திருவதிகைவீரட்டானம்


பண் :

பாடல் எண் : 1

நம்பனே யெங்கள் கோவே நாதனே யாதி மூர்த்தி
பங்கனே பரம யோகீ யென்றென்றே பரவி நாளும்
செம்பொனே பவளக் குன்றே திகழ்மலர்ப் பாதங் காண்பான்
அன்பனே யலந்து போனே னதிகைவீ ரட்ட னீரே.

பொழிப்புரை :

`திருவதிகை வீரத்தானத்தில் உகந்தருளியிருக்கும் பெருமானீரே ! எல்லாராலும் விரும்பப்படுகிறவரே ! எங்கள் அரசரே ! ஆதிமூர்த்தியாகிய பார்வதிபாகரே ! மேம்பட்டயோகீசுவரே ! பொன்னையும் பவளமலையையும் ஒத்தவரே ! அன்பரே !` என்று உம்மைப் பலகாலும் வாய்விட்டழைத்து உமது தாமரை மலர் போன்ற பாதங்களைத் காணத் துயருற்று அடியேன் வருந்துகின்றேன் .

குறிப்புரை :

நம்பனே - விருப்பத்திற்குரியவனே . எவ்வுயிர்களாலும் விரும்பத்தக்கவனே . கோவே - தலைவனே . நாதனே - இயவுளே . ஆதி மூர்த்தி பங்கனே - ` முதலுருப்பாதி மாதராவது முணரார் ` ( சித்தியார் சூ . 1:- 49 ). ஆதிமூர்த்தியாகிய மாதினை இடப்பங்கில் உடையவனே . ` ஆதிக்கண்ணான் ` என்று ( தி .6. ப .20 பா .1) பின் குறிப்பதால் , ஆதி மூர்த்தி பிரமன் என்று கொண்டு , அவனைப் பங்கஞ் செய்தவன் எனலாம் ஆயினும் ` ஆதிமாலயன் அவர்காண் பரியார் ` ஆதியான் அயன் என்று அரியவொண்ணா அமரர் தொழுங்கழலான் ` ( தி .6 ப .88 பா .2) என்றவற்றை நோக்கின் அது பொருந்தாது . பரமயோகீ :- தி .4 ப .22 பா .2 குறிப்பு நோக்குக . என்று என்று :- பன்மை குறித்த அடுக்கு . ஏகாரம் பிறவாறு பரவாமை குறித்த பிரிநிலை . நாளும் பரவி (- வாழ்த்தி ). செம்பொன்னும் பவளக்குன்றும் திருமேனிப் பொலிவு குறித்தன . அன்பனே :- ` அன்பே சிவம் `. அலத்தல் - துயருறல் . வறுமைப் படல் . ` அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய்வான் ` ( தி .6 ப .1 பா .2) திருப்பதிகத்தில் வீரட்டனீரே என்றும் வீரட்டனாரே என்றும் உள்ளன .

பண் :

பாடல் எண் : 2

பொய்யினான் மிடைந்த போர்வை புரைபுரை யழுகி வீழ
மெய்யனாய் வாழ மாட்டேன் வேண்டிற்றொன் றைவர் வேண்டார்
செய்யதா மரைக ளன்ன சேவடி யிரண்டுங் காண்பான்
ஐயநா னலந்து போனே னதிகைவீ ரட்ட னீரே.

பொழிப்புரை :

அழியக்கூடிய பொய்ப்பொருள்களால் இணைத்துச் செய்யப்பட்ட உடம்பில் ஒவ்வொரு துவாரமும் செயற்பாடின்றி அழுகிக்கெட , உண்மையான வாழ்வு வாழ இயலாதேனாய் , யான் விரும்பிய ஒப்பற்ற பரஞானத்தை என் ஐம்பொறிகளும் தாமும் விரும்பாமல் இடர்ப்படுதலால் , அதிகை வீரட்டனாராகிய உமது சிவந்த தாமரையை ஒத்த திருவடிகள் இரண்டையும் காண்பதற்கு இயலாமல்அடியேன் வருந்தி நிற்கின்றேன் .

குறிப்புரை :

