கண்டது ஆரூரில். ஆரூர்க்கு எழுந்தருளுமுன் அவர் வீற்றிருந்தருளிய இடம் விண்; தேவேந்திரன் வழிபட்ட திருக்கோயில். விண்ணில் அவனால் வழிபடப்பெற்று, அப்போகிக்குப் போகியாயிருந்து போகத்தைப் புரிந்தருளினார். அதனால் அவரும் அவன் திறத்திலே போகமூர்த்தியாய்த் திகழ்ந்தார். அவனது போகத்துள் ஒன்று தோளியர் முலைச்சாந்தின் ஆயத்திடை யானாதல். அவன் வழிபடு கடவுளாகி அவனுள் இருந்து போகம் காட்டியும் அவனாயிருந்து கண்டும் நின்ற காரணத்தால், இவ்வாறு கூறலாயிற்று. `பெற்ற சிற்றின்பமே பேரின்பம் ஆக` (திருவுந்தியார். 33) (சிவ. போ. சூ. 5. 11. சிவ. சித்தி. 5. 11. 9. விடயத்தின்கண்ணும் உயிரின்கண்ணும் படும் இரு வேறு நிகழ்ச்சியிலும் அரனடியை அகலாத உண்மை). பரமுத்தியிலும் உயிர்கள் சிவாநந்தாநுபூதியை விடயிக்கச் செய்தும் உடனின்றறிந்தும் வருதலால் முதல்வனை, `நசையுநர்க்கு ஆர்த்து மிசை பேராளன்` (தி.11 திருமுருகு. 270) என்றார். நற்கீரதேவ நாயனார். ஆர்த்தல் - ஆரச்செய்தல். மிசைதல் - நுகர்தல், ஈண்டு உணர்தலின் மேற்று. ஆர்த்து மிசைதல். ஆர்த்தல் - காட்டும் உப காரம் (சிவ. போ.சூ.5). மிசைதல் - காணுமுபகாரம் (௸ சூ. 11) இதற்கு நச்சினார்க்கினியர் முதலோர் வேறுரைத்தனர். இந்திரன் வழிபட விண்ணிலிருந்த தியாகராசரை மண்ணில் ஆரூரில் கண்டு போற்றிய அப்பர், அவரது விண்ணிலையையும் அரசபோகத்தையும் குறித்தருளினார்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 4

ஏறேற்ற மாவேறி யெண்கணமும் பின்படர
மாறேற்றார் வல்லரணஞ் சீறி மயானத்தில்
நீறேற்ற மேனியனாய் நீள்சடைமே னீர்ததும்ப
ஆறேற்ற வந்தணனை நான்கண்டதாரூரே. 

பொழிப்புரை :

வாகனமாக ஏறுதற்குரியவற்றில் மேம்பட்டதான காளையை இவர்ந்து எண்வகை அடியவர் கூட்டங்களும் தன்னைப் பின் தொடர வருவானாய், பகைவராய் எதிர்த்தாருடைய வலிய மதில்களைக் கோபித்தவனாய், சுடுகாட்டுச் சாம்பல் பூசிய மேனியனாய், நீண்ட சடைமுடியின் மீது நீர் நிறைந்து அலை எறியுமாறு கங்கையை ஏற்ற சடையனாய் உள்ள பெருமானை நான் தரிசித்த இடம் ஆரூராகும்.

குறிப்புரை :

