திருவாரூர்


பண் :சீகாமரம்

பாடல் எண் : 1

காண்டலேகருத் தாய்நினைந்திருந் தேன்மனம்புகுந் தாய்க ழலடி
பூண்டுகொண் டொழிந்தேன் புறம்போயினா லறையோ
ஈண்டுமாடங்க ணீண்டமா ளிகை மேலெழுகொடி வானி ளம்மதி
தீண்டிவந் துலவுந் திருவாரூ ரம்மானே.

பொழிப்புரை :

நெருங்கிய மாடங்கள் நீண்ட மாளிகைகள் இவற்றின் மேல் உயர்த்தப்பட்ட கொடிகள் வானத்திலுள்ள பிறையைத் தீண்டியவாறு வானத்தில் உலவும் திருவாரூரிலுள்ள பெருமானே ! உன்னைக் காண்பதனையே எண்ணமாகக் கொண்டு உன்னை விருப்புற்று நினைத்தவாறு இருந்த அடியேனுடைய உள்ளத்தில் நீ புகுந்தாயாக , உன் வீரக்கழல் அணிந்த திருவடிகளை என் மனத்திற்கு அணிகலனாக அணிந்து கொண்டிருக்கின்ற என்னை விடுத்துப் புறத்தே போக விடேன் . உன்மேல் ஆணை .

குறிப்புரை :

நெருங்கிய மாடங்களின் நீண்ட மாளிகைமேல் எழுந்தோங்கிய கொடிகள் வானில் ஊரும் இளம் பிறையைத் தீண்டிவந்து உலவும் உயர்வுடைய திருவாரூரில் எழுந்தருளிப் புற்றிடங்கொண்ட கடவுளே உன்னைக் காணவேண்டும் என்னும் ஒன்றே குறிக்கோளாய்க் கருதியிருந்தேன் , அது நிறைவேறியது என்பது திண்ணமாக என் , உள்ளத்திற் புகுந்து நின்றாய் . உன் கழலடியை என் அகத்திற்கு அருங்கலமாக்கிக்கொண்டு நின்றேன் . இனிப் புறத்திற் போகலொட்டேன் ( ப .20 பா . 7, 8) யானும் போகலாகாது ; நீயும் போயினால் நின்மேல் ஆணை . காண்டல் - காட்சி , ஏகாரம் பிரிநிலை . கருத்து - குறிக்கோள் . ` ஆண்டவன் அடியே நினைந்து ஆசையால் காண்டலே கருத்தாகியிருப்பனே ` ( தி .5 ப .71 பா .8) மனம் புகுந்தாய் :- ` நுனையே நினைந்திருந்தேன் . வந்தாய் , போய் அறியாய் மனமே புகுந்து நின்ற சிந்தாய் ` ( தி .1 ப .21 பா .1) ` என்மனமே ஒன்றிப் புக்கனன் போந்த சுவடு இல்லையே ` (782) ` சிந்தை புக்கிருந்து போகாத புனிதன் ` ( தி .6 ப .69 பா .2) ` பொய்யாது என் உயிருட்புக்கு இருந்தாய் இன்னம் போந்தறியாய் ` ( தி .7 ப .28 பா .5) ` போகாது என் சிந்தை புகுந்தாய் போற்றி ` ( தி .6 ப .55 பா .26) ` சிவன் எனும் ஓசை அல்லது அறையோ உலகில் திருநின்ற செம்மை உளதே `, ` சிவம் அல்லது இல்லை அறையோ சிவமாம் தவம் அல்லது இல்லை தலைப் படுவார்க்கு ` ( தி .10 திருமந்திரம் 1534.) நோக்குக . ` செம்மையுள் நிற்பராகிற் சிவகதி விளையும் அன்றே ` ( தி .4 ப .75 பா .2) ` நிவஞ்சகத்து அகன்ற செம்மை ஈசன் ` (760) செய்ய மலர்கள் இடமிகு செம்மையுள் நிற்பரே ` ( தி .5 ப .86 பா .17) ` திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட திருநாவுக்கரையன்றன் அடியார்க்கும் அடியேன் `. ( திருத்தொண்டத் தொகை )