பொய்யினால் மிடைந்த போர்வை :- மிடைதல் - நெருங்குதல் . ( அது முடைதல் எனத் திரிந்து வழங்குகின்றது . இகரம் உகரமாதல் இயல்பு . பிள்ளை - புள்ளை . பிட்டு - புட்டு , முதலிய பலவுள ). உடலின் இழிவு இதனால் உணர்த்தப்பட்டது . ` பொசியினால் மிடைந்து புழுப் பொதிந்த போர்வைப் பொல்லாத புலாலுடம்பை நிலாசும் என்று பசியினால் மீதூரப் பட்டே ஈட்டிப் பலர்க்கு உதவலது ஒழிந்து பவளவாயார் வசியினாலகப்பட்டு வீழா முன்னம் வானவர் கோன் திருநாமம் அஞ்சும் சொல்லிக் கசிவினால் தொழும் அடியார் நெஞ்சின் உள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே ` ( தி .6 ப .61 பா .6) ` பொய்விரா மேனி தன்னைப் பொருளெனக் காலம் போக்கி மெய்விரா மனத்தனல்லேன் `. புரைபுரை :- ` ஆவியோடாக்கை புரைபுரை கனியப் புகுந்து நின்றுருக்கிப் பொய்யிருள் கடிந்த மெய்ச்சுடரே ` ( தி .8 திருவாசகம் . 22.3). வேண்டிற்று ஒன்று - ( யான் ) விரும்பியதொன்றனை . ஐவர் . தி .4 ப .77 பா .5 பதிகம் 52-67 ஐம்பொறிகள் . கோயில் நான்மணி மாலை . 12:- 28-34 . ஓரவொட்டார் ஒன்றை உன்ன வொட்டார் மலர் இட்டு உனதாள் சேரவொட்டார் ஐவர் . செய்வது என் யான் சென்று ? ( கந்தரலங்காரம் ) ` பொய் மாயப் பெருங்கடலில் `. திருத்தாண்டகம் . ( தி .6 ப .27 பா .1) பார்க்க . செந்தாமரை ஒத்த சேவடி . பொய் :- ` முக் காலத்தும் புலனாகாமை ; நிகழ்காலத்து விளங்கி ஏனைக் காலத்து விளங்காமை ` இவ்வாறன்றி அழிபொருள் பொய்ப்பொருள் என வேறில்லை . ( சிவஞானபாடியம் . சூ 2. அதி . 2 .)

பண் :

பாடல் எண் : 3

நீதியால் வாழ மாட்டே னித்தலுந் தூயே னல்லேன்
ஓதியு முணர மாட்டே னுன்னையுள் வைக்க மாட்டேன்
சோதியே சுடரே யுன்றன் றூமலர்ப் பாதங் காண்பான்
ஆதியே யலந்து போனே னதிகைவீ ரட்ட னீரே.

பொழிப்புரை :

ஒளியே ! ஞானவிளக்கே ! அதிகைப்பெருமானே ! தூயேன் அல்லேனாகிய அடியேன் நாடோறும் நெறிப்படி வாழமாட்டாமல் , கற்றும் கற்றவாறு உணர இயலாதேனாய் , உன்னை உள்ளத்துள் நிலையாக வைத்துத் தியானிக்க இயலாதேனாய் முதற்கடவுளாகிய உன்னுடைய தூயமலர்களைப் போன்ற திருவடிகளைக் காண இயலாதேனாய் வருந்தி நிற்கிறேன் .

குறிப்புரை :

நீதியால் - செய்வன செய்து தவிர்வன தவிர்ந்து வாழ்க என அறநூல் அறுத்தவாற்றால் . ` செய்வதும் தவிர்வதும் பெறுவதும் உறுவதும் உய்வதும் அறியேன் ` ( சங்கர நமச்சிவாயப் புலவர் தனிப்பாடல் நன்னூலுரை ) நித்தலும் - நாள்தொறும் . தூயேன் - சிவபூசை முதலியவற்றால் சிவமானேன் . ஓதியும் - ஓதுவிக்க ஓதியும் . உள் - உள்ளத்தே . தூ - தூய்மையுடைய . பற்றுக்கோடாகிய . ` சோதியே சுடரே ` என்பது முதலிய பற்பல தொடர்கள் பொருள்கள் திருவாசகத்தை நினைப்பூட்டும் வண்ணம் திருநாவுக்கரசர் அருளியவற்றுள் திகழ்கின்றன . மாணிக்கவாசகர் இவர்க்குமுன் விளங்கியவர் என்பதற்கு ஈதும் ஒரு சான்றாகும் .

பண் :

பாடல் எண் : 4

தெருளுமா தெருள மாட்டேன் றீவினைச் சுற்ற மென்னும்
பொருளுளே யழுந்தி நாளும் போவதோர் நெறியுங் காணேன்
இருளுமா மணிகண் டாநின் னிணையடி யிரண்டுங் காண்பான்
அருளுமா றருள வேண்டு மதிகைவீ ரட்ட னீரே.

பொழிப்புரை :

இருண்ட நீலமணி போன்ற கழுத்தை உடைய அதிகைப் பெருமானே ! தெளிவடையும் வழியை அடைந்து மனந் தெளிவடைதலை இல்லேனாய் , தீயவினைகளுக்கு உதவும் தேக பந்துக்கள் என்னும் பொருள்களோடு இயைந்து நாளும் செல்லத்தக்க மேம்பட்ட வழியை அறியேனாய் உள்ள அடியேன் உன் ஒன்றற்கு ஒன்று ஒப்பான உன் திருவடிகள் இரண்டனையும் தரிசிக்குமாறு அருளும் வகையால் அருளவேண்டும் .

