திருவதிகைவீரட்டானம்


பண் :

பாடல் எண் : 1

மடக்கினார் புலியின் றோலை மாமணி நாகங் கச்சா
முடக்கினார் முகிழ்வெண் டிங்கள் மொய்சடைக் கற்றை தன்மேல்
தொடக்கினார் தொண்டைச் செவ்வாய்த் துடியிடைப் பரவை யல்குல்
அடக்கினார் கெடில வேலி யதிகை வீரட்ட னாரே.

பொழிப்புரை :

கெடில நதியை ஒருபுறம் எல்லையாக உடைய அதிகை வீரட்டனார் புலியின்தோலை உடையாக உடம்பைச்சுற்றி இடையில் உடுத்துப் பெரிய முடிமணியை உடைய பாம்பினை அதன் மீது கச்சாக இறுக்கிக் கட்டிப் பிறையைச் செறிந்த சடைமீது செருகித் தொண்டைக்கனி போன்ற சிவந்த வாயையும் துடி போன்ற இடையையும் கடல் போன்ற அல்குலையும் உடைய பார்வதியைத் தம் உடம்பின் ஒருபாகமாக அடக்கியவர் ஆவர் .

குறிப்புரை :

புலித்தோலை உடுத்தார் :- ` புலியதளே யுடையாடை போற்றினானை ` ( தி .6 ப .50 பா .1). ` துணி புலித்தோலினையாடையுடையாக் கொண்டார் ` ( தி .6 ப .96 பா .7). மாமணிநாகம் கச்சா முடக்கினார் :- சடைமேல் திங்கள் தொடக்குண்ணச் செய்தார் . தொண்டை - கொவ்வைப் பழம் . ஆதொண்டங்கனி என்றலும் உண்டு . தொண்டைச் ..... அடக்கினார் :- உவமைத்தொகை மூன்றும் ஒரு சொல் நீர்மையுற்று நின்ற நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித் தொகை . ` பெருந்தோட் சிறுநுசுப்பிற் பேரமர்க்கட் பேதை ` ` பெருந்தோட்பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி ` என்பன காட்டி மூவகையாகக் கொள்ளலாம் என்ற சேனாவரையருரையை நோக்குக . ( தொல் . சொல் . 26) துடியிடைப் பரவையல்குல் :-( தி .4 ப .24 பா .10; ப .25 பா .6). அடக்குதல் :- இடப்பாற்கொண்டிருத்தல் . கெடில நதியே வேலி .

பண் :

பாடல் எண் : 2

சூடினார் கங்கை யாளைச் சூடிய துழனி கேட்டங்
கூடினா ணங்கை யாளு மூடலை யொழிக்க வேண்டிப்
பாடினார் சாம வேதம் பாடிய பாணி யாலே
ஆடினார் கெடில வேலி யதிகைவீ ரட்ட னாரே

பொழிப்புரை :

கங்கையாளை எம் பெருமான் சடையில் சூடினாராக அவ்வோசை கேட்டுப் பார்வதி ஊடினாளாக அவ்வூடலைப் போக்க வேண்டிக் கெடிலவேலி அதிகை வீரட்டனாராகிய பெருமானார் சாமவேதம் பாடியவராய் அப்பாடலின் தாளத்திற்கு ஏற்ப ஆடியவராவர் .

குறிப்புரை :

