திருவதிகை வீரட்டானம்


பண் :

பாடல் எண் : 1

வெண்ணிலா மதியந் தன்னை விரிசடை மேவ வைத்து
உண்ணிலாப் புகுந்து நின்றங் குணர்வினுக் குணரக் கூறி
விண்ணிலார் மீயச் சூரார் வேண்டுவார் வேண்டி லார்க்கே
அண்ணியார் பெரிதுஞ் சேயா ரதிகைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

தேவருலகிலும் இருப்பதோடு , நிலவுலகில் மீயச்சூர் முதலிய திருத்தலங்களில் உறைபவராய் , தம்மை விரும்புபவருக்கு அண்மையில் உள்ளவராய் , வேண்டாதவருக்குப் பெரிதும் தொலைவில் உள்ளவராய் விளங்கும் பெருமானார் , வெள்ளிய ஒளிவீசும் பிறையை அது விரும்புமாறு விரிசடையிற் சூடி , அடியேன் உள்ளத்திலே ஞானஒளி நிலவப்புகுந்து நின்று , அவ் விடத்தில் உணர்விற்குப் பொருந்துமாறு உணர்த்த வேண்டியவற்றை உணர்த்தி , அதிகை வீரட்டத்தில் உள்ளார் .

குறிப்புரை :

வெள் நிலா மதியம் - வெள்ளொளி வீசும் பிறை . உள் நிலாப் புகுந்து - உள்ளத்தே நிலாவ நுழைந்து . ` நெஞ்சந் தன்னுள் நிலாவாத ` ` நிற்பதொத்து நிலையிலா புலாலுடம்பே புகுந்து நின்ற கற்பகமே `. ( தி .6. ப .95. பா .4) உணர்வினுக்கு - சித்தாகிய ஆன்மாவிற்கு . ஆன்மஞானத்துக்கும் ஆம் . உணர்தல் :- ஒருங்கியுணர்தல் . ஒன்றியிருந்து நினைந்துணர்தல் தாம் திருத்தித் தம்மனத்தை ஒருக்காத் தொண்டர் ( தி .6 ப .91 பா .1) கூறல் - உணர்வித்துணர்தல் ` காணுங் கண்ணுக்குக் காட்டும் உளம்போல் காண உள்ளத்தைக் கண்டு காட்டல் ` ( சிவ . போ . சூ . 10 ) விண்ணில் ஆர் மீயச்சூர் - வேண்டுவார்க்கு அண்ணியார் . வேண்டிலார்க்கே பெரிதும் சேயார் . வேண்டுவார்க்கே பெரிதுஞ் சேயார் எனல் பொருந்தாது . வேண்டுவார்க்கே அணியர் எனின் , வேண்டுவார்க்குப் பெரிதும் சேயார் என்றல் அமையாது .

பண் :

பாடல் எண் : 2

பாடினார் மறைக ணான்கும் பாயிருள் புகுந்தென் னுள்ளம்
கூடினார் கூட லால வாயிலார் நல்ல கொன்றை
சூடினார் சூடன் மேவிச் சூழ்சுடர் சுடலை வெண்ணீ
றாடினா ராடன் மேவி யதிகைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

கூடல் நகர ஆலவாய்க் கோயிலிலுள்ள பெருமான் நான்கு வேதங்களையும் பாடிக்கொண்டு நறிய கொன்றை மாலையை விரும்பிச் சூடி , சுடுகாட்டின் ஒளிவீசும் சாம்பல் பூசி , திரிபுரத்தை அழிக்குந் திருவிளையாடலை விரும்பி அதிகை வீரட்டத்தில் தங்கியவராய் , பரந்த ஆன்மிக இருளிலே நுழைந்து வந்து , அடியேனுடைய உள்ளத்தை அடைந்தார் .