பண் :சீகாமரம்

பாடல் எண் : 2

கடம்படந்நட மாடினாய்களை கண்ணினக்கொரு காதல் செய்தடி
ஒடுங்கி வந்தடைந்தே னொழிப்பாய் பிழைப்பவெல்லாம்
முடங்கிறான்முது நீர்மலங்கிள வாளைசெங்கயல் சேல்வ ரால்களி
றடைந்த தண்கழனி யணியாரூ ரம்மானே.

பொழிப்புரை :

வளைந்த இறால் மீன் , பழைய நீர்ப்பள்ளத்தில் உறையும் மலங்கு , இளைய வாளைமீன் , சிவந்த கயல்மீன்கள் , சேல்மீன்கள் , வரால் மீன்கள் , களிறு என்ற மீன்கள் வந்து சேரும் குளிர்ந்த வயல்களை உடைய அழகிய ஆரூர்த் தலைவனே ! பஞ்சமுக வாத்தியம் ஒலிக்கக் கூத்தாடுபவனே ! அடைக்கலம் நல்குபவனாயுள்ள நின்பால் தனியன்பு கொண்டு உன் திருவடிகளில் உலகப் பற்றுக்கள் ஒடுங்க , வந்து அடைந்தேன் . அடியேன் செய்த பிழைகளை எல்லாம் போக்குவாயாக .

குறிப்புரை :

இறால் , மலங்கு , வாளை , செங்கயல் ( X கருங்கயல் ) சேல் , வரால் , களிறு ( சுறா ) என்னும் பெயரிய மீனினம் சேர்ந்த தண் செய்கள் அணிசெய்யும் திருவாரூர்ப்பெருமானே , முழா ஒலிக்கத் திருக்கூத்தாடினாய் , எனக்கும் ஏனைய அடியார்க்கும் துன்பங்களைக் களைகணாய்நின்று தவிர்க்கும் நினக்குத் தனியன்பு செய்து , பொற்கழலுள் ஒடுங்கிவந்து அடைந்தேன் . யான் பிழையாகச்செய்த எல்லாவற்றையும் பொறுத்தொழிப்பாய் . ` ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம் நடுங்குவதில்லை நமனும் அங்கு இல்லை ` ( தி .10 திருமந்திரம் . 1624) கடம் படம் - பிண்டத்தும் அண்டத்தும் . கடம் ( பஞ்சமுக வாத்தியம் ) ஒலிக்க ; பிறவி தீர எனலும் ஆம் . களைகண் - களையும் இடமானவன் .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 3

அருமணித்தடம் பூண்முலை யரம்பையரொ டருளிப் பாடியர்
உரிமையிற் றொழுவார் உருத்திர பல்கணத்தார்
விரிசடைவிர திகளந்தணர் சைவர்பாசு பதர்க பாலிகள்
தெருவினிற் பொலியுந் திருவாரூ ரம்மானே.

பொழிப்புரை :

விலை உயர்ந்த மணிகளாலாகிய பெரிய அணிகலன்களைப் பூண்ட மார்பினை உடைய தேவருலகப் பெண்கள் போல்வாரோடு , கோயில் பணி செய்பவர்கள் . ஆதி சைவர்கள் , சிவகணத்தார் , விரிந்த சடையை உடைய , விரத ஒழுக்கம் பூண்ட மாவிரதிகள் , அந்தணர் , சைவர் , பாசுபதர் , கபாலிகள் ஆகியோர் தெருக்களில் பலராகக் காணப்படும் திருவாரூர்த் தலைவனே !