ஏறு - விடை, ஏற்றம் - உயர்வு. ஏற்றமாக ஏறு ஏறி. ஏற்றம் ஆதல் ஏற்றிற்கே. பசுபதிக்கு ஏற்றம் இயல்பு. பசுக்கட்கு ஏற்றம் ஆக்கம். எண்கணம்:- (தி.4. ப.20 பா.3) காண்க. `அமரர்கணம் புடை சூழ இருந்த நாளோ` 1. அருளிப்பாடியவர். 2. உரிமையிற்றொழுவார். 3. உருத்திரபல்கணத்தார். 4. விரிசடை விரதிகள். 5. அந்தணர். 6. சைவர். 7. பாசுபதர். 8. கபாலிகள். ஆகிய எண்திறத்தார் தொகை. முற்பாட்டிலே அரம்பையர் தொகை குறிக்கப்பட்டதால், அருளிப் பாடியர் முதலிய எண்கணத்தார் இதிற் குறிக்கப்பெற்றனர். `எண்கணம் இறைஞ்சும் கோளிலிப்பெருங் கோயிலுளானைக் கோலக்காவினிற் கண்டுகொண்டேன்` (தி.7 ப.62 பா.8). `எண்கணத்தேவர்கள்` (தி.10 திருமந்திரம். 1881). 1. நந்தி. 2. மகாகாளர். 3. விநாயகர். 4. இடப தேவர். 5. பிருங்கி. 6. சுப்பிரமணியர். 7. உமாதேவி. 8. சண்டேசுவரர். சுத்த வித்தியாதத்துவத்தில் வாழும் நந்தி முதலிய கணநாதர் எண்மர் (சிவப். 21. திருவிளங்கம் உரை. சதாசிவரூபம். 131). \\\\\\\\\\\\\\\"திருக்கயிலை வீற்றிருந்த சிவபெருமான் திருக்கணத்தார் பெருக்கியசீர்த் திருவாரூர்ப் பிறந்தார்கள் ஆதலினால்\\\\\\\\\\\\\\\" (தி.12 பெரியபுராண.) அத்தலத்தில் எல்லாரும் எண்கணத்துள் ஒரு கணத்தாராவர். திரிபுரத்து அசுரர்; வித்தியுன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன். மாறு ஏலாது அருள் பெற்றோர்:- விரத்தன், பரமயோகன், குணபரன். (உபதேசகாண்டம். விசயச். 2.269.70) சுதர்மன், சுநீதி, சுபுத்தி எனலும் உண்டு. `மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க்கு அருள் செய்தார்` (தி.1 ப.69 பா.1, தி.3 ப.78 பா.5, தி.7 ப.55 பா.8) பார்க்க. ஆறு - கங்கை.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 5

தாங்கோல வெள்ளெலும்பு பூண்டுதம் மேறேறிப்
பாங்கான வூர்க்கெல்லாஞ் செல்லும் பரமனார்
தேங்காவி நாறுந் திருவாரூர்த் தொன்னகரில்
பூங்கோயி லுண்மகிழ்ந்து போகா திருந்தாரே. 

பொழிப்புரை :

அழகாக வெண்ணிற எலும்புகளைச் சூடித் தம் காளை மீது இவர்ந்து, பக்கலிலுள்ள ஊர்களுக்கெல்லாம் செல்லும் மேம்பட்டவராய் இனிய குவளைமலர்கள் மணம்வீசும் திருவாரூர் ஆகிய பழைய ஊரில் உள்ள பூங்கோயில் என்ற பெயரை உடைய கோயிலை உகந்து கொண்டு அதனை ஒரு பொழுதும் நீங்காமல் எம்பெருமான் இருந்துள்ளார்.

குறிப்புரை :