குறிப்புரை :

மறைகள் நான்கும் பாடினார் :- ` மறையும் கொப்பளித்த நாவர் `. பாய் இருள் - பரவிய இருள் . என் உள்ளத்தில் இருக்கும் இவர் அவ்வுள்ளம் இருக்கும் இருளிற் புகுந்தவராவர் . ` இருள் அடராது உள்ளுயிர்க்கு உயிராய்த் தெளிக்கும் அறிவு திகழ்ந்துள தேனும் , திரிமலத்தே குளிக்கும் உயிர் அருள் கூடும்படி கொடி கட்டினனே ` ( கொடிக்கவி . 1 ) கூடல் :- நான்மாடக்கூடல் . நான்மாடக் கூடங்கள் :- கன்னி , கரிய மால் , காளி , ஆலவாய் . ஆலவாயில் :- ஆலமரத்தினிடம் . ` கடுவாயர்தமை நீக்கி என்னை ஆட்கொள் கண்ணுதலோன் நண்ணுமிடம் அண்ணல்வாயில் , நெடுவாயில் நிறைவயல் சூழ் நெய்தல்வாயில் நிகழ்முல்லை வாயிலொடு ஞாழல்வாயில் மடுவார் தென்மதுரைநகர் ஆலவாயில் மறிகடல்சூழ் புனவாயில் மாடம் நீடு , குடவாயில் குறைவாயில் ஆன எல்லாம் புகுவாரைக் கொடுவினைகள் கூடா அன்றே ` ( தி .6 ப .71 பா .7) என்னுந் திருத்தாண்டகத்தால் , ஆலவாயிலையும் ஏனைய வாயில்களையும் ஒருங்குற்று நோக்குமவர்க்கு , ஆலவாய்க் கதை ஓர் ஆராய்ச்சியிலாக் கட்டு என்று நன்குவிளங்கும் . நல்ல கொன்றை :- ` வம்பறாவரி வண்டு மணம் நாற மலரும் மதுமலர் நற்கொன்றை `. ( தி .7 ப .39 பா .5) ` கொய்யாடு கூவிளங் கொன்றை மாலை கொண்டு அடியேன் நான் இட்டுக் கூறிநின்று பொய்யாத சேவடிக்கே போதுகின்றேன் ` ( தி .6 ப .99 பா .8) சூடல் - அணிதல் . ஆடினார் - முழுகினார் . மேவி வீரட்டத்து உள்ளார் . புகுந்து என் உள்ளம் கூடினார் .

பண் :

பாடல் எண் : 3

ஊனையே கழிக்க வேண்டி லுணர்மின்க ளுள்ளத் துள்ளே
தேனைய மலர்கள் கொண்டு சிந்தையுட் சிந்திக் கின்ற
ஏனைய பலவு மாகி யிமையவ ரேத்த நின்று
ஆனையி னுரிவை போர்த்தா ரதிகைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

உடம்பு எடுத்தலாகிய பிறவித்துயரை அடியோடு போக்க விரும்பினால் , உள்ளத்துள்ளே நினைக்கும் எல்லா எண்ணங்களிலும் உறைபவராய் , வண்டுகள் வருந்துமாறு மலர்களைக் கைகளில் கொண்டு தேவர்கள் துதிக்குமாறு , யானைத் தோலைப் போர்த்தி நின்று , அதிகை வீரட்டத்தில் காட்சி வழங்கும் பெருமானாரை உள்ளத்துள்ளே தியானித்து உணருங்கள்.

குறிப்புரை :

ஊனை - உடம்பெடுத்தலாகிய பிறவித் துன்பத்தை . ` ஊன் ` உடம்பு , பிறவி , துன்பம் மூன்றற்கும் முறையே ஆகிய மும்மடியாகுபெயர் . ` வேண்டில் உள்ளத்துள்ளே உணர்மின்கள் ` என்றது சுவாநுபவ வாக்கியம் ஆகிய ஞானோபதேசம் . ` என்னுளே தேடிக் கண்டு கொண்டேன் ` ( தி .4 ப .20 பா .10) ` பத்தர்கள் சித்தத்துள் புக்குத் தேடிக் கண்டு கொண்டேன் ` ( ? ) உள்ளத் திருக்குறுந்தொகை ( தி .5. ப .98. முழுதும் ) காண்க . தேன் - வண்டுகள் . நைய - வருந்த . ` தேன ` - என்னா மையால் தேனையுடைய என்று உரைத்தல் பொருந்தாது . சிந்திக்கின்ற எல்லாமாய் அல்லனுமாய் இருந்திடுவோன் . உரிவு - தோல் , புரிவு , எரிவு , விரிவு , பரிவு , செறிவு , அறிவு , முறிவு , என இகரவீற்று முதனிலைகள் வுகரம் பெற்று நிற்றல் காண்க . உரி + ஐ = உரியை . உரிவு + ஐ = உரிவை . இஃது இரண்டனுருபன்று .

