திருக்கழிப்பாலை


பண் :

பாடல் எண் : 1

நங்கையைப் பாகம் வைத்தார் ஞானத்தை நவில வைத்தார்
அங்கையி லனலும் வைத்தார் ஆனையி னுரிவை வைத்தார்
தங்கையின் யாழும் வைத்தார் தாமரை மலரும் வைத்தார்
கங்கையைச் சடையுள் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.

பொழிப்புரை :

கழிப்பாலையிற் கடற்கரைத் தலைவராக ( சேர்ப்பன் ) உள்ள பெருமான் பார்வதிபாகராய் , சிவஞானத்தை வழங்குமாறு உபதேசிப்பவராய் , உள்ளங்கையில் தீயை ஏந்தியவராய் , யானைத் தோலைப் போர்த்தவராய் , ஒருகையில் யாழை ஏந்தியவராய் , அந்தணர் கோலத்திற்கேற்பத் தாமரைப்பூ அணிந்தவராய் , கங்கையைச் சடையில் வைத்தவராய் உள்ளார் .

குறிப்புரை :

நங்கை - உமாதேவியார் . பாகம் - இடப்பால் . ஞானத்தை - சிவஞானத்தை . நவில - நாவாற் சொல்லியடிப்பட்டுப் பயில ; உபதேசிக்க . தி .4 ப .30 பா .7. அங்கை - அகங்கை . அழகிய கையுமாம் . அனல் - தீ . உரி - தோல் . தம் கையின் யாழும் வைத்தார் ` பண்ணொடு யாழ் வீணை பயின்றாய் போற்றி ` . ( தி .6 ப .57 பா .7; ப .35 பா .2; தி .4 ப .33 பா .6; ப .112 பா .7.) தாமரை மலரும் வைத்தார் என்பது ` அந்தணனாகி ஆண்டு கொண்டருளி இந்திர ஞாலங்காட்டிய இயல்பு ` ( தி .8 திருவாசகம் . 2:- 42-3). ` அந்தணனாய் அறைகூவி வீடருளும் அங்கருணை வார் கழலே ` ( ? .175) அந்தணன் ( ? 182) ` மறைபயில் அந்தணனாய் ஆண்டுகொண்ட திருவான தேவற்கே ` ( ? 228) ` உருநாம் அறிய ஓர் அந்தணனாய் ஆண்டுகொண்டான் ` ( ? 235) ` அந்தண னாகிவந்திங்கே அழகிய சேவடி காட்டி ` ( ? 357) ` அந்தணனாவதும் காட்டி வந் தாண்டாய் ` ( ? 373) என்றவாறு அந்தணனாதல் உண்மையின் , அவர்க்குரிய அடையாளப் பூவாகிய தாமரையைக் கொண்டிருத்தல் உணர்த்திற்று . ( பிங்கலந்தை . 730 ). ` அல்லியந் தாமரைத்தார் ஆரூரன் ` ( தி .7 ப .22 பா .10).

பண் :

பாடல் எண் : 2

விண்ணினை விரும்ப வைத்தார் வேள்வியை வேட்க வைத்தார்
பண்ணினைப் பாட வைத்தார் பத்தர்கள் பயில வைத்தார்
மண்ணினைத் தாவ நீண்ட மாலினுக் கருளும் வைத்தார்
கண்ணினை நெற்றி வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.

பொழிப்புரை :

கழிப்பாலைச் சேர்ப்பனார் அடியவர்கள் வீடு பேற்றை விரும்புமாறும் , வேள்விகளை நிகழ்த்துமாறும் , பண்களைப் பாடுமாறும் , திருவடி வழிபாட்டில் பயிற்சி உறுமாறும் செய்தவர் . நெற்றியில் கண்ணுடைய அப்பெருமான் உலகங்களை அளக்குமாறு நீண்ட வடிவெடுத்த திருமாலுக்கும் அருள்பாலித்தவர் .

