திருச்செம்பொன்பள்ளி


பண் :

பாடல் எண் : 1

ஊனினுள் ளுயிரை வாட்டி உணர்வினார்க் கெளிய ராகி
வானினுள் வான வர்க்கும் அறியலா காத வஞ்சர்
நானெனிற் றானே யென்னும் ஞானத்தார் பத்தர் நெஞ்சுள்
தேனுமின் னமுது மானார் திருச்செம்பொன் பள்ளி யாரே.

பொழிப்புரை :

திருச்செம்பொன்பள்ளி எம்பெருமான் இவ்வுடம்பினுள் உள்ள உயிரைத் தவம் விரதம் முதலியவற்றால் வாட்டித் தூய்மையுடையதாக்கி மெய்யுணர்வு பெற்ற பெரியவர்களுக்கு எளியராய் , உயர்ந்த உலகிலுள்ள தேவர்களும் அறியமுடியாத கள்ளத்தை உடையவராய் , சிவபோதத்தினராய் இருக்கும் சிவஞானிகளுக்கு அமுதமும் , சிவனடியார்களின் நெஞ்சில் தேனும்போல இனிப்பவராய் உள்ளார் .

குறிப்புரை :

ஊன் - உடம்பு . வாட்டி - வாடச்செய்து . தவம் விரதம் முதலியவற்றால் வாட்டுதல் . மனம் முதலிய அந்தக் கரணங்கள் ஐம்பொறிவழி போகாது நின்று வினை மாசு தீர்ந்து தூயவாதற் பொருட்டுக் காக்கப்படும் விரதங்களால் உண்டி சுருக்கலும் கோடைக் கண் வெயினிலை நிற்றலும் மாரியினும் பனியினும் நீர்நிலை நிற்றலும் முதலிய தவச் செயல்கள் ஊனின் உள்ளுயிரை வாட்டுவன . வாட்டினாற்றான் ஒன்றியிருந்து உணரும் நிலை எய்தும் . அவ்வுணர் வினார்க்கே திருச்செம்பொன் பள்ளியார் எளியர் . வானிலேயுள்ள வானவர்க்கும் பேதமாக வைத்துணரலாகாத அன்புடையவர் . சீவபோதம் முளைத்தால் சிவபோதம் வேறு முதலாயிருக்கும் என்றுணர்ந்து சிவபோதத்தினராயிருக்கும் சிவஞானத்தார் , சிவபத்தர் உள்ளத்துள் இனிய தேனும் இனிய அமுதும் போல் இனிப்பவர் . எளிதிலுறும் தேன் அரிதிற் கடைந்தெடுக்கும் அமுது என்று கொண்டு அவ்விருவர்க்கும் நிரல் நிறையாக்கிக் கூறுதலும் ஏற்கும் .

பண் :

பாடல் எண் : 2

நொய்யவர் விழுமி யாரு நூலினுண் ணெறியைக் காட்டும்
மெய்யவர் பொய்யு மில்லார் உடலெனு மிடிஞ்சி றன்னில்
நெய்யமர் திரியு மாகி நெஞ்சத்துள் விளக்கு மாகிச்
செய்யவர் கரிய கண்டர் திருச்செம்பொன் பள்ளி யாரே.

பொழிப்புரை :

நீலகண்டராய திருச்செம்பொன்பள்ளியார் ஞானவடிவினர் ஆதலின் நொய்யராய் , சீர்மை உடையவராய் , வேதநெறியைக் காட்டும் உண்மை வடிவினராய் , பொய்யிலியாய் , உடல் என்னும் ஓட்டாஞ் சில்லியிலே நெய்யில் தோய்த்த திரியாகவும் நெஞ்சில் ஒளி தருகின்ற விளக்காகவும் உள்ள செந்நிறத்தவராவர் .