பண் :

பாடல் எண் : 4

துருத்தியாங் குரம்பை தன்னிற் றொண்ணூற்றங் கறுவர் நின்று
விருத்திதான் றருக வென்று வேதனை பலவுஞ் செய்ய
வருத்தியால் வல்ல வாறு வந்துவந் தடைய நின்ற
அருத்தியார்க் கன்பர் போலு மதிகைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

தோல்துருத்தி போன்ற உடம்பிலே தொண்ணுற்றாறு தத்துவங்களும் தாத்துவிகங்களும் உறைவிடங்கொண்டு தங்கள் வாழ்வுக்கு உரிய பொருள்களை அளிக்க வேண்டுமென்று பல துயரம் செய்யுமாறு உயிரினங்களை வருத்துவதனாலே , தம்மால் இயன்றளவு பெருமானாகிய தம்மை நாடி வந்து அடைந்த விருப்பினை உடைய அடியவர்பால் அதிகை வீரட்டனார் தாமும் அன்பராய் உதவுகிறார் .

குறிப்புரை :

துருத்தி - இடைகலை பிங்கலை நாடி இரண்டாலும் மூச்சுவிடுதல்பற்றி ஊதுலைத் துருத்தி போல்வது இத் தோற்றுருத்தி . ` பூந்துருத்தி பூந்துருத்தி என்பீராகில் பொல்லாப் புலாற்றுருத்தி போக்கலாமே ` ( தி .6 ப .93 பா .1) ` சோற்றுத் துறுத்தி ` ( கோயிற்றிரு வகவல் . 2:- 17 ) ` காற்றுத் துறுத்தி `. ` சோறிடுந்தோற்பை ` என்றதால் துருத்தி எனல் மரூஉ . ` தங்கள் துருத்திக்கு அறுசுவை போடுகின்றார் . ` ஊன் பொதிந்த பீற்றற்றுருத்தி ` ( திருவேகம்பமாலை . 16.27 ) தாயுமானவர் சச்சிதாநந்த சிவம் 2. குரம்பை குடில் . ` இருகாற் குரம்பை இது நானுடையது ` ( தி .4 ப .113 பா .2) தொண்ணூற்றறுவர் - தொண்ணூற்றாறு தத்துவங்கள் . விருத்தி - வாழ்வு . வேதனை - துன்பம் . வருத்தி - வரச்செய்தி . வருத்தி - வருத்துவாய் . அருத்தி - அன்பு . அருத்தியார் - அன்பர் .

பண் :

பாடல் எண் : 5

பத்தியா லேத்தி நின்று பணிபவர் நெஞ்சத் துள்ளார்
துத்தியைந் தலைய நாகஞ் சூழ்சடை முடிமேல் வைத்து
உத்தர மலையர் பாவை யுமையவ ணடுங்க வன்று
அத்தியி னுரிவை போர்த்தா ரதிகைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

பத்தியோடு வணங்கும் மெய்யன்பர் சித்தத்தில் நிலையாக உள்ளவரும் , படப்பொறிகளை உடைய ஐந்தலை நாகத்தைப் பரந்த சடைமுடியின்மேல் சூடி , வடக்கிலுள்ள இமய மலையரசன் மகளான உமாதேவி நடுங்குமாறு யானைத் தோலைப் போர்த்தியவரும் அதிகை வீரட்டனாரே .