திருவதிகை வீரட்டானேசுவரர் தம் தலைமேற் கங்கையைச் சூடினார் . சூடிய ஆரவாரம் கேட்டதோ இல்லையோ இடப்பங்கின் நாயகி ஊடினாள் . அவ்வூடலைத் தீர்க்கலுற்றுச் சாம வேத கீதம்பாடினார் . பாடிய பாணிக்குத் தக ஆடினார் . ( அப்பாடல் ஆடல்களால் திரிபுரசுந்தரியார் திருவுள்ளம் அவ்வூடலின் திரிபுற்றதோ உற்றிலதோ யாரறிவார் ?) உலகுயிர்கள் கூடியுவத்தல் கொண்டு ஊடிய தகன்றதாகத் துணியலாம் . போகியாயிருந்து உயிர்க்குப் போகத்தைப் புரிதலும் இமவான் பெற்ற பெண்ணினைப் புணர்ந்து உயிர்க்குப் பேரின்பம் அளித்தலும் உடையன் அம்முதல்வன் . இவ்வுலக மெல்லாம் சக்தியும் சிவமும் ஆயதன்மை . இவ்வாழ்க்கையெல்லாம் அவளால் வந்த ஆக்கம் ( சித்தியார் ). ` எம்பெருமான் ஒருவாது உமை மாதொடு இருத்தலினால் உறுகாதலின் ஆணொடு பெண்கள் பிணைந்து இருநீர்ப்புவியாதிய எவ்வுலகும் இன்புற்று உயிர் ஈண்டியது . ( தணிகைப் . நாரதனருள்பெறு . 70 ).

பண் :

பாடல் எண் : 3

கொம்பினார் குழைத்த வேனற் கோமகன் கோல நீர்மை
நம்பினார் காண லாகா வகையதோர் நடலை செய்தார்
வெம்பினார் மதில்கண் மூன்றும் வில்லிடை யெரித்து வீழ்த்த
அம்பினார் கெடில வேலி யதிகைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

மரக்கிளைகள் தளிர்த்த வேனிற் காலத்திற்கு உரிய அரசனாகிய மன்மதனை விடுத்த மால் , அயன் , இந்திரன் முதலோர் அவன் உருவினை மீண்டும் காண முடியாத வகையில் அவன் உடலைத் தீவிழித்து எரித்து வருத்தினார் . அச்செயல் செய்த கெடில வேலி அதிகை வீரட்டனார் பகைவர்களுடைய மும்மதில்களையும் வில்லிடைக்கோத்து எரித்து அழித்த அம்பினை உடையவராவர் .

குறிப்புரை :

வெம்பினார் - சினவெப்பம் உற்ற திரிபுரத்தசுரர் . வில் - மேருவில் . வீழ்த்த - விழச்செய்த . அம்பினார் :- ` கடி மதில்கள் மூன்றினையும் பொடியா எய்த அம்பனே ` ( தி .6 ப .44 பா .5) ` மாருதமால் எரி மூன்றும் வாய் அம்பீர்க்காம் சரத்தான் ` ( தி .6 ப .50 பா .9). அதிகை வீரட்டனார் நடலை செய்தார் என்று ( முன்பின்னாக ) இயைத்துப் பொருள்கொள்க . ` கொம்பினார் ` ` நம்பினார் ` இரண்டும் இரதியைக் குறித்தன என்று கொள்வாரும் உளர் . கொம்பு :- ஊதும் இசைக் கருவியுமாம் . கொம்பு கொம்பினார் எனப்பட்டது ; தென்றல் தென்றலார் என்பதுபோல . கொம்புகள் தளிர்த்த வேனிற்காலம் . குழைத்தல் - தளிர்த்தல் . சூடாமணி நிகண்டு 4:- 47. கொம்பினார் - பூங்கொம்பு போன்ற மகளிர் . கொம்பினார் குழை (- இளகு ) தலைச் செய்த கோமகன் . வேனற்கோ - வேனிற்றலைவன் . கோமகன் - கோவாகிய மகன் , கொம்பினாற் குழைத்தான் - கொம்பு நல்வேனிலவனைக் குழைய முறுவல் செய்தான் சிவன் . ` வேனில் வேள் `. கோலம் - அழகு . நீர்மை - இயல்பு , தன்மை . நம்பினார் - விரும்பு விடுத்த மாலயன் முதலோர் . ( மன்மதனைக் ) காணலாகாத வகையதோர் நடலை செய்தது - தீவிழியால் எரித்தது . நடலை - துன்பம் . ` நரகத்தில் இடர்ப் படோம் நடலையில்லோம் ` ( தி .6 ப .98 பா .1). காமத்தார்க்கு எட்டாதவர் முதல்வர் . பற்று அறாதவராற் காணலாகாதவர் முதல்வர் என்றும் பொருத்தலாம் . ` வானவர்க்கும் காண்பரிதாகி நின்றதுள்ளல் ` ( தி .4 ப .42 பா .6) ` காண்டற்கரிய கடவுள் ` ` கருதுவார்க்கு ஆற்ற எளியான் `.

