கோயில்


பண் :கொல்லி

பாடல் எண் : 1

செஞ்சடைக் கற்றை முற்றத் திளநிலா வெறிக்குஞ் சென்னி
நஞ்சடை கண்ட னாரைக் காணலா நறவ நாறு
மஞ்சடை சோலைத் தில்லை மல்குசிற் றம்ப லத்தே
துஞ்சடை யிருள் கிழியத் துளங்கெரி யாடு மாறே. 

பொழிப்புரை :

சிவந்த சடைக்கற்றையாகிய முன்னிடத்தில் பிறை ஒளிவீசும் திருமுடியை உடைய, விடம் பொருந்திய கழுத்தினராகிய சிவபெருமானை, மேக மண்டலம் வரை வளர்ந்த தேன் மணம் கமழும் சோலைகளை உடைய தில்லைப் பதியிலே விளங்குகின்ற சிற்றம் பலத்திலே, செறிந்து பரவியுள்ள இருள் நீங்குமாறு கையில் அசைகின்ற தீயோடு கூத்து நிகழ்த்தும் நிலையில் காணலாம்.

குறிப்புரை :

தில்லைச்சிற்றம்பலத்தே நஞ்சடைகண்டனாரை எரியாடுமாறு காணலாம். செஞ்சடைக் கற்றையே இளநிலா வீசும் முற்றம். அக் கற்றைக்கு இடம் சென்னி. அதை உடையவர் கண்டனார். அக்கண்டம் நஞ்சு அடைந்தது. நறவம் - தேன். நாறுதல் - நறுமணம் வீசுதல். மஞ்சு - (மை + து = மைத்து. மைந்து, மைஞ்சு, மஞ்சு.) கரு முகிலாகிய மஞ்சடைதலால் சோலையின் உயர்ச்சி விளங்கும். தில்லை வளம் குறிக்கப்பட்டது. சிறுமை அம்பலம் = சிற்றம்பலம். (சித் + அம்பரம்). துஞ்சு + அடை + இருள் = துஞ்சுதல் உற்ற இருள். இருள் துஞ்சுதல்:- `துஞ்சிருள் காலைமாலை தொடர்ச்சியை மறந்திராதே அஞ்செழுத்தோது` (தி.4 ப.70 பா.5). கிழிதல்:- பிளந்து மறைதல். இருள் - ஆணவம். துளங்கு எரி - விளங்கிய தீ; ஈண்டு ஞானாக்கினி. `இடம்படு ஞானத்தீ` (தி.4 ப.75 பா.4). சிற்றம்பலத்தில் நெருப்பு உளதோ? மேலுள்ள ஐந்திலும் காணலாம் என்பதைக் கொண்டு கூட்டுக.

பண் :கொல்லி

பாடல் எண் : 2

ஏறனா ரேறு தம்பா லிளநிலா வெறிக்குஞ் சென்னி
ஆறனா ராறு சூடி யாயிழை யாளோர் பாக
நாறுபூஞ் சோலைத் தில்லை நவின்றசிற் றம்ப லத்தே
நீறுமெய் பூசி நின்று நீண்டெரி யாடு மாறே. 

பொழிப்புரை :

காளையை வாகனமாகவுடையவராய், பிறை ஒளிவீசும் தலையிலே கங்கையாற்றை உடையவராய், கங்கையைச் சூடிக்கொண்டு, பார்வதி ஒருபாகமாக, நறுமணம் கமழும் சோலைகளை உடைய தில்லை நகரிலே தாம் பலகாலும் பழகிய சிற்றம்பலத்திலே உடலில் திருநீறு பூசிக்கொண்டு பலகாலம் ஞானத்தீயிடைக் கூத்தாடுமாற்றைக் காணலாம்.

குறிப்புரை :

ஏறு ஏறனார் - விடையேறுதலுடையவர். ஆறனார் - கங்கையாற்றினார். ஆறு சூடி நீறு பூசி நின்று ஆடுமாறு (காணலாம்) என்க. காணலாம் என்பது முன்னையதினின்றும் கொள்ளப்பட்டது. ஆயிழையாள் ஓர் பாகம் (உடையவராய்) என்றிசைத்துக் கொள்க. நவின்ற - புகழப்பெற்ற. நீண்ட எரி. நீண்டு ஆடுமாறு எனலுமாம். நில் + து, நீல் + து = நீறு. செல் + து, சேல் + து = சேறு. வெல் + து, வேல் + து = வேறு முதலியன போல்வது. நிற்றலுடையது; அழியாதது எனல் பொருள். மெய் - திருமேனி. இங்கு இதுமட்டும் மெய்யேயாயுளது. ஏனையோர் மெய்யெல்லாம் பொய்யே.

