திருவாரூர்


பண் :குறிஞ்சி

பாடல் எண் : 1

முத்துவிதான மணிப்பொற்கவரி முறையாலே
பத்தர்களோடு பாவையர்சூழப் பலிப்பின்னே
வித்தகக்கோல வெண்டலைமாலை விரதிகள்
அத்தனாரூ ராதிரைநாளா லதுவண்ணம்.

பொழிப்புரை :

எம்பெருமானுக்குவிழாக்காலத்திற் கொண்டு செல்லப்படும் நிவேதனப் பொருள்களின் பின்னே முறைப்படி பத்தி மிக்க ஆடவரும் மகளிரும் மாவிரதியரும் சூழ்ந்துவர, வெள்ளிய தலை மாலையை அணிந்த திருவாரூர்த் தலைவன் முத்துக்களால் அமைக்கப்பட்ட மேற்கட்டியின் நிழலிலே அழகிய பொற்காம்பினை உடைய கவரி வீசப்பெறச் சிறப்பான செயற்கையழகோடு திருஆதிரைத் திருநாளில் வழங்கும் காட்சி அது. அது என்று எப்பொழுதும் அடியவர் மனக்கண் முன் நிற்பதாகும்.

குறிப்புரை :

முத்துவிதானம் - (பா.3) முத்துக்களின் கோவையாலான மேற்கட்டி. அதுவும் மணிப்பொற்கவரியும் திருவாரூரிற் சிறப்புற்றவை. பத்தர்கள் - பத்திமிக்க ஆடவர். சிவ சிந்தனை சிறிதும் இல்லாத மாக்களை விலக்கிப் பத்தர்கள் என்றதுணர்க. பாவையர் - அத்தகைய பத்திமிக்க பெண்டிர் அவருள் முதியர் திருவீதி வலம்வர வலியற்றவராதலின் பாவையர் என்றார். (பா.7) `விரிசடைவிரதிகள்` (தி.4 ப.20 பா.3). மார்கழித் திருவாதிரைநாள் பங்குனி உத்தரத் திருநாள் இரண்டுமே தியாகராசப்பெருமானுடைய திருவடிக்காட்சி எய்தும் நாள். `கனகத்யாகேசன் பருதிவெருவுருவம் பார்த்தாள் (பேதை), அருகுபோய் வேதச்சிரத்திருந்து விண்டுவும் கண்டறியாப் பாதத்தழகு எனவும் பாராதே, மாதவர்க்கும் தேவர்க்கும் ஆட்டைக்கு (-ஆண்டொன்றற்கு) இருதினம் சேவிப்போர் யாவர்க்கும் நாட்டம் அதில் என்னாதே, பூவைமீர்! பந்தித்த ஆடரவக் கிண்கிணி என்பாவைக்கு ஆம் வந்தித்து வாங்க வருக என்றாள்`. (திருவாரூருலா. 210-2). இத்திருப்பதிகம் முழுதும் வினைமுடிபு விளங்காதவாறுள்ளது. வினைமுடிபு விளங்காமை உயிர்க்கியல்பன்றோ? கோலத்தினால் - ஒருவனுக்கு இறுதிவந்த எல்லைக்கண். நாளால் - நாளின்கண். (குறள் 102). வேற்றுமை மயக்கம். ஆதிரை நாள் வண்ணம் அதுவோ? அது ஆதிரைநாள் வண்ணமோ? ஆதிரைநாளின் மகிழ் செல்வம் அத் தன்மைத்து.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 2

நணியார் சேயார் நல்லார் தீயார் நாடோறும்
பிணிதான் றீரு மென்று பிறங்கிக் கிடப்பாரும்
மணியே பொன்னே மைந்தா மணாளா வென்பார்கட்
கணியா னாரூ ராதிரை நாளா லதுவண்ணம்.