குறிப்புரை :

நொய்மையுடையவர் . நொய்மை x திண்மை . விழுமியார் - சீர்மை ( நன்மை ) உடையவர் . ` விழுமியார்கள் நின் கழல் பாடலால வாயிலாய் ` ( தி .3) நூல் - வேதாகமங்கள் . நுண்ணெறி - நுண்பொருள் வழி . பொருளின் நுட்பம் நூலின்மேல் ஏற்றப்பட்டது . மெய்யர் - குருவாகுந் திருமேனி கொண்டருள்பவர் . நூலின் நுண்ணெறியைக் காட்டும் மெய் குருவின் திருமேனியேயாகும் . ` ஆரணம் ஆகமங்கள் அருளினால் உருவுகொண்டு காரணன் அருளான் ஆகில் கதிப்பவர் இல்லை ` ( சித்தியார் ) பொய் :- பசுஞானம் , பாசஞானம் , பாசம் . பொய்யும் இல்லார் :- ` மெய்ப்பொருள் .` இடிஞ்சில் - விளக்குத்தகளி . ` நெய்விட்டிலாத இடிஞ்சில் ` ( தி .10 திருமந்திரம் 503) உடல் எனும் இடிஞ்சிலில் நெய் அமர் திரியாயும் மதிப்பவர் மனமண விளக்காயும் ஒளிர்கின்ற செவ்வண்ணத்தர் . இடிந்த + இல் = இடிந்தவில் . அதன் மரூஉ ` இடிஞ்சில் ` என்பது . குற்றிற்சுவர் என்றது ` குட்டிச்சுவர் ` என மருவிற்று . குறு + இல் = குற்றில் . ` இடுஞ்சில் ` ( நெய் இடும் ஓட்டாஞ்சில்லி ) ` இடிஞ்சில் ` என மருவிற்று . இரண்டும் வெவ்வேறு .

பண் :

பாடல் எண் : 3

வெள்ளியர் கரியர் செய்யர் விண்ணவ ரவர்கள் நெஞ்சுள்
ஒள்ளிய ரூழி யூழி யுலகம தேத்த நின்ற
பள்ளியர் நெஞ்சத் துள்ளார் பஞ்சமம் பாடி யாடும்
தெள்ளியார் கள்ளந் தீர்ப்பார் திருச்செம்பொன் பள்ளி யாரே.

பொழிப்புரை :

திருச்செம்பொன் பள்ளியார் வெண்மை , செம்மை , கருமை என்ற நிறத்தவராய் , தேவர்கள் உள்ளத்திலே ஒளி தருபவராய் , ஊழிதோறும் உலகங்கள் துதிக்கும் படியான பாற்கடலில் பள்ளி கொண்ட திருமாலுடைய நெஞ்சத்தில் உள்ளவராய் , பஞ்சமம் என்ற பண்ணினைப் பாடி ஆடும் ஞானிகளுடைய உள்ளிருளைப் போக்குபவராய் உள்ளார் .

குறிப்புரை :

வெள்ளியர் - வெண்ணிறத்தர் . கரியர் - கருநிறத்தர் . செய்யர் - செந்நிறத்தர் . ( கற்குடி .2 ) விண்ணவர்கள் நெஞ்சில் ஒளிர்பவர் . ஒண்மை - ஒளி . ஊழி ஊழி உலகமது ஏத்தநின்ற பள்ளியர் :- ஊழிதொறும் உலகம் தொழநின்ற பாற்கடற் பள்ளியில் அறிதுயில் புரியும் திருமாலினுடைய ( நெஞ்சில் உள்ளவர் . பஞ்சமம் - பண்சமம் . பஞ்சம சுருதி பற்றியது ) ஒரு பண் , தெள்ளியார் - ஞானிகளது . கள்ளம் - உள்ளிருள் . ( கருவுளம் - கர்புளம் - கருளம் - கர்ளம் - கள்ளம் ) வெள்உளம் வெள்ளம் . ` கள்ளரோ புகுந்தீர் என்னக் கலந்து தான் நோக்கிநக்கு வெள்ளரோம் என்று நக்கார் விளங்கிளம் பிறையனாரே ` ( தி .4 ப .75 பா .9).

பண் :

பாடல் எண் : 4

தந்தையுந் தாயு மாகித் தானவன் ஞான மூர்த்தி
முந்திய தேவர் கூடி முறைமுறை யிருக்குச் சொல்லி
எந்தைநீ சரண மென்றங் கிமையவர் பரவி யேத்தச்
சிந்தையுட் சிவம தானார் திருச்செம்பொன் பள்ளி யாரே.