பண் :கொல்லி

பாடல் எண் : 3

சடையனார் சாந்த நீற்றர் தனிநிலா வெறிக்குஞ் சென்னி
யுடையனா ருடை தலை(ய்)யி லுண்பதும் பிச்சை யேற்றுக்
கடிகொள்பூந் தில்லை தன்னுட் கருதுசிற் றம்ப லத்தே
அடிகழ லார்க்க நின்று வனலெரி யாடு மாறே. 

பொழிப்புரை :

சடையை உடையவராய்த் திருநீற்றையே சந்தனமாகப் பூசியவராய், ஒரேபிறை ஒளிவீசும் தலையை உடையவராய், மண்டையோட்டில் பிச்சை ஏற்று உண்பதனை உடையவராய், நறுமணம் கமழும் பூக்கள் நிறைந்த தில்லை நகரில் சிறப்பாகக் கருதப்படும் சிற்றம்பலத்திலே, திருவடிகளிலே வீரக்கழல் ஆரவாரம் செய்ய நின்று, ஒளிவீசும் ஞானத் தீயிடையே கூத்து நிகழ்த்துமாற்றைக் காணலாம்.

குறிப்புரை :

சாந்த நீற்றர்; `சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்த நீறுகொண்டார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே`. (தி.1 ப.52 பா.7) உடையன்: வினைக் குறிப்புப் பெயர். ஆர்:- `இயற்பெயர் முன்னர் ஆரைக் கிளவி` காரணப் பெயர்க்கும் உரித்தாயிற்று. தலை - பிரமகபாலம் உண்பது பிச்சை ஏற்று. ஏட்டில் உம்மை இல்லை. கடி - மணம். கழல் அடிக்கண் ஆர் (-ஒலி)க்க.

பண் :கொல்லி

பாடல் எண் : 4

பையர வசைத்த வல்குற் பனிநிலா வெறிக்குஞ் சென்னி
மையரிக் கண்ணி யாளும் மாலுமோர் பாக மாகிச்
செய்யரி தில்லை தன்னுட் டிகழ்ந்தசிற் றம்ப லத்தே
கையெரி வீசி நின்று கனலெரி யாடு மாறே. 

பொழிப்புரை :

குளிர்ந்த பிறை ஒளி வீசும் தலையிலே படம் எடுக்கும் பாம்பை வருத்தும் வனப்புடைய அல்குலை உடைய, செவ்வரி கருவரி பரந்த மை தீட்டிய கண்களை உடைய கங்கையோடு, திருமால் ஒருபாகமாக அமைய, வயலிலே தானியங்கள் அறுவடை செய்யப்படுகின்ற தில்லையம்பதியிலே விளங்கும் சிற்றம்பலத்திலே சிவபெருமான் கையில் ஏந்திய நெருப்பினை வீசிக்கொண்டு நின்றவராய், ஒளிவீசும் ஞானத் தீயிடையே கூத்து நிகழ்த்துமாற்றைக் காணலாம்.

குறிப்புரை :

பை - படம். அரவு அல்குற்கு ஒப்பு. அல்குல் - கங்கை. பெயரெச்சத் தொடரீற்று நின்ற அன்மொழித்தொகை அசைத்த அல்குலாள் என விரியும். அசைத்த அல்குலையுடையாள் எனப் பொருள்படும். `பாயினமேகலை` (தி.8 திருக்கோவை. 282) என்பதும் அது. அதனை ஆகுபெயர் என்றார் அதனுரையாசிரியர். தமிழிலக்கணக் கடலாய்ப் புகழுருவெய்திய அரசஞ்சண்முகனார் அன்மொழித்தொகையென நிறுவினார். செந்தமிழ். தொகுதி. 1. பக்கம். 404, 404, 466 பார்க்க. மையரிக்கண்ணியாள்:- பாதிகொண்ட மாதுமையார். மாலும் ஓர் பாகம் ஆகி:- `இடமால் தழுவிய பாகம்` (தி.2 ப.2 பா.4) `அரியலால் தேவியில்லை ஐயன் ஐயாறனார்க்கே`. செய்யரிதில்லை:- வயல் வளம் உணர்த்திற்று. செய் - தண்செய். நன்செய். அரி - நெல்லரிகின்ற. கையெரி வீசிக் கனலெரியாடல் வண்ணம் காணலாம் தில்லைச்சிற்றம்பலத்தே என்க. இடப்பாற் கையில் ஏந்திய தீ `கையெரி` எனப்பட்டது. `அரிதில்லை` வினைத்தொகை.