பொழிப்புரை :

திருவாரூருக்கு அண்மையில் உள்ளவர், தூரத்தில் உள்ளவர், நல்லவர்கள், தீக்குணம் மிக்கவர்கள், நாடோறும் தங்கள் பிணிகள் தீரவேண்டும் என்று மிகுதியாக வந்து வழிபடுபவர்கள் ஆகிய யாவரும் `மணியே பொன்னே வலியவனே தலைவனே` என்று வாய்விட்டு அழைப்ப, அவர்கள் கருத்துக்கு அணியனாய் இருக்கும் ஆரூர்ப் பெருமானுடைய திரு ஆதிரை நாள் திருக்கோலம் அது. அது என்று அடியவர் மனக்கண்முன் எப்பொழுதும் நிற்பதாகும்.

குறிப்புரை :

திருவாரூர்க்கு அருகிலுள்ளார் நணியார். தொலைவினார் சேயார். திருவாரூரிலும் அணிமையிலும் சேய்மையிலும் உள்ளவராய் வந்து வழிபடுவோர் நல்லார். வழிபடாதார் தீயார். வணங்காதார் நணியாராயும் சேயார் என்றும் நல்லாராயும் தீயார் என்றும் உரைத்தாரும் உளர். `பிணி.....தீரும் என்று.....கிடப்பார்`:- தி.4 ப.20 பா.6, பிறங்கி - பெருகி, புற்றிடங்கொண்டதால் `மணியே` என்றார். `ஆருர் மணிப்புற்றில் அமர்ந்து வாழும் நீண்ட சுடர்மாமணி` (தி.12 பெரிய. திருநாவுக். 232). அடிக்கு ஆயிரம் பொன் அளிப்பவர் ஆதலின், `பொன்னே` என்றார். `கனகத்தியாகேசர்` `செம்பொற்றியாகர்` `செம்பொற் சிங்காசனாதிபதி` `பொன்பரப்பிய திருவீதி` முதலிய திருப்பெயர்களையும், `கனகம் ஓர் அடிக்கு ஆயிரம் நல்கும் எம் கடவுள் அனக நாயகன்` (திருவாரூர்ப் புராணம் திருநகரச். 47.) `அடி ஒன்றுக்கு உய்யும்படி பசும்பொன் ஓர் ஆயிரம் முகந்து பெய்யும் தியாகப் பெருமானே` (திருவாரூருலா. 173-4) என்பவற்றையும். `பொன்னின் மேனிச்சிவன்` `பொன்னுருவைத் தென்னாரூர் மன்னு குன்றை` பொன்னேபோல் திருமேனியுடை யான்றன்னை` `செம் பொனே மரகதமே மணியே போற்றி` `செம்பொனை நன்மணியைத் தென்றிருவாரூர்புக்கு, என்பொனை என்மணியை என்று கொல்எய்து வதே` `திருவாரூர்ச் செம்பொனே` என்று அப்பர், சுந்தரர் அருளியவற்றையும் எண்ணுக. கிண்கிணிக் காலழகுடையன் இளைஞனாதலின், மைந்தா என்றார். (மழ+து, மழ்து) (மழ்ந்து, மய்ந்து, மைந்து+ அன்=மைந்தன்) `மணவாளராகி மகிழ்வர்` `கலியாணபுரம்` `கலியாண சுந்தரர்` `திருவாரூர் மணவாளர்` என்னும் சிறப்புடைமையால் `மணாளா` என்றார், இம்மூன்று பெயரும் சொல்லி அழைத்தால் வரும் மணியும் பொன்னும் போக வாழ்வும் ஆகிய இம்மைப்பயன் குறித்து, அணியான் என்றார். நணியாரும் சேயாரும் நல்லாரும் தீயாரும் நாள்தோறும் பிணிதீரும் என்று பிறங்கிக் கிடப்பார். மணியே... என்பார். கிடப்பாரும் என்பாருமாகிய அவர்கட்கு அணியான். அது ஆதிரைநாள் வண்ணம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 3

வீதிகடோறும் வெண்கொடியோடு விதானங்கள்
சோதிகள்விட்டுச் சுடர்மாமணிக ளொளிதோன்றச்
சாதிகளாய பவளமுமுத்துத் தாமங்கள்
ஆதியாரூ ராதிரைநாளா லதுவண்ணம். 