குறிப்புரை :

விண் - வீடு . துறக்கமும் பதமுத்திகளுக்கு இடமானயாவும் ஆம் . ஒவ்வொன்றையும் விரும்பும் இயல்பு வெவ்வேறு பக்குவமுடைய உயிர்கட்குண்டு . வேள்வி - ஐவேள்வி . ` அங்கம் ஆறோடும் அருமறைகள் ஐவேள்வி ` ( தி .2 ப .42 பா .4) ஆறங்கம் ஐவேள்வி . தி .3 ப .12 பா .6. ` ஐவேள்வி ஆறங்கம் ஆனார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே ` (2620.) 1. கன்மம் . 2. தபம் . 3. செபம் 4. தியாநம் . 5. ஞானம் . சித்தியார் . சூ .8:- 23 . சிவதரு மோத்தரம் . ` தெய்வ , பிரம , பூத , மானிட , தென்புலத்தார் என்றைவகை வேள்வி ` ( பிங்கலந்தை . 395 ) எனல் பொருந்துமேற்கொள்க . தம்மைப் பாடப் பண் வைத்தார் . வேட்க - வழிபட . பத்தர் - தொண்டர் . பயிலல் - திருவடி வழிபாட்டிற் பயிற்சியுறல் . மண் ...... நீண்டமால் :- மாவலியிடத்தில் மூவடி மண் இரந்து மூவுலகும் அளந்த வரலாறு . மூவுலகும் ஈரடியால் முறைநிரம்பா வகை முடியத் தாவிய சேவடி ` ( சிலப்பதிகாரம் ). அருள் :- மூவுலகும் அளக்கும் ஆற்றல் . நெற்றியிற் கண்ணினை வைத்தார் என்க .

பண் :

பாடல் எண் : 3

வாமனை வணங்க வைத்தார் வாயினை வாழ்த்த வைத்தார்
சோமனைச் சடைமேல் வைத்தார் சோதியுட் சோதி வைத்தார்
ஆமனெய் யாட வைத்தார் அன்பெனும் பாசம் வைத்தார்
காமனைக் காய்ந்த கண்ணார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.

பொழிப்புரை :

கழிப்பாலைச் சேர்ப்பனார் தம் சத்தியாகிய பெருமாட்டியை எல்லோரும் வணங்குமாறு செய்தவர் . எல்லோர்க்கும் வாழ்த்துவதற்காம் வாயை அருளியவர் . பிறையைச் சடையில் சூடி அடியார்களுடைய ஆன்மசொரூபமான ஒளியில் தம் ஞான ஒளியை வைத்து , பசு நெய்யால் தம்மை அபிடேகம் செய்யும் வாய்ப்பினை அடியர்க்கு நல்கி , அன்பென்னும் தொடர்பு சாதனத்தையும் ஆக்கி வைத்தார் . அத்துடன் மன்மதனை வெகுண்டு சாம்பலாக்கிய நெற்றிக் கண்ணராய் உள்ளார் .

குறிப்புரை :

வாமனை - தம் சத்தியாகிய வகாரத்தை . ` சிவ ` என்னும் இரண்டனுள் , சிகாரம் மணாளன் . வகாரம் மணாட்டி . யகாரம் ( ஆன்மா ) சிகாரத்தை அடைய வகாரமே அருள்வதால் , அதனை வணங்கினால் அன்றிச் சிவத்தை அடைதல் இயலாது . ` அவனருளே கண்ணாகக் காண் .` ` அருட்கண்ணால் நோக்காதார் அல்லாதார் `. ` வாசி அருளியவை வாழ்விக்கும் ` ( திருவருட்பயன் . 88 ). ` நெய்த்தானம் என்னும் செறிபொழிற் கோயில்மேய வாமனை நினைந்த நெஞ்சம் வாழ்வுற நினைந்தவாறே .` ( தி .4 ப .37 பா .2) என்றதால் , வாமதேவராகிய தம்மை வணங்க நம்மை ( ஆன்மாக்களை ) வைத்தார் எனலும் பொருந்தும் . சோமன் - சந்திரன் . சோதியுட் சோதி :- ` சுடர்ச் சோதியுட் தூயநற் சோதியுட்சோதி ` ( தி .5 ப .93 பா .7) ` சுடர்மணி விளக்கினுள்ளொளி விளங்குந் தூயநற்சோதியுட்சோதி ` ( தி .9 திருவிசைப்பா .2); ` உள்ளொளி பெருக்கி `( தி .8 திருவாசகம் ). ஆ - பசு . மன் - மன்னும் . நெய் :- பால் , தயிர் , நெய் , மன்னெய் :- வினைத்தொகை ` பாலுநெய் முதலா மிக்க பசுவிலைந் தாடுவானே ` தி .4 ப .63 பா .9 ` அன்பு என்னும் தொடர் ` ( திருவிளையாடல் ). பாசம் - தொடர் . காமன் - மன்மதன் . வாமனன் என்பதன் திரிபாகக் கொண்டு திருமால் என்றாரும் உளர் . ` அரியலால் தேவியில்லை `. யாம் கொண்ட பொருளில் அஃதும் அடங்கும் .