குறிப்புரை :

தெருளல் x மருளல் ; தெருட்டி x மருட்டி ; தியக்கம் x மயக்கம் ; ( தி .4 ப .48 பா .8) தெருள்வு x மருள்வு . தெருளல் - தெளிதல் . தெருளும் ஆ - தெளியும் ஆறு . மாட்டேன் - வலிமையில்லேன் . தீவினைச் சுற்றம் - தீவினையின் பயனாகச் சூழ்வன . ` இடும்பை என்னும் பாசனத்து அழுந்துகின்றேன் ` ( பா .7) போவது ஓர் நெறி - உயிர் செல்லும் மெய்ந்நெறி . ` ஞானகதி ` ` ஞானமலது கதி கூடுமோ ?` ( தாயுமானவர் ) ` ஞானநெறி அடைந்து அடைவர் சிவனை ` ( சித்தியார் . சூ .8:- 25 ). இருளும் மாமணி கண்டா - நஞ்சினாற் கறுத்த நீலமணிபோலும் திருக்கழுத்து உடையவனே . இணையடி :- ` ஞானசத்தி கிரியாசத்தி என்னும் இரண்டு திருவடித் தாமரைகள் ` ( சி . போ . சிற்றுரை மங்கல வாழ்த்து ) ` திரோதானசத்தியும் கிரியாசத்தியும் இரண்டு திருவடிகள் ` ( ஞானபூசாவிதி ) ` வீடுபேறு ` ` பாச வீடும் சிவப்பேறும் `, ` முதல்வனது திருவடியாகிய சிவாநந்தத்தை அநுபவித்தல் ` ` முதல்வன் திருவடியாகிய சிவாநந்தாநுபூதி ` ( சிவ ஞானபாடியம் . சூ . 10:- அதி .1. சூ . 11 ). அருளும் ஆறு :- தீக்கை , சிவாகமபடனம் , சரியை முதலியன உணர்த்தும் நூல்களின் நானெறியாராய்ச்சிக் கேள்வி , அவ்வொழுக்கம் உள்ளத்தூய்மை , நிலைநிலையாப் பொருளுணர்ச்சி , பிறப்பச்சம் , வீடுபேற்று அவாப்பெருக்கம் என்னும் எட்டும் உடையோர்க்கு நூலானும் , அவருட் பக்குவமிக்கார்க்கு உபதேசத்தானும் , அவருள்ளும் சகலர்க்குப் படர்க்கையிலும் பிரளயாகலர்க்கு முன்னிலையிலும் , விஞ்ஞானாகலர்க்குத் ( உள்நின்று ) தன்மையிலும் அருளும் வண்ணம் .

பண் :

பாடல் எண் : 5

அஞ்சினா லியற்றப் பட்ட வாக்கைபெற் றதனுள் வாழும்
அஞ்சினா லடர்க்கப் பட்டிங் குழிதரு மாத னேனை
அஞ்சினா லுய்க்கும் வண்ணங் காட்டினாய்க் கச்சந் தீர்ந்தேன்
அஞ்சினாற் பொலிந்த சென்னி யதிகைவீ ரட்ட னீரே.

பொழிப்புரை :

பஞ்சகவ்வியத்தால் அபிடேகிக்கப்படுதலால் விளங்குகின்ற சென்னியை உடைய அதிகை வீரட்டப் பெருமானே ! ஐம்பூதங்களால் இயற்றப்பட்ட இவ்வுடலைப் பெற்று அதன்கண் வாழும் ஐம்பொறிகளால் வருத்தப்பட்டு இவ்வுலகில் திரியும் அறிவற்ற அடியேனைத் திருவைந்தெழுத்தால் நல்வழியில் செல்லுமாறு வழிகாட்டினாயாக , அதனால் அச்சம் நீங்கப்பெற்றேன் .

குறிப்புரை :