பொழிப்புரை :

வீதிகள் தோறும் வெண் கொடிகளும் மேற் கட்டிகளும் சிறந்த பவளங்களாலும் முத்துக்களாலும் புனையப்பட்ட மாலைகளும் தம்மிடையே பதிக்கப்பட்ட மணிகளால் பேரொளியை வெளிப்படுத்த, எல்லாப் பொருள்களுக்கும் முதல்வனாகிய ஆரூரனுடைய திருவாதிரைத் திருநாளின் பெருவனப்பு எப்பொழுதும் அது அது என்று அடியவர்கள் நினைக்குமாறு உள்ளது.

குறிப்புரை :

வெண்கொடியோடு விதானங்களும் சோதிகள் விட்டுச் சுடர்கின்ற மாமணிகளும் ஆகிய அவற்றின், ஒளி தோன்றவும் சாதிப்பவளத்தாலும் சாதிமுத்துக்களாலும் ஆகிய மாலைகள் (நாலவும்) ஆதியாரூர்த் திருவாதிரைத் திருநாள் (விளங்கிற்று). விதானங்கள், பதிக முதற்பாடல். சோதிகளை விட்டுச் சுடர்தல் மாமணிகளின் வினை. தாமம் - மாலை, ஆதி - சிவபிரான்; முதல், விதானங்கள்; மணிகள்; தாமங்கள் என்று தனித்தனியாக முடித்து, ஆதிரைநாளில் அது வண்ணம் எனலாம். `விதானமும் வெண் கொடியும் இல்லாவூர் ஊரல்ல.......காடே` (தி.6 ப.95 பா.5).

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 4

குணங்கள்பேசிக் கூடிப்பாடித் தொண்டர்கள்
பிணங்கித்தம்மிற் பித்தரைப்போலப் பிதற்றுவார்
வணங்கிநின்று வானவர்வந்து வைகலும்
அணங்கனாரூ ராதிரை நாளா லதுவண்ணம்.

பொழிப்புரை :

நாள்தோறும் தேவர்கள் வந்து வணங்கி நிற்க, தெய்வத் தலைவனாகிய எம்பெருமானுடைய பல பண்புகளையும் பேசிக்கொண்டு ஒன்று சேர்ந்து அவனைப்பற்றிப் பாடி அடியார்கள் அவனுக்குத் தொண்டு செய்வதில் ஒருவருக்கு ஒருவர் முற்பட்டுப் பித்தரைப்போல அடைவு கெடப் பலவாறு பேசும் ஆரூர் ஆதிரைத் திருநாள் அழகு என்றும் அவர்கள் உள்ளத்தில் நிலை நிற்பதாகும்.

குறிப்புரை :

தொண்டர்கள் (சிவபிரானுடைய) குணங்களைப் பேசியும் கூடிப்பாடியும் தம்மிலே பிணக்கம் உற்றுப் பித்தர்களைப் போலப் பிதற்றுதலும் செய்வர், வானவர் வைகலும் வந்து வணங்கி நின்று (வரம் பெறுவர்). அணங்கன் - தெய்வத்தன்மையுடையவன். மாதியலும் பாதியனுமாம். `அணங்கு புத்தேள் ஏற்றசூர் கடவுள் தேவே`. `காரிகை அணங்கு` (சூடாமணி நிகண்டு) அணங்கு+அன். பிணங்கி - கருத்து வேறுபாடுடையவராய். `பிணங்கிடுவர் விடுநீ` (சித்தியார்).

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 5

நிலவெண்சங்கும் பறையும்மார்ப்ப நிற்கில்லாப்
பலருமிட்ட கல்லவடங்கள் பரந்தெங்கும்
கலவமஞ்ஞை காரென்றெண்ணிக் களித்துவந்
தலமராரூ ராதிரைநாளா லதுவண்ணம். 

பொழிப்புரை :

நிலாப் போன்று வெள்ளிய சங்குகளும் பறைகளும் ஒலிப்பவும் நின்ற இடத்தில் மீண்டும் நில்லாமல் கூத்தாடும் பலரும் காலில் கட்டிக் கொண்ட சதங்கை முதலியவற்றின் ஒலி பரவவும் அவற்றின் ஒலிகளை மேகத்தின் ஒலி என்று கருதித் தோகைகளை உடைய ஆண் மயில்கள் மகிழ்வோடு வந்து ஆடிச்சுழலும்படியாக ஆரூர்த் திருவாதிரைத் திருவிழாவின் அழகு என்றும் உள்ளத்தில் நிலைபெறுவதாகும்.