பண் :

பாடல் எண் : 4

மறிபடக் கிடந்த கையர் வளரிள மங்கை பாகம்
செறிபடக் கிடந்த செக்கர்ச் செழுமதிக் கொழுந்து சூடிப்
பொறிபடக் கிடந்த நாகம் புகையுமிழ்ந் தழல வீக்கிக்
கிறிபட நடப்பர் போலுங் கெடிலவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

கெடில வீரட்டனார் கையில் மான் குட்டியை ஏந்தி , அழகு வளரும் இளையளாகிய பார்வதி பாகராய்ச் செறிந்த செஞ்சடையில் பிறையைச் சூடி , புள்ளிகளை உடைய பாம்பு புகையைக் கக்கி வெகுளுமாறு அதனை இடையில் இறுகக்கட்டி , அடியார்களுடைய உள்ளத்திலே பொய் உணர்வு அழியும்படியாக உலவி வருகிறார் .

குறிப்புரை :

மறி - மான்கன்று . அம்பிகையின் இளமை என்றும் குன்றாது வளர்வது . ` எழுபெரும் புவனம் முழுதொருங்குதவும் இறைவி என்று மறை கையெடுத்தார்க்கவும் இடைநுடங்குமட நடையிளங் குமரி என இருந்த கனகள்வி ` ( முத்துக்குமாரசாமிப் பிள்ளைத்தமிழ் . 4 ) ` அலைப்பாய் புனற்றெண் கடல் வைப்பும் அகிலாண்டமும்பன் முறையீன்றும் அழகுமுதிர முதிராஎன் அம்மை அமுதுசூற் கொண்ட முலைப்பால் நாறுஞ் செங்கனிவாய் முத்தம் தருக முத்தமே ` ( ? .45 ). ` உலகமோரேழும் பல முறை பயந்தும் முதிரா இள முலை முற்றிழை மடந்தை ` ( காசிக் கலம்பகம் . 38 ). ` விருத்தாம்பிகை ` என்றது ஒரு வரலாறு பற்றியது . செறி - செறிவு . செக்கர் - செவ்வானம் . மதிக்கொழுந்து - பிறை . பொறி - புள்ளி . கிறி - பொய் . தடத்தம் சொரூபத்தை நோக்கப் பொய்யாகும் .

பண் :

பாடல் எண் : 5

நரிவரால் கவ்வச் சென்று நற்றசை யிழந்த தொத்த
தெரிவரான் மால்கொள் சிந்தை தீர்ப்பதோர் சிந்தை செய்வார்
வரிவரா லுகளுந் தெண்ணீர்க் கழனிசூழ் பழன வேலி
அரிவரால் வயல்கள் சூழ்ந்த வதிகைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

கோடுகளை உடைய வரால் மீன்கள் தாவும் தெளிந்த நீரை உடைய வயல்கள் சூழ்ந்த மருத நிலத்தை நாற்புறமும் எல்லையாகக் கொண்டு நெல்லரியும் உழவரால் சூழப்பட்ட வயல்களை உடைத்தாய அதிகையின் வீரட்டனார் , நரி வரால் மீனைக் கவரச் சென்று தன் வாயில் முன்பு பற்றி இருந்த தசைத் துண்டத்தையும் இழந்தது போல் , கிட்டாத ஒன்றை நினைத்துக் கிட்டியதனையும் இழக்கும் இயல்பினதாகிய மனித வாழ்க்கையை ஆராயும் சான்றோர்களுடைய உள்ளத்தில் ஏற்படும் மயக்கத்தை நீக்கும் உபாயத்தைத் திருவுளம் கொண்டு அருளுவார் .