அஞ்சு - ஐம்பெரும் பூதம் . ` ஐம்பெரும் பூதத்தான் ஆய தூலவுடம்பு ` ` சூக்கும தேகத்தின் காரியம் ஆதல் பற்றியே தூலதேகம் ஐம்பெரும் பூதமயம் எனப்பட்டது ` ( சிவஞானபாடியம் . சூ . 2. அதி . 3 ). ஆக்கை :- இஃது யாக்கை என்பதன் மருஉ . ` யாப்பு ` ஆப்பென மருவிற்றிலது எழுவகைத் தாதுக்களாற் கட்டப்பட்டது என்னும் பொருட்டு , ` பல்வகைத் தாதுவின் உயிர்க்கு உடல் ` ( நன்னூல் . 268 ) ` சிதலது நீர்வாய்ச் சிறுதுகளாற் பெரும்புற்றுருவமைந்த பெற்றியதென்ன ஐம்புலப் பேருருவைந்தும் ஐந்தணுவால் இம்பரிற் சமைவது யாவரும் அறிதலின் ` ( ? . சங்கர நமச்சிவாயருரை .58 ). ` பா . தாழிசை , துறை . விருத்தங்களால் யாக்கப்பட்ட அறம் பொருள் இன்பம் வீடு என்னும் அவற்றின் மெய்மையறிந்து , விழுப்பம் எய்தி , இம்மை மறுமை வழுவாமல் நிகழ்வார் ஆதலின் , இருமைக்கும் உறுதிபயப்பது யாப்பு எனக் கொள்க ` ( யாப்பருங்கலக்காரிகை . 1. உரை ). ` ஆக்கப்பட்ட அறம் பொருள் இன்பம் வீடு ` என்று பதிப்பித்திருப்பது பிழை . ` யாக்கப்படுவது யாப்பு ` என்னும் உண்மை அதனாற் பெறப்படாது . அஞ்சு :- ஐம்புலவேடரின் அயர்ந்தனை வளர்ந்து ` ( சிவஞானபோதம் . சூ . 8 ). ` உன்னுருவிற் சுவையொளியூ றோசைநாற்றத் துறுப்பினது குறிப்பாகும் ஐவீர் நுங்கள் மன்னுருவத் தியற்கைகளால் வைப்பீர்க்கு ... யானேல் ... சிவக்கொழுந்தை ... த் தலைப்படுவேன் துலைப்படுவான் தருக்கேன்மின்னே ` ( தி .6 ப .27 பா .4). ` பஞ்சேந்திரிய முகரிகாள் ..... நும்மால் ஆட்டுணேன் ஓட்டந் தீங்கலையேன்மின்னே ` ( தி .6 ப .27 பா .9.) என்றலுமாம் . அஞ்சினால் உய்க்கும் வண்ணம் காட்டினாய் :- ` அஞ்செழுத்துமே அம்மையப்பர் தமைக் காட்டுதலால் ....... கேள் ` ( திருக்களிறு .25 ). ` நாடரிய அஞ்செழுத்தின் உள்ளீடு அறிவித்தான் அஞ்செழுத்தை நெஞ்சழுத்தி நேயமயலாக்கி அஞ்செழுத்தை உச்சரிக்கும் கேண்மை உணர்த்தி அதில் உச்சரிப்பு வைச்சிருக்கும் அந்த வழிகாட்டி ` ( நெஞ்சுவிடுதூது . 93 -5 ). உய்க்கும் :- ` சத்தசத்தைச் சாரா தசத்தறியா தங்கணிவை உய்த்த சதசத்தாம் உயிர் ` ( திருவருட்பயன் . 17 ) அஞ்சினாற் பொலிந்த சென்னி :- ` ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சு ஆடுதல் ` (105). ` அஞ்சுகொலாம் அவர் ஆடினதாமே ` ( தி .4 ப .18 பா .5). ` தெளிஆன் அஞ்சு ஆடும் முடியானும் ஐயாறுடை ஐயனே ` ( தி .2 ப .6 பா .5).

பண் :

பாடல் எண் : 6

உறுகயி றூசல் போல வொன்றுவிட் டொன்று பற்றி
மறுகயி றூசல் போல வந்துவந் துலவு நெஞ்சம்
பெறுகயி றூசல் போலப் பிறைபுல்கு சடையாய் பாதத்
தறுகயி றூச லானே னதிகைவீ ரட்ட னீரே.

பொழிப்புரை :

கயிறாகிய ஊஞ்சல் போலப் பிறைச் சந்திரன் அசைந்துகொண்டு தங்கியிருக்கும் சடையினைஉடைய அதிகைப் பெருமானே ! தன் நிலையை விட்டுச் சென்று பிறிதோர் இடத்தைப் பற்றி மீண்டும் தொங்கிய நிலைப்பக்கம் வந்துசேரும் ஊசற்கயிறு போல ஓர் இடத்தை விடுத்து அலைந்து மீண்டும் அவ்விடத்திற்கே வரும் நெஞ்சம் , கயிறற்ற ஊஞ்சலுக்குத் தாய் தரையேயாதல் போல , இப்பொழுது நின் பாதமே இடமாக தங்கி நிற்கும் இயல்பைப்பெற்றுள்ளேன் ஆயினேன் .