கோலம் - அழகு, வடிவு. ஏறு - விடை. பாங்கு - பக்கம். தேம் காவி - தேனுள்ள கருங்குவளை. `கோலம் ஆர் பானல் காவி குவலயம் மணத்தை மொண்டு காலத்தேன் உலவுகின்ற கருங் குவளைக்கு நாமம்` (சூடாமணி நிகண்டு) `அரத்தம் உற்பலம், எருமணம், கல்லாரம், செங்கழுநீர் செங்குவளை` (பிங்கலந்தை). திருவாரூர்க்கோயிலைப் `பூங்கோயில்` என்பர். `பூதம் யாவை யினுள்ளலர் போதென வேத மூலம் வெளிப்படுமே தினிக் காதல் மங்கை யிதய கமலமா மாதொர் பாகன் ஆரூர் மலர்ந்தது` (தி.12 பெரிய. திருமலைச். 33) `மலர் மகட்கு வண்டாமரைபோல் மலர்ந்து அலகில் சீர்த்திருவாரூர் விளங்கும்` (தி.12 பெரிய.மநுநீதி. 12.) `பொன்றயங்கு மதில் ஆரூர்ப் பூங்கோயில் அமர்ந்த பிரான்` (தி.12 பெரிய. மநுநீதி. 49). `புற்றிடங்கொண்டவர் ஆதிதேவர் அமர்ந்த பூங்கோயில்` (தி.12 திருக் கூட்டச். 1) `பூவெனப்படுவது பொறிவாழ்பூவே` ஆதலின், தாமரைப் பூப்போலும் வடிவுடையமையாற் `பூங்கோயில்` என்பது பெயர் ஆயிற்று. அதனை வழக்கத்தின்வழாது கமலாலயம் என்றனர். வன்னியூரை அக்னிபுரம் என்றதுபோற் பூங்கோயிலைப் பிருதிவ்யாலயம் என்னாதது தமிழ்த்தாயின் நல்வினைப்பயனே.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 6

எம்பட்டம் பட்ட முடையானை யேர்மதியின்
நும்பட்டஞ் சேர்ந்த நுதலானை யந்திவாய்ச்
செம்பட் டுடுத்துச் சிறுமா னுரியாடை
அம்பட் டசைத்தானை நான்கண்ட தாரூரே. 

பொழிப்புரை :

எமது பட்டத்தைத் தனது பட்டமாகக் கொண்டு இருப்பவனாய், அழகான பிறையாகிய குறுகலான பட்டம் சேர்ந்த நெற்றியனாய், மாலை நேர வானம் போன்ற சிவந்த பட்டினை உடுத்து, சிறிய மான் தோல் ஆடையாகிய அழகிய பட்டினையும் கட்டிய பெருமானை அடியேன் தரிசித்த இடம் ஆரூராகும்.

குறிப்புரை :