குறிப்புரை :

பத்தி - தொண்டு . அன்பு என்னும் பொருட்டாயிற்று . பணிபவர் - பணிதலைப் புரிபவர் . துத்தி - படப்பொறி . தலைய - தலைகளையுடைய . சூழ்சடை - தலையைச் சூழ்ந்த சடை . சடையின் முடிமேல் நாகத்தை வைத்து . உத்தரம் - வடக்கு . இமாசல குமாரி உமாதேவி . அத்தி - யானை . ஆணவத்தைப் போக்கிய தத்துவத்தை விளக்குவது யானையுரித்த வரலாறு .

பண் :

பாடல் எண் : 6

வரிமுரி பாடி யென்றும் வல்லவா றடைந்தும் நெஞ்சே
கரியுரி மூட வல்ல கடவுளைக் காலத் தாலே
சுரிபுரி விரிகு ழ ( ல் ) லா டுடியிடைப் பரவை யல்குல்
அரிவையோர் பாகர் போலு மதிகைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

நெஞ்சே ! சுருண்ட கடைகுழன்ற விரிந்த கூந்தலினளாய்த் துடிபோன்ற இடையினளாய்க் கடல்போன்ற அல்குலை உடைய பார்வதி பாகராய் அதிகை வீரட்டராய் யானைத் தோலைப் போர்த்திய கடவுளாய் விளங்குகிறார் அதிகை வீரட்டனார் . அவரை என்றும் வரிப்பாடல்களையும் முரிப்பாடல்களையும் பாடிக் கொண்டு நம்மால் இயன்றவாறு அடையக் கடவோம் .

குறிப்புரை :

` வரிப்பாடலாவது :- பண்ணும் திறமும் செயலும் பாணியும் ஒரு நெறியன்றி மயங்கச் சொல்லப்பட்ட வார்தல் , வடித்தல் , உந்தல் , உறழ்தல் , உருட்டல் , தெருட்டல் , அள்ளல் , பட்டடை என இசையோர் வகுத்த எட்டனியல்பும் ஆறனியல்பும் பெற்றுத் தன் முதலும் இறுதியும் கெட்டு இயல்பும் முடமும் ஆக முடிந்து கருதப்பட்ட சந்தியும் சார்த்தும் பெற்றும் பெறாதும் வரும் . அதுதான் தெய்வஞ் சுட்டியும் மக்களைப் பழிச்சியும் வரும் `. ( சிலப் . கானல்வரி . 1:- 12-20. அரும்பதவுரை ) ( தொல் . செய் . 153. பேராசிரியர் ). முரி :- ` எடுத்த இயலும் இசையும் தம்மில் முரித்துப் பாடுதல் முரியெனப்படுமே ` கானல் வரி :- முரிவரி . (14-16) அரும்பதவுரை . ` இசைநூலாரும் இத் தரவு முதலாயினவற்றை , முகம் நிலை கொச்சகம் முரி என வேண்டுப . கூத்தநூலார் கொச்சகம் உள்வழி அதனை நிலையென அடக்கி முகம் நிலை முரி என மூன்றாக வேண்டுப . அவரும் இக்கருத்திற்கு ஏற்ப முகத்திற்படும் தரவினை முகம் எனவும் இடைநிற்பனவற்றை இடை நிலை எனவும் இறுதிக்கண் முரிந்து மாறுஞ் சுரிதகத்தினை முரி எனவும் கூறினார் என்பது ` ( தொல் . செய் . 132. பேராசிரியர் உரை ) சிலப் . கடலாடு . 35. அடியார் ... உரை . வரி முரி பாடி என்றும் வல்லவாறு அடைந்தும் (- அடைந்தோம் ) என்று கொள்க . இதனால் , அப்பர் மூர்த்திகளது பாவன்மையும் புலமையும் ஒப்புயர்வில்லாத உயர்ச்சி ஆதல் புலப்படும் . கரியுரி மூடவல்ல கடவுள் :- ` யானையின் பசுந்தோல் பிறர் உடம்பிற் பட்டாற் கொல்லும் என்றுணர்க ` ... வாரணத்துரி போலே தப்பாமற் கொல்லும் வலை என்றும் ஆம் ` ( சிந்தாமணி . 2787. உரை ) யானைத் தோலைத் தன்மேல் மூடவல்லவன் சிவபெருமான் ஒருவனே ஆதலின் ` கரியுரி மூடவல்ல கடவுள் ` என்றார் . கரத்தையுடையது கரி . பணத்தையுடையது பணி என்பது போல்வது . சுரி - சுரிந்த . புரி - முறுக்குண்ட . ( தி .4 ப .40 பா .3) ` துடியிடைப் பரவை யல்குல் ` ( தி .4 ப .24 பா .10) இடையையும் அல்குலையும் உடைய அரிவை ( உமாதேவி ) யார் ` அன்மொழித்தொகை ; அல்குலாள் என விரியும் .