குறிப்புரை :

நெஞ்சம் ஒன்று விட்டு ஒன்று பற்றும் . பற்றியதை விட்டு வரும் . சென்று பற்றுதலும் பற்றியதை விட்டு மீண்டு வருதலும் நெஞ்சிற்கியல்பு . ஒன்று விட்டு ஒன்று பற்றி வந்து வந்துலவும் நெஞ்சத்திற்குக் கயிறூசல் ஒப்பு . கயிற்றைமட்டும் ஊசலாகக் கொண்டு ஆடுதல் இன்றும் உண்டு . அதன் வளர்ச்சியான பல்வேறூசலை இங்குக் கொள்ளல் பொருந்தாது . தொங்கிய நிலையின் நில்லாது , அசைந்து , நின்ற இடத்தை விட்டு முன்னும் பின்னும் ஒவ்வோரிடத்தைப் பற்றுகின்ற செயல் எல்லாவூசற்கும் பொதுவாயினும் , இதிற் கயிறூசலைக் குறிப்பதால் , அதற்குரியதாகக் கொள்க . முதன் முறையாக , தன்னிலையை விட்டுச் சென்று பிறிதோரிடத்தைப் பற்றுவது ` உறுகயிறூசல் `. பற்றிய அவ்விடத்தை விட்டு மீண்டு தொங்கிய நிலைப் பக்கம் வருவது மறு கயிறூசல் . அந்நிலையை விட்டு மற்றொரு பக்கம் சென்று பற்றுவதும் அதை விட்டு மீள்வதும் அவ்விரண்டூசலாகவே கொள்ளல்தகும் . தகவே சென்று பற்றல் , விட்டு மீண்டு வரல் , இவ்விரண்டற்கும் இடையில் உலவல் ஆகிய முத்தொழில்கள் ஊசற்குள்ளன . நெஞ்சம் பெறு சடையாய் . கயிறூசல் போலப் பிறைபுல்கு சடையாய் , நெஞ்சம் ஆகிய ஊசல் ஆடிய அடியேன் , அவ்வூசல் அற்று , நின்பாதம் ஆகிய நிலத்தை அடைந்தேன் . கயிறூசல் அற்றவனானேன் என்று கொள்க . ` ஊசல் கயிறு அற்றால் தாய் தரையே ஆம் ` என்னும் சிவஞானபோத வாக்கியத்திற் குறித்தது :- ஊசலைக் கட்டிய கயிறு அற்றால் , ஊசல் விழும் . விழுந்த ஊசற்குத் தரை நிலைக்களம் ஆகும் . கயிறு போல்வது பாசம் . கயிற்றாற் கட்டப்பட்ட ஊசல் போல்வது பாசபந்தமுடைய பசு . கயிறற்ற ஊசல் போல்வது பாசம் அற்ற ஆன்மா . கயிறற்ற ஊசற்கு நிலைக்களமான தரைபோல்வது , பாசம் அற்ற ஆன்மாவிற்கு நிலைக்களமான திருவடி . அதனால் , சிவஞானபோதத்திற் குறித்தது கயிற்றூசல் . ( கயிற்றாற் கட்டப்பட்ட ஊசல் ). இத் திருமுறையிற் குறித்தது கயிறூசல் ( கயிறாகிய ஊசல் ; தாம்பு . ` ஒருவன் ஏறியிருந்து ஆடா நின்ற ஊசல் கயிறு அற்றதாயின் , அவனுக்கு உற்றுழி உதவும் தாய்போல் ஆண்டுத் தாரகம் ஆவது நிலனே அன்றிப் பிறிது இல்லை `. ( சிவஞா . உரை ) என்றதால் கயிறு வேறு அற்ற ஊசல் வேறு ஆதல் விளங்கும் . ` தாப்பிசை ( தாம்பு + இசை ) - ஊசல் ( தாம்பு ) போல் இடை நின்று இருமருங்குஞ் செல்லும் சொல் ` ( நன்னூல் . சூ . 411 ) என்றதில் , இடைநிற்றலும் இருமருங்குஞ் செல்லுதலும் வருதலும் ஊசலுடைமை புலப்படுத்தியதுணர்க . ` தழைக்கயிற்றூசல் ` ` தாழை நெடு வீழூசல் ` ` தாழை வீழூசல் ` ` தாழை வீழ் கயிற்றூசல் ` ( பெருங்கதை ; கலித்தொகை . 131; அகம் . 20) ` மணிக் கயிற்றூசல் ` ` பொன்னூசல் ` ( பெருங்கதை .; தி .8 திருவாசகம் . 327 ) என்பன வேறு ` வல்லவாறு வந்து வந்து அடைய நின்ற அருத்தியார் ` ( தி .4 ப .25 பா .4) என்புழிப்போல்வது ` வந்து வந்துலவும் நெஞ்சம் ` என்க . ` அறு கயிறூசலானேன் .` என்பது ` ஆன முதலில் அதிகம் செலவானான் ` என்பது போல்வது . உறு , மறு , அறு என்னும் அடைமொழிகளை நோக்கிப் பொருள் கொள்ளல் இன்றியமையாதது . அவை பொருளற்ற அடையல்ல . ` ஆசைவன்பாசம் எய்தி அங்குற்றேன் இங்குற்றேனாய் ஊசலாட்டுண்டுவாளா உழந்துநான் உழிதராமே .... ஈசனே உன்றன்பாதம் ஏத்துமாறு அருள் எம்மானே ` ( தி .4 ப .76 பா .8) ` உமையாளொரு பாகனை அருத்தியாற் சென்று கண்டிட வேண்டுமென்று ஒருத்தியார் உளம் ஊசலது ஆடுமே ` ( தி .5 ப .40 பா .5) ` பாசங் கழன்றாற் பசுவுக்கிடம் பதியாம் ஊசல் வடம் கழன்றது ஒவ்வாதே - நேசித்த பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் பாட்டுமக்கோ மற்றைச் சமயமெங்குமாம் .` ( ஒழிவிலோடுக்கம் . விரத்தி விளக்கம் . 4 ) நெஞ்சத்திற்குப் பொருட்சார்பிற் சென்று பற்றலும் , அதை விட்டு மீண்டு உயிர்ச்சார்பில் வந்துலவலும் உண்டு ( தி .4 ப .76 பா .1). ` ஊசல் ஒத்த உளம் ` ( பிரபுலிங்கலீலை ஆரோ கணகதி . 10 ) ` ஊசல் செய் மனம் ` ( ? . இட்டலிங்ககதி .23 ) ` மட்டூர் குழல் மங்கையர் மையல் வலைப் பட்டூசல் படும் பரிசு என்று ஒழிவேன் ` ( கந்தரநுபூதி ). ` எம்முடைய வலைப்பட்டோர் இவ்வாறே அலைவர் என மம்மர் உலகினைத் தெளிக்கும் மாண்பு ` ( கச்சியப்ப முனிவர் அருளிய காஞ்சிப் புராணம் நகரேற்றுப் - 127 ) மடவாராட்டும் மணித் தொட்டிற்குக் கூறினும் , அவராடும் ஊசற்கும் அது பொருந்தும் . கயிறூசல் பலவற்றில் மாறி மாறி ஆடியதாகக் கொண்டுரைத்தலே , ` உறுகயிறூசல் ` ` மறுகயிறூசல் ` என்றதற்குத் தகும் . இன்றேல் , ` மறுகயிறூசல் ` என்றது புலப்படாது . ` ஊசலாட்டும் இவ்வுடலுயிர் ` ( தி .8 திருவா . 41-8.)