எம் பட்டம் பட்டம் உடையானை:- சித்து அசித்து சிதசித்து என்பன பட்டம். புருடதத்துவத்திற்குரிய சிதசித்து என்பதில் உள்ள சித்து ஆண்டவனுக்குரியது. சித்தியார். சூ. 2:- 69. கொண்டுடையவனை: பட்டம் - ஆளும் உரிமை. பட்டம் ௸ சூ.2:- திரு. 69. எமது பட்டத்தைத் தனது பட்டமாகக்கொண்டுடையவனை. `பட்டம் - எண்மரும் பார்தொழ எய்தினார்` (சிந்தா. இலக்கணை. 197). யாம் இவ்வுடற்கண் இருந்து ஆளும் உரிமையொடு விளங்கினேம். தியாகேசன் எம் உரிமையைத் தன்னுரிமையாகப் பற்றிக்கொண்டான். பெத்தத்தில் உடலாட்சி உயிரினது முத்தியில் அது கடவுளது. ஏகனாகி இறைபணிநிற்கின்ற அநுபவம் உற்றார்க்கே இவ்வுண்மையுணர்தல் கூடும். `கனல்சேர் இரும்பென்ன ஆள்தானாம் - தானும் கனலைச் சேர்ந்த இரும்பு போலத் தன் சுதந்திரத்தை விட்டு அம் முதல்வனுக்கு அடிமையாம்` `நான் என ஒன்று இல் என்று தானே எனும் அவரைத் தன் அடிவைத்து இல் என்றுதானாம் இறை - யான் என்று ஒரு முதல் காணப்படுமாறு இல்லை என்று அறிந்து தானே முழுவதும் எனக் காண்பவரை அவ்வாறே வேறு காணப்படுமாறு இல்லை என்று தனது திருவடி வியாபகத்துள் அடங்கிநிற்கச்செய்து தானே முழுவதுமாய்க் காணப்பட்டும் நிற்பன்` (சிவஞானபாடியம். சூ. 9. 10.) தன் இச்சா ஞானக்கிரியைகளின் தொழிற்பாட்டுக்கு முதல்வனது இச்சா ஞானக் கிரியைகளை இன்றி அமையாத ஆன்மா, அவ்வியைபுபற்றி நிகழ்வன எல்லாம் முதல்வனது இச்சா ஞானக் கிரியைகளது நிகழ்ச்சியே எனக் கண்டு அவனது வியாபகத்துக்குள்ளாக அடங்கிநிற்கும் நிலை இது. `நாமும் அரனுடைமை`. (போதம் சூ. 10. வெண்பா.) இந் நாயனார் திருவாரூரில் இவ்வநுபவத்தைத் தன்மையில் வைத்து இவ்வாறு உணர்த்தியதேயன்றிப் படர்க்கையில் வைத்தும், `உயிராவணம் இருந்து உற்றுநோக்கி உள்ளக்கிழியின் உருவெழுதி உயிர் ஆவணம் செய்திட்டு உன்கைத் தந்தால் உணரப்படுவாரோடு ஒட்டி வாழ்தி ... நின் அருட்கண்ணால் நோக்காதார் அல்லாதாரே` `முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள், மூர்த்தியவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்,பின்னைஅவனுடைய ஆரூர் கேட்டாள். பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்` என்ற அளவில் நின்றிலள்; `அன்றே அன்னையையும் அத்தனையும் நீத்தாள்; அகல் இடத்தார் ஆசாரத்தை அகன்றாள்; தன்னை மறந்தாள்; தன் நாமம் கெட்டாள்; தலைவன் தாளே தலைப்பட்டாள்.` அவ்வுண்மை நிலையை அவள் போல் அம்மையப்பர்தம்மில் தலைப்பட்டார் பாலே தலைப்பட்டுத் தலைப்படுதலை உணர்ந்து தம்மில் நிலைப்படலாம்; பேதம் நீக்கி, நிலை ஆக்கி அத்தலை தலைப்படலாம். (திருக்களிறு. 2. பார்க்க) ஏர் - அழகு, எழுச்சி. `நும்` சாரியையோ? (நன்னூல். 244. தொல். எழுத்து. நச்சினார்க்கினியம்.) `நும்பட்டம்` ஆறன் றொகையாகக் கொள்ளல் பொருந்தாது. நுண்பட்டம் என்பதன் திரிபோ? பட்டம் - நெற்றிப் பட்டம் (தி.3 ப.112 பா.2; தி.5:- ப.30 பா.3, ப.87 பா.1) மதிபோலும் பட்டம். இன் உவமவுருபு. செம்பட்டும் சிறிய மானுரியாடையாகிய அழகிய பட்டும் அசைத்தான். அசைத்தல் - கட்டுதல், உடுத்தல், `எம்` என்றதால் `தன்` என்பதும் `ஆக` என்பதும் வருவித்துரைக்கற்பாலன. பட்டு:- (தி.6 ப.2 பா.11, ப.59 பா.7)

பண் :சீகாமரம்

பாடல் எண் : 7

போழொத்த வெண்மதியஞ் சூடிப் பொலிந்திலங்கு
வேழத் துரிபோர்த்தான் வெள்வளையா டான்வெருவ
ஊழித்தீ யன்னானை யோங்கொலிமாப் பூண்டதோர்
ஆழித்தேர் வித்தகனை நான்கண்ட தாரூரே. 

பொழிப்புரை :

மதியத்தின் பிளவாக இரு முனைகளும் ஒத்த வெண்பிறையைச் சூடி, வெள்ளிய வளையல்களை அணிந்த பார்வதி அஞ்சுமாறு யானைத் தோலைப் போர்த்தவனாய், அடியவர்களின் பகைவருக்கு ஊழித்தீ போன்ற கொடியவனாய், கடலாற் சூழப்பட்ட உலகையே ஒலிமிக்க வேதகங்களாகிய குதிரைகள் பூண்ட தேராகக் கொண்ட சாதுரியனான பெருமானை அடியேன் தரிசித்த தலம் ஆரூராகும். ஆழித்தேர் - திருவாரூர்த் தேரின் பெயர்.