குறிப்புரை :

அருமை :- விலைமதித்தற்கருமை . 1. அருளிப் பாடியர் ( தி .12 பெரிய . சேரமான் . 134, வெள்ளானைச் . 33) ( கோயிற்புரா இரணியவன்மச் -51 -2) 2. உரிமையிற்றொழுவார் :- ஆதிசைவர் ; சிவனுக்கே உரிமையான உருத்திர கணிகையருமாம் . ( கோயிற்புரா திருவிழாச் 27 - உரை ) 3. உருத்திர பல்கணத்தார் :- ( சிவகணத்தார் . அபிதானசிந்தாமணி . பக் . 652) ` உறவாவார் உருத்திர பல்கணத்தினோர்கள் `. இக்கணத்தைக் காளாமுகர் எனல் அறியார் கூற்று . 4. விரிசடை விரதிகள் :- துறவிகள் ; மாவிரதிகள் . ( சித்தாந்தப்பிரகாசிகை , சிவஞானபாடியம் ) வித்தகக் கோலவெண்டலைமாலை விரதிகள் ( தி .4 ப .21 பா .1) பாசுபதர் கூறிய இயல்புடைய ஆன்மாக்கள் சாத்திர முறைத் தீக்கைபெற்று எலும்புமாலை அணிதல் முதலிய சரியைகளின் வழவாதொழுகி முத்திபெறும் என்னும் அகப்புறச் சமயத்தார் முத்தர்க்கு எல்லாக் குணங்களும் உற்பத்தியாம் என்பர் . உற்பத்தி சமவாதி . ( ஞானாவரண விளக்க மாபாடியம் . பக் . 189-9 ). 5. அந்தணர் :- ஆதிசைவர் முதலோர் 6. சைவர் :- ஞானா . வி . மா . பக் . 224. 7. பாசுபதம் :- மாயை , கன்மம் என்னும் இரண்டும் இசைந்து ஆணவம் இல்லை என மறுத்து , இறைவன் தன் குணங்களைச் சாத்திர முறைப்படி பெற்ற தீக்கையால் ஞானம் பற்றியவனிடத்தில் , பற்றுவித்துத் தன் அதிகாரத்தின் ஒழிவு பெற்றிருப்பன் என்னும் அகப்புறச் சமயத்தார் . சங்கிராந்த சமவாதி . ( ஞானா . வி . மா . பக் . 189-224 ). 8. கபாலிகள் :- மாவிரதர் போலவே ஆன்ம வியல்பு கொண்டவர் . பச்சைக்கொடி ஒன்று கைக்கொண்டு நாடோறும் மனிதத் தலையோட்டில் பிச்சையேற்றுண்பவர் . முத்தராய்ச் சிவன் ஆவே சித்தலால் எல்லாக் குணங்களும் பெற்றுச் சிவசமம் ஆவர் என்னும் கொள்கையர் ; அகப்புறச் சமயத்தவர் . ஆவேச சமவாதி ( ஞானா . வி . மா . பக் . 184-6 ). தெருவினிற் பொலிதல் :- வழிபடற் பொருட்டுத் தலத்தில் வாழ்ந்து திருக்கோயிலுக்குச் செல்லுதலும் மீளுதலும் நிகழ்த்துவதால் ஆன காட்சியும் பெருமான் திருவுலாக் கண்டு மகிழ்ந்து வரும் தோற்றமும் ஆம் . இதில் விளித்து நின்றதன்றி வேண்டியது யாதும் இன்று . முன்னதிற் பிழைத்தவை பொறுக்க வேண்டியதுணர்க . பா .6 பார்க்க .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 4

பூங்கழறொழு தும்பரவியும் புண்ணியாபுனி தாவுன் பொற்கழல்
ஈங்கிருக் கப்பெற்றேன் என்ன குறையுடையேன்
ஓங்குதெங்கிலை யார்கமுகிள வாழைமாவொடு மாது ளம்பல
தீங்கனி சிதறுந் திருவாரூ ரம்மானே.