பண் :

பாடல் எண் : 7

கழித்திலேன் காம வெந்நோய் காதன்மை யென்னும் பாசம்
ஒழித்திலே னூன்க ணோக்கி யுணர்வெனு மிமைதி றந்து
விழித்திலேன் வெளிறு தோன்ற வினையெனுஞ் சரக்குக் கொண்டேன்
அழித்திலே னயர்த்துப் போனே னதிகைவீ ரட்ட னீரே.

பொழிப்புரை :

அதிகைப் பெருமானே ! என்னிடத்துள்ள ஆசாபாசம் , காமம் என்ற கொடியநோய் நீங்கப்பெற்றிலேனாய் ஆசை என்னும் பற்றினை விடுத்திலேனாய் , உடலுயிர் வாழ்கையையே நோக்குபவனாய் இருத்தலால் , அதற்குக் காரணமாகிய ஆணவ மறைப்பு விலக , விழிக்கும் மெய்யுணர்வாகிய விழி விழிக்கும் நிலையைப் பெற்றிலேன் . அதற்குத் தடையாகிய வினை என்னும் பண்டத்தையும் நிரம்பக் கொண்டுள்ளேன் . அதே வேளை , இவற்றின் விருத்திக்கு ஊக்கும் இழிதகவுடையோர் சார்பை விலக்கிக் கொள்ளவும் மறந்து போனேன் . நான் என்ன செய்வேன் என்பது குறிப்பு .

குறிப்புரை :