பொழிப்புரை :

திருச்செம்பொன்பள்ளியார் தந்தையாராய்த் தாயாராய் , எல்லோருக்கும் கொடைவழங்குபவராய் , ஞானவடிவினராய் , முற்பட்ட தேவர்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து முறைப்படி வேதங்களை ஓதி ` எங்கள் தந்தையே ! நீயே அடியேங்களுக்கு அடைக்கலம் நல்குவை ` என்று முன்நின்று வழிபட்டுத் துதிக்க , அவர்கள் உள்ளத்துள்ளே மங்கலமூர்த்தியாக இருப்பவராவர் .

குறிப்புரை :

தந்தையும் தாயும் தானவன் - தானம் புரிபவன் . குறிப்பு ( தி .7 ப .46 பா .7) நோக்குக . ஞானமூர்த்தி :- ` நற்பதத்தார் நற்பதமே ஞானமூர்த்தி ` என்றதால் , பதமுத்திகளின் மேலாய பரமுத்தியில் விளங்கும் பரசொரூபம் ஞானமயம் ; துரியம் . அஃது அருணிலை . அதுவே ஆனந்த மூர்த்தியாய்த் துரியாதீதமாகும் . இருக்கு - நான் மறையுள் ஒன்று ; பொதுவாய் வேதமெனலுமுண்டு . எந்தை ! நீயே சரணம் என்று பரவி ஏத்தும் இமையவர் சிந்தையுள்ளே சிவமானவர் .

பண் :

பாடல் எண் : 5

ஆறுடைச் சடையர் போலும் அன்பருக் கன்பர் போலும்
கூறுடை மெய்யர் போலும் கோளர வரையர் போலும்
நீறுடை யழகர் போலும் நெய்தலே கமழு நீர்மைச்
சேறுடைக் கமல வேலித் திருச்செம்பொன் பள்ளி யாரே.

பொழிப்புரை :

நெய்தல் பூக்கள் மணம் கமழும் நீர்வளம் உடையதாய்ச் சேற்றிலே தாமரை பூக்கும் வயல்களை நாற்புறமும் எல்லையாக உடைய திருச்செம்பொன்பள்ளியார் கங்கை சூடிய சடையராய்த் தம் அன்பர்களிடத்துத் தாமும் அன்பு செய்பவராய் , பார்வதிபாகராய் , கொடிய பாம்பினை இறுகக் கட்டிய இடையினராய்த் திரு நீறணிந்த அழகருமாவார் .

குறிப்புரை :

கங்கைச்சடையினார் . கசிந்த தொண்டர்க்கு அன்பே சிவமாய் அருள்பவர் . மாதியலும் பாதியர் . வலிய அரவக் கச்சுடையவர் . திருவெண்ணீற்றழகர் . நெய்தற் பூக்கள் மணம் கமழும் தன்மையை உற்ற சேறுடைய தாமரை வேலியைக் கொண்ட திருச்செம்பொன்பள்ளி .

பண் :

பாடல் எண் : 6

ஞாலமு மறிய வேண்டில் நன்றென வாழ லுற்றீர்
காலமுங் கழிய லான கள்ளத்தை யொழிய கில்லீர்
கோலமும் வேண்டா வார்வச் செற்றங்கள் குரோத நீக்கில்
சீலமுந் நோன்பு மாவார் திருச்செம்பொன் பள்ளி யாரே.

பொழிப்புரை :

மேம்பட்டது என்று சொல்லி உலகியலில் திளைத்து வாழும் உலகத்தவராகிய நீங்கள் வீணாகக் கழிகின்ற உங்கள் வஞ்சக வாழ்க்கையை விடாது மேற்கொண்டுள்ளீர் . நீங்கள் திருச்செம்பொன் பள்ளியாரை அறிய விரும்புவீராயின் , உங்கள் போலி அடியவர் வேடத்தையும் காமக் குரோத கோபாதிகளையும் நீங்கள் போக்கி விட்டால் அவர் உங்களுக்கு ஒழுக்கமும் தவ விரதமுமாக இருந்து உதவுவார் .