பொழிப்புரை :

உயர்ந்த தென்னை மட்டைகளைத் தொடும் அளவு உயர்ந்த பாக்கு மரம் , இளவாழை , மா , மாதுளம் , பலா என்பன இனிய பழங்களை உதிர்க்கும் திருவாரூர்த் தலைவனே ! உன்னுடைய பொலிவை உடைய திருவடிகளைத் தொழுதும் முன் நின்று துதித்தும் , புண்ணியனாய்ப் புனிதனாயுள்ள உன்னுடைய அழகிய திருவடிகள் என்னிடத்துத் தங்கப் பெற்றதனால் அடியேன் இனிவேறு யாது தேவையை உடையேன் ? ஈங்கு - என்னிடம் .

குறிப்புரை :

மேலோங்கி வளர்ந்த தெங்குகளும் இலை நிறைந்த கமுகங்களும் இளவாழைகளும் மாக்களும் மாதுளங்களும் பலாக்களும் தத்தம் இனிய கனிகளைச் சிதறுகின்ற ( வளம் மிக்க ) திருவாரூர் . ` தெங்கம் பழம்போல் திரண்டுருண்ட ` என்றதால் , தென்னையினுடையதையும் கனி எனல் கூடும் ; கமுகம் பழம் என்னும் வழக்கம் இன்று ; கனி என்றது எவ்வாறு பொருந்தும் எனில் கூறுதும் . கனிந்தது கனி . பழுத்தது பழம் . முற்றியது முற்றல் . இம் மூன்றும் ஒன்றல்ல . முற்றிய பாக்கு , பிஞ்சுப் பாக்கு எனல் உண்டு . முற்றுதல் கனிதல் எல்லாம் பொது . வாழை முதலியவற்றொடு சேர்த்துக் கூறலால் , அப் பொதுச் சொல்லால் உணர்த்தலாயிற்று . பல - பலா . ` தீங்கனி ` என்றது எல்லாம் இனிமையுடைமை குறித்து , தொழுதும் பரவியும் ( வழிபட்டமையால் ) உன் கழல் ஈங்கு (- என் உள்ளத்தில் ) இருக்கப்பெற்றேன் . என்ன குறை உடையேன் . ஒரு குறையும் இல்லேன் . தொழல் மெய்யின் தொழில் . பரவல் வாயின் வினை . இருக்கப்பெறல் - உள்ளத்தின் நிகழ்ச்சி . தொழுது பரவிய பூங்கழலே , புண்ணியத்தாலும் புனிதத்தாலும் உள்ளேயும் பொன்னென ஒளிரும் கழல் என்க . வழிபடுவோர்க்கு இன்றியமையாத புண்ணியமும் புனிதமும் அவர்க்கு அவ்வேளையில் அருளும் இறைவன் வடிவமும் ஆகும் . ஓங்கு தெங்கு :- வினைத்தொகை . நிகழ்வுபற்றியது . பலகனி எனல் சிறவாது . ` தெங்கு .... பல ` எழுவாய் , ` சிதறும் ` பயனிலை . ` கனி ` செயப்படுபொருள் .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 5

நீறுசேர்செழு மார்பினாய்நிரம் பாமதியொடு நீள்ச டையிடை
ஆறுபாய வைத்தாய் அடியே யடைந்தொழிந்தேன்
ஏறிவண்டொடு தும்பியஞ்சிற கூன்றவிண்ட மலரி தழ்வழி
தேறல்பாய்ந் தொழுகுந் திருவாரூ ரம்மானே.

பொழிப்புரை :

வண்டுகள் தும்பிகளோடு ஏறி மலர்களில் அமர்ந்து , அழகிய சிறகுகளை அவற்றில் அழுத்தி வைப்பதனால் , மலர்களின் இதழ்கள் வழியாகத் தேன் பாய்ந்து ஒழுகும் திருவாரூர்த் தலைவனே ! நீ திருநீறணிந்த வளமான மார்பினை உடையாய் , பிறை மதியோடு உன் நீண்ட சடையிலே கங்கை பரவுமாறு அவற்றைச் சடையில் வைத்துள்ளாய் . அடியேன் உன்னை அடைந்து தீவினைகளிலிருந்து நீங்கினேன் .