காமம் ஆகிய கொடிய நோயைக் கழித்தேனில்லை . அதற்கு அடியாகிய ஆசாபாசத்தை ஒழித்தேனில்லை . பொருட் பற்றுளதேல் . அதனால் எய்தும் நோயும் உடனுறும் அன்றோ ? நோயை ஒழிக்க , அதற்கு அடியான பற்றை ஒழித்தல்வேண்டும் . ` பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம் ; பிறவார் உறுவது பெரும் பேரின்பம் ; பற்றின் வருவது முன்னது ; பின்னது அற்றோர் உறுவது ` ( மணி மேகலை ). தணிகைப்புராணம் நந்தியுபதேசப் . 110 பார்க்க . காமவெந்நோய் கழிந்திடாமைக்கும் காதன்மை என்னும் பாசம் ஒழித்திடாமைக்கும் காரணம் ஊன் கண்ணோக்கமும் உணர்வு எனும் இமை திறந்து விழித்திடாமையும் . ` ஊனக்கண் பாசம் உணராப் பதியை ஞானக் கண்ணினிற் சிந்தைநாடி உராத்துனைத் தேர்த்தெனப் பாசம் ஒருவ ` ( சி . போ . சூ . 9 ) முயலாது , வேம்பு தின்ற புழுப்போல நோக்கிற்றை நோக்கி நிற்கும் அஞ்ஞானம் தோன்றக் கன்மச் சரக்கை இவ்உடற்கலத்தில் ( ஏற்றுக் ) கொண்டேன் . சிவஞானபோதம் 74 ஆவது வெண்பாவுரைக்கண் மாபாடியம் உணர்த்துவதை ஈண்டுணர்க . ஆசிரியர் தகுதிக்குத் தக்கநிலையில் அப்பாசம் தாக்குதலை அறியாது , தகாதன கூறுவர் . ` தழித்திலேன் ..... நோக்கி ` என்றது மாயாமல வாசனையும் , ` உணர்வெனும் ....... விழித்திலேன் ` என்று ஆணவமல வாசனையும் , ` வினை ..... கொண்டேன் என்றது கன்மமலவாசனையும் நீங்காமை குறித்தன . அழித்திலேன் என்றது அம்மூன்றும் மெய்ஞ் ஞானிக்கு ஆகாமை குறித்தது . ` அயர்த்துப் போனேன் ` என்றது ` மறப்பித்து மலங்களின் வீழ்க்கும் சிறப்பிலார் ( அமணர் ) திறத்துச் சேர்வை ` க் குறித்தது . ( தணிகைக் . களவு . 156.)

பண் :

பாடல் எண் : 8

மன்றத்துப் புன்னை போல மரம்படு துயர மெய்தி
ஒன்றினா லுணர மாட்டே னுன்னையுள் வைக்க மாட்டேன்
கன்றிய காலன் வந்து கருக்குழி விழுப்ப தற்கே
அன்றினா னலமந் திட்டே னதிகைவீ ரட்ட னீரே.

பொழிப்புரை :

ஊர்ப் பொதுமன்றத்தில் நிற்கும் புன்னை பலராலும் கல்லெறியப்பட்டும் ஏறி அலைக்கப்பட்டும் சதா வருந்துவதுபோல ஐம்பொறிகளால் சதா அலைக்கப்பட்டும் வருந்துவதன்றி ஒருவகையிலும் உண்மையை உணரமாட்டேன் . அதை உணர்விக்கவல்ல உன்னையும் உளத்தில் நிலையாக வைக்கமாட்டேன் . இந்நிலையில் , சினம்மிக்க எமன் வந்து என்னை மீளவும் பிறப்பில் தள்ளுதற்கு அணுகிக் கொண்டுள்ளான் . அது கண்டு நான் சுழன்று போனேன் அதிகை வீரட்டத்துப் பெருமானே .

குறிப்புரை :

மன்றத்துப்புன்னை - ஊர்ப் பொதுவில் வளர்ந்த புன்னை மரத்தை . மரம்படுதுயரம் - அப்புன்னையும் பிறவும் ஆகிய மரங்கள் அடைகின்ற துயரம் . சிலப்பதிகாரம் . ` குற்றம் நீங்கிய யாழ் ` ( கானல்வரி . 1:- 4 ) ` ஆகவ வாத பய சாயை என்பன `; என்னை ? சிந்தாமணி (720) யிலும் ` நோய் நான்கு நீங்கி ` என்றார் . ` நான்காவன வெயிலும் காற்றும் நீரும் நிழலும் மிகுதல் ` ( நச் . உரை ). துன்பம் :- காரணம் ; பிராரத்தவினை . துயரம் - காரியம் ; வினைப்பயன் . ` துயரமே ஏற்றமாகத் துன்பக்கோலதனைப்பற்றி , ( தி .4 ப .52 பா .7; ப .25 பா .5,6) பாட்டுக் குறிப்புடன் உணர்க . ஒன்றினால் - ` ஒன்றவே உணர்திராகில் ஓங்காரத் தொருவன் ஆகும் ` ( தி .4 ப .25 பா .9). ஓர் உபாயத்தாலும் . ஒன்றியிருந்து நினைத்தலால் , ` ஒன்றுங்குறி ` ( திருக்களிறு . 10 ). யால் . ஓர் உபாயத்தாலும் என்புழி உம்மை தொக்கதாகக் கொள்க . உன்னை உள்வைக்கமாட்டேன் :- ` அவனே தானே ஆகிய அந்நெறி ஏகனாகி இறைபணி நிற்க ` மாட்டேன் . கன்றிய - சினந்த . கருக்குழி - கரு ( ப்பை ) ஆகிய குழி . விழுப்பது - விழச்செய்வது . ` வெம்மை நமன்தமர் மிக்குவிரவி விழுப்பதன்முன் இம்மை உன்தாள் என் நெஞ்சத்து எழுதிவை ` ( தி .4 ப .96 பா .6). காலன் வந்து அன்றினான் (- பகைத்தான் ).