பண் :

பாடல் எண் : 7

நீதியா னினைசெய் நெஞ்சே நிமலனை நித்த மாகப்
பாதியா முமைதன் னோடும் பாகமாய் நின்ற வெந்தை
சோதியாய்ச் சுடர்வி ளக்காய்ச் சுண்ணவெண் ணீறதாடி
ஆதியு மீறு மானா ரதிகைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

நெஞ்சே ! பார்வதி பாகராய்ச் சோதியாய் , ஒளி விடும் ஞானதீபமாய் நின்ற எம் பிதாவும் , திருநீறு பூசி உலகுக்கெல்லாம் ஆதியும் அந்தமுமாக உள்ளவரும் அதிகை வீரட்டனாவார் . அத்தூயோரை நாடோறும் முறைப்படி தியானம் செய்வாயாக .

குறிப்புரை :

நிமலனை - இயல்பாகவே தளையில்லாத சிவனை . நித்தம் - நித்தியம் . எப்போதும் . நீதியால் - ( சிவாகம ) விதிப்படி . நினைசெய் - நினைத்தலைச் செய் . நெஞ்சறிவுறூஉ இது . பாதி - திருமேனியின் செம்பாதி உமையம்மைக்குரியது . பாதியாம் உமையோடும் பாகமாய் நின்ற எந்தை :- உமைபாதியாவார் . எந்தை பாகமாவார் . பாதியானது உமையும் பாகமாய் நின்றது எந்தையும் என்றுணர்த்தியதுணர்க . சோதி - பேரொளி . சுடர் விளக்கு :- வினைத் தொகை . எக்காலத்துக்கும் உரியது . சுண்ண வெண்ணீறு - திருவெண்ணீற்றுச் சுண்ணம் . ஆதி - முதல் . ஈறு - முடிவு ஆனார் என்றதால் , ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதியே அவர் இயல்பு .

பண் :

பாடல் எண் : 8

எல்லியும் பகலு மெல்லாந் துஞ்சுவேற் கொருவர் வந்து
புல்லிய மனத்துக் கோயில் புக்கனர் காம னென்னும்
வில்லியங் கணையி னானை வெந்துக நோக்கி யிட்டார்
அல்லியம் பழன வேலி யதிகைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

வில்லையும் அம்புகளையும் உடைய மன்மதன் வெந்து விழும்படி நோக்கியவர் , அல்லிச் செடிகள் களையாக நிறைந்த வயல்களை உடைய அதிகை வீரட்டனார் . ஒப்பற்றவரான அப்பெருமான் செயற்பாடு ஏதும் இன்றி இரவும் பகலும் கழிக்கும் அடியேன் பக்கல்வந்து அடியேனுடைய அற்பமான மனமாகிய கோயிலிலே புகுந்து விட்டார் .

குறிப்புரை :

எல்லி - இரவு . துஞ்சுவேற்கு - ( துயிலும் எனக்கு ) துயில்வேனுக்கு . புல்லிய - புன்மையதாகிய . மனத்துக் கோயில் - மனக்கோயிலுள் . சாரியை பிரித்துக்கூட்டி மனக்கோயிலகத்து என்க . ` விண்ணத்து ` என்பதுபோற்கொள்க . ஒருவர் மனக்கோயிலுள் வந்துபுக்கனர் . வில்லி - ( கரும்பு ) வில்லுடையன் , ஐங்கணையினான் - ஐந்து மலரம்புகளைக் கொண்டவன் . காமன் என்னும் பெயரினன் . வெந்துஉக - தீய்ந்து சிந்த . நோக்கியிட்டார் - தீவிழியாற் பார்த்திட்டார் . அல்லி - செவ்வல்லியும் . வெள்ளல்லியும் . பழனம் - வயல் .