குறிப்புரை :

நரி நீரைக்கடப்புழிக்கண்ட வராலைக் கவ்வச்சென்று , தன் வாயிலிருந்த நல்ல தசையை ( ஊனை ) இழந்ததைப் போன்றவற்றைத் தெரிவர் (- ஆராய்ந்துணர்வோர் ). தெரிவாருடைய சிந்தை . மால் கொள் சிந்தை தீர்ப்பது - மயக்கம் கொண்ட சிந்தனையைப் போக்குவதொரு சிந்தை செய்வார் வீரட்டனார் . சிவபெருமான் உயிர்க்குள் இருந்து அருள்கின்றதை உணர்த்திற்று . ` அகத்துறு நோய்க்கு உள்ளினர் அன்றி அதனைச் சகத்தவரும் காண்பரோதான் ` ( திருவருட்பயன் ) ` குருவான் ஞானநிட்டை அடைந்து நாதன்தாள் அடைவர் `, ` ஆரியனாம் ஆசான் வந்து அருளால் தோன்ற அடிஞானம் ஆன்மாவில் தோன்றும் ; தோன்றத் தூரியனாம் சிவன் தோன்றும் .` ` எரி பெருக்குவர் அவ்வெரி யீசன துருவருக்கம தாவ துணர்கிலார் அரியயற் கரியானை அயர்த்துப் போய் நரிவிருத்தமதாகுவர் நாடரே .` ( தி .5 ப . 100 பா . 7) ஒத்த றெரிவர் - ( ஒத்தல்தெரிவர் ) என்றிருந்து . எழுதினோராலே லகரம் நகரலுற்றதாகக் கொண்டுரைத்தல் பொருந்தும் . வரால் கவ்வல் :- பாசப்பற்று . நற்றசை :- உள்ளுயிர்க் குயிராய்த் திகழும் சிவம் . இழந்தது ஒத்தலைத் தெரிவாரது சிந்தை , மால் கொள் சிந்தை . அதைத் தீர்ப்பதோர் சிந்தை செய்வார் வீரட்டனார் . அரிவரால் - அரிபவரால் . அரிபவர்களோடு என்க . ஆல் உருபு உடனிகழ்ச்சிப் பொருட்டு . அது ` தூங்குகையா னோங்கு நடைய ` என்புழிப்போல்வது .

பண் :

பாடல் எண் : 6

புள்ளலைத் துண்ட வோட்டி லுண்டுபோய்ப் பலாசங் கொம்பின்
சுள்ளலைச் சுடலை வெண்ணீ றணிந்தவர் மணிவெள் ளேற்றுத்
துள்ளலைப் பாகன் றன்னைத் தொடர்ந்திங்கே கிடக்கின் றேனை
அள்ளலைக் கடப்பித் தாளு மதிகைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

புலால் நாற்றத்தால் நெருங்கிவரும் பருந்துகளை விரட்டி மண்டையோட்டிற் பிச்சை எடுத்து உண்டு சென்று , வெப்பத்தாற் பலாசமரங்களின் சிறுகிளைகள் பட்டுப் போகும் சுடுகாட்டின் வெள்ளிய சாம்பலைப் பூசியவராய் , அழகிய வெள்ளிய காளைமீது துள்ளி ஏறி அதனைச் செலுத்துபவராய தம்மை , இவ் வுலகிலே பல காலமாகத் தொடர்ந்து பற்றிக் கிடக்கும் அடியேனைப் பிறவிப் பிணியாகிய சேற்றைத் தாண்டச்செய்து அடிமை கொள்பவராய் உள்ளவர் அதிகை வீரட்டனாரே .