குறிப்புரை :

நில - நிலாப்போலும், பறை - வாத்தியப்பொது, ஆர்ப்ப - ஒலிக்க. நிற்கில்லா - விட்டு நிற்றலாற்றாத, கல்லவடங்கள்:- காலிற் சதங்கை முதலிய வடம் கட்டிக்கொண்டு நில்லாமல் தொடர்ந்து தாளவொற்றுக்குப் பொருந்தமிதித்துச் செய்யும் இன்னோசை; அடியர் பலர் கூடி நிகழ்த்துவது என்று கருதப்பெறுகின்றது. `பலரும் இட்ட கல்லவடங்கள்` என்றதாலும், `கங்கும் பறையும் ஆர்ப்ப இட்ட` (வை) என்றதாலும், அவ்வொலி எங்கும் பரந்து, கலாபமயில்கள் கார் (- மேகம்) என்று (தி.1 ப.130 பா.1) எண்ணிக் களித்துவந்து அலமருகின்ற ஆரூர் என்றதாலும் அது பொருந்தும். `அடியார் கல்ல வடப்பரிசு` (தி.7 ப.84 பா.5) (திருப்பெருந்துறை (யடைந்த படலம் 17)ப் புராணம். 17. ஒருவகை வாத்தியம். ௸ குறிப்புரை) அலமரு + ஆரூர் = அலமராரூர். மெய்த்தனு + என்று = மெய்த்தனென்று. (தி.5 ப.76 பா.5) மஞ்ஞை - மயில். கலவம் - தோகை. கார் - மேகம். அலமரல் - சுழலல். அலம் வரல் என்பதன் மரூஉ. `விருப்போடு வெண்சங்கம் ஊதாவூரும்... ... ஊரல்ல....காடே`(தி.6 ப.95 பா.5) `ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்` (தி.8 திருவாசகம்).

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 6

விம்மாவெருவா விழியாத்தெழியா வெருட்டுவார்
தம்மாண்பிலராய்த் தரியார் தலையான் முட்டுவார்
எம்மானீச னெந்தையெ னப்ப னென்பார்கட்
கம்மானாரூ ராதிரைநாளா லதுவண்ணம். 

பொழிப்புரை :

பொருமி, வாய்வெருவி விழித்து உரத்துக்கூறி மற்றவர்களை அஞ்சி ஒதுங்கச் செய்பவராய்த் தமக்கு என்று எந்த நற்செயல்களையும் பண்பையும் கொள்ளாமல் எல்லாம் ஈசன் செயல் என்று மகிழ்ச்சியால் தலையை மோதிக்கொண்டு `எம்மான் எம்மை அடக்கி ஆள்பவன்; எம் தலைவன்` என்று பெருமான் புகழ் ஓதும் அடியவர் தலைவனாகிய ஆரூர்ப் பெருமானின் திருவாதிரைத் திருநாளின் அழகு என்றும் உள்ளத்தில் நிலைபெறுவதாகும்.

குறிப்புரை :

விம்மா - விம்மி, பொருமி. வெருவா - வெருவி. விழியா - விழித்து. தெழியா - தெழித்து. வெருட்டுவார் - வெருளச் செய்வார். மாண்பு - (மாண்+பு) மாட்சி. நற்பண்பும் நற்செயலும் மாண்பு எனப்படும். தரியார் தங்கார். பொறார் என்றபடி. எம்மான் - எம் கடவுள். மகன் என்பதன் திரிபு மான் என்பது. `மக்கள்` பன்மை. `எம் பெருமக்கள்` தந்தம் பெருமைக்கு அளவாகிய சார்பில் நிற்கும் எந்தம் பெருமக்களை யாவர் தடுக்க வல்லார்` (தி.12 மூர்த்தி நாயனார் புராணம். 15). ஈசன் - உடையான். எந்தை - எம்வழி முதல். என் அப்பன் - என்னைப் பெற்றவன். `வெள்ளங் காட்டி வெருட்டிட அஞ்சி வெருவி ஓடித் தழுவ வெளிப்பட்ட கள்ளக் கம்பன்` (சுந்தரர்) என்றதில், அஞ்சலும் வெருவலும் ஒன்றன்மை உணர்க. தெழித்தல் - அதட்டுதல்; வெகுளுதல். அஞ்சுதலின் காரியம் வெருவுதல். அச்சம் உள்ள நிகழ்ச்சி. வெருவுதல் உடற்செயல். இது மெய்யன்பர் நிலையை உணர்த்திற்று.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 7