பண் :

பாடல் எண் : 9

ஒன்றவே யுணர்தி ராகி லோங்காரத் தொருவ னாகும்
வென்றவைம் புலன்க டம்மை விலக்குதற் குரியீ ரெல்லாம்
நன்றவ னார ண ( ன் ) னு நான்முக னாடிக் காண்குற்
றன்றவர்க் கரியர் போலு மதிகைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

பெரியோனாகிய திருமாலும் , பிரமனும் தேடிக் காண முயன்ற அன்று அவர்களுக்குக் காண்டற்கு அரியவரான அதிகை வீரட்டனார் , ஐம்புலன்களையும் வென்று விலக்குதற்குரிய நீங்கள் எல்லீரும் மனம் பொருந்தித் தியானிப்பீராயின் ஓங்காரத்தில் உள்ளே உள்ள மெய்ப்பொருளாக உங்களுக்குக் காட்சி வழங்குவார் .

குறிப்புரை :

ஐம்புலன்களையும் வென்று அவற்றை விலக்கி , அவற்றால் வரும் துன்பங்களின் நீங்குதற்கு உரியீர் எல்லீரும் ஓங்காரத் தியானம் புரிந்து , ஒன்றியிருந்து நினைந்துணர்திர் ( தி .4 ப .81 பா .2) ஆகில் , அவ்வோங்காரத்துள் ஒருவன் உமக்கு நேர்படுவான் . வென்ற ஐம்புலன்கள் தம்மை விலக்குதற்குரியீர் :- ஐம்புலன்களை வென்றதொடு நில்லாது விலக்குதலும் வேண்டும் என்றபடி . ` வென்ற வைம்புலன் ` என்றுள்ளதால் , அவ்வைம்புலனை வென்று விலக்குதற்குரியீர் எனலும் கூடும் . ` வென்றவைம்புலனால் மிக்கீர் ` ( தி .12 பெரிய . திரு . கண்ட . பா . 42). நன்றவன் - சிவன் . நாரணன் - நாராயணன் என்பதன் திரிபு . காண்கு - காண்டல் . உற்ற அன்று :- பெயரெச்சத்து அகரம் தொகுத்தல் .

பண் :

பாடல் எண் : 10

தடக்கையா லெடுத்து வைத்துத் தடவரை குலுங்க வார்த்துக்
கிடக்கையா லிடர்க ளோங்கக் கிளர்மணி முடிகள் சாய
முடக்கினார் திருவி ரல்தான் முருகமர் கோதை பாகத்
தடக்கினா ரென்னையாளு மதிகைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

என்னை அடியவனாக்கிக் கொண்ட அதிகை வீரட்டனார் , பெரிய கயிலை மலை நடுங்குமாறு ஆரவாரித்து நீண்ட கைகளால் பெயர்க்க முயன்ற இராவணன் அதன் கீழகப்பட்டுத் துன்பங்கள் மிகுந்து விளக்கமானமண மணிமுடிகள் நசுங்கி அவலமுறுமாறு தம் திருவடிப் பெருவிரலைச் சற்றே வளைத்து ஊன்றினார் . அவரே நறுமணம் கமழும் மாலையை அணிந்த பார்வதியை இடப்பாகமாக அடக்கியவரும் ஆவார் .

குறிப்புரை :

தடக்கை - அகலமுடைய கை ; வளைந்த கை . தட வரை - அகன்ற மலை . தட - வளைவு . அகலம் உரிச்சொல் . ஆர்த்து - இரைந்து . கிடக்கை - கிடத்தல் . ஓங்க - மிக . கிளர்மணி - விளங்கும் அரதனம் . முருகு - மணம் . அலர் - கோதை :- அன்மொழித் தொகை . கோதையாளைப் பாகத்தில் அடக்கினார் . தம்மை ஆள்வதற்குக் கருணைவடிவான கோதையை அடக்குதல் ஏதுவாதலை யுணர்த்தினார் .
சிற்பி