குறிப்புரை :

கழுகு முதலிய புட்கள் அலைத்து உண்ட ஓடு . பிரமகபாலம் . தன் பசியை நீக்கிக்கொள்ள அன்னப் பறவையை அலைத்து அதன்மேல் ஏறிச் செலுத்தி உண்ட வாய் கொண்ட தலைப் பகுதியாகிய கபாலம் என வலிந்துரைத்தாருமுளர் . ஓட்டில் உண்டவர் வீரட்டனார் . பலாசம் - முள் முருக்கமரம் . சுள்ளல் - சுள்ளி . மணி ஏறு . வெள்ளேறு . ஏற்றுத்துள்ளல் . மணி , அழகும் ஏற்றின் கழுத்திற் கட்டிய மணியும் ஆம் . ` நரை வெள்ளே றொன்றுடையான் ` ஏற்றின்மேல் துள்ளி ஏறும் பெருமானைத் துள்ளல் என்றார் . ` உட்புண்டரிகத்திருந்த வள்ளலை வானவர்க்கும் காண்பரிதாகி நின்ற துள்ளலைத் துருத்தியானைத் தொண்டனேன் கண்டவாறே ` ( தி .4 ப .42 பா .6) என்று பின்னரும் இறைவனைத் ` துள்ளல் ` என்றதுணர்க . துள்ளி ஏறுவது பற்றித் துள்ளல் . செலுத்துதல் பற்றிப் பாகன் . பாகன்றன்னை :- ` வீரட்டனார் ` ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவி நோக்கிய ஒருமை . அள்ளல் :- அளறு . ( நரகம் .) ` அள்ளலைக் கடக்க வேண்டில் அரனையே நினைமின் நீர்கள் ` ( ? 6) ` அள்ளற் பரப்பின் இனைவோரும் ..... இமையாரும் .... மானிடாதி ..... உயிரும் ` ` அள்ளல் அழுந்தும் பாதகத்தோர் ` ( தணிகை . அகத்தியனருள் . 296. 334 ) ` ஊன் உண்ண அண்ணாத்தல் செய்யாது அளறு ` ( குறள் ).

பண் :

பாடல் எண் : 7

நீறிட்ட நுதலர் வேலை நீலஞ்சேர் கண்டர் மாதர்
கூறிட்ட மெய்ய ராகிக் கூறினா ராறு நான்கும்
கீறிட்ட திங்கள் சூடிக் கிளர்தரு சடையி னுள்ளால்
ஆறிட்டு முடிப்பர் போலு மதிகைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

அதிகை வீரட்டனார் நெற்றியில் நீறுபூசி , நீல கண்டராய் , பார்வதிபாகராய் , நான்குவேதங்களும் ஆறு சாத்திரங்களும் உரைப்பவராய் , பிறையைச்சூடி , மேல்நோக்கி உயரும் சடையிலே கங்கையை அடக்கிச் சடையை முடிப்பவர் ஆவார் .

குறிப்புரை :

திருநீறு இட்ட நெற்றியர் . பாற்கடலினது நீலநிற நஞ்சடைந்த கண்டத்தர் . மாதியலும் பாதியராகி . அங்கம் ஆறும் அருமறை நான்கும் கூறியவர் . கீறியிட்ட பிளவு போன்ற பிறையைச் சூடிக் கிளரும் சடைக்குள்ளே கங்கையாற்றையிட்டு ( அச்சடையை ) முடிப்பர் அதிகை வீரட்டனார் .

பண் :

பாடல் எண் : 8

காணிலார் கருத்தில் வாரார் திருத்தலார் பொருத்த லாகார்
ஏணிலா ரிறப்பு மில்லார் பிறப்பிலார் துறக்க லாகார்
நாணிலா ரைவ ரோடு மிட்டெனை விரவி வைத்தார்
ஆணலார் பெண்ணு மல்லா ரதிகைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