குறிப்புரை :

வண்டும் தும்பியும் ஏறிச் சிறகுகளை ஊன்றலால் மலர்ந்த பூக்களின் இதழ்வழியாக வழியும் தேன் பாய்ந்து ஒழுகு ( ஓடு ) கின்ற திருவாரூர் , நீறு ..... மார்பு :- ` மார்பிற்பால் வெண்ணீற்று அஞ்சாந்து அணிந்தான் ` ( தி .4 ப .19 பா .11). மார்பின் செழுமைக்கு நீறு சேர்தல் ஓர் ஏது , நிரம்பாமதி :- ( குறைமதி ` ` ஆம் குறைமதியே தாங்கி என்று உலகம் அறைகுறை அற நிறைமதியும் தாங்கிய முடியோடு ஓங்கிய சோணசைலனே கைலை நாயகனே ` ( சோணசைலமாலை 3 .) ஆறு சடையிடைப் பாய வைத்தாய் :- விரைந்து பாய்ந்த ஆற்றின் மிகையை அச்சடைமுனையில் அடக்கிய ஆற்றல் குறித்தது . ( நன்னெறி .21 ) ` அடியே அடைந்தொழிந்தேன் ` - திருவடியே சேர்ந்து நின்றேன் . வண்டு , தும்பி , சுரும்பு , தேன் என வண்டினம் நான்கு உள . ` அடியே ` என்றதில் ஏகாரம் பிரிநிலை , தேற்றப் பொருட்டுமாம் . ( தி .4 ப .1 பா .1).

பண் :சீகாமரம்

பாடல் எண் : 6

அளித்துவந்தடி கைதொழுமவர் மேல்வினைகெடும் என்றி வையகம்
களித்துவந் துடனே கலந்தாடக் காதலராய்க்
குளித்துமூழ்கியுந் தூவியுங்குடைந் தாடுகோதையர் குஞ்சி யுட்புகத்
தெளிக்குந் தீர்த்தமறாத் திருவாரூ ரம்மானே.

பொழிப்புரை :

உலகிலுள்ள அடியார்கள் உன்னுடைய தியானத்திலே களிப்புக் கொண்டு வந்து ஒரு சேரக்கூடி ஆட , அதனைக் கண்டு தாமும் விருப்பமுற்றவராய்கக் கழுத்துவரை குளித்தும் தலை நனைய மூழ்கியும் தீர்த்தத்தை ஒருவர்மேல் மற்றவர் வாரி இறைத்தும் , நீரில் உட்புக்கு நீராடும் மகளிர் மயிர் முடிமீது அபிடேக நீர் தெளிக்கப்படும் திருவாரூர்த் தலைவனே ! அன்பு முதிரப் பெற்றுத் திருக்கோயிலுக்கு வந்து உன் திருவடிகளைக் கைகளால் தொழுகின்ற அடியார்களுடைய வரக்கடவ வினைகளும் அழிந்து விடும் என்று நீ தெரிவிக்கின்றாய் ஆதலின் அடியவர் உன்னடிகளைத் தவறாது வணங்குகின்றனர் .

குறிப்புரை :