பண் :கொல்லி

பாடல் எண் : 5

ஓதினார் வேதம் வாயா லொளிநிலா வெறிக்குஞ் சென்னி
பூதனார் பூதஞ் சூழப் புலியுரி யதள னார்தாம்
நாதனார் தில்லை தன்னு ணவின்றசிற் றம்ப லத்தே
காதில்வெண் குழைகள் தாழக் கனலெரி யாடு மாறே. 

பொழிப்புரை :

ஐம்பூதங்களாக இருக்கும் பெருமான், தம் வாயால் வேதம் ஓதினராய்ப் பிறை ஒளிவீசும் சென்னியராய்ப் புலித்தோலை அணிந்தவராய்த் தாம் எல்லோருக்கும் தலைவராய்ப் பூதங்கள் சூழத் தில்லையம்பதியில் பலகாலும் பழகிய சிற்றம்பலத்திலே காதிலணிந்த வெண்குழைகள் தொங்குமாறு ஒளிவீசும் ஞானத் தீயிடையே கூத்து நிகழ்த்துமாற்றைக் காணலாம்.

குறிப்புரை :

வாயால் வேதம் ஓதினார்:- `மறையுங் கொப்பளித்த நாவர்` (தி.4 ப.24 பா.4) `வேதங்கள் நான்கும் அங்கம் (ஆறும்) பண்ணினார்` (தி.4 ப.35 பா.4). சென்னியையுடைய பூதனார். பூதன் - பூத கணம் சூழ ஆடுமாறு காணலாம். அதள் - தோல். வெண் குழைகள் - சங்க குண்டலம். குழை காதில். தாழ்தல் அக்காதின்கீழ். காதில் உள்ள குழை தாழ எனலுமாம்.

பண் :கொல்லி

பாடல் எண் : 6

ஓருடம் பிருவ ராகி யொளிநிலா வெறிக்குஞ் சென்னிப்
பாரிடம் பாணி செய்யப் பயின்றவெம் பரம மூர்த்தி
காரிடந் தில்லை தன்னுட் கருதுசிற் றம்ப லத்தே
பேரிடம் பெருக நின்று பிறங்கெரி யாடு மாறே. 

பொழிப்புரை :

ஒரே உடம்பில்தாமும் பார்வதியுமாக இருவராகி, ஒளிவீசும் பிறையின் ஒளி பரவிய சென்னியராய், பூதக்கூட்டங்கள் தாளம் போட, கூத்தாடுதலில் பழகிய எம் மேம்பட்ட பெருமான், மேகங்கள் தங்கும் தில்லையிலே சிறப்பாகக் கருதப்படும் சிற்றம்பலத்திலே அகண்டமாய் வளருமாறு நின்று, விளங்குகின்ற ஞானத் தீயிடையே கூத்து நிகழ்த்துமாற்றைக் காணலாம்.

குறிப்புரை :

ஓருடம்பு:- அர்த்தநாரீச்சுர வடிவம். இருவர்:- மாதும் தாமும் (மகிழ்வர்மாற்பேறரே). பாரிடம் - பூதகணம், பாணி - தாளம். பயின்ற - திருக்கூத்தாடிய. கார் இடம் தில்லை - கரிய முகிலுக்குத் தங்கும் இடமாகிய தில்லை (வனம்) பேர் இடம் பெருக:- அகண்டமாய் வளர.

பண் :கொல்லி

பாடல் எண் : 7

முதற்றனிச் சடையை மூழ்க முகிழ்நிலா வெறிக்குஞ் சென்னி
மதக்களிற் றுரிவை போர்த்த மைந்தரைக் காண லாகு
மதர்த்துவண் டறையுஞ் சோலை மல்குசிற் றம்ப லத்தே
கதத்ததோ ரரவ மாடக் கனலெரி யாடு மாறே. 

பொழிப்புரை :

முதன்மையும் ஒப்பற்ற தன்மையும் உடைய சடைமுழுதும் பிறை தன் ஒளியைப் பரப்பும் சென்னியை உடையவராய், மதம் பொருந்திய யானையை கொன்று அதன் தோலைப் போர்த்திய வலிமை உடையவராய், தேன் உண்டு களித்து வண்டுகள் ஒலிக்கும் சோலைகள் நிறைந்த சிற்றம்பலத்தில் கோபம் கொண்ட பாம்பு படமெடுத்து ஆடச் சிவபெருமான் ஒளிவீசும் ஞானத் தீயிடையே கூத்து நிகழ்த்துமாற்றைக் காணலாம்.