பண் :

பாடல் எண் : 4

அரியன வங்கம் வேத மந்தணர்க் கருளும் வைத்தார்
பெரியன புரங்கண் மூன்றும் பேரழ லுண்ண வைத்தார்
பரியதீ வண்ண ராகிப் பவளம்போ னிறத்தை வைத்தார்
கரியதோர் கண்டம் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.

பொழிப்புரை :

அந்தணர்களுக்கு வேத வேதாங்கக் கல்வியும் சீவ காருணியமும் வழங்கிய கழிப்பாலைச் சேர்ப்பனார் பெரிய மும்மதில்களும் நெருப்பு உண்ணச் செய்து , பெரிய தீயைப்போல ஞானஒளி வீசுபவராய் , பவளம் போன்ற செந்நிறத்தினராய் நீலகண்டராய் உள்ளார் .

குறிப்புரை :

அரியன - உணர்ந்தோதற்கு எளியன அல்லாதனவாகிய ( வேதமும் அங்கமும் ). அந்தணர்க்கு வேதாங்கங்களுடன் அருளும் வைத்தார் . பெரும்புர மூன்றும் பேரழல் உண்ண வைத்தார் . பருமையுடைய தீயின்வண்ணர் . பவளம் போலும் மேனியர் திருநீலகண்டர் .

பண் :

பாடல் எண் : 5

கூரிருள் கிழிய நின்ற கொடுமழுக் கையில் வைத்தார்
பேரிருள் கழிய மல்கு பிறைபுனற் சடையில் வைத்தார்
ஆரிரு ளண்டம் வைத்தார் அறுவகைச் சமயம் வைத்தார்
காரிருள் கண்டம் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.

பொழிப்புரை :

கழிப்பாலைச் சேர்ப்பனார் இருட்டை விரட்டும் கொடிய மழுவினைக் கையில் கொண்டு , பெரிய இருள் நீங்க ஒளி வீசும் பிறையையும் கங்கையையும் சடையில் வைத்து , எல்லா உலகங்களையும் தம் மாயையாகிய இருளுக்குள் வைத்து அறுவகைச் சமயங்களைப் படைத்து , நீலகண்டராய் விளங்குகிறார் .

குறிப்புரை :

மழுவொளியால் இருள் நீங்கும் . தீயுடைய மழு . பிறையால் பேரிருள் கழியும் . கூர் - மிக்க . கூரிருள் - அகத்திருள் . பேரிருள் - புறத்திருள் . கார் இருள் :- நஞ்சினால் ஆகிய கருமை நிறம் . மாயைக்குள் எல்லா அண்டங்களும் இருத்தலின் , அதனை ஆரிருள் ( நிறைந்த இருள் ) என்றார் . அறுவகைச் சமயம் : தி .4 ப .14 பா .3; ப .33 பா .6; ப .45 பா .6; ப .100 பா .4,7; தி .5 ப .89 பா .6, தி : 6 ப .50 பா .7, ப .65 பா .7, ப .68 பா .5.