செந்துவர்வாயார் செல்வனசேவடி சிந்திப்பார்
மைந்தர்களோடு மங்கையர்கூடி மயங்குவார்
இந்திரனாதி வானவர்சித்த ரெடுத்தேத்தும்
அந்திரனாரூ ராதிரைநாளா லதுவண்ணம். 

பொழிப்புரை :

இந்திரன் முதலிய தேவர்களும் சித்தர்களும் பலவாறு துதிக்கும் தனியனாகிய ஆரூர்ப் பெருமானுடைய திருவாதிரைத் திருவிழாவில் செம்பவளம் போன்ற வாயை உடைய ஆடவரோடு மகளிரும் கூடி அவன் திருவடிகளைச் சிந்தித்து ஈடுபடுபவருடைய அழகிய காட்சி என்றும் உள்ளத்தில் நிலை பெறுவதாகும்.

குறிப்புரை :

செந்துவர் - செம்பவளம். துவர் வாய் - உவமத்தொகை. செல்வன சேவடி:- ஆறனுருபு, பன்மை; `பன்மை (சுட்டிய சினை நிலை)க் கிளவி\\\\\\\\\\\\\\\' (தொல். கிளவி.62). மைந்தர் - இளைஞர். மங்கையர் - மணமகளிர். மயங்குதல் பருவத்தினியல்பு. இந்திரன் ஆதி வானவர்:- தேவர்கோன் முதலிய விண்ணோர். சித்தர் - சித்துக்களில் வல்லோர். எடுத்தல் என்பதன் மரூஉ ஏத்தல். ஆயினும் எடுத்தேத்தல் என்னும் வழக்குளது. பொருந்தவுரைத்துக்கொள்க. கையெடுத்துக் கும்பிட்டு வாயாற் பொருள்சேர் புகழ் பாடல் எடுத்தேத்தல். அந்திரன் - `தனியன்\\\\\\\\\\\\\\\' `தான் தனியன்\\\\\\\\\\\\\\\' (தி.8 திருவாசகம்).

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 8

முடிகள்வணங்கி மூவாதார்கண் முன்செல்ல
வடிகொள் வேய்த்தோள் வானரமங்கையர் பின்செல்லப்
பொடிகள்பூசிப் பாடும்தொண்டர் புடைசூழ
அடிகளாரூ ராதிரைநாளா லதுவண்ணம். 

பொழிப்புரை :

தலையால் வணங்கித் தேவர்கள் முன்னே செல்லவும் செப்பமான மூங்கில்போன்ற தோள்களை உடைய தேவருலகப் பெண்கள் பின்னே செல்லவும் திருநீற்றைப் பூசிய அடியவர்கள் நாற்புறமும் சூழ்ந்து நிற்கவும் எம்பெருமான் ஆரூரில் திருவாதிரைத் திருவிழாவில் காணப்படும் அழகு என்றும் உள்ளத்து நிலை பெறுவதாகும்.

குறிப்புரை :

முடிகள் - தலைகள். மூவாதார்கள் - மூத்துச் சாவாதவர்கள் (அமரர்கள்). வடி - அழகு; வடிவு. வேய்த்தோள் வானர மங்கையர்:- தி.4 ப.19பா.3; ப.20 பா.3. குறிப்பு. பொடிகள் - திருநீறுகள். பன்மை மிகுதிக் குறிப்பு. `சிவாய நம என்று நீறணிந்தேன்` சிவத்யாநம் நீறணியாது செய்தலாகாது. மூவாதார் (அமரர்) முன்செல்ல, வானர மங்கையர் பின் செல்ல, தொண்டர் புடை சூழ, அடிகள் ஆதிரை நாளின் வண்ணம் அது. மூவான் இளகான் முழுவுலகோடு மண்விண்ணு மற்றும் ஆவான்` (தி.4 ப.84 பா.2).