அளித்து - அன்பின் முதிரப்பெற்று . அன்பு அளிந்தது அளி . ` தலையளி `. உவந்து ; தொழுமவர் மேல்வினை :- ` ஆரூரரைத் தூரத்தே தொழுவார்வினை தூளியே ` தொழும் அடியாரது மேலை ( சஞ்சிதம் , ஆகாமியம் என்னும் இரண்டு ) வினைகள் . பிராரத்தம் உடலூழாய்க் கழியும் . ( சிவ . போதம் . சூ . அதி . மாபாடியம் ) காலத்தின் முன் பின் இரண்டும் மேல் எனப்படும் . இவ்வையகம் , வினைகெடும் என்று வந்து , வையகம்வந்து , ஆடுவது வினை கெடுமென்று . காதலராய்க் கோதையராடுவது அவ்வையகம் கலந்து ஆடக்கண்டு . கலந்து ஆடக் காதல் உற்றவராகிக் குளித்தும் மூழ்கியும் தூவியும் குடைந்து ஆடும் கோதையர் எனலும் ஆம் . ஆயின் , வையகம் களித்துவர என்று செயவெனெச்சமாக்கி முடிக்க . குளித்தல் முதலியவற்றின் வேறுபாடுணர்க . ` குஞ்சி ` இருபாலார் தலைமயிர்க்கும் பொதுப் பெயர் . ` குஞ்சி அழகும் .... கல்வி அழகே அழகு ` ( நாலடியார் . ) புகத் தெளிக்கும் தீர்த்தம் அறாத சிறப்புடையது திருவாரூர் . தீர்த்தம் - தூய ( சிவபுண்ணிய ) நீர் . ` தொழுமவர் ` என்பதுபோலும் தொடரின் மரூஉவே செல்லுமார் ( செல்லுமவர் ) முதலியன . செல்லுமோர் என்பதும் அதன் மரூஉவே . குருக்கண்மார் , செட்டிமார் என்பவற்றின் கண் உள்ளது மகார் மார் என்று மருவியது . மருவியக்கால் இரண்டும் ஒன்று போலாம் . விழுதல் விழைதல் இரண்டும் மருவியபின் ` வீழ்தல் ` என்று ஒன்றாதல்போல்வது அது . என்ற இவை அகம் களித்து என்று கொண்டு பொருந்தக் கூறலும் ஆம் .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 7

திரியுமூவெயில் தீயெழச்சிலை வாங்கிநின்றவ னேயென் சிந்தையுள்
பிரியுமா றெங்ஙனே பிழைத்தேயும் போகலொட்டேன்
பெரிய செந்நெற்பி ரம்புரிகெந்த சாலிதிப்பிய மென்றி வையகத்
தரியுந் தண்கழனி அணியாரூ ரம்மானே.

பொழிப்புரை :

உயர்வாகக் கூறப்படும் செந்நெல் , பிரம்புரி , கெந்தசாலி , திப்பியம் என்ற பெயருடைய நெல்வகைகள் தம்மகத்து அறுவடை செய்யப்படும் குளிர்ந்த வயல்வளமுடைய அழகிய ஆரூர்த் தலைவனே ! வானத்தில் உலவும் மும்மதில்களும் தீப்பற்றி எரியுமாறு வில்லை வளைத்து நின்றவனே ! என் உள்ளத்திலிருந்து நீ யாங்ஙனம் பிரிவாய் ? மறந்தும் கூட நீ என்னை விடுத்து நீங்க உன்னை விடமாட்டேன் .

குறிப்புரை :

திரியும் மூவெயில் :- ` திரியும் மூன்றுபுறமும் ` ( தி .2 ப .22 பா .4) ` திரியுமூவெயில் ` ( தி .5 ப .25 பா .11) ` திரியும் மும்மதில் ` (5.36.10) ` திரியுமுப்புரம் ` ( தி :-7 ப .61 பா .3; ப .67 பா .9.) ` திரியும்புரம் ` ( தி .7 ப .79 பா .8) ` திரிவன மும்மதில் ` ( தி .7 ப .23 பா .8) ` திரிதருபுரம் ` ( தி .3 ப .23 பா .9) சிலை - மேருவை வில்லாக , வாங்கி - வளைத்து . சிந்தையுள் பிரியுமாறு இயலாமைக்கு . மூவெயில் எரித்தவாற்றால் மும்மலந்தீர்த்துச் சிவஞானங்காட்டிச் சிவங்காட்டிய உண்மையே ஏதுவாயிற்று . பிழைத்தேயும் - தப்பியும்கூட . செந்நெல் , பிரம்புரி , கெந்தசாலி , திப்பியம் என்ற இவை தன்னகத்து அரியும் தண் கழனியை அணிந்த திருவாரூர் அம்மானே . ` போகலொட்டேன் `, பா .9

பண் :சீகாமரம்

பாடல் எண் : 8

பிறத்தலும்பிறந் தாற்பிணிப்பட வாய்ந்தசைந் துட லம்பு குந்துநின்
றிறக்குமா றுளதே யிழித்தேன் பிறப்பினைநான்
அறத்தையேபுரிந் தமனத்தனா யார்வச்செற்றக் குரோத நீக்கியுன்
திறத்தனா யொழிந்தேன் றிருவாரூ ரம்மானே.