குறிப்புரை :

உலகத்தார்க்கு ஈது ஓர் உபதேசம் . ஞாலம் - உலகம் . நாலம் ( தொங்குவது ) என்பதன் மரூஉ . ஈர்ப்பாற்றலால் ஒவ்வோருலகும் வானில் உலவுதலை உணர்வோர்க்கு இப்பெயர்ப் பொருத்தம் விளங்கும் . நன்று - நல்லது . பெரிது என்றும் ஆம் . காலமும் கழியலான கள்ளத்தை ஒழியகில்லீர் :- ` களவு படாததோர் காலம் காண்பான் கறைக்கணிக்கின்றேன் ` ( தி .4 ப .3 பா .11). ` பிறைக்கணிச்சடை யெம்பெருமான் என்று கறைக்கணித்தவர் கண்ட வணக்கத்தாய் உறக்கணித்துருகாமனத் தார்களைப் புறக்கணித்திடும் புத்தூர்ப் புனிதரே ` ( தி .5 ப .61 பா .2). கறை - குற்றம் . கணித்தல் - கணக்கிடுதல் . ` பிழை கணித்தல் ` ` பேழ் கணித்து ` ( தி .12 பெரிய . அப்பர் .) ` பிற்பால் நின்று பேழ்கணித்தால் ` ( தி .8 திருவாசகம் ) ` பேழ்கணிக்க ` ( சுந்தரர் ). ` திசை நோக்கிப் பேழ்கணித்து ` ( தி .9 திருவிசைப்பா ). ` பேகணியா நின்றேன் ` ( திருவாய் மொழியுரை . 9.4.4 ) பேகணிப்பு . ( ? .9. 6.6 ) ` பேகணித்து நின்ற நிலை ` ( திருவிருத்தம் 99. உரை ) ` பேழ்கணித்து இரங்குகின்ற ` ( கம்பர் . கிட்கந்தா . அநுமப் .12 ) அப்பர் பேழ்கணித்ததைச் சேக்கிழார் அறிவித்தருளினார் , அதனைக் ` கறைக்கணித்தவர் ` ( தி .5 ப .61 பா .2) என்பது மெய்ப்பிக்கின்றது . பிழை கணிப்பார்க்கே காலம் களவுபடாது . வீண்காலப் போக்கே களவுபடல் . பிழைகணியார்க்குத் தம்மையறியாதே களவுபடும் . இத் திருமுறையில் தி .4 ப .3 பா 11 இல் ` கடைக்கணிக்கின்றேன் ` என்றது ` கறைக்கணிக்கின்றேன் ` என்றிருந்து பிழைபட்டதென்றும் தோன்றுகின்றது . ஆண்டவனைக் கடைக் கணிக்கின்றேன் என்று அடியார் சொல்லுவரோ ? ` நம் களவு அறுத்து நின்று ஆண்டமை கசிந்துணர்ந்திருந்தேயும் உளகறுத்துனை நினைந்துளம் பெருங்களம் செய்ததும் இலை நெஞ்சே` ( தி .8 திருவாசகம் .5.35) என்றதால் , களவறுதல் வேண்டு மென்பது விளங்கும் . அக்களவு பலவற்றுள் காலக்களவும் ஒன்று . வீண் பொழுதுபோக்கு ஒழித்துச் சிவவழிபாடாற்றிப் பிறவி தீர்ந்து பேரின் புறுதல் வேண்டுமென்பது இரண்டாவதடியின் கருத்து . ஆர்வச் செற்றங்கள் குரோதம் நீக்கில் , திருச்செம்பொன்பள்ளியர் சீலமும் ஆவார் நோன்பும் ஆவார் . அவற்றை நீக்கவே அமையும் . நீக்கற் பொருட்டு ( எக் ) கோலமும் வேண்டா . சீலம் - ஒழுக்கம் . நோன்பு - தவவிரதங்கள் . தி .4 ப .39 பா 7 பார்க்க .