குறிப்புரை :

போழ் - பிளவு. `பிறைப்பிளவு`. `போழுமதியம் புனக்கொன்றை புனல்சேர் சென்னிப் புண்ணியா` (தி.7 ப.77 பா.8) போழ் ஒத்த - பிளந்தாற்போன்ற என்னும் பொருட்டு. வேழத்துரி - யானைத்தோல். ஊழித் தீ அன்னானை - ஊழிக்காலத்துத் தீயைப் போன்றவனை. `அளவிலாப் பல்லூழி கண்டு நின்ற தீர்த்தனை` `ஊழி முதல்வனாய் நின்றாய் நீயே` `ஊழித்தீயாய் நின்றாய்` `ஊழி தோறு முலகினுக் கொருவர்` `ஊழியளக்கவல்லான்` `ஊழிவண்ணமுமாவர்` `ஊழியுமாய் உலகேழாகி` என முன்னும் பின்னும் உள்ளதுணர்க. ஓங்கு மா - உயரிய குதிரைகள். ஆழித்தேர்:- தியாகராசரது திருத்தேரைக்குறிப்பது. (திருவாரூருலா. 96-98) ஓரூரும் ஒழியாது உலகெங்கும் எடுத்தேத்தும் ஆரூர்த்தேர் மிக்க பெருமையுடையது. `தேரூரும் நெடுவீதி பற்றிநின்று திருமாலும் நான்முகனும் தேர்ந்தும் காணாது ஆரூரா ஆரூரா என்கின்றார்கள்`. (தி.6. ப.25 பா.9)

பண் :சீகாமரம்

பாடல் எண் : 8

வஞ்சனையா ரார்பாடுஞ் சாராத மைந்தனைத்
துஞ்சிருளி லாட லுகந்தானைத் தன்றொண்டர்
நெஞ்சிருள் கூரும் பொழுது நிலாப்பாரித்
தஞ்சுடராய் நின்றானை நான்கண்ட தாரூரே. 

பொழிப்புரை :

வஞ்சனையுடையவர் யார் மாட்டும் அணுகாத திறமையுடையவனாய், எல்லோரும் உறங்கும் இருள் நேரத்தில் கூத்தாடுதலை விரும்பியவனாய், தன் அடியவர்களுடைய உள்ளத்தில் துயரமாகிய இருள் மிகும்போது ஞானமாகிய ஒளியைப் பரப்பி அழகிய ஞானப் பிரகாசனாய் நின்ற பெருமானை அடியேன் தரிசித்த இடம் ஆரூராகும்.

குறிப்புரை :