பொழிப்புரை :

திருவாரூர் அம்மானே ! இறந்தால் பிறத்தலும் பிறந்தால் உடலில் புகுந்து நின்று பிணிகள் தோன்ற நுணுகி வருந்தி இறக்குமாறும் உள்ளவே . அதனால் பிறப்பை இழிவாகக் கருதி வெறுத்தேனாய் , அறத்தையே விரும்பிய மனத்தினேனாய் , ஆசை , பகை , வெகுளி இவற்றை நீக்கி உன் அடிமைத் திறத்தில் ஈடுபட்டேனாய் உலகியற் செயல்களிலிருந்து நீங்கினேன் .

குறிப்புரை :

திருவாரூர் அம்மானே , இறந்தால் பிறத்தலும் பிறந்தால் இறத்தலும் உண்டு . பிறந்தால் உடலிற் புகுந்து நின்று , பிணிகள் தோன்ற நுணுகித் தளர்ந்து இறக்குமாறு உளதே ! பிறப்பை இழித்து வெறுத்தேன் . நான் அறத்தையே விரும்பிய உள்ளத்தனாகி , காமக்குரோத லோபமோக மதமாற்சரியம் என்னும் அறுபகையும் போக்கி , உன் அடிமைத்திறம் உடையேனாய் நின்றேன் . ஆதலின் , என்னைப் பிறக்கவொட்டாது சிவலோகத்திருத்துவது ஆண்ட நின் கடன் . ` பிறந்தால் இறக்குமாறுளது ` என்றதால் , ( இறந்தால் ) பிறத்தலும் எனக் கொண்டுரைத்தல் ஆயிற்று . ஆய்தல் - நுணுகுதல் . ` ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் . ( தொல் . உரி 34. ) ஏகாரம் தேற்றம் . ஆர்வம் ( காமம் ) செற்றம் - ( மாற்சரியம் ) குரோதம் ( சினம் ) ` பொங்கு மதமானமே ஆர்வச்செற்றக் குரோதமே யுலோபமே ` ( தி .6 ப .27 பா .6) திறம் :- ஈண்டு அடிமைத்திறம் . ` செய்வன எல்லாம் அவன் அருளின் வழி நின்று செய்யும் செயலாய்க் கண்டு கொண்டிருப்பர் ..... அவ்விறைபணியாகிய அடிமைத்திறம் உடையார் ` ( சிவஞானபோத மாபாடியம் சூ .10. அதி .2 )

பண் :சீகாமரம்

பாடல் எண் : 9

முளைத்தவெண்பிறை மொய்சடையுடை யாயெப்போதுமென் னெஞ்சிடங் கொள்ள
வளைத்துக் கொண்டிருந்தேன் வலிசெய்து போகலொட்டேன்
அளைப்பிரிந்தவ லவன்போய்ப்புகு தந்தகாலமுங் கண்டு தன்பெடை
திளைக்குந் தண்கழனித் திருவாரூ ரம்மானே.

பொழிப்புரை :

வளையிலிருந்து பிரிந்து சென்ற நண்டு மீண்டும் போய் வளையில் புகுந்த காலத்தை நோக்கிப் பெடை நண்டு அதனைக் கண்டு இன்பத்தில் திளைக்கும் குளிர்ந்த வயல்களை உடைய திருவாரூர் அம்மானே ! பிறையை அணிந்த செறிந்த சடையனே ! எப்பொழுதும் என் நெஞ்சினையே நீ இடமாகக் கொள்ளுமாறு உன்னைப் பலகாலும் சுற்றிக்கொண்டிருந்த அடியேன் இனிப் பிடிவாதம் செய்து அதனை விடுத்துப்போக ஒருப்படேன் .