ஆணும் பெண்ணும் அல்லாதாராகிய அதிகை வீரட்டனார் பிறர் காட்சிக்கு அரியராய் , கருத்திற்கும் எட்டாதவராய் ; திருத்துவதற்கு இயலாதவராய் , தம்மோடு பொருந்தச் செய்வதற்கும் இயலாதவராய் , இந்நிலை என்று குறிப்பிடத்தக்க எந்த நிலையும் இல்லாதவராய் , இறப்பும் பிறப்பும் அற்றவராய் , இவர் நமக்கு உற்றவர் அல்லர் என்று துறக்க முடியாதவராய் , உலகியலுக்கு மாறுபட்ட தம் நிலைகளைக் குறித்துச் சிறிதும் நாணுதல் இல்லாதவராய் , ஐம்பொறிகளோடு கலந்து தடுமாறுமாறு அடியேனை இவ்வுலகில் தங்க வைத்துள்ளார் .

குறிப்புரை :

காணிலார் - காண்டல் இல்லாதவர் . காட்சிக்கு அரியர் . ` நோக்கரிய நோக்கு ` கருத்தில் வாரார் - கருத்திற்கு எட்டாதவர் . ` மாற்றம் மனம்கழிய நின்ற மறையோன் ` ( தி .8 திருவாசகம் ). ` சுருதியே .... யார் காண்பார் ` ( தாயுமானவர் , ஆசையெனும் . 18 ). திருத்தலார் - திருத்துவதற்கு இயலாதவர் . பொருத்தல் ஆகார் - பொருந்தச் செய்தற்கும் ஒல்லாதவர் . ஏண் இலார் - இந்நிலை என எந்நிலையும் இல்லாதவர் . ` இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்று எழுதிக்காட்டொணாதே ` ` இங்ஙன் இருந்தது என்று எவ்வண்ணம் சொல்லுகேன் ` ( திருவுந்தியார் . 3 ) ஏண் - நிலை . ` உற்ற ஆக்கையின் உறு பொருள் நறுமலர் எழுதரு நாற்றம்போல் பற்றலாவதோர் நிலையிலாப் பரம்பொருள் `. திருவாசகம் ( கந்த . மார்க்கண்டேயப் . 65 ). இறப்பும் பிறப்பும் இலார் :- என்றும் ( இழவார் ) உள்ளார் . ` போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியன் ` ( தி .8 திருவாசகம் ). துறக்கல் ஆகார் - உயிர்க்குயிராயிருத்தலால் விட்டு ஒழிக்கப்படார் . ` ஆணல்லை ` ( தி .6 ப .45 பா .9). நாண் - நாணம் . ஐவர் - ( தி .4 ப .26 பா 2; ப .69 பா .4 ப .77 பா .5)

பண் :

பாடல் எண் : 9

தீர்த்தமா மலையை நோக்கிச் செருவலி யரக்கன் சென்று
பேர்த்தலும் பேதை யஞ்சப் பெருவிர லதனை யூன்றிச்
சீர்த்தமா முடிகள் பத்துஞ் சிதறுவித் தவனை யன்று
ஆர்த்தவா யலற வைத்தா ரதிகைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

அதிகை வீரட்டனார் , தூயதான கயிலைமலையை நோக்கி வந்து போரிடும் வலிமையை உடைய இராவணன் அதனைப் பெயர்த்த அளவில் பார்வதி அஞ்சத் தம் கால்விரலை அழுத்தி ஊன்றிச் சிறப்புடைய அவனுடைய தலைகள் பத்தும் சிதறச் செய்து , ஒரு கணத்தில் , மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்த அவன் வாய்கள் துயரத்தால் கதறுமாறு செய்தவராவர் .

குறிப்புரை :

தீர்த்தம் - திருவருள் உருவமுடைய தூய நீர் . மலை - கயிலை . செரு - போர் . பேதை - உமாதேவியார் . சீர்த்த - கனத்த . சிதறுவித்தல் - சிதறச்செய்தல் . ஆர்த்த - கதறிய . ஒவ்வொரு தலைக்கும் ஒவ்வொன்றாகப் பொருத்திய . அலற - கதற , அழ ஆராவாரஞ்செய்ய .
சிற்பி