குறிப்புரை :

முதன்மையும் தனிமையும் சடைக்குச் சிறப்பு. சென்னியையுடைய மைந்தர். சடையை மூழ்க நிலா எறிக்கும் இடம் சென்னி. மதர்த்த ஆண் யானையின் தோலைப் போர்த்த மைந்தரை எரியாடுமாறு காணலாகும். வண்டுமதர்த்து அறையும் சோலை. சோலைமல்கு சிற்றம்பலம். கதம் - கோபம். கதத்தது ஆகிய ஓர் அரவம் (-பாம்பு) ஆடக் கனன்ற ஞான எரியில் ஆடுமாறு காணலாகும். `மதத்து` எனின் மதத்தையுடைய என்க.

பண் :கொல்லி

பாடல் எண் : 8

மறையனார் மழுவொன் றேந்தி மணிநிலா வெறிக்குஞ் சென்னி
இறைவனா ரெம்பி ரானா ரேத்துவா ரிடர்க டீர்ப்பார்
சிறைகொணீர்த் தில்லை தன்னுட் டிகழ்ந்தசிற் றம்ப லத்தே
அறைகழ லார்க்க நின்று வனலெரி யாடு மாறே. 

பொழிப்புரை :

வேதம் ஓதுபவராய், மழுப்படை ஒன்றை ஏந்தியவராய், அழகிய பிறை நிலவொளி வீசும் சென்னியராய், எல்லோர் உள்ளத்தும் தங்கியிருப்பவராய், எங்கள் தலைவராய், தம்மைத் துதிப்பவர்களுடைய துயரங்களை நீக்குபவராய், நீர்ப் பாசனத்துக்காகத் தேக்கி வைக்கப்பட்டுள்ள தில்லையம்பதியிலே விளங்குகின்ற சிற்றம்பலத்திலே, சிவபெருமான் தம் கழல் ஒலி செய்ய நின்று ஞானத் தீயிடையே கூத்து நிகழ்த்துமாற்றைக் காணலாம்.

குறிப்புரை :

மறையனாரும், ஒரு மழுவேந்தியும், இறைவனாரும் ஏத்துவார்களின் இடர்களைத் தீர்ப்பாரும் ஆகிய சிவபிரானார், தில்லைச் சிற்றம்பலத்திலே கழல் ஆர் (-ஒலி)க்க நின்று அனலுகின்ற எரியில் ஆடுமாறு (காணலாகும்). சிறை - நீரைத் தடுத்துள்ள மடை. தில்லையின் நீர்வளம் குறித்தது. அறைகழல்:- வினைத்தொகை; ஆர்க்குங் கழல். சேரமான்பெருமாள் நாயனார் கேட்ட கழலார்ப்பு.

பண் :கொல்லி

பாடல் எண் : 9

விருத்தனாய்ப் பால னாகி விரிநிலா வெறிக்குஞ் சென்னி
நிருத்தனார் நிருத்தஞ் செய்ய நீண்டபுன் சடைக டாழக்
கருத்தனார் தில்லை தன்னுட் கருதுசிற் றம்ப லத்தே
அருத்தமா மேனி தன்னோ டனலெரி யாடு மாறே. 

பொழிப்புரை :

ஆண்டில் மூத்தவராகவும், மிக இளையராகவும் காட்சி வழங்குபவராய், பிறை விரிந்த ஒளியைப் பரப்பும் சென்னியராய்க் கூத்து நிகழ்த்துபவராய், நீண்ட சிவந்த சடைகள் தொங்கக் கூத்தாடுதலால் அடியவர் உள்ளத்தில் என்றும் தங்கியிருப்பவராய், தில்லையம்பதியிலே சிறப்பாகக் கருதப்படுகின்ற சிற்றம் பலத்திலே பார்வதிபாகமான திருமேனியோடு ஒளிவீசும் ஞானத்தீயிடைச் சிவபெருமான் கூத்தாடும் காட்சியைக் காணலாம்.

குறிப்புரை :

விருத்தன் (-முதியன்.) பாலன் (-இளையன்). இரண்டற்கும் இடையிற் குமாரன் (-காளை யௌவநம்) குறிக்காமலே புலப்படும். `விருத்தனார் இளையார்` (தி.5 ப.1 பா.1) பாலன் விருத்தனாதற்கு முன் உள்ளது அது. விருத்த குமார பாலரான திருவிளையாடலைக் கருதுக. விருத்தனாகிப் பாலனாகி வேதம் ஓர் நான்கு உணர்ந்து` உயிர்கள் பாலகுமார விருத்தராகும். கடவுளோ விருத்த குமாரபாலராகிக் காட்டினார். எறிக்கும் - வீசும். நிருத்தனார் - கூத்தர். நிருத்தம் - கூத்து. கருத்தனார் - வினை முதல்வர்; கருத்திலிருப்பவர். அருத்தமாமேனி - சிவகாமி அம்மையார். அருத்தம் - பாதி. அனல் எரி - அனலும் எரி; வினைத்தொகை.