குறிப்புரை :

அளை - சேற்றில் உள்ள நண்டுவளை . அலவன் - ஈண்டு நண்டின் ஆண் . நள் + து = நண்டு , நள்ளி என்றதால் விளங்கும் . பெடை - நண்டின் பெண் . ` முளைத்த வெண்பிறை ` என்றது சிவபிரான் சடையை அடைந்தது முதல் முளையாமையும் அழியாமையும் தோற்றிற்று . மொய்சடை :- ` பல்சடைப் பனிகால் கதிர் வெண்டிங்கள் சூடினாய் ; மொய் பெருமையுமாம் . எப்போதும் கொள்ள . நெஞ்சிடம் உன்னைக் கொள்ள . நீ நெஞ்சிடத்தைக்கொள்ள . வளைத்துக் கொண்டிருந்தேன் :- ` வளைத்து நின்று ஐவர் கள்வர் வந்து எனை ` ( தி .4 ப .79 பா .6). வலி செய்தல் :- வன்மையோடு தடுத்தல் , பற்றி ஈர்த்துக் கொண்டிருத்தல் . ` போகலொட்டேன் ` : பா .7.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 10

நாடினார்கம லம்மலரய னோடிரணிய னாகங் கீண்டவன்
நாடிக் காணமாட்டாத் தழலாய நம்பானைப்
பாடுவார்பணி வார்பல்லாண்டிசை கூறுபத்தர்கள் சித்தத் துள்புக்குத்
தேடிக் கண்டுகொண்டேன் திருவாரூ ரம்மானே.

பொழிப்புரை :

திருவாரூர் அம்மானே ! தாமரை மலரில் உள்ள பிரமனோடு , இரணியன் மார்பினைப் பிளந்த திருமாலும் தேடினராயும் காண மாட்டாத தீப்பிழம்பு வடிவினனாய் , நம்மால் விரும்பப்படும் உன்னைப் பாடுபவராய்ப் பணிபவராய் வாழ்த்துபவராய் உள்ள பக்தர்களின் உள்ளத்தினுள்ளே புகுந்து தேடி அவ்விடத்தில் உன்னைக் கண்டு கொண்டேன் .

குறிப்புரை :

கமலம்மலர் (- தாமரைப்பூ ) சந்தம் நோக்கி மிக்கது . இரணியாசுரன் மார்பைக் கிழித்தவன் திருமால் . அயனும் மாலும் நாடினார் . நாடிக்காண வல்லரல்லராம்படி . தீப்பிழம் புருவாய் நின்ற நம்பானாகிய நின்னைத் தேடிக்கண்டுகொண்டேன் . காணமாட்டா அருமை மாலயனிருவர்க்கும் , கண்டுகொண்ட எளிமை தமக்கும் உற்றவாறு தோற்றிய நயம் உணர்க . புறத்தே பேரொளிப் பிழம்பாய் வெளிப்பட்டுக் காட்சி தந்தும் காண மாட்டாராயினர் . பத்தர்களது ( அகத்தே ) சித்தத்துள் ஒளிந்துகொண்டிருந்தும் கண்டுகொண்டேன் நான் என்றருளினார் . ` என் சித்தத்துள் ` எனல் ஈண்டுப் பொருந்தாது . தி .4 ப .9. பா .12 பார்க்க . ` எவரேனும் .... ஈசன் திறமே பேணிக் கவராதே தொழும் அடியார் நெஞ்சின் உள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே `. ( தி .6 ப .61 பா .1,3, 9). தி .4 ப .21 பா .2. இல் குறித்தவாறு நம்பானைப் பாடுவாரும் பணிவாரும் ஆகிய பத்தர்கள் முத்திறத்தாருமாவர் . வாழ்த்திசை பாடும் மெய்யன்பர்கள் . வாய்த்து இசைப்பது வாழ்த் திசை . பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என்று இசைப்பது பல்லாண்டு இசைத்தல் : பல்லாண்டிசை கூறுதல் ; பல்லாண்டு கூறுதல் . பல்லாண்டு கூறுதும் ` .
சிற்பி