பண் :

பாடல் எண் : 6

உட்டங்கு சிந்தை வைத்தா ருள்குவார்க் குள்ளம் வைத்தார்
விட்டங்கு வேள்வி வைத்தார் வெந்துயர் தீர வைத்தார்
நட்டங்கு நடமும் வைத்தார் ஞானமு நாவில் வைத்தார்
கட்டங்கந் தோண்மேல் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.

பொழிப்புரை :

கழிப்பாலைச் சேர்ப்பனார் தம்மையே தியானிப்பவருக்கு அதற்கு ஏற்ற அலைவில்லாத மனத்தை அருளி அதனைத் தாம் உள்ளே தங்கும் இருப்பிடமாக வைத்தவர் . தேவர்கள் விரும்பித் தங்கி அவி நுகரும் வேள்விகளையும் அவற்றால் நாட்டில் கொடிய துயர் நீங்குதலையும் அமைத்தவர் . நள்ளிருளில் கூத்தாடும் பெருமான் ஞானத்துக்கு உரிய நூல்களைப் பயிலும் ஆற்றலை நாவில் அமைத்துக் கொடுத்தவர் . தம் தோள்மேல் கட்டங்கப் படையைக் கொண்டுள்ளார் .

குறிப்புரை :

உள் தங்கு சிந்தை :- உள்ளத்திற் பொருந்திய சிந்தனை . உள்குவார் - இடைவிடாது நினைப்பவர் . விண் + தங்கு = விட்டங்கு . ` ணகார விறுதி வல்லெழுத்தியையின் டகாரம் ஆகும் வேற்றுமைப் பொருட்கே ` ( தொல்காப்பியம் . எழுத்து . 302 ) விண்ணில் தங்குதற்கு ஏதுவான வேள்வி . மழை பெயுங்கிரமம் தங்குதற்கிடமான வேள்வி . வெந்துயர் - பிறவித் துயரம் முதலிய . நள் தங்கு நடம் - ` நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதன் `. ஞாலமும் - ஞாலத் துயிர்களும் . நவில - பயில ; புகழ் பேச . கட்டங்கம் - மழு .

பண் :

பாடல் எண் : 7

ஊனப்பே ரொழிய வைத்தார் ஓதியே யுணர வைத்தார்
ஞானப்பேர் நவில வைத்தார் ஞானமு நடுவும் வைத்தார்
வானப்பே ராறு வைத்தார் வைகுந்தற் காழி வைத்தார்
கானப்பேர் காதல் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.

பொழிப்புரை :

கழிப்பாலைச் சேர்ப்பனார் புலால் மயமான இவ்வுடல் தொடர்பான பெயர்கள் நீங்கத் தம் அடியவர் என்ற பெயரை வழங்கி , ஞானநூல்களை ஓதியே ஞானம் பெறும் வழியை வைத்து , ஞான தேகத்திற்குரிய கடவுளை நினைப்பூட்டும் ஞானப்பெயரையே சொல்லி அழைக்குமாறும் செய்து திருவடி ஞானத்தையும் அந்த ஞானம் தங்குதற்குரிய இதயத்தையும் நல்கி , கங்கையைச் சடையில் வைத்து , திருமாலுக்குச் சக்கரம் நல்கித் திருக்கானப்பேர் என்ற திருத்தலத்தைத் தாம் விரும்பிஉறையும் இடமாகக் கொண்டுள்ளார் .