பண் :

பாடல் எண் : 7

புரிகாலே நேசஞ் செய்ய விருந்தபுண் டரீகத் தாரும்
எரிகாலே மூன்று மாகி யிமையவர் தொழநின் றாரும்
தெரிகாலே மூன்று சந்தி தியானித்து வணங்க நின்று
திரிகாலங் கண்ட வெந்தை திருச்செம்பொன் பள்ளி யாரே.

பொழிப்புரை :

திருச்செம்பொன்பள்ளியார் விருப்பம் முற்பட்ட பொழுதே தம்மிடத்தே அன்பு செய்யும் அடியவர் இதயத் தாமரையில் இடம் கொண்டிருப்பவராய் , தீ , காற்று , நிலம் , நீர் , ஆகாயம் என்ற ஐம்பூதங்களுமாகித் தேவர்கள் தொழுமாறு இருப்பவராய் , காலை நண்பகல் அந்தி என்ற மூன்று வேளைகளிலும் ஆராயப்படும் திருவடிகளை நினைந்து அடியவர் யாவரும் வணங்க , முக்காலங்களிலும் நிலையாக இருப்பவர் ஆவர் .

குறிப்புரை :

புரிகாலே - விரும்புகின்ற காலத்தே . நேசம் - அன்பு . புண்டரீகத்தார் - உள்ளத் தாமரையிலுள்ளவர் . (1) எரி ( தீ ) (2) காலே ( காற்று ), (3) விண் (4) மண் (5) நீர் என்னும் ஐந்தும் ஆகி . ` இரு நிலனாய்த் தீயாகி நீரும் ஆகி இயமானனாய் எறியுங்காற்றும் ஆகி ......... ஆகாசமாய் ...... நின்றவாறே ` ( தி .6 ப .94 பா .1) தெரிகாலே தியானித்து - ஆராய்கின்ற திருவடிகளையே நினைந்து வணங்கி , ஆயுங்கால் எனல் சிறவாது . ` நுண்ணறிவால் வழிபாடுசெய்யுங் காலுடையான் ` ( தி .1 ப .5 பா .4). முச்சந்தி :- ` முட்டாத முச்சந்தி மூவாயிரவர் ` ( தி .7 ப .90 பா .7) ` முப்போதும் முடிசாய்த்துத் தொழநின்ற முதல்வன் ` (64) சந்தி ) மூன்றிலும் தாபரம் நிறுத்திச் சகளிசெய்து இறைஞ்சு அகத்தியர் ` ( தி .7 ப .65 பா .5). திரிகாலம் - இறப்பு நிகழ்வு எதிர்வு .

பண் :

பாடல் எண் : 8

காருடைக் கொன்றை மாலை கதிர்மதி யரவி னோடும்
நீருடைச் சடையுள் வைத்த நீதியார் நீதி யுள்ளார்
பாரொடு விண்ணு மண்ணும் பதினெட்டுக் கணங்க ளேத்தச்
சீரொடு பாட லானார் திருச்செம்பொன் பள்ளி யாரே.

பொழிப்புரை :

திருச்செம்பொன்பள்ளியார் கார்காலத்தைத் தனக்குப் பூக்கும் காலமாக உடைய கொன்றைப்பூ மாலையை ஒளிவீசும் பிறை , பாம்பு எனும் இவற்றோடு கங்கை தங்கும் சடையில் வைத்தவராய் , நீதியே வடிவானவராய்த் தாமும் அந்நீதியையே நடத்துபவராய் , பாதலம் , தேவருலகம் , மண்ணுலகம் என்ற மூன்று உலகங்களும் பதினெட்டுத் தேவகணங்களும் தம்மைத் துதிக்க , சீரோடு கூடிய பாடல் வடிவாய் உள்ளவர் .

குறிப்புரை :

கார் உடைக் கொன்றை :- ` கண்ணிகார் நறுங்கொன்றை ` ( புறம் ). நீர் ( கங்கையை ) உடைய சடையுள் திங்களைப் பாம்பொடு வைத்த நீதியார் . திங்களை பாம்பு விழுங்குமென்று அறிந்தும் உடன் வைத்தது நீதியன்று என்பது கவி மரபு பற்றிய கருத்து . ஓரணி குறித்துநின்றது . நீதியுள்ளவர் . மண் விண் பாதலம் மூன்றும் பதினெண் கணங்களும் ஏத்தச் சீரொடு கூடிய பாடலானார் . ( கலித்தொகை : கடவுள் வாழ்த்து ) ` ஏழிசையாய் இசைப்பயனாய் `.