ஆர் பாடும் - எவர் திறத்தும், `பார்பாடும் பாதாளர் பாடும் விண்ணோர் தம்பாடும் ஆர்பாடும் சாராவகை அருளி ஆண்டுகொண்ட நேர் பாடல்பாடி நினைப்பரிய தனிப்பெரியோன் சீர் பாடல் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ` (தி.8 திருவாசகம். 247). மைந்தன்:- மழ - மழ் + து = மழ்ந்து - மய்ந்து மைந்து, என்றதன் திரிபு. (தமிழ்ச்சொல்லமைப்பு. பக்கம். 55). வீரசோழியம் பார்க்க. `துஞ்சிருளில் ஆடல் உகந்தாய் போற்றி` `நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதன்` கூரிருட் கூத்தொடு குனிப்போன் காண்க`. தந் தொண்டர் நெஞ்சு இருள் கூரும் பொழுது நிலாப்பாரித்து அம் சுடராய் நின்றான்:- `சொற்றெரியாப் பொருள் சோதிக்கு அப்பால் நின்ற சோதிதான் மற்று அறியா அடியார்கள்தம் சிந்தையுள் மன்னுமே`. (தி.3 ப.9 பா.10) `இடர்கெடுத்து ... ... என் உள் இருட்பிழம்பு அற, எறிந்து எழுந்த சுடர்மணி விளக்கின் உள்ளொளி விளங்கும் தூயநற் சோதியுட்சோதீ` (தி.9 திருவிசைப்பா.2) `இருள்கெட அருளும் இறைவ போற்றி` `திணிந்ததோர் இருளில் தெளிந்த தூவெளியே`. (தி.8 திருவாசகம். 389) `இருள் திணிந்து எழுந்திட்டதோர் வல்வினைச் சிறு குடில் இது` (௸435) \\\\\\\\\\\\\\\"இருளாயவுள்ளத்தின் இருளை நீக்கி இடர்பாவம் கெடுத்து ஏழையேனை உய்யத் தெருளாத சிந்தைதனைத் தெருட்டித் தன்போற் சிவலோக நெறியறியச் சிந்தைதந்த அருளான்\\\\\\\\\\\\\\\" (தி.6 ப.54 பா.4) என்ற அநுபவவாக்கியம் இப் பாடற்பகுதி. (தி.4 ப.92 பா.4) பார்க்க. `ஒன்று மிகினும் ஒளிகவராதேல் உள்ளம் என்றும் அகலா திருள்` (திருவருட்பயன்.29) நமிநந்தியடிகளுடைய வரலாற்று நினைவுமாம். (தி.4 ப.102 பா.9)

பண் :சீகாமரம்

பாடல் எண் : 9

காரமுது கொன்றை கடிநாறு தண்ணென்ன
நீரமுது கோதையோ டாடிய நீண்மார்பன்
பேரமுத முண்டார்க ளுய்யப் பெருங்கடனஞ்
சாரமுதா வுண்டானை நான்கண்ட தாரூரே. 

பொழிப்புரை :

நன்கு முதிர்ந்த கொன்றை மரத்தில் பூக்கும் பூவின் நறுமணம் கமழும் குளிர்ந்த நீர் மயமான கங்கையைப் பார்வதியோடு மகிழ்ந்த, நீண்ட மார்பினனாய், பெரிய அமுதத்தை உண்டார்களாய்த் தேவர்கள் உயிர்பிழைப்பதற்காகப் பெரிய கடலின் விடத்தை அமுதமாக உண்ட பெருமானை அடியேன் தரிசித்த இடம் ஆரூராகும்.

குறிப்புரை :

கார் அமுது கொன்றை:- `கண்ணிகார் நறுங்கொன்றை` (புறம்) `கார்விரி கொன்றை` (அகம்) என்றவற்றால், கொன்றை கார்காலத்து மலர்வது எனல் விளங்கும். அதன் மலர்ச்சிக்குக் காரே அமுது. நீரமுத கோதை - கங்கா தேவி. பேரமுதம் - பாற்கடலினின்று கடைந்து எடுத்த அமுதம். பெருங்கடல் நஞ்சு அமுதா உண்டான்:- `விண்ணோர் அமுதுண்டும் சாவ ஒருவரும் உண்ணா நஞ்சம் உண்டு இருந்து அருள்செய்குவாய்` என்று இளங்கோவடிகள் வெற்றித் திருவின் மேலேற்றிக் கூறியதுணர்க. ஆர்தற்குரியதல்லாத நஞ்சு ஆரமுதாயிற்று. வினைத்தொகை. பண்புத் தொகையுமாம். அமுதம் உண்டது உய்தியின் பின்னர்த்து. நஞ்சினால் மாய்ந்தனரேல் அமுதுண்ணுவாரோ?

பண் :சீகாமரம்

பாடல் எண் : 10

தாடழுவு கையன் றாமரைப்பூஞ் சேவடியன்
கோடலா வேடத்தன் கொண்டதோர் வீணையினான்
ஆடரவக் கிண்கிணிக்கா லன்னானோர் சேடனை
ஆடுந்தீக் கூத்தனை நான்கண்ட தாரூரே. 