குறிப்புரை :

ஊனப்பேர் - ஊனுடற் சார்பான பெயர் . ஓதியே உணர :- இறைவனை உணர ஓதல் அடிப்படையானது . ஓதல் ஓது வித்தல் , கேட்பித்தல் , கேட்டல் , நினைத்தல் , தெளிதல் , நிற்றல் என்பவற்றுள் முதலாவது ஓதல் . ` ஞானநூல் தனை ஓதல் ஓதுவித்தல் நற்பொருளைக் கேட்பித்தல் தான் கேட்டல் நன்றா ஈனம் இலாப் பொருளதனைச் சிந்தித்தல் ஐந்தும் இறைவன் அடி அடைவிக்கும் எழில் ஞானபூசை\\\\\\\\\\\\\\\' ( சித்தியார் . சுபக்கம் . 275 ) என்றதால் , ஞான பூசைக்கு ஓதலே தொடக்கமாகும் . உணரல் - ஞானம் . ` கேட்டல் முதலிய நான்கும் ஞானம் . ` கேட்டலுடன் சிந்தித்தல் தெளிதல் நிட்டை கிளத்தல் என ஈரிரண்டாம் கிளக்கில் ஞானம் ` ( ? .276 ) என்றதால் ஞானத்திற்குக் கேட்டல் தொடக்கம் ஆதல் அறியப்படும் . ஞானப் பேர் நவில - ஞான ( தேக ) த்துக்குரிய பெயர் பயில . கடவுள் நினைப்பூட்டும் பேர் ஞானப் பேர் . உலகப் பொருட் பேர் ஊனப் பேர் என்று கொண்டு அவற்றை முறையே நவிலவும் ஒழியவும் வைத்தார் எனலுமாம் . ஞானமும் நடுவும் வைத்தார் : ` நடுவுணர் பெருமையர் ` ( தி .3 ப .84 பா .6) ஞானம் - திருவடி . நடு - நெஞ்சு நடு . ` திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட திருநாவுக்கரையன்றன் அடியார்க்கும் அடியேன் ` ( தி .7 திருத்தொண்டத் தொகை ) ` திருநின்ற செம்மை ` ( தி .4 ப .8 பா .1) என்றவற்றால் ` நடு ` செம்மையுமாம் . இவற்றால் , ஆளுடைய நம்பிகள் ` சொல்லியவே சொல்லி ஏத்து ` ம் பெற்றியுடையவர்கள் ஆதல் புலனாகும் . வானப் பேராறு - கங்கை . வைகுந்தற்கு - திருமாலுக்கு . ஆழி - சக்கிராயுதம் . கானப்பேர் :- ` காவார்ந்த பொழிற்சோலைக் கானப் பேர் ` ( தி .6 ப .99 பா .7) என்று ஈற்றுத் திருப்பதிகத்துள் . கழுக்குன்றத்து உச்சி நினைவுடன் வைத்துத் தம் காதல் மிகுதி காட்டுவாரானார்.

பண் :

பாடல் எண் : 8

கொங்கினு மரும்பு வைத்தார் கூற்றங்கள் கெடுக்க வைத்தார்
சங்கினுண் முத்தம் வைத்தார் சாம்பரும் பூச வைத்தார்
அங்கமும் வேதம் வைத்தார் ஆலமு முண்டுவைத்தார்
கங்குலும் பகலும் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.

பொழிப்புரை :

கழிப்பாலைச் சேர்ப்பனார் அரும்பில் மகரந்தத்தை வைத்தவர் . தீயவார்த்தைகள் பேசுதலைப் போக்க திருமுறை ஓதுதலான நல்ல வழியை வைத்தவர் . சங்கினுள் முத்துக்களை வைத்தவர் . தாம் பூசத் திருநீற்றைப் பொருளாகக் கொண்டவர் . உலகம் உய்ய நால்வேதமும் அங்கமும் பரவச் செய்தவர் . உலகம் உய்ய விடம் உண்டவர் . மகிழ்வாக உறங்க இரவையும் , செயற்பட்டு உழைக்கப் பகற்பொழுதையும் அமைத்தவர் .

குறிப்புரை :

கொங்கு - மகரந்தம் . மணம் . கெடுக்கக் கூற்றங்களை வைத்தார் . சாம்பல் - திருநீறு . ` சாம்பற்பூச்சு ` ( தி .1 ப .23 பா .1). வேதமும் அங்கமும் . ஆலம் - நஞ்சு . உம்மை கொடுமை மிகுதியுணர நின்றது . உண்ணத் தகாத நஞ்சினையும் உண்டு . தம்மை அது கொல்ல வல்லாதபடி , உள்ளும் இறங்காமல் , வெளியிலும் ஏறாமல் கழுத்துள் நிறுத்தி வைத்தார் . இரவும் பகலும் படைத்தார் .