பண் :

பாடல் எண் : 9

ஓவாத மறைவல் லானும் ஓதநீர் வண்ணன் காணா
மூவாத பிறப்பி லாரும் முனிகளா னார்க ளேத்தும்
பூவான மூன்று முந்நூற் றறுபது மாகு மெந்தை
தேவாதி தேவ ரென்றுந் திருச்செம்பொன் பள்ளி யாரே.

பொழிப்புரை :

திருச்செம்பொன்பள்ளியார் என்றும் அழிதல் இல்லாத வேதத்தை ஓதிக் கொண்டிருக்கும் பிரமனும் , கடல் நிறத்தவனாகிய திருமாலும் காணமுடியாதவராய் , மூத்தலோ பிறத்தலோ இல்லாதவராய் 1080 மலர்களைக் கொண்டு முனிவர்கள் வழிபடும் எங்கள் தந்தையாராய் , என்றும் தேவர்களுக்கு எல்லாம் தேவருமாய் உள்ளார் .

குறிப்புரை :

ஓவாத - நீங்காத ( அழியாத ). ஓதம் - கடற்றிரை . மூவாத பிறப்பிலார் :- மூத்திறத்தலும் பிறத்தலும் இல்லாதவர் . முனிகள் ஏத்தும் எந்தையாகிய தேவாதிதேவர் எக்காலத்தும் திருச்செம்பொன்பள்ளியிலுள்ளார் . முனிகள் திருச்செம்பொன்பள்ளியில் தேவாதி தேவரை ஆயிரத்தெண்பது மலர்கள் கொண்டு தூவி வழிபட்டனர் . எந்தையும் அவ் ` வாசமலரெலாம் ஆனா ` ன் . மூன்று முந்நூற்றறுபதும் பூ ஆனமையும் அம்மலர் ஆயிரத்தெண்பதும் தேவாதிதேவர் ஆனமையும் இதில் உணர்த்தப்பட்டன . (360 x 3 = 1080); 108 x 10 = 1080) முந்நூற்றறுபதுநாளும் மூன்று வேளையும் பூவானமையெல்லாம் ஆகும் எந்தை எனல் சிறவாது .

பண் :

பாடல் எண் : 10

அங்கங்க ளாறும் நான்கும் அந்தணர்க் கருளிச் செய்து
சங்கங்கள் பாட வாடுஞ் சங்கரன் மலையெ டுத்தான்
அங்கங்க ளுதிர்ந்து சோர வலறிட வடர்த்து நின்றும்
செங்கண்வெள் ளேற தேறுந் திருச்செம்பொன் பள்ளி யாரே.

பொழிப்புரை :

சிவந்த கண்களை உடைய திருமாலாகிய வெண்ணிறக் காளையை இவரும் திருச்செம்பொன் பள்ளியார் , கயிலையைப் பெயர்த்த இராவணனுடைய உடல் உறுப்புகள் உதிர்ந்து தளர அவன் வாய்விட்டு அலறுமாறு வருத்தி நின்றும் ( நின்றவராயினும் ) நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் முனிவர்க்கு உபதேசித்துப் பூதகணங்கள் பாடக் கூத்தாடும் ஆனந்த வடிவினராவர் .

குறிப்புரை :

அங்கங்கள் என்றது கொண்டு அங்கியாகிய வேதங்களைக் கருதவைத்தார் நம் அப்பர் . அங்கம் ஆறு . அங்கி நான்கு . அவற்றை அந்தணர்க்கு அருளிச் செய்தார் . இறைவர் சங்கங்கள் (- பூதகணங்கள் முதலிய பலவும் ) பாடச் சங்கரன் ஆடுவான் . திருக்கயிலையை எடுத்த இராவணன் , பெருமான் அடர்த்ததால் உறுப்புக்கள் உதிர்ந்து சோர அலறினான் . செங்கண் வெள்ளேறு :- ` செங்கண் மால்விடை `.
சிற்பி