பொழிப்புரை :

முழந்தாள் அளவும் நீண்ட கைகளை உடையவனாய், தாமரைப் பூப்போன்ற சிவந்த திருவடிகளை உடையவனாய், பிறரால் கொள்ள முடியாத வேடத்தினனாய், வீணையைக் கையில் கொண்டவனாய், அசைகின்றவாய் ஒலிக்கின்ற கிண்கிணிகளை அணிந்த திருவடிகளை உடைய அத்தகைய மேம்பட்டவனாய்த் தீயில் கூத்தாடும் பெருமானை அடியேன் தரிசித்த தலம் ஆரூராகும்.

குறிப்புரை :

தாடழுவுகையன் (தாள் தழுவு கையன்) என்றது தாடவுடுக்கையன் என்று பிழைபட்ட பாடம் ஆயிற்று. தாள்தோய் தடக்கை (- ஆஜாநுபாஹு) புறம். 14. 59. 90. 4. வெ. 205. தாட என்றுகொண்டு அடிக்க என்றுரைப்பர். அவ்வாறொரு வினையெச்சம் தமிழில் இல்லை. தாடநம் என்னும் வடசொல்லின் சிதைவெனலும் செவ்விதன்று. `கவிழமலை தரளக்கடகக்கை` (தி.1 ப.45 பா.9) என்றதில் தளர எனக் கடகம் தளரலானது பிழை. திருமுறையில் எழுதினோர் முதலோரால் பிழைகள் பலஉள. கோடல்ஆ - கொள்ளலாகா, ஆகா `ஆ` எனத் தொக்கது. அரவேடம் - சிவவேடம், சிவ. போ. சூ. 12. ஆடரவமும் கிண்கிணியும், கிண்கிணிக்காலழகர் (திருவாரூருலா. 59-60. 151. 217-9). `ஆறுசடைக்கணிவர் ... ... கோடால வேடத்தர் - `இடைமருது மேவி இடங்கொண்டாரே` என்றதிலும் `கோடலர` கோடலா என்றிருந்து பிழைபட்டிருக்கலாம்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 11

மஞ்சாடு குன்றடர வூன்றி மணிவிரலால்
துஞ்சாப்போர் வாளரக்கன் றோணெரியக் கண்குருதிச்
செஞ்சாந் தணிவித்துத் தன்மார்பிற் பால்வெண்ணீற்
றஞ்சாந் தணிந்தானை நான்கண்ட தாரூரே. 

பொழிப்புரை :

மேகங்கள் அசைந்து செல்லும் கயிலை மலையை இராவணன் பெயர்க்க முற்பட அழகிய கால் விரலால் அழுத்தி, உறங்காது, போர் செய்யும் திறமையை உடைய கொடிய அவ்வரக்கனுடைய தோள்கள் நெரிய அவன் கண்களிலிருந்து புறப்பட்ட இரத்தமாகிய சிவந்த கலவையை அவனை அணியுமாறு செய்து, தன் மார்பிலே பால்போன்ற வெண்ணீற்றுப் பூச்சினை அணிந்த பெருமானை அடியேன் தரிசித்த திருத்தலம் திருவாரூரேயாம்.

குறிப்புரை :

மஞ்சு - கருமுகில் (மைது, மய்து, மய்ந்து, மய்ஞ்சு, மஞ்சு), குன்று - திருக்கயிலை. துஞ்சாப்போர் - துயிலாது செய்யும் போர். மாளாப்போர் எனலுமாம். `துஞ்சாமுழவு` (சிலப்) துஞ்சாக்கம்பலை (பெரும்பாண் 260) குருதிச்செஞ்சாந்து இராவணன் அணியச் செய்து தான் அஞ்சாந்து அணிந்தான். செம்மை x வெண்மை, மார்பினீறு:- `நீறுசேர் செழுமார்பினாய்` (தி.4 ப.20 பா.5).
சிற்பி