பண் :

பாடல் எண் : 9

சதுர்முகன் றானுமாலுந் தம்மிலே யிகலக் கண்டு
எதிர்முக மின்றி நின்ற வெரியுரு வதனை வைத்தார்
பிதிர்முகன் காலன்றன்னைக் காறனிற் பிதிரவைத்தார்
கதிர்முகஞ் சடையில்வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே.

பொழிப்புரை :

கழிப்பாலைச் சேர்ப்பனார் பிரமனும் திருமாலும் தம் இருவருள் பரம்பொருள் யாவர் என்று மாறுபடுதலைக் கண்டு , கண்கூடாக ஆதியும் அந்தமும் காணமுடியாத தீத்தம்பத்தைப் படைத்தார் . கடுமையான முகத்தை உடைய கூற்றுவனைக் காலினால் சிதறவைத்தார் . பிறையைச் சடையில் வைத்தவருமானார் .

குறிப்புரை :

சதுர்முகன் - நான்முகன் . தம்மிலே - தாம் இருவருள்ளே . இகல - மாறுபட . எதிர்முகம் - கண்கூடு . எரிஉரு - ` ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதி ` வடிவம் . பிதிர்முகன் - பிதிர்ந்த முகத்தினன் . காலன் - எமனை . கால் - திருவடி . கதிர்முகம் - பிறை . தி .6 ப .56 பா .10. பார்க்க .

பண் :

பாடல் எண் : 10

மாலினா ணங்கை யஞ்ச மதிலிலங் கைக்கு மன்னன்
வேலினான் வெகுண்டெ டுக்கக் காண்டலும் வேத நாவன்
நூலினா னோக்கி நக்கு நொடிப்பதோ ரளவில் வீழக்
காலினா லூன்றி யிட்டார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.

பொழிப்புரை :

மதில்களை உடைய இலங்கைக்கு மன்னனாகிய இராவணன் என்ற , வேல் ஏந்திய வீரன் கோபங்கொண்டு கயிலை மலையைப் பெயர்க்க , அதுகண்டு தம்மிடம் பெருவிருப்புடைய பார்வதி அஞ்ச , அதனைக்கண்ட அளவில் வேதங்களை ஓதுபவனும் பூணூல் அணிந்தவனுமாகிய அவ்விராவணனை மனத்தால் நோக்கி , அவன் ஒரு நொடியில் ஆற்றலிழந்து மலையடியில் விழுமாறு , கால் விரலால் அவனை அழுத்தி நசுக்கிவிட்டவர் கழிப்பாலைச் சேர்ப்பனாரே .

குறிப்புரை :

மாலினாள் - வேட்கை யுடைய உமை . ` மால் கொடுத்து ஆவிவைத்தார் ` ( தி .4 ப .33 பா .4) என்புழிப்படும் பொருளுமாம் . ` மாலினை மால் உறநின்றான் ` ( தி .4 ப .88 பா .1). மன்னனாகிய வேலினான் . வெகுண்டு - சினந்து . வேதநாவன் :- மறையுங் கொப்பளித்த நாவர் ` ( தி ,4 ப .24 பா .4). நூலினான் - வேதாகம முதலியவற்றைஅருளினவன் . அவற்றால் அறிவிக்கலானவன் . நக்கு - நகைத்து . நொடிப்பது - கைந்நொடிக்குமளவு . கால் :- காலின் பெருவிரற்கு ஆகுபெயர் . ` வேதநாவன் ` ` நூலினான் ` என்பன இரண்டும் இராவணனைக் குறித்தன எனக்கொண்டு , ` சாமவேத கானம் பாடியவன் , நூல்களையுணர்ந்தவன் , பூணுநூலணிந்தவன் என்று உரைத்தல் பொருத்தம் உடைத்து .
சிற்பி