பண் :கொல்லி

பாடல் எண் : 10

பாலனாய் விருத்த னாகிப் பனிநிலா வெறிக்குஞ் சென்னிக்
காலனைக் காலாற் காய்ந்த கடவுளார் விடையொன் றேறி
ஞாலமாந் தில்லை தன்னுள் நவின்றசிற் றம்ப லத்தே
நீலஞ்சேர் கண்ட னார்தா நீண்டெரி யாடு மாறே. 

பொழிப்புரை :

பாலனாகவும் மூத்தோனாகவும் காட்சி வழங்கிக் குளிர்ந்த பிறை ஒளிவீசும் சென்னியராய்க் காலனை காலால் வெகுண்ட பெருமானார் காளையை இவர்ந்து உலகவர் கூடி வணங்கும் தில்லையம்பதியில் சிறப்பாகப் போற்றப்படும் சிற்றம்பலத்திலே நீலகண்டராய் விரிவாக ஞானத் தீயிடைக் கூத்து நிகழ்த்தும் காட்சியைக் காணலாம்.

குறிப்புரை :

பாலனாய் விருத்தனாகி:- பா.9 குறிப்புரையை நோக்குக. நீண்டஎரி என்பதிற் பெயரெச்சத்தகரம் தொகுத்தல். காலனைக் காலால் உதைத்தான். காய்தல் காரணம். உதைத்தல் காரியம். காரணவாகுபெயர். ஞாலம் ஆம் தில்லை:- `பாரோரும் விண்ணோரும் பணியநட்டம் பயில்கின்ற பரஞ்சுடரைப் ... ... பெரும்பற்றப் புலியூரானை`. நீலம் - நீலவிடம். ஆகுபெயர்.

பண் :கொல்லி

பாடல் எண் : 11

மதியிலா வரக்க னோடி மாமலை யெடுக்க நோக்கி
நெதியன்றோ ணெரிய வூன்றி நீடிரும் பொழில்கள் சூழ்ந்த
மதியந்தோய் தில்லை தன்னுள் மல்குசிற் றம்ப லத்தே
அதிசயம் போல நின்று வனலெரி யாடு மாறே. 

பொழிப்புரை :

அறிவற்ற அரக்கனாகிய இராவணன் விரைந்து சென்று பெரிய கயிலை மலையைப் பெயர்க்க, அதனை மனத்தால் நோக்கிச் செல்வனான அவனுடைய தோள்கள் நெரியுமாறு கால்விரல் ஒன்றனை ஊன்றி, நீண்ட பொழில்கள் சூழ்ந்த தில்லையுள் விளங்கும் சிற்றம்பலத்திலே சிவபெருமான் எல்லோரும் வியக்குமாறு குறுகிய இடத்தில் நின்று ஒளிவீசும் ஞானத் தீயிடைக் கூத்து நிகழ்த்தும் காட்சியைக் காணலாம்.

குறிப்புரை :

மதி - அறிவு. மலையெடுக்கலுற்றதே மதியில்லாமை காட்டிற்று. நெதியன் - செல்வன். மதியம் தோய்தில்லை:- சந்திர மண்டலத்தினை அளாவிய தில்லைவனம். `செல்வநெடுமாடம் சென்று சேண் ஓங்கிச் செல்வமதி தோயச் செல்வம் உயர்கின்ற செல்வர் வாழ் தில்லைச் சிற்றம்பலமேய செல்வன் கழலேத்தும் செல்வம் செல்வமே` (தி.1 ப.80 பா.5) என்றதில், தில்லைமாடங்களின் உயர்ச்சி கூறிற்று. `அதிசயம் போலநின்று அனல்எரி ஆடும் ஆறு`:- `சிறிய பொதுவின் மறுவின்றி விளங்கி ஏவரும் காண ஆடுதி.` ஆயினும், காண்பதற்கு அரிய நின் கழலும் கண்டிலாத நின் கதிர் நெடுமுடியும் கொண்டு ஆடுவது அதிசயம் விளைக்கும். (கோயில் நான்மணிமாலை. 12).
சிற்பி