பண் :

பாடல் எண் : 9

பிணிவிடா வாக்கை பெற்றேன் பெற்றமொன் றேறு வானே
பணிவிடா விடும்பை யென்னும் பாசனத் தழுந்து கின்றேன்
துணிவிலேன் றூய னல்னேன் றூமலர்ப் பாதங் காண்பான்
அணியனா யறிய மாட்டே னதிகைவீ ரட்ட னீரே.

பொழிப்புரை :

காளையை ஊர்பவனே ! அதிகைப்பெருமானே ! நோய்கள் விடுத்து நீங்காத இம்மனித உடலைப் பெற்றிருக்கும் அடியேன் , செயற்படாதொழியாத துன்பம் நல்கும் நல்வினை தீவினையாகிய சுற்றத் தொடர்பை நெருக்கமாகக் கொண்டு , அவற்றை அடியோடு நீக்குவதற்குத் தேவையான தூய்மையும் மனஉறுதியும் இல்லாதேனாய் , அத்தூய்மை துணிவு என்பனவற்றை நல்கும் உன்னுடைய தூய மலர் போன்ற திருவடிகளைக் காணும் வகையில் உன்னை அறியமாட்டாதவனாய் உள்ளேன் .

குறிப்புரை :

பிணிவிடா ஆக்கை - பிணியானவை விடாத உடலை . பெற்றம் - விடை . பணி - கருமம் . இடும்பை - இருள்சேர் இருவினையாலும் எய்தும் துன்பம் . ( தணிகைப்புராணம் . நந்தியுபதேசம் . 110 -116 ). ` வந்த இருவினைக்கும் மாமருந்து ` ( திருவள்ளுவமாலை ). பாசனம் - சுற்றம் . ` தீவினைச் சுற்றம் என்னும் பொருளுளே அழுந்தி நாளும் போவதோர் நெறியுங் காணேன் ` ( தி .4 ப .26 பா .4). பண்ணிவிடாத இடும்பை எனலுமாம் . ` வினைப்பற்று `. உழவாரத்திருப்பணி ( செய்தலு ) க்கு விடாத இடும்பை எனலும் பொருந்தும் . பாம்பைப் போற் பற்றிவிடாத எனலுமாம் . துணிவு - தெளிவு . தூயன் - கட்டு நீங்கினேன் . ` தூமலர்ப் பாதங்காண்பான் ` ( ? 1). அணியன் ஆய் - அணிமையில் உள்ளேன் ஆகி . அறியமாட்டேன் - ` உணரமாட்டேன் ` ( ? 8).

பண் :

பாடல் எண் : 10

திருவினாள் கொழுந னாருந் திசைமுக முடைய கோவும்
இருவரு மெழுந்தும் வீழ்ந்து மிணையடி காண மாட்டா
ஒருவனே யெம்பி ரானே யுன்றிருப் பாதங் காண்பான்
அருவனே யருள வேண்டு மதிகைவீ ரட்ட னீரே.

பொழிப்புரை :

அதிகை வீரட்டனே ! வடிவம் புலப்படாது இருப்பவனே ! திருமகள் கேள்வனாய திருமாலும் , நான்கு திசைகளிலும் நான்கு முகங்களை உடைய பிரமனும் ஆகிய இருவரும் கீழ் நோக்கித் தோண்டியும் மேல்நோக்கிப் பறந்தும் , திருவடிகளையோ உன் உச்சியையோ காண இயலாத ஒப்பற்ற பெருமானாகிய உன் திருப்பாதங்களை அடியேன் காணுமாறு அருள் செய்யவேண்டும் .

குறிப்புரை :

திரு - செல்வம் . திருவினாள் - செல்வி . கொழுநன் - கொளுநன் , ` கொண்டவன் ` ` கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி ` ( திரிகடுகம் . 96 ). திசை - நான்கு என்னும் குறிப்பு . திசைக் கொன்றாக முகம் நான்குடைய கோ . எழுந்தும் - அன்னப் புள்ளுரு வாய் வானோக்கி எழுந்து பறந்தும் . வீழ்ந்தும் - பன்றியுருவாய் நிலத்தை அகழ்ந்துகொண்டே சென்று விழுந்தும் . இணை - இரண்டு . மாட்டாமை இருவரது . ஒருவன் - ` தான்தனியன் ` ( தி .8 திருவாசகம் . 257). ` ஒப்பில் ஒருத்தனே ` ( ? .65). ` ஒருவனே ` ( ? .72 ). ` அருவனே ` ( சித்தியார் . 58.75 ).
சிற்பி