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 9

துன்பநும்மைத் தொழாதநாள்க ளென்பாரும்
இன்பநும்மை யேத்துநாள்க ளென்பாரும்
நும்பினெம்மை நுழையப்பணியே யென்பாரும்
அன்பனாரூ ராதிரைநாளா லதுவண்ணம். 

பொழிப்புரை :

எல்லோருக்கும் அன்பனாகிய ஆரூர்ப் பெருமானுடைய திருவாதிரைத் திருவிழாவில் அடியார்கள் பெருமானாரே! உம்மை அடியேங்கள் வழிபடாத நாள்கள் துன்பம் தரும் நாள்கள், உம்மை வழிபடும் நாள்கள் அடியேங்களுக்கு இன்பம் தரும் நாள்கள்; ஆதலின் நும் திருவடித் தொண்டில் ஈடுபட்டு அடியேங்கள் நும்பின் எப்பொழுதும் வருமாறு எங்களைச் செயற்படுத்துவீர் என்று வேண்டும் காட்சி என்றும் உள்ளத்து நிலை பெறுவதாகும்.

குறிப்புரை :

`அன்பே சிவம்` அன்புருவான சிவபிரானது ஆரூர் ஆதிரைநாளில், நும்மைத் தொழாத நாள்கள் எல்லாம் துன்ப நாள்கள் என்பார் பலர். நும்மை ஏத்தும் நாள்கள் இன்பநாள்கள் என்பார் பலர். எம்மை நும்பின் நுழையப் பணித்தருள்வாய் என்று, (திரண்டமக்களிடையே, உலாக்கொண்டருளும் பெருமான் திருவருளின் பின்னர்ச், சென்று இன்புறும் பேற்றை விரும்பி) வேண்டுவார் பலர். அது அத் திருநாள் வண்ணம். (தி.4 ப.92. பா.6) ஒப்பு நோக்குக. (தி.5:- ப.42 பா.5, ப.31 பா.3, ப.7 பா.4.)

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 10

பாரூர்பௌவத் தானைபத்தர் பணிந்தேத்தச்
சீரூர்பாட லாடலறாத செம்மாப்பார்ந்
தோரூரொழியா துலகமெங்கு மெடுத்தேத்தும்
ஆரூரன்ற னாதிரைநாளா லதுவண்ணம். 

பொழிப்புரை :

உலகைச் சூழ்ந்து நிற்கும் கடல்போல எல்லை காண ஒண்ணாத பெருமானை அடியார்கள் வணங்கித் துதித்தலால் சிறப்பு மிகுந்த பாடல்கள் ஒலித்தல் நீங்காத பெருமிதத்தை நுகர்ந்தவாறு அப்பகுதியிலுள்ள ஊர்களைச் சேர்ந்தவர்கள் யாவரும் எஞ்சாது எங்கும் எம்பெருமான் புகழை எடுத்துக் கூறித் துதிக்கும் ஆரூர்ப் பெருமானுடைய திருவாதிரைத் திருநாளின் வனப்பு என்றும் அது அது என்று நினைக்குமாறு உள்ளத்தில் நிலைபெறுவதாகும்.

குறிப்புரை :

பார் - நிலம். ஊர் பௌவம் - ஊருங் கடல். பௌவத் தான்:- `கனைகடலைக் குலவரையைக் கலந்துநின்ற பெரியானை..... பேசாத நாளெல்லாம் பிறவா நாளே` `பாரவன் காண் விசும்பவன் காண் பவ்வந்தான் காண்` `பாராகிப் பௌவம் ஏழ் ஆனான் கண்டாய்` (திருத்தாண்டகம்.) பத்தர்:- (பா.1). சீர் - சிவபிரானுடையன. `பொருள்சேர் புகழ்`. பாடல் ஆடல் அறாத செம்மாப்பு. (செம்மை + யாப்பு) ஆர்ந்து - நிறைந்து. `ஓருரும் ஒழியாமல் உலகம் எங்கும் எடுத்தேத்தும் ஆரூரன்றன் ஆதிரை` என்று அதன் சிறப்பு முற்றும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்த அருட்டிறம் போற்றற்பாலது